6 ராஜாராமன் எழுந்திருந்து கண்களைக் கசக்கிக் கொண்டு மொட்டை மாடிப்பக்கம் வந்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்த போது, எதிர்ப்புறம் கைப்பிடிச் சுவரருகே மதுரம் நின்று கொண்டிருந்தாள். "சௌக்கியமா?" - அடி மனத்திலிருந்து ஆத்ம பூர்வமாக வந்த அந்தக் குரல் சுகமான சங்கீதம் போல் ஒலித்தது. திடீரென்று, சௌந்தரியவதியான அவளை எதிரே சந்தித்ததும் அவனுக்குப் பேச வரவில்லை. 'சௌக்கியம்' என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான். "அம்மா காரியம் ஆச்சுப் போலிருக்கே!" "ம்! நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான். என்ன செய்யலாம்?" - அவன் அவளுக்குப் பதில் சொன்னான். "ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க..." "....." "உடம்பும் கறுத்துப் போயிருக்கே?" அந்தப் பரிவான விசாரணையின் கனிவில் மூழ்கி, ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தவித்த ராஜாராமன்... "இப்பப் பாடினது யாரு, நீதானே?" - என்று கேள்வியை வேறு பக்கம் திருப்பினான். அவள் சிரித்தாள். "ஏன்? நான் தான் பாடினேன்! உங்களைச் சிரமப் படுத்தாமல் தூக்கத்திலிருந்து எழுப்ப எனக்கு வேற உபாயம் தெரியலே?" "என்ன பாடினே?" "'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு'ன்னு பாடினேன். ஏன்? பாட்டுப் பிடிக்கலியா உங்களுக்கு?" "ரொம்பப் பிடிச்சிருந்தது! காலங்கார்த்தாலே கேட்கறதுக்கு சுகமா இருந்தது; அதான் கேட்டேன்." "இன்னொரு தரம் பாடட்டுமா?" "பாடேன்..." "தெலியலேது ராமா பக்தி மார்க்கமு!" - அவள் பாடத் தொடங்கியதுமே குறிக்கிட்டு கேட்டான் அவன்;
"இதுக்கென்ன அர்த்தம், மதுரம்?"
"ராமா! உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே?" என்று அவன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டிப் பதில் கூறினாள் அவள். அப்படிப் பதில் சொல்லும் போது அவள் முகத்தில் வெட்கமும் புன்னகையும் போட்டியிட்டன. அதைக் கேட்டு ராஜாராமனுக்கு மெய்சிலிர்த்தது. இரண்டு அர்த்தத்தில் அவள் அந்த வாக்கியத்தைச் சொல்லியதை அவன் இதயம் உணர்ந்தது. 'காவியம், அலங்காரம் எதுவுமே கற்காமல் தாசிகளுக்கு எப்படி இவ்வளவு நயமாக உரையாட வருகிறது? இவர்கள் சங்கீதத்தை விட நயமாகச் சம்பாஷிக்கிறார்கள். நிருத்தியத்தை விட லலிதமாகவும் கோமளமான சுபாவத்தோடும் பழகுகிறார்கள். இந்தக் கவர்ச்சிகள் யாவும் இவர்களுக்குப் பரம்பரையான மூலதனம் போலும்!" - என்றெண்ணி உள்ளூற வியந்தான் அவன். "மதுரம்! எங்கே அந்த அர்த்தத்தை இன்னொரு தரம் சொல்லு?" அவள் நாணித் தலைகுனிந்தாள். அதிகாலையில் கண்ட கனவு நினைவு வந்தது அவனுக்கு. "இன்று காலையில் உன்னுடைய பூக்கள் அர்ச்சிக்கும் பாக்கியம் கால்களுக்குக் கிடைக்கவில்லை மதுரம்?" "தேவதைகளின் பாதங்கள் அர்ச்சிக்க முடியாத எல்லை வரை விலகிப் போகும் போது, பக்தி செய்கிறவர்களுக்கு அவற்றை அடையும் மார்க்கம் புரிவதில்லை; நடுவில் எத்தனை சுவர்களோ தடுக்கின்றன..." - மறுபடியும் அவள் பாடிய சங்கீதத்தை விடப் பேசிய சங்கீதம் நயமாயிருப்பதை உணர்ந்தான் அவன். வாசக சாலைக்கும், முத்திருளப்பன் குடும்பத்துக்கும் பத்தர் மூலம் உதவி செய்ததற்காக அவளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல நினைத்து நினைத்தபடி வார்த்தைகள் வராமல் அவன் ஏதோ சொல்லத் தொடங்கிய போது, "அதுக்கென்ன இப்ப? நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலை" - என்று பெருந்தன்மையாகப் பதில் சொல்லிப் பேச்சை உடனே முடித்துவிட்டாள் அவள். - அந்தச் சமயத்தில் உட்புறமிருந்து அவள் தாய் தனபாக்கியத்தின் குரல் அவளைக் கூப்பிடவே, "அம்மா கூப்பிடறா! அப்புறமாப் பார்க்கறேன். உங்க உடம்பு தேறணும். கவனிச்சுக்குங்கோ..." - என்று கூறிவிட்டு அன்னமாய் அசைந்தசைந்து நடந்து போய் விட்டாள். காலையில் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள நினைத்திருந்தான் அவன். கீழே பத்தர் 'கில்ட்' கடையைத் திறந்திருந்தார். அவரிடமே கொஞ்சம் உமிக்கரி வாங்கிப் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு சலூனுக்குப் புறப்பட்டான் ராஜாராமன். அவன் முடிவெட்டிக் கொண்டு திரும்பி வந்தபோது பத்தர் அவனுக்குச் சொல்வதற்காகத் தகவல் வைத்திருந்தார். "காந்தி - இர்வின் உடன்படிக்கையைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தை ஒட்டி மாகாண காங்கிரஸ் மாநாடு இங்கே மதுரையில் கூடப் போகிறதாம். சத்தியமூர்த்தி தலைமை வகிக்கப் போகிறாராம். பெரிய ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யணுமாம். விருதுப்பட்டிக் காமராஜ் நாடார், முத்துசாமி ஆசாரி, எல்லாரும் வந்திருக்காங்களாம். பூர்வாங்கக் கூட்டம் இன்னிக்குப் பதினொரு மணிக்கு இருக்காம். உங்களை வரச் சொல்லித் தகவல் சொல்லி அனுப்பியிருக்காங்க. குளிச்சிட்டுப் புறப்படுங்கள்" என்றார் பத்தர். சத்தியமூர்த்தி வரப்போகிறாரென்று கேள்விப்பட்டு அவனுடைய வாலிப உள்ளம் துள்ளியது. அவருடைய அற்புதமான, ஆணித்தரமான பிரசங்கத்தைக் கேட்கலாம் என்று தோன்றிய போது, இளம் தேசபக்தன் ஒருவனுக்கு இயல்பாக ஏற்படக் கூடிய குதூகலம் அவனுக்கும் ஏற்பட்டது. குளித்து உடைமாற்றிக் கொண்டு - சித்திரை வீதி மூலை ஹோட்டலில் ஏதோ சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாகக் கமிட்டி அலுவலகத்துக்கு விரைந்தான் அவன். அங்கே கூடியிருந்த பெரியவர்கள் எல்லாரும் அவனை அனுதாபத்தோடு விசாரித்தார்கள். செய்தி தெரிந்த சிலர் அவன் தாய் காலமானது பற்றித் துக்கமும் கேட்டார்கள். "இனிமே என்ன கவலை? நம்மூர் 'சுபாஷ் போஸ்' கூட்டத்துக்கு வந்தாச்சு!" என்று வேடிக்கையாக அவனை வரவேற்றார் ஒரு தேசபக்தர். உள்ளூர் தேசபக்தர்கள் அவனுடைய உயரமான - கம்பீரமான தோற்றத்தை வைத்து செல்லமாக அவனை, 'மதுரை போஸ்' - என்று அழைப்பது வழக்கம். வெண்ணிறக் கதர்க் குல்லாய்களோடு கூடியிருந்த அந்தக் கூட்டத்தின் தலைகளைப் பார்த்த போது பரிசுத்தமான கடமையைச் சிரமேற் சுமந்தபடி அவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. "ஊர்வலத்துக்கு ஏற்பாடு பண்றத்துக்கும், மகாநாட்டு சேவாதளத் தொண்டர்களை மேற்பார்த்துக்கிறதுக்கும் ராஜாராமனை நியமிச்சுடலாம்" - என்றார் ஜோசப் சார். மற்றவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஊர்வலத்துக்கும், மாநாட்டுக்கும், அவரவர்களால் முடிந்ததை வசூல் செய்ய வேண்டும் என்று