3 அன்றிரவு கூட்டம் வாசக சாலையில் நடைபெறவில்லை. வைகைக் கரையில் பிட்டுத் தோப்பு மண்டபத்தருகே ஒரு நந்தவனத்தில் நடந்தது. வாசகசாலையில் கூட்டம் நடக்கும் என்று வந்தவர்களுக்குத் தகவல் சொல்லிப் பிட்டுத் தோப்புக்கு மாற்றி அனுப்புவதற்காகவே பத்தர் அன்று பிரமாத வேலையிருப்பது போல் கில்ட் கடையை ரொம்ப நேரம் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். கடைசி நபரையும் பிட்டுத் தோப்புக்கு அனுப்பியதோடு அந்தக் கடைசி நபரிடமே வாசகசாலைச் சாவியையும் ராஜாராமனுக்குக் கொடுத்தனுப்பி விட்டார் பத்தர். ஒரு வேளை ராஜாராமனும், நண்பர்களும் பிட்டுத் தோப்பில் கூட்டம் முடிந்து வெகு நேரமாகித் திரும்பும் போது வாசக சாலையில் வந்து படுக்க நேர்ந்தாலும் அதற்கு வசதியாகச் சாவி இருக்கட்டும் என்ற முன்யோசனையோடு தான் சாவியைக் கொடுத்தனுப்பியிருந்தார் அவர். அன்று வழக்கத்துக்கு மாறாகக் கில்ட் கடையைப் பூட்டும் போது பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. எதையாவது தகட்டைச் சுரண்டியும், 'ஆஸிட்' ஊறலில் நனையப் போடுவது போலவும் பதினொரு மணி வரை நடிக்க வேண்டியிருந்தது. அதற்குள்ளேயே இரண்டு தரம் சி.ஐ.டி. வந்து விட்டான். "என்ன, கில்ட் கடைக்காரரே, இன்னிக்குக் கீதைப் பிரசங்கம் கிடையாதா?" - என்றும் கூட ஒரு தடவை அவரைக் கேட்டிருந்தான் சி.ஐ.டி. அதையும் சாவி கொண்டு போனவரிடம் சொல்லி ராஜாராமனை எச்சரித்து வைக்கும்படி பத்தர் கூறியிருந்தார். பிட்டுத் தோப்பு நந்தவனத்தில் 'வந்தேமாதர' முழக்கத்துடன் நண்பர்கள் சந்தித்தனர். "நம்மில் சிலராவது திருச்சிக்குப் போய், வேதாரணியத்துக்கு அங்கிருந்து சேலம் வக்கீல் ஸி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரக கோஷ்டியோடு கலந்து கொண்டிருக்க வேண்டும். நானே அப்படிக் கலந்து கொண்டு கைதாகியிருக்கலாம். அதற்கு நான் ஆசைப்பட்டேன்; முடியவில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நாம் ஏதாவது செய்யவேண்டும். காலையில் ஜோசப் சாரை பார்க்கப் போயிருந்தேன். அவரும் இல்லை. காந்தியும் தலைவர்களும் கைதான செய்திகளைப் படிக்கப் படிக்க என் நெஞ்சு குமுறுகிறது. நமது மரியாதைக்குரிய தேசத் தலைவர்கள் சிறையில் வாடும்போது நாம் இப்படிச் சும்மா இருக்கலாகாது." - என்று ராஜாராமனும் அதையடுத்து முத்திருளப்பனும் குருசாமியும் பேசினார்கள். செல்லூரில் கள்ளுக்கடை மறியலும், கீழ்ச் சித்திரை வீதியில் அம்மன் சந்நிதி முகப்பில் துணிக்கடை மறியலும் செய்யலாமென்று முடிவாயிற்று. துணிக்கடை மறியலுக்கு ராஜாராமன் தலைமையேற்பதாகக் கூறினான். மற்றொன்றிக்குக் குருசாமி, முத்திருளப்பன், இருவருமே தயாராயிருந்தனர். சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து விடலாமென்று கூறப்பட்டது. இருவருமே கைதாவதை விட யாராவது ஒருவர் வெளியே இருப்பது சில காரியங்களைச் செய்ய வசதியாயிருக்கும் என்று தோன்றியது. ராஜாராமனைப் பொறுத்தவரை அவன் நிச்சயமாகவே சிறைவாசம் அனுபவிக்க விரும்பினான்.
