9 மகாத்மா காந்தி லண்டனுக்கு வட்ட மேஜை மகாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. சமரசமோ, உடன்பாடோ எதுவும் சாத்தியமில்லாமல் போயிற்று. மகாத்மா லண்டனில் இருந்த போதே இந்தியாவில் காங்கிரஸ் இயக்கத்தை ஒடுக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்யத் தொடங்கிவிட்டது. லண்டனிலிருந்து திரும்பிய மகாத்மா பம்பாய் ஆசாத் மைதானத்தில் பேசிய பேச்சின் சுவடு மறையுமுன்னே, நாட்டில் அங்கங்கே தேசியவாதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். முற்றிலும் எதிர்பாராத விதமாக, ஒரு வருஷத்திற்கு ஜாமீன் கோரி ராஜாராமன் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டது. வேறு சில தேசபக்தர்கள் மேலும் இப்படி ஜாமீன் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளுக்கும், தேசபக்தர்களுக்கும் ஜாமீன் கேட்பது வழக்கமில்லாத புதுமையாயிருந்தது. ஜாமீன் தர மறுப்பது என்று எல்லாத் தேசபக்தர்களும் முடிவு செய்தார்கள். ராஜாராமனும் அதே முடிவுக்கு வந்தான். அரசாங்கம் யாவரையும் கைது செய்தது. ராஜாராமனும் கைதானான். முத்திருளப்பன், குருசாமி இருவர் மேலும் ஜாமீன் வழக்கு இல்லாததால் அவர்கள் வெளியிலேயே தங்கினர். எங்கோ வெளியே சுற்றிவிட்டு வாசக சாலைக்குத் திரும்பி வந்தபோது, மொட்டைக் கோபுர வாசலில் வைத்து அவனைப் போலீஸார் கைது செய்ததால் - அந்தச் செய்தி உடனே பத்தருக்கோ மதுரத்துக்கோ எட்டவில்லை. போலீஸ் எஸ்கார்ட்டுடன் இரண்டு நாள் கழித்து அவன் கடலூருக்குக் கொண்டு போகப்பட்டான். பத்தர், முத்திருளப்பன், குருசாமி மூன்று பேருமே ரயில் நிலையத்தில்தான் அவனைப் பார்த்தார்கள். "அதுக்கு என்ன சொல்லட்டும் தம்பீ?" - என்று கண்கலங்கிய பத்தரைப் பார்த்து: "கவலைப்படாதிரும் பத்தரே! உங்களைப் போல் மதுரமும் கண் கலங்கினாலும், உங்களுக்கே ஆறுதல் சொல்ற மனபலம் அவளுக்கு இருக்கு" - என்றான் ராஜாராமன். கைவிலங்குகளோடு செய்த அந்த இரயில் பயணத்தின் போது, அவன் மனமுருகி நினைவில் பதித்துக் கொண்ட ஒரே காட்சி - ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் திருச்சி நிலையத்தில் வண்டிக்குள் ஏறி,
'பண்டித மோதிலால் நேருவைப் பறி கொடுத்தோமே! பறி கொடுத்தோமே! - உள்ளம் பறிதவித்தோமே' - என்று பாடியதுதான். தன் போக்கில் பிச்சைக்கு வரும் இரயில் பிச்சைக்காரனைக்கூட அந்தத் தேசிய நஷ்டம் பாதித்திருப்பதை உணர்ந்தபோது, அவனுக்கு ஆறுதலாயிருந்தது. எஸ்கார்ட்டிடம் சொல்லித் தன் கையிலிருந்த சில்லறையில் கொஞ்சம் அந்தப் பிச்சைக்காரனுக்கு எடுத்துப் போடும்படி செய்தான் ராஜாராமன். தேசபக்தியுள்ள பல பிரபல பாடகர்கள் பாடியிருந்த இந்தப் புதிய பாட்டு இரயிலில் பிச்சையெடுக்க வருகிறவனாலும் அழுது கொண்டே பாடப் படுகிறது என்பதைக் கவனித்த போது, தேசம் முழுவதுமே சுதந்திரத்தை எதிர் நோக்கி அழுது தவிப்பதை அவன் உணர்ந்தான். ஒரு தேசபக்தன் என்ற முறையில் அவனுக்குப் பெருமிதமாக இருந்தது.
கடலூர் சிறையில் வேறொரு எதிர்பாராத தொந்திரவும் இருந்தது. முன்பு வேலூர் ஜெயிலில், கூட இருந்த எல்லாருமே தேசபக்தர்களாக இருந்தார்கள். இங்கேயோ அப்படியில்லாமல் பயங்கரவாதிகள் சிலரும், பல்வேறு கிரிமினல் குற்றவாளிகளும் அடங்கிய 'அஸோஸியேஷன் பிளாக்' ஒன்றில் ராஜாராமன் அடைக்கப்பட்டான். பிருகதீஸ்வரனைப் போல் நட்புக்கும், அன்புக்கும் உரியவராக இங்கு யாருமே கிடைக்கவில்லை. வார்டர்களோ, கிரிமினல் கைதிகள் யார், தேசபக்தர்கள் யார் என்று சிறிதும் தரம் பிரிக்காமல் எல்லாரையுமே கிரிமினல் கைதிகளைப் போலவே கொடுமையாக நடத்தினார்கள். சிறைவாசத்தின் முழுக்கொடுமையும் இப்போது கடலூரில் தான் ராஜாராமனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் கடலூருக்கு வந்த இரண்டாவது வாரம் மதுரம் எழுதிக் கொடுத்த கடிதம் ஒன்றை வாங்கிப் பத்தர் தபாலில் அவனுக்கு அனுப்பியிருந்தார். உண்மை அன்புக்கு மனிதர்களில்லாத அந்தச் சிறையின் சூழலில், அவள் கடிதம் அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது.
