8 தமிழ் மாகாண மகாநாடு மதுரையில் கூடியது. பல ஊர்களிலிருந்தும் தேச பக்தர்கள் குழுமினார்கள். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நகரம் முழுவதுமே வந்தே மாதர முழக்கமும், 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்ற கோஷமும் நிரம்பியிருப்பது போல் தோன்றியது. ஊர்வலமும் மிகப் பிரமாதமாக நடைபெற்றது. ராஜாராமனுடைய முயற்சியால் ஏராளமான இளைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். சத்தியமூர்த்தியின் தலைமைப் பிரசங்கம் பாரதியாருடைய கவிதைகளின் சக்தியையும், ஆவேசத்தையும் வசனத்திற் கொண்டு வந்தாற் போல அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக அமைந்தது. மகாநாட்டின் முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலும் நடைபெற்றது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, சர்தார் வேதரத்னம் பிள்ளை, திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை ஆகியவர்களுடைய பெயர்கள் பிரேரேபிக்கப் பட்டனவாயினும், பின்னால் ஒரு சமரசம் ஏற்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் தலைவராகவும், சத்தியமூர்த்தி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்தாரும், அண்ணாமலைப் பிள்ளையும், வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். தேசத் தொண்டர் காமராஜ் நாடார் முதல் தடவையாகக் காரியக் கமிட்டிக்கும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கும் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனும் பக்தவத்சலமும் காரியதரிசிகளாயினர். மகாநாடு முடிந்த பின் கமிட்டி அலுவலகம் கலியாணம் நடந்து முடிந்த வீடு போலிருந்தது. அப்புறம் இரண்டொரு நாளைக்கு அங்கே வேலைகள் இருந்தன. முத்திருளப்பன், குருசாமி எல்லோருமே கமிட்டி அலுவலகத்துக்குத்தான் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வாசகசாலையைக் கவனிப்பதற்குப் பத்தர் மட்டும் தான் இருந்தார். மகாநாடு முடிந்த மூன்றாம் நாள் அதிகாலையில் ராஜாராமன் வாசகசாலைக்குப் போய்ப் பத்தரிடம் சாவியை வாங்கி மாடியைத் திறந்த போது மாடியறையில் கோயில் கர்ப்பகிருகத்தின் வாசனை கமகமத்தது. தினசரி தவறாமல் அங்கிருந்த படங்களுக்கு மல்லிகைச் சரம் போட்டு ஊதுவத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவன் சுலபமாக உணர முடிந்தது. பின் பக்கத்து மாடியறையில் அப்போது தான் மதுரம் வீணை சாதகம் செய்யத் தொடங்கியிருந்தாள். அதைத் தொடர்ந்து 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று அவள் உருகி உருகிப் பாடிய குரலையும் அவன் கேட்டான். அப்போது பத்தர் மேலே படியேறி வந்து, அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாற் போலத் தயங்கித் தயங்கி நின்றார். "என்ன பத்தரே? ஏதோ சொல்ல வந்திருக்கீங்க போலத் தெரியுதே?" "ஒண்ணுமில்லே! அடிக்கடி சொன்னாலும், நீங்க கோவிச்சுப்பீங்களோன்னு பயமாயிருக்குத் தம்பீ! 'அது மேலே உங்களுக்குக் கோபம் இல்லே'ன்னு சொல்லி ஒரு மாதிரிச் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன். மறுபடியும் ஏதாவது கோபமாப் பேசிச் சங்கடப் படுத்திடாதீங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்..." "சரி! சரி! போம். சதா உமக்கு இதே கவலைதான் போலிருக்கு."
