4 அடுத்த நாள் காலை விடிவதற்கு முன்பே எழுந்து நீராடித் தயாராகிவிட்டான் ராஜாராமன். காரியத்தைச் செய்துவிட்டே கைதாக விரும்பியதால் வீட்டிலிருந்தே அகப்பட்டுக் கொள்ளாதபடி முன்னெச்சரிக்கை அவசியமாகியது. நண்பர்கள் எல்லோரும் அம்மன் சந்நிதி முகப்பில் தேங்காய் மண்டபத்தில் காலை 9 மணிக்குச் சந்திக்க வேண்டுமென்று பிட்டுத் தோப்புக் கூட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து முதலில் மேலக் கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் புகுந்து கொண்டால் அப்புறம் கோவிலிலிருந்தே அம்மன் சந்நிதிக்குப் போவது சுலபம். அவன் புறப்படுகிற காரியத்துக்கு ஆசி வழங்க அவனுடைய அன்னை விரும்ப மாட்டாள். மதுரைக்கே அன்னையாகிய மீனாட்சியிடம் ஆசி வாங்கிக் கொண்டு போக விரும்பினான் அவன். பலபலவென்று கிழக்கே வெளுக்கு முன்பே புறப்பட்டு விட்டான். அவனுடைய தாய் குறுக்கே நின்றாள். "எங்க கிளம்பியாச்சு?" "கோவிலுக்குப் போறேன்..." "ஜாக்கிரதையாப் போயிட்டு வா..." அவனைப் பொறுத்தவரையில் அவன் சொல்லியது பொய்யில்லை. தேசமும் கோவிலும் அவனுக்கு ஒன்று தான்; இரண்டையும் அவன் வ்ழிபடுகிறான். இரண்டையுமே அவன் போற்றித் தொழுகிறான். பொற்றாமரையில் கை கால் சுத்தம் செய்து கொண்டு அம்மன் சந்நிதி முகப்பில் அவன் பிரவேசித்த போது, உள்ளே இருந்து எதிரே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்றான், அவன். அவள் இதழ்களில் நகை ஓடி ஒளிந்தது. கோயிலுக்குப் போகிற போதும் அந்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து ஜன்மத்தின் முகத்தில் விழிக்க நேர்ந்ததே என்று மனம் அருவருப்படைய மேலே நடந்தான் அவன். அவளருகே வந்து கொண்டிருந்தவள் அவளுடைய தாயாயிருக்க வேண்டும். தாயின் காதருகே மெதுவாக அவள் ஏதோ சொல்வதையும் அவன் கவனிக்க முடிந்தது. மதுரம் என்று பத்தர் அவளுடைய பெயரைச் சொல்லியிருந்தது நினைவு வந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன். ஒரு முறை யதேச்சையாக, அவன் பின்னால் திரும்பிப் பார்த்த போது, அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அந்தப் பார்வையை அவனால் மறக்க முடியவில்லை. அப்படிப் பார்த்ததற்காக அவள் மேல் கோபமும் வந்தது. அம்மன் சந்நிதியிலிருந்து சாமி சந்நிதிக்குப் போகும் போதும் அவளை அவன் அங்கே காண முடிந்தது. ஏதோ அபிஷேக கலசங்கள் அலங்கரிக்கப்பட்டுக் குருக்கள் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவளும் அவள் தாயும் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தனர். அவள் அந்தக் கலசாபிஷேகதுக்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறாள் போலும். கைநிறைய மோதிரங்களும், மார்பில் மெல்லிய தங்கச் சங்கிலியும் டாலடிக்க ஒரு பிரமுகரும் இன்னொரு பக்கம் உட்கார்ந்திருந்தார். தரிசனமும் முடிந்த பின்னும் நிறைய நேரமிருந்தது. மீண்டும் அம்மன் சந்நிதி வந்து, கிளி மண்டபத்தருகே குளக்கரையில் சப்பணம் கூட்டி உட்கார்ந்தான் அவன்.
காலையில் அவன் எதுவும் சாப்பிட்டுவிட்டு வரவில்லை; பசித்தது. கோவிலுக்குப் போய்விட்டு வருவதாகக் கூறியிருந்ததால் அவன் தாயும் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. "நல்ல காரியங்களைப் பசியோடு செய்தால் தான் சிரத்தையைக் காண்பிக்கலாம் - என்று விரதங்களையும் நோன்புகளையும் பசித்த வயிற்றோடு செய்யச் சொல்லி பாரத நாட்டு முன்னோர்கள் வழக்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் மிகப் பெரிய விரதம் சுதேசி இயக்கம் தான்!" என்று என்ணிய போது பசியைக் கூட மறக்க முடிந்தது, அவனால்.