"யாருடைய பவித்திரமான மனத்தில் நான் சதாகாலமும் விரும்பிச் சிறைப்பட்டுக் குடியிருக்கிறேனோ அவருடைய பாதாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். செய்தியைப் பத்தர் வந்து சொன்னதும் அதிர்ந்து போனேன். பாவி எந்த வேளையில் உங்கள் மேல் பிரியம் வைத்தேனோ, அந்த வேளையிலிருந்து உங்களுக்குச் சிறைவாசமாக வந்து கொண்டிருக்கிறது. சிறு வயதிலிருந்து நான் கூண்டுக் கிளியாகவே வளர்க்கப் பட்டவள். உங்களைப் பார்ப்பதற்கு முன்னால் மனிதர்கள் மேல் பிரியம் செலுத்துவதைப் பற்றி எனக்குத் தெரியாது. உங்களைக் கூட நான் முகத்துக்கு முகம், நேருக்கு நேர் முதலில் பார்க்கவில்லை. நான் முதன் முதலில் பார்த்தது உங்கள் பொன்நிற உட்பாதங்களைத்தான். அழகர் கோவில் தங்க விமானத்தில் பளீரென்று இரண்டு பாதங்களை வடித்திருக்கிறார்கள். மொட்டை மாடி விளிம்புச் சுவரில் காலை வெயிலில் தகதகவென்று தங்கத் திருவடிகளாய் மின்னிய உங்கள் உள்ளங்கால்களைத் தான் முதன் முதலில் நான் பார்த்தேன். அந்தப் பாதங்களைப் பார்த்தவுடன் கள்ளழகர் கோவில் விமானத்தில் பார்த்த தங்கத் திருவடிகள் தான் எனக்கு நினைவு வந்தன. தெரியாமல் நான் உங்கள் கால்களில் எறிந்துவிட்ட பூக்களுக்காக நீங்கள் என்னைக் கோபித்துக் கொண்டீர்கள். அப்போது அதற்காக நான் உங்களிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் - அர்ச்சிக்க வேண்டிய தகுதியுள்ள பாதங்களிலேயே என்னுடைய பூக்களை நான் அர்ச்சித்திருப்பதாக உள்ளூர மகிழ்ந்து பெருமைப்படவே செய்தேன். இப்படி எல்லாம் மனம் திறந்து உங்களுக்குக் கடிதம் எழுதும்போது, ஏதாவது தப்பாக அசட்டுப் பிசட்டென்று எழுதுகிறேனோ என்று எனக்குப் பயமாகவும் இருக்கிறது. நான் ரொம்பப் படித்தவளில்லை. ஜமீந்தாருடைய ஏற்பாட்டில் தமிழ்ச் சங்கத்துக் கவிராயர் ஒருவர் கொஞ்ச நாள் நிகண்டு, நன்னூல், நைடதம், திருவிளையாடற் புராணம், பிரபுலிங்க லீலை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். வாசகசாலைக்கு வருகிற பத்திரிகைகளில் சுதந்திரச் சங்கு, காந்தி - எல்லாம் நானே பிரியமாகத் தேடி வாங்கிப் படிக்கிறேன். ஆனாலும், நான் ஒரு கவி இல்லை. ஆனால், உங்களுக்கு எழுதுகிறோம் என்ற ஒரே காரணத்தினால், என்னுடைய கடிதத்தை நான் விசேஷ சிரத்தையோடும் ஒரு கவியின் உற்சாகத்தோடும் எழுத முற்படுகிறேன். எழுதுகிறவர்களின் திறமையினாலன்றி எழுதப்படிகின்றவர்களின் சிறப்பால் மட்டுமே சில விசயங்களுக்கு கவிதையின் அந்தஸ்து வந்து சேரும் போலிருக்கிறது. இந்தக் கடிதத்திலும் அப்படி ஏதாவது ஓர் அந்தஸ்து இருக்குமானால் அதற்கு இதை எழுதுகிற என் திறமை காரணமல்ல. நான் இதை யாருக்கு எழுதுகிறேனோ அவருடைய பெருமை தான் அதற்குக் காரணமாக இருக்கும். பத்தர் என்னிடம் நீங்கள் கைதாகிவிட்ட செய்தியை வந்து சொன்ன போது நான் அழுதேன். "என்னம்மா, நீயே இப்படிப் பச்சைப்புள்ளே கணக்கா அழுதா எப்படி? எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்ற மனோபலம் உனக்கு உண்டுன்னு அவர் சொல்லிட்டுப் போறாரு," என்றார் பத்தர். உடனே நீங்கள் அப்படி எனக்கொரு கட்டளை இட்டிருந்தால், அதை நான் நிறைவேற்ற வேண்டியது என்னுடைய முதல் கடமை என்று நான் உணர்ந்தேன். நான் உங்களுக்கு கட்டுப்பட்டவள். உங்கள் சொற்படி நடக்க விரும்புகிறவள். நீங்கள் விடுதலையாகி வருகிறவரை சகல காரியங்களையும் நான் கவனித்துக் கொள்கிறேன். சிறைவாசம் என்ற ஒரு கவலையைத் தவிர வேறெந்தக் கவலையையும் நீங்கள் படக்கூடாது. நீங்கள் விடுதலையாகி வந்து, உங்களுடைய கம்பீரத் திருவுருவத்தைத் தரிசிக்க ஒவ்வொரு நாளும் நான் ஏங்கிக் கொண்டிருப்பேன் என்பது ஒன்று மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும். பக்கத்தில் இருக்காவிட்டாலும், மானஸீகமாக நானும் உங்களோடு இருந்து அந்தச் சிறைவாசத்தை அனுபவிப்பதாகவே எனக்குள் பாவித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் இந்த மாதமுடிவில் பத்தரைக் கடலூருக்கு அனுப்புவேன். என்னுடைய இந்தக் கடிதத்துக்கு நீங்கள் பதில் எழுத முடியாமற் போனாலும் பத்தர் வரும்போது அவரிடம் நேரிலே ஏதாவது கூறி அனுப்புங்கள். அதைக் கேட்டே நான் திருப்திப் பட்டுக் கொள்வேன். பத்தர் வரும்போது அவரிடம் நேரில் சில தகவல்கள் சொல்லியனுப்புகிறேன். இந்தக் கடிதத்தில் என்னையறியாமல் நான் ஏதாவது பிழை செய்திருந்தால் பொருத்தருள வேண்டுகிறேன்.
