12 மாமா சிறிதளவு மன்றாடிக் கூடப் பார்த்தார். “என்னப்பாது? திடீர்னு எல்லா ஏற்பாட்டையுமே மாத்தறியே. அரண்மனை கஜானாவிலே செப்பாலடிச்ச சல்லி இல்லாம இருந்தும் கூட நான் என்னோட சொந்தக் காசை மாத்தில் வச்சுக்கிட்டு உன் பிரச்னைகளைத் தீர்க்கலாம்னு பார்த்தா அதையும் ஒத்திப் போடறியே? ஒரு நாளைக்கு இவங்க தீனிச் செலவு என்ன ஆகும்னு பார்த்தாக் கூட இவர்களை அரண்மனையிலே வச்சுக் கட்டிக்காக்கிற ஒவ்வொரு நிமிஷமும் தண்டச் செலவுதான்னு நீயே புரிஞ்சுக்குவே தனசேகரன்!” “நீங்க சொல்றதை அப்படியே நூற்றுக்கு நூறு ஒத்துக்கறேன் மாமா. ஆனாக் கொஞ்சம் பொறுத்துக்குங்க. இந்த டைரிகளைத் தேடிப் பிடிச்சுக் கண்டெடுத்துப் படிக்கச் சொன்னதே நீங்க தான். படிக்கத் தொடங்கினதோ தொடங்கியாச்சு... முழுக்கப் படிச்சு முடிச்சாச்சுன்னா இந்த இளையராணிகள் பிரச்னையைப் பற்றியே ஏதாச்சும் முடிவு தெரியலாம். அதுக்குத்தான் சொன்னேன்” என்று தனசேகரன் பதற்றமின்றி நிதானமாக விஷயத்தை விளக்கியதும் மாமா வழிக்கு வந்தார். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே நடந்த இந்த விவாதத்தில் குறுக்கிட விரும்பவில்லை. சும்மா அதைக் கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தார். தனசேகரன் கோவிலில் சந்தித்த இளையராணியைப் பற்றி மாமாவிடம் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. அதன் மூலம் அவருக்கும் தனக்கும் இடையில் வீண் விவாதமும் வம்புப் பேச்சும் தான் வளரும் என்று நினைத்தான் அவன். ஆனால் எப்படியும் அன்று மாலைக்குள் அந்த இளையராணியை சந்தித்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டுவிட மனத்துக்குள் தீர்மானித்துக் கொண்டான். மாமா மேலே எதுவும் விவாதம் வைத்துக் கொள்ளாமல் அவனை உடனே திருப்பி அனுப்பி விட்டார். “சரி? அப்படியானால் நீ எதுவும் செய்ய வேண்டாம். முதல்லே போய் முழு மூச்சா உட்கார்ந்து அந்த டைரிகளை எல்லாம் படிச்சு முடி. மத்ததை எல்லாம் பின்னாலே பார்த்துக்கலாம்” என்று அவரே கூறி விட்டதனால் அவன் அங்கிருந்து புறப்படுவது சுலபமாயிற்று. அவன் அரண்மனை அலுவலகத்திலிருந்து வெளியேறிய போது வெளியே காத்திருந்த டிரைவர் ஆவுடையப்பன், “எங்கேயாவது போகணுமா சின்ன ராஜா? காரை எடுக்கட்டுமா?” என்று கேட்டான். “இப்போ எனக்குக் கார் எதுவும் வேண்டாம் ஆவுடையப்பன்! நான் எங்கேயும் போகப் போறதில்லை. எதுக்கும் நீ இங்கேயே இரு, ஒரு வேளை மாமாவும் காரியஸ்தரும் எங்கேயாவது வெளியே போறதுக்குக் கார் தேவைப் படலாம்.”
இதைக் கேட்டு ஆவுடையப்பன் அங்கேயே தங்கிக் கொண்டான். தனசேகரன் தனியே தன் அறைக்குச் சென்றான்.
கோவிவில் சந்தித்த அந்த அநுதாபத்திற்குரிய இளைய ராணியை எங்கே எப்படிச் சந்தித்துப் பேசுவது என்ற பிரச்னை இப்போது அவன் மண்டையைக் குடையத் தொடங்கியது. இளையராணிகளின் அந்தப்புரத்திற்கே போய் அவளை மட்டும் தனியே வரவழைத்துப் பேசுவதென்பது அவனுக்குச் சரியாகப்படவில்லை. மற்ற இளைய ராணிகள் வீண் வம்புப் பேச்சுப் பேசுவதற்கு இடங் கொடுக்கிறாற்போல அவன் நடந்து கொள்ள விரும்பவில்லை. மிகவும் அழகியாகவும் இளைய வயதினளாகவும் தோன்றக் கூடிய இந்த இளைய ராணியை அவன் சந்திப்பதே ஓர் அபவாதத்துக்குரிய விஷயமாகிக் காட்டுத் தீப் போலப் பரவிவிடக் கூடும். அரண்மனை எல்லையில் அடைந்து கிடக்கிற எல்லா இளையராணிகளுமே வீம்புக்காரிகள். அவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் வம்பு பேசக் கூடியவர்கள். அதுவும் அவர்கள் எல்லோருமே தன்னைச் சந்தித்துப் பேச விரும்புவதாகக் கூறி முயன்று தானோ மாமாவோ அதற்குத் தயாராயில்லை என்று மறுத்தபின் அவர்களில் ஒருத்திக்கு மட்டும் விசேஷச் சலுகை காட்டித் தான் தேடிப் போய்ச் சந்திப்பது என்பது பெரிய பிரச்சினையாகி விடக்கூடும் என்பதையும் அவனால் முன்கூட்டியே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. தீவிரமாக நினைத்துப் பார்த்தால் அவளைச் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டது, ஒரு விதத்தில் தன் தவறோ என்று கூட அவனுக்கு இப்போது தோன்றியது. எப்படி எந்த விதத்தில், எங்கே அந்தச் சந்திப்பு நடக்க முடியும் என்று அவனும் தன்னால் ஆன வரை சிந்தித்துப் பார்த்தான்; ஒன்றுமே தோன்றவில்லை. பிற்பகலில் உள்பட்டணத்தில் கோவிலுக்கு அருகிலேயே உள்ள குருக்கள் வீட்டிற்குப்போய் “இந்தச் சந்திப்பு சாத்தியமில்லை. தயவு செய்து மன்னியுங்கள்...” என்று அவரிடமே மறுத்துச் சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தான் அவன். பழைய சமஸ்தான முறைகள், சம்பிரதாயங்களின்படி நடப்பதானால் குருக்கள் வீட்டுக்கு அவன் தேடிப் போவதைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். சொல்லியனுப்பினால் குருக்களே அரண்மனைக்குத் தேடி வந்து காத்திருந்து அவனைச் சந்திப்பார். ஆனால் அந்த முறைகளை அவன் அப்படி அனுசரிக்காவிட்டால் ஏனென்றும் எதற்கென்றும் தட்டிக் கேட்பவர்கள் இப்போது யாருமில்லை. திவான்கள் வேலை பார்த்தவரை இந்த முறைகள் சம்பிரதாயங்களை எல்லாம் அவர்கள் அக்கறை எடுத்துக் கொண்டு வற்புறுத்தி வந்தார்கள். கடைசி நாட்களில் ராஜமான்யம் போன பின்னரும் தன் தந்தை இவற்றை எல்லாம் ஓர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல் குறைத்துக் கொள்ளாமல் கடைப்பிடித்து வந்தார் என்பது தனசேகரனுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் தன்னை இந்த மாதிரிக் காரியங்களை எல்லாம் செய்யுமாறு காரியஸ்தரோ, மாமாவோ இந்த விநாடி வரை தூண்டவில்லை என்பதை அவன் நினைவு கூர்ந்தான். ஆனால் டிரைவர் ஆவுடையப்பன் போன்றவர்கள் சுபாவத்தில் நல்லவர்களே ஆனாலும் இளையராஜா என்ற முறையில்தான் பழைய ஜபர்தஸ்துக்களை