5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர் நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர். சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஓசை கரையோடு மோதும் நேரத்திலே பெரிதாகியும், மற்ற வேளைகளில் அடங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது. பின்னிரவின் இதமான மென் காற்றுக் குளிரையும் மென்மையையும் இலேசாகப் பூசிக் கொண்டு உலா வந்தது. புட்பகத்திலிருந்தும், சாவகத்திலிருந்தும், தருவித்துப் பயிர் செய்து வளர்க்கப்பட்ட முகவர்ணம், முகவசீகரம் ஆகிய சாதி எலுமிச்சை மரங்களின் பூக்கள் கம்மென்று மணம் பரப்பி அந்த மகேந்திர மலைக் குன்றுகளைச் சொப்பன புரியாக்கிக் கொண்டிருந்தன. அடி வயிற்றின் உள் மண்ணில் இரத்தினக் கற்களை விளைவிக்கும் அதே நிலவளம் மேலே பொற்கனிகளாக மின்னும் எலுமிச்சைப் பழங்களைக் கொத்துக் கொத்தாகக் கனிய வைத்திருந்தன. பூக்களின் வாசனையோடு பழங்களின் வாசனையும் விரவி வந்து அந்தப் பகுதியில் நடந்து செல்வதையே போதையுண்டாக்கும் ஒரு காரியமாகச் செய்து கொண்டிருந்தன. அங்கங்கே இரத்தினக் கற்களை எடுப்பதற்காக அகழ்ந்து தோண்டப்பட்டிருந்த பெருங்குழிகளில் நீர் தேங்கியிருந்து கண்ணாடியாய் மின்னியது. குழிகளின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்களில் பட்டைத் திட்டப்பட்டும், இரத்தினமாகியும் பெருமை பெறாது கழிக்கப்பட்ட சாதாரணக் கற்கள் கூடத் தங்களிடமிருந்த ஏதோ ஒரு நிறச் சிறப்பாலும் வடிவின் தனித் தன்மையாலும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின. மகேந்திர மலைக் குன்றுகளில் நீர்வளம் அதிகம். ஈரப்பாங்கான அந்த மண்ணில் கைகளால் அகழ்ந்து சிறுகுழி தோண்டினால் கூட நீர் பெருகிவிடும். கிணறுகள் போல் வெட்டப்பட்ட குழிகளில் விரைந்து ஊறும் நீரை உடனுக்குடன் மேலே இறைத்துக் கொட்டினால்தான் தோண்டுகிறவர்களுக்கும் கற்களை வாரிப் பெரிது சிறிதாகச் சலித்து எடுக்கிறவர்களுக்கும் வசதியாயிருக்கும். அவ்வாறு நீர் இறைத்துக் கொட்டுவதற்காக மிடா மிடாவாய்க் கவிழ்த்துக் கிடந்த செப்புச் சால்கள் அங்கங்கே தோன்றின. கீழே கோ நகரில் விழா நிகழும் காலமாகையினால் இரத்தினாகரங்கள் எனப்படும் இரத்தினச் சுரங்கங்கள் இருந்த மகேந்திர மலைக் குன்றுகள் வெறிச்சோடியிருந்தன. உடம்பில் மண்ணும் சேறும் படக் குழிகளில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் அவரவர்களுக்குக் கட்டளையிடும் இரத்தின வணிகர்களாகிய சீமான்களின் கூட்டமுமின்றி மகேந்திர மலையே வறுமையாகிப் போய்விட்டது போலிருந்தது. அந்த இரவின் ஒடுக்கத்தில் குன்றுப் பகுதிகளில் எங்கோ நரிகள் ஊளையிடும் ஓசையையும் கீழே கடலலையோசையையும் தவிர வேறு ஆரவாரங்கள் இல்லை.
சிறிது நேரம் மகேந்திரமலைக் குன்றுகளில் சுற்றிவிட்டு அப்புறம் கடற்கரைப் புன்னைமரத் தோட்டத்தின் பக்கமாகச் சென்று அங்குத் தங்கியிருக்கும் பாணர்களும் விறலியர்களும், ஒருவிதமான குறைவுமின்றித் தங்கியிருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு அப்புறம் கோட்டைக்குள் போய் அகநகரில் அரண்மனையை அடையலாம் என்று புறப்படும்போது எண்ணியிருந்தான் இளையபாண்டியன். ஆனால், மகேந்திர மலைக் குன்றுகளில் சுற்றிவிட்டுத் திரும்பும் போதே அதிக நேரமாகிவிட்டது. திரும்பி வரும் போது தற்செயலாக முடிநாகனிடம் வினாவினான் சாரகுமாரன்:
