முதல் பருவம் - தோரணவாயில் 20. விளங்காத வேண்டுகோள் “அடடா, நீ எப்பொழுது வந்தாய் தம்பீ? நான் உன்னை கவனிக்கவே யில்லையே! காலையிலிருந்து உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்று பின்னிரவில் இந்திர விழாவைக் காண்பதற்காக ஊரெல்லாம் சுற்றிவிட்டு இதோ உன்னுடன் நிற்கும் இந்த இளைஞர்களிற் சிலர் இங்கு வந்து தங்கினார்கள். இன்று காலையில் இவர்களிடம் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிற்பகலுக்குள் நான் உன்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினேன். உன்னிடம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது, தம்பீ! நேற்று முன் தினம் அருட்செல்வ முனிவர் இங்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். உன்னைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அவர்.” அன்பு நெகிழும் குரலில் இவ்வாறு கூறிக் கொண்டே இரும்புக் கவசம் அழுத்துமாறு அவனை மார்புறத் தழுவிக் கொண்டார் நீலநாக மறவர். “முகம் வாடியிருக்கிறதே தம்பீ! எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறாய்? உன்னுடைய அழகும், ஆற்றலும், அறிவும் பெரிய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும். அவற்றை இப்போதே மிகச் சிறிய காரியங்களுக்காகச் செலவழித்துவிடாதே! இன்றைக்கு இந்தப் பூம்புகாரின் அரச கம்பீர வாழ்வுக்கு முன்னால், இருக்குமிடம் தெரியாத மிகச் சிறிய இளைஞனாக நீ இருக்கிறாய். இனி ஒரு காலத்தில் உன்னுடைய கம்பீரத்துக்கு முன்னால் இந்தப் பெரிய நகரமே இருக்குமிடம் தெரியாமல் மிகச் சிறியதாகப் போய் விடலாம். உலகமே அப்படித்தான் தம்பீ! பொருள்கள் பெரியவைகளாகத் தோன்றும் போது வியந்து நிற்கிற மனமும் மனிதனும் குறுகியிருப்பதைப் போல் சிறுமையாய்த் தோன்றுவார்கள். மனத்தையும் தன்னையும் பெரியதாகச் செய்து கொண்டு பார்த்தால் இந்த உலகத்தில் மிகப் பெரும் பொருள்களும் சிறியவையாகக் குறுகித் தோன்றும். இதோ, என்னைச் சுற்றிக் கட்டிளம் காளைகளாக நிற்கும் இந்தப் பிள்ளைகள் எல்லோரும் வில்லுக்கும் அம்புக்கும் தோற்றுக் கல்லைப் போல் அசைவின்றிப் பயந்து நிற்கிறார்களே, ஏன் தெரியுமா? இவர்கள் அந்தக் குறி தங்களுடைய ஆற்றலிலும் பெரிது என்று எண்ணி எண்ணித் தங்களுக்குத் தாங்களே சிறுமை கற்பித்துக் கொண்டு விட்டார்கள். அதனால் அம்பு குறியைத் தீண்டவே இல்லை. வீரம் தனக்குப் பயந்த நெஞ்சில் விளைவதில்லை. தன்னை நம்பும் நெஞ்சில் தான் விளைகிறது. எங்கே பார்க்கலாம், நீ இந்த வில்லை எடுத்து இவர்கள் செய்யத் தவறியதைச் செய்து காட்டு. அதன் பின்பாவது இவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகிறதா இல்லையா என்று காணலாம்!” என்றிவ்வாறு கூறியபடியே இளங்குமரனை முன்னுக்கு இழுத்துக் கொண்டு வந்து வில்லையும் அம்புக் கூட்டையும் அவன் கைகளில் எடுத்துத் தந்து அன்புடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் நீலநாக மறவர். எல்லாருடைய கண்களும் அவனையே பார்த்தன. வந்ததும் வராததுமாக இளங்குமரனை இப்படி வம்பில் இழுத்து விட்டாரே நீலநாக மறவர் என்று கதக்கண்ணன் நினைத்தான். அப்போது இளங்குமரன் மனநிலை தெளிவாயில்லை என்பதை அறிந்திருந்த காரணத்தால் தான் கதக்கண்ணன் பயந்து தயங்கினான். ‘மனக்கவலைகளால் எல்லோரையும் போல இளங்குமரனும் குறி தவறி அவமானப்பட நேரