5 “இருக்குங்க! ஆனால் பழைய மகாராஜா அந்த மெஷினரீஸ் மேல ஏதோ பேங்க் லோன் வாங்கியிருக்காருங்க. அதனாலே அந்த பிரமிஸ்ஸைப் பூட்டிப் பேங்க்காரங்க ஸீல் வச்சு அவங்களோட கஸ்டடியிலே எடுத்துக் கிட்டிருக்காங்க.” “என்னென்ன மெஷினரீஸ் இருக்கு? டைப்ஸ் எவ்வளவு இருக்கு?” “ஞாபகத்திலே இருந்து சொல்றேன். ஒரு ஹைடில்பர்க் ஆட்டோமாடிக் ஸிலிண்டர் - அதே ஹைடில்பர்க் கலர் பிரிண்டிங் மிஷன். ஒரு ஆட்டோமாட்டிக் கட்டிங் மிஷின், தமிழிலேயும், இங்கிலீஷ்லேயுமா, ஏராளமா டைப்ஸ் எல்லாம் இருக்கிறதா ஞாபகம்.” “அப்போ ஒண்னு செய்யுங்க சேர்வைகாரரே! பிரஸ் பேரிலே பேங்க்லே லோன் வாங்கறப்ப மகாராஜா ‘ஸைன்’ பண்ணின பேப்பர் காப்பீஸ்லாம் அரண்மனை ஆபீஸ் ஃபைல்லே வச்சிருப்பீங்களே? அதையெல்லாம் தேடி எடுங்க. அப்புறம் மேலே என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணுவோம்.” மாமா தங்கபாண்டியன் இவ்வாறு கூறியதுமே அந்த விருந்தினர் விடுதியிலிருந்த டெலிஃபோனிலேயே அரண்மனை அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு பிரஸ் சம்பந்தமான ஃபைல்களைத் தேடி எடுக்குமாறு அங்குள்ளவர்களைக் கேட்டுக் கொண்டார் காரியஸ்தர். உடனே அப்போதுதான் ஞாபகம் வந்தவரைப் போல் மாமா டெலிபோன்களைப் பற்றி விசாரித்தார். “சமஸ்தானச் செலவிலே மொத்தம் எத்தனை டெலிபோன் இருக்கு? எத்தனை எக்ஸ்டென்ஷன்ஸ் இருக்கு? அதிலே எதெது கண்டிப்பாக இருந்தாகணும்; ஏதெதை உடனே ரிமூவ் பண்ணச் சொல்லிடலாங்கிற அளவுக்கு அநாவசியம்?” “கணக்கு எடுத்து இன்னிக்குச் சாயங்காலத்துக் குள்ளார உங்க கிட்ட ஒரு லிஸ்ட் போட்டுத் தந்துடறேன். எது அவசியம் இருக்கணும். ஏதெதை உடனே எடுத்துடலாம்கிறதை நீங்களும் சின்ன ராஜாவுமா முடிவு பண்ணிச் சொல்லிடுங்க” என்றார் பெரிய கருப்பன் சேர்வை. “சமஸ்தானத்துக் கோவில்கள் நிலைமை என்ன? பசு மடம் எங்கெங்கே இருக்கு? தேவாரப் பாடசாலை, வேத பாடசாலை எல்லாம் எப்படி எப்படி இருக்கு? இந்த நாளிலே அதுக்கெல்லாம் படிக்கிறதுக்குப் பையன்கள் தேடி வராங்களா இல்லியா...?”
“அரசநாத மங்கலம் வேதபாடசாலையியே நாலே நாலு பையன்கள் மட்டும் படிக்கிறாங்க. குணவேதி நாடு சிவலாயத்தை ஒட்டி இருக்கிற தேவாரப் பாடசாலையிலே பன்னிரண்டு பிள்ளைகள் இருக்காங்க. அங்கே மூணு ஓதுவார் மூர்த்திகள் தேவாரம் சொல்லிக் கொடுக்கிறாங்க. வேத பாடசாலை, தேவார பாடசாலை எல்லாத்திலேயும் பையன்களுக்குச் சாப்பாடு போட்டு மாதம் எட்டு ரூபாய் ‘ஸ்டைபண்ட்’ வேறே கொடுத்திட்டிருந்தோம். ராஜ மான்யம் நின்ன வருஷமே பெரிய மகாராஜா என்னைக் கூப்பிட்டு, ‘இனிமே ‘ஸ்டைபண்ட்’ கிடையாதுன்னு ஸர்குலர் அனுப்பிடுங்க, சாப்பாடு மட்டும் போதும்’ னுட்டாரு.”
