18. நாதகம்பீரம் எயினர் தலைவன் அவர்களைத் தன் விருந்தினர்களாக ஏற்று மிகவும் அன்போடும் ஆர்வத்தோடும் உபசரிக்கத் தொடங்கி விட்டான். அவர்கள் அவனுக்குப் பரிசளித்த முத்துக்களும் அவற்றைவிட நயமான வார்த்தைகளும் எயினர் தலைவனின் மனத்தில் ஒரு நன்மதிப்பை உண்டாக்கியிருக்க வேண்டுமென்பது அவனுடைய மலர்ச்சியிலிருந்தே தெரிந்தது. இந்த முதல் இராசதந்திரச் சந்திப்பை எவ்வளவிற்கு எவ்வளவு பயணத்தைப் பற்றிய நம்பிக்கை தங்கள் மனத்தில் பெருக முடியுமென்பது இருவருடைய எண்ணமுமாக இருந்தது. கூடியவரை தங்கள் உரையாடல் பொதுவான உரையாடலாக இருக்குமாறு இருவருமே கவனம் வைத்துக் கொண்டு பேசினார்கள். தொன்மையான தென்பழந்தீவுகளுக்கும், கபாடபுரத்துக்கும் இடையேயுள்ள அரசியல் உறவின்மைகளையோ, உறவுகளையோ, உரையாடலுக்குப் பொருளாக்கி விடாமல் தவிர்ப்பதை இருவருமே சாதுரியமாக நிறைவேற்ற முடிந்தது. எதை விரும்பிப் பேசுகிறோமோ 'அதையே ஏன் விரும்பிப் பேசுகிறோம்' என்ற கேள்வி எதிராளியின் மனத்தில் எழுந்துவிடாமலும், எதை விரும்பித் தவிர்க்க முயல்கிறோமோ 'அதை மட்டும் ஏன் தவிர்க்க முயல்கிறோம்?' - என்ற சந்தேகம் எதிரிக்கு ஏற்படாமலும் பேசுவதுதான் இராசதந்திரப் பேச்சு. இத்தகைய பேச்சுக்களைப் பயிலவும், பழகவுமே பெரியபாண்டியர் தங்களை இந்தச் சுற்றுப்பயணத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்பது இருவருடைய மனத்திலும் மேலெழுந்து நின்ற காரணத்தினால் இருவருமே அதைச் செம்மையாகச் செய்ய முடிந்தது. பகல் நேரத்திலும் வெயில் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து செறிந்திருந்த காடுகளாலான அந்தத் தீவில் காட்டு விலங்குகளின் தொல்லைகளிலிருந்து விடுபடக் கருதியோ, என்னவோ குடியிருப்புகளை எல்லாம் மரங்களின் உச்சியில் அமைந்திருந்த பரண்களில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அந்தத் தீவில் செழித்து வளர்ந்திருந்த ஒருவகைப் புல்லினால் குடிசைகள் அழகுற வேயப்பட்டிருந்தன. முடிநாகனும், சாரகுமாரனும், தங்குவதற்குக்கூட அப்படி இரண்டு பரண்களிலமைந்த புல்வேய் குரம்பைகளே கிடைத்தன. உயர்ந்த மரக்கிளைகளில் வைரம் பாய்ந்த பல கைகளைப் பதித்துப் பசுமைச் சூழலில் தொங்குவதுபோல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடிசைகளில் தங்குவதற்கு இதமாக இருந்தது. நீருள் அமிழ்ந்திருப்பதுபோன்ற தண்மை அங்கு நிலவியது. அந்தத் தண்மையின் சுகத்தினாலும், பயணம் செய்துவந்த களைப்பினாலும் முடிநாகன் நன்றாக உறங்கிவிட்டான். இளையபாண்டியனுக்குத்தான் உறக்கமே வரவில்லை. அந்த இயற்கையழகின் தூண்டுதலில் கண்ணுக்கினியாளின் நினைவு வந்தது அவனுக்கு. 'உண்மை அன்பிற்கும், பரிவிற்கும்தான் எத்தனை பெரிய சக்தி? நினைப்பதிலும், காண்பதிலும், சிந்திப்பதிலும், எல்லாவற்றிலும் நம்முள் பொங்குகிற பரிவின் மற்றொரு நுனியிலிருப்பவர்களே நமக்கு ஞாபகம் வருகிறார்களே?' என்றெண்ணி வியந்தான் அவன். மரங்களும், செடிகளும், கொடிகளுமாக ஒரே மனத்தின் பல உணர்வுகளைப் போல் நெருங்கிப் பிணைந்திருந்ததனால் அவன் அமர்ந்திருந்த பரணில் காட்டின் பசுமை மணம் கம்மென்று தொகுதியாகப் பரவியிருந்தது. 'பூக்களின் நறுமணம் நமக்குப் பிரியமானவர்களின் ஞாபகத்துக்கு ஒரு தூதுபோல வாய்க்கும்' என்று அகப்பொருள் இலக்கணத்தில் ஏதோ ஒரு துறைக்கு விளக்கம் கூறுகிறபோது ஆசிரியர் கூறியது நினைவு வந்தது அவனுக்கு.