ராஜாராமன் பத்தரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். அவன் முகத்தில் புன்முறுவலைப் பார்த்து அவருக்கு ஆறுதலாயிருந்தது. அவர் கீழே படியிறங்கிப் போனார். அந்த ஐந்தாறு நாட்களாகப் படிக்காத பத்திரிகைகள், புத்தகங்களை எடுத்து, வரிசைப்படுத்தத் தொடங்கினான் அவன். பழைய 'நவஜீவன்' - 'யங் இந்தியா' தொகுப்பு வால்யூம்களை யாரோ மேஜையில் எடுத்து வைத்திருப்பதைக் கண்டு, ஒரு கணம் அதை அலமாரியிலிருந்து யார் வெளியே எடுத்திருக்கக் கூடுமென்று யோசித்தான் அவன். மதுரம் எடுத்திருப்பாளோ என்று சந்தேகமாயிருந்தது. அது சாத்தியமில்லை என்றும் தோன்றியது. அப்புறம் பத்தரை விசாரித்துக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டே, அவற்றை உள்ளே எடுத்து வைத்த போது, அளவாகத் தாளமிடுவது போல் காற்கொலுசுகளின் சலங்கைப் பரல்கள் ஒலிக்க யாரோ படியிறங்கும் ஒலி கேட்டுத் திரும்பினான். மதுரம் காபியோடு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடலில் அவன் சிட்டம் கொண்டு போய்ப் போட்டு வாங்கிக் கொண்டு வந்தளித்த அந்தக் கதர்ப் புடவை அலங்கரித்திருந்தது. பட்டுப் புடவையும், நகைகளும், வைர மூக்குத்தியுமாக இருக்கும் போதும் அவள் அழகு அவனை வசீகரித்தது; கதர்ப் புடவையுடன் வரும் போது அந்த எளிமையிலும் அவள் வசீகரமாயிருந்தாள். இதிலிருந்து அலங்காரம் அவளுக்கு வசீகரத்தை உண்டாக்குகிறதா, அல்லது அலங்காரத்துக்கே அவள் தான் வசீகரத்தை உண்டாக்குகிறாளா என்று பிரித்துப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அதுவும் நாலைந்து நாட்களுக்கு மேல் அவளைப் பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று பார்த்தபோது அந்த வசீகரம் இயல்பை விடச் சிறிது அதிகமாகித் தெரிவது போல் உணர்ந்தான் அவன்.
ஒன்றும் பேசாமல் காபியை மேஜைமேல் வைத்து விட்டு எதிரே இருக்கும் ஒரு சிலையை வணங்குவது போல் அவனை நோக்கிக் கை கூப்பினாள் மதுரம். அவள் கண்கள் நேருக்கு நேர் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கின. "எதிரே இருப்பது மனிதன் தான் மதுரம். ஒரு சிலையைக் கை கூப்புவது போல் கூப்பி வணங்குகிறாயே?" "என்ன செய்றது? மனிதர்களே சமயா சமயங்களில் சிலையைப் போலாகி விடுகிறார்களே!" "யாரைக் குற்றம் சாட்டுகிறாய்?" "யார் குற்றமாக எடுத்துக்கிறாங்களோ, அவங்களைத் தான் சொல்றேன்னு வச்சுக்குங்களேன். சிலைக்காவது உடம்பு மட்டும் தான் கல்லாயிருக்கு, சிலையைப் போலாயிடற மனஷாளுக்கோ மனசும் கல்லாப் போயிடறது." "....." "காபியைக் குடிக்கலாமே, ஆறிடப் போறது..." "ஆறினா என்ன? கல்லுக்குத்தான் சூடு, குளிர்ச்சி ஒண்ணுமே தெரியப் போறதில்லையே?" "இதை நான் சொல்லலை. நீங்களாகவே வேணும்னு சொல்லிக்கிறீங்க..." -அவன் காபியை எடுத்துப் பருகினான். பருகிவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சில விநாடிகள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அவன் பார்வை பொறுக்காமல் அவள் தலைகுனிந்தாள். இதழ்களில் நாணமும், நகையும் தோன்றின. அதுவரை நிலவிய கடுமைப் பூட்டுடைந்து அவள் மெல்ல இளகினாள். கண்களிலும் மாதுளை இதழ்களிலும் சிரிப்பின் சாயல் வந்து சேர்ந்தது. "கதர்ப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்திருக்கே போலிருக்கே..." "இன்னிக்கு ரெண்டாவது தடவையாகக் கட்டிக்கிறேன். அன்னிக்கே கட்டிண்டாச்சு! நீங்க பார்க்கலியா?" "என்னிக்கு?" "சத்தியமூர்த்தி தலைமைப் பிரசங்கம் பண்றன்னிக்கி இந்தப் புடவையைக் கட்டிண்டு மகாநாட்டுப் பந்தலுக்கு நானும் வந்திருந்தேன்." "அப்பிடியா! எனக்குத் தெரியவே தெரியாதே மதுரம்?" "உங்களுக்கு ஏன் தெரியப்போறது? சிதம்பர பாரதியோட ஏதோ பேசிக் கொண்டே நீங்க கூட அந்தப் பக்கமா வந்தீங்களே!" "வந்திருப்பேன்! ஆனா, நீ இருந்ததை நான் சத்தியமா பார்க்கலை மதுரம்!" "....." "இந்த அஞ்சாறு நாளா எப்படிப் பொழுது போச்சு?" "நிறைய ராட்டு நூற்றேன். 