எல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்தது. தன் குடும்பத்தினரைத் தவிர உட்கோட்டையில் குடியிருந்தவர்களில் எல்லாராலும் மதிக்கப்படுகிற பிரமுகரான் தட்சிணாமூர்த்திக் குருக்களைத் தான் வீடு தேடிப் போய் பார்க்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தன் தந்தை எதை எதை எல்லாம் சம்பிரதாயம் என்று முரண்டுடன் கடைப்பிடித்து வந்தாரோ அவற்றை எல்லாமே தன் காலத்தில் உடைத்து விடவேண்டும் என்ற வெறி வேறு அப்போது அவனுள் மூண்டிருந்தது. யார் என்ன நினைத்தாலும் நினைத்துக் கொள்ளட்டும். தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டுக்கு அன்று தான் போயே தீருவது என்ற முடிவுக்கு வந்தான் அவன். திட்டப்படி மாலையில் அவன் குருக்கள் வீட்டுக்குப் போய்த் தன் கருத்தைத் தெரிவித்தான். ஆனால் குருக்கள் அவன் சொல்லியதை அப்படியே ஏற்றுக் கொள்ள வில்லை. “சின்னராஜா என்ன நினைத்தாலும் சரி! இந்த அப்பாவிப் பெண்ணுக்கு வாக்கு கொடுத்ததை மறந்துடக் கூடாது; கொடுத்த வாக்கைக் காப்பாற்றணும்கிறதுதான் என்னோட விருப்பம். சின்னராஜாவுக்கு அம்மா மேலே இருக்கிற பிரியமும், மரியாதையும் எனக்கு நன்றாகத் தெரியும். உங்கம்மாவுக்கு அடுத்தபடி எந்தப் பெண்ணுக்காவது இந்த அரண்மனையிலே நீங்க மரியாதை செலுத்த முடியும்னா அது இந்தப் பெண்ணாகத்தான் இருக்க முடியும். மத்த எல்லா இளைய ராணிகளும் உங்க அம்மாவுக்கு எதிராப் பெரியராஜாகிட்ட தூபம் போட்டுத் தூண்டி விட்டுக்கிட்டிருந்த காலத்திலேயே துணிஞ்சு உங்கம்மாவுக்கு ஆதரவாகவும், அநுசரணையாகவும் ராஜா கிட்டப் பேசிக்கிட்டிருந்த ஒரே இளையராணி இவதான். உங்கம்மாவைத் தன் மூத்த சகோதரியாக நினைத்து மரியாதை செலுத்தினவள் இவள். ராஜாகிட்ட எல்லோரும் பணம் பறிச்ச காலத்திலேயே பணத்தாசை இல்லாமே இருந்தவ இவ. இன்னிக்கும் அதே மாதிரிதான் இருக்கா. தயவு பண்ணி இவளை ஏமாற்றிவிடக் கூடாது” என்றார். குருக்கள். தனசேகரனுக்கு அவரிடம் அப்போது என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. இந்த இளையராணி தன் தாயின் மேல் நிரம்ப மரியாதை உள்ளவள் என்பது தெரிந்தபின் இவள் மேல் தனசேகரனின் அனுதாபம் அதிகமாயிற்று, நிர்த்தாட்சண்யமாக, ‘இவளைச் சந்திக்க மாட்டேன்’ என்று கண்டிப்பாக அவனால் இப்போது சொல்ல முடியவில்லை. அதே சமயம் எப்படி, எங்கே சந்திப்பதென்று தான் புரியவில்லை. தன் சந்தேகத்தை அவன் குருக்களிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான். “சரி! நீங்க சொல்றதை எல்லாம் அப்படியே ஒத்துக்கிறேன். எனக்கும் இவங்கமேல அநுதாபமாகத்தான் இருக்கு. பார்க்கமாட்டேன் பேச மாட்டேன்னு மறுத்துச் சொல்லத் தயங்கிக்கிட்டேதான் இதை உங்ககிட்டச் சொல்றேன் குருக்களே! ஆனா நான் இவங்களை எங்கே எப்படிச் சந்திக்க முடியும்? ஊர் வாய் பொல்லாதது. அரண் மனையிலேயே சந்திக்கலாம்னா மற்ற இளைய