அந்தத் தண்மை அந்த இயற்கையின் மலர்ச்சி, அந்த இரவின் ஏகாந்தம், யாவும் கண்ணுக்கினியாளையே எண்ணச் செய்தன. சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு மூலையில் இருக்கும். வேறு சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு பாதியாக இருக்கும். இன்னும் சிலருடைய நினைவே ஒரு ஞாபகமாக இருக்கும். மனத்தின் அந்தரங்க கீதங்களாகப் பெருகிப் பல்லாயிரம் பண்களை ஒலிக்கும் இங்கித நினைவுகள் சிலவும் இதயத்திற்கு உண்டு. அந்த நினைவுகள் குருதியும் சதையுமாக இதயத்தோடு பிணைந்தவையாக இருக்கும். கண்ணுக்கினியாளைப் பற்றிய நினைவும் அவனுள் அப்படித் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. இயற்கையழகு மிகுந்த அந்தக் குளிர்ந்த வனத்தில் அவளை நினைப்பதற்கு என்றே இரவெல்லாம் விழித்திருந்தாலும் தகும் என்பது போலிருந்தது அவன் நிலை. 'மனித இதயத்திற்குள் கரை கொள்ளாத் தவிப்பாக நிரம்பியிருக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் அவன் பாடும் இசையாகிறது' என்று இசை நுணுக்கங்களைக் கற்பிக்கும் போது ஆசிரியர் சிகண்டியார் இடைக்கிடை கூறுவதுண்டு. கண்ணுக்கினியாளின் இசையும் நளினமான குரலும் ஞாபகம் வருகிற வேளைகளில் எல்லாம் சிகண்டியார் கூறும் இந்த வாக்கியத்தையும் உடனிகழ்ச்சியாகச் சேர்த்தே நினைத்திருக்கிறான் அவன்.
'கண்ணுக்கினியாள் செவிக்கினியாள் பண்ணுக்கினியாள் பலப் பலவாய் மன எண்ணுக்கினியாள்' என்று அவளைப் பற்றி நிறைவேறியவரை அப்படியே நின்று மேலே நிறைவேறாத கவிதையொன்றும் அவனுள் முகிழ்த்திருந்தது. அடர்ந்த காட்டினிடையில் இடைவெளிகளில் புகமுயலும் காற்றின் உக்கிரமான ஓசையும், தொலைவில், அதிக அன்புக்குரியவரைப் பிரிய நேர்ந்துவிட்ட யாரோ வாயிலும் வயிற்றிலும் ஏற்றிக் கொண்டு கதறுவது போன்ற கடல் ஓசையும் ஒலித்த வண்ணமிருந்தன. எப்போது உறங்கத் தொடங்கினோம் என்று தனக்கே நினைவில்லாத வேளையில் உடல் களைப்பின் காரணமாகச் சோர்ந்து இளையபாண்டியனும் உறங்கத் தொடங்கியிருந்தான். உறங்கத் தொடங்கிய உறக்கத்தையும், அதன் இனிய நினைவுகளையும், கனவுகளையும், வேகமாக யாரோ ஓடிவந்து கலைத்ததுபோல் வைகறை விரைந்து வந்து கலைத்து விட்டது. வைரக் கற்களின் பட்டைகளில் இருந்து விதவிதமான ஒளிக்கீறல்கள் பாய்வதைப் போல் காலைக் கதிரவனின் கதிர்க்கற்றைகள் அந்த அடர்ந்த வனத்தில் நுழைய முயன்றன. இளையபாண்டியன் கண்விழித்தவுடன் அருகே பரணுக்குள் முடிநாகன் படுத்துறங்கிக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே அவனைக் காணவில்லை. கீழே தரையைக் குனிந்து பார்த்தபோது அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் நீராடல் முதலிய