'ராமா உன்னைப் பக்தி செய்யிற மார்க்கம் தெரியலியே'ன்னு கதறிக் கதறிப் பாடினேன். வீணை வாசிச்சேன்! இதையெல்லாம் செய்ய முடியாதபோது நிறைய அழுதேன்..." "யாரை நெனைச்சு?" "இப்ப எங்கிட்ட இப்பிடிக் கேட்கிறவர் யாரோ, அந்த மகானுபாவரை நெனைச்சுத்தான்..." இதைச் சொல்லும் போது மதுரம் சிரித்துவிட்டாள். அவள் பேசும் அழகையும், நாசூக்கையும் எண்ணி எண்ணித் திகைத்து ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இருந்தான் அவன். மத்தியானம் வெளியில் எங்கும் சாப்பிடப் போய்விடக் கூடாது என்றும், அங்கேயே சாப்பிட வேண்டுமென்றும் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனாள் மதுரம். மாகாண காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரகதீஸ்வரன் மதுரை வந்து போவார் என்று எதிர்பார்த்திருந்தான். அவர் வரவில்லை. 'ஏன் வரமுடியவில்லை' என்பது பற்றிக் கடிதமாவது எழுதுவார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாகக் கடிதமும் அவரிடமிருந்து வராமற் போகவே, தானே அவருக்கு இன்னொரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது. மகாநாடு பிரமாதமாக நடந்ததைப் பற்றியும், அவர் வராததால் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் விவரித்துக் கடிதம் எழுதினான் அவன். அதற்குப் பின் ஓர் அரைமணி நேரம் ஒரு வாரமாக விட்டுப் போயிருந்த டைரிக் குறிப்புக்களை ஞாபகப்படுத்தி எழுதினான். பகல் உணவுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் மேலூருக்குப் புறப்பட்டான். முதலில் திருவாதவூர் போய் நிலத்தையும், குத்தகைக்காரனையும் பார்த்துவிட்டு, அப்புறம் மேலூர் போக வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். ஒரு வேளை திரும்புவதற்கு நேரமாகிவிட்டால் இரவு மேலூரிலேயே தங்கிவிட வேண்டியிருக்கும் என்று தோன்றியது. நினைத்ததுபோல் திருவாதவூரிலேயே அதிக நேரம் ஆகிவிட்டது. குத்தகைக்காரன் பேச்சுவாக்கில் ஒரு யோசனையை ராஜாராமன் காதில் போட்டு வைத்தான். "வள்ளாளப்பட்டி அம்பலக்காரர் ஒருத்தரு இந்த நிலம், மேலூர் வீடு எல்லாத்தையும் மொத்தமா ஒரு விலை பேசிக் கொடுக்கற நோக்கம் உண்டுமான்னு கேட்கச் சொன்னாரு. நீங்களோ பொழுது விடிஞ்சா ஜெயிலுக்குப் போறதும், வாரதும், மறுபடி ஜெயிலுக்குப் போறதுமா இருக்கீங்க, பெரியம்மா இருந்தவரை சரிதான். இனிமே இதெல்லாம் நீங்க எங்கே கட்டிக் காக்க முடியப் போகுது?" மேலூர் புறப்பட்டு வரும்போது ராஜாராமனுக்கே இப்படி அரைகுறையாக மனத்தில் ஓரெண்ணம் இருந்தது. இப்போது குத்தகைக்காரனும் அதே யோசனையைச் சொல்லவே, 'என்ன நிலம் வீடு வாசல் வேண்டிக் கெடக்கு? எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் என்ன?' என்று தோன்றியது. உடனே அது சம்பந்தமாக குத்தகைக்காரனிடம் மேலும் அக்கறையோடு விசாரித்தான் ராஜாராமன். "வள்ளாளப்பட்டிகாரர் என்ன விலைக்கு மதிப்புப் போடறாரு?" "அதெல்லாம் நான் பேசிக்கிடலீங்க. வேணா இன்னிக்கு ராத்திரி பார்த்துப் பேசலாம். ரெண்டு நாளா அவரு மேலூர்ல தான் தங்கியிருக்காரு." குத்தகைக்காரனையும் கூட அழைத்துக் கொண்டே திருவாதவூரிலிருந்து மேலூர் புறப்பட்டான் ராஜாராமன். அன்றிரவு வள்ளாளப்பட்டி அம்பலத்தார் அவனைப் பார்க்க வந்தார். ராஜாராமனை அவர் பார்க்க வந்த போது, அவன் தனக்கு மிகவும் வேண்டிய மேலூர்த் தேசத் தொண்டர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தான். வலது கையில் முறுக்குப் பிரி அளவுக்குத் தங்கக் காப்பும், காதுகளில் சிவப்புக் கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார். பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும் பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது. "சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு?" "ஆமாம். அதைப்பத்தியென்ன அம்பலக்காரரே? விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க..." "என் மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி! வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்..." "இந்த விலைக்குத் திகையாது அம்பலக்காரரே! பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது..." "இவ்வளவு கண்டிஷனாப் பேசினீங்கன்னா எப்படி சாமி? கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க..." இப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான். "ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. 'யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரே'ன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், 'ஒன்பதாயிரத்தி ஐநூறு'ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட்' எழுதிக்கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப் பணத்தையும் வாங்கிக் கொண்டு ரெஜிஸ்திரேஷனை முடிச்சுடலாம்." "நாளைக்குக் காலை வரை இங்கே தங்க முடியாதேன்னு பார்த்தேன்..." "பரவாயில்லை, தங்கு. நாளை மத்தியானம் புறப்பட்டுப் போய்க்கலாம்" - என்றார் நண்பர். அந்த நிலையில் அவனும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. நண்பர் கூறியபடி அம்பலக்காரரிடம் கூறி அனுப்பினான் அவன். அவரும் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். குத்தகைக்காரனும் அன்றிரவு மேலூரிலேயே தங்கினான். மறுநாள் காலையில் எல்லாம் நண்பர் சொன்னபடியே நடந்தது. வீடும் நிலமும் ஒன்பதினாயிர ரூபாய்க்கு விலை திகைத்த பின் - இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒரு வாரத்துக்குள் முழுத் தொகையுடன் பத்திரம் பதிவு செய்து கொள்வதாக ராஜாராமனுடன் அக்ரிமெண்ட் செய்து கொண்டார் அம்பலக்காரர். ராஜாராமன் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது, "பணத்துக்கு ஒண்ணும் அட்டியில்லே. சீக்கிரமா வந்து ரெஜிஸ்திரேஷனை முடிச்சுக் குடுத்துடுங்க" என்றார் அம்பலக்காரர். அவனும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு மதுரை புறப்பட்டான். முதல் நாள் பகலில் மதுரையிலிருந்து கிளம்பும் போது மதுரத்திடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டோம் என்பது நினைவு வந்தது. அவள் நாகமங்கலத்துக்குப் போன போது சொல்லிவிட்டுப் போனது போலப் பத்தரிடம் சொல்லியாவது அவளுக்குச் சொல்லச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. 'மேலூர் போனாலும் போவேன்' - என்று பத்தரிடமே இரண்டுங் கெட்டானாகத்தான் சொல்லியிருந்தான் அவன். 'மதுரத்துங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா தம்பீ?' என்று அவரே அவனைக் கேட்டிருக்கக் கூடியவர் தான். ஆனால், அவன் பயணத்தை உறுதிப் படுத்தாமல் சொல்லியதனாலோ, அவனிடம் அப்படிக் கேட்டால் அவன் கோபித்துக் கொள்வான் என்று கருதியதனாலோ, அவர் கேட்கவும் இல்லை. கேட்காவிட்டாலும், விட்டுக் கொடுக்காமல் சில காரியங்கள் செய்து விடுகிற சமயோசித சாமர்த்தியம் பத்தரிடம் உண்டு என்பது ராஜாராமனுக்குத் தெரியும். 'உன்னைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுப் போகணும்னு தான் பார்த்தாரு; முடியலை. 'நீங்களே ஒரு வார்த்தை சொல்லிடுங்க பத்தரே'ன்னு சொல்லிவிட்டுப் போனாரு' என்பதாகச் சொல்லிக் கொண்டு விடுகிற சாமர்த்தியம் பத்தரிடம் இருந்ததால் இப்போது அவன் நிம்மதியாகத் திரும்பினான். மேலூரிலிருந்து திரும்பி, காலை பதினொரு மணிக்கு அவன் வாசகசாலை மாடிப்படியேறிய போது, "தம்பீ! ஒரு நிமிஷம். இதைக் கேட்டிட்டுப் போங்க" என்று பத்தர் குரல் கொடுத்தார். வேகமாக மேலே படியேறத் தொடங்கியிருந்தவன் மறுபடி கீழே இறங்கி, கில்ட் கடை முகப்பில் வந்து நின்றான். என்ன ஆச்சரியம்! அவன் எதை நினைத்துக் கொண்டே வந்தானோ அதையே அவனிடம் வேண்டினார் அவர். "அதென்ன 'மேலூர் போனாலும் போவேன்'னிட்டுப் போனீங்க. ஒரேயடியாப் போயிட்டிங்களே. ராத்திரியே திரும்பிடுவீங்கன்னு பார்த்தேன். மதுரம் ஏழெட்டு வாட்டி எங்கே எங்கேன்னு கேட்டுச்சு. அப்புறம் தான் சொன்னேன் - அதுங்கிட்டச் சொல்லச் சொல்லி நீங்க எங்கிட்டச் சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பொய்யும் சொன்னேன். 