நேரம் மெதுவாக நகர்வது போலிருந்தது. மண்டபத்தில் கூண்டில் அடைப்பட்டிருந்த கிளிகளின் மிழற்றும் குரல்களைக் கொஞ்ச நாழிகை அவன் இரசித்துக் கொண்டிருந்தான். சுமார் எட்டே முக்கால் மணிக்கு அவன் அங்கிருந்து கிழக்கே அம்மன் சந்நிதி முகப்புக்கு நடந்தான். எதிர்ச்சரகில் ஜவுளிக் கடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டிருப்பது தெரிந்தது. நண்பர்கள் பன்னிரண்டு பேர் மறியலுக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வந்தது மூன்று பேர்கள். மற்றவர்கள் பயந்து தயங்கியோ, அல்லது முத்திருளப்பன், குருசாமி கைதானது தெரிந்தோ மறியலுக்கு வராமல் பின் தங்கிவிட்டார்கள். அவனையும் மற்ற மூவரையும் தேங்காய், பழக்கடைக்காரர்கள் முறைத்து முறைத்துப் பார்த்தனர். அதிக நேரம் தாமதித்தால், இந்த மூன்று பேரும் கூடப் போய்விடுவார்களோ என்று சந்தேகமாயிருந்தது. யாருக்காகவும் காத்திராமல் மறியலை உடனே தொடங்குவது நல்லதென்று நினைத்தான் அவன். "வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!" - என்ற குரல்கள் அந்த நான்கு பேருடைய கண்டத்திலிருந்தும் ஒரே சமயத்தில் ஒலித்தன. ஜவுளிக்கடை வாசலில் போய்க் கைகோத்து நின்று, சுலோகங்கள் முழக்கினார்கள் அவர்கள். கடைக்காரர் வந்து சத்தம் போட்டார். "உங்களோட எங்களுக்கு எதுவும் பேச்சில்லை. அந்நிய நாட்டு ஜவுளி வாங்க வருகிற ஜனங்களிடம் நாங்க சொல்ல வேண்டியதையும், தெரிவிக்க வேண்டியதையும் தான் இப்படித் தெரிவிக்கிறோம்" - என்றான் ராஜாராமன். சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. கடைக்குத் துணி வாங்க வந்த இரண்டொருவர் திரும்பிப் போய் விட்டனர். கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. கீழ்வாசல் போலீசுக்குத் தகவல் சொல்லி அனுப்புவதாக மிரட்டினார். ராஜாராமன் கடைவாசல் படியில் குறுக்கே படுத்தான். போலீசுக்குத் தகவல் சொல்லப் புறப்பட்ட ஆள் அவன் தோள்பட்டையில் மிதித்துக் கொண்டுதான் போக முடியுமென்ற நிலை ஏற்பட்டது. அந்த ஆள் அதைச் செய்யத் தயங்கினான்." "போய்த் தொலையேண்டா; நாய்ப் பயலே!" - என்று கடைக்காரர் அவனைத் துச்சமாக ஒரு வார்த்தை சொல்லித் திட்டினார். அவன் ராஜாராமனின் தோளைத் தாண்ட முயன்று, முடியாமல் நெஞ்சில் மிதித்துக் கொண்டு படி இறங்கித் தன்னை மறந்த நிலையில் ஒருவரைத் தெரியாமல் மிதித்துவிட்ட சமயத்தில் செய்வது போல் கண்களில் கையை ஒற்றிக் கொண்டு விடவே, அதைக் கண்டு மேலும் கோபம் கொண்ட கடைக்காரர், "பெரிய சாமியை மிதிச்சிட்டாப்பல கண்ணிலே ஒத்திக்கிறான். போடான்னா நிக்கிறியே?" என்று கூச்சல் போட்டார். 'வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே!' - என்ற கோஷங்கள் மறியல்காரர்களிடமிருந்து இடைவிடாமல் முழங்கிக் கொண்டே இருந்தன. கடைக்குள் ஒரு ஜனம் கூட நுழையவில்லை. மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. பத்தே முக்கால் மணிக்குப் போலீஸ்காரர்களும் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் வந்தார்கள். அதற்குள்ளேயே தண்ணீரில் சாணியைக் கரைத்துக் கொட்டிவிடப் போவதாகக் கடைக்காரர் பயமுறுத்திக் கொண்டிருந்தார். போலீஸ்காரர்களும் சப் இன்ஸ்பெக்டரும் வந்த பின்பும் ராஜாராமன் மறியலை விடவில்லை. கடைக்காரர் குறுக்கே குய்யோ முறையோவென்று சப் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார். மறியல்காரர்கள் கடையையே கொளுத்த வந்ததாகப் புளுகினார் அவர். ராஜாராமனுடைய தோள்பட்டையில் லத்திக் கம்பால் ஓங்கி அடி விழுந்தது. இரண்டு போலீஸ்காரர்கள் அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். நண்பர்களுக்குச் சரியான அடி விழுந்திருந்தது. கோஷமிடுவதை அவர்கள் இன்னும் நிறுத்தவில்லை. போலீஸ்காரர்கள் அவனையும் நண்பர்களையும் இழுத்துப் போகும் போது, அம்மன் சந்நிதி வாசலில் ஒரு ஜட்காவில் அவள் ஏறிக் கொண்டிருந்தாள். அவளோடு அவள் தாயும் அந்தத் தங்கச் சங்கிலிப் பிரமுகரும் உடனிருப்பது தெரிந்தது. அவள் கண்கள் கலக்கத்தோடு தன்னைப் பார்ப்பதை அவனும் கவனித்தான். அபிஷேகம் முடிந்து இப்போதுதான் அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதாக அவனுக்குத் தோன்றியது. அதற்குள் ஒரு போலீஸ்காரன் பிடரியில் கையைக் கொடுத்து அவனை முன்னுக்குத் தள்ளினான். 