"இந்தத் தண்டனையை இன்று அடைய முடிந்தவன் படமுடிகிற பெருமிதத்தைத் தேசத்தில் இனி வரும் எந்தத் தலைமுறையிலும் எந்தத் தண்டனையாலும், எவனாலும் அடைய முடியாது," என்று அவன் அடிக்கடி கூறுவதுண்டு. சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில், குருசாமியின் பெயர் விழுந்தது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையையும், மற்றக் காரியங்களையும் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டது. சிறை செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தோடு தன் முத்திருளப்பனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று. நண்பர்கள் மீண்டும் 'வந்தே மாதர' முழக்கத்தோடு பிரியும் போது நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. எல்லாரும் அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ராஜாராமன் மட்டும் வாசகசாலைக்கு வந்து மொட்டை மாடியில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். மறியலுக்குக் குறித்திருந்த தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. அதற்குச் செய்ய வேண்டிய காரியங்களை நினைவு படுத்திக் கொண்டான் அவன். ரொம்ப நேரமாகத் தூக்கம் வரவில்லை. அதிகாலையில் தான் கொஞ்சம் கண்ணயர முடிந்தது. அன்று மிக அதிகாலையிலேயே எழுந்திருந்து மேலூருக்குப் போய்வர எண்ணியிருந்தான் அவன். கைதாகி ஜெயிலுக்குப் போவதானால் அம்மாவுக்கு வந்து சேர வேண்டிய குத்தகைப் பணம் தடைப்படும்படி நேரவிட அவன் விரும்பவில்லை. அவன் கைதாவதோ, மற்ற விவரங்களோ அம்மாவுக்குத் தெரியாது. குத்தகைக்காரனிடம், 'அப்பப்போ பணத்தை மதுரைக்குக் கொண்டு வந்து கொடுத்துடு, நான் கொஞ்ச நாள் ஊரிலிருக்க மாட்டேன்' - என்று சொன்னாலே போதும்.
அவன் கண் விழித்தபோது, நேற்றைப் போலவே இன்றும் காலில் பூச்சரம் வாடிக் கிடந்ததைப் பார்த்தான். தாங்க முடியாத கோபம் வந்தது அவனுக்கு. அந்தக் கோபத்தின் வேகத்தை வீணையின் நாதம் மட்டுப்படுத்த முயன்றாற் போல ஒலித்தது. அதே வாசனைகள். ஆனால், பூ மட்டும் இன்று பிச்சிப்பூ. அதனால் முதல் நாள் மல்லிகையை விடக் கொஞ்சம் அதிகமாகவே வாடியிருந்தது இது. பக்கத்து மாடியிலிருந்து விதம் விதமான பூக்களைச் சூடிக் கழித்து, விடிந்ததும் எறியும் அந்த உருவத்தைப் பார்க்கவும் கண்டிக்கவும் வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணமே, 'தொலையட்டும்; நமக்கேன் இந்த வம்பு? நாளை முதல் மொட்டை மாடியில் படுக்க வேண்டாம்; அல்லது வேறு பக்கமாகக் கால் நீட்டிப் படுக்கலாம்' - என்றெண்ணிய போது சகிப்புத் தன்மையுடன் விட்டு விடலாமென்றும் தோன்றியது. 'நாள் தவறாமல், வாசகசாலை மொட்டை மாடியில், சாந்தி முகூர்த்தம் கழித்த அறை முற்றம் போல் வாடிய பூக்கள் விழுந்து கிடந்தால், வருகிறவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?' என்றெண்ணியபோது முடிவாகக் கோபமே விசுவரூபமெடுத்தது. பக்கத்து மாடியிலிருக்கும் பெயர் தெரியாத அந்த அப்சரஸை என்ன சொல்லி எப்படிச் சப்தம் போட்டு இரைந்து கூப்பிடுவதென்று தயங்கியபோது, இரு கைகளையும் சேர்த்துப் பலமாகத் தட்டுவதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை. சுகமான வீணை வாசிப்பை அப்படிக் கை தட்டித் தடுப்பது