11. முரசமேடை முடிவுகள் அன்றிரவு நடுயாமத்திற்குச் சற்று முன்பாக இளைய பாண்டியனான சாரகுமாரனும், தேர்ப்பாகன் முடிநாகனும் மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். "போய் வருக! வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார் முதிய பாண்டியர். அவருடைய வாழ்த்தினால் முடிநாகன் பெருமையடைந்து விடவில்லை என்றாலும், தங்களை முழுமையாக உறைத்துப் பார்ப்பதற்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவன் கபாடபுரத்தின் காவல் தெய்வங்களையும், வழிபடு கடவுளர்களையும் மனமார வேண்டிக் கொண்டிருந்தான். செய்ய வேண்டிய சோதனைகளையும், ஒற்றறிதல் வேலைகளையும் அவுணர் வீதியைச் சார்ந்த இடங்களிலும் சுரங்கப் பகுதியிலுமே நிகழ்த்த வேண்டியிருந்ததனால் அவுணர்கள் போன்றதொரு கோலத்தையே அவர்களிருவரும் மாறுவேடமாகப் புனைந்து கொண்டிருந்தனர். கோட்டைப் புறமதில்களைக் கடந்து அவுணர்வீதியை அடைந்தபோது வீதி பேய் அமைதியில் மூழ்கியிருந்தது. வானில் மேகம் கவிந்திருந்ததனால் இருட்டும் அதிகமாக இருந்தது. முரசமேடையைச் சுற்றி யாரும் தென்படவில்லை. சூனியமானதொரு பயங்கர நிலை நிலவியது அங்கே. முடிநாகன் வலது புறமும், இளையபாண்டியன் இடது புறமுமாக முரசமேடையைச் சூழ்ந்து கீழே இறங்குவதற்கான சுரங்க வழி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்கள் மேடையும் பக்கச் சுவர்களும், மேலே மலையைக் கவிழ்த்து நிறுத்தி வைத்தாற் போன்ற மாபெரும் முரசமுமாக இருந்த அந்த இடத்தில் முந்திய இரவு மனிதர்கள் திடீர் திடீர் என்று அங்கு வந்ததுமே முரசடியில் மறைவதைக் கண்ணுக்கெதிரில் கண்டிருந்தும் இன்று அந்த ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள் அவர்கள். அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது பாட்டனார் சிரித்த சிரிப்பும், வாழ்த்திய வாழ்த்தும் நினைவு வந்தன. எதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் அதைப் போல் பெரிய தோல்வி வேறெதுவும் இருக்க முடியாது. நீண்ட நேரம் முரசமேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் வேற்றவர் எவரேனும் சந்தேகக் கண்ணோடு காண நேரிட்டும் விடும். இந்த மனவேதனையில் இருள் வேறு அவர்களுக்கு எதிரியாகி இருந்தது. ஒரு விதத்தில் அந்த இருளே துணையாகவும் இருந்தது. இறுதியில் முடிநாகன் தான் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தான். முரசமேடையின் பக்கச் சுவர்களிலே அவர்கள் தேடிய வழி அகப்படவில்லை. கீழே தரையில் வெண்கலத்தை மிதிப்பது போலத் திமுதிமு வென்று ஒலி அதிரவே முடிநாகன் கையால் கீழே தொட்டுத் தடவிப் பார்த்தபோது மணலுக்கு அடியில் கனமான மரப்பலகை தளமாக இருந்தது. அந்தப் பலகையை ஒவ்வொரு நுனியாகத் தொட்டுப் பார்த்தபோது நடுவில் ஐந்தாறு விரற்கடை இடைவெளியோடு பக்கத்துக்கு ஒன்றாய் இரண்டிடங்களில் மேலே தூக்குவதற்கு வாய்ப்பாக இரும்பு வளையங்கள் இடப்பட்டிருந்தன. பக்கத்தில் மேடையருகே மணற் குவியலொன்றும் நிரந்தரமாக இருந்தது. ஒவ்வொரு முறை திறந்து மூடியபின்பும் அந்த இடம் தரைபோல் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே மணலை இட்டு நிரப்பிவிடுவார்கள் போலும் என்று அநுமானம் செய்ய முடிந்தது. மணலை இட்டு நிரப்பினாலும் தரைமேல் நடக்கும் போது இருக்கும் ஓசைக்கும் இந்த மரப்பலகைக்கு மேல் மணல் மூடிய இடத்தில் நடக்கும்போது இருக்கும் ஓசைக்கும் வேறுபாடு இருந்தது. இதில் நடக்கும்போது ஓசை அதிர்ந்தது.
