8 அந்தச் சூழ்நிலை பொறுக்காமல் சுமதிக்கு குமட் டிக் கொண்டு வந்தது. மேரி அவளை வற்புறுத்தி அங்கே ஒரு நாற்காலியில் பிடித்துத் தள்ளி உட்கார வைத்து விட்டுப் போய்விட்டாள். அங்கே அக்கம்பக்கத்தில் சில மேஜைகளில் ஒரு தினுசாகத் தெரிந்த பெண்கள் சிலர் ஆண்களோடு சிரித்துப் பேசிக் கும்மாளம் அடித்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாடும்போதே அந்தப் பெண்கள் வரம்பு மீறி ஆண்களைத் தொடுவதும், ஆண்கள் அவர்களைத் தொடுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. சிரிப்பொலியும், எக்காளமிடும் குரல்களும், அரட்டைச் சொற்களுமாக அங்கே சுற்றிலும் கேட்டுக் கொண்டி ருந்தன. மது, சிகரெட் புகை நெடி வேறு. மேரி அவளை உள்ளே கொண்டு வந்து விட்டுப் போனவள்தான், அப்புறம் திரும்பவில்லை, சுமதி மருண்டு போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தாள். எல்லாக் கண்களும் அவளையே நோக்கி வெறித்தபடி இருந்தன. அதற்குள் அவள் எந்த நாற்காலியில் அமர்ந்திருந் தாளோ அந்த நாற்காலிக்குரிய மேஜையைச் சுற்றி வேறு நாற்காலிகளில் அமர்ந்த ஆண்களில் ஒருவர், “கமான் டார்லிங் ! ஆட்டத்தைத் தொடங்கலாமா?” என்று சீட்டுக்கட்டை கலைக்கத் தொடங்கியிருந்தார். சுமதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண் டது. பதில் சொல்லலாம் என்றால் தொண்டைக் குழியை ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. வாய் விட்டுப் பேச வரவில்லை. அடுத்த கணமே சுற்றி இருப்பவர்கள் என்ன நினைத் துக் கொண்டாலும் பரவாயில்லை என்று தட்டுத் தடுமாறி எழுந்திருந்து ஓட்டமும் நடையும் கலந்த ஓர் அவசரத்தில் அங்கிருந்து வெளியேறினாள் சுமதி. அவளுடைய நல்ல காலமோ என்னவோ வெளியே அப்போதுதான் யாரோ ஒருவர் டாக்சியில் வந்து இறங்கி மீட்டரில் தொகை கணக்குப் பார்த்து அதை ‘டிஸ்போஸ்’ செய்து கொண்டிருந்தார். வெளியே ஓடிவந்த சுமதி பின்புறம் கட்டிடத்தின் ஏதோ ஒரு ஜன்னல் வழியாக மேரியின் குரல் தன்னை இரைந்து கத்திக் கூப்பிடுவதையும் பொருட்படுத்தாமல் டாக்சிக் கதவைத் திறந்து அதற்குள் ஏறிக் கதவைப் படிரென்று அடைத்துக் கொண்டாள். டாக்சி டிரைவர் மீட்டரைத் தூக்கி மறுபடி சாய்த்து விட்டு, வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டு, “எங்கே போகணும்மா” என்று கேட்டுக் கொண்டே ஸ்டார்ட் செய்தான். நல்லவேளை, அவன் மறுக்கவில்லை. வேகமாகப் படபடத்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் தன்னுடைய கல்லூரி விடுதி இருந்த சாலையின் பெயரைச் சொன்னாள் சுமதி. தன் குரல் என்னவோ மாதிரி இருப்பதை அவள்தானே அப்போது உணர்ந்தாள்.
“மேலே ஒரு ரூபாய் போட்டுக் குடுத்துடும்மா” என்றான் டாக்சி டிரைவர். அவள் பதில் சொல்ல வில்லை. அந்த மவுனத்தை அவளுடைய சம்மதமாக அவன் எடுத்துக் கொண்டான். டாக்சி விரைந்து ஓடத் தொடங்கியது.