"கோ நகரிலோ நமது கடற்பகுதிகளிலோ குறும்பர்களின் தொல்லைகள் இப்போதும் இருக்கின்றனவா? அல்லது அவர்கள் அடங்கி வழிக்கு வந்து விட்டார்களா?" "முழுமையாக அடங்கி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது கடற் குறும்பர்களின் தொல்லைகள் ஏற்படத்தான் செய்கின்றன. கடற்பகுதிகளைத் தவிரக் கோ நகரிலும் குறும்பர்களின் இரகசியக் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களாலும் அவ்வப்போது கலகங்கள் வரும்." "பாட்டனாரும், என் தந்தையும் மனம் வைத்தால் இவர்களை ஒரு நொடியில் அழித்தொழித்து விடலாம். ஏன் கோ நகருக்குள்ளேயே இவர்களைக் கலகக் குழுக்களாகவும், கொள்ளையிடுவோர்களாகவும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களென்று தெரியவில்லை..." "காரணமில்லாமல் பெரியவர் எதையும் செய்ய மாட்டார். தவிரவும் இந்தக் குறும்பர்களைப் பூண்டோடு அழிப்பதென்பது அறவே சாத்தியமில்லாத காரியம். கோரைப் புற்களைப் போல் அழித்து விட்டோமென்று நாம் நினைக்கும் போதே தலையெடுத்து முளைக்கக் கூடியவர்கள் இவர்கள். இவர்களுடைய ஆணிவேரும், மூலமும் எங்கெங்கே ஊன்றியிருக்கின்றன என்பதைக் கண்டு தீர்க்க முடியாது. ஒருவன் அழிந்தால் பலர் எந்தெந்த தீவுகளிலிருந்தோ வருவார்கள். குமாரபாண்டியர் நினைப்பதுபோல் இவர்களை அவ்வளவு எளிதாக அழித்தொழித்து விட முடியாது..." என்றான் முடிநாகன். பேசிக்கொண்டே அருகருகே வந்ததனால் இருவரும் தத்தம் குதிரைகளை விரைந்து செலுத்துவதற்கு முயலவில்லை. கடற்கரைப் புன்னைத் தோட்டத்தை அவர்கள் சுற்றியபோது அங்கே தங்கியிருந்த கலைஞர்களின் கூடாரங்கள் அமைதியில் ஆழ்ந்து போயிருந்தன. "அந்தப் பெண் கண்ணுக்கினியாளும் தன் பெற்றோர்களுடன் இங்கேதான் தங்கியிருப்பதாய்க் கூறினாள்" என்று ஏதோ நினைவு வந்தவனாக முடிநாகனிடம் கூறினான் சாரகுமாரன். புன்னைத் தோட்டத்துக்கு அப்பால் கடலோரத்து நீர்க்கழிகளின் கரையிலே வரிசையாக அடர்ந்து செழித்திருந்த தாழம் புதரில் பூக்கள் நிறைய மடலவிழ்ந்ததன் காரணமாகவோ என்னவோ, மணம் காற்றில் மிதந்து வந்து புன்னைத் தோட்டத்தை நிறைத்தது. அந்தப் பெண்ணைப் பற்றி நினைவு கூர்ந்த வேளையும் இந்தத் தாழம்பூ நறுமணத்தை உணர்ந்த வேளையும் ஒன்றாயிருந்த மங்கலத்தை எண்ணிச் சாரகுமாரன் தனக்குள் வியந்து கொண்டான். அதையடுத்துப் புறநகரில் கடைசியாக அவர்கள் புகுந்த பகுதி கடலிற் குளித்த முத்துக்களைப் பல்வேறு வணிகர்கள் திரட்டி வைத்திருந்த கிடங்குகளாகிய பண்டசாலைகள் நிறைந்த வீதியாகும். ஒவ்வொரு பண்டசாலையும் முன்புறம் வீதியை நோக்கிய வாயிலும், பின்புறம் பள்ளத்தில் படியிறங்கினால் அப்படியே கடலில் படகுகள் மூலம் மரக்கலங்களுக்கு ஏற்றி அனுப்ப வசதியுள்ளதாகவும் அமைந்திருந்தன. நகரணி விழாவுக்காகப் பண்டசாலைகள் மூடப்பெற்றுக் கலகலப்பின்றி இருந்ததனால் அப்பகுதி இரண்டு கிடந்தது. புறப்படும்போது, 'இளையபாண்டியர் நகர் பரிசோதனைக்குப் போய் வர ஆசைப்படுகிறார். நானும் உடன் போய் வருகிறேன்' - என்று பெரியவரிடம் சொல்லிக் கொண்டு அவர் அனுமதியுடன் தான் புறப்பட்டிருந்தான் முடிநாகன். அதனால் அவன் நேரமாவதைப் பற்றிக் கவலைப்படாமல் சாரகுமாரன் போகிற இடங்களுக்கெல்லாம் உடன் போனான். 