5 1931-ஆம் வருடத் தொடக்கத்தில் முதலில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து பிற தலைவர்களும், சத்தியாக்கிரகிகளும் நாடெங்கும் விடுதலை செய்யப்பட்டார்கள். காந்தி - இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. வேலூரிலிருந்து ராஜாராமன் நேரே மதுரைக்கு வரவில்லை. வேலூரிலிருந்து விடுதலையானவர்களில் மதுரை, பெரியகுளம் போன்ற ஊர்களைச் சேர்ந்த சத்தியாக்கிரகிகளும் இருந்தனர். அவர்களை வரவேற்க அவரவர்கள் ஊரிலிருந்து தொண்டர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லோரும் தங்களோடு மதுரைக்கு வந்துவிடச் சொல்லி ராஜாராமனைக் கூப்பிட்டனர். பிருகதீஸ்வரனோ, தன்னோடு புதுக்கோட்டைக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு அப்புறம் மதுரை போய்க் கொள்ளலாம் என்று அவனிடம் கூறினார். பத்தர் கடைசியாக மதுரையிலிருந்து வேலூருக்கு வந்தபோது, அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் ஒண்டுக் குடித்தனம் இருந்த வீட்டிலிருந்த பாத்திரம், பண்டம், தட்டுமுட்டுச் சாமான்களை ஒழித்து, மேலூர் வீட்டில் சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொண்டிருந்த மாடிப் பரணில் கட்டிப் போட்டுவிடுமாறு அவன் கடிதத்தில் தெரிவித்தபடியே செய்து விட்டதாகக் கூறியிருந்தார். வாசக சாலை நன்றாக நடப்பதாகவும் கூறியிருந்தார். 'எப்படி நடக்கிறது? யார் வாடகை கொடுக்கிறார்கள்? - பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்க யார் உதவுகிறார்கள்?' என்றெல்லாம் அவன் தூண்டித் தூண்டிக் கேட்டபோது, "அதெல்லாம் இப்ப எதுக்குங்க தம்பி? நீங்க விடுதலையாகி வந்தப்புறம் சாவகாசமாப் பேசிக்கலாம்" - என்று மழுப்பிவிட்டார் பத்தர். ஒரு வேளை அவரே கைப்பணத்தைச் செலவழித்துச் செய்து கொண்டு அதைத் தன்னிடம் சொல்லக் கூசுகிறாரோ என்று தோன்றியது அவனுக்கு. முத்திருளப்பனும் குருசாமியும் கடலூர் சிறையிலிருக்கும் செய்தியையும், அந்தத் தடவை பத்தர் வந்திருந்தபோதுதான் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். எனவே, பிருகதீஸ்வரனோடு புதுக்கோட்டை போய் ஒரு வாரமோ பத்துநாளோ தங்கி விட்டுப் போகலாமென்று அவனுக்கே தோன்றியதால், அவன் அவரிடம் மறுக்காமல் ஒப்புக் கொண்டான். 'வீட்டைக் காலி செய்து சாமான்களை மேலூரில் கொண்டு போய்ப் போட்டாயிற்று. வாசகசாலை ஒழுங்காக நடக்கிறது' - என்ற இரண்டு விவரங்களுமே அவன் உடனடியாக மதுரை போக அவசியமில்லை என்பதை அவனுக்கு உணர்த்தின. அவன் பிருகதீஸ்வரனோடு புதுக்கோட்டைக்குப் போனான். அந்த ஒரு வாரமும் முழுமையாக அவன் புதுக்கோட்டையில் தங்கவில்லை. போகும்போது இருவருமே திருச்சியில் இரண்டு நாள் தங்கிச் சில தேச பக்தர்களையும் தொண்டர்களையும் சந்தித்தனர். புதுக்கோட்டையில் மூன்று நாட்கள் இருக்க முடிந்தது. ஒரு நாள் பிரான்மலைக்கும், இன்னொருநாள் அன்னவாசல் கிராமத்துக்கும், அவனை அழைத்துச் சென்றார் பிருகதீஸ்வரன். அவருடைய குடும்பத்தில் எல்லாரும் ராட்டை நூற்கப் பழகியிருந்ததையும், மனைவி குழந்தைகள் உட்பட அனைவரும் கதரணிந்திருந்ததையும் பார்த்துப் பெருமைப்பட்டான் அவன்.