என்றும் தங்கள் அடிமை மதுரவல்லி" என்று கடிதத்தை முடித்திருந்தாள், அவள். இந்தக் கடிதத்தை அது தனக்குக் கிடைத்த தினத்தன்றே பலமுறை திரும்பத் திரும்பப் படித்துவிட்டான் ராஜாராமன். பாலைவனத்தின் இடையே பயணம் செய்யும் போது பருகக் கிடைத்த நல்ல தண்ணீர் போல இருந்தது அது. வேலூர் சிறைவாசம் எந்த அளவுக்கு ஒரு குருகுல வாசத்தைப் போல் சுகமாகக் கழிந்ததோ அப்படி இது கழியவில்லை. வேலூரிலும் 'தனிக் கொட்டடி' இல்லையானாலும் - ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை கைதிகளும் சுதேசி இயக்கத்தினால் மட்டுமே சிறைக்கு வந்தவர்களாக இருந்தனர். தவிர, அந்தச் சிறைவாசத்தின் கடுமையே தெரியாதபடி, பிருகதீஸ்வரன் போன்ற ஒருவரின் நட்பும் பாசமும் அவனுக்கு அங்கே கிடைத்திருந்தன. இங்கேயோ எல்லாமே கடுமையாக இருந்தது. இருபது முப்பது பேர் கொண்ட 'அஸோஸியேஷன் பிளாக்' முதல் நாள் மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டால் மறுநாள் காலை ஆறுமணிக்குத்தான் மறுபடி திறந்து விடுவார்கள். அவசர மலஜல உபாதைகளை உள்ளேயே ஒரு கோடியில் தான் முடித்துக் கொள்ள வேண்டும். ஈக்களும், கொசுக்களும், தாராளமாகப் பறக்கக் கக்கூஸ் வாடைவீசும் ஒரு நரகமாக இருந்தது அந்தக் கொட்டடி. இரவு நேரமாக நேரமாகக் கொட்டடியிலேயே உள்ளேயிருக்கும் துர்நாற்றங்கள் சுற்றிச் சுற்றி வரும். அது தூக்கத்தைக் கெடுத்தது; நோய்களை உண்டாக்கியது. முப்பது கைதிகளின் குறட்டை, உளறல், கனவு அரற்றல், இருமல், செருமல், இவைகளுக்கிடையே இரவு நரகமாகக் கழிந்து கொண்டிருந்தது. முறையான வார்டர்கள் கடுமையில் சிறிதும் குறைந்தவர்களில்லை. கைதிகளிலேயே விசுவாசமுள்ள கைதிகளிலிருந்து பொறுக்கி நியமித்த 'கன்விக்ட் வார்டர்' - யாராவது வந்தால் சில சமயம் கருணையாக நடந்து கொள்வது உண்டு. கிரிமினல் கைதிகள் பெரும்பாலோர் கூட இருந்ததனால் - அவர்களோடு இருந்த பாவத்துக்காகச் சத்தியாக்கிரகிகளுக்கும், கதவைத் திறக்காமலே சந்து வழியே ஆகாரத்தைக் கொடுக்கும் 'ஸாலிடரி கன்ஃபைன்மென்ட்' முறை கடலூரில் கடைப்பிடிக்கப்பட்டது. சில சத்தியாக்கிரகிகள் 'ஸாலிடரி கன்ஃபைன்மென்ட்' முறையை எதிர்க்கவும் செய்தனர். ஆனால் பயன் ஒன்றும் உடனே விளையவில்லை. முதன் முறை அவனைப் பார்க்க வந்ததைப் போலவே பத்தரோ முத்திருளப்பனோ இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் கடலூருக்கு வந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருந்தது. தேசத்திற்காக விரும்பி அடைந்த தண்டனை இது என்ற பெருமையோடு கடலூரில் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் கழித்துக் கொண்டிருந்தான் ராஜாராமன். கடலூர் சிறையில் உணவு முறை மிகமிக மோசமாயிருந்ததால், மூலக் கடுப்பு அடிக்கடி வந்தது. கல்லைவிடக் கடுமையான உண்டைக் கட்டிகள் வழங்கப்பட்டன. சிறை வைத்தியர் உணவைவிட மோசமான மருந்துகளைக் கொடுத்ததனால் வைத்திய உதவியும் பயனளிக்கவில்லை. ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிறை மைதானத்தில் நடைபெற்ற கைதிகளின் 'பரேட்'டின் போது ஒவ்வொரு கைதியும் தன் குறைகளை அதிகாரியிடம் கூறலாம் என்றிருந்தாலும், அப்படிக் கூறப்பட்ட குறைகளும் அதிகாரிகளால் அலட்சியமே செய்யப்பட்டன. அவன் கடலூர் சிறைக்கு வந்த சிறிது காலத்திற்குப் பின்பு முத்திருளப்பனும், பத்தரும் அவனைச் சந்திக்க வந்திருந்த ஒரு சமயத்தில்தான், மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தான். அவர்கள் மூலமாக அவ்வப்போது ஏதாவது தகவல் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தான், அவன். அவளும் ஏதாவது கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். கடலூர் சிறையில் அவனுடைய உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மார்புக் கூடு பின்னித் தெரிவது போல் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டான் அவன். குளிப்பதற்கும் தண்ணீரை உபயோகப்படுத்துவதற்கும் அதிகக் கடுமையான நிபந்தனைகள் இருந்தன அங்கே. படுக்க விரிப்பு வசதிகள் அறவே இல்லை. முழங்கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்க வேண்டியதுதான். மலஜல நாற்றமும், முடைவீச்சும், அழுக்குத் துணிகளின் வாடையுமாக ஒவ்வொரு