'அரசகுடும்பத்துக் கடமைகளைப் பழகிக் கொள்வது போன்ற எந்தச் செயலை' இளையபாண்டியர் செய்தாலும் பெரியவர் அதைத் தடுக்கமாட்டாரென்பது முடிநாகனுக்குத் தெரியும். விலையுயர்ந்தவையும், பெருமதிப்புள்ளவையுமான முத்துக்களடங்கிய பண்ட சாலைகள் உள்ள வீதியில் அவர்கள் செல்லும்போது சற்று முன் அவர்களிருவரும் எந்தக் கடற்கொலைஞர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களோ, அதே கடற் கொலைஞர்கள் சிலரைச் சந்தேகத்துக்குரிய சூழ்நிலையில் சந்திக்க நேர்ந்தது. ஒரு பெரிய முத்துப் பண்ட சாலையின் வாயிலில் அவர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இளையபாண்டியரும், முடிநாகனும், இருளோடு இருளாக அவர்கள் முத்துப் பண்டசாலையின் வாயிற்கதவருகே ஒதுங்கி நிற்பதைப் பார்த்தும் பார்க்காதவர்களைப் போல் குதிரைகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு தெருவின் மறுகோடிக்கு வந்துவிட்டார்கள் என்றாலும் - தெருக்கோடியில் ஓர் ஓரமாகச் சிறிது நேரம் நின்றுகொண்டு அதைப்பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். "கோ நகரத்தின் இந்த மங்கல விழா குறும்பர்களின் கொலையோ கொள்ளையோ இல்லாமல் நிறைவடைய முடியாதென்று சொல்லுகிற அளவுக்கு இது ஒரு வழக்கமாகி விட்டது. புறவீதியின் இந்தப் பண்டசாலையினுள்ளே கொள்ளையிட இவர்களுக்கிருக்கும் வசதிகள் போல் வேறு வசதிகள் எங்கும் கிடைக்காது. கொள்ளையிட்ட பண்டங்களை அப்படியே பின்புறம் கொண்டு வந்து நிறுத்திய படகில் ஏற்றிக் கொண்டு கடலுக்குள் போய்விடலாம்" - என்று முடிநாகன் கூறியதைக் கேட்டு இளையபாண்டியருக்கு நெஞ்சம் கொதித்தது. முடிநாகன் அப்படிப் பேசியதும் அவனுடைய மனத்துக்குப் பிடிக்கவில்லை. "இதென்ன முடிநாகா? இந்தச் சமயத்தில் கதை சொல்லுவதைப் போல் இந்த அரக்கர்களைப் பற்றி எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாயே நீ? இவர்களைத் தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? கண்ணால் கண்ட பின்பும் வாளா போவது நல்லதல்லவே? 'இவர்களுடைய கொலையோ, கொள்ளையோ இல்லாமல் விழாவே நிறைவடையாது' - என்று நீ சொல்வது போல் நாம் நினைத்துக்கொண்டு பேசாமல் போய்விட முடியுமா?" "முடியாதென்றாலும் வேறென்ன செய்யலாம் குமார பாண்டியரே? குறும்பர்களுடைய உடலில் ஓடும் குருதியின் ஒவ்வோரணுவிலும் கொலை வெறி கலந்திருக்கும். யார் இன்னார் என்று பார்க்காமல் நெஞ்சுக் குழியை நோக்கி வாளைப் பிடிப்பது அவர்கள் இயல்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளோ கருவிகளோ இன்றி வந்திருக்கும் நாம் இருவரும் பலராகக் கூடி நிற்கும் அவர்களிடம் போய்ச் சிக்கிக் கொள்வது நல்லதென்றா நினைக்கிறீர்கள்?" "எப்படி இருந்தாலும் இதைத் தடுத்தாக வேண்டும். அதற்கு வழி சொல்! எந்த வணிகரின் முத்துக்களாயினும் அவை நமது கடலில் விளைந்தவை. அவற்றை நாம் கொள்ளை போகவிடக்கூடாது" - என்று மனம் குமுறிப் பிடிவாதமாகப் பேசினான் சாரகுமாரன். "இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! இந்த இடத்தில் அதற்கு வாய்ப்பு உண்டா இல்லையா என்பதை இதோ பார்த்துச் சொல்லிவிடுகிறேன்" - என்று வீதியின் எதிர்ச் சாரியில் வானளாவ மறித்துக் கொண்டிருந்த கோட்டை மதிற்சுவரை நிமிர்ந்து