2. கண்ணுக்கினியாள் இசைக் கருவிகளின் பல்வேறு வகைகளையும், பல்வேறு வடிவங்களையும் சுமந்து நின்ற பொருநரும், பாணரும், விறலியருமாகக் கூடியிருந்த அந்தக் கூட்டம், தன்னை இன்னாரென்று இனங் காண்பித்துக் கொள்ளாது அமைதியாக நுழைந்த இளையபாண்டியரைக் கண்டதும் மௌனமாக விலகி வழி விட்டது. கூட்டத்தினிடையே பொன்னிறப் பூமாலை ஒன்று சரிந்து தளர்ந்து விழுந்து கிடப்பதுபோல் இளம்பாண் மகள் ஒருத்தி விழுந்திருந்தாள். அவளருகே யாழ் ஒன்றும் விழுந்து கிடந்தது. மயங்கி விழுந்தவளைக் கண்ட இளைய பாண்டியரின் விழிகள் 'இவள் யார்? ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாள்?' - என்று வினாவுவது போன்ற பாவனையில் சுற்றி நின்றவர்களைத் துழாவின. புதிதாக வந்த அவனைக் கண்டதும் அவர்கள் அழுகையும் கண்ணீரும் நின்றன. "எல்லாரோடும் உடன் நடந்து வந்து கொண்டிருந்தவள் திடீரென்று நடைதளர்ந்து மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று ஒரே சமயத்தில் பல குரல்கள் இளைய பாண்டியரின் செவியில் ஒலித்தன. துயரமும், சோர்வும், பயமும் கொண்ட அந்தக் கூட்டத்தில் மலர்ந்த முகமும், புன்சிரிப்பும் ஒளிர இளையபாண்டியர் புகுந்தது இருளில் மின்னல் தோன்றிப் பொலிவது போலிருந்தது. இளையபாண்டியரைப் பின் தொடர்ந்து வந்திருந்த முடிநாகன் குறிப்பறிந்து செய்ய வேண்டியதை உணர்ந்தவனாகச் சாலையோரமாய் மரக் கூட்டத்திற்கு அப்பாலிருந்த நெற்கழனிகளுக்கு நீர்பாயும் வாய்க்காலைத் தேடி ஓடினான். பக்கத்திலிருந்த மரங்களில் இலைகள் பெரிதாயிருந்த மரமொன்றிலிருந்து நாலைந்து இலைமடல்களை இணைத்துப் பேழைபோற் செய்து நீர்முகந்து கொண்டு விரைந்தான் அவன். தண்ணென்று குளிர்ந்த வாய்க்கால் நீரை ஒரு கை அள்ளி அவள் முகத்தில் தெளித்தபோது - தண்ணீரின் குணத்தினாலோ அதைத் தெளித்த சாரகுமாரனின் மனத்தில் நிரம்பியிருந்த கருணையினாலோ அங்கு மயங்கிக் கிடந்தவளின் உடலில் அசைவுகள் புலப்படலாயின. அல்லி மலர்வது போல் அவள் விழிகளில் மலர்ச்சியும் தெரிந்தது. அவள் பருகுவற்கு வசதியாக இலைப் பேழையிலிருந்த நீரை வாயிதழ்களினருகே சாய்த்த இளையபாண்டியனை நோக்கி அவள் கண்களில் நன்றி சுரந்தது. உடலிலே சிறிது தெம்பு வந்ததும், கூடியிருந்த கூட்டத்தினரையும், அருகே அமர்ந்து நீரையும், குளிர்ந்த பார்வையையும் சேர்த்தே பொழியும் சுந்தர இளைஞனையும் கண்டு அவள் நாணியபடியே எழுந்து நிற்க முயன்றாள். மின்னல் பாய்வதுபோல் விரைந்து தெரிந்த அந்த நாணம் அவளுக்கு மிகமிக அழகைக் கொடுத்தது. "உண்ணாமல் வயிற்றுப் பசியோடும் களைப்போடும் நெடுந்தூரம் நடந்து வந்தாள் போலிருக்கிறது. சோர்வுக்கும் மயக்கத்துக்கும் அதுதான் காரணம்" - என்று சுற்றியிருந்தவர்களிடம் கூறினார் இளையபாண்டியர்.