அவன் மதுரை திரும்பும்போது காரைக்குடி வரை பிருகதீஸ்வரனும் கூட வந்தார். காரைக்குடியிலும் அவர்கள் சந்திக்க வேண்டியவர்கள் இருந்தார்கள். காரைக்குடியில் அவனுக்கு விடை கொடுக்கும்போது, "நாளையிலிருந்து நானும் என் மனைவியும் பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டே, தெருத் தெருவாய், எங்கள் புதுக்கோட்டைச் சீமையிலுள்ள கிராமம் கிராமமாய்க் கதர்த் துணிகளைச் சுமந்து விற்கலாமென்றிருக்கிறோம். மதுரையில் நீங்களும் அது மாதிரி ஏதாவது செய்தால் எனக்குச் சந்தோஷமாயிருக்கும்" - என்று சொல்லியனுப்பினார் பிருகதீஸ்வரன். கதர்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவனும் அவருக்கு வாக்குக் கொடுத்தான். ஒருவரை ஒருவர் பிரிவது பரஸ்பரம் இருவருக்குமே வேதனையளிப்பதாயிருந்தது; அவருடைய நட்பின் அருமையைப் பல மாதங்கள் உடனிருந்து பழகியபோது உணர்ந்ததை விட இப்போது இந்தப் பிரியும் விநாடிகளில் மிகமிக அதிகமாக உணர்ந்தான் ராஜாராமன். அவன் மதுரைக்கு வந்த நேரம் இரவு எட்டு மணிக்கு மேலிருக்கும். புறப்படுகிற தினத்தன்று இப்படி இருட்டில் தான் புறப்பட்டோம் என்பது நினைவு வந்தது. மேலக்கோபுர வாசலுக்கு வந்து நின்ற போதுதான் எங்கே போய்த் தங்குவது என்ற கேள்வி எழுந்தது. தாய் இறந்த அந்த வீடு மிக அருகிலேயே இருப்பதை உணர்ந்த போது மனம் நெகிழ்ந்து அழுதது. வைத்தியநாதய்யர் வீட்டுக்கோ, ஜோஸப் சார் வீட்டுக்கோ போகலாம் என்று தோன்றினாலும், பொது வேலைகளைச் செய்வதற்கு வாசகசாலையில் தங்குவதே நல்லதென்று நினைத்தான் ராஜாராமன்.
'பத்தர் வாசகசாலையைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போயிருந்தால் என்ன செய்வது?' 'வீட்டுக்குப் போயிருந்தாலும் பரவாயில்லை. பத்தர் வீடு பக்கத்திலேயே செம்பியன் கிணற்றுச் சந்திலேதான் இருக்கிறது, அங்கேயே போய்ச் சாவியை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்...' -இந்த முடிவுக்கு வந்ததும் அவன் வடக்கே திரும்பிக் கோபுர வாசலிலிருந்து சித்திரை வீதிக்கு நடந்தான். அவன் நினைத்தபடி பத்தர் கடை பூட்டப்பட்டிருந்தாலும், நல்ல வேளையாக வாசக சாலை மாடியில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. யாரோ வாசக சாலை மாடியில் இருப்பதை அறிய முடிந்தது. வாசக சாலைக்காக மேலே படியேறியபோது மாடிக் கதவு தாழிட்டிருந்தது. கதவை மெதுவாக தட்டினான் அவன். உள்ளே கேட்ட பேச்சுக் குரல்களிலிருந்து நாலைந்து பேர் கூடியிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. கதவைத் திறந்ததே முத்திருளப்பன் தான். நண்பனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான் ராஜாராமன். குருசாமியும், அந்நியத் துணி மறியலில் அவனோடு கைதான உள்ளூர் நண்பர்களும், பத்தரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். வாசகசாலையில் இப்போது ஐந்தாறு பழைய மடக்கு நாற்காலிகளும், இரண்டு புத்தக அலமாரியும், ஒரு பெரிய மேஜையும் இடம் பெற்றிருப்பதைக் கவனித்து ஆச்சரியப்பட்டான் அவன். இடத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல் வாசக சாலையே நடக்க முடியாது நின்று போயிருக்குமோ என்ற பயந்தவனுக்கு, 'அப்படி இல்லை! வாசக சாலை நடக்கிறது' என்று பத்தர் வேலூரில் வந்து சொல்லி, நிம்மதி அளித்திருந்தார். இப்போது இந்த வளர்ச்சி அவனுக்குப் புதுமையாய் இருந்தது. நண்பர்கள் எல்லாரும் அவனை உற்சாகமாக வரவேற்று அளவளாவினார்கள். பத்தரைத் தவிர மற்றவர்கள் இப்போதுதான் அவனைப் பார்க்கிறார்கள். ஆதலால் அவன் தாய் இறந்ததைப் பற்றித் துக்கம் கேட்பதில் சிறிது நேரம் கழிந்தது. துக்கப் பேச்சுத் தொடங்கியதுமே அங்கிருந்த கலகலப்புப் போய்விட்டது. "தம்பி நான் போய்க் கூப்பிட்டப்பவே 'பரோல்'லே வந்திருக்கலாம், பெரியம்மா மனசு நோகப் பண்ணிருக்க வேண்டாம். நான் திரும்பி வந்து, 'அம்மா உங்க மகன் பரோல்லே வர மாட்டேன்னிட்டாரு'ன்னு கூடச் சொல்லலே, 'ஜெயில்லே விட மாட்டேங்கிறாங்க பெரியம்மா! நாம் கொடுத்து வச்சது அவ்வளவு தான்'னு பொய் சொன்னேன். உள்ளதைச் சொல்லியிருந்தா அந்தம்மா இன்னும் ரொம்ப மனசு நொந்து போயிருக்கும். 