காலைக் கடன்களை ஆற்ற அழைத்துச் செல்லுவதற்காக எயினர் தலைவனால் அனுப்பப்பட்டிருந்த பணியாளன் ஒருவனும் பரணுக்கடியில் காத்திருந்தான். ஏற்கெனவே கீழே இறங்கிவிட்ட முடிநாகன் அந்தப் பணியாளனுடன் தான் பேசிக் கொண்டிருந்தான். சாரகுமாரனும் கீழே இறங்கிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டான். பணியாள் அவர்கள் இருவரையும் பக்கத்துக் குன்றின் சரிவில் இருந்த ஓர் அருவிக்கு நீராட அழைத்துச் சென்றான். அந்த அருவியின் பெயர் 'நாத கம்பீரம்' என்று கூறியபோது பொருத்தமான அந்தப் பெயரை வியந்தான் சாரகுமாரன். பாறைகளிலும் கற்களிலும் துள்ளிக் குதித்து விழும் வேளையில் மத்தளம் கொட்டுவது போலிருந்தது அந்த அருவியின் நாதம். அருவியைக் கண்களால் அருகிலிருந்து காணாமல் சிறிது தொலைவு விலகிச் சென்று மரங்களின் மறைவிலோ, புதரிலோ, குன்றின் மறுபுறத்திலோ நின்று அந்த ஓசையை மட்டும் செவிமடுத்தால் யாரோ தொலைவிலிருந்து உரத்த குரலிலே மத்தளம் வாசிப்பது போலவே ஒலித்தது. அந்தத் தீவின் அதிசயங்களில் ஒன்றாக அதனையும் கூறினார்கள். 'எல்லாக் கலைகளும் இயற்கையின் பல்வேறுவிதமான சங்கேதங்களிலிருந்துதான் பிறந்து விரிந்து பின் நோக்கமும், துறையும் கற்பிக்கப்பட்டனவாதல் வேண்டும்' என்று தன்னுடைய ஆசிரியர்கள் முன்பொரு சமயம் தனக்குக் கற்பித்திருந்த பிரத்யட்ச வாக்கியத்தை இப்போது நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். நாத கம்பீரத்தின் குளிர்ந்ததுவும், காட்டு மூலிகைகள், வேர்கள், பூக்கள், பச்சிலைகளின் சுகமான வாசனை நிறைந்ததுவுமாகிய நீரில் குளித்தெழுந்த போது தேவர்களின் அமுதத்தை உண்ட உற்சாகம் அவர்கள் உடலில் நிறைந்திருந்தது நீராடி உடைமாற்றிக் கொண்டு அவர்கள் மீண்டும் எயினர் தலைவனைச் சந்திக்க வேண்டியிருந்தது. "இன்றைப் பகற்பொழுதையும், இரவையும் இங்கே கழித்துவிட்டு நாளைக் காலையில் இந்தத் தீவை விட்டுப் புறப்பட்டு யாத்திரையை மேலே தொடர வேண்டும்" என்று கூறியிருந்தான் முடிநாகன். எயினர் தலைவனின் அரசியல் உள் நோக்கங்களைப் பொதுவாக அறிய வாய்ப்பு ஏற்படும் முறையில் அதே சமயத்தில் தாங்கள் யார் என்று எயினர் தலைவன் அறிந்து கொள்ளவும் முடியாமல் தந்திரமாகச் சில வினாக்களை வினாவிப் பார்க்க வேண்டும் என்று அன்றைக்கு அவர்கள் நினைத்திருந்தார்கள். முதல் நாள் அவர்களை வரவேற்ற அதே இடத்தில் அதே பழைய சுற்றப் பரிவாரங்களோடுதான் இன்றும் எயினர் தலைவன் அவர்களை எதிர்கொண்டான். ஆனால் அவர்கள் நினைத்தபடி ஒரு காரியம் மட்டும் முடியவில்லை. கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|