"ஆர்வத்தின் காரணமாக இவளே உண்டாக்கிக் கொண்ட சோர்வுதான் ஐயா இது! வயது முதிர்ந்த பெற்றோர்கள் பின்னால் வருகிற கூட்டத்தோடு வந்து கொண்டிருக்கிறார்கள். மணிபுரத்திலிருந்து இன்றிரவு இளையபாண்டியர் கோநகருக்கு வருகிறாராம். நகரின் முதற்கோட்டை வாயிலிலேயே அவரைப் பார்த்துவிட வேண்டுமென்று இவளுக்கு ஆசை. அதனால் முதுமையின் காரணமாக விரைந்து நடக்க முடியாத பெற்றோர்களை அவர்கள் ஏற்கனவே வந்து கொண்டிருந்த கூட்டத்தினரோடு விட்டு விட்டு இவள் முன்னால் விரைகிறாள். கபாடபுரத்தை அடைந்து இளையபாண்டியரின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டு மயங்க வேண்டியவள்; பாவம்! இங்கேயே அவசரப்பட்டு மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர் - முதுமை தமக்களித்திருக்கும் உரிமையோடும் துணிவோடும் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பொலி அலை அலையாக எழுந்தது.
சிரிப்புக்குக் காரணமாயிருந்தவளோ நாணித் தலை கவிழ்ந்தாள். இந்த நிலையில் உடனிருந்த முடிநாகனுக்கோ தன் ஆவலைச் சிறிதும் அடக்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தினரையும், விண்மீன்களுக்கிடையே முழுநிலவு தளர்ந்து கிடப்பது போல் துவண்டு நிற்கும் அந்தப் பெண்ணையும் நோக்கி, "பாண் மக்களே! விறலியர்களே! பேரழகு வாய்ந்த இசைச் செல்வியே! நீங்கள் எல்லோரும் காணத் தவித்துக் கொண்டிருக்கும் இளைய பாண்டியர் சாரகுமாரரைத்தான் இப்போது உங்களருகே காண்கிறீர்கள்" - என்று சொல்லி அவர்களுடைய முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும், அன்பையும் அந்தக் கணமே இளையபாண்டியர் நேருக்கு நேராகப் பெறும்படி செய்துவிட வேண்டும் போல முடிநாகனின் நாவும் இதழ்களும் முந்தின. ஆனால் முடிநாகனுக்கு அந்த வேளையில் அந்தச் சூழ்நிலையில் அப்படி ஓர் ஆவல் வருவது இயல்பு என்பதை முன்பே அநுமானித்திருந்த இளையபாண்டியர், 'அதைச் சொல்ல வேண்டாம்' - என்ற பாவனையில் சைகை செய்து அவனது ஆவலை அடக்கிவிட்டார். இராச கம்பீரத்துக்குரிய பொற்கோலங்களும், அலங்காரப் புனைவுகளுமின்றித் தென்பாண்டி நாட்டின் பல்லாயிரம் க்ஷத்திரிய இளைஞர்களில் சற்றே அழகு மிகுந்த ஓர் இளைஞனைப் போலவே அந்தக் குருகுலவாசத் தோற்றத்தில் இளைய பாண்டியர் இருந்ததனால் அவர்களாலும் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. தன்னைக் காட்டிலும் பருவத்தில் மிக மிக இளையவளாகத் தோன்றிய அந்தப் பெண்ணை நோக்கி, "உன் பெயர் என்னவென்று எனக்கு சொல்வாயா பெண்ணே?" - என்று உரிமையோடும் பாசத்தோடும் கனிவாய் வினவினான் சாரகுமாரன். நாணம் நாவை அடைக்கும் காதல் மழலையாக ஒலித்தது அவள் குரல்: "கண்ணுக்கினியாள்." செவிக்கினிதாக ஒலித்த இந்த மறுமொழி சாரகுமாரனின் நெஞ்சைத் தொட்டது. பெண்ணின் குரலுக்கு வசீகரமான அழகு வருகிற இடம் நாவில் சொல் பிறக்கும் நிலையும் - அதே கணத்தில் அந்தச் சொல்லை உடைக்கும் நாணமுமாகத் தடுமாறி வெளி வருகிற குதலைச் சொல்தான். பெண்ணின் உணர்ச்சிகளில் மிக நளினமான உணர்ச்சி இந்தக் குதலைச் சொல்தான். பெண்ணோடு உடன் பிறந்த அந்தரங்க சங்கீதமே இந்தக் குதலை மொழிதான் என்று சொல்ல வேண்டும். மலரக் காத்திருந்து மலர்ந்ததும் 'கம்'மென்று மணம் விரியும் நறுமணம் மிகுந்த பூவைப் போல ஒவ்வொரு பெண்ணிடமும் அவள் மலரும்போது நாணமும் சொல்லுமாகத் தடுமாறிப்பிரியும் இந்த அழகிய மொழி பிறக்கிறது. இன்னொரு முறை அவள் குரலிலேயே அந்தப் பெயரைக் கேட்க வேண்டும் போல ஆசையாயிருந்தது சாரகுமாரனுக்கு. உலகத்தின் முதற் பண்ணைப் பெண்ணின் குதலையிலிருந்து தான் மனிதன் கண்டு பிடித்திருக்க வேண்டுமென்று அப்போது தோன்றியது அவனுக்கு. அவள் பேசினாளா அல்லது தளர்ச்சியினால் அவளிடமிருந்து கீழே பிரிந்து கிடந்த யாழ் அவளுக்காகப் பேசியதா என்று பிரமையடையும்படி இன்னும் அவன் செவிகளிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது அந்த ஒரு பெயர். "என்ன இருந்தாலும் நீ செய்தது தவறுதான் பெண்ணே! முதுமையினால் தளர்ந்த பெற்றோர்களை வழி நடையாளர்களோடு பின் தங்க விட்டு விட்டு நீ மட்டும் இப்படித் தனியே வரலாமா?" சாரகுமாரனின் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறாமல் கீழே கிடந்த தன் யாழைப் பார்த்தபடி மௌனமாக வெட்கம் சிவக்கும் முகம் அழகு பொழிய நின்றாள் அவள். "அப்படியென்ன அவசரம் உனக்கு? இளையபாண்டியர் எங்கே ஓடிப் போகிறார்? நகரணி விழா நாட்களில் என்றாவது ஒரு நாள் நீ அவரைப் பார்க்க முடியாமலா போய் விடப் போகிறது?" நாணத்தினால் அவள் முகம் இன்னும் அழகாக இன்னும் அதிகமாகச் சிவந்தது. இளையபாண்டியரின் நடிப்பைக் கண்டு தனக்குள் பொங்கிக் கொண்டு வந்த சிரிப்பை முயன்று அடக்கிக் கொண்டான் முடிநாகன். சாரகுமாரனின் கேள்விக்கு அவள் மறுமொழி கூறாவிட்டாலும் கூட்டத்திலிருந்த அந்தப் பெரியவர் மறுமொழி கூறினார். "நீங்கள் சொல்வது போல் இளையபாண்டியரைப் பார்ப்பது அவ்வளவு எளிமையான காரியமாயிருந்தால் நாங்கள் ஏன் இத்தனை அவசரப்படப் போகிறோம் ஐயா? அவர் தான் தலைநகரத்திலேயே இருப்பதில்லையாமே? ஆசிரியர்களிடம் குருகுலவாசம் செய்து வருவதனால் எப்போதாவது அத்தி பூத்தாற் போலத்தான் அவர் கபாடபுரத்துக்கு வருகிறாரென்று கேள்விப்படுகிறோம்." "இருக்கலாம்! இளையபாண்டியரைப் பார்ப்பதில் இவ்வளவு பரபரப்பும் அவசரமும் ஏன் என்பதுதான் என் கேள்வி. ஓர் அரசகுமாரரிடம் உடனே பார்த்துத் தீர வேண்டுமென்று தவிப்பதற்கு அப்படி என்ன பெரிய சிறப்பு இருந்து விடப் போகிறது? கலைஞர்கள் இன்னொருவரைப் பார்ப்பதற்கு ஏங்குபவர்களாக இருத்தல் கூடாது. இன்னொருவர் தங்களைப் பார்க்க ஏங்கச் செய்பவர்களாக இருக்க வேண்டும். பார்க்கப் போனால் அரசகுடும்பத்துப் பிள்ளைகளுக்கு என்ன இருக்கிறது? பதவியும் கடமைகளும் சாகிறவரை நெஞ்சில் மிகப் பெரிய சுமைகளாக இருக்கிற வாழ்க்கை அரச வாழ்க்கை. குடிப்பெருமை - கடமை - என்ற எல்லைகளைத் துணிந்து உலகத்தைச் சுதந்திரமாக அநுபவிக்கும் வாழ்வு கூட அவர்களுக்கு இல்லை. கலைஞர்கள் தங்கள் உயிர் நாடியாகிய கலைக்கருவிகளும் கீழே தவறி விழும்படி அத்தனை வேகமாக இதுபோல் யாரையும் தேடி ஓடக்கூடாது. இதோ இந்த அருமையான யாழை இவள் ஒருகணம் கீழே மண்ணில் தவற விட்டிருப்பதைக் கூட இப்போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" - என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து நல்ல வேளையாக எதுவும் பழுதுபடாமலிருந்த அந்த யாழைக் கையிலெடுத்து - அதில் மண் படிந்திருந்த இடங்களை மேலாடையால் தூய்மை செய்தபின், எந்த நிலையிலும் இதைக் கீழே தவற விட்டு விடாதே பெண்ணே! கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் - வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவவே கூடாது. வாழ்க்கையின் சோர்வுகள் கலையை ஆள்பவனைக் கீழே தள்ளலாம். ஆனால் அவனுடைய கலையையே கீழே தள்ளிவிடக்கூடாது" - என்று புன்முறுவல் செய்தவாறு கூறி அவளிடம் யாழைக் கொடுத்தான் சாரகுமாரன். யாழை வாங்கிக் கொள்ளும்போது அவள் கைகளையும், விரல்களையும் பார்த்த சாரகுமாரனின் மகிழ்ச்சி மேலும் அதிகமாகியது. தாமரை இதழ்களை நீட்டிச் சுருட்டிப் பவழ நகங்கள் பதித்தாற் போன்ற அந்த நீண்ட நளின விரல்கள் யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பெற்றவைபோல் தோன்றின. ஒருமுறை பார்த்தாலும் மறந்து விட முடியாத அத்தனை அழகிய விரல்கள் அவை. யாழை அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட அவள் நன்றியோடு சில வார்த்தைகள் தயங்கித் தயங்கிப் பேசினாள். "ஐயா உங்களைப் போல் உதவி செய்யும் மனமும் கருணையும் நிறைந்தவர்கள் நிரம்பிக்கிடக்கிற இந்தப் பாண்டி நன்னாட்டின் வழிகளில் கலைஞர்கள் எந்த இடத்தில் சோர்ந்து விழுந்தாலும் நிச்சயமாக அவர்களுக்குக் கவலை இருக்க முடியாது. அவர்களுடைய யாழ் கீழே விழும்போதெல்லாம் அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது கலைஞர்களுக்கென்ன கவலை." "என்னிடம், நீ சொல்வது போல் ஏதாவது நல்ல குணம் இருக்குமானால், அதற்காகக் கடவுளை வாழ்த்து பெண்ணே! என்னை வாழ்த்துவதும் வியப்பதுமே ஒரு நாள் நான் இவற்றை மறப்பதற்கோ இழந்து விடுவதற்கோ காரணமான அகங்காரத்தை என்னுள் உண்டாக்கி விடலாம்." "ஐயா! எளிமையாகத் தோன்றினாலும் தாங்கள் பெருஞ் செல்வக் குடியைச் சேர்ந்தவர் போல் தெரிகிறீர்கள். தயை