31. யாழ் நழுவியது கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட அங்கு எடுப்பாகத் தெரிய முடியாது போயிற்று. பெரியபாண்டியருக்கும் சிகண்டியாசிரியருக்கும் நடுவே அடக்க ஒடுக்கமாகப் பணிவுடன் இளையபாண்டியன் சாரகுமாரனும் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தில் யாரையோ துழாவிக் கொண்டிருந்தன. அப்படி அவன் யாரையோ துழாவித் தேடுவதைப் பெரியபாண்டியரும் சிகண்டியாசிரியரும் அவனறியாமல் கவனித்துத் தங்களுக்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். சிகண்டியார் ஒருவருக்கு மட்டும் அந்த நிலையில் இளையபாண்டியன் மேல் மிகவும் அநுதாபமாக இருந்தது. உள்ளூற மனத்துக்குள்ளேயே அரசகுல தர்மங்களின் கடுமையான நெறி துறைகளை வெறுத்தார் அவர். பிரியமுள்ள இருவருக்கு நடுவே ஏற்றத்தாழ்வு - பெருமை - சிறுமை கற்பிக்கும் இராசகம்பீர வாழ்வின் கொடுமையினால் இளையபாண்டியன் சாரகுமாரன் தன் இருதயத்திலே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோகம் ஒன்றைத் தாங்க நேரிடப் போவதை எண்ணி அவர் தவித்தார். பாவம்! இளையபாண்டியனுக்குப் பெரியபாண்டியர் செய்திருக்கும் ஏற்பாடு தெரிந்திருக்க நியாயமில்லை. அரங்கேற்றத்திற்காகக் கூடியிருந்த அவையின் வியூகத்தில் கடைசி வரிசையாக எங்கோ ஒரு மூலையில் பாணர்கள் அமரவும், நிற்கவும் இடம் விடப்பட்டிருந்தது. விழாவில் கண்ணுக்கினியாளும் பாடுவதற்குப் பெரியபாண்டியரின் இசைவைச் சிகண்டியார் சாமர்த்தியமாகப் பெற்றிருப்பார் என்று இளையபாண்டியன் நினைத்திருந்தான். சிகண்டியார் நிலைமையோ இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. பெரியபாண்டியருக்கு அஞ்சவேண்டிய நிலையில் இருந்த அவரே இளையபாண்டியனுக்கு அநுதாபப்பட வேண்டிய நிலையிலும் இருந்தார். முடிநாகனை அருகே கூப்பிட்டு அரங்கேற்று விழாவிற்குக் கண்ணுக்கினியாளும் அவள் பெற்றோரும் வந்திருக்கிறார்களா இல்லையா என்று பார்த்து அறிந்து வரச்சொல்லலாம் என்று இளையபாண்டியன் எண்ணினாலும் அவ்வாறு செய்ய முடியாமலிருந்தது. ஒரு புறம் சிகண்டியாரும் மறுபுறம் பெரியபாண்டியரும் அமர்ந்து அவனைச் சிறை வைத்தது போலிருந்த அந்தச் சூழ்நிலையில் முடிநாகனை அருகே கூப்பிடவும் இயலாததுபோல் தோன்றியது.
கண்ணுக்கினியாள் வந்திருக்கிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமோ கட்டுக்கு அடங்குவதாக இல்லை. வாழ்க்கையின் உயரத்திலிருக்கும் ஒருவன் அதன் கீழிருக்கும் தன்னுடைய அந்தரங்கமான சினேகிதனையோ, சினேகிதியையோ காணுகிற அளவு இறங்கி வரமுடியாமற் போவது போல் கொடுமை வேறொன்றுமில்லை என்று தோன்றியது இளையபாண்டியனுக்கு. புலவர்களின் பாயிரம், சிறப்புப் பாயிரங்களுடன் நூல் அரங்கேற்றம் தொடங்கியது. சிகண்டியாசிரியர் பாண்டியர் தலைநகரையும், பெரியபாண்டியரையும், அநாகுலனையும் புகழ்ந்து பாடியபின், இளையபாண்டியர் சாரகுமாரருக்கு இசைநுணுக்கம் அறிவிப்பதன் பொருட்டு அந்நூல் இயற்றப்படுவதாகவும் தொடங்கி நூற்பாக்களை ஒவ்வொன்றாகக் கூறி விளக்கி அரங்கேற்றலானார் சில பண்வரம்புகளுக்கு ஏற்ப இளையபாண்டியனே அங்கு பாடியும் காண்பித்தான். புலவர் பெருமக்கள் சிகண்டியாசிரியரை நோக்கி ஐய வினாக்களையும், தடை வினாக்களையும் எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் சிகண்டியார் மறுமொழி கூறினார். இளையபாண்டியன் மனநிம்மதியில்லாமல் அங்கிருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தையே துழாவிக் கொண்டிருந்தன.