நாளும் அருவருப்போடு கழிக்க வேண்டியிருந்தது. வேலூரில் செய்தது போல பாரதி பாடல் வகுப்புகள் நடத்தவோ, அடிக்கடி ஒன்று சேர்ந்து, எல்லோரும் ஒருமுகமான மனத்துடன் பிரார்த்தனைக் கீதங்கள் இசைக்கவோ கடலூர் ஜெயிலில் வாய்ப்புக்கள் இல்லை. மன ஆறுதலோ, நிம்மதியோ கிடைக்க முடியாத காராக்கிருக வாசமாகவே இருந்தது அது. மனத்தில் தனிமை உறுத்திய ஒரு பின்னிரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுவிட்டுச் சிறிது கண்ணயர்ந்த அவன் ஒரு சுகமான கனவு கண்டான். மதுரம் கனவில் சர்க்கா நூற்றுக் கொண்டே 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று பாடுகிறாள். அவன் அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்; நேரம் போவதே தெரியவில்லை. சிறையில் அப்போது விடியும் நேரம் நெருங்கிவிடவே 'பரேடு'க்காக அவனை அடித்து எழுப்பிவிட்டார்கள். அன்று முழுவதும் சோகம் இழையும் அந்த இனிய குரல் 'தெலியலேது ராமா' - என்று அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லையில்லாதோர் அடர்ந்த காட்டில் எங்கோ ஒரு மூலையில், இருளென்றும் ஒளியென்றும் புரியாத மருளில் ஒலிக்கும் சோகக் குயிலின் குரல் ஒன்று கூவுவது போல் அந்தக் குரல் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. அதே பிரமை அன்று முழுவதும் அவனை வாட்டியது. மனவிளிம்பில் தாபமாகவும் தாகமாகவும் ஊமைத்தனமாக நின்று கதறிய வேதனை சில வரிகளாக உருப்பெற்று வார்த்தைகளாகச் சேர்ந்து கோத்துக் கொண்டு வந்தன.
"எல்லையிலாத தோர் காட்டிடை - நள் இருளென்றும் ஒளியென்றும் சொல்ல வொணாத தோர் மயக்கத்தை - இளஞ் சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன் சுவடு முழுதும் தெரியுதிலை சோகம் முழுவதும் புரியுதிலை, தொல்லைப் பழங்கால முதலாய் - எனைத் தேடி அலையும் குரல் சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு சோகம் முதிர்ந்து முதிர்ந்தூறிப் பல்லாயிர மூழிகள் தொடர்ந்து பாடிப் பசித்த குயிலின் குரல்..." -முறையின்றியும் முறையாகவும், வரிசையாகவும் வரிசையின்றியும் தோன்றிய இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவு கொள்ள முடிந்ததே ஒழிய, ஒழுங்குபடுத்தி எழுதி வைத்துக் கொள்ள வசதிகள் இல்லை. பென்சில் காகிதத்துக்கு வார்டனிடம் கெஞ்சத் தயங்கி, இந்த வரிகளைத் திரும்பத் திரும்ப முணுமுணுத்து மனப்பாடமே செய்து கொண்டான் அவன். பொறுக்க முடியாத தனிமையும், மனத்தின் வேதனை வெடித்த வெடிப்புமாக இந்த வரிகளை இயற்றும் சக்தியை அவனுக்கு அளித்திருந்தன. இந்த வரிகளை மீண்டும் நினைப்பதிலும், மறப்பதிலும் மறுபடி முயன்று நினைப்பதிலுமாகப் பல தினங்களையே கழிக்க முடிந்தது அவனால். அப்படி ஒரு மயக்கம் இந்தச் சில வரிகளில் இருந்தன. விடுதலையானதும் இதை டைரியில் எழுதிக் கொள்ள எண்ணினான் அவன். ஒவ்வொன்றாக மாதங்கள் ஓடின. அவன் விடுதலையாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வந்திருந்தபோது நாகமங்கலம் ஜமீந்தார் காலமாகிவிட்ட செய்தியைப் பத்தர் தெரிவித்தார். அதை ஏன் அவர் தன்னிடம் தெரிவிக்கிறார் என்பது முதலில் அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரத்தில் அது புரிந்தது. புரிந்த போது வேறொரு தெளிவும் கிடைத்தது. "மதுரம், தனபாக்கியம், மங்கம்மா, மாமாக் கிழவர் எல்லாருமே வீட்டைப் பூட்டிக்கிட்டு, நாகமங்கலம் போயிருக்காங்க தம்பி; வர ஒரு மாசம் கூட ஆகலாம்..." "போக வேண்டியதுதானே?" - அவன் குரலில் சிறிது ஏளனம் ஒலித்தது. "பாவம்! தனபாக்கியத்துக்கு இது பெரிய சோதனை..." அவனுக்கு அவர் மேலும் இப்படிக் கூறியது இன்னும் புரியவில்லை. "மதுரத்துக்கு இனிமே தகப்பனார் இல்லே..." "நீங்க என்ன சொல்றீங்க பத்தரே?" "நான் சொல்றது புரியலீங்களா தம்பீ?" "புரியும்படியாக நீங்க சொன்னால் தானே?" "நம்ம மதுரம், ஜமீந்தார்கிட்ட தனபாக்கியத்துக்குப் பிறந்த பொண்ணு, நாகமங்கலத்தார் தான் அதுக்கு அப்பா! - ஜமீந்தார் இதை அதிகமாக வெளியிலே சொல்லிக்கிறதில்லே! ஆனால், தன் மகள்ங்கிற முறையிலே மதுரத்துக்கிட்ட அவருக்குக் கொள்ளை வாஞ்சை..." அதுவரை ஜமீந்தாரைப் பற்றி தான் நினைத்திருந்த நினைப்புக்களுக்காக மனம் கூசி, என்ன பதில் பேசுவதென்றே