'அந்தக் காந்திக்குத் தத்துக் கொடுக்கத்தான் நான் பிள்ளை பெற்றேன். எனக்குக் கொள்ளிப் போடப் பெறலே'ன்னு அன்னமாறிக்கிட்டே போய்ச் சேர்ந்தாங்க பாவம்!..." என்று பத்தரும் அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடவே, ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கண்கலங்கிப் போனான் ராஜாராமன். சிறிந்து நேரம் யாருடைய பேச்சுக் குரலுமற்ற தனி மௌனம் நிலவியது அங்கே. முத்திருளப்பன், குருசாமி, பத்தர் மூவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். அங்கிருந்த துயரச் சூழ்நிலையில் வார்த்தைகளால் சொல்லி விடைபெற அஞ்சியோ தயங்கியோ, ஜாடையால் கையசைத்து விடை பெற்றனர் அவர்கள். மீதமிருந்த மூவருக்கும் பரஸ்பரம் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து மௌனமே நீடித்தது. ராஜாராமன் இன்னும் மனம் தெளிந்து தலை நிமிரவில்லை. அவன் மனம் சரியாகி அவனாகப் பேசுகிறவரை அவனை அப்படியே விடுவது நல்லதென்று மற்றவர்கள் பேசாமலிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் அவனே தலை நிமிர்ந்து முத்திருளப்பனை விசாரித்தான். "உங்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம். வேலை வேறு போயிருக்கும். மாசக் கணக்கிலே ஜெயில் வாசம் பண்ணிட்டீங்க, குடும்பத்தை யார் கவனிச்சுண்டாளோ, என்ன சிரமமோ?" "அப்பிடித்தான் நான் கவலைப்பட்டேன் ராஜா! ஆனா, இதோ பக்கத்திலே இருக்காரே; இந்தப் புண்ணியவாளன் தயவுலே மாசம் தவறாமே என் குடும்பத்துக்குப் பண உதவி கிடைச்சிருக்கு. 'கில்ட் கடை ரத்தினவேல் பத்தர் மாதா மாதம் பணம் கொடுத்து உபகாரம் பண்ணிக்கிட்டு இருக்கார்'னு என் சம்சாரம் எழுதின கடுதாசி ஜெயிலுக்குக் கிடைச்சப்ப எத்தினி சந்தோஷமாக இருந்திச்சுத் தெரியுமா?" என்று பத்தரைக் காட்டிப் பதில் சொன்னான் முத்திருளப்பன். "தேசம்கிற பெரிய குடும்பத்தைக் காப்பாத்தறதுக்கு நாம கஷ்டப்படறோம். அப்ப நம்மோட சின்னக் குடும்பத்திலே எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள் எல்லாம் வரது." "என்னுது சாதாரணம்! உன் நஷ்டம் ரொம்பப் பெரிசு ராஜா. நீ ஜெயிலுக்குப் போகாம இருந்திருந்தா உன் தாயாருக்கு இப்பிடி நேர்ந்திருக்காது..." "நேர்ந்தது நேர்ந்தாச்சு... மரணம் நாம தடுக்க முடிஞ்சதில்லை..." "அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் போர்ஷனைக் காலை பண்ணிச் சாமான்களையெல்லாம் மேலூர் வீட்டிலே கொண்டு போய்ப் பூட்டியாச்சுன்னு பத்தர் சொன்னார். இனிமே எங்கே தங்கப் போறே? உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா கொஞ்ச நாளைக்குத் தெற்கு வாசலிலே எங்களோட வந்து தங்கலாம் ராஜா." "தங்கறது ஒரு பெரிய பாடா? இங்கேயே வாசகசாலையிலே கூடத் தங்கிப்பேன். கீழே படியிறங்கினால் பத்தர் கில்ட் கடையில் குளிக்கக் கொள்ள முடியும். பத்தர் தான் மனசு வைக்கணும்..." "பேஷாத் தங்கலாம்! நீங்க கேட்டு, நான் எதுக்காவது மாட்டேன்னிருக்கேனா தம்பீ?" "ஆனாலும், உங்க அனுமதி வேணுமில்லியா பத்தரே?" "அனுமதியாம், பெரிய அனுமதி! இதெல்லாம் என்ன பேச்சுன்னு பேசறீங்க தம்பீ?" ராஜாராமன் பத்தரைப் பார்த்துச் சிரித்தான். "உங்களுக்காக எப்படிப்பட்ட மனுஷாளுங்கள்ளாம் என்னென்னவோ செய்யக் காத்துக்கிட்டிருக்காங்க. நான் பெரிசா