இறுதியில் ஒருவாறாகத் தன் மனத்துக்கு இனியவளாகிய கண்ணுக்கினியாள் நின்றுகொண்டிருந்த இடத்தையும் அவன் பார்த்துவிட்டான். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருந்த பாணர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு மூலையில் அவளும் கண் கலங்கி நின்று கொண்டிருப்பதை அவன் கண்டு கொண்டான். அவன் உள்ளம் பதறியது. "இசையிலக்கண நூலின் அரங்கேற்றத்தில் பாணர்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? அவர்களை எல்லாம் எங்கோ ஒரு கோடியில் இருக்கச் செய்திருப்பது ஏன்?" என்றெல்லாம் அவன் மனத்தில் சந்தேகங்களும் கொதிப்புக்களும் கிளர்ந்தன. ஆயினும் அவற்றைப் பாட்டனாரிடம் கேட்க அஞ்சினான் அவன். அவனுடைய பார்வை போகிற இடங்களையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த பாட்டனாரோ, "எங்கே கவனிக்கிறாய் சாரகுமாரா? ஆசிரியருக்குச் செவி கொடுத்து நூலைக் கேள். பராக்குப் பார்க்காதே!" என்றார். இதில் அவருடைய சூழ்ச்சி ஏதோ இருப்பதாகத் தோன்றினாலும் அவரைக் கேட்க முடியாமல் தவித்தான் இளையபாண்டியன். அரங்கேற்றத்தைப் பற்றியும் அதில் அவள் பாட வேண்டியதைப் பற்றியும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளிடம் தான் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். அவளை அரங்கிற்குள்ளேயே வரவிடாமல் ஒதுங்கி நிற்கச் செய்துவிட்ட விதியை எண்ணி நோவதைத் தவிர அப்போது அவனால் வேறெதுவுமே செய்ய முடியவில்லை. அரங்கேற்றம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. "இலட்சணங்கள் பிறக்கிற அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது" என்பதாக அன்று அவள் கூறியது நினைவு வந்தது அவனுக்கு. அரங்கேற்றம் முடிந்த பின்பாவது அவள் நிற்கிற இடத்தைத் தேடி ஓடவேண்டுமென்பது அவன் ஆவலாயிருந்தது. தான் ஓர் அரசகுமாரனாகப் பிறந்ததற்காக அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அன்று வருத்தப்பட்டான் அவன். ஒருவாறு அரங்கேற்றம் நிறைகிற நிலை வந்தது. சிகண்டியாசிரியர் இலக்கண நூலின் இறுதி நூற்பாவை விளக்கிக் கொண்டிருந்தார். அரசவையைச் சேர்ந்த இசைப் புலவர்கள் அதற்கு மேற்கோள் பாடிக்காட்டத் தொடங்கினார்கள். பாடி முடிந்ததும், இளையபாண்டியன் நினைத்ததற்கு மாறாகச் சங்கப் புலவர்களும், அவையிலிருந்த அறிஞர் பெருமக்களும், அவனையும், அவனுடைய பாட்டனாரையும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். பாட்டனார் அவன் கையை அன்பாகப் பற்றிக் கொண்டு நிற்கிற பாவனையில் அவன் எங்கும் நழுவ முடியாதபடி பிடித்துக் கொண்டு விட்டார். புலவர்களின் புகழுரைகள் அவனுடைய செவியை நிறைக்கத் தொடங்கின. "இளையபாண்டியருடைய குரலினிமைக்காகவே இப்படியோர் இசையிலக்கணம் தோன்றியது சாலப் பொருத்தமுடையதே" என்றார் ஒரு புலவர். "சிகண்டியாசிரியர் தருணமறிந்து இந்த இசையிலக்கண நூலை அரங்கேற்றியுள்ளார்" என்று புகழ்ந்தார் வேறோர் புலவர். யாருடைய வாயால் புகழக்கேட்டு மகிழவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டானோ அந்தப் புகழுரையைக் கேட்க முடியாமலிருந்தது. அவள் தன்னோடு வந்திருக்கும் பெற்றோர்களுடனும் பிற பாணர் கூட்டத்தினருடனும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னராவது அவளைக் கண்டு இரண்டு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனால் முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பின் அந்த அவையிலிருந்து அவனும், அவனைச் சுற்றிப் பெரியபாண்டியர், சிகண்டியார், தந்தை அநாகுலன், முதலியோருமாக வெளியேறியபோது, செல்லுகிற வழியில் கண்ணுக்கினியாள் நின்ற பகுதி வெறுமையாயிருந்தது. அவைக்கு வெளியே எங்குமே யாருமே இல்லை. ஆனால் இதென்ன? அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவளுடைய யாழ் அல்லவா கேட்பாரற்று வீழ்ந்து கிடக்கிறது? இளையபாண்டியன் பதற்றத்தோடு தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து பிரிந்து விலகிச் சென்று அந்த யாழை எடுத்தான். அது சற்றே கீறி உடைந்திருந்தது. "யாருடைய யாழ் கீழே விழுந்தபோதெல்லாம் அவன் விரைந்து எடுத்தளித்திருந்தானோ அந்த யாழ் இப்போது கீழே விழுந்து உடைந்தேவிட்டது" என்ற உண்மை மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. அது அவளுடைய யாழ்தான் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. விரக்தியிலோ, கோபத்திலோ, அல்லது தான் பார்க்கவேண்டுமென்பதற்காகவோ அவள் அதை அப்படி அங்கே போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. இதை அநுமானம் செய்யும் போது பரிதாபத்துக்குரிய அந்த அரசகுமாரனின் கண்கள் கலங்கின. கைகள் நடுங்கின. நெஞ்சம் துடிதுடித்தது. நடுங்கும் கைகளால் அந்த யாழை எடுத்துச் சென்ற போது அவன் கால்கள் பின்னின. நடை தளர்ந்தது. அந்த யாழ் ஒன்றாவது அவள் ஞாபகமாகத் தன்னிடமிருக்கட்டும் என்று அவன் அதை எடுத்து வருவதைக்கூடப் பொறுக்காமல், "இதென்ன உடைந்த யாழ் போலல்லவா தோன்றுகிறது? உடைந்த பொருள்கள் யாவும் அமங்கலமானவை. திருமகள் விலாசம் திகழும் அரண்மனை வாத்தியசாலையில் வைத்தற்குரிய தகுதி அமங்கலப் பொருள்களுக்கு என்றுமே இல்லை" என்று அதை இளையபாண்டியனிடமிருந்து வலியப் பறித்து அகழியில் எறிந்துவிட்டார் பெரியபாண்டியர். அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் சிகண்டியாசிரியர் கண்களை மூடிக்கொண்டார். இளையபாண்டியனோ பாட்டனார்மேல் வெறுப்புடனே ஒன்றும் எதிர்த்துப் பேச முடியாமல் இருந்தான். முடிந்தால் அன்றிரவோ, மறுநாள் காலையிலோ, கடற்கரைக்குச் சென்று அவளைக் கோபித்துக் கொள்ளவும் எண்ணினான். 'கவிஞனின் எழுத்தாணியும் பாணர்களின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவவிடக்கூடாது' என்று நான் முன்பு கூறியதை மறந்து விட்டாயா? கையிலிருந்த யாழ் உடைவது போல் கீழே போட உனக்கு எப்படி மனம் வந்தது பெண்ணே? - என்றெல்லாம் இடித்துரைக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஆனால் அன்று மாலையோ இரவோ, அவன் எங்கும் போக முடியாமல் சிகண்டியாசிரியரும், பெரியபாண்டியரும் அவனுடனேயே இருந்துவிட்டனர். சிகண்டியாசிரியர் ஒன்றும் பேசவில்லை. பெரியபாண்டியர் மட்டும், "ஓர் அரசகுமாரன் மலை குலைந்தாலும் நிலைகுலையாத திடசித்தமுடையவனாக இருக்கிற மனப்பக்குவம் பெற