நாகரிகமாகாதுதான். ஆனாலும், இந்த ஒண்ணாம் நம்பர் சந்து ஜன்மங்களுக்கு நாகரிகமென்ன கேடு? மனிதர்களைக் கூப்பிடும் போது மிருகங்களைக் கூப்பிடுவது போல் அநாகரிகமாக ஓசைப்படுத்திக் கூப்பிடக் கூடாதுதான். ஆனால், அதே சமயத்தில் மிருகங்களைக் கூப்பிடும்போது மனிதர்களைக் கூப்பிடுவது போல் இங்கிதமாகப் பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. உடம்பை வியாபாரம் பண்ணும் ஒருத்தியை மிருகமாக நினைப்பதில் தப்பென்ன? 'மிருகம் இவ்வளவு சுகமாக வீணை வாசிக்குமா? மிருகம் இத்தனை வாசனையுள்ள பூக்களைத் தொடுத்துச் சூடுமா?' அவன் மனத்திற்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்தது. கடைசியில் தன்மானமே வென்றது. அவன் பலமாகக் கை தட்டினான். சிறிது நேரம் கை தட்டிய பின்னும் வீணை வாசிப்பது நிற்கவில்லை. 'ஒரு வேளை கொஞ்சம் செவிடாயிருப்பாளோ? - சே! சே! இத்தனை சுகமான வாத்தியத்தை இசைப்பவள் செவிடாயிருக்க முடியாது; இருக்கவும் கூடாது.' மறுபடியும் பலங் கொண்ட மட்டும் கைகளை இணைத்துத் தட்டினான் ராஜாராமன். பூப்போன்ற அவன் கைகளில் இரத்தம் குழம்பிவிட்டது. சட்டென்று வீணை ஒலி நின்றது. புடவை சரசரக்க வளையல்கள் குலுங்க யாரோ எழுந்துவரும் ஓசை கேட்டது. அடுத்த கணம் எதிரே கைப்பிடிச் சுவரருகில் வந்து நின்ற வனப்பைப் பார்த்ததும் முதலில் அவனுக்கு பேச வரவில்லை. சரஸ்வதியின் மேதைமையும், லட்சுமியின் சுமுகத் தன்மையும் சேர்ந்த ஓர் இளம் முகம் அவன் கண்களை இமைக்க முடியாமற் செய்தது. அந்த முகத்தின் வசீகரத்தில் அவன் பேச முடியாமல் போய்விட்டான். "கை தட்டினது நீங்கதானே?" பேசுகிறாளா, அல்லது இதழ்களாலும் நாவினாலுமே மீண்டும் வீணை வாசிக்கிறாளா என்று புரியாமல் மருண்டான் ராஜாராமன். நெகிழ, நெகிழத் தொள தொளவென நீராடி முடித்த கூந்தலும், நீலப் பட்டுப் புடவையும், நெற்றியில் திலகமுமாக நின்றவள் கேட்ட கேள்வியில் எதைக் கண்டிப்பதற்காக அவளைக் கைதட்டிக் கூப்பிட்டோம் என்பதை அவனே மறந்துவிட்டான். அவளுடைய மூக்கிலிருந்த வைரப் பேஸரியில் சூரிய ஒளிப்பட்டுத் தோற்றுக் கூசியது போலவே அவனும் கூசிப் போனான். கைதட்டிவிட்டுப் பேசவும் முடியாமல் நிற்கும் அந்த வாலிபனிடம் வெட்கியது போல் அவளும் மெல்ல உள்ளே திரும்பினாள். துண்டு நழுவிய பொன் நிற மார்பில் அரைக்கிரை விதை தூவினாற்போல் கருகருவென்று ரோமமடர்ந்த இவன் நெஞ்சையும் தோளையும் அளந்து விட்டு அவளுடைய அபூர்வமான விழிகள் தரையை நோக்கிக் கொண்டே சிரித்தன. மெல்ல உட்பக்கம் திரும்பிய அவள் உதடுகளில் புன்னகை ஊறியிருந்தது. ரசம் தளும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல் மதுவூறிய அந்த இதழ்களில் ஓடி ஒளிந்த நகையுடன் அவள் திரும்பிய போதுதான், கூப்பிட்டவனுடைய தைரியம் திரும்ப வந்தது. "நான் தான் கூப்பிட்டேன்" - என்று தோளும் மார்பும் மறையும்படி மேல் துண்டைப் போர்த்திக் கொண்டே மென்று முழுங்கிய பின், மேலே பேசுவதற்காக அவளை 'நீ' என்பதா 'நீங்கள்' என்பதா என்று தெரியாமல் தவித்தான் ராஜாராமன். 'நீ' என்று சொல்ல வாய் வரவில்லை. 