ராணிங்கள்ளாம் சேர்ந்து அநாவசியமா என் தலையை உருட்டுவாங்க. அம்மா, மகன்னு கூட உறவுமுறையைப் பார்க்கமாட்டாங்க. வெறுப்பிலே இல்லாத பொல்லாத கதை எல்லாம் கட்டி விட்டுடுவாங்க. அதுக்குத்தான் பயப்படறேன். ஒருவேளை எனக்காக நீங்களென் சார்பில் இந்த இளைய ராணி கிட்டப் பேசி என்ன விஷயம்னு தெரிஞ்சு எங்கிட்டச் சொல்லிவிட்டாலும் சரிதான். அது என்னாலே செய்ய முடிஞ்ச காரியமாக இருந்தால் கட்டாயம் உங்களுக்காக அதைச் செய்து கொடுப்பேன்.” “அது நால்லா இருக்காது யுவராஜா! உங்களை நேரில் சந்தித்துப் பேசணும்னு அந்த ராணி சொல்றப்போ ‘எங்கிட்டப் பேசினாலே போதும். நான் எல்லாத்தையும் யுவராஜாகிட்டச் சொல்லிடுவேன்’னு நான் போய் அவங்களை கேட்கிறது சரியில்லே. உங்களுக்கு ஆட்சேபணையில்லேன்னா தயவு பண்ணி இன்னும் அரைமணி நேரம் மட்டும் நீங்க தாமதிச்சால்கூட இங்கேயே நான் அவங்களை வரச் சொல்லிடுவேன். இங்கே வந்து சந்திக்கிறதிலே யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லே! இந்த இளையராணி ஜோசியம், நாள், நட்சத்திரம் பார்க்க இங்கே எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போறது வழக்கம்தான்.” அப்போது தனசேகரனுக்கும் குருக்கள் சொல்லிய யோசனை சரி என்றே பட்டது. அவரிடம் சரி என்று சம்மதித்தபின், “ஆனால் ஒன்று அந்த இளைய ராணியோடு பேசி முடித்தபின் நான் இங்கிருந்து வெளியேறிச் சென்ற பிறகு அரைமணி நேரமோ, முக்கால் மணி நேரமோ இடைவெளி விட்டுத் தாமதித்துப் பின்தங்கித்தான் அவர்கள் இங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. நான் தற்செயலாக இங்கே வந்து போனது போல இருக்க வேண்டும். அவங்களும் தற்செயலாக இங்கே வந்து போனது போல இருக்கவேண்டும்” என்றான் தனசேகரன். குருக்கள் அதற்குச் சம்மதித்தார். அரண்மனை அந்தப்புரத்திற்கும் குருக்கள் வீட்டிற்கும் சகஜமாக வந்து போகிற வேலைக்காரி ஒருத்தி மூலமாக உடனே தகவல் சொல்லியனுப்பப்பட்டது. அந்த வேலைக்காரி நம்பகமானவள் என்றும் விஷயம் பரம ரகசியமாக இருக்கும் என்றும் குருக்கள் உத்தரவாதம் அளித்தார். அவர் சொல்லி அனுப்பியபடியே அந்த இளையராணியை அழைத்துக் கொண்டு வேலைக்காரி பத்தே நிமிஷங்களில், குருக்கள் விட்டுக்கு வந்துவிட்டாள். அடிக்கடி ஜோஸியம், நாள், நட்சத்திரம், சோமவாரம், கார்த்திகை விரதம் பற்றி அறிய அந்த இளையராணி தன் வீட்டுக்கு இப்படி வந்து போவது வழக்கம் என்பதால் இதில் யாருக்கும் சந்தேகம் வராது என்று குருக்கள் மீண்டும் மீண்டும் உத்தரவாதம் அளித்தார். பேசும்போது குருக்களும் கூட இருக்க வேண்டும் என்று தனசேரன் அவரிடம் வற்புறுத்தினான். “ரொம்ப நல்லதாப் போச்சு! இதில் அவருக்குத் தெரியக் கூடாத இரகசியம் ஒன்றும் இல்லை. அவர் தாராளமாக இருக்கலாம்” என்றாள் அவள். அவர்கள் பேச்சு அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. கான்வெண்ட் பள்ளிகளின் வழக்கமான