13. நெய்தற்பண் புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு - தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து - யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும். கவிகளின் சிந்தனையில் கடல் அலையொலி சோகத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றியிருக்கிறது. குழலிசையிலும், கடலலையிலும், மாலை வானின் செக்கர் நிறவொளியிலும், உலகில் முதல் கவிஞனே சோகத்தைத்தான் கண்டிருக்க முடியும் போலிருக்கிறது. அதனால்தான் நெஞ்சின் சோகத்துக்கு எதிரொலிகளாக அமைய முடிந்தவற்றை வரிசைப்படுத்தும் போதெல்லாம் இவற்றையே ஒன்று சேர்த்துத் தொகுத்து வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். சுவை, ஒளி, உறு, ஓசை, மணம் இவற்றிற்கும், மனிதனுடைய சிந்தனைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும். ஒரு சுவையோடு உறவு கொள்ளும் போதுகளில் எல்லாம் முதன் முதலாக அந்தச் சுவையைக் கண்ட வேளையின் நினைவுகள் வருகின்றன. ஓர் ஓசை, ஒரு மணம், ஓர் உணர்வு, எல்லாமே அதன் முதல் அநுபவத்தைச் சார்ந்த முதல் நினைவுகளுடனேயே வருகின்றன. புன்னை மரத் தோட்டத்தின் நறுமணம் அதே சூழ்நிலையில் அதே இடத்தில் முன்பு கண்ட கண்ணுக்கினியாளின் - ஆடல் பாடலை நினைவூட்டியது. இப்போது வெகு தொலைவிலிருந்து செவியை அணுகும் அந்த நெய்தற்பண்ணும் அவளுடைய குரலைப் போலவே இருந்தது. எதிரே தீயணைந்து வெறும் புகைமட்டும் எழும் கலங்கரைவிளக்கத்துப் பாறையில் அந்தப் புகை எழுச்சியும் கூட ஒரு மோனமான சோகத்தைக் குறிக்கும் அடையாளம் போல் தோன்றியது. நெஞ்சின் இரங்கலைத் தத்ரூபமாக எடுத்தியம்ப நெய்தற்பண்ணைவிட வேறு சிறந்த இசையில்லை. இப்போது இந்த வைகறையில் எங்கிருந்தோ தொலைதூரத்துக் கந்தர்வ உலகிலிருந்து வருவதைப் போன்று மெல்லிய ஒலியலைகளாக வரும் இந்தக் குரலோ - 'இது நெய்தற்பண்' - என்று கண்டுபிடிக்க முடிந்ததை விட 'நெய்தற்பண் இப்படித்தான் இருக்க வேண்டும்' - என்று வரையறுக்கும் அழகிய எல்லையாகவே கொள்ளத்தக்கதாயிருந்தது. அருங்காலையில் மங்கலான ஒளியில் கடலருகே புன்னைப் பூ மணக்கும் சூழலில் வந்த இசைக் குரலில் மனமுருகி நடந்து கொண்டிருந்த சாரகுமாரனுக்கு வேறு கடமைகளை நினைவூட்டலானான் முடிநாகன். "முரசமேடைக் கரந்து படையிலிருந்து செல்லும் இரகசிய வழிகள் எங்கெங்கே போய் முடிகின்றன என்று கண்டு பிடித்துவிட்டதற்காக மட்டுமே முதிய பாண்டியர் நம்மைப் பாராட்டிவிடமாட்டார். அரச குடும்பத்து மதிநுட்பம் சாதாரண ஒற்றர்களைப் போல் புறச் செய்திகளை அறிவதற்காக மட்டும் பயன்படக்கூடாது. 'தோற்றம் அதன் பின்னுள்ள கருத்து கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - எல்லாவற்றிற்கும் மேலாகத் தொகுத்துணரும் ஞானம்' - ஆகிய அனைத்தும் வேண்டுமென்று கூறியிருக்கிறார் பெரியவர். வெறும் தைரியத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர் ஏமாறமாட்டார். ஆகவே இந்த முரசமேடைக்குக் கீழே உள்ள வழிகள் பற்றி இன்னும் அதிக நுணுக்கமான உண்மைகள் எவையேனும் நம் கவனத்திலிருந்தோ, சிந்தனையிலிருந்தோ தப்பியிருந்தால் அவற்றையும் கவனித்துச் சிந்திக்க வேண்டும் இளையபாண்டியரே!" என்று காதில் வந்து இழையும் நெஞ்தற்பண்ணை இரசிக்க முடியாமல் உடன் பேசிக் கொண்டே வந்த முடிநாகனின் பேச்சு சாரகுமாரனுக்கு வெறுப்பூட்டினாலும் கேட்டுத் தீர வேண்டியிருந்தது.