செய்து தாங்கள் யாரென்பதை எங்களுக்குக் கூறலாமா?" "என்னைப் பற்றிக் கூறுவதற்கு அப்படிப் பெரிதாக ஒன்றுமில்லை பெண்ணே! இந்தப் பாண்டி நாட்டின் கோநகரமாகிய கபாடபுரத்தில் நிரம்பியிருக்கும் மிகப்பெரிய முத்து வணிகர்களில் ஒருவன் நான்..." "இவ்வளவு பெருந்தன்மையும் கருணையும் காட்சிக்கு எளிமையும் நிரம்பிய தாங்கள் விற்கும் முத்துக்களெல்லாம் சிறப்பாயிருக்குமென்பதில் ஐயமேயில்லை ஐயா!" இதைக் கேட்டுச் சாரகுமாரன் புன்னகை பூத்த முகத்தோடு மௌனமாயிருந்தான். முடிநாகனால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவன் அந்தக் கூட்டத்திலிருந்து சிறிது தொலைவு விலகிச் சென்று நின்று கொண்டான். சாரகுமாரனோ கண்ணுக்கினியாள் பேசப் பேச அவளுடைய குரலினிமையையும் அதில் நிரம்பியிருக்கும் குதலைத் தன்மையையும் கேட்டு இரசிக்க விரும்பியவன் போல் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் உடனிருந்த பாணர்கள் வழிநடையைத் தொடர முற்படவே மற்றவர்களோடு அவளும் அவனிடம் விடை பெற்றுக் கை கூப்பினாள். "நல்லது! போய் வா! உன் பெயர் என்றும் என் நினைவிலிருக்கும் பெண்ணே! இவ்வளவு அழகிய சொற்களை இணைத்துச் சூட்டப்பட்ட ஒரு பெயரை நான் இதுவரை கேட்டதேயில்லை" - என்று அவளுக்கு விடை கொடுத்த சாரகுமாரன் அவள் நடை பின்னித் தளர்வதைக் கண்டதும் தன் முடிவை மாற்றிக் கொண்டு, "பெண்ணே! உன்னால் இந்த நிலையில் நடக்க முடியாதென்று அல்லவா தோன்றுகிறது. நீ சம்மதித்தால் உனக்கு இன்னும் ஒரு சிறிய உதவியையும் இப்போது செய்யச் சித்தமாயிருக்கிறேன் நான். எங்களுடைய தேரில் நீயும் ஏறிக்கொள்வாயானால் ஒரு தளர்ச்சியுமின்றி இன்னும் சிறிது நேரத்தில் கபாடபுரத்தை அடைந்து விடலாம். இளையபாண்டியரைப் பார்க்க வேண்டுமென்ற உன் விருப்பமும் நிறைவேறிவிடும். உரிய நேரத்தில் உன்னைக் கபாடபுரத்தின் முதற்கோட்டை வாயிலில் இறக்கிவிட்டு விடுகிறேன்" - என்று கனிவாக வேண்டினான். இந்த வேண்டுகோளைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் தயங்கினாள். முன்னாள் கூட்டமாக விரைந்து கொண்டிருக்கும் தன்னுடன் வந்த மற்றப் பாணர்களையும் - இப்பால் நின்று தன்னைத் தேருக்கு அழைக்கும் சாரகுமாரனையும் மாறி மாறிப் பார்த்து ஒரு முடிவுக்கும் வர இயலாமல் அவள் தடுமாறுவது போல் தோன்றியது. சிறிது நேரச் சிந்தனைக்குப் பின், "எனக்குச் சம்மதமானாலும் உங்களுக்கு அந்தச் சிரமத்தைத் தரலாமா என்றுதான் நான் தயங்குகிறேன் ஐயா" - என்றாள் அவள். "இதில் சிரமம் ஒன்றுமில்லை பெண்ணே! துன்பப்படுகிறவர்களுக்கு உதவுவதைக் கருணையென்றும் மென்மையென்றும் கவிகள் போற்றும்போது அதை ஒரு சிரமமாக மட்டும் நான் நினைக்க முடியுமா?" "நல்லது! உங்கள் பெருந்தன்மை குணத்தை