“பாடசாலைச் செலவு, கோவில்களோட வருமானத்திலே இருந்து செய்யறிங்களா... அல்லது சமஸ்தானத்திலே வேற வருமானத்திலே இருந்து செய்யறிங்களா?” “அந்த ‘எக்ஸ்பெண்டிச்சர்’ எல்லாமே ‘டெம்பிள்ஸ் அண்ட் சாரிட்டீஸ்’ங்கிற ஹெட்லே தான் வரும். கோவில் வருமானங்களுக்குச் செலவு கணக்குக் காட்ட இப்படி ஏதாச்சும் ரெண்டு மூணு இருக்கட்டும்னுதான் மகாராஜா இதெல்லாம் மூடாமே விட்டு வச்சிருந்தாரு. எங்கிட்டவே ஒருவாட்டி அதை அவரே வாய்விட்டுச் சொல்லக் கூடச் சொல்லியிருந்தாரு” என்றார் பெரிய கருப்பன் சேர்வை. அப்போது தனசேகரன் குறுக்கிட்டுக் கேட்டான். “நாலு பையன்களுக்கும் ஐந்தாறு பையன்களுக்குமா இவ்வளவு செலவழிச்சுப் பாடசாலைங்க எதுக்கு?” “ஒரேயடியா அப்படிச் சொல்லிடப்படாது தம்பி. கல்சர். ரெலிஜன், டிரடிஷன் இதை எல்லாம் நாலு பேரா. அஞ்சு பேரான்னு எண்ணிக்கையை வச்சுப் பார்க்கக் கூடாது. எந்த எண்ணிக்கைக்கு குறைவாயிருந்தாலும் அந்த எண்ணிக்கையிலேயே வச்சு ‘அப்ஸ்ர்வ்’ பண்ணனும். அதுதான் முறை” என்று மாமா தனசேகரனுடைய அபிப்பிராயத்துக்குத் திருத்தம் கூறினார். அதில் மாமாவுக்கு இருந்த பிடிவாதத்தைப் பார்த்துத் தனசேகரனே ஆச்சரியப்பட்டுப் போனான். மாமாவிடம் பல நேர்மாறான குணங்கள் இணைத்திருந்தன. சிக்கன உணர்வும் இருந்தது. தாராள மனப்பான்மையும் இருந்தது. எதில் சிக்கனமாக இருக்கவேண்டும் எதில் சிக்கனமாக இருக்கக் கூடாது, எதில் தாராளமாக இருக்கவேண்டும், எதில் தாராளமாக இருக்கக்கூடாது என் பதில் எல்லாம் ஒரு தெளிவான தாரதம்மியமும், அபிப்பிராயமும் அவருக்கு இருந்தன. தனசேகரனுக்கு மாமா அருகில் இருந்தது பல பிரச்னைகளில் வழவழா என்று இழு படாமல் முடிவு செய்யப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த அரண்மனை அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள், வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பிரச்னைகள் எல்லாவற்றையும் பற்றி அதன் ஒரே வாரிசாகிய தனசேகரனுக்குத் தெரிந்திருந்த விவரங்களை விடத் தாய் மாமனாகிய தங்கபாண்டியனுக்கு அதிகம் தெரிந்திருந்தது. அன்று பகல் சாப்பாடு முடிந்ததும் காரியஸ்தரையும் தனசேகரனையும் உடனழைத்துக் கொண்டு மகாராஜாவின் இளையராணிமார்கள் அடைந்து கிடந்த அந்தப்புரப் பகுதிக்குள் சென்றார் மாமா தங்கபாண்டியன். “சேர்வைகாரரே! எதுக்கும் நாம இந்தப் பொம்பளைங்களோட அறைக்குள்ளாரப் போக வேண்டாம். முன் ஹால்லேயே ஒரு பெரிய ஜமுக்காளத்தை கொண்டாந்து விரிச்சு அவங்களை எல்லாம் வந்து உட்காரச் சொல்லுங்க. அவங்க யோசனையை அவங்க