'நான் யாரிட்டவும் யாருக்காகவும் சொல்லிட்டுப் போகலையே'ன்னு மூஞ்சிலே அடிச்ச மாதிரிப் பதில் சொல்லி விடாதீங்க..." "அதிருக்கட்டும் பத்தரே! இப்ப நீங்க எனக்கு இன்னொரு உபகாரம் பண்ணனுமே! மேலூர் நிலம், வீடு எல்லாத்தையும் விலை பேசி அட்வான்சும் வாங்கியாச்சு. அந்தப் பணத்தை உங்ககிட்ட கொடுத்து வைக்கிறேன். பத்திரமா வச்சிருக்கணும்..." "வச்சிருக்கறதைப் பத்தி எனக்கொண்னுமில்லை. ஆனா இவ்வளவு அவசரப்பட்டு ஊருக்கு முந்தி நிலம் வீட்டையெல்லாம் ஏன் விற்கணும்?" "விற்றாச்சு! இப்ப அதைப் பற்றி என்ன? பணத்தைக் கொஞ்சம் அட்வான்ஸா வாங்கியிருக்கேன். ஒரு வாரத்திலே ரெஜிஸ்திரேஷன் முடியும்போது மீதிப் பணமும் கிடைக்கும்..." "தம்பீ! நான் சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்களே?" "எதைச் சொல்லப் போறீங்கன்னு இப்பவே எனக்கெப்படித் தெரியும்?" "பணத்தைக் கொடுத்து வைக்கிறதுக்கு என்னைவிடப் பத்திரமான இடம் இருக்குன்னுதான் சொல்ல வந்தேன்." "யாரிட்டக் கொடுத்து வைக்கலாம்கிறீர்?" "மதுரத்துக்கிட்டக் கொடுத்து வைக்கலாம் தம்பீ!" பத்தரின் யோசனையைக் கேட்டு அவன் மனம் கொதிக்கவோ ஆத்திரமடையவோ செய்யாமல் அமைதியாயிருந்தான். அவனுக்கும் அவர் சொல்வது சரியென்றே பட்டது. வாசகசாலைக்காகவும், வேறு காரியங்களுக்காகவும் அவள் இதுவரை செலவழித்திருப்பதைத் திருப்பி எடுத்துக் கொள்ளச் சொல்லுவதோடு, மேலே செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் எப்போது ஏற்பட்டாலும், தான் கொடுத்து வைத்திருக்கும் தொகையிலிருந்தே செலவழிக்க வேண்டும் என்பதையும் அவளிடம் வற்புறுத்திச் சொல்லி விடலாமென்று எண்ணினான் அவன். தான் கூறியதை அவன் மறுக்காதது கண்டு பத்தருக்கு வியப்பாயிருந்தது. அவன் தட்டிச் சொல்லாமல் உடனே அதற்கு ஒப்புக் கொள்வான் என்று எதிர்பார்க்கவேயில்லை அவர். அவன் ஒப்புக் கொண்டாற்போல அமைதியாயிருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் மேலே போய்விட்டு மறுபடி வெளியே புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடிப் பக்கமிருந்து வளைகளின் ஜலதரங்க நாதமும், புடவை சரசரத்துக் கொலுசுகள் தாளமிடும் ஒலிகளும் மெல்ல மெல்ல நெருங்கி வந்தன. "நல்லவாளுக்கு அழகு, சொல்லாமப் போயிடறது தான், இல்லையா?" "அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; பத்தர் சொல்லியிருப்பாரே!" "சொன்னார்! ஆனா, நீங்களே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருந்தீங்கன்னா, எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்..." "மேலூர் போக வேண்டியிருந்தது. திடீர்னு நினைச்சுண்டேன். உடனே அவசரமாகப் புறப்பட வேண்டியதாச்சு..." "பரவாயில்லை! இப்ப கொஞ்ச நாழிகை இருங்கோ, சாப்பாடு கொண்டு வரேன். சாப்பிட்டு அப்புறம் வெளியே போகலாம்..." "சரி! இன்னொரு காரியம் மதுரம்..." "என்ன? சொல்லுங்கோ." மேலூர் நிலத்தையும், வீட்டையும் விலை பேசி அட்வான்ஸ் வாங்கியிருப்பதையும், அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து வைக்கப் போவது பற்றியும் சொல்லிவிட்டு, அதில் அவளுக்குச் சேர வேண்டிய பழைய கடன் தொகையை எடுத்துக் கொள்வதோடு, புதிதாக ஏதேனும் வாசகசாலைக்கோ, தனக்கோ செலவழிக்க வேண்டியிருந்தாலும் அதிலிருந்தே செலவழிக்க வேண்டுமென்று அவன் நிபந்தனைகள் போட்டபோது, அவனுடைய அந்த நிபந்தனைகளைக் கேட்டு அவளுக்குக் கோபமே வந்து விட்டது. "நீங்க அடிக்கடி இப்படிப் பேசறது உங்களுக்கே நல்லா இருந்தா சரிதான்! திடீர் திடீர்னு ரூபாய் அணாப் பைசாப் பார்த்துக் கணக்கு