தெரியாமல் இருந்தான், ராஜாராமன். பயத்தாலோ, வெட்கத்தாலோ மதுரம் தன்னிடம் ஜமீந்தாரைப் பற்றிப் பேசிய சமயங்களில் கூட, அவரைத் தன் தந்தை என்று தெரிவிக்காமல் விட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. "மனுஷன் போயிட்டாலும் தன்னோட உயில்லே முறையா ஜமீந்தாரிணிக்குப் பிறந்த வாரிசுகளைவிட அதிகமாகவே மதுரத்துக்கு வேண்டியது எழுதி வச்சிட்டுப் போயிருக்கிறாருங்க..." "இதை ஏன் இது வரை நீங்க எங்கிட்டச் சொல்லலே?" "எப்படிச் சொல்றதுன்னு தெரியலே; அதுனாலே சொல்லலே. சொல்ல அவசியமும் ஏற்படலை; ஜமீந்தாரோட முகஜாடையை நீங்கள் மதுரத்துக்கிட்டப் பார்த்திருப்பீங்கன்னு நெனச்சேன்..." "....." "மதுரம் கூட உங்ககிட்டச் சொல்லலியா தம்பீ!" "என்ன கேள்வி கேட்கிறீங்க பத்தரே! அம்மாவுக்குப் புருஷன் யாருன்னு மகள் எப்படிக் கூச்சமில்லாமல் பேச முடியும்?" "ஏன் இதுலே தப்பொண்ணுமில்லீங்களே?" ராஜாராமனுக்கு மனம் லேசாகி விட்டாற் போலிருந்தது. மகள் பெயருக்கு அபிஷேகம் செய்ய வந்த தந்தையைப் போல் அந்த நாகமங்கலம் ஜமீந்தார் கோவிலில் அன்று அமர்ந்திருந்த காட்சியை மீண்டும் நினைவு கூற முயன்றான் அவன்! தன்னுடைய மனம் சில வேளைகளில் செய்துவிட்ட தப்பான அநுமானங்களுக்காக இப்போது தனக்குத் தானே வெட்கப்பட்டான் ராஜாராமன். மதுரத்தை உடனே பார்க்க வேண்டும் போல் இப்போது பிரியம் பொங்கியது அவனுள். சேற்றில் தாமரைப் பூவாக அவனுள் அவள் நிரூபணம் பெற்றுவிட்டாள். அந்த நிரூபணம் அவன் அன்பைத் தாகமாகவே மாற்றியது. அவன் அவளைக் காணத் தவித்தான். 'எல்லையிலாததோர் காட்டில் நள்ளிருளென்றும் ஒளியென்றும்' - என்ற வரிகள் அவனுக்கு நினைவு வந்தன. அந்தக் குரல் இப்போது புரிந்தது. அது யாருடையது என்றும் தெரிந்தது. மதுரத்துக்குத் தன்னுடைய ஆறுதல்களைத் தெரிவிக்கும்படி அவன் பத்தரிடம் கூறி அனுப்பினான். ***** மறு மாதம் அவன் விடுதலையாகிற தினத்தன்று, அவனை அழைத்துக் கொண்டு போக முத்திருளப்பனும், பத்தரும் கடலூர் வந்திருந்த போது, மதுரமே ஒரு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாள். அவன் பத்தரிடம் கூறியனுப்பியிருந்த வார்த்தைகள் தனக்கு மிகவும் ஆறுதலளித்ததாக அவள் எழுதியிருந்தாள். 'என்னை வாஞ்சையோடு வளர்த்தது மட்டுமின்றி, என் வீணையின் முதல் இரசிகராகவும் இருந்த அப்பா காலமாகி விட்டது என்னைப் பெரிதும் கலங்கச் செய்துவிட்டது' - என்று அவள் தன் தந்தையின் மரணத்தைப் பற்றி அந்தக் கடிதத்தில் மனம் உருகி எழுதியிருந்த வரிகள் அவன் இதயத்தை தாக்கின. சிறுவயதிலிருந்து ஜமீந்தார் தன்னைச் செல்லப் பெண்ணாக வளர்த்த பெருமைகளை, ஒவ்வொன்றாக அந்தக் கடிதத்தில் அவள் கூறியிருந்தாள். உடன் வந்த பத்தரோடும், முத்திருளப்பனோடும் கடலூரிலிருந்து நேரே மதுரை போகாமல் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டை சென்றான் ராஜாராமன். பிருகதீஸ்வரனுடன் இரண்டு நாள் தங்கிவிட்டு, அப்புறம் அங்கிருந்து மதுரை புறப்பட்டார்கள் அவர்கள். அந்த முறை அவரோடு தங்கியிருந்தபோது, பிருகதீஸ்வரன் வ.வே.சு. அய்யரின் சேரமாதேவி குருகுலத்தைப் பற்றி நிறையச் சொன்னார். "மிக உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட சேரமாதேவி 'பாரத்வாஜ ஆசிரமம்' அபவாதத்துக்கு ஆளாகி மறைந்துவிட்டது. பாரதப் பண்பாட்டிலும், தேச பக்தியிலும் சிறந்த தீரராகிய வ.வே.சு. ஐய்யர், ஊரின் சூழலினாலும் உடனிருந்த சிலரின் தேவையற்ற அளவு கடந்த ஆசாரப் பிடிப்பினாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால், தமிழ்நாட்டிலும் ஒரு ஞானத் தபோவனம் உருவாக முடியாமல் போயிற்று. மறுபடியும் ஒரு பெரிய ஆசிரமம் தோன்ற வேண்டும். சேரமாதேவி குருகுலத்துக்கு ஏற்பட்டது போன்ற அபவாதம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தெளிவான நோக்கத்துடன் சாதிபேதமற்ற அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் உயர வழி வகுக்கும் திட்டங்களுடனும், காந்திய இலட்சியங்களுடனும் ஓர் அருமையான குருகுலம் ஆரம்பிக்க வேண்டும். பயிற்சித் திட்டங்களும், சுதேசி மனப்பான்மையை வளர்க்கும் நாட்டுப்புற ஆசிரம வாழ்வும் இல்லாமல் வேகமாக நாட்டைத் திருத்த முடியாது. மனிதர்கள் ஒரே சாதி. அவர்களில் ஏற்றத் தாழ்வு இல்லை