சொல்லட்டும். நம்ம யோசனையை நாம சொல்லுவோம். வீண் சண்டை சச்சரவுக வந்து ஒருத் தருக்கொருத்தர் வார்த்தை தடிக்காமல் பார்த்துக்கணுக்கிறதுதான் இதிலே முக்கியம்” என்று அந்தப்புரத்திற்குள் நுழைகிற போதே சேர்வைகாரரிடம் எச்சரிக்கையாகச் சொல்லி வைத்தார் மாமா. எந்த இடத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த போது மாமா இப்படிச் சொல்லியிருந்தாரோ அந்த இடத்திலேயே காரிஸ்தர் பெரியகருப்பன் சேர்வை உடனே தயங்கி நின்றார். பின்பு அக்கம்பக்கம் பார்த்துவிட்டுக் குரலைத் தனித்துக் கொண்டு “இவங்களிலே முக்கால் வாசிப்பேர் மகாராஜாவுக்குப் பொட்டுக்கட்டிக் கிட்டவங்கதான். மத்த ரெண்டொருத்தருக்குத்தான் அக்கம்பக்கத்து ஊர்லியும் உள்ளுர்லியும் உறவுக்காரங்க இருக்காங்க. பொட்டுக் கட்டிக்கிட்டவங்களைப் பொறுத்து ஒரு பிரச்னையும் இருக்காதுங்க. மத்தவங்கதான் நீங்க என்ன பேசி முடிவு பண்ணனும்னாலும் உறவுக்காரங்களையும் கூட வச்சுக்கிட்டுத்தான் அதெல்லாம் பேசி முடிவு பண்ணனும்னு முரண்டு பிடிப்பாங்க. அந்த ரெண்டொருத்தருகிட்டப் பேசி முடிவு பண்றதுதான் ரொம்பச் சிரமப்படும். மத்ததெல்லாம் சுலபமா முடிஞ்சு போயிடும். வீடு கட்டிக்கிறத்துக்கு ஒரு எடமும் கையிலே கொஞ்சம் ரொக்கமும் கொடுக்கறதாயிருந்தா இவங்களிலே பலர் திருப்தியா இங்கேருந்து வெளியேறிடுவாங்க.” “சரி, கூப்பிடுங்க பார்க்கலாம்! அவங்ககிட்டவே பேசலாமே? இதுலெ ஒளிவு மறைவு என்ன வேண்டிக் கிடக்கு?” என்றார் மாமா. ஆனால் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அந்தப்புரத்திற்கு உள்ளே போகத், தயங்கினார். “முன்னாலே பெரிய ராஜா இருக்கிறப்பவே நான் இந்த இடத்து வரைகூட அவரோடவே ஏதாவது பேசிக்கிட்டுத்தான் வந்திருக்கிறேனே ஒழியத் தனியா வந்தது. இல்லே.” “அதுனாலே என்ன? வேலைக்காரிங்க யாராச்சும். இருந்தாங்கன்னாக் கூப்பிடுங்களேன். அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி அனுப்பலாம்.” பீமநாதபுரம் அரண்மனையின் அந்தப்புரம் அந்த வேளையில் கண்ணுக்கெட்டிய தூரம் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு பெரிய பனைமரத்தைக் கொண்டு வந்து அப்படியே உள்ளே நிறுத்தினால் கூடத் தாங்கும்போல அவ்வளவு உயரமான அந்தக் கட்டிடத்தில் ஆதாகாரமான காரைத் தூண்கள் தனித்தனியே நின்று கொண்டிருந்தன. மேல் விதானத்தில் சில இடங்களிலே வௌவால்கள் சிரசாசனம் செய்து கொண்டிருந்தன். வெள்ளையடிக்கவோ, காவி பூசவோ, வர்ணம் பூசவோ. காரை உப்புப் படிந்த இடங்களைச் செப்பனிடவோ வசதி இல்லாததால் கட்டிடத்தின் பழைமையும் பழுதுபட்ட நிலைமையும் முதற் பார்வையிலேயே