'இவள் சூடிக்கழிக்கும் வாடிய பூக்கள் வாசகசாலை முற்றத்தில் வந்து விழ இனிமேல் ஒரு தடையுமிருக்காது...' என்று எண்ணியபடியே பசித் தளர்ச்சியும் அடி வாங்கிய வலியுமாகத் தள்ளாடித் தள்ளாடி மேலே நடந்தான் அவன். சாயங்காலம் வரை அவனையும் நண்பர்களையும் கீழவாசல் லாக் அப்பில் வைத்திருந்தார்கள். ரிமாண்டு - விசாரணைக்குப் பின்பு அவன் மட்டும் வேலூருக்குக் கொண்டு போகப்பட்டான். நண்பர்களை என்ன செய்யப் போகிறார்கள்; எங்கே கொண்டு போகப் போகிறார்கள் என்பதை அவனால் அறிய முடியவில்லை. மதுரை ரயில்வே பிளாட்பாரத்தில், மேற்கே சூரியன் மறையும் காட்சியைப் பார்த்துக் கொண்டே விலங்கிட்ட கைகளுடன் அவன் ரயிலேற்றப்பட்டபோது ரத்தினவேல் பத்தர் கண்களில் தென்பட்டார். செய்தியைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்கத்தான் அவர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவரோடு அவன் எதுவும் பேச முடியவில்லை. ஜாடை காட்ட முயன்றும், அதைச் செய்ய முடியாமல் கூட்டம் அவருக்கு அவனையும், அவனுக்கு அவரையும் மறைத்துவிட்டது. பரஸ்பரம் பார்த்துக் கொள்ள மட்டும் முடிந்தது. மனத்தில் என்னென்னவோ அலை மோதிற்று. ரயில் வைகைப் பாலம் தாண்டியபோது ஊரும், கோபுரங்களும் மாலை இருளில் மங்கலாகத் தெரிந்தன. திண்டுக்கல்லில் ஏதோ சாப்பிட வாங்கிக் கொடுத்தார்கள். வலது கையை மட்டும் கழற்றிவிட்டு, இடது கையைத் தன் கையோடு பிணைத்து விலங்கைப் பூட்டிக் கொண்டுதான் ராஜாராமனை சாப்பிட அனுமதித்தான் போலீஸ்காரன். அன்று முழுவதும் வீட்டில் அம்மா சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று ஞாபகம் வந்தது. அவளுக்கு எப்படியும் இரவுக்குள் பத்தர் போய்ச் சொல்லிவிடுவார். அவள் என்னென்ன உணர்ச்சிகளை அடைவாள் என்பதை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தோள்பட்டையில் அடி விழுந்த இடத்தில் வலித்தது. உருட்டிய கவளத்தை வாய் வரை உயர்த்திப் போட்டுக் கொள்ளக் கூட முடியாமல் வலித்தது. அடிபட்ட இடத்தில் பெரிய நெல்லிக்காயளவு வீங்கி இருந்தது. ராஜாராமன் மறுநாள் வேலூர் சிறையில் சி வகுப்புக் கைதியாக நுழைந்தான். அரசியல் கைதிகளுக்கு பி வகுப்புத் தருவார்கள் என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார்கள். மதுரை போலீஸ் என்ன சார்ஜ் எழுதி அனுப்பியிருந்ததோ, அவனை சி வகுப்பில் தள்ளினார்கள். 'பி'யிலும் 'சி'யிலும் இருந்த பல தேசத் தொண்டர்களைப் பார்த்தபோது அவனுக்குத் தன் இனத்துக்கு நடுவே வந்து சேர்ந்து விட்டோம் என்று பெருமையாயிருந்தது. மனநிம்மதி ஏற்பட்டது. அங்கிருந்த அனைவருமே தாய், தந்தை, குடும்பம், மனைவி மக்கள், பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தேசத்தை விடுவிப்பதற்காக இப்படி வந்து வாடுகிறார்கள் என்பதை நினைத்தபோது ஒரு பெரிய தாயின் வேதனைக்காகத் தன் தாயைப் போல் எங்கெங்கோ பல சிறிய தாய்மார்கள் வேதனைப்படலாமென்று எண்ணி ஆறுதலடைய முடிந்தது. முத்திருளப்பனையும், குருசாமியையும் எங்கே கொண்டு போயிருப்பார்களென்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஒரு வேளை கடலூருக்குக் கொண்டு போயிருக்கலாம். அல்லது திருச்சிக்குக் கொண்டு போயிருக்கலாம்; நாகபுரிக்கோ, பெல்லாரிக்கோ, கொண்டு