"வழி தெரிந்துவிட்டது" - என்ற முடிநாகனுடைய காதருகில் உற்சாகமாகக் குரல் கொடுத்தான் சாரகுமாரன்.
"இருளில் மெல்லப் பேச வேண்டும். முடியுமானால் பேசாமலே காரியங்களைத் தொடர்வதும் நல்லது. இந்த விதமான வேளைகளில் மௌனமும் குறிப்பறிதலுமே பெரிய துணைகள். இருளுக்குள் ஆயிரம் செவிகள் இருக்கலாம். பதினாயிரம் கண்கள் இருக்கலாம். எனவே கவனமும் விழிப்புமாகக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும்" - என்று இளையபாண்டியனிடம் மிக மெல்லிய குரலில் காதருகே கூறி எச்சரித்து விட்டு இரும்பு வளையத்தைப் பற்றிப் பலகையைத் தூக்கத் தொடங்கினான். மற்றொரு பக்க வளையத்தைக் குறிப்பறிந்து சாரகுமாரன் மேலே தூக்கலானான். கீழே இருளில் படிகளைப் போல் மங்கலாகத் தெரிந்தன. இருவரும் ஆவலோடு கீழிறங்கினர். பத்துப் படிகள் வரை வழி கீழே இறங்கியது. பதினோறாவது படியே இல்லை. கீழே பாறை இடறியது. பக்கவாட்டில் சுவர்போல் பெரிய கல் வழி மறித்தது. இருள் வேறு செறிந்திருந்தது. எனவே இருவரும் திகிலுடனும், பரபரப்புடனும் மேலே ஏறிவந்து அவசர அவசரமாகப் பலகையிட்டு அந்த வழியை மூடி மணலும் இட்டு நிரப்பினர். அது வழியாக இருக்க முடியாதென்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது. சுரங்கங்களிலும், இரகசிய வழிகளிலும் - மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமலிருப்பதற்கென்று உண்மையான வழியை மறைப்பதற்காக, வழிகள் போன்று தெரியும் ஆனால் வழிகளாகாத பல போலி வழிகளை உண்டாக்கியிருப்பார்கள் என்பதை முடிநாகன் அறிவான். முரசமேடையின் நான்கு பக்கச் சுவர்களில் எந்தச் சுவர் அருகிலும் வழி இருக்கலாம். எந்தச் சுவர் அருகில் - எந்தச் சுவருக்கு கீழேயிருந்து வழி தொடங்குகிறதென்று காண மருளும்படியும் மயங்கும்படியும் - ஒவ்வொரு சுவரருகிலிருந்துமே உண்மையான வழி தொடங்குவது போல் பாவனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஒரு நாழிகைப் போதுக்கு மேல் சோதித்துப் பார்த்த பின்பே உண்மைச் சுரங்க வழி தொடங்குமிடம் தெரிந்தது. தெற்குப் பக்கத்துச் சுவரையொட்டி முரசமேடையின் கீழே உண்மையான படி வழிகள் தொடங்கின. பலகையைத் தூக்கியதும், இரண்டு மூன்று வௌவால்கள் சிறகடித்து மேலே வந்தன. கீழேயும் படிகள் பெரிதாக நீண்டு கிடந்தன. "மற்ற எல்லாப் பக்கமும் மயக்கு வழிகளாயிருந்து விட்டதனால் இதுவே உண்மை வழியாயிருக்க வேண்டும் இளையபாண்டியரே! அடிக்கடி திறந்து மூடுவதால்தான் இதில் வௌவாலாவது உயிர் வாழ்கிறது. மற்ற வழிகளில் இவை கூடப் பறக்கவில்லையே?" என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினான் முடிநாகன். சாரகுமாரனும் அவனைப் பின் தொடர்ந்தான். சிறிது தொலைவு சென்றதும் உண்மை வழி அதுவே என்பது முடிவாயிற்று. "மேலே போய் - உட்புறம் நின்றபடியே பலகையை மூடிவிட