பார்த்தான் முடிநாகன். அப்படிப் பார்த்த மறுகணமே அவன் முகம் மலர்ந்தது. கண்களிலும் நம்பிக்கை ஒளி வந்து நிறைந்தது. மேலே கோட்டைப்புற மதிற்சுவரின் உச்சியைப் பார்த்தபின் திருப்தியோடும் நம்பிக்கை நிறைந்த குரலிலும் இளையபாண்டியரை நோக்கிக் கூறலானான் முடிநாகன்: "ஒரு வழி இருக்கிறது குமாரபாண்டியரே! இந்த இடத்தில் இப்போது இந்த அகால வேளையிலே நமக்குப் பயன்படக்கூடிய உதவி அது ஒன்று தான். நாம் அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமலே அவர்கள் நம்மிடம் பயந்து ஓடும்படி செய்ய வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை. என்னோடு தயை செய்து தாமதமின்றி உடனே நான் கூப்பிடுகிற இடத்துக்கு குமாரபாண்டியரும் வரவேண்டும்." "இத்தனை அவசரமாக என்னை எங்கே அழைக்கிறாய் முடிநாகா?" "அவற்றை எல்லாம் விவரம் சொல்லி விவாதிக்க இப்போது நேரமில்லை. புறநகரிலிருந்து கோட்டை மதில்மேல் ஏறுவதற்குள்ள வழிகளில் ஒன்று இந்த இடத்திலிருந்து மிக அருகிலுள்ள மதிற்சுவர்ப் பகுதியில் உள்ளது. இப்படிப் புற நகரிலிருந்து மதில் மேல் ஏறுவதற்குள்ள வழிகளுக்குப் பெருங்கதவும் - அந்தப் பெருங்கதவினூடே அமைந்த சிறிய திட்டவாயில் கதவும் அவற்றிற்குக் காவலாக ஆயுதந்தாங்கிய யவனக் காவல் வீரனும் உண்டு என்றாலும், நாம் எப்படியும் அவற்றைக் கடந்து மதில் மேல் ஏறியாக வேண்டும்." "ஏறி என்ன சாதித்துவிட முடியும்." "முடிகிறதா இல்லையா என்றுதான் பாருங்களேன்?" இருவரும் தத்தம் குதிரைகளை விரைந்து செலுத்திச் சென்று அந்த இடத்தை அடைந்தனர். குதிரைகளிலிருந்து கீழிறங்கி படிவழிக்கு நுழைவாயிலான செப்புத்திட்டி வாயிற் கதவை தட்டியதும் பூதாகாரமான தோற்றத்தையுடைய கருங்குன்று போன்ற யவனக் காவல் வீரன் ஒருவன் வந்து கதவைத் திறந்தான் அவன் கையிலிருந்த தீப்பந்தத்தின் ஒளியில் இளைய பாண்டியர் தனது வலது கரத்தை முன் நீட்டி முத்திரை மோதிரத்தைக் காண்பித்த போது பயபக்தியுடன் கைகூப்பி வணங்கி வழிவிட்டான் அவன். இளைய பாண்டியனும், முடிநாகனும் உள்ளே நுழைந்து கொண்டு திட்டவாயிற் கதவை மறுபடியும் அடைத்துத் தாழிட்டு விடுமாறு அவனுக்குச் சைகை காட்டினர். அவன் வெளியே நின்ற குதிரைகளைச் சுட்டிக் காண்பித்துச் சைகையால் முடிநாகனிடம் ஏதோ வினவினான். 'குதிரைகள் அங்கு நின்றால் நின்றுவிட்டுப் போகட்டும்! நீ கதவை அடைத்து உடனே உட்புறமாகத் தாழிடு' என்று முடிநாகன் கடுமையாய முகக்குறிப்போடு விளக்கியவுடன் அவன் கனமான செப்புத்திட்ட வாயிற்கதவை உட்புறமாகத் தாழிட்டான். அவனை அங்கே நின்று கொள்ளச் சொல்லியதுமில்லாமல், "நாங்கள் சொல்லுகிறவரை வேறு யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்கவேண்டாம்" - என்பதையும் உணர்த்தியபின் இருவரும் மதில் மீதேறி அங்கு வீரர்கள் நின்று போர் புரிவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு மேடை போன்ற நீண்ட தளத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து கடற்குறும்பர்கள் கூட்டமாக நின்ற முத்துப் பண்டசாலை இருந்த பகுதிக்கு நேர் எதிரே மேலே இருந்த சுவர்ப் பகுதியை அடைந்தார்கள். நேர் எதிரே கீழே சாலையில் கொலைஞர்கள் நிற்பது மேலிருந்து நன்றாகத் தெரிந்தது. கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|