கமிட்டிக் கூட்டத்தில் கூறப்பட்டது. கதர்ப் பிரசாரத்தில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளப்பட்டது. "பாரதி பாடல்களைப் பிரபலப் படுத்துவது ஒவ்வொரு தேசியவாதிக்கும் கடமையாக இருக்க வேண்டும்" - என்று சீநிவாச வரதன் உற்சாகமாகக் கூறினார். அவருடைய மனைவி பத்மாஸனி அம்மாள் அடக்கமே உருவாக அருகே அமர்ந்திருந்தாள். "மாமா! நீங்க கொடுத்த பாரதி பாடல் புஸ்தகத்தை அநேகமாக மனப்பாடமே பண்ணிட்டேன்" - என்று ராஜாராமன் அவரிடம் கூறியபோது, "சபாஷ்டா அம்பி!" - என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் சீநிவாச வரதன். 'அம்பி' என்று கூப்பிட்டால் சிறுவயசிலேயே அவனுக்குக் கோபம் வரும். பலரிடம் அப்படிக் கோபப்பட்டுமிருக்கிறான்; வாலிபனான பிறகும், சீநிவாச வரதன் சார் அப்படிக் கூப்பிடும் போது மட்டும் அவனுக்குக் கோபமே வருவதில்லை. கமிட்டி ஆபீஸிலிருந்து மறுபடி அவன் வாசக சாலைக்கு வரும்போது ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. "டிபன் காரியர்லே சாப்பாடு மேலே இருக்கு! போய்ச் சாப்பிடுங்க தம்பீ!" - என்றார் பத்தர். சந்தேகத்தோடு அவன் அவரைக் கேட்டான். "ஏது? உங்க வீட்டிலேருந்து கொண்டாந்தீங்களா?" பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் தயங்கினார். "எங்கேயிருந்து கொண்டாந்தா என்ன? போய்ச் சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம்." அவன் மேலே படியேறி வந்தான். டிபன் கேரியரில் 'தனபாக்கியம்' என்ற எழுத்து அடித்திருந்தது. அவனுக்குக் கொள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் மனசு தவித்தது. பத்தரைக் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுக்கச் சொல்லிவிட்டு ஓட்டலுக்குப் போய்விடலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும், அடுத்த கணமே மதுரத்துக்கு மனம் புண்படுமே என்று தயக்கமாகவும் இருந்தது. தயக்கத்தோடு தயக்கமாக அவன் சாப்பிட்டுக் கை கழுவியதும் பத்தர் மேலே வந்தார். "கவலைப் படாதீங்க தம்பீ! தப்பான காரியத்துக்கு நான் எப்பவும் ஒத்தாசையாக இருக்க மாட்டேன். எது கில்ட், எது அசல்னு எனக்கு நல்லாத் தெரியும். வீணா மனசு நோகப் பண்ணாதீங்க." அவர் என்ன சொல்கிறார், யாரைப் பற்றிச் சொல்கிறார் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் அவரை மறுத்துப் பேசவில்லை. அந்த மௌனத்தின் அங்கீகாரம் பத்தருக்குத் திருப்தியளித்திருக்க வேண்டும். உடனே அந்தப் பேச்சை விட்டுவிட்டு, மகிழ்ச்சியோடு கமிட்டி ஆபீஸ் கூட்டத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார் அவர். அவனும் அவருக்கு அதை விவரித்துச் சொல்லலானான். பத்தர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். சொல்லி முடிந்ததும், "சாயங்காலம் முத்திருளப்பனும், குருசாமியும் வருவாங்களா? இல்லே யாரிட்டவாவது தகவல் சொல்லி அனுப்பணுமா?" - என்று அவரைக் கேட்டான் அவன். "தகவல் சொல்லி அனுப்ப வேண்டியதில்லை. அவர்களே சாயங்காலம் வருவாங்க. பொழுது சாயற வரைக்கும் பார்ப்போம்" - என்று பதில் சொல்லிவிட்டுக் கடை வேலையைக் கவனிக்கச் சென்றார் அவர். மொட்டை மாடிப் பக்கமிருந்து மறுபடி அந்த