வேண்டும். இல்லாவிட்டால் திறந்த வழியைப் பார்த்தே சந்தேகப்பட்டு யாராவது நம்மைப் பின் தொடரக்கூடும்" - என்று கூறிய முடிநாகன் மேலே வந்து உட்புறத்தில் நின்றபடியே பலகையை இழுத்துப் பொருத்தினான். பலகை மேற்புறமும் நன்றாகப் பொருத்திக் கொண்டதற்கு அடையாளமாக உள்ளே இருள் மேலும் கனத்துச் செறிந்தது. தடுக்கி விழாமல் கீழே இறங்கப் படிகளில் கவனமாக அடி பெயர்த்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது உள்ளே வௌவால் நாற்றமும், காற்றுப் புகாத இறுக்கமுமாக இருந்தன. "இந்த முரசமேடையிலிருந்து நகரில் எந்தெந்த பகுதிகளுக்குப் போவதற்கெல்லாம் சுரங்க வழிகள் குடைந்திருக்கிறார்களோ? இந்த அரக்கர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்?" என்று சாரகுமாரன் கூறியபோது, "செய்தால் என்ன? அவர்கள் இரகசியம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அவர்களுக்கு முன்பாகவே உங்கள் பாட்டனார் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார். எதிராளி 'நாம் அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறோம்' - என்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ விடாமல் - அவனைப் பற்றி நிறைய அறிந்து கொண்டு அமைதியாயிருப்பது தான் மிகப் பெரிய அரச தந்திரம். அதில் தங்கள் பாட்டனார் வல்லவராயிருக்கும் போது யார் எது செய்தால் தான் என்ன" என்று திடமாக மறுமொழி கூறினான் முடிநாகன். அந்தச் சுரங்க வழியில் வழிபோகும் திக்கையே குறியாக வைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறியபோது சில இடங்களில் கீழே பாறை போலிருந்தது. இன்னும் சில இடங்களில் மணற்பாங்காயிருந்தது. மேலும் சில பகுதிகளில் கற்படிகளே செதுக்கப்பட்டிருந்தன. 'வழி எங்கே போய் மேலே ஏறுகிறது? எங்கே போய் முடிகிறது?' என்று தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிய காரியமாயில்லை. எப்படியும் பொழுது புலர்வதற்குள் அந்த இருட்குகைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமும் அவசரமும் அவர்களுக்கு இருந்தன. அயலவர்களோ, பிறரோ ஒற்றறியும் எண்ணத்துடனோ, இரகசியங்களை அறிந்து சென்று வெளிப்படுத்தும் எண்ணத்துடனோ - இந்தச் சுரங்கங்களுக்குள் வந்தால் தெளிவாக எதையும் வெளிபடுத்த முடியாது குழப்பமடைய வேண்டும் என்பதற்காகவே, முடிவது போலவும் வெளியேறுவதற்கான வாயில் இருப்பது போலவும் தோன்றுமாறு, முடியாததும் வெளியேறுவதற்கான வாயில் இல்லாததுமான குழப்ப வழிகள் பல அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன. மிகவும் ஆவலோடும், பரபரப்போடும் அருகில் போய் நிற்கும்போதுதான் அதற்கு மேல் அந்த வழி தொடரவில்லை என்பது தெரியவரும். இருளும், காற்று அதிகமின்மையும் இடர் தந்த சூழ்நிலையில் குழப்பம் விளைவிக்கும் போலி வழிகளை ஒவ்வொன்றாகத் தவிர்த்து முன்னேறினார்கள் அவர்கள். "புறநகரிலே எங்காவதொரு பகுதியில் போய் இந்த வழியின் மற்றொரு நுனி முடியுமென்று தோன்றுகிறது!" என்பதாக முடிநாகன் தெரிவித்தான். "நிச்சயமாக எனக்குத் தோன்றுகிறது - இங்கிருந்து வெளியேறிச் செல்லுகிற வழிகள் இரண்டாக இருக்கும். பல காரணங்களை உத்தேசித்து