விட்டுத் தெரியும்படி தான் இருந்தன. வெளவால் புழுக்கை நாற்றம் வேண்டிய மட்டும் இருந்தது. காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை அந்தப்புரம் இருந்த பக்கமாக இன்னும் சில கெஜ தூரம் துணிந்து முன்னேறி நடந்து சென்று, “யாரங்கே...?” என்று குரல் கொடுத்தபடி இரு கைகளையும் இணைத்து நன்றாக ஓசை எழும்படி பலமாகத் தட்டினார். இரண்டு மூன்று முறை அப்படிக் கை தட்டிக் கூப்பிட்ட பின் தலை, பாதி நரையும் பாதி கருமையுமாக இருந்த ஒரு வேலைக்காரி மெல்ல எட்டிப் பார்த்தாள். அவளை ஜாடை செய்து அருகே கூப்பிட்டார் பெரிய கருப்பன் சேர்வை. அவள் அருகே வந்தாள். காரியஸ்தர் ஏதோ சொல்வதற்கு முயன்றார். அந்த வேலைக்காரி டமாரச் செவிடு என்பது புரிந்தது. குரலை மேலும் பெரிதாக்கிக் கொண்டு சொல்லிப் பார்த்தார் சேர்வைகாரர். அவர் என்ன சொல்கிறார் என்பதை அந்தக் கிழவி புரிந்து கொள்ளவில்லை. பெரிய கருப்பன் சேர்வை தொண்டைத் தண்ணீர் வற்றியது தான் மீதம். “சும்மா நீங்களே உள்ளே போய்ச் சொல்லுங்க... இதென்ன அல்லி ராஜ்யமா? ஆம்பளைங்க நுழையக் கூடாதுங்கிறதுக்கு! இந்த வேலைக்காரக் கிழவியோட நீங்களே உள்ளாரப் போங்க சொல்றேன்” என்றார் மாமா. “உங்களுக்குப் போறத்துக்குத் தயக்கமா இருந்தா நானும் வேணும்னாக்கூட வரேன், சேர்வைகாரரே...” என்று சேர்ந்து கொண்ட தனசேகரனை, “நீ போக வேண் டாம் தம்பி... நீ உள்ளே போயிட்டேன்னா சின்னராஜா வந்தாச்சு. இங்கேயே விஷயத்தைப் பேசிடலாமேன்னு அங்கே வச்சே அவங்க பிரச்னையை எல்லாம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிடுவாங்க” என்று மாமா குறுக்கிட்டுத், தனசேகரனைத் தடுத்தார். “அவரு சொல்றதுதான் சரி. நீங்க வரவேண்டாம். நானே போயிட்டு வாரேன்” என்று காரியஸ்தரும் மாமா கூறியதை ஆமோதித்தார். வந்த வேலைக்காரியையும் உடனழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் முன்னேறினார் அவர். மாமாவும் தனசேகரனும் முன் கூடத்திலேயே நின்று கொண்டார்கள். “சேர்வைக்காரர் வக்கீலுக்குப் படிச்சிருக்காரே தவிர வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா நடந்துக்க மாட்டேங்கறாரே? ரொம்பத்தான் தாட்சண்யப்பட்டுக்கிறாரு. நிர்வாகத்திலே இருக்கிறவங்க இவ்வளவு தூரம் தாட்சண்யப்பட்டா எந்த நல்ல மாறுதலையும் வேகமா நினைச்சபடி பண்ணிட முடியாது தம்பி” என்று மாமா தங்க பாண்டியன் தனசேகரனிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். “அதில்லே மாமா! பொதுவிலே இங்கேயே காரியஸ்தரா இருந்து எல்லாரிட்டவும் சுமுகமாப் பழகியிருக்காரு. திடீர்னு முகத்தை