டாக்ஸி சிறிது தொலைவு விரைந்து பின் பிரதான சாலையில் திரும்பிக் கிண்டி தொழிற்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோதுதான் சுமதிக்குத் தான் செய்தது சரியா தவறா என்பது போன்ற கேள்வியே மனத்தில் எழுந்தது. ‘சினிமாவில் நடிக்கச் சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று தன்னை எங்கேயோ இழுத்துவந்து சீரழிப்பதற்கு மேரி முயல்கிறாள்’ என்று ஒரு கணமும் ‘மேரியின் மேல் என்ன தவறு? அவள் நாலைந்து தயாரிப்பாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதற்குள்ளேயே நான் பயந்து போய் என்னவோ ஏதோ என்ற நினைத்துக்கொண்டு ஓடிவந்து விட்டால் அது மேரியின் தவறா?’ என்று மற்றொரு கணமும் மாறி மாறித் தோன்றியது. சுமதியின் மனத்தில் தான் பதற்றத்தின் காரணமாக அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட இப்போது அவளுக்குத் தோன்றலாயிற்று. அந்த ஆட்களிடம் சீட்டு விளையாட ஆரம்பித்து அவர்கள் கையைக் காலைப் பிடித்து இழுப்பதற்கு முன்னர் வெளியே தப்பி ஓடிவந்தது நல்லதுதான் என்பது போலவும் ஓரொரு சமயம் தோன்றியது. பல விதமாக நினைத்தாள் அவள். சிந்தனை தறிகெட்டு ஓடியது. டாக்ஸியை ஹாஸ்டல் மெயின் கேட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு விடுதி அறைக்கு நடந்து போய்ப் பணம் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து மீட்டர்படியும் அதற்குமேல் ஒரு ரூபாயும் கொடுத்தாள் சுமதி. அன்றிரவு பலவிதமான சிந்தனைகளால் சுமதிக்கு நெடுநேரம் உறக்கம் வரவில்லை. பயமும், திகைப்பும், குழப்பமும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தன. மறுநாள் காலையில் மேரி வகுப்புக்கு வரவில்லை. சுமதி அரை நாள் லீவு கேட்டு வாங்கியபின் யாரிடமும் சொல்லாமல் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் ஏறிக் கோடம்பாக்கம் சென்றாள். அவள் கைப் பையில் புது முகங்களை நடிக்க வைப்பதாக விளம்பரப்படுத்திய பாலன் நாடகக் குழுவின் கடிதம் இருந்தது. வெளியூரில் பெற்றோர் உள்ள மாணவிகளுக்குக் கார்டியன் என்று யாராவது உள்ளூர் உறவினரைப் போட்டுக் கொண்டு அவர் கையெழுத்திருந்தால் லீவு, வெளியே போக அனுமதி எல்லாம் வாங்கி விடலாம். சுமதிக்குச் சென்னையில் ஓர் அத்தையைத் தவிர உறவினர் என்று யாரும் அதிகம் இல்லாததால் வார்டன் மாலதி சந்திரசேகரனே கார்டியனாக இருந்தாள். ஆகவே அனுமதிகள் மிகச் சுலபமாகக் கிடைத்தன. தான் பணம் எம்.ஓ. செய்து நடிப்பதற்கு மனுப்போட்ட திட்டத்தை விட்டுவிட்டு மேரியின் மூலம் முயன்றதால் தானே இந்த வம்பெல்லாம் வந்தது? தாம் எம்.ஓ. செய்து விண்ணப்பித்த இடத்திலேயே போய்க் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு சுமதி ஒர் ஆவேச வெறியுடன் புறப்பட்டிருந்தாள். நடந்தே போனால் மதிப்பார்களோ, மதிக்கமாட்டார்களோ, அது எப்படிப்பட்ட இடமோ என்று தயங்கி வடபழனி பஸ் ஸ்டாண்டு வரை பஸ்சில் போய் அங்கே இறங்கி ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு போனாள் சுமதி. அந்த இடம் வடபழனியிலிருந்து மிகவும் பக்கத்தில்தான் இருந் தது. டாக்சியை ‘வெயிட்டிங்’கில் வைத்துக் கொண்டே விசாரித்தாள் அவள். அந்தக் கட்டிடத்தில் பாத்ரும் அளவு சிறியதாயிருந்த ஒர் அறையைச் சுட்டிக் காட்டி “நேத்து வரை யாரோ இருந்தாங்கம்மா. நேத்துச் சாயங் காலமாத்தான் வாடகை கணக்கைத் தீர்த்துக் காலி பண்ணினாங்க” என்றார் கட்டிடச் சொந்தக்காரர். சுமதி விவரங்களைச் சொல்லி விசாரித்தாள். “தினம் நூறு நூறு ரூபாய் மணியார்டரா ஆயிரம் இரண்டாயிரம்னு பத்துப் பன்னிரண்டு நாளா