சிகண்டியாரின் இசைக்கலையின் மிக உயரிய நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்தவனும், அந்தக் கலையை உயிரினும் மேலானதாக மதிப்பவனும் ஆகிய சாரகுமாரனோ நெய்தற் பண்ணை இதுவரை வேறெவரும் இத்தனை நெஞ்சுருகப் பாடிக் கேட்டதில்லை. நேரம் வேறு பொருத்தமாக அமைந்து விட்டது. அதனாலும் அந்த இசையின் மதிப்புப் பன்மடங்காகப் பெருகிவிட்டது. அருகில் நெருங்க நெருங்க அவனுடைய சந்தேகத்துக்குத் தெளிவு கிடைப்பதுபோல் அந்தக் குரல் அவளுடையது என்றே தெரிந்தது. இனிமையின் நீரொழுக்குப் போன்ற இடையறாத அந்தச் சொல் மதுரம் அவளுக்கே சொந்தமானதல்லவா? இடமும் பாணர்கள் தங்கியிருந்த புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியாயிருக்கவே அவன் தன் அநுமானத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வாய்ப்பிருந்தது. அப்போது குரலுக்குரியவளின் பொலிவு நிறைந்த முகமும் அவனுள் நினைவில் தோன்றியது. முகத்தின் அழகைக் குரலும், குரலின் அழகை முகமும் மிகுவிப்பனவாயிருந்தன.
"ஏதேது? இசை, நாடகம், போன்ற கலைகள் வெறும் விருப்பத்தைத்தான் பெருக்கும் என்று தங்கள் பாட்டனார் கூறியது பொய்யாயிராது போலிருக்கிறதே?" என்று குறும்புச் சிரிப்போடு மறுபடி முடிநாகன் குறுக்கிட்ட போது இளையபாண்டியனுக்குக் கோபமே வந்துவிட்டது. ஒரு கணம் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக திரும்பி முடிநாகனை உறுத்துப் பார்த்தான் சாரகுமாரன். முடிநாகனின் பேச்சு அவ்வளவில் நின்று போயிற்று. அமைதியாக இளைய பாண்டியரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் - இசைக்குரல் மிக அருகே ஒலிப்பது போல் தோன்றவே தயங்கி நின்று அந்தப் புன்னைமரக் கூட்டத்தில் சுற்றும் முற்றும் கவனிக்கலானாளன் சாரகுமாரன். அங்கே சிறிது தொலைவில் ஒரு புன்னை மரத்தினடியில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணற்பரப்பில் அந்தக் காட்சி தெரிந்தது. கண்ணுக்கினியாள் தான் மணற்பரப்பில் ஒசிந்தாற் போல அமர்ந்து வேறு யாரோ இரண்டு பெண்களுக்குப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கருகே நீர் தேங்கியிருந்த சிறு பள்ளம் ஒன்றில் நெய்தல் பூக்கள் நிறையப் பூத்திருந்தன. அந்தப் பள்ளத்திற்கு அப்பால் பசுமைச் சுவரெடுத்தது போல் தாழை மரங்கள் புதராய் மண்டி வளர்ந்திருந்தன. மணற் பரப்பில் முத்துதிர்த்தாற் போலவும் தற்செயலாய் நேர்ந்த அவளுடைய அந்த இசையரங்கிற்கு ஓர் அலங்காரம் செய்தாற் போலவும் புன்னைப் பூக்கள் நிறைய உதிர்ந்திருந்தன. தங்களுடைய திடும்பிரவேசத்தினால் அவள் தனது பாடலை நிறுத்திவிடக்கூடுமோ என்றஞ்சிய சாரகுமாரன் - நின்ற இடத்திலிருந்தே மறைந்து கேட்கலானான். தனிமையையும், தான் எக்காரணத்தைக் கொண்டும் தயங்கவோ தளரவோ, அவசியமில்லாதவர்களுக்கு முன் பாடுகிறோம் என்ற உணர்வையும் ஒரு விநாடி மாற்றிவிட்டால் கூட அந்தப் பெண்ணின் அழகும் மாறிவிடும். அது தெரிந்துதான் அவள் பாடி முடிகின்றவரை மறைந்து நின்று செவிமடுத்த பின்பு நேரில் எதிரே போய் நின்று பாராட்டலாமெனக் கருதியிருந்தான் இளையபாண்டியன். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் நகரணி மங்கல நாளுக்காக வந்து பாணர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து தன் தோழிகளோடு சிறிது தொலைவு விலகி வந்து இருந்து பாடும் காரணத்தாலேயே அவள் தனிமையை நாடி வந்திருப்பதை உணர முடிந்தது. பாடி முடிந்தபின் அவள் மணற்பரப்பில் உதிர்ந்திருந்த புன்னைப் பூக்களைத் தொகுக்கத் தொடங்கினாள். அவள் தோழிகளோ நீரில் இறங்கி நெய்தற் பூக்களைக் கொய்யத் தொடங்கினார்கள். குனிந்து புன்னைப் பூக்களைத் தொகுத்துப் பொறுக்கிக் கொண்டிருந்தவள் அருகே மணற் பரப்பில் இலேசாகத் தெரியத் தொடங்கியிருந்த நிழலைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்த போது சாரகுமாரன் எதிரே புன்னகை பூத்தபடி நின்றான். முதலில் அவளுக்குத் திகைப்பாயிருந்தது. அவனுடைய நகர் பரிசோதனைக் கோலத்தைப் பிரித்துக் கணித்துத் தனியாக அவனை மட்டும் அவள் உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று. "ஓ! கபாடபுரத்து முத்து வணிகர் அல்லவா நீங்கள்?" என்று அவள் வினாவிய குரலில் குறும்பு நிறைந்திருந்தது. "இந்த அதிகாலையில் இப்படி நெஞ்சு நெகிழ நெய்தற் பண் பாடும்படி அத்தனை பேரிரக்கம் என்னவோ தெரியவில்லையே?" என்று சாரகுமாரனும் குறும்புடனேயே வினாவினான். "உணர வேண்டியவர்களுக்குக் கூடப் புரியாத இரக்கத்தினால் பயன் தான் என்ன?" "புரியவில்லை என்று நீ எப்படி சொல்ல முடியும் பெண்ணே?" "புரிந்திருந்தால் வினாவியிருக்கக் கூடாது." "வினவினால் சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழியாலேயே மெய்யைத் தெரிந்து கொள்ளலாம் என்று நோக்கமாயிருக்கலாம்..." "யார் கண்டார்கள்? கூசாமல் பொய் சொல்லுகிறவர்களுக்கும் கல்நெஞ்சுக்காரர்களுக்கும் எந்த நோக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்!" "கல்நெஞ்சாயிருந்தால் உன்னுடைய நெய்தற் பண்ணும் உருக்க முடியாமல் அல்லவா போயிருக்கும்?" "உருக்கியிருக்கிறது என்பதுதான் என்ன நிச்சயம்?" என்று கேட்டுவிட்டு ஆவலோடு அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் கண்ணுக்கினியாள். அவள் தோழிகள் இன்னும் நெய்தற்பூப் பறிப்பதிலிருந்து மீளவில்லை. முடிநாகனும் முன்பு இருவரும் நின்ற இடத்திலேயே பின் தங்கிவிட்டான். "உன்னுடைய இசை ஏழுலகையும் வெற்றி கொள்கிற போது நான் எம்மாத்திரம்?" என்று அவளருகே நெருங்கி நாத்தழுதழுக்கக் கூறினான் சாரகுமாரன். அவள் முகத்தில் நாணமும் புன்னகையும் கலந்ததிலே பெருமிதம் இடம் தெரியாது கரைந்தது. கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|