வீணைக்குரல் ஒலித்தது. "சாப்பாடு பிடிச்சிருந்ததா?" காலி டிபன் கேரியரோடு எழுந்து படியேறி மொட்டை மாடிக்குப் போனான் அவன். டிபன் கேரியரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவன் கேட்டான்: "நீ என்னை ரொம்பச் சிரமப்படுத்தறே மதுரம்." "உங்களை முதமுதலாகப் பார்த்ததுலேருந்து இந்தக் கொஞ்ச மாசமா என் மனசை நீங்க எவ்வளவு சிரமப்படுத்தியிருப்பீங்க தெரியுமா? அதுக்குப் பதில் நீங்களும் இப்ப சிரமப்படுவதுதான் நியாயம்..." "இப்படி நிதம் சாப்பாடு கொடுக்கறது - சாத்தியமில்லை..." "முடிஞ்சபோது கொடுக்கிறேன். முடியாதபோது வெளியிலே சாப்பிடுங்கோ..." "பிரயோஜனப்படாத விருந்தாளிக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்கிறாய்?" "வந்து போகிறவர்கள் தான் விருந்தாளிகள். நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களை அந்த வார்த்தை குறிக்காது..." "எங்கே தங்கிவிட்டவர்களை?" "இங்கே!" - என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டிச் சிரித்துக் கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள். வாதங்களால் ஜெயிக்க முடியாத நளினத்துக்குத் தோற்றுப் போய் உள்ளே படியிறங்கித் திரும்பினான் ராஜாராமன். அவளிடம் எப்படிப் பேசி ஜெயிப்பது, அல்லது தோற்கச் செய்வதென்று தெரியவில்லை அவனுக்கு. புதுக்கோட்டையிலிருந்து வரும்போது பிருகதீஸ்வரன் அவனுக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்தனுப்பியிருந்தார். அன்று சாயங்காலம் வரை புத்தகம் படிப்பதில் கழிந்தது சாயங்காலம் முத்திருளப்பனும், நண்பர்களும் வந்தார்கள். "ஊர்வலம், மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்கணும். சத்தியமூர்த்தி வராராம்" - என்று முத்திருளப்பன், குருசாமி முதலிய நண்பர்களிடம் விவரித்தான் ராஜாராமன். "மாகாண மாநாடு தங்கள் ஊரில் நடக்கப் போகிறது. சத்தியமூர்த்தி தலைமை வகிக்க வரப்போகிறார்" - என்ற செய்தி எல்லோருக்குமே உற்சாகத்தை அளித்தது. வசூலில் தங்கள் பங்கை அதிகமாகக் கொடுப்பதற்காக நான்கு கோபுர வாசலிலும் உண்டியல் ஏந்தி நிற்கலாம் என்று யோசனை கூறினான் குருசாமி. முத்திருளப்பன் குருசாமியைக் கிண்டல் பண்ணினார். "மீனாட்சியம்மனுக்குப் போட்டியா என்ன? பையிலே இருக்கறதை எல்லாம் வாசல்லேயே நீ பறிச்சிக்கிட்டியின்னா கோயிலுக்கு உள்ளேயிருக்கிற உண்டியல்களோட கதி என்ன ஆகிறது?" "பாரத மாதாங்கிற பெரிய அம்மனைச் சிறை மீட்கணும்னா எதையும் செய்யலாம். அந்த மீனாட்சியம்மனுக்கே வாயிருந்தா, 'வாசல்லே நிற்கிற கதர் குல்லாய்க்காரனோட உண்டியல்லே உள்ளே போடற காசைப் போடுங்க'ன்னு அதுவே சொல்லி ஆசீர்வாதம் பண்ணும்" என்று குருசாமி முத்திருளப்பனுக்குப் பதில் சொன்னான். "நீ சொல்றே அப்பனே! ஆனா எத்தினி மகாத்மாக்கள் பிறந்தாலும், இந்த ஜனங்களுக்குப் புத்தி வராது போலேருக்கு. இன்னிக்கு வஸ்திராலயத்திலேருந்து ஒரு மூட்டை கதர்த்துணியை வாங்கிச் சுமந்துக்கிட்டுத் தெருத் தெருவாகப் போனேன். ஒருத்தன் கேட்டான், "வாத்தியாரையா, உமக்கேன் இந்த வம்பு! 'விருதுப்பட்டிச் சனியனை வெலைக்கு வாங்கறாப்ல' இதுல நீர் ஏன் போய் மாட்டிருக்கிறீரு? பேசாம டானா டாவன்னாச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கப்படாது?'