'நீங்கள்' என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. வயதில் அவனை விடச் சிறியவளாகவே தெரிந்த அவளையொத்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து அப்சரஸ்களை 'நீ' என்று எவனெவனோ நித்தம் நித்தம் கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறபோது, தான் நீ என்று கூப்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகி விடாதென்ற துணிவு உண்டாகச் சில விநாடிகள் ஆயிற்று. அப்படியும் பேச்சின் முதல் வாக்கியத்தில் 'நீ' யோ 'உன்'னோ வராமலே போய்விட்டது. "ஒரு நாளைப்போல விடியற வேளைக்கு யாராரோ கழற்றி எறியற பூவெல்லாம் இங்கே என் மேலே வந்து விழறது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்." "யாராரோ ஒண்ணுமில்லே! நான் தான் கழற்றி எறியறேன். அது உங்க மேலே விழும்னோ விழுந்து கொண்டிருக்குன்னோ இதுவரை எனக்குத் தெரியாது. இனிமே அப்படிச் செய்யலே. இது செஞ்சதுக்குப் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்," - என்று தாமரை மொட்டுப் போல் கைகூப்பினாள், அவள். வணக்கத்தோடு மிகவும் பவ்யமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள். எதிர்பாராத அந்த பவ்யம் ராஜாராமனைத் திணறச் செய்தது. முழுக் கோபத்தையும் காட்டித் திட்ட முடியாமல் பண்ணி விட்டாளே என்று ரோஷம் வேறு பொத்துக் கொண்டு வந்தது. அந்த ரோஷத்தை உறங்கப் பண்ணுவதுபோல் பாயைச் சுருட்டிக் கொண்டு படியிறங்கிய அவன் காதில் மீண்டும் வீணையின் இசை வந்து பாய்ந்தது. அவளையும் அவள் முகத்தையும் கூப்பிய கைகளின் விரல்களையும் பார்த்தபின் வீணையை அவள் வாசிக்கிறாளா, அல்லது வீணையே அவளுடைய மதுரமான விரல்களைத் தடவி வாசிக்கிறதா என்று ராஜாராமனுக்குச் சந்தேகம் வந்தது. சந்தேகமும், கோபமும், மாறி மாறி எழும் மனநிலையோடு, அவள் பெயர் என்னவாயிருக்கும் என்ற யோசனையிலும் மூழ்கினான் அவன். அந்தக் குரலும் உடனே பணியும் அந்த பவ்யமும், பிறவியோடு வந்த அழகுகள் போல் அவளுக்குப் பொருந்தியிருந்ததாகத் தோன்றியது. கீழே இறங்கி வந்த பின்பும் அவளை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியவில்லை, அவனால். பத்திரிகைகளைப் பார்த்து விட்டுக் கீழே இறங்கியபோது பத்தர் முதல் நாள் பிட்டுத் தோப்புக் கூட்டம் பற்றி விசாரித்தார். அவன் எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான். பக்கத்து வீட்டு மாடிப் பெண்ணைக் கூப்பிட்டு இரைந்தது பற்றியும் கூறினான். "அவளா, மதுரம்னு செல்லமாகக் கூப்பிடுவாங்க - மதுரவல்லீன்னு முழுப்பேரு. தனபாக்கியத்தோட மகள்" - என்று அவன் கேட்காமலே மேல் விவரங்களைச் சொல்லத் தொடங்கினார் பத்தர். அந்தப் பேச்சை மாற்ற விரும்பிய ராஜாராமன், "மேலூருக்குப் போறேன் பத்தரே! திரும்பி வர ஒரு வேளை சாயங்காலமாயிடும். முத்திருளப்பனாவது, குருசாமியாவது வந்தா சாவியைக் கொடுங்க. அதோடு வாசக சாலையையும் பார்த்துக்கங்க" என்று சாவியை நீட்டினான். "பார்த்துப் போயிட்டு வாங்க தம்பீ! எங்க பார்த்தாலும் சி.ஐ.