வழக்குப் பேச ஆரம்பிச்சுடறீங்க. நான் கணக்கு வழக்குப் பார்த்து இதெல்லாம் செய்யலை. ஒரு பிரியத்திலே செஞ்சதையும், செய்யப் போறதையும் கணக்கு வழக்குப் பேசி அவமானப்படுத்தாதீங்க? நீங்க பணத்தை எங்கிட்டக் கொடுத்து வைக்கறேன்னு சொல்றதைக் கேட்டு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்! ஆனா, என்னை ஏன் அந்நியமாகவும், வேற்றுமையாகவும் நினைச்சுக் கணக்கு வழக்குப் பார்க்கறீங்கன்னு தான் புரியலை..." இதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருவதைப் பார்த்து ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான். மதுரத்தின் மனம் அனிச்சப் பூவைக் காட்டிலும் மென்மையாகவும், உணர்வுகள் அசுணப் பறவையைக் காட்டிலும் இங்கிதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அழுத்தி மோந்து பார்த்தாலே வாடிவிடும் அனிச்சப்பூவும், அபஸ்வரத்தைக் கேட்டால் கீழே விழுந்து துடிதுடித்து மரண அவஸ்தைப்படும் அசுணப் பறவையும் தான் அவளை எண்ணும் போது அவனுக்கு ஞாபகம் வந்தன. ஒன்றும் பேசாமல் மேலூரில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான். மதுரம் அதை இரண்டு கைகளாலும் அவனிடமிருந்து வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். "இப்ப அப்படி என்ன பெரிய பணமுடை வந்துவிட்டது உங்களுக்கு? எதற்காகத் திடீரென்று சொல்லாமல் ஓடிப்போய் நிலத்தையும் வீட்டையும் விற்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரணும்?" "அதுக்காகன்னே நான் போகலை; போன இடத்திலே முடிவானதுதான்..." "அப்படி முடிவு பண்ண, இப்ப என்ன அவசரம் வந்ததுன்னுதான் கேட்கிறேன் நான்..." "....." "என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தீங்கன்னா, நான் விட்டிருக்க மாட்டேன்." ஆத்மாவோடு ஆத்மாவாகக் கலந்து உறவு கொண்டுவிட்டவளைப் போல இவ்வளவு ஒட்டுதலாக அவளால் எப்படிப் பேச முடிகிறதென்று மனத்துக்குள் வியந்தான் ராஜாராமன். ஆனால் அவள் அப்படிப் பேசியது அவனுக்கு மிகவும் இதமாக இருந்தது. ***** தொடர்ந்து சில நாட்களாக ராட்டு நூற்கவும் படிக்கவும் எண்ணினான் அவன். எனவே, நாலைந்து நாட்கள் தொடர்ந்து அவன் வேறெங்கும் வெளியே சுற்றவில்லை; வாசகசாலையிலேயே தங்கிப் புத்தகங்கள் படித்தான். மதுரத்தின் அன்பும் பிரியமும் நிறைந்த உபசரிப்பு அவனைச் சொர்க்க பூமிக்குக் கொண்டு போயிற்றெனவே சொல்ல வேண்டும். அந்த அன்புமயமான நாட்களில் ஒரு நாள் மாலை தன் தாய் கோயிலுக்குப் போயிருந்த போது, அங்கேயே வீணையை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவனுக்காக ஒரு மணி நேரம் வீணை வாசித்தாள் மதுரம். அந்த இசை வெள்ளத்தில் அவன் மனம் பாகாய் உருகியது. எதிரே சரஸ்வதி தேவியே ஒரு வசீகரவதியாகி வந்தமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பது போல் அவனுக்குக் காட்சியளித்தாள் அவள். மறுபடி வீடு நில விறபனை ரிஜிஸ்திரேஷனுக்காக அவன் மேலூர் புறப்படுவதற்கிருந்த தினத்துக்கு முந்திய தினத்தன்று காலையில் பிருகதீஸ்வரனின் பதில் கடிதம் அவனுக்குக் கிடைத்தது. வருட ஆரம்பத்தில் மோதிலால் நேரு மரணமடைந்த செய்தி தன் மனத்தைப் பெரிதும் பாதித்திருப்பதாக எழுதியிருந்தார் அவர். தானும் தன் மனைவியுமாகப் புதுக்கோட்டைச் சீமையில் ஊர் ஊராகச் சென்று கதர் விற்பனைக்கும், சுதேசி இயக்கத்திற்கும் முடிந்தவரை பாடுபட்டு வருவதாகவும், மாகாண மாநாட்டின் போது மதுரை வரமுடியாவிட்டாலும் முடிந்தபோது அவசியம் மதுரை வருவதாகவும் கடிதத்தில் விவரித்து எழுதியிருந்தார், அவர். அந்தக் கடிதத்தை அவன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த போது மதுரம் வந்ததால் அதை அவளிடமும் படிக்கக் கொடுத்தான் அவன். பிருகதீஸ்வரனின் கடிதத்தைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆர்வமாக