என்ன செஞ்சிடப் போறேன் தம்பீ..." "எனக்குக்கூட இங்கே எங்கியாவது சித்திரை வீதியிலியே ஒரு எடம் பாருங்க, பத்தரே! நானும் தையல் மெஷினைத் தூக்கிட்டு வந்துடறேன்," - என்றான், அது வரை பேசாமலிருந்த குருசாமி. உடனே ராஜாராமன் மறுத்தான். "வேண்டாம்! நீ பாண்டிய வேளாளர் தெருவிலேயே இரு. காந்தியைப் பத்திப் பேசறவங்க நாலா பக்கத்திலேயும் ஊர்ல இருக்கணும். எல்லாரும் ஒரே தெருவிலே மட்டும் குவிஞ்சிடப்படாது." ஃபண்டாபீஸ் மணி ஒன்பதடித்தது. "மணி ஒன்பதடிக்குதே. நீங்க ஏதாவது சாப்பிட வேண்டாமா தம்பீ?" "நீங்கள்ளாம்?" "நான் சாப்பிட்டாச்சு. முத்திருளப்பனும் குருசாமியும் வீட்டுக்குப் போயிடுவாங்க. உங்களுக்குத்தான் ஏதாவது வாங்கியாரணும்; வாங்கியாரட்டுமா?" "வேண்டாம், நானே போய்ச் சாப்பிட்டுக்கிறேன், பத்தரே! ஆனா, நான் திரும்பி வர்ற வரை நீங்க இங்கே இருக்கணும், எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு." "இங்கேயா? சரி! இருக்கேன். பக்கத்தில் கடை எதுவும் இருக்காது. நீங்க மேலமாசி வீதியில கட்டிச்சட்டி மண்டபம் பக்கமாய்ப் போய்ப் பார்த்தால் தான் ஏதாவது ரெண்டு பால் கடை, மிட்டாய்க் கடை திறந்திருக்கும். நீங்க திரும்பி வரவரை நான் இருக்கேன் தம்பீ... போய் வாங்க..." - குருசாமி, முத்திருளப்பன், ராஜாராமன் மூவரும் புறப்பட்டனர். குருசாமியும், முத்திருளப்பனும் மேலமாசி வீதி வரை கூட நடந்து வந்து, ராஜாராமனை விட்டு விட்டுப் போவதற்காக உடன் வந்தனர். மேலக் கோபுர வாசல் தெருவும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் மேற்குமாசி வீதியில் கட்டிச்சட்டி மண்டபத்தருகே ஒரு பால் கடை திறந்திருந்தது. குருசாமியையும், முத்திருளப்பனையும் கூடத் தன்னோடு ஏதாவது சாப்பிடும்படி வேண்டினான் ராஜாராமன். இருவரும் மறுத்துவிட்டுச் சிரித்துக் கொண்டே விடை பெற்றனர். ராஜாராமன் பால் கடையில் கிடைத்ததைச் சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட்டு, வாசக சாலைக்குத் திரும்பினான். பத்தர் அவனுக்காக வாசக சாலையில் காத்திருந்தார். ஆனால், இதென்ன? நாற்காலிகள் மடக்கி வைக்கப்பட்டு, மேஜை ஓரமாக ஒதுக்கிப் போடப்பட்டு, நடுவாகத் தரையில் மெத்தை விரிக்கப்பட்டிருக்கிறதே! மெத்தையின் இருபுறமும் எம்பிராய்டரி வேலை செய்து பூப்போட்ட தலையணைகள் கிடக்கின்றன! ஓர் ஓரமாக ஒரு வெள்ளிக் கூஜாவும், பக்கத்தில் மேலே டபராவால் மூடிய தம்ளரும் வைக்கப்பட்டிருக்கின்றனவே! "இதெல்லாம் என்ன பத்தரே! நம்ம பழைய பத்தமடைப் பாயைக் காணலியே? உங்க வீட்டிலிருந்து தலைகாணி மெத்தை கொண்டு வந்தீங்களா?" ஒரு நிமிஷம் பதில் சொல்லத் தயங்கிவிட்டு, "அப்படித் தான் வச்சுக்குங்களேன் தம்பி?" - என்று சொல்லிச் சிரித்தார் பத்தர். சிரித்துக் கொண்டே டவராவால் மூடி வைத்திருந்த வெள்ளித் தம்ளரை எடுத்துப் பாலை ஆற்றத் தொடங்கிய அவரிடம், "பத்தரே! நான் பால் குடித்துவிட்டு வந்தாச்சு. நீங்க வேறே கொண்டு வந்திருக்கீங்களே?" - என்று மறுத்தான் ராஜாராமன். "பரவாயில்லை தம்பீ! ஆயிரமிருந்தாலும் கடைப்பால் வீட்டுப் பால் ஆயிடுங்களா?" - என்று சொல்லிக் கொண்டே பாலை ஆற்றி அவனிடம் கொடுத்தார். கையில் வாங்கிய பால் கள்ளிச் சொட்டாய்ப் பாதாம்கீர் நிறத்துக்கு இருந்தது. பச்சைக் கற்பூரமும் குங்குமப்பூவும் கமகமவென்று மணந்தன. அவன் பாலைக் குடித்தான். பால் அமிர்தமாயிருந்தது. "ஜெயில்லே கட்டாந் தரையிலும் மொரட்டுக் கித்தான்லியும் படுத்துப் படுத்துச் சங்கடப்பட்டிருக்கீங்க. நீங்க