வந்திச்சு. வாங்கினாங்க. பணமெல்லாம் வந்ததும் காலி பண்ணிட் டாங்க...” என்று கர்மயோகியைப் போல் பட்டுக் கொள்ளாமல் பதில் சொன்னார் கட்டிடச் சொந்தக் காரர். சுமதி மேலும் எதற்கோ தயங்கி நின்றபோது, “எங்களுக்கு வாடகை ஒழுங்காகக் குடுக்குறாங்களா இல்லையான்னுதான் நாங்க பார்ப்போமே ஒழிய டெனன்ட்ஸ் என்ன மாதிரி பிஸினஸ் பண்றாங்கன்னு பார்க்கிறது எங்க வேலையில்லை. உங்களை மாதிரி விவரந் தெரிஞ்சவங்க இப்படி விளம்பரத்தை எல்லாம் நம்பிப் பணம் அனுப்பலாமா?” என்று கேட்டார் அவர். சுமதி தொடர்ந்தாள். “அவங்களுக்கு டெலிஃபோன் கூட இருந்திச்சே?” “டெலி ஃபோனாவது ஒண்ணாவது? எங்க டெலிஃபோன் நம்பரை அவங்க லெட்டர் ஹெட்லே அச்சடிச்சுக்கிட்டாங்க, அவ்வளவுதான்.” சுமதி ஏமாற்றத்தோடு போஸ்ட் ஆபீசுக்குப் போய்த் தபால் பெட்டி எண்ணைச் சொல்லி விசாரித்தாள். அவர்கள் சற்றுமுன் அவள் போய்த் தேடிட்டு வந்த அதே விலாசத்தை அவளிடம் குறித்துக் கொடுத்தார்கள். பொறுப்பான பதில் எங்கிருந்தும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மணியார்டர் ரசீதை வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் மணியார்டர் ரசீதையும் தந்திரமாக விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள் அவர்கள். பத்து இருபது ரூபாய் டாக்ஸிக்குச் செலவானது தான் மிச்சம். கெட்ட சொப்பனம் கண்டதுபோல் அதை மறந்துவிட முயன்றாள் சுமதி. ஆனால் மறக்கவும் முடியவில்லை. ஏமாந்து விட்டோம் என்பது ஞாபகம் இருந்தது. ‘பணம் கொடுத்து மயக்கி அழைத்துச் சென்று சினிமாவில் சேர்த்து விடுகிறேன்’ என்று சொல்லும் மேரி ஒரு புறமும், பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டவர்கள் மற்றொரு புறமும் சுமதியின் மனத்தைக் குழப்பினர். இரண்டு நாள் கழித்து மேரி அவளைக் கல்லூரியில் சந்தித்தபோது அவளுடைய செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டாள். “ரெண்டு பெரிய மனுஷாளுக்கு இண் ரொட்டியூஸ் பண்றப்பவே பயந்துகிட்டு ஓடியாந்துட்டா அப்புறம் நீ எப்படி ஸ்டார் ஆறது?” சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை, மேரியும் அவள் மேல் நம்பிக்கை இழந்து அவளை விட்டுவிடத் தயாரில்லை. சுமதிக்கு அட்வைஸ் செய்தாள். “நீ ரொம்ப சேஞ்ஜ் ஆகணும். அடுத்தவங்களை நம்பணும். ஸோஷியலா இருக்கப் பழகணும். இப்போ இருக்கிற இந்தியன் ஸொஸைட்டி ஓரளவுக்குப் ‘பெர்மிஸிவ்’ ஆக இருக்கா விட்டாலும் நீயே கட்டுப்பெட்டியா நடந்துக்கிறியே? இந்த மடிசஞ்சித் தனமெலாம் போனாத் தான் நீ முன்னுக்கு வரலாம்.” மேரிக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் “முதல் இன்ஸ்டால்மெண்ட் ஐம்பது ரூபா ஃபர்ஸ்ட் வீக் தரேன் மேரீ!” என்று ஆரம்பித்த சுமதியைத் தடுத்து, “ஏன் பணம் பணம்னு அதையே ஞாபகப்படுத்திக் கிட்டிருக்கே? எனக்கொண்ணும் பணத்துக்கு அவசரமில்லேடீ சுமதி ! உன் ஃபிரண்ட்ஷிப்தான் பெரிசு. பணம் பெரிசில்லே” என்று மேரி அப்போதும் பணத்தைப் பொருட்படுத்தாமல்தான் பேசினாள். ஒருவாரம் கழித்து ஒருநாள் அதிகாலையில் சுமதிக்கு ஒரு ஃபோன் வந்தது. வார்டன் அறையில் உள்ள டெலிஃ போனில்தான் கூப்பிட்டிருந்தார்கள். போய்ப் பேசினால் எதிர்ப்புறம் அம்மாவின் குரலைக் கேட்டு சுமதிக்கு ஆச்சரியமாகப் போயிற்று. அம்மா