வேண்டும். கலைகளோ, கலைத்திறனோ அவன் தொழிலல்ல! கலைகளை அவன் இரசிக்கலாம். ஆனால் ஆண்மைதான் அவன் தேசத்தைக் காக்கும்" என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமின்றி உபதேசம் செய்யத் தொடங்கினார். பொறுமையாக அவற்றை அவன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்றிரவு சாரகுமாரனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. எப்போது விடியும் என்ற ஆவலிலே மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தான் அவன். விடிந்ததும் பரபரப்பான மனநிலையோடு புரவியேறிக் கடற்கரைக்கு விரைந்தான் அவன். அங்கு சென்று அவன் கண்டதென்ன? கடற்கரைப் புன்னைத் தோட்டம் வெறுமையாயிருந்தது. அங்கு பாடியிறங்கியிருந்த பாணர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அருகே இருந்த மீனவர்கள் சிலரிடம் விசாரித்ததில் முதல் நாளிரவே அவர்கள் ஒழித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. அவன் தவித்தான். மனம் பதறினான். 'இலட்சணங்கள் பிறக்கும் அவசரத்தில் இலட்சியங்கள் அழிவதும் உண்டு' என்று அவள் கூறிய சொற்களையே மீண்டும் நினைத்தான். ஏதோ ஒரு பரபரப்பில் புரவியை விரைந்து செலுத்திக் கபாடங்களைக் கடந்து புறநகருக்கு வந்தான். 'அவளைப் பின் தொடர்ந்து பிடித்துவிடலாம்' - என்ற வெறியோடு பெரும் பாண்டிய ராஜபாட்டையில் சிறிது தொலைவு சென்றபின், 'அது சாத்தியமில்லை' என்று அவநம்பிக்கையோடு மீண்டும் தளர்ந்து திரும்பினான். எதிரே அவன் பாட்டனார் நிறுத்திய மாபெரும் புகழ்மிக்க செம்பொற் கபாடங்கள் வெயிலொளியில் மின்னுவது தெரிந்தது. எதிர்காலத்தில் பெயர் சொல்ல முடிந்த பல காரியங்களைச் சாதிக்க வல்ல சரித்திரத்தை உடைய அந்த இளம் ராஜகுமாரனின் இதயம் குருதிநீர் வடித்தது அந்த விநாடியில். மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு எந்த நாளும் உலகில் வடிவம் தந்து பாடமுடியாதென்று உணர்ந்தவன் போல் விரக்தியோடு அந்த வானளாவிய கபாடங்களை மீண்டும் அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவனது அழகிய விழிகளில் நீர் மல்கியது. இப்போது அவனுடைய மனமும் ஒரு கபாடம் ஆகிவிட்டது. மனத்துக்கினிய ஒருத்தியின் மிக இனிய நினைவுகளை உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்ள வேண்டிய நிலைமையினால் அவனுடைய தலைநகரைத் தவிர அவன் மனமும் கூட ஒரு கபாடபுரம் ஆகிவிட்டது. 'எதிர்கால வரலாறு தன்னையும் - தனக்காகப் பிறந்த இசையிலக்கண நூலையும் பற்றி அறிகிற அளவு உலகம் தன் காதலின் ஏமாற்றத்தை எங்கே அறியப் போகிறது?' என்றெண்ணியவாறே குதிரையை மெல்லச் செலுத்தியபடி மீண்டும் நகருக்குள் திரும்பினான் சாரகுமாரன். கோ நகரத்தின் மாபெரும் கபாடங்கள் திறக்கப்பட்ட அந்த இனிய வைகறை வேளையிலே அந்த அநுதாபத்துக்குரிய இளவரசனின் மனதுக்குள்ளே இரண்டு கபாடங்கள் மூடிக்கொண்டன. அந்த மூடிய கபாடத்துக்குள்ளே ஒரு நளின சங்கீதம் இடையறாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு மூப்பில்லை. சோர்வில்லை. ஓய்வில்லை. உலைவில்லை. ஏனென்றால் இந்த உலகில் எந்த நாளும் மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு வடிவம் தந்து பாட முடிவதில்லை. முற்றும் கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|