ன்னு. இன்னொரு ஷர்பத் கடைக்காரன் கேலி பண்ணினான். இடம் தெரியாமே ஒரு ஜஸ்டிஸ் பார்ட்டி வக்கீல் வீட்டிலே போயிக் கதர் சட்டையோட நுழைஞ்சி வச்சேன்; அடிக்கவே வந்தாங்க. கடைசியிலே எங்கிட்ட மனசு கோணாமக் கதர் வாங்கினது யாருங்கிறே? நான் வேலை பார்த்தப்பக் கூட இருந்த ரெண்டு மூணு வாத்தியாருங்களும் தெற்கு வாசல் நல்லமுத்துப் பிள்ளையும் தான் முகமலர்ந்து வாங்கினாங்க-" முத்திருளப்பன் கதர் விற்கப்போன அனுபவத்தைக் கேட்டு ராஜாராமனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. காரைக்குடியில் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது பிருகதீஸ்வரன் தன்னிடம் கதர் விற்பது பற்றிக் கூறி அனுப்பியிருந்தது மீண்டும் ஞாபகம் வந்தது. "முத்திருளப்பன்! நாளைக்கு வஸ்திராலயத்துக்குப் புறப்படறப்போ, இங்கே வந்து போங்க. நானும் உங்களோட வரேன்!" - என்றான் ராஜாராமன். "நீ வரணுமா, ராஜா? மாகாண மாநாட்டு வேலை, ஊர்வல ஏற்பாடு எல்லாம் இருக்கே. அதையெல்லாம் கவனிக்க வேண்டாமா நீ?" - என்றார் முத்திருளப்பன். "இருந்தாலும் பரவாயில்லை! கொஞ்ச நாழி சுற்றலாம்" - என்று ராஜாராமன் பிடிவாதம் பிடித்தான். மாகாண மாநாட்டு வேலைக்காக வெளியே சுற்றிப் பார்க்க வேண்டியவர்களை அன்று மாலையிலேயே பார்த்தார்கள் அவர்கள். சுப்பராமன் அவர்களையும் ஜோசப் சாரையும் பார்த்துச் சில யோசனைகள் கேட்டுக் கொண்டார்கள். வைத்தியநாதய்யர் வேறு வரச் சொல்லியிருந்தார். ஏழரை மணிக்குச் சந்தைப் பேட்டைத் தெருவிலிருந்து முத்திருளப்பனும், குருசாமியும் மற்ற நண்பர்களும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். வாசகசாலைக்குப் போவதற்கு முன் ராஜாராமனுக்குச் சொந்தத் தேவைக்காகச் சில சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. மதுரையில் வீட்டை ஒழித்துச் சாமான்களை மேலூரில் கொண்டுபோய்ப் போடுவதற்கு முன் பத்தர் ஞாபகமாக அவனுடைய துணிமணிகள், புத்தகங்கள் அடங்கிய டிரங்குப் பெட்டியை வாசகசாலையில் கொண்டு வந்து வைத்திருந்தார். ஆனாலும், தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு வாளி, அவசரத்துக்கு வெந்நீர் வைத்துக் கொள்ள ஒரு சிறிய கரியடுப்பு எல்லாம் வாங்க வேண்டியிருந்தது. புது மண்டபத்துக்குப் போய் இந்தச் சாமான்களை வாங்கிக் கொண்டு, கீழவாசல் வழியாய் வடக்காடி வீதி வந்து குறுக்கு வழியில் வாசக சாலையை அடையும் போது மணி எட்டரை ஆகியிருந்தது. பத்தர் கில்ட் கடையைப் பூட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, "உடம்பு ரொம்ப இளைச்சுக் கறுத்துப் போயிருக்கீங்களாம், தம்பீ! 'வெளியே கண்ட கண்ட இடத்துல சாப்பிட வேண்டாம், கொஞ்ச நாளைக்கு நானே எல்லாம் தரேன். உடம்பு தேறுகிறவரை இங்கேயே சாப்பிடச் சொல்லி அவரிட்ட வற்புறுத்திச் சொல்லுங்கோ, பத்தரே'ன்னு மதுரம் பிடிவாதம் பிடிக்குது..." "அது எப்படி சாத்தியமாகும், பத்தரே? ஒரு நாளைப் போல அம்மாவுக்குத் தெரியாமே, அதுதான் எப்படிச் சாப்பாடு எடுத்துக் கொடுக்கும்? நான் தான் நாலு இடம் அலையறவன் எப்படிச் சாப்பாட்டுக்காக இங்கேயே ஓடி வர முடியும்?" "உங்களுக்கு முடியுமா