என்ற உணர்வைக் கலந்து பழகும் பண்பாடுகளால்தான் நடைமுறைக்குக் கொண்டு வரமுடியும்" - என்றார் பிருகதீஸ்வரன். அவர் விவரித்துச் சொல்லிய விதத்திலும், எடுத்துக் காட்டிய பழைய 'பால பாரதி' இதழ்களைப் படித்ததிலிருந்தும் ஒரு தேசிய சமூக ஞானபீடம் வேண்டும் என்ற ஆசை ராஜாராமனுக்கும் ஏற்பட்டது. அவன் மனத்தில் வித்தூன்றினாற் போல் அழுத்தமாகப் பதியும்படி அந்தக் கருத்தை நன்றாக எடுத்துச் சொல்லியிருந்தார் பிருகதீஸ்வரன். "இங்கே புதுக்கோட்டைச் சீமையில் இடமோ, அதற்கு வேண்டிய பொருளுதவியோ எனக்குக் கிடைக்கவில்லை. ராஜாராமன்! நகரச் சூழலிலிருந்து விலகிய இடமும், கொஞ்சம் பொருள் வசதியும் கிடைத்தால் நானே அப்படி ஒரு குருகுலத்தைத் தொடங்கி விடுவேன். இன்று என்னுடைய ஆசையெல்லாம் அதில் தான் இருக்கிறது. செயல் திட்டத்தோடு கூடிய அமைப்பு இல்லாமல் நாம் காணும் புதிய பாரத சமூகத்தை உருவாக்க முடியாது. இயக்கங்கள் நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கலாம். சமூகப் பழக்க வழக்கங்களிலுள்ள அடிமைத்தனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் விடுதலை பெற இப்படி அமைப்புக்கள் நாடெங்கும் அவசியம். நாளை இந்தியாவை இவை தான் காக்க முடியும்," என்றார் அவர். காந்தி மகானின் சபர்மதி ஆசிரமத்தின் தன்மையும், சேரமாதேவி குருகுலத்தின் இலட்சியமும் சாந்தி நிகேதனத்தின் அழகும் பொருந்திய ஒரு புது அமைப்பை அவர் விரும்பினார். புதுக்கோட்டையிலிருந்து விடை பெறும் போது பிரிய மனமில்லாமலே பிரிந்தார்கள் அவர்கள். மதுரை திரும்பியதும் ராஜாராமன் மதுரம் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஏதோ காய்ச்சலில் விழுந்து - பிழைத்து எழுந்தவள் போல இளைத்து வாடியிருந்தாள் அவள். தனபாக்கியம் வெள்ளைப்புடவையும் நெற்றியில் திருநீறுமாகக் கோலம் மாறியிருந்ததையும் அவன் கவனித்தான். என்னென்னவோ தப்புத் தப்பாக நினைத்திருந்த பழைய நினைவுகளுக்காக அவன் மனம் கூசியது. திரும்பத் திரும்பத் தெரிவதையும், ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்ததையும் சேர்த்து நினைத்த போதெல்லாம் அவன் மனம் கூசியது. அவன் மதுரத்துக்கு நிறைய ஆறுதல் சொல்லித் தேற்றினான். நாகமங்கலத்தாரைப் பற்றி அவன் துக்கம் கேட்கத் தொடங்கியபோதே அவள் சிறு குழந்தை போல் விசும்பி விசும்பி அழத் தொடங்கிவிட்டாள். தந்தையின் மேல் அவளுக்கிருந்த பாசம் அவனை வியக்கச் செய்தது. ஜமீந்தாரின் பெருந்தன்மையைப் பற்றி அவள் சம்பவம், சம்பவமாகச் சொல்லி அழுதாள். தம்முடைய சொந்த மனைவி வயிற்றுப் பிள்ளைகளைப் போலவும் அதைவிட அதிகக் கனிவுடனும் தன்னை அவர் பேணி வளர்த்ததை எல்லாம் அவள் கூறக்கேட்டுக் கேட்டு, அவர் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஆள் என்ற எண்ணமும், மாற்சரியமும் மெல்ல மறைந்து 'பெருந்தன்மையான ஒரு மனிதர்' என்ற எண்ணம் மட்டுமே தோன்றி அமைதி பெற்றது அவன் மனத்தில். போகப் பொருளாகக் கிடைத்த ஒருத்தியை அப்படியே ஒதுக்கிவிடாமல் - அவளையும் மனைவியாக நடத்தி அவள் மகளையும் வாஞ்சையோடு மகளாகப் பாவித்த பெருந்தன்மைக்காக 'மனசாட்சியுள்ள மனிதர்' - என்ற அளவு அவன் இதயத்தில் புதுப்பார்வை பெற்றார் நாகமங்கலத்தார். சமூகத்துக்குப் பயந்து அந்தரங்கமாக இருந்தாலும், இந்த உறவுக்கும் பாசத்துக்கும் அவர் போலித் திரையிட்டு மனத்திலிருந்தே மூடவில்லை என்பது ராஜாராமனுக்குப் பெரிய காரியங்களாகத் தோன்றின. ***** ராஜாராமன் விடுதலை பெற்று வந்த பின் திலகர் தேசிய வாசகசாலை நண்பர்கள் கதர்ப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்கள். தெருத் தெருவாகக் கிராமம் கிராமமாகப் பாரதி பாடல்கள் முழங்கின. கதர் விற்பனை துரிதமடைந்தது. வந்தே மாதர கீதம் வளர்ந்தது. எங்கும் ராட்டை நூற்பவர்கள் பெருகினார்கள். இந்த நல்ல சமயத்தில் மறுபடியும், தங்கள் வட்டாரத்துத் தேசத் தொண்டர்களைச் சிறைக்கு அனுப்புவதற்காக ஜோடிக்கப்பட்ட சதிவழக்கு ஒன்றை ராஜாராமனும், நண்பர்களும், எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விருதுப்பட்டி தபாலாபீஸ் மீதும் ஸ்ரீ வில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் மீதும் வெடிகுண்டு எறிந்து தகர்க்க முயன்றதாக உண்மைத் தேசத் தொண்டர்களான காமராஜ் நாடார், கே. அருணாச்சலம், கே.