நல்லாத் தூங்குங்க தம்பீ! சும்மா அலையப்படாது. உடம்பையும் கவனிச்சுக்கணும். உங்களைக் கவனிக்க இப்போ உங்கம்மா கூட இல்லை." "அது சரி! புறப்பட்டுடாதீங்க பத்தரே! நான் உங்ககிட்டப் பேசணும்னேனே?" "என்ன பேசணும்? எல்லாம் கார்த்தாலே பேசிப்பம்! இப்ப தூங்குங்க தம்பீ!" "இல்லை? அஞ்சு நிமிஷம் இருந்திட்டுப் போங்க. உங்க கில்ட் கடை வருமானம் என்னன்னு எனக்குத் தெரியும் பத்தரே. நீங்க கடனோ உடனோ வாங்கி அதிகமாச் சிரமப்பட்டிருக்கீங்கன்னு தெரியுது. நாற்காலி, மேஜை, அலமாரி எல்லாம் வாசகசாலைக்கு வாங்கிப் போட்டிருக்கீங்க. ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க; கடைசித் தடவை வந்த போது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க. முத்திருளப்பன் குடும்பத்துக்கு வேற மாசா மாசம் குடுத்திருக்கீங்களே. வாசக சாலை வாடகையும் நீங்க தான் குடுத்திருக்கணும். இத்தனை பெரிய செலவு உமக்குத் தாங்காதுங்கிறது எனக்குத் தெரியும்; நீரும் பெரிய குடும்பஸ்தர்..." "அதுக்கென்ன இப்ப? சாவகாசமாய்ப் பேசிக்குவமே?" "வேலூர்லே நான் கேட்டப்பவே இப்படித்தான் பதில் சொல்லித் தட்டிக் கழிச்சீரு? தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதான் பத்தரே! விவரம் சொன்னீர்னா நல்லது." பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் திணறினாற் போலச் சிறிது நேரம் தயங்கினார். "நம்ம சிநேகிதம் நீடிக்கணும்னா நீங்க இதைச் சொல்லணும்..." "தூங்குங்க தம்பீ? இப்ப இதுக்கென்ன அவசரம்? விடிஞ்சு பேசிக்கப்படாதா?" என்று மழுப்ப முயன்றார். அவன் விடவில்லை. "நான் நிம்மதியாகத் தூங்கணும்னா நீங்க இதுக்குப் பதில் சொல்லியாகணும் பத்தரே?" பத்தர் மேலும் சிறிது நேரம் தயங்கினார். "இதிலே தயங்கறதுக்கு என்ன இருக்கு?" "சொன்னா, உங்களுக்குக் கோபம் வருமோன்னுதான் பயமாயிருக்கு தம்பீ! 'மதுரத்துக்கு ஏதாச்சும் தகவல் சொல்லணுமா'ன்னு வேலூர்லே கேட்டப்பவே உங்களுக்கு கோபம் வந்திச்சு?" "அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப சொல்லிக் காட்டறீரு?" "சம்பந்தம் இருக்கிறதினாலேதான் பயப்பட வேண்டியிருக்கு. உபகாரம் பண்ண வந்த தேவதை போல் அந்தப் பெண்ணுதான் வலுவிலே வந்து உபகாரம் பண்ணிக்கிட்டிருக்கு. அதுக்கு நீங்க ஒரு தெய்வத்தைப் போல, சதா உங்களையே நெனைச்சு அது உருகிட்டிருக்கு..." "போதும் நிறுத்தும்! ஒரு தேவடியாளுடைய உபகாரத்திலே நாம இந்தத் தேசத்தைக் காப்பாத்த வேண்டாம்." "நீங்க இந்த வார்த்தையைச் சொல்லக்கூடாது, தம்பீ! மத்தவங்க சொல்லலாம்; ஆனா, நீங்க சொல்லக்கூடாது. காந்தியையும், அஹிம்சையையும், சத்தியத்தையும் நம்பறவங்க இப்பிடி உதாசீனமாப் பேசப்படாது. 'கடவுள் மனிதனைத்தான் படைச்சார் - மனிதனோ ஜாதிகளைப் படைத்து விட்டான்'னு காந்தி நெனைக்கிறாரு. மனிதத்தன்மை உள்ளவங்க, மனிதத் தன்மை இல்லாதவங்கன்னு உலகத்திலேயே ரெண்டு ஜாதிதான் இருக்கு." அவருடைய வார்த்தைகள் அவன் இதயத்தைத் தாக்கின. இளமைத் துடிப்பிலே பேசிய பேச்சுக்காக வருந்தி தலைகுனிந்தான் ராஜாராமன். பத்தருக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனுக்கு. அவர் காந்தியின் பேரை எடுத்ததும் அவனுக்குத் திட்ட வரவில்லை. "நீங்க கைதான அன்னிக்கி உங்களைக் கோவில்லே பார்த்துதாம். கோவிலிலேருந்து வெளியிலே வர்ரப்ப உங்களை விலங்கு போட்டுப் போலீஸ்காரங்க இழுத்துட்டுப் போறதையும் பார்த்துதாம். என்னை ஏதோ நகை வேலை செய்யறதுக்காகக் கூப்பிடறாப்ல கூப்பிட்டு, இத்தனையும் சொல்லி அழுதிச்சு. நீங்க கைதானதே அது சொல்லித்தான் எனக்குத் தெரியும். கீழ்வாசலுக்கு ஓடி வந்தேன்; பார்க்க விடமாட்டேனுட்டாங்க. அப்புறம் தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவந்தேன். அங்கேயும் பேசமுடியலை. நான் வேலூருக்கு வந்தப்பல்லாம் நானா வரலே. 