டி. நடமாட்டம் இருக்கு. உங்க பேரு அவங்க லிஸ்டிலே இருக்காமே?" என்று அவனை எச்சரித்தார் பத்தர். வீட்டுக்கு வந்து, பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு புறப்பட்ட அவனைப் பழையது சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாள் தாய். பழைய சோறும் தயிறும் நார்த்தங்காய் ஊறுகாயும் அமிர்தமாயிருந்தன. கொல்லைப் பக்கம் நாலு ஒண்டுக் குடித்தனத்துக்கும் பொதுவான கிணற்றடியில் பெண்கள் கூட்டமாயிருந்ததால் குளிப்பதை, போகிற இடத்தில் எங்காவது வைத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருந்தது. பழைய சோற்றிலும் தயிரிலும் ஒரு சக்தி - மறுபடி சாயங்காலம் வரை பசி தாங்கும் போலிருந்தது. குத்தகைக்காரனைப் பார்த்துப் பேசிவிட்டுத் திருவாதவூர்க் காரியங்கள் முடிந்ததும், மேலூரில் கூட சில தொண்டர்களையும் ஊழியர்களையும் அவனால் சந்திக்க முடிந்தது. அந்தத் தொண்டர்களில் ஒருவர் வீட்டிலேயே பகலில் சாப்பிடச் சொன்னார்கள். ஊருக்கு மேற்கே அணை திறந்து முல்லை வாய்க்காலில் தண்ணீர் விட்டிருந்தார்கள். போய்க் குளித்து அங்கேயே வேஷ்டியை உலர்த்திக் கட்டிக் கொண்டு வந்தான் ராஜாராமன். பகல் உணவு முடிந்து நண்பர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, மேலூர்த் தொண்டர்களுக்கும் சில உற்சாகமான திட்டங்களைச் சொன்னான் அவன். அங்கிருந்த தேசத் தொண்டர்கள் அவனை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் உலக நடப்பைத் தெரிந்து கொள்ளும் வசதி குறைவாயிருந்ததாலும், நடத்திச் செல்வதற்குத் தலைமை இல்லாததாலும், இரண்டொரு விவரம் தெரிந்தவர்களும் வேதாரணியத்தில் கைதாகி சிறைக்குப் போய்விட்டதாலும், யோசனைகளை ராஜாராமன் சொல்ல வேண்டியிருந்தது. மேலூரிலிருந்து அவன் மதுரை திரும்பும்போது இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் தகவலைச் சொல்லிவிட்டு வாசகசாலைக்குப் போக நினைத்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா அவனுக்கு அந்தத் தகவலைச் சொன்னாள்: "நீ திரும்பி வந்தா, வாசகசாலைக்கு வரவேண்டாம்னு பத்தர் உங்கிட்டச் சொல்லச் சொன்னார். அஞ்சு மணிக்கு முத்திருளப்பனும், குருசாமியும் வந்தாங்களாம். போலீஸ் பிடிச்சிண்டு போயிடுத்தாம். நீ வர வேண்டாம்னு பத்தர் வந்து அவசர அவசரமாச் சொல்லிவிட்டுப் போனார்." -அம்மாவின் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் எதுவுமே பிடிக்காதது போன்ற மனத்தாங்கல் அந்த முகத்தில் தெரிவதையும் ராஜாராமன் கண்டான். நிதானமாக அவன் அவளைக் கேட்டான். "பத்தர் எப்ப வந்தார்?" "இப்பதான், சித்த முன்னே வந்து சொல்லிட்டுப் போறார். நீ போக வேண்டாம்டா குழந்தை. நான் சொல்றதைக் கேளு... என்னை வயிறெரியப் பண்ணாதே! வயசு வந்தவன் இப்படி அலையறதே எனக்குப் பிடிக்கல்லே." அவன் தாயின் குரல் அவனைக் கெஞ்சியது. ஏறக்குறைய அவள் அழத் தொடங்கிவிட்டாள். அக்கம்பக்கத்து ஒண்டுக் குடித்தனக்காரர்கள் கூடிவிடுவார்கள் போலிருந்தது. "எதுக்கம்மா இப்பிடி அழுது ஒப்பாரி வைக்கிறே? ஊர் கூடி விசாரிக்கணுமா! இப்ப என்ன நடந்துடுத்து? போக வேண்டாம்னாப் போகலை..." -அம்மாவின் அழுகை அடங்கியது. அவன் மனம் கவலையிலாழ்ந்தது. ஒன்றுமே செய்து முடிக்காமல் தான் கைதாகி விடக்கூடாது என்பதில் அவன் அதிக அக்கறையோடு இருந்தான். சிறிதோ பெரிதோ ஒவ்வொரு