எஸ். முத்துசாமி ஆசாரி, மீசலூர் நாராயணசாமி, விருதுபட்டி மாரியப்பா ஆகியவர்கள் மேல் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றை ராமநாதபுரம் போலீசார் தொடர்ந்தார்கள். வேலூர் சிறையில் ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த காமராஜ் போன்ற சத்தியாக்கிரகிகளை மீண்டும் நீண்ட காலம் வெளியே வரவிட முடியாமற் செய்ய முயன்ற இந்தப் பொய் வழக்கை வக்கீல் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் உதவியால் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு முறியடித்தார்கள் ராஜாராமனும், நண்பர்களும். இந்த வழக்கின் மூலம் மதுரை ராமநாதபுரம் சீமையின் பல அருமையான தேசபக்தர்களின் வாழ்வையே ஒடுக்கிவிட முயன்ற அரசாங்கத்தின் சதி தவிடுபொடியானது. இந்த வழக்கில் வெற்றி பெற அல்லும் பகலும் அன்ன ஆகாரக் கவலையின்றி ராஜாராமனும், முத்திருளப்பனும், நண்பர்களும் அலைந்தார்கள். நாளாக நாளாகத் திலகர் தேசிய வாசகசாலையின் தொண்டர்கள் எண்ணிக்கை பெருகியது. ராஜாராமன் ஓர் இளம் தேசியவாதிகளின் அணிக்கு வழி நடத்தும் பொறுப்பை ஏற்றான். இயக்கம் மெல்ல மெல்லப் பலமடைந்து கொண்டு வந்தது. அந்த வருடம் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு 'காந்தி' என்று பெயர் சூட்டினார் முத்திருளப்பன். அதே சமயம் ரத்தினவேல் பத்தருக்கு ஒரு பேரன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல பெயர் சொல்லும்படி ராஜாராமனைக் கேட்டார் பத்தர். ராஜாராமன் 'சித்தரஞ்சன்' என்று பத்தரின் பேரனுக்குப் பெயர் சூட்டினான். திலகர் தேசிய வாசகசாலையின் செலவுகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கும் செலவு, கஷ்டப்படும் தேசத் தொண்டர் குடும்பங்களுக்கு உதவி என்று எல்லாச் செலவுகளுக்கும் பொக்கிஷதாரராக அமைந்தது போல் முகங்கோணாமல் கொடுத்தாள் மதுரம். ஜமீந்தார் இறந்த வருஷம் முழுவதும் கச்சேரிக்கோ, மேடையில் பாடவோ ஒப்புக் கொள்ளாமல் துக்கம் கொண்டாடினாள் அவள். தனபாக்கியம் வெளியே நடமாடுவதையே நிறுத்தியிருந்தாள். குடும்பத்தை விட விசுவாசமாக அவர்கள் நாகமங்கலத்தாரைப் பாவித்த அந்த உண்மை அன்பு ராஜாராமனைக் கவர்ந்தது. ஜமீந்தாருடைய மனைவி மக்கள் கூட அந்தத் துக்கத்தை இவ்வளவு சிரத்தையோடு அநுஷ்டித்திருப்பார்களா என்பது சந்தேகமாயிருந்தது. மனித சமூகம் நீண்ட நாளாக யாருக்கு உண்மை நன்றி செலுத்தவில்லையோ, அவர்களிடம் நிரம்பிக் கிடக்கும் சத்தியமான அன்பின் இறுக்கத்தைக் கண்டு ராஜாராமனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மனிதர்கள் யாருடைய அன்பு பணத்துக்காக மட்டுமே கிடைக்குமென்று நினைக்கிறார்களோ அவர்களிடம் பணத்தைக் கொண்டு அளவிட முடியாத பிரியம் சுமந்து கிடப்பதை அவன் கண்டான். யாருடைய மனங்கள் நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான். ஜமீந்தாருடைய பிறந்த நாளை நினைவு வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது முதல், அவர் இறந்த தேதியில் விரத நியமங்களோடு திதி கொடுப்பதுவரை தனபாக்கியமும், மதுரமும் காட்டிய அக்கறை அவனை மலைக்கச் செய்தது. அன்பைக் கலையாகவே, சங்கீதம் போல், நிருத்தியம் போல் போற்றி வளர்க்கும் நாகரிகம் இவர்கள் குலதனம் போலிருக்கிறது என்றே அவன் எண்ணினான். ஜமீந்தார் தனபாக்கியத்துக்கு ஊரறிய தாலி கட்டவில்லை. ஆனால், தனபாக்கியமோ அதைச் சிறுமையாக எண்ணியதாகவே தெரியவில்லை. இது மிக மிக விநோதமாயிருந்தது அவனுக்கு. அந்தக் குடும்பத்தின் மேல், குடும்பமாக உலகம் கருதாத வீட்டின் மேல் எல்லையற்ற பரிவு ஏற்பட்டது அவன் மனத்தில். அவர்களுடைய விளம்பரம் பெறாத பண்பாடு அவ்னைக் கருத்தூன்றிக் கவனிக்கச் செய்தது. உயர்ந்த சாதிக் குடும்பங்களில் இருப்பதை விட சுத்தத்தில் அக்கறை, தேவதைகளைவிட அழகு, கந்தர்வர்களை விடக் கலையில் சிரத்தை, பிராமணர்களை விட விரதங்களில் பற்று, மேதைகளை விட அதிகமான குறிப்பறியும் நாகரிகம், படித்தவர்களைவிட இங்கிதம் இவை எல்லாம் ஒரு தாசியின் வீட்டில் இருப்பதைக் கண்டு அவன் சொல்ல முடியாத வியப்பில் மூழ்கினான். 'இது இவர்கள் குலதனம்' - என்று அவன் மனம் இடையறாது கூவியது. 