வியக்கிறேன். இளையபாண்டியர் கோநகருக்கு வருவதற்குள் நாம் அங்கே போய் விடலாமல்லவா?" - என்று அவள் நாணமும் புன்னகையுமாக அவன் முகத்தை ஏறிட்டுப் பாராமல் பூமியைப் பார்த்துக் கொண்டே வினாவிய போது அவளுள்ளே நிறைந்திருக்கும் ஆவல் சாரகுமாரனுக்குப் புரிந்தது. "பெண்ணே! உனக்கு நான் உறுதியே கூறமுடியும், எங்களுடைய இந்தத் தேர் கபாடபுரத்தின் கோட்டை வாயிலில் நுழைவதற்கு முன் இளையபாண்டியர் அங்கு வந்திருப்பதற்கு வழியே இல்லை. என்னை நீ நம்புவதோடு இப்போதே இந்தக் கணமே, இளையபாண்டியரைப் பார்த்ததாகவே வைத்துக் கொள்ளலாம்." இந்த உறுதி மொழியைக் கேட்டு அவள் அவனுடன் நடந்தாள். முடிநாகன் முன்பே தேருக்குச் சென்று ஆயத்தமாக இருந்தான். தேரை அவன் செலுத்தவே சாரகுமாரனும் அந்தப் பெண்ணும் தேரின் பின்புறச் சட்டத்தில் அமர்ந்து கொண்டனர். முன்புறம் உறங்கித் தளர்ந்திருந்த புலவர் பெருமக்களுக்கு இடையூறின்றித் தாங்கள் பின்புறம் அமர்வது நல்லதென்று அங்கே தானும் அந்தப் பெண்ணும் இருக்க வசதி செய்து கொண்டான் சாரகுமாரன். வழியில் அவளிடம் பல செய்திகளைப் பேசினான் அவன். இசை நுணுக்கங்கள், செவ்வழி, பாலைப்பண், யாழ் நரம்புகள், திவவு என்னும் யாழ்க்கட்டு உறுப்பு எல்லாவற்றையும் பற்றி அவளிடம் நிறைய விவாதித்தான். "ஏதேது? வணிகராகிய உங்களுக்குக் கூட இவ்வளவு இசை நுணுக்கங்கள் தெரிந்திருக்கின்றனவே?" என்று அவள் தன் குதலைச் சொற்களில் தேனிழைத்து அவனை வியந்து பேசிக் கொண்டிருந்தபோதே தேர் கபாடபுரத்தை நெருங்கிவிட்டது. அருகே நடந்து சென்று கொண்டிருந்த வேறோர் பாணர் கூட்டத்தோடு தானும் இறங்கிக் கொள்வதாக அவள் கூறவே தேரை நிறுத்தச் செய்து அவளை இறக்கிவிட்ட பின் தேரிலிருந்த அவளது யாழையும் ஞாபகமாக அவள் கையில் எடுத்துக் கொடுத்து "எந்த நிலையிலும் இதைக் கீழே தவற விட்டுவிடாதே பெண்ணே! கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவக்கூடாது" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சாரகுமாரன். அவள் நன்றியோடு கை கூப்பினாள். அவ்வளவில் கோட்டை வாயிலினருகே சுற்றிலும் இளையபாண்டியர் சாரகுமாரனுக்கு வாழ்த்துக் கூறும் குரலொலிகள் எழுந்தன. அந்த ஆரவாரத்தில் தடுமாறித் தவித்த கண்ணுக்கினியாள், "எங்கே? எங்கே?" - என்று பரபரப்புடன் அருகே நின்ற பாண்டிய நாட்டுக் காவற்படை வீரன் ஒருவனை அணுகி வினாவியபோது அவன் முன்னே சென்று கொண்டிருந்த தேரையும் அதில் புன்முறுவல் மலர நின்று கொண்டிருந்த இளையபாண்டியரையும் காண்பித்தான். "அவரா? அவர் கபாடபுரத்து முத்து வணிகரல்லவா?" என்று அவள் அப்போது வியந்த வியப்புக்குரல் மற்றவர்களின் கடலலை போன்ற வாழ்த்தொலியில் கலந்து கரைந்துவிட்டது. கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|