முறிச்சுக்கத் தயங்கறாரு, அவ்வளவு தான்.” இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே அந்தப்புரத்தின் டமாரச் செவிடான வேலைக்காரியோடு உள்ளே போயிருந்த காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை மட்டும் தனியே திரும்பி வந்தார். மாமா வினவினார்: “ஏன்? என்ன சொல்றாங்க அவங்க இங்கே வரமாட்டாங்களாமா?” “வரமாட்டோம்னு நேரடியாச் சொல்லலே. அந்த மூணுமாவடி இளையராணிதான் தைரியமா வந்து எதிர்த்துக் கேட்டாங்க. தனசேகரனுக்கு நாங்க அந்நியமானவங்களா என்ன? அவனுக்கு நாங்கள்ளாம் சித்தி முறை தானே வேணும்? அவனே இங்கே வந்து எங்ககிட்டப் பேசப் பிடாதா? வரச் சொல்லுங்களேன்னு அவங்க சொல்றாங்க.” “அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க சேர்வைகாரரே?” “நான் என்ன பதில் சொல்ல முடியும்? நீங்க சொன்னதை அவங்க கிட்டக் கட்டாயம் சொல்றேன்னு சொல்லி விட்டு வந்தேன்.” “அப்போ நாம் இங்கே காத்துக்கிட்டிருக்கிறதிலே அர்த்தமில்லேன்னு சொல்லுங்க. அவங்க யாரும் இங்கே வரமாட்டாங்கன்னு தெரியுது.” “நான் வேணா உள்ளே போயி நறுக்குன்னு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டும் வந்துடட்டுமா மாமா? என்ன சொல்றீங்க?” என்று தனசேகரன் தங்கபாண்டியனைக் கேட்டான். தங்கபாண்டியன் ‘வேண்டாம்’ என்பது போல் தலையை ஆட்டினார். மாமா தங்கபாண்டியனின் முகத்தில் மலர்ச்சி மறைந்து கடுமை படர்ந்தது. அவர் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை நோக்கி, “இந்தப் பொம்பிளைங்கள்ளாம் இங்கே அரண்மனைக்கு வந்த தேதி, ராஜாவோட அவங்களுக்குத் தொடுப்பு சம்பந்தப்பட்ட வருஷம் இதெல்லாம் பற்றி ‘ஆபீஸ் ரெக் கார்டிலே’ ஏதாச்சும் விவரம் இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்க” என்று கேட்டார். “அதெல்லாம் எதுவும் கிடையாதுங்க. இந்த மாதிரி, வைப்பு விவகாரங்களுக்கும் அரண்மனை ஆபீஸுக்கும் சம்பந்தமே கிடையாது. அது ராஜாவோட சொந்த விவகாரம்னு விட்டுடறதுதான் வழக்கம். அந்தப்புரத்திலே எத்தினிப் பேர் இருக்காங்கங்கிற எண்ணிக்கையே அதிகாரபூர்வமா எங்களுக்குத் தெரியாது. நாங்களாத் தனிப்பட்ட முறையிலே தெரிஞ்சுகிட்ட எண்ணிக்கையைத்தான் நீங்க விசாரிச்சபோதுகூட நான் சொன்னேன்.” “செத்துப் போனதுதான் போனாரு. இத்தினி தலை வேதனையையுமா வெச்சுப்போட்டுப் போகனும்?” “இது ஒரு ‘டெலிகேட்’ ப்ராப்ளம். கொஞ்சம் நிதானமாப் பார்த்துத்தான் இதை முடிவு பண்ணனும். மத்ததை முதல்லே கவனிக்கலாம்” என்று சேர்வைகாரர் சொன்ன போது, “நீங்க சொல்றதும் ஒரு விதத்திலே சரிதான். ஆனால் சத்திரம் மாதிரி நாற்பது அம்பது