இல்லையங்கிறதுதான் கேள்வியே தவிர, அதுக்கு முடியுமாங்கறது கேள்வியே இல்லை, தம்பி. அந்த வீட்டுக்கு அதுதான் ராணி. இந்த மாதிரி விஷயத்துலேயே உங்க கெட்டிக்காரத்தனம் என் கெட்டிக்காரத்தனம் எல்லாம் அதனோட சாமர்த்தியத்துக்கு உறை போடக் காணாது. குறிப்பறிஞ்சு காரியங்கள் செய்யறத்துலே அதுக்கு இணையே சொல்ல முடியாது. தனபாக்கியத்தைத் தவிர அந்த வீட்டிலே - அவ தம்பி - மதுரத்தோட மாமாக்கிழவன் ஒருவன் இருக்கிறான். ரொம்ப நாளா மிருதங்கத்தைத் தட்டித் தட்டியே என்னவோ, அவன் டமாரச் செவிடாகிப் போய் விட்டான். மங்கம்மான்னு ஒரு வேலைக்காரக் கிழவி இருக்கா. அவளே தான் சமையற்காரியும். அவ மதுரத்துக்கு ரொம்ப அந்தரங்கம். தனபாக்கியம் பெத்தாளே தவிர, மதுரத்தை சீராட்டி ஊட்டி வளர்த்தவள் மங்கம்மா தான். அவளுக்கு மதுரம் செல்லப் பெண் மாதிரி! "இப்ப எதுக்கு இந்தக் குலமுறைக் கதையெல்லாம் சொல்றீங்க, பத்தரே?" "ஒண்ணுமில்லே! கொஞ்ச நாளைக்கு அது சொல்றபடிதான் செய்யுங்களேன்னு சொல்ல வந்தேன்..." "பத்தரே! நான் பெரிய தப்புப் பண்ணி விட்டேன்." "என்ன சொல்றீங்க தம்பீ?" "உம்ம பேச்சைக் கேட்டு வாசக சாலைக்கு இந்த மாடியை வாடகைக்குப் பிடித்ததைத்தான் சொல்றேன்." "அதிலே என்ன தப்பு?" "என் பிரியமெல்லாம் தேசத்திற்காகச் செலவிட வேண்டிய சமயத்தில் இன்னொருவருடைய பிரியத்தில் நான் மூழ்க முடியாது." "தேசத்து மேலே பிரியம் செலுத்துறதுலே மதுரமும் குறைஞ்சவ இல்லை. அதுவும் ராட்டை வாங்கி வச்சிக் கதர் நூற்குது. வீணை வாசிக்கிறதிலே உள்ள பிரியம், நூல் நூற்கிறதிலேயும் அதுக்கு இருக்கு. அதுவும் மகாத்மா காந்தியைத் தெய்வமாகக் கொண்டாடுது. அதுனோட வீட்டுக்கு வீணைக் கச்சேரி கேட்க வருகிற நாதமங்கலம் ஜமீந்தாரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் ஜஸ்டிஸ்காரங்கதான் என்றாலும் அது பிரிட்டிஷ் ஆட்சியை வெறுக்குது. அதுக்கு தேசத்துக்கு மேலே உள்ள பிரியமும், உங்க மேலே உள்ள பிரியமும் வேற வேற இல்லே. இரண்டும் ஒண்ணுதான். சொல்லப்போனா தேசத்துமேலே உள்ள பக்தியாலேதான் அதுக்கு உங்க மேலேயும் பக்தி ஏற்பட்டிருக்கு. உங்களைப் பார்க்கிறதுக்கு முந்தியே அது ராட்டை நூற்குது, உங்களைப் பார்க்கிறதுக்கு முந்தியே காந்தியைக் கொண்டாடுது." "அதனாலே?" "தம்பி! இங்கே பாருங்க! எனக்குச் சுத்தி வளைச்சுப் பேச வராது. இது கில்ட் இல்லே; அசல் சொக்கத் தங்கம். அவ்வளவுதான் நான் சொல்வேன். அப்புறம் உங்கபாடு." "யாரோ நாகமங்கலம் ஜமீந்தார்னீங்களே? யாரது...?" "அதான் அன்னிக்குக் கோவில்லே பாத்தீங்களாமே தம்பீ? கழுத்திலே தங்கச் சங்கிலியோட இருந்திருப்பாரே!" "அவர் எதுக்கு அங்கே வருகிறார்?" "எப்பவாவது அவரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் வீணை கேட்க வருவாங்க..." சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான் ராஜாராமன். வாளியையும் கும்மட்டி அடுப்பையும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டு மாடி வரை உடன் வந்து கொடுத்து விட்டுப் புறப்பட்டார் பத்தர். அறையில் குப்பென்று மல்லிகைப் பூ வாசனை கமகமத்தது. ராஜாராமன் திரும்பிப் பார்த்தான். வாசகசாலைச் சுவரிலிருந்த காந்தி