'போங்க! போய்ப் பார்த்திட்டு வாங்க'ன்னு அது துரத்தித்தான் நான் ஓடி வந்தேன். இந்த வாசகசாலை, முத்திருளப்பன் குடும்பம், எல்லாத்தையும் காப்பாத்த அதுதான் உபகாரம் பண்ணியிருக்கு. உபகாரம் பண்ணச் சொல்லி, நான் கேட்கலை. 'அவரு ஜெயிலுக்குப் போயிட்டதினாலே எதுவும் நிக்கப்படாது. நான் தரேன். செய்யுங்க'ன்னு அதுவாக் கூப்பிட்டு உபகாரம் பண்ணிச்சு. இப்பக் கூடச் சித்தே முன்னே மாடி வழியா என்னைக் கூப்பிட்டு, 'வந்தாச்சா'ன்னு கேட்டுது. 'வந்தாச்சு; சாப்பிடப் போயிருக்காரு'ன்னேன். உடனே உள்ளே ஓடி இந்த மெத்தை தலைகாணியைக் கொண்டாந்து கொடுத்துப்பிட்டு, 'பாவம்! ஜெயில்லே படுக்க வசதிகள் இருந்திருக்காது! இதை விரிச்சு நல்லாத் தூங்கச் சொல்லுங்கள். மொட்டை மாடியிலே படுக்க வேண்டாம்; பகல் முழுதும் வெயிலடிச்ச வெக்கை தரையிலே இருக்கும். உள்ளேயே படுக்கச் சொல்லுங்க'ன்னுது. மெத்தையோட நான் உள்ளே வர்ரத்துக்குள்ள மறுபடி கூப்பிட்டு, இந்த கூஜா, பால், எல்லாத்தையும் கொடுத்திட்டு, 'என்னைப்பத்தி அவருக்கு ஞாபகமாவது இருக்கா பத்தரே?'ன்னு கண்ணுலே நீர் தளும்பக் கேட்டிச்சு! உங்கம்மா உடம்புக்குச் சுகமில்லாமே படுத்தப்ப, ரெண்டு வாட்டி கூடை நிறையச் சாத்துக்குடி வாங்கிக் கொடுத்தனுப்பிச்சுது. 'நீயே வந்து, பெரியம்மாவைப் பார்த்துக் குடேன் அம்மா'ன்னேன். அதுக்கு மதுரம் ஒப்புக்கலை. 'வேண்டாம்! எனக்கு அவர்களைத் தெரியாது. என்னைப் பார்த்தா, அவர்களுக்குச் சொந்தப் பிள்ளை மேலேயே மனசு சம்சயப்படும். ஊர்க்காரர்களும் வம்பு பேசுவாங்க. என் பிறவி ராசி அப்படி'ன்னுச்சு. 'தாசி தனபாக்கியத்துக்கு இப்பிடி ஒரு நல்ல மனசு நிறைஞ்ச பொண்ணா'ன்னு நானே வியந்து போனேன். அந்த அழுக்குப் பிடிச்ச வீட்டிலே தன்னை ஒரு தேவதையா நடமாட வச்சுக்கிட்டிருக்கு அது. உங்களைப் பார்த்த நாள்ளேயிருந்து நீங்கதான் அதும் மனசிலே இருக்கீங்க தம்பி. இத்தனை இங்கிதமான பொண்ணு அந்தச் சந்திலே இருக்க முடியும்னே என்னாலே நம்ப முடியலை. வேலூர்லே வந்திருந்தப்ப, 'மதுரத்துக்கு கோபமாப் பதில் சொன்னீங்க. அந்தப் பதிலை அப்படியே வந்து சொல்லியிருந்தா அது மனசு ஒடிஞ்சு போயிருக்கும். ஏதோ, நானா இட்டுக் கட்டிச் சொன்னேன். 'பரோல்'லே வரமாட்டேன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சதைச் சொல்லாமே, 'ஜெயில்காரன் விட மாட்டேன்னுட்டான்'னு உங்கம்மாவுக்குப் பொய் சொன்ன மாதிரி மதுரத்துக்கும் ஒரு பொய் சொன்னேன். அந்தக் காந்தி மகானைப் பின்பற்றத் தொடங்கின நாள்லேருந்து நான் பொய் சொல்றதை விட்டாச்சு. ஆனா, என்ன செய்யிறது? இது மனுசங்களோட உலகம். இங்கே சில சமயங்களிலே உண்மையைக் கூட பொய் ரூபத்திலேதான் வழிபட வேண்டிருக்கு தம்பீ!" அவன் பதில் பேச முடியாமலும், குனிந்த தலை நிமிராமலும் உட்கார்ந்திருந்தான். முழங்கால்களைக் குத்த வைத்து முகத்தைப் புதைத்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்த நிலை தீவிர சிந்தனையைக் காட்டியது. ஒரு கூடை கருப்புத் திராட்சைக் குலைகளைக் கவிழ்த்தது போல் அவன் தலை சுருள் சுருளாகப் படிந்து கருமை மின்னியது. இருந்தாற்போலிருந்து தலை நிமிர்ந்து அவன் பத்தரை ஒரு கேள்வி கேட்டான். "ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி, துணிக்கடை மறியலுக்கு முன்னே ஒருவாரமிருக்கும். அப்ப, நான் ஒரு நாள் ராத்திரி இங்கே படுத்திருந்தேன். மறுநாள் காலையிலே, கீழே படியிறங்கறப்ப பின் பக்கத்து மாடியைப் பத்தி உங்ககிட்ட விசாரிச்சேனே; ஞாபகமிருக்கா?" "அதுக்கென்ன இப்ப? ஞாபகமிருக்கு. 