பேருக்கு எத்தினி நாள் சாப்பாடு போட்டுக்கிட்டிருக்க முடியும்? எவிக்ஷன் நோட்டீஸ் குடுத்தாவது காலி பண்ணாட்டித் தனசேகரன் மாசா மாசம் ஐயாயிரம், பத்தாயிரம்னு எங்கேயாவது கடன் வாங்கித்தான் இனிமே இந்த அரண்மனையைக் காப்பாத்த முடியும். இல்லாட்டித் திருவோட்டை ஏந்திக் கிட்டுப் பிச்சை எடுக்கப் போக வேண்டியதுதான்” என்று மாமா தமது அபிப்பிராயத்தைக் காரியஸ்தரிடம் தெரிவித்தார். இளைஞன் தனசேகரனுக்குக் காலஞ்சென்ற தன் தந்தை மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவ்வளவு பிரச்னைகளையும், கடன்களையும் சுமைகளையும் வைத்ததோடல்லாமல் தன்னைத் தொல்லைகளிலும் சிக்க வைத்து விட்டுப் போய்விட்டாரே’ என்ற நினைப்பு மனத்தில் உறுத்தியது. தான் கடைசி நாட்களில் அவரை விட்டுப் பிரிந்து அக்கறைச் சீமையில் இருந்துவிட்டு வந்திருந்தாலும் அவர் சேர்த்து வைத்திருந்த பாவமூட்டைகளும், கடன் சுமைகளும், பிரச்னைத் தொல்லைகளும் விலாசம் தவறாமல் தன்னையே வந்தடைந்திருப்பதை அவன் கண்டான். புறப்படும் போது எவ்வளவு வேகமாக அவர்கள் மூவரும் அந்தப்புரத்திற்குள் புறப்பட்டு வந்திருந்தார்களோ அவ்வளவு வேகமாக எதையுமே அங்கே சாதிக்க முடியாமல் ஏமாற்றத்தோடுதான் திரும்பினார்கள். “நவீன முறைகள், நவீன சிந்தனைகள் எதனாலும் இந்த அரண்மனையிலுள்ள பழைய பிரச்னைகளை வேகமாகவும் துணிந்தும் தீர்த்துவிடமுடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை மாமா” என்றான். தனசேகரன். “ஓடவும் முடியாமே நிற்கவும் இடமில்லாமே இரண்டுங் கெட்டானாக வச்சிருக்காங்க எல்லாத்தையும். நம்ம வேகத்துக்கு இங்கேயிருக்கிற ஆளுங்களோ பிரச்னைகளோ ஒத்துவர மாதிரித் தெரியலே தனசேகரன்?” என்று மாமாவும் அதை ஆமோதித்தபோது காரியஸ்தர் குறுக்கிட்டு, “பல நூற்றாண்டு விஷயங்களைச் சில நிமிஷங்கள்ளே ‘வைண்ட்-அப்’ பண்றதுன்னாக் கஷ்டம்தான்” என்றார். அதன்பின் இரண்டு மூன்று வாரங்கள் பீமநாதபுரத்தில் நிமிஷமாக ஓடிப்போய் விட்டன. அதற்கப்புறம் ஒரு வார காலம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்கள், சொத்துக்கள், தேவாரப் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், நிலங்கள், தோட்டங்கள் இருந்த கிராமங்களுக்கு அவர்கள் ஒரு ஜீப்பில் பிரயாணம் செய்தார்கள். காரியஸ்தர், இளையராஜா தனசேகரன், மாமா தங்க பாண்டியன் மூவரும் அந்தப் பிரயாணத்தை மேற்கொண்ட போது மேலும் பல புது விஷயங்கள் தெரிய வந்தன. அதனால் குழப்பங்கள் அதிகமாயினவே ஒழியக் குறைய வில்லை. பழைய பீமநாதபுரம் சமஸ்தானத்துக்குள் முன்பு அடங்கியிருந்த பரிமேய்ந்த நல்லூர் என்ற