படம், திலகர் படம், பாரதியார் படம் எல்லாவற்றிற்கும் மல்லிகைப் பூச்சரம் போட்டிருந்தது. இது மதுரத்தின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. மொட்டை மாடியை இணைக்கும் படிக்கு மேலே மரநிலைதான் உண்டு, கதவு கிடையாது. ஆனாலும், பின்பக்கத்து மொட்டை மாடிச் சுவருக்கும் வாசகசாலை மொட்டைமாடிச் சுவருக்கும் நடுவே முக்கால் பாக நீளம் இடைவெளி உண்டே; எப்படித் தாவி வர முடியும் என்பது அவனுக்கு வியப்பாகவே இருந்தது. சந்தேகத்தோடு மேலே படியேறிப் போய்ப் பார்த்தான் அவன். இரண்டு சுவர்களையும் ஒரு பழைய ஊஞ்சல் பலகை பாலம் போட்டாற்போல இணைத்துக் கொண்டிருந்தது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மதுரம் வெள்ளித் தட்டில் - ஆவி பறக்கும் இட்லிகளுடன் அந்தப் பலகை வழியே ஏறி நடந்து வந்தாள். அவள் கையில் இலையும் இருந்தது. ராஜாராமனுக்குத் திடீரென்று அவளைக் கேலிசெய்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது. "சுவறேறிக் குதிக்கிற அளவுக்கு வந்தாச்சு! இல்லியா மதுரம்?" "என்ன செய்யறது? போனாப் போறதுன்னு நான் அதைச் செய்யாட்டா, நீங்க செய்ய வேண்டி வருமே!" "நான் ஏன் செய்யறேன்?" "வேண்டாம்! நானே ஏறிக் குதிச்சுக்கிறேன். வீணா அதுக்கு ஒரு சண்டையா? சாப்பிட உட்காருங்கோ." "மொட்டை மாடியிலேயே உட்காரட்டுமா?" "வேண்டாம்! திறந்த வெளியிலே சாப்பிடப்படாதுன்னு சாஸ்திரம். தவிர, வெக்கையாகவும் இருக்கும்..." "சுவரேறிக் குதிக்கப்படாதுன்னு சாஸ்திரம் ஒண்ணும் இல்லை போலிருக்கு..." "சுவரேறிக் குதிச்சுப் பாக்கறபடி என்னைச் சிரமப்படுத்தர தெய்வத்தைக் கேட்க வேண்டிய கேள்வி இது." அவன் உள்ளே வந்து உட்கார்ந்தான். அவள் இலையைப் போட்டு இட்லியை எடுத்து வைத்தாள். அந்த வளைகளணிந்த அழகிய ரோஜாப்பூக் கை - வெள்ளை வெளேரென்று மல்லிகைப் பந்து போலிருந்த இட்லியை எடுத்து வைப்பது செந்தாமரைப் பூ ஒன்று வெண் தாமரைப் பூவைப் பரிமாறுவது போலிருந்தது. செல்லத்தம்மன் கோவில் செக்கு நல்லெண்ணெயும், மிளகாய்ப் பொடியும், இட்லிக்கு அமுதாய் இசைந்தன. "உங்கம்மா வந்துடப் போறாளேன்னு பயமில்லையா மதுரம்? ரொம்ப நிதானமாப் பறிமாரறியே?" "இன்னிக்குப் பிரதோஷம். பிரதோஷம், சோம வாரம்னா எங்கம்மாவும், மாமாவும் முதல்லே திருப்பரங்குன்றம், அப்புறம் மீனாட்சி கோயில், அப்புறம் பழைய சொக்கநாதர் கோயில், எல்லாத்துக்கும் போயிட்டு அர்த்த ஜாமம் முடிஞ்சப்பறம்தான் திரும்புவாங்க." "நீ போகலியா கோவிலுக்கு?" "என் கோவில்தான் இங்கே பக்கத்திலேயே வந்தாச்சே?" இப்படிச் சொல்லிவிட்டு, அவன் ஆத்மாவிலேயே ஊடுருவிப் பதிவதுபோல் புன்னகை பூத்தாள் அவள். புதிய கரி அடுப்பும், வாளியும், அவள் பார்வையில் தென்பட்டன. "என்னது? மெல்ல மெல்ல இந்த அறையிலேயே ஒரு பெரிய சம்சாரியா மாறிண்டு வாராப்லே இருக்கே..." "ஆமாம், அதுவும் இந்தச் சமயத்தில் இந்த அறையை யாராவது பார்த்தால் ஒரு சம்சாரம் நடந்து கொண்டிருப்பது போல் தான் தெரியும்!" இதைக் கேட்டு அவள் கலீரென்று சிரித்துவிட்டாள். சிரித்த உடனேயே நாணித் தலை கவிழ்ந்தாள். ஓரக்கண்களால் பருகுவதுபோல் அவனைத் தாபத்தோடு பார்த்தாள். "மதுரம்..." "என்ன?" "நீ ரொம்ப அற்புதமா வீணை வாசிக்கிறே!" "இப்ப