'பின்பக்கம் ஒண்ணா நம்பர்ச் சந்துங்கிறது தெரியுமில்லே'ன்னேன். அடுத்த நாள் நீங்க மதுரத்தைப் பற்றியும் விசாரிச்சீங்க! 'தனபாக்கியத்தோட மகள்'னும் பதில் சொன்னேனே?" "அப்ப உண்டான அருவருப்புத்தான் இன்னும் போகலை. கோவில்லே வேறே, அவளோட யாரோ ஒரு பணக்கார ஜமீந்தார் உட்கார்ந்திருந்தானே அன்னிக்கி?" "அதுக்கு அவ என்ன செய்யுவா?" "உடம்பை விற்கிற பாவம் மிகமிக மோசமானது!" "மனுஷாளோட மனசைப் புரிஞ்சுக்காமே உதாசீனமும் வெறுப்பும் காட்டறது அதைவிடப் பாவம் தம்பீ! அஹிம்சையும் சத்தியமும் காந்தி மகாத்மாவோட உபதேசங்கள். ஒரு சத்தியாக்கிரகிக்கு இத்தனை உதாசீனம் கூடாதுங்க..." அவனால் பத்தருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மறுபடியும் தலை குனிந்து மௌனமானான் அவன். மதுரத்தை அவன் புரிந்து கொள்ளும்படி செய்வது எப்படி என்ற யோசனையில் பத்தரும் மூழ்கினார். 'அவளோ ராஜாராமன் மேல் உயிரையே வைத்து உருகிக் கொண்டிருக்கிறாள்! இந்தத் தம்பியின் மனத்திலோ உதாசீனமும் வெறுப்பும் நிரம்பிக் கிடக்கின்றன. எப்படியாவது இந்த உதாசீனத்தை மாற்றியாக வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. பூப்போன்ற மிருதுவான மனமும் கோமளமான சுபாவமும், அதிரப் பேசாத இங்கிதமும் நிரம்பிய மதுரம் இந்த உதாசீனத்தைத் தாங்கி நிற்காமல் உருகிவிடுவாள் என்பது அவருக்குத் தெரியும். பத்தரிடம் மறுபடியும் அவனே பேசினான். "உங்க வீட்டிலே காய்ச்சின பால்னு நினைச்சு, அதைக் குடிச்சேன்! தெரிஞ்சிருந்தா அதை தொட்டிருக்கக்கூட மாட்டேன்." "ஆமாமா? எங்க வீட்டிலேதானே நித்த நித்தம் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்லாம் போட்டுப் பால் காய்ச்சிக் குடிச்சிக்கிட்டு இருக்கோம்? சொல்ல மாட்டீங்களா, பின்னே?" "இந்த மெத்தை தலைகாணியெல்லாம் நீங்க வாங்கியிருக்கப்படாது பத்தரே! அவள் இதுவரை வாசகசாலைக்கும் முத்திருளப்பன் குடும்பத்துக்கும், மற்றதுக்கும், எவ்வளவு குடுத்திருக்காளோ, அவ்வளவையும் கணக்குப் பார்த்துச் சொல்லுங்க. நாளைக்கு மேலூர் போயிட்டு வரேன். வந்ததும், கணக்குத் தீர்த்துப்பிடலாம்." "தீர்ர கணக்கு இல்லீங்க தம்பி, இது! ஆத்திரத்துலே பேசறீங்க. நிதானமா யோசியுங்க. பின் பக்கத்துச் சந்திலே எத்தினியோ பாவப் பிறவிங்க இருக்கு. அந்தச் சேற்றிலே இந்த மதுரம் ஒரு செந்தாமரை. ஒரு தேச பக்தனுக்கு உபகாரம் பண்ணனும்கிற மனசு அதுக்கு வந்தப்பவே இதை நீங்க புரிஞ்சிட்டிருக்கணும். பணத்தை எண்ணித் திருப்பிக் கொடுத்திடலாம். ஆனா, அந்த நல்ல மனசை நீங்க திருப்பித் தர முடியாது. பணத்தைத் திருப்பிக் கொடுத்தா, அந்த நல்ல மனசுலே முள்ளை வாரிக் கொட்றாப்ல இருக்கும்..." ஃபண்டாபீஸ் மணி பதினொன்று அடித்தது. "தூங்குங்க தம்பி! நான் வீட்டுக்குப் போறேன். தயவு செஞ்சு மெத்தையிலே படுத்துக்கங்க. குடுத்தவங்க - நல்லெண்ணத்தோட, மனசு தவிச்சுத் தவிச்சு, அம்மாவுக்குத் தெரியாமே, அல்லசலுக்குத் தெரியாமே, உங்க உடம்பு நோகுமேன்னு வேதனைப்பட்டுக் கொடுத்திருக்காங்க! சத்தியமான அன்பை அவமானப்படுத்திப்பிட்டா, அப்பறம் காந்திக்குப் பின்னாலே போறதுக்குக்கூட நமக்கு யோக்கியதை இருக்காது." கூறிவிட்டுப் பத்தர் புறப்பட்டார். 