போயிருக்க அவ்வளவு தீவிரமான காரணம் இல்லையென்றே தோன்றியது. அவர்களை விடப் பெரிய காரணங்களுக்காகக் கைதானவர்கள் எல்லாம் கூட வேலூர் ஜெயிலில் தான் இருந்தார்கள். ஜெயிலில் கொடுத்த கேழ்வரகுக் களி முதல் தடவை அவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அமிர்தத்தையே உண்ணும் தகுதிள்ள பெரிய பெரிய தலைவர்களும் அங்கே இதைத்தான் சாப்பிடுகிறார்கள் என்று எண்ணியபோது, ருசிகளைக் கட்டுப்படுத்த முயன்றான் அவன். கூட இருந்தவர்களில் ஒருவர் வேதாரணியம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைதானவர். அவரிடம் வேதாரணியம் நிகழ்ச்சிகளை விவரித்துச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிற அனுபவமாக இருந்தது. நடுத்தர வயதினரான அவர் ஒரு கீதைப் புத்தகம் வைத்திருந்தார். மாலைவேளையில் சிறிது நேரம் அவரைக் கீதைக்குப் பொருள் சொல்லச் செய்து கேட்டான் ராஜாராமன். அது மனதுக்கு ஆறுதலளிப்பதாயிருந்தது. "பாரதத்தின் மகத்தான அனுபவ கிரந்தமே போரில் தான் பிறந்திருக்கிறது" என்று அவர் கீதையைப் பற்றிச் சொன்னதை அவன் இரசித்தான். "இப்போது நாம் நடத்திக் கொண்டிருப்பது கூட ஒரு தர்ம யுத்தம் தான். இதில் நம்முடைய கீதை காந்தியாயிருக்கிறார். நமது தயக்கம் பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டு விட்டு நாம் இந்தப் போரில் குதிக்கத் துணிந்ததற்கு அந்த மகான் தான் காரணம். பாரிஸ்டருக்குப் படித்துவிட்டுத் தொழில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்காமல், இந்த தேசத்துக்காக ஒரு நாட்டுப்புற விவசாயியைப் போல் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேலுடுத்துப் புறப்பட்டிருக்கிறார் பாருங்கள்" - என்று கண்களில் நீர் நெகிழ வர்ணித்தார் அந்த நண்பர். 'சி' கிளாஸ் அரசியல் கைதிகள் பத்துப் பேருக்கு மேல் அந்த நீண்ட கூடம் போன்ற அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். கீதைப் புத்தகம் வைத்திருந்த நண்பர் பிரகதீஸ்வரன் புதுக்கோட்டைக்காரர். கல்கத்தா காங்கிரஸுக்கு நேரில் போய்க் கலந்து கொண்டவர் அவர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டில் நடந்த கல்கத்தா காங்கிரசைப் பற்றி அவர் கூறிய வர்ணனைகளைக் கேட்டுக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தான் ராஜாராமன். கல்கத்தா காங்கிரஸின் சேவாதளத் தொண்டர்களுக்குத் தலைவர் என்ற முறையில் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ உடை தரித்த கோலத்தில் காட்சியளித்த கம்பீரத்தைப் பற்றி பிருகதீஸ்வரன் வர்ணித்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாராமனுக்கு உடம்பு புல்லரித்தது. வீரமும், இளமையும் பொங்கித் ததும்பும் சுபாஷ் போஸின் சுந்தர முகத்தை அகக்கண்ணில் நினைத்துப் பார்த்து மெய்சிலிர்த்தான் அவன். ரோமன் ரோலந்து கல்கத்தா காங்கிரஸுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்ததைப் பற்றியும், 'பரிபூர்ண விடுதலையே பாரத நாட்டின் குறிக்கோள்' என்று அந்தக் காங்கிரஸில் ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் போஸும் திருத்தப் பிரேரணைகள் கொண்டு வந்ததைப் பற்றியும் - எல்லாம் பிருகதீஸ்வரன் விவரித்துச் சொன்னார். கதை கேட்பது போல் எல்லாரும் பிருகதீஸ்வரனைச் சுற்றி அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். லாகூர் காங்கிரஸைப் பற்றியும் சொல்லுமாறு அவரைக் கேட்டான் ராஜாராமன். "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதிலே லாகூர் காங்கிரஸுக்கு நான் போக முடியலே. அந்தச் சமயம் தான் என் மனைவி இரண்டாவது பிரசவத்துக்குப் பின் ரொம்ப உடம்பு சவுகரியமில்லாமே, பிழைப்பாளோ மாட்டாளோ என்றிருந்தது. போக முடியாமப் போச்சு" என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பிருகதீஸ்வரன். குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவது போலவே தேசத்தைப் பற்றிக் கவலைப்படும் இந்தப் பவித்திரமான மன நிலையை ஒவ்வொரு இந்தியனும் அடையச் செய்த திலகரும், காந்தியும் எவ்வளவு பெரிய சத்திய சக்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து வியந்தான் ராஜாராமன். மனைவி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தும் லாகூர் காங்கிரஸுக்குப் போக முடியவில்லையே என்று பிருகதீஸ்வரன் வருந்தியிருப்பதை எண்ணிய போது தேசபக்தி என்கிற மாயசக்தி என்னென்ன காரியங்களைச் சாதிக்கிறதென்று புரிந்து கொள்ள முடிந்தது. வேதகாலத்து இந்தியாவுக்குப் பின் திலகரும் மகாத்மாவும் தேசபக்தி என்னும் ஒரு புதிய தவத்தையே வழக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றியது. தனி மனிதனுக்கு முக்தியும் சித்திகளும் அளிப்பதே பழைய தவத்துக்கு இலட்சியங்கள். இந்தப் புதிய தவத்துக்கோ எல்லா இலட்சிய நோக்கமும் தேசமளாவிய பயன்களைத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய தவத்தைச் செய்யும் யோகிகளில் இளையவனாக அவர்கள் கூட்டத்தில் தானும் இருக்கிறோம் என்பதை எண்ணி யெண்ணிப் பூரித்தான் ராஜாராமன். சத்தியாக்கிரகம் என்ற பதத் தொடரின் அர்த்தத்தைப் பிரகதீஸ்வரன் விளக்கியபோது அவன் பிரமிப்பு அடைந்தான். 'இயக்கம்' என்ற சாதாரண வார்த்தையை விடப் பொருளாழம் உள்ளதாயிருந்தது அது. சிறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு மிகமிக மோசமாயிருந்தது. ஒரு நாள் பிரகதீஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட கேழ்வரகுக் களியிலிருந்து ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டிவிட்டு அந்தக் களியை உண்ணாமல் மூலையில் ஒதுக்கி வைத்தார் அவர். வேறு சத்தியாக்கிரகிகளில் சிலர் வயிற்றுப் போக்காலும் சிலர் வாந்தியாலும் வேதனைப்பட்டார்கள். எல்லாவித வகுப்புக் கைதிகளும் சேர்ந்து தங்கள் உணவுக்கான சாமான்களைக் கொடுத்துவிட்டால் தாங்களே உணவு தயாரித்துப் பரிமாறிக் கொள்வதாக விடுத்த வேண்டுகோளைச் சிறை நிர்வாகம் ஏற்றது. பிருகதீஸ்வரனுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். சமையல் பொறுப்பை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அவருக்கான உதவிகளைச் செய்வதில் ராஜாராமன் முன் நின்றான். வித்தியாசம் பாராமல் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதைக் கண்டு அவனும் பிருகதீஸ்வரனும் மிகவும் திருப்தியடைந்தார்கள். சில சத்தியாக்கிரகிகள் உணவுப் பந்தியில் பிரார்த்தனைக் கீதங்களைப் பாடினார்கள். வேறு சிலர் பாரதியாருடைய 'இதந்தரு மனையின் நீங்கி' - என்று தொடங்கும் சுதந்திரதேவி துதியை இனிய எடுப்பான குரலில் பாடினார்கள். நியாயமான காரணத்துக்காகப் போராடிச் சிறை புகுந்திருக்கிறோம் என்ற சத்திய ஆவேசம் அங்கு எல்லாருக்கும் இருப்பதைப் பார்த்தபோது அவனுக்கு அது தனிப் பெருமிதத்தை அளித்தது. சிறைச்சாலை தவச் சாலையைப் போலிருந்தது. பேட்டை முத்துரங்க முதலியாரின் நாலாயிர திவ்யப் பிரபந்த ஆராய்ச்சியும், பிருகதீஸ்வரனின் கீதை வகுப்பும், ராஜாராமன் தானே விரும்பி நடத்திய பாரதி பாடல் வகுப்பும் மாலை வேளைகளில் சத்தியாக்கிரகிகளை உற்சாகப் படுத்தின. 'வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' - என்று பாடிய ஒவ்வொரு முறையும் சீவசக்தி ததும்பும் தாரக மந்திரம் ஒன்றை ஓதி முடித்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைத்தது. ராஜாராமன் வேலூர் சிறைக்கு வந்த ஒரு வாரத்தில், அவன் தாய் சொல்லி ரத்தனவேல் பத்தர் கைப்பட எழுதப்பட்ட கடிதம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்திலிருந்து தன்னுடைய தாய் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறாள் என்பதை அவன் உணர முடிந்தது. அதற்கப்புறமும் மாதம் ஒன்றோ இரண்டோ - அவன் தாய் சொல்லிப் பத்தர் கேட்டு எழுதிய கடிதங்கள் அவனுக்குத் தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தன. ஐந்தாறு மாதங்கள் விளையாட்டுப் போல் வேகமாக ஓடிவிட்டன. சிறைவாசம் நன்றாகப் பழகிவிட்டது. முரட்டுத் தரையில் கித்தான் விரிப்பில் தூக்கம் கூட வந்தது. அதுவே ஓர் ஆசிரம வாழ்க்கை போலாகியிருந்தது. மதுரையிலிருந்து அந்த மாதம் கடிதம் வரவேண்டிய வழக்கமான தேதிக்குக் கடிதம் வராமல், இரண்டு நாள் கழித்துப் பத்தரே நேரில் சந்தித்து அவனைப் பரோலில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தார் அவர். அவன் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, "உங்கம்மா நெலைமை ரொம்ப மோசமாயிருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் தாங்கறது கூடக் கஷ்டம்" என்று கவலை தோய்ந்த குரலில் பதில் கூறினார் பத்தர். ராஜாராமன் 'பரோலில்' மதுரை போக விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன்பு பேட்டை முத்துராமலிங்க முதலியாரின் தாயார் காலமான செய்தி வேலூர் சிறைக்கு வந்தபோது 'பரோலில் ஊர் போய் வருமாறு' - அவரை எல்லா சத்தியாக்கிரகிகளும் வற்புறுத்தியபோதும், அவர் போக மறுத்திருந்தார். தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகக் கிடைத்திருந்த துன்பத்தைப் பந்த பாசக் கவலையில் சில நாட்கள் கூட இழக்க விரும்பாத அந்த நெஞ்சுரம், அவனிடம் இருந்தது. 'பரோலில்', அழைத்துப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளுடனும் வந்திருந்த பத்தரோடு போக மறுத்துவிட்டான், அவன். அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை. "அந்தப் பெண் மதுரத்துக்கு ஏதாச்சும் சொல்லணுமா?" என்று பத்தர் கேட்டபோது முதலில் அவனுக்கு அவர் யாரைப் பற்றிச் சொல்லுகிறார் என்றே நினைவு வரவில்லை. புரியவுமில்லை. சிறிது நேரம் கழித்துப் புரிந்ததும் கோபம் தான் வந்தது. "நீங்க என்ன பத்தரே; எந்தெந்த ஒண்ணா நம்பர்ச் சந்துப் பிறவிகளுக்கெல்லாமோ தகவல் கேட்கிறீங்க...? அதுக்கும் எனக்கும் என்ன இருக்கு? நான் எதுக்குச் சொல்லணும், என்ன சொல்லணும்?" என்று கடுமையாகக் கேட்டதும், பத்தர் பேசாமல் போய்விட்டார். ஆனால் அவர் போய் வெகு நேரமான பின்பும் பழக்கமில்லாத ஒருத்திக்கு ஏதாவது தகவல் உண்டா? - என்று தன்னை எதற்காக அவர் கேட்டார் என்பது புரியாமல் அவன் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது; பத்தர் என்ன நினைத்துக் கொண்டு அப்படிக் கேட்டார். என்ன எதிர்பார்த்துக் கேட்டார் என்று அநுமானிக்கக் கூட அவனால் முடியவில்லை. சூரிய ஒளியில் மூக்குத்தி மின்னும், நகை ஓடி ஒளிகிற இதழ்களுடன் கூடிய அந்த வசீகரமான முகமும், கண்களும், வீணையின் குரலும், குரலின் வீணை இனிமையும் மெல்ல மெல்ல அவன் ஞாபகத்தில் வந்து போயின. "அவளைப் பற்றி என்னிடம் தகவல் கேட்க என்ன இருக்கு?" நீண்ட நேரம் இந்த சிந்தனையிலிருந்து அவன் மீளவில்லை. அம்மன் சந்நிதி வாசலில் தான் கைதான போதும், அதற்கு முன்னால் கோவிலுக்குள்ளும் தன்னை அவள் பார்த்தாள் என்பதும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது. பத்தர் வந்து போன அவசரத்திலும், பரபரப்பிலும், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைத் தான் கேட்க மறந்து விட்டோம் என்பதை நிதானமாக நினைத்துப் பார்த்த போதுதான் உணர முடிந்தது. முத்திருளப்பன், குருசாமி இருவரையும் பற்றிய