இங்கே கொண்டு வந்து வாசிக்கட்டுமா?" "வேண்டாம்! காலையிலே நீ அங்கேயிருந்து வாசிக்கறதைக் கேட்டுத்தான் கண் முழிக்கிறேன்." "உங்களை எழுப்பிவிடத்தான் நான் வாசிக்கிறேன், இல்லையா?" "எழுந்திருக்கிறேன். மறுபடி உன் வாசிப்பு தூங்க வைத்து சொப்பனலோகத்துக்குக் கொண்டு போகிறது. தூங்கிவிடுகிறேன்." "ஜாக்கிரதை! என் வீணைக்கச்சேரிக்கு ரேட் அதிகம். ஒரு கச்சேரிக்கு ஐநூறு ரூபாய் வாங்கறா எங்கம்மா. நாகமங்கலம் ஜமீந்தார் அதை இங்கேயே வந்து தந்துடறாரு." "நான் ஜமீந்தார் இல்லையே, மதுரம்?" "தேவதைகள் ஜமீந்தார்களைவிடப் பெரியவர்கள் - மரியாதைக்குரியவர்கள்-" "சில சமயங்களில், நீ பாடுவதைவிடப் பேசுவதே சங்கீதமாயிருக்கிறது, மதுரம்..." "நீங்க புகழாதீங்கோ, நீங்க புகழ்ந்தா எனக்குக் கிறுக்கே பிடிச்சுடும் போலிருக்கு." - திடீரென்று வேறொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்து அதை அவளிடம் சொல்லத் தொடங்கினான் ராஜாராமன். "மாகாண காங்கிரஸ் மதுரையிலே கூடப் போறது. சத்தியமூர்த்தி தலைமை வகிக்கப் போறார். அதுக்கான சில வேலைகளை நானும் செய்யணும். நாளையிலேருந்து பண வசூலுக்காக உண்டியல் எடுக்கப் போறோம். பகல் சாப்பாடு எங்கெங்கே நேர்ந்ததோ, அங்கேதான். எனக்காக நீ பகல் சாப்பாடு வைக்க வேண்டாம். மறுபடி நான் சொல்ற வரை விட்டுடு..." "அதுசரி, அந்த வசூலுக்கு, நானும் கொஞ்சம் பணம் தரலாமோ?" "நீயா, ஏற்கனவே நீ நெறையச் செஞ்சிருக்கே, அதுக்கு நான் கடன் பட்டிருக்கேன். இப்ப வேறே சிரமம் எதுக்கு?" "கடன் கிடன்னு நீங்க சொல்றதா இருந்தா இப்பவே நான் இங்கேயிருந்து எழுந்திருந்து போயிடுவேன். கொடுக்கிறதை மரியாதையா வாங்கிக்கணும். வாங்கிக்காட்டா உண்டியல்லே கொண்டு வந்து போடுவேன்; அப்ப எப்படித் தடுப்பீங்க நீங்க?" கேட்டுவிட்டுச் சிரித்தாள் அவள். "அது சரி! மரியாதையா வாங்கிக்கணும்னியே; அது யாருக்கு மரியாதை?" "தப்புத்தான்? அப்பிடிச் சொன்னதுக்காகக் கன்னத்துலே போட்டுக்கிறேன்..." "கன்னத்திலியும் போட்டுக்க வேண்டாம்; கால்லேயும் போட்டுக்க வேண்டாம்! பணத்தை எடு!" அரைத்த சந்தனம் போல் செழுமை மின்னும் தோளில் ரவிக்கை மடிப்பிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள். அவன் திகைத்துப் போனான். அந்த நோட்டுக்களில் பச்சைக் கற்பூர வாசனை கமகமத்தது. அவன் வாங்கிக் கொண்டான். "பணம் மணக்கிறது, மதுரம்! கொடுத்தவர்களின் கைராசி போலிருக்கிறது!..." "ஒரு வேளை வாங்கிக் கொண்டவர்களின் கைராசியாகவும் இருக்கலாம்." திரும்பப் புறப்படும்போது, திடீரென்று அவன் எதிர்பாராத சமயத்தில், அவனுடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு தட்டுடன் புறப்பட்டாள் அவள். அவள் செய்கை அவனை மெய்சிலிர்க்கச் செய்தது. அந்தச் சிலிர்ப்பிலிருந்து நீண்ட நேரமாக மீள முடியவில்லை. அவள் போன சிறிது நேரத்திற்குப் பின் அவளுடைய மாடியறையிலிருந்து பாடல் கேட்டது. 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - உருகி உருகிப் பாடினாள். மிக இங்கிதமாகப் பக்தி செய்கிற ஒருத்தி பக்தி மார்க்கம் தெரியவில்லையே என்று பாடுவதைக் கேட்டு அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டான் ராஜாராமன். |