'காந்திக்குப் பின்னாலே போறதுக்குக்கூட யோக்கியதை இருக்காது' என்று தான் கூறிய கடுமையான வாக்கியத்துக்கு ராஜாராமன் மிகவும் ஆத்திரம் அடைந்து ஏதாவது கடுமையாகப் பதில் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்த்தார். அவன் பதில் சொல்லாமல் யோசிக்கவே, தன் வார்த்தைகளால் அவன் மனம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறதென்பதை உணர முடிந்தது அவரால். கதவைத் தாழிட்டுக் கொள்ளுமாறு மீண்டும் கூறிவிட்டுப் படியிறங்கினார் அவர். கதவைத் தாழிட்டுக் கொண்டு சிறிது தயங்கி நின்றபின், ஏதோ முடிவுக்கு வந்தவன் போல் அவன் அந்த மெத்தையில் நடுவாகப் படுத்துக் கொண்டான். தலையணை மெத்தை எல்லாம் பூவும், சந்தனமும் மணந்தன. பச்சைக் கற்பூர வாசனை கமகமத்தது. நீண்ட நேரம் பத்தர் சொல்லியவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான் அவன். அவர் சொல்லியது நியாயமென்றே அவனுக்குப் பட்டது. 'நான் இத்தனை வெறுக்கும்படி அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்! அவள் ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் பிறந்ததும், தனபாக்கியத்தின் கைகளில் வளர்ந்ததும், வாழ்வதும் அவள் பிழைகள் அல்லவே! மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை. எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் பெரியது. ஜாதியையும், குலத்தையும் வைத்து மட்டும் நான் ஒருத்தியை உதாசீனம் செய்ய முடியுமானால், காந்தியை மனப்பூர்வமாகப் பின்பற்றுகிறவனாக இருக்க மாட்டேன்; உதாசீனம் - அரக்கர்களுக்காகவும், கருணை - மனிதர்களுக்காகவும், கடாட்சம் - தெய்வங்களுக்காகவும் உபகரிக்கப்பட்ட குணங்கள். எந்த அளவுக்கு மற்றவர்களை உதாசீனப்படுத்தும் குணம் எனக்குள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நான் ராட்சஸனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் கருணை காட்டும் சுபாவம் எனக்குள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நான் மனிதனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் என் கடாட்சம் சுகத்தை உண்டாக்க முடியுமோ, அந்த அளவுக்கு நான் தேவதையாகிறேன். தேவதையாக முடியாவிட்டாலும் நான் மனிதனாகவாவது இருக்க வேண்டும்.' ஸௌரி ஸௌரா சம்பவத்தின் போது மகாத்மா கூறிய அஹிம்சைத் தத்துவம் ராஜாராமனுக்கு நினைவு வந்தது. 'வெறுப்புக்கு அடிப்படை உதாசீனம்; குரோதத்துக்கு அடிப்படை வெறுப்பு. கொலை, கொள்ளைகளுக்கு அடிப்படை குரோதம். உதாசீனம் படிப்படியாக மனிதனை அரக்கனாக்குகிறது. கருணையோ படிப்படியாக மனிதனை தெய்வமாக்குகிறது.' யோசித்துக் கொண்டே இருந்தவன் எப்போது தூங்கினோம் என்று தனக்கே தெரியாத ஒரு வேளையில் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டான். மெத்தை - தலையணைகளின் நளினமான நறுமணங்கள் அவனைச் சுகமான உறக்கத்திலும் தழுவியிருந்தன. தூக்கத்தில் ஒரு சொப்பனம். ஒரு தேவதை கை நிறைய மல்லிகைப் பூக்களை அள்ளிக் கொண்டு ஓடிவந்து அவன் பாதங்களில் கொட்டுகிறாள். அவன் விலகி நிற்க முயலுகிறான். கோபத்தோடு "இப்படிச் செய்ய உனக்கு அருகதையில்லை" என்று அவன் கூப்பாடு போடுகிறான். "பாதங்கள், அவற்றை வழிபடுகிறவர்களுக்குச் சொந்தம்," என்று சொல்கிறாள் அவள். சொல்லிய அளவில் யாரோ வீணை வாசிக்கிற குரல் கேட்கிறது. அவள் தோற்றம் மறைகிறது; வீணையும் நிற்கிறது. 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று யாரோ மெதுவாக இனிய குரலில் பாடுகிறார்கள். தூக்கம் கலைகிறது. |