ஸ்கூல் யூனிஃபாரம் அணிந்த கோலத்தில் ஓர் எட்டு வயதுச் சிறுவனின் அழகிய சிறு புகைப்படம் ஒன்றை எடுத்துத் தனசேகரனிடம் காண்பித்தாள் அந்த இளையராணி. அந்தச் சிறுவன் துறு துறு வென்று மிகவும் அழகாகத் தோன்றினான். அவன் கண்கள் ஒளி நிறைந்திருந்தன. “இவன் உங்கள் தம்பி! இவனுக்கு ஒன்பது வயதாகிறது. ராஜாவுக்கு என்னிடம் பிறந்த குழந்தை. அரண்மனைச் செலவில் கொடைக்கானலில் உள்ள ஓர் ஆங்கில ரெசிடென்ஷியல் ஸ்கூலில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறான். இவனைத் தவிர இந்த உலகில் எனக்கு ஆறுதல் அளிப்பவர் இப்போது வேறு யாருமில்லை. நான் உயிர் வாழ்வதே இவனுக்காகத்தான். ராஜாவிடம் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி இவனைக் கொடைக்கானலில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறேன். நீங்கள் இங்கிருந்து எல்லா இளையராணிகளையும் பணம் கொடுத்து வெளியேற்றப் போவதாகப் பேச்சுக் காதில் விழுகிறது. என்னைப் பொறுத்தவரை நான் இங்கிருந்து வெளியேறினால் பிச்சை எடுத்தால்கூட மானமாகப் பிழைத்துக்கொள்வேன். எனக்கு நீங்கள் பணம் கொடுக்கா விட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் இந்தப் பிள்ளையினுடைய படிப்புக் கெடக்கூடாது. யாராவது ஏதாவது, “உனக்கென்ன்டா கான்வெண்ட் படிப்பு வேண்டிக் கிடக்கிறது. ராஜாவோட வைப்பாட்டி மகனை எல்லாம் கான்வெண்டில் படிக்க வைத்துக் கட்டுப்படி ஆகாது. போடா வெளியே!” என்பதுபோலப் பேசி இந்தச் சின்னஞ்சிறு மனசைச் சலனப் படுத்தி விடக்கூடாது. இந்த வாக்குறுதியை உங்களிடம் கேட்கவே நான் உங்களைத் தனியே சந்திக்க விரும்பினேன். இவன் கல்லூரிப் படிப்புக்குத் தயாராகி நினைவு தெரிகிற வரை இங்கே யாரும் இவனுக்குத் தாழ்வு மனப்பான்மை வரும்படி புண்படுத்திப் பேசவோ, குறைவுபடுத்திப் பேசவோ கூடாது. எந்த விதமான தடையும் இன்றி இவன் தன் படிப்பைத் தொடருவதற்கு எப்போதும் போல அரண்மனை உதவி கிடைத்து வரவேண்டும். அதே சமயம் அரண்மனையிலிருந்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித உதவியும் வேண்டியதில்லை. நான் இந்தக் கோவிலில் தெளித்துப் பெருக்கிக் கோலம் போட்டாவது வயிற்றைக் கழுவிக் கொள்வேன். அரண்மனையிலிருந்து நீங்கள் மற்ற எல்லா இளையராணிகளையும் வெளியேற்றும்போது என்னையும் நிர்த்தாட்சண்யமாக வெளியேற்றி விடலாம்.” இதைச் சொல்லும்போது அவள் குரல் கரக்ரத்தது. கண்களில் நீர் மல்கியது. தனசேகரன் மனநிலையோ மிக மிக உருக்கமாக இருந்தது. மாமாவைப் போல ஒரு கறார்ப் பேர்வழியையும், காரியஸ்தரைப்போல அரண்மனை உள் விவகாரங்களைத் தெரிந்த ஒருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஏற்கெனவே பொதுவாகத் தீர்மானித்துவிட்ட ஒரு முடிவுக்குப் புறம்பாக இவள் பையனுக்கு மட்டும் எப்படி ஒரு தனிச்சலுகையை வழங்குவது என்று