விசாரித்தாள். சிறை வாழ்க்கையில் அவரோடு கழித்த இனிய நாட்களையும், வேளைகளையும் சுவாரஸ்யமாக அவளுக்கு வருணித்துச் சொன்னான் அவன். மறுநாள் அதிகாலையில் மேலூர் போய்ப் பத்திரம் பதிந்து கொடுத்துவிட்டுப் பாக்கிப் பணத்தையும் வாங்கி வரப் போவதாக முதல் நாளிரவே மதுரத்திடம் சொல்லியிருந்தான் அவன். அதனால் அவன் எழுவதற்கு முன்பே அவள் காபியோடு வந்து, அவனை எழுப்பிவிட்டாள்; சீக்கிரமாகவே அவன் மேலூர் புறப்பட முடிந்தது. அம்பலக்காரர் ஸ்டாம்ப் வெண்டரைப் பிடித்துப் பத்திரம் எல்லாம் தயாராக எழுதி வைத்திருந்தார். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸிலும் அதிக நேரம் ஆகவில்லை. முதல் பத்திரமாக ராஜாராமனின் பத்திரமே ரிஜிஸ்தர் ஆயிற்று. ரிஜிஸ்திரார் முன்னிலையிலேயே பாக்கி ஏழாயிரத்தையும் எண்ணிக் கொடுத்து விட்டார் அம்பலக்காரர். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது, பிறந்த ஊரின் கடைசிப் பந்தமும் களையப்பட்டு விட்டது போல ஓருணர்வு நெஞ்சை இலேசாக அரித்தது. வீட்டில் வாடகைக்கு இருக்கும் உரக் கம்பெனிக்காரனுக்கு வீட்டை விற்று விட்டதை அறிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டார் அம்பலக்காரர். அப்படியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தான் ராஜாராமன். மேலூர் நண்பர் பகல் சாப்பாட்டை அங்கேயே தன்னோடு சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும் என்றார். பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் போது மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது மனத்தை அரித்த உணர்வு, ஊரிலிருந்து புறப்படும்போது ஏற்பட்டது. மேலூர் வீட்டுப் பரணில் மதுரையிலிருந்து ஒழித்துக் கொண்டு போய்ப் போட்டிருந்த பண்டம் பாடிகளை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வர நண்பர் பொறுப்பு எடுத்துக் கொண்டார். மாலையில் அவன் மதுரை திரும்பியதும், நேரே வாசக சாலைக்குத் திரும்பி மதுரத்திடம் பணத்தைச் சேர்த்து விட எண்ணினான். அவன் வாசகசாலைக்கு வந்தபோது, பின்பக்கத்து மாடியில் வீணை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. 'சரி, அவள் வீணை வாசித்து, முடித்துவிட்டு வருகிறவரை சர்க்காவில் நூற்கலாம்' என்று உட்கார்தான் அவன். முதலில் எடுத்த பஞ்சுப் பட்டையை முடித்து விட்டு, இரண்டாவது பட்டையை எடுத்த போது பத்தர் மேலே வந்தார். "என்ன ரெஜிஸ்திரேஷன் முடிஞ்சுதா தம்பி? பாக்கிப் பணம்லாம் வாங்கியாச்சா?" "எல்லாம் முடிஞ்சுது பத்தரே! மதுரத்துக்கிட்டப் பணத்தை கொடுக்கணும். அது வீணை வாசிச்சுக்கிட்டிருக்குப் போலேருக்கு. தொந்திரவு பண்ண வேண்டாம். தானா வாசிச்சு முடிச்சிட்டு வரட்டும்னு சர்க்காவை எடுத்து வச்சுக்கிட்டு உட்கார்ந்தேன்." "அது இப்ப வந்துடுங்க தம்பீ! திடீர்னு எதிர்பாராம ஜமீந்தார் - யாரோ அவர் சிநேகிதனாம் ஒரு வெள்ளைக்காரனையும் கூப்பிட்டுக்கிட்டு வீணை கேட்கணும்னு வந்து உட்கார்ந்திட்டாரு. மத்தியானம் வரை நீங்க வந்தாச்சா வந்தாச்சான்னு கால் நாழிகைக்கொரு தரம் கேட்ட வண்ணமாயிருந்திச்சு. பன்னிரண்டு மணிக்கு முத்திருளப்பன் வந்தாரு. அவருக்கிட்டக்கூட நீங்க மேலூருக்குப் போனதைப் பற்றித் தான் பேசிக்கிட்டிருந்தது." "அப்புறம் நாகமங்கலத்தார் வந்ததும் - நான், நீர், முத்திருளப்பன் எல்லாருமே மறந்து போய்ட்டோமாக்கும்." "சே! சே! அப்பிடி எல்லாம் பேசப்படாது! ஜமீந்தார் பேரை எடுத்தாலே, உங்களுக்கு உடனே மதுரத்து மேலே கோபம் வந்துடுது. அது என்ன செய்யும் பாவம்! ஜமீந்தாருக்கு முன்னாடி வீணை வாசிச்சாலும், உங்க ஞாபகத்திலே தான் வாசிக்குது அது! அதை நீங்களாவது புரிஞ்சுக்கணும்..." "நான் புரிஞ்சுக்கலேன்னு சொல்லலியே