மழைத் துளிக்கும் பிரவாகத்தில் பங்கு உண்டு. இந்த மறியல்களை எல்லாம் அவனைவிடப் பெரியவர்கள் கடந்த காலத்தில் நிறைய நடத்தியிருந்தார்கள். இப்போது அவன் மீண்டும் நடத்த விரும்பியதற்குக் காரணமாக இருந்த உள் முனைப்பை விட்டுவிட அவன் தயாராயில்லை. உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் போய்க் கைதாக முடியாத வேதனையை அவனும், அவனைப் போன்றவர்களும் இப்படித் தணித்துக் கொள்ள விரும்பினார்கள். கைதாகிச் சிறைகளில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களின் வேதனை தங்கள் இதயத்திலும் எதிரொலித்துத் தூண்டுக்கிறது என்பதைக் காட்டவே அவன் இதைச் செய்ய விரும்பினான். போலீஸ் வீட்டுக்கும் தேடி வருமோ என்ற முன்னெச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது. எப்படித் தப்புவதென்ற முன்யோசனைகளும் அவன் உள்ளத்திலிருந்தன. வீட்டிலேயே இருந்து இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட விரும்பினான் அவன். இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட்டால், அப்புறம் அடுத்த நாள் தான் அந்தத் துணிக்கடை மறியலுக்குக் குறித்திருக்கும் தினம். ஒரு விநாடியாவது மறியலை நடத்தி விட்டோம் என்ற பெருமிதத்தோடு கைதாக வேண்டுமென்றிருந்தான் அவன். இரவு எட்டு மணிக்குச் சாப்பிட உட்காருமுன் கைகால் கழுவிவர அவன் பின்பக்கம் கிணற்றடிக்குப் போனபோது அங்கே கோடைக்காகக் கட்டிலை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த பக்கத்துப் போர்ஷன் வக்கீல் குமாஸ்தா திருவேங்கடம் அவனை வம்புப் பேச்சுக்கு இழுத்தார். "என்னப்பா ராஜாராமன், இந்த உப்பு சத்தியாக்கிரகம், அந்நியத் துணிமறியல், கள்ளுக்கடை எதிர்ப்பு இதனாலெல்லாம் என்ன பிரயோஜனம் வந்துடப் போறதுன்னு உங்க காந்தி இதையெல்லாம் கட்டிண்டு அழறார்? சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை இதனாலெல்லாம் அசைச்சுப்பிட முடியும்னா நினைக்கிறே? எல்லாம் சின்னக் குழந்தைகள் விளையாடற மாதிரீன்னா இருக்கு..." "சின்னக் குழந்தைகள் விளையாடித்தான் பெரியவாளாகணும். ரொம்ப நாளா உமக்கு ஜஸ்டிஸ் கட்சி வக்கீல் கிட்டக் குமாஸ்தாவா இருந்து இருந்து, அந்தப் புத்தியே வந்திருக்கு ஓய்! இந்த தேசத்தில் இன்னிக்கு முக்கால்வாசி ஜனங்களுக்கு சுதேசி உணர்ச்சின்னா என்னன்னே தெரியலே. அது ஏதோ தப்பான காரியம், அல்லது ராஜத்துவேஷமான காரியம்னு பொய்யான பிரமை பிடிச்சு ஆட்டிக்கிண்டிருக்கு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் போக்க முடியும். அதைப் போக்கறதுக்குக் காந்தி செய்யற எல்லாமே சரியான காரியம் தான். சுதேசி உணர்ச்சிங்கறது என்னன்னு பால பாடமே சொல்லிக் கொடுக்கறாப்பிலே, உம்மைப் போலக் கோடிக்கணக்கான ஜனங்கள் இங்கே இருக்கு ஓய்! பிரிட்டீஷ்காரன் யாரோ நீர் யாரோ; ஆனா அவனை உம்ம தாத்தா மாதிரி நினைச்சுப் பேசறீர் நீர். இந்தப் பிரமையை எப்படியாவது முதல்லே போக்கியாகணும்..." "என்னமோ போ! உங்கம்மா ரொம்ப மனக் கஷ்டப்படறா. நீ படிப்பைக் கெடுத்திண்டு வீணுக்கு அலையறே?" "ஓய், எங்கம்மாதான் படிக்காதவ! ஒரு பாசத்திலே அப்பிடி நெனைக்கறா - நீரெல்லாம் படிச்சவர்; நீரே இங்கே அப்படி நெனைக்கறபோது என்ன செய்யறது?..." வக்கீல் குமாஸ்தா மேலே ஒன்றும் பேச முடியவில்லை. ஈரக்கையை மேல் துண்டினால் துடைத்துக் கொண்டே உள்ளே போனான் ராஜாராமன். சாப்பாட்டில் மனம் செல்லவில்லை. சாப்பிட்டோம் என்று பேர் செய்யத்தான் முடிந்தது. வெள்ளைக்காரன் சிறைக்குள் கொண்டு வைப்பதற்கு முன் அதற்குத் தயங்கித் தானே சிறையில் வைத்துக் கொண்டதைப் போல் வீட்டில் ஒடுங்கிக் கிடப்பது அவனுக்குப் பொறுக்க முடியாததாயிருந்தது. பொறுத்துக் கொண்டும் ஆக வேண்டியிருந்தது. அந்த வீட்டில் அவனுக்குப் பிடித்ததைப் பேசவும் மனிதர்கள் இல்லை; பிடிக்காததை எதிர்த்துப் பேசினால், அதைக் கேட்கவும் மனிதர்கள் இல்லை. சொந்த ஊரில், சொந்த நாட்டில், குடியிருக்கும் வீட்டிலேயே அந்நிய நாட்டில் இருப்பது போல் இருக்க வேண்டியிருந்தது. குருசாமியும், முத்திருளப்பனும் கைதாகிய செய்தி அவனைப் பலவிதமான யோசனைகளில் மூழ்கச் செய்திருந்தது. குருசாமியாவது தனிக்கட்டை; தையற்கடையை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது தவிர வேறு கவலையில்லை. முத்திருளப்பன் குடும்பஸ்தர். ஜெயிலுக்குப் போனதால் வேலையும் போய்விடும். அவருடைய குடும்பத்துக்கு இது பெரிய சோதனையாயிருக்குமென்பதை இப்போதே ராஜாராமனால் உணர முடிந்தது. ஏற்கெனவே பிட்டுத் தோப்பில் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்த மாதிரிக் குருசாமி செல்லூரில் கள்ளுக்கடை மறியல் செய்வதும் நடைபெற முடியாது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையைக் கவனிப்பது என்பதும் நடக்காது. ஒருவேளை வாசக சாலையைப் பத்தர் கவனித்துக் கொள்ளலாம். போலீஸ் தொந்தரவு, சி.ஐ.டி. நடமாட்டம் அதிகமாகித் தொழிலுக்குத் தொந்தரவு வருமானால், பத்தரும் அதைச் செய்ய மாட்டார். வக்கீல் குமாஸ்தா திருவேங்கடத்தை போல் வெள்ளைக்கார தாசர் இல்லை என்பது தான் பத்தரிடம் விரும்பத்தக்க அம்சமே தவிரப் போராட்டத்தில் இறங்கும் துணிவெல்லாம் அவரிடம் கிடையாது. உபகாரி, காந்தியிடம் நம்பிக்கை என்ற அளவில் முழுமையான பக்தி உள்ளவர் என்பது வரை, பத்தர் சந்தேகத்துக்கிடமில்லாதவர். வாசக சாலையை அவர் நடத்துவாரா இல்லையா என்பது பற்றியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான் ராஜாராமன். 'பிள்ளை, எங்கே நடு ராத்திரியில் எழுந்திருந்து வாசக சாலைக்குப் போய்விடுவானோ' என்ற பயத்தில் அம்மாவும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பயமும் அக்கறையும் ராஜாராமனுக்குப் புரிந்தன. மறுநாளும் அவன் வெளியே போகவில்லை. காலை பதினொரு மணிக்கு ஒரு சி.ஐ.டி. வீட்டுக்குத் தேடி வந்தான். நல்லவேளையாக, ராஜாராமனின் அம்மாவே அப்போது வாசல் திண்ணையில் இருந்ததால், "அவன் மேலூர்லேருந்து இன்னும் வரலியே!" என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டாள். வந்த ஆள் சி.ஐ.டி.யா இல்லையா என்பது பற்றி ராஜாராமனின் தாய்க்குத் தெரியாது. சி.ஐ.டி.யாக இல்லாவிட்டாலும் அவள் அதே பதிலைத்தான் சொல்லியிருப்பாள். பிள்ளையாண்டான் வெளியே போய் கைதாகக் கூடாதென்பதில் அவளுக்கு அவ்வளவு அக்கறை. |