தனசேகரன் யோசிக்கத் தொடங்கினான். அவன் யோசிப்பதையும் தயங்குவதையும் கண்டு அவள், “உங்கள் உடம்பில் எந்த இரத்தம் ஓடுகிறதோ அதே ராஜ குடும்பத்து இரத்தம் தான் இவன் உடம்பிலும் ஓடுகிறது. பெரிய ராணி - அதாவது உங்கம்மாவும் நானும் இந்த அரண்மனையிலே அக்கா தங்கை மாதிரிப் பழகினோமே தவிர, ராணியும் சக்களத்தியுமாகப் பழகலை. அதே போல நீங்களும் அண்ணன் தம்பி மாதிரிப் பழகணும்கிறது என் ஆசை. உங்கம்மா உடம்பு செளகரியமில்லாமப் படுத்திருந்த போதெல்லாம் நான் நர்ஸ்போல இருந்து என் உடம்பை அவங்களுக்குச் செருப்பாத் தைச்சுப் போட்ட மாதிரி உழைச்சிருக்கேன். மலம், மூத்திரம்லாக்கூட அருவருப்பு இல்லாமே இந்தக் கையாலே அள்ளிப் போட்டிருக்கேன். எனக்கு நீங்க இந்த உபகாரத்தைச் செஞ்சுதான் ஆகணும்” என்று கெஞ்சத் தொடங்கினாள். அவளுடைய வேண்டுகோளில் தாய்மையின் நிஷ்களங்கமான கனிவு தொனித்தது. சுபாவத்தில் நல்லவனான தனசேகரனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அவளுக்கு மட்டும் ஒரு விதிவிலக்காக ஒரு சலுகையை எப்படிச் செய்ய முடியும் என்றுதான் அவன் இப்போது யோசித்தான். “தட்டிச் சொல்லாமல் நீங்க இந்த உபகாரத்தைப் பண்ணனும்னுதான் நானும் ஆசைப்படறேன் யுவராஜா!” என்று குருக்களும் உரையாடலில் கலந்து கொண்டார். கடைசியில் தனசேகரனுக்கு ஒரே ஒரு வழிதான் புலப்பட்டது. சத்தியமான உணர்வுகள் உள்ள ஒரு நல்ல தாய்க்காக அப்படி ஒரு பொய்க்கூடச் சொல்லலாம் என்றுதுணிந்தான் அவன். இந்த ஒரு பையனின் படிப்பு முதலிய செலவுகளை அரண்மனையிலிருந்தே தந்தாக வேண்டும் என்று காலஞ்சென்ற தந்தையின் டைரியில் இவனைக் கொடைக்கானல் பள்ளியில் சேர்த்த தினத்தன்று எழுதப்பட்டிருப்பதாகத் தானே மாமாவிடமும் காரியஸ்தரிடமும் ஒரு பொய்யைச் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் இந்த முடிவை. அவர்களிடம் அவன் அப்போது விவரிக்கவில்லை. “எங்கே, டைரியைப் பிரித்து அந்தப் பக்கத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்” என்று மாமா தன்னிடம் ஒருபோதும் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. இந்த விஷயத்தில் மாமாவின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றி அவ்னுக்கு நன்கு தெரியும். “கவலைப்பட வேண்டாம்! நீங்கள் எனக்குச் சின்னம்மா மாதிரி. உங்கள் கோரிக்கையைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். இந்தக் குருக்கள் அதற்குச் சாட்சி. ஆனால் நீங்கள் இதற்காக என்னைச் சந்தித்ததோ வேண்டிக் கொண்டதோ தெரியக் கூடாது” என்று தனசேகரன் கூறியதும். அவள் முகம் மலர்ந்து புன்முறுவல் பூத்தாள். அவள் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். “மகன்தான் தாயைக் கும்பிட வேண்டுமே ஒழியத் தாய் மகனைக் கும்பிடுவது வழக்கமில்லை” என்று சொல்லிச் சிரித்தான் தனசேகரன். குருக்களும் சிரித்தார். |