கிராமத்தில் போய் அவர்கள் தங்கி இருந்தபோது சில புது விவரங்கள் தெரிய வந்து அவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த அந்த ஊரில் சமஸ்தானத்துக்குச் சொந்தமான ஒரு பெரிய பாடல் பெற்ற கோவில் இருந்தது. தேவதாசிகள் அந்தக் கோவிலில் சதிர் ஆடுவதற்கு என்று மூன்று தலைமுறைக்கு முன்பு நியமிக்கப்பட்டு சமஸ்தான மானியங்களும் கோவில் ஸ்தானிகமும், மரியாதைகளும் வழங்கப்பட்டிருந்தன. சமஸ்தான ஆளுகைக்குட்பட்ட தேவதாசிகளில் மிகவும் அழகும் கலைத்திறனும், நளினமும் உள்ளவர்கள் இந்தப் பரிமேய்ந்த நல்லூர்ப் பெண்கள்தான் என்று பல சமயங்களில் பலர் கூறிக்கொள்ளக் கேட்டிருக்கிறான் தனசேகரன். மாணிக்கவாசக சுவாமிகள் அமைச்சராக இருந்து பாண்டிய மன்னனுக்குக் குதிரைகள் வாங்குவதாகச் சொல்லி அந்தப் பொருளை ஆலயப் பணிக்குச் செலவழித்துவிட்டு அகப் பட்டுக்கொண்ட போது இறைவன் அருளால் குதிரைகள் கூட்டம் கூட்டமாக வந்தபோது தெய்வீகத் திருவுடைய குதிரைப் பாகர்களும் இறைவனும் முதன் முதலில் குதிரைகளை மேயவிட்ட இடம் இதுதான் என்று ஓர் ஐதீகம் இருந்தது. அந்த ஐதீகத்தின்படிதான் ‘பரிமேய்ந்த நல்லூர்’ என்னும் பெயரே அந்த ஊருக்கு ஏற்பட்டிருந்தது. ஆறு கால பூஜையும் ஆண்டிற்கு மூன்று பிரம்மோற்சவங்களும் உள்ள சிறந்த திருத்தலமாக அது விளங்கி வந்தது. சமஸ்தான அந்தஸ்து, ராஜமான்யம் எல்லாம் போன பின்னரும் கூடக் கோவில்களும், தர்ம ஸ்தாபனங்களும், அரச குடும்பத்தின் பொறுப்பிலும் பராமரிப்பிலுமே தொடர்ந்து இருந்தன. கோவிலுக்கு உண்டியல்கள் மூலமும் காணிக்கைகள், பிரார்த்தனைகள் நேர்த்திக் கடன்கள் மூலமும் நிறைய வருமானம் இருந்தது. நிலங்கரைகள், நகைகள், எல்லாம் ஏராளமாக இருந்தன. ஆண்டின் எல்லா மாதங்களிலுமே தரிசனம் செய்வதற்கு நிறையப் பெருமக்கள் அங்கே வந்து போய்க் கொண்டிருந்தனர். பரிமேய்ந்த நல்லூர் பீமநாத புரம் சமஸ்தானத்தின் இரண்டாவது பெரிய ஊராகியிருந்ததன் காரணமாக அங்கே பழைய நாளிலிருந்தே சின்ன அரண்மனை போல ஒரு நவீன வசதிகள் உள்ள விருந்தினர் விடுதி இருந்தது. பரிமேய்ந்த நல்லூருக்கு வந்ததும் மாமாவும் தனசேகரனும், காரியஸ்தரும் ஆலயத்துக்குப் போய் சுவாமி தரிசனமும் அர்ச்சனையும் செய்தார்கள். சமஸ்தானத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருந்த ஆலய நிர்வாக அதிகாரி காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வையிடம் தனியாகச் சில நிமிஷங்கள் பேச வேண்டும் என்று வந்ததிலிருந்து பறந்து கொண்டிருந்தார். “தனியா எங்கிட்ட மட்டும் என்ன ஐயா பேசக் கிடக்கு? எல்லாருக்கும் முன்னாடியே அதைப் பேசலாமே? கோவில் வரவு - செலவு விஷயத்திலே இரகசியம் என்ன ஐயா வேண்டிக் கெடக்கு?” என்று நிர்வாகியை இரைந்தார் காரியஸ்தர். “இல்லீங்க, நீங்க தயவு செய்து என்னை மன்னிக்கணும்... இது பெரிய ராஜா சம்பந்தப்பட்ட விஷயம். உங்க கிட்டச் சொல்லலேன்னா இப்போ நான் தலை தப்ப முடியாது. உடனே சொல்லியாகணும். நான் குழந்தை குட்டிக்காரன். என்னை நீங்கதான் காப்பாத்தணும்...” முதலில் காரியஸ்தருக்குக் கோபம் வந்தது. ஆனால் அந்த நிர்வாகி திரும்பத் திரும்பப் புலம்பியதைக் கேட்டதும் காரியஸ்தருக்கு மனத்தில் ஏதோ சந்தேகம் தட்டியது. இது ஏதோ பெரிய விவகாரமாயிருக்க வேண்டும் என்று பட்டது. சமஸ்தானத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள விஷயத்தில் கூடக் கடைசிக் காலத்தில் பெரிய மகாராஜா அற்பத்தனமாக நடந்து கொண்டது நினைவு வந்தது. அதைப் போலவே இந்தக் கோவில் விஷயத்தில் இங்கும் ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது என்று தெரிந்தது. “சரி! அப்போ மதியம் தனியாப் பேசலாம். பகல் சாப்பாடு முடிஞ்சதும் இளையராஜாவும், மாமாவும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குவாங்க, அந்த நேரத்திலே நாம் பேசலாம். நீங்க என்னைத் தேடிவர வேண்டாம். நானே தேவஸ்தான ஆபீஸுக்கு வரேன்! நீங்க. அங்கே இருங்க போதும்” என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் கூறினார் காரியஸ்தர். நிர்வாக அதிகாரி இதற்கப்புறம்தான் நிம்மதி அடைந்தார். அன்றைக்குப் பகல் உணவு முடிந்ததும் காரியஸ்தர் எதிர்பார்த்தபடியே தனசேகரனும் மாமா தங்கபாண்டியனும் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளப் போய்விட் டார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை தேவஸ்தான அலுவலகத்துக்குப் போய் நிர்வாக அதிகாரியைச் சந்தித்தார். காரியஸ்தர் வந்ததும் நிர்வாக அதிகாரி முதல் வேலையாகத் தமது அறைக் கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டார். அந்த விஷயத்தில் நிர்வாகஸ்தர் ஏன் அவ்வளவு பதறுகிறார் என்பது காரியஸ்தருக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் தம்முடைய வியப்பை அடக்கிக் கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார் அவர். நிர்வாக அதிகாரி விவரங்களைக் கூறத் தொடங்கினார். நிர்வாக அதிகாரி கூறியதிலிருந்து மகாராஜாவே ஏராளமான தங்க நகைகளைக் கோவிலிலிருந்து எடுத்து விற்றுவிட்டுப் பதிலுக்குக் ‘கில்ட்’ நகைகளை வைத்திருப்பது தெரிய வந்தது. மகாராஜா அப்படிச் செய்திருக்கக் கூடும் என்பது பெரிய கருப்பன் சேர்வைக்குத் தெரிந்துதான் இருந்தது. |