இப்ப..." "புரிஞ்சுக்கிட்டுத்தான் இப்படி எல்லாம் பேசறீங்களா தம்பீ!" "சரி! சரி! அந்தப் பேச்சை விடுங்க, நான் கொஞ்சம் கோவில் வரை போயிட்டு வரேன்" - என்று 'சர்க்காவை' ஓரமாக வைத்துவிட்டுக் கீழே இறங்கிக் கோவிலுக்குப் புறப்பட்டான் ராஜாராமன். மீண்டும் அவன் திரும்பி வந்த போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. அவன் மாடிக்குப் போனபோது பத்தர் உட்புறம் நாற்காலியிலும் மதுரம் மொட்டை மாடியிலிருந்து உள்ளே வரும் முதற்படியிலுமாக உட்கார்ந்து இருவருமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளே வரும் அவனைப் பார்த்ததும் மதுரம் பவ்யமாக எழுந்து நின்றாள். முழு அலங்காரத்துடன் பரிபூரண சௌந்தரியவதியாக எழுந்து நின்ற அவளைப் பார்த்தவுடன் அவள் அவ்வளவு நேரம் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஜமீந்தார் முன்னிலையிலும், ஒரு வெள்ளைக்காரன் முன்னிலையிலும் வீணை வாசித்துவிட்டு வந்திருக்கிறாள் என்பதையொட்டி அவளிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த உள்ளடங்கிய ஆத்திரம் கூடப் பறந்து விடும் போலிருந்தது. அக்கினியாகக் கனன்று வருகிறவன் மேல் பார்வையினாலேயே பனி புலராத புஷ்பங்களை அர்ச்சிக்கும் இந்தக் கடாட்சத்தை எதிர் கொண்டு ஜெயிக்க முடியாதென்று தோன்றியது அவனுக்கு. ஒன்றும் பேசாமல் பத்திரம் முடித்து வாங்கிக் கொண்டு வந்திருந்த ஏழாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன். அவள் முன்பு செய்தது போலவே இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். பத்தர் மெல்லக் கீழே புறப்பட்டுப் போனார். எதையாவது சொல்லி அவளை வம்புக்கு இழுக்க ஆசையாயிருந்தது அவனுக்கு; ஜமீந்தார் வந்து போன விஷயத்தை நேரடியாகச் சொல்லிக் காண்பிக்கவும் மனம் வரவில்லை; வேறு விதத்தில் வம்புப் பேச்சு ஆரம்பமாயிற்று. "ஒன்பதாயிரம் - இதைச் சேர்த்து மொத்தம் கொடுத்திருக்கேன். முன்னாலே ஆன செலவு, இனிமே ஆகப் போற செலவு, எல்லாத்தையும் இதிலிருந்துதான் எடுத்துக்கணும்..." "ரொம்ப சரி! உங்க வார்த்தைக்குக் கட்டுப்படறேன். எப்பவும் எதிலயும் நான் உங்களை மீறிப் போகமாட்டேன். ஆனா இதிலே மட்டும் ஒரு உரிமை கொடுங்கோ...! தேசத்துக்காக நீங்க கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றத்துக்கும் உங்களுக்கு உரிமை இருக்கறாப்பல உங்களுக்காகக் கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றதுக்கும், எனக்கும் கொஞ்சமாவது உரிமை வேண்டும். ஒரு தியாகி மத்தவாளும் தியாகியாகறதுக்கு அனுமதிக்கணும். இல்லாட்டா தியாகத்தையே அவன் ஒரு சுயநலமாப் பயன்படுத்தற மாதிரி ஆயிடும். நீங்க ஊரறிய உலகறிய தேசத்துக்காகத் தியாகம் பண்ணுங்கோ. ஆனால் ஊரறியாமல், உலகறியாமல் - புகழை எதிர்பாராத ஒரு அந்தரங்கமான தியாகத்தை உங்களுக்காக நான் பண்றதை நீங்க தடுக்கப்படாது. அது நியாயமில்லை; தர்மமுமாகாது. தயவு பண்ணி இனிமே எங்கிட்ட நீங்க ரூபாய் அணா கணக்குப் பேசப் படாது." "சரி பேசலே, அப்புறம்?..." "நீங்க கொடுத்து வச்சிருக்கறதை விட அதிகமாகவும் நான் உங்களுக்காக செலவழிப்பேன். பக்தி செய்கிறவர்கள் தனக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டுமென்பதைத் தெய்வங்கள் முடிவு செய்ய உரிமையில்லை..." "முடிவு செய்ய உரிமையில்லை என்றாலும், கவலைப்பட உரிமை உண்டல்லவா மதுரம்?" "நான் ஒருத்தி இருக்கிறவரை உங்களுக்கு ஒரு கவலையும் வராது. வர விடமாட்டேன்." "வேடிக்கைதான் போ! பக்தர்களின் கவலையைப் போக்கும் தெய்வங்களைப் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். தெய்வங்களின் கவலைகளையே போக்க முடிந்த பக்தர்களைப் பற்றி இப்போது நீதான் சொல்கிறாய் மதுரம்...!" அவள் மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தாள். |