விவரங்கள், வாசக சாலை எப்படி நடைபெறுகிறதென்ற நிலைமை, தன்னோடு அம்மன் சந்நிதி வாசலில் கைதான மற்ற இரு சத்தியாக்கிரகிகள் பற்றிய விவரங்கள், எதையுமே தான் பத்தரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவர் புறப்பட்டுப் போன பின்பே அவன் நிதானமாக உணர்ந்தான். தான் வரவில்லை என்பதை அறிந்தால் தன் தாயின் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கே வேதனையாகவும் இருந்தது. அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கவே முடியாதென்பது அவனுக்குத் தெரியும். "உங்கம்மாவுக்கு நீதான் ஒரே பிள்ளைன்னாப் போயிட்டு வறதுதான் நியாயம்னு படறது எனக்கு. பதினஞ்சு நாள் வரை கூடப் 'பரோல்'லே போயிட்டு வரலாமே?" என்றார் பிருகதீஸ்வரன். அவரே இப்படிச் சொல்லியதைக் கேட்ட போது, 'போய்விட்டே வந்திருக்கலாமோ?' என்று கூட அவனுக்குத் தோன்றியது. தன்னை அறியாமல் அவன் அன்று முழுவதுமே ஓயாமல் அவரிடம் தன் தாயைப் பற்றியும் அவளுக்குத் தன் மேலுள்ள பிரியத்தைப் பற்றியுமே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவோ மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றும் அவனால் அதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் மனம் என்ன நினைக்கிறதென்று புரிந்துதான் பிருகதீஸ்வரன் அந்த யோசனையை அவனுக்குக் கூறினார். 'அவ்வளவு தூரம் தன்னுடைய கில்ட் கடை வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, எனக்காக வேலூருக்குத் தேடிவந்த பத்தருக்கு உபசாரமாக ஒரு வார்த்தை நன்றிகூடச் சொல்ல மறந்துவிட்டேனே' - என்று நினைத்தபோது அவசரத்திலும் மனக் கவலையிலும் பல வேலைகளைச் செய்யத் தவறியிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. வீட்டையும், அம்மாவையும் சுற்றிச் சுற்றித் தயங்கிய மனத்தை அன்று மாலை பிருகதீஸ்வரன் நடத்திய கீதை விளக்கவுரை ஓரளவு அமைதியடையச் செய்தது. இரவு வெகுதூரம் உறங்காமல் விரித்த கித்தானில் உட்கார்ந்து கொண்டே இருந்தான் ராஜாராமன். மற்ற சத்தியாக்கிரகிகள் தாறுமாறாகக் கிடந்து உறங்கிக் கொண்டிருந்த சிறையிருளில் பிருகதீஸ்வரன் அருகிலமர்ந்து அவன் மனக் கவலையைப் பகிர்ந்து கொள்ள முயன்றார். 'அம்மா போய் விடுவாளோ' என்ற பயமும் துக்கமும் மிகுந்த போது பொறுக்க முடியாமல் அழுகையே வந்து விட்டது அவனுக்கு. அப்போது ஒரு மூத்த சகோதரனின் பாசத்தோடு அவன் தோளைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தார் பிருகதீஸ்வரன். 'மனசை விட்டு விடாதே' - என்று அவருடைய சாத்வீகமான குரல் அப்போது அவன் காதருகே மிருதுவாக ஒலித்தது. மறுநாள் காலையில் கொஞ்சம் கவலை குறைந்தது. அன்று காலை சத்தியாக்கிரகிகள் குளிப்பதற்கு முறை; உடலில் தண்ணீர் பட்டதும் ஏதோ புத்துணர்ச்சி பெற்று விட்டாற் போலிருந்தது. பந்திக்கு உணவு பரிமாறுவது, பிரார்த்தனை எல்லாவற்றிலுமாகக் கவலைகளை அன்று பகலில் ஓரளவு மறக்க முடிந்தது. வக்கீல்கள், ஆசிரியர்கள், செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பந்தியில் அமர்ந்து சிறை உணவைச் சாப்பிட்டவர்கள் ஒவ்வொருவரும், இப்படி எத்தனை எத்தனை கவலைகளை மறந்து தேச விடுதலைக்காக இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்பதை எண்ணியபோது தன் கவலை மிகவும் சிறிதாகவே இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு. மாலையில் கீதை வகுப்பு நடத்தியபோது எல்லா சத்தியாக்கிரகிகளும் சுற்றி அமர்ந்திருந்தாலும், அவனுக்காகவே அந்த வகுப்பை நடத்தியதுபோல் நடத்தினார் பிருகதீஸ்வரன். அவன் மனம் முற்றிலும் ஆறுதல் அடையத்தக்க விதத்தில் அவருடைய உரைகள் அமைந்திருந்தன. மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து, மகாகவி பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சியைப் பாடுவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முதலில் ராஜாராமன் பாடுவான்; அப்புறம் மற்றவர்களும் திருப்பிப் பாடுவார்கள். அங்கிருந்தவர்களில் அவனுக்கும் இன்னொரு இரண்டொருவருக்கும் தான் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி நன்றாக மனப்பாடம் ஆகியிருந்தது. முதல் நாளிரவு, "நாளைக்கு வெள்ளிக்கிழமை! காலையிலே திருப்பள்ளி எழுச்சி இருக்கு. அஞ்சு மணிக்கே எழுந்திருக்கணும். சீக்கிரமாகத் தூங்கு" - என்று அவனையும் தூங்கச் சொல்லிப் பிரியத்தோடு வேண்டிக் கொண்டுதான் அப்புறம் பிருகதீஸ்வரன் படுத்தார். அவர் காலையில் நாலே முக்கால் மணிக்கே எழுந்திருந்து ராஜாராமனையும் எழுப்பிவிட்டார். ஜெயில் காம்பவுண்டுக்குள் இருந்த மரங்களில் பறவைகளின் விதவிதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய அதே வேளையில்,
"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருட்கணம் போயின யாவும்..." என்று ராஜாராமன் பாடத் தொடங்கினான். அப்போது யாரும் எதிர்பாராமல் வார்டன் கதவைத் திறக்க ஜெயில் அதிகாரி ஒருவர் உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு தந்தி இருந்தது. டக்டக் என்று பூட்ஸ் ஒலிக்க வார்டனும் அதிகாரியும் வழக்கமில்லாத வழக்கமாக அந்த வேளையில் அங்கே வந்ததைக் கண்டும், அவர்கள் பாட்டு நிற்கவில்லை. பாட்டு முடிகிற வரை வார்டன் காத்திருக்க நேர்ந்தது. "ராஜாராமன் என்பது?" "நான் தான்" - என்று ராஜாராமன் ஓரடி முன்னால் வந்தான். "மதுரையில் உன் தாயார் காலமாகி விட்டாள். தந்தி நடுராத்திரிக்கு வந்தது." "....." "பரோல்ல யாராவது அழைச்சிண்டு போக வந்தால் அனுப்பறேன்... ஐ யாம் ஸோ ஸாரி..." -ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் நின்றான். அழக்கூட வரவில்லை. மனத்தை ஏதோ பிசைந்தது. இரும்பு அளியின் நீள நீளமான கம்பிகள் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நீண்டு தெரியத் தொடங்குவது போல பிரமை தட்டியது. தாயின் முகமும் மதுரையின் கோபுரங்களும், நடுவாக நீர் ஓடும் கோடைகாலத்து வைகையின் தோற்றமும், சம்பந்தத்தோடும் சம்பந்தமில்லாமலும், உருவெளியில் தோன்றுவதும் மறைவதுமாயிருந்தன. தொண்டைக் குழியில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. 'பொழுது புலர்ந்தது' என்று அவன் பாடத் தொடங்கிய வேளையில் மறுபடி இருட்டிவிட்டது. வார்டன் துணைவர அவனைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போய் இரண்டு வாளி தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினார் பிருகதீஸ்வரன். சொந்தத் தாயின் மரணத்துக்கே, யாரோ உறவினர் சாவைக் கேட்டுத் தலை முழுகுவது போல், முழுகினான் அவன். "அன்னிக்கே 'பரோல்'லே போயிருக்கலாம். முகத்துலே முழிக்கக்கூட உனக்குக் கொடுத்து வைக்கலே! பாவம்..." என்றார் பிருகதீஸ்வரன். "கருமம்லாம் பண்ணணுமே? பரோல்லே போறியா?" "இல்லை. போக வேண்டாம். நான் போய் இனிமேல் அவள் திரும்பிக் கெடைக்கப் போறதில்லே" என்றான் ராஜாராமன். சொல்லும்போதே அவன் குரல் கம்மியது. கண்கள் கல்ங்கிவிட்டன. சிரமப்பட்டு அவன் அழுகையை அடக்க முயன்றதைப் பிருகதீஸ்வரன் கவனித்தார். அன்று முழுவதும் ராஜாராமன் சாப்பிடவில்லை. யாருடனும் பேசவில்லை. பிருகதீஸ்வரன் ஆறுதலாக ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். மறுநாள் பகலிலும் அவர் வற்புறுத்திய பின்பே அவன் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டதாகப் பேர் பண்ணினான். நாளாக நாளாக அவன் மனம் ஆறியது. ஒரு வாரத்துக்குப் பின் பத்தர் மறுபடி வந்துவிட்டுப் போனார். காலம் ஓடியது. |