இத்தகைய அந்தரங்கச் சுரங்கங்களில் வெளியேறுகிற வழிகளை மட்டும் இரண்டாக அமைத்திருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது. ஆகையால் இத்தகைய பொய்வழிகளுக்கும் நடுவே எங்கோ இரண்டு உண்மையான வழிகளும் இருக்க வேண்டுமென்பது என் அநுமானம். இந்த இரவு விடிவதற்குள்ளேயே அந்த இரண்டு வழிகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா என்பதை மட்டுமே நாம் சிந்தித்தாக வேண்டும்" என்று சாரகுமாரன் உறுதியாகத் தெரிவித்தான். இன்றே இறுதிவரை முயன்று முடிவு தெரிந்து கொண்டு போவதா, அல்லது நாளை மறுபடியும் மேலே தொடர்வதா? என்பதுபற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு சிறிய விவாதம் மூண்டது. "இப்போது திரும்ப எண்ணினாலும் மீண்டும் வழி தொடங்கிய இடத்தை அடைந்து மேலே முரசமேடைக்குக் கொண்டு போய்விடும் உண்மை வழியைக் கண்டுபிடிக்கச் சில நாழிகைகள் ஆகும். இவ்வளவு நேரம் முயன்ற முயற்சியும் வீண். வந்த வழியே திரும்புவதால் ஒரு பயனுமில்லை. மறுபடியும் நாளைக்குத் தேடத் தொடங்கும்போது - புதிதாகத் தேடுகிறவர்களைப் போலவே முதலிலிருந்து தேட வேண்டும்." "எல்லாவற்றையும் சிந்திக்கும்போது வந்த வழியில் திரும்பி வெளியேறுவதைவிட இன்னும் சில நாழிகைகள் செலவழித்தாலும் எதிர் வருகிற புதுவழியில் திரும்புவதுதான் நல்லது. வந்த வழியே திரும்பி வெளியேறுகிற நேரத்தில் நாம் எதிர்பாராதபடி இருள் பிரிந்து விடிகிற வேளையாயிருந்துவிட்டாலோ அவுணர் வீதி நடுவில் முரசமேடைக்கருகே யாரிடமாவது நாம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். இந்த இருட்குகைக்குள் இரவும் தெரியவில்லை. பகல் வந்துவிட்டதா இல்லையா, என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உறுதியாக எதிரிகளின் கேந்திரத்திலிருக்கிறதென்று நமக்கே தெரிந்த அவுணர்வீதியைத் திரும்ப வெளியேறுமிடமாகத் தேர்ந்தெடுப்பதைவிட, எங்கிருக்கிறதென்று நமக்கே தெரியாத புதிய வெளியேறும் வழியைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் முன்னேறுவது நல்லது" என்று சாரகுமாரன் பிடிவாதமாகக் கூறவே முடிநாகனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று. தேடிக்கொண்டிருந்த பகுதியில் வெளியேறுகிற மறுவழி மிக அருகிலிருப்பது போல இருவர் மனத்திலும் ஒரு நம்பிக்கை உணர்வு வேறு தோன்றத் தொடங்கியது. பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைகள் பொய்த்துப் போவதில்லை. துன்பங்களின் நீண்ட வரிசைக்குப் பின்னால் நம்பிக்கை மயமாக எண்ணம் வருகிறபோதே வெற்றியும் வருகிறதென்று ஒப்புக் கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கைக்குக் காரணமுமிருந்தது. அதுவரை காற்றே நுழையக் காணாத சுரங்கப் பகுதியில் இலேசாக ஒரு நூலிழை காற்றுச் சிலுசிலுத்தது. அந்தப் புதிய காற்று நுழைந்த வழியை ஆவலோடு தேடினார்கள் அவர்கள். அப்படித் தேடியபோது வெற்றியின் மற்றொரு நல்வரவாக ஒரு நூலிழை ஒளிக்கதிரும் எதிரே திசை தெரியாத எங்கோ ஒரு பகுதியிலிருந்து அவர்களை நோக்கி நீண்டது. இருவருக்கும் நம்பிக்கை வந்தது. கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|