'பரிசுத்தமான அன்புதான் இவளுடைய முதல் சங்கீதம். இவள் வாசிக்கும் சங்கீதமோ அதே அன்பின் இன்னொரு வெளியீடு' - என்று மதுரத்தைப் பற்றி அவன் எண்ணினான். அவள் பாடும் சங்கீதத்தில் மட்டுமல்ல, பேசும் சங்கீதத்திலும் அபஸ்வரமே வராமலிருப்பதை அவன் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்தான். ஜமீந்தார் காலமான பின்போ மதுரம் படிப்படியாகத் தன்னிடமிருந்த பட்டுப் புடவைகளை உபயோகிப்பதையே விட்டுவிட்டாள். அவளிடம் மிக மிக எளிமையான கதர்ப் புடவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவன் ஒரு நாள் அவளைக் கேட்டான். "என்ன மதுரம், பட்டுப்புடவை ஆசையை அறவே விட்டாச்சுப் போலிருக்கே!" "எப்பவும் எனக்கு அந்த ஆசையே இல்லை? அப்பா பட்டுப் புடவையா வாங்கிக் குமிச்சார். அரண்மனைக்குப் பட்டுப்புடவை வாங்கினா ஞாபகமா இங்கேயும் சேர்த்து வாங்குவார். கட்டிக்காவிட்டால் அவர் மனசு புண்படுமேன்னு கட்டிண்டிருந்தேன். இனிமே அது கூட அவசியமில்லே..." "ஏன்? இனிமே பட்டுப்புடவை கிடைக்காதோ?" "சந்தேகமென்ன? உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க? நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும்?" "உனக்கு வேணும்னாப் பட்டுப்புடவையே வாங்கிக்கலாமே?" "அப்படியில்லை! தனியா எனக்குப் பிரியம்னு எதுவுமே கிடையாது. உங்களுக்கு எது பிரியமோ அதுதான் எனக்குப் பிரியம்..." மனத்தின் ஆழத்திலிருந்து பிறந்த அவளுடைய இந்தச் சொற்கள் ராஜாராமனைப் பெருமைப்பட வைத்தன. அவள் இசைக்க முடிந்த ராகங்களில் மிக உயர்ந்த ராகமாக இந்தச் சொற்கள் அவன் செவிகளில் ஒலித்தன. இந்த வார்த்தைகள் அவனைக் கிறங்கவே செய்தன. முரட்டுத்தனமும், இங்கிதமும், நளினமும், நாசூக்கும், நாகரிகமும் தெரியாத பல ஜமீந்தார்களும், செல்வக் குடும்பத்து இளைஞர்களும் அவற்றை முதல் முதலாக தாசிகளின் வீடுகளிலிருந்துதான் இப்படிப்பட்ட நளினவதிகளிடம் கற்றுக் கொள்கிறார்களோ என்று கூட அவன் அடிக்கடி நினைக்கத் தொடங்கியிருந்தான். 'சங்கீதமும், கலைகளும் தான் மனிதனை நாகரிகமடையச் செய்கின்றன' என்று கூறுவது உண்டு. ஆனால், குரூரமான மனிதர்களாகிய பல செல்வந்தர்கள் கருணை, அன்பு, இங்கிதம் போன்ற கனிவான அம்சங்களையே கலையை ஆளும் அழகின் கிருஹங்களில்தான் படித்துத் தேறுகிறார்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அவனுள் வலுத்தது. நாகமங்கலம் ஜமீந்தாரின் பட்டமகிஷி அவரைக் கணவனாகவும் கனவானாகவும் வேண்டுமானால் ஆக்கியிருக்கலாம். ஆனால், மதுரை ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் தனபாக்கியத்தின் நட்பு கிடைத்த பிறகே, அவர் மனிதராக நாகரிகம் அடைந்திருக்க முடியுமென்று அவனுக்குப் புதிதாக ஒரு கருத்துத் தோன்றியது. ஜப்பானிய கெய்ஷாக்களைப் பற்றி இப்படிக் கூறும் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை அவன் படித்திருந்தான். கெய்ஷாக்களைப் போலவே தமிழ்நாட்டுத் தேவதாசிகளிடம் அந்தப் பண்பு நிறைந்திருப்பது அவனுக்குப் புரிந்தது. 'மிருச்ச கடிக'த்தில் சாருதத்தனுக்குக் கிடைத்த சுகம் அன்பின் சுகமாகத்தான் இருக்க வேண்டும். வஸந்தசேனையின் நாகரிகம், கலை நாகரிகத்தின் மிக உயர்ந்த எல்லையாக அவனுக்குத் தோன்றியது. இவர்கள் மிருகங்களை மனிதர்களாக்குகிறார்கள்! மனிதர்களைத் தெய்வங்களாக்குகிறார்கள்!" என்று எண்ணிய போது மிக மிக விநோதமாக வளர்ந்தது அந்தச் சிந்தனை. வேட்டையிலும், குடியிலும், மல்யுத்தத்திலும் போதையேறிக் கிடந்த நாகமங்கலம் ஜமீந்தாரைத் தனபாக்கியம் மனிதனாக்கிச் சங்கீத ரசிகராக மாற்றி விட்டாள். தனபாக்கியத்தின் மகளோ வெறும் மனிதனாகிய என்னைத் தன்னுடைய பக்தியால் தெய்வமாகவே ஆக்க முயல்கிறாள். என்னையே எண்ணி உருகி உருகித் 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று பாடுகிறாள். மனிதனைப் பக்தி செய்த உடம்பை இழப்பதன் மூலம் தெய்வத்தைப் பக்தி செய்யும் தத்துவத்துக்கு உலகத்தைப் பழக்கும் உபாசனா மார்க்கங்களில் ஒன்றாகவே தொடக்கத்தில் இந்தத் துறை தோன்றியதோ என்றெல்லாம் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கியபோது அவன் மனத்திலிருந்த பல பழைய மாற்சரியங்களை அந்தச் சிந்தனை போக்கி விட்டது. |