சொன்னாள். “நாங்க ஒரு நாலஞ்சு டீச்சர்ஸ் எங்க ஸ்கூல் கேர்ள்ஸை மெட்ராஸ், மைசூர் எல்லாம் எக்ஸ்கர்ஷன் சுத்திக் காட்ட அழைச்சிட்டு வந்திருக்கோம். திடீர்னு நானும் புறப்பட்டேன். உனக்கு முன் தகவல் எழுத முடியலே. நீ எப்படி இருக்கே...? நாங்க மத்தியானம் பெங்களூர் புறப்படனும், இப்போ பதினொரு மணிக்குள்ள நான் அங்கே வரேன், நீ எங்கேயும் வெளியிலே புறப்பட்டுப் போயிடாதே?” “நீங்கள்ளாம் எங்கேம்மா தங்கியிருக்கிங்க?” “இங்கே சிந்தாதிரிப் பேட்டையிலே ஏதோ ஒரு ஸ்கூல்லே தங்கியிருக்கோம்.” “நான் வேணா அங்கே வந்து பார்க்கட்டுமா அம்மா?” “வேண்டாம் ! நானே வரேன். வார்டன் அம்மாளையும் பார்த்தாப்பில இருக்கும். நீ அங்கேயே இரு.” “சரி வா; நான் ரூம்லியே இருக்கேன்” என்ற சொல்லி ஃபோனை வைத்தாள் சுமதி. காலை ஒன்பதரை மணி சுமாருக்குத் தன் அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. வார்டன் கூப்பிடுவதாக வேலைக்காரி வந்து சொன்னாள். சுமதி உடனே அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வார்டனின் இடத்துக்குச் சென்றாள். அங்கே வார்டனின் நாற்காலி காலியாயிருந்தது. எதிர்ப்புறம் வரிசையாகப் போடப்பட்டிருந்த பார்வையாளர் நாற்காலிகள் ஒன்றில் அம்மா உட்கார்ந்து ஏதோ கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். சுமதியைப் பார்த்ததும் அம்மா கடிதத்தை மடித்துத் தன் கைப் பையில் வைத்துக் கொண்டுவிட்டாள். “என்னம்மா? நீ நேரே ரூமுக்கு வராமே இங்கே வந்து உட்கார்ந்து.” “வார்டனைப் பார்த்தேன். அப்படியே உனக்கும் இங்கே இருந்தே சொல்லி அனுப்பினேன்.” “அறைக்கு வாம்மா போகலாம். இங்கே பேசுவானேன்?” “இங்கேதாண்டி பேசணும்! இரு வார்டனும் வந்துடட்டும். எனக்கு இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சாகனும். நீ தொடர்ந்து படிக்கப் போறியா. அல்லது இப்படித்தான் உருப்படாமப் போகப் போறியா?” திடீரென்று அம்மாவின் குரல் கடுமையாக மாறியது. அவள் தன் கைப் பையிலிருந்து அந்தத் தடித்த உறையை எடுத்துப் பிரித்துக் கடிதத்தைச் சுமதியிடம் காட்டினாள். அது பாலன் நாடகக் குழுவுக்கு சுமதி எழுதிய கடிதம். உறையில் விலாசதார் இல்லை என்ற சிவப்புமை அடித்த கோடோடு கல்லூரி விடுதிக்கே அக்கடிதம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. “என்னடி இதெல்லாம்?” சுமதி தலைகுனிந்தாள். தாய்க்கு அவள் பதில் சொல்ல முடியவில்லை. தான் வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமென்று அவளுக்கே தெரிந்தது. “உன்னைப் படிக்கணும்னு மெட்ராஸுக்கு அனுப்பினேனா? இப்படி உருப்படாமப் போறதுக்காக அனுப்பினேனாடி? ஏண்டி இப்படிப் புத்தி கெட்டுப் போச்சு உனக்கு?” சுமதியிடமிருந்து மெளனம்தான் நீடித்தது. வார்டன் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அம்மாவின் குரல் தணிவதாக இல்லை. தொடர்ந்து சூடேறிக் கொண்டே இருந்தது. வார்டன் முன்னாலேயே அம்மா இப்படி ஆரம்பித்துவிட்டாளே என்று கூசினாள் சுமதி. கடிதத்தை வார்டன்தான் அம்மாவிடம் கொடுத்தி ருப்பாள் என்பது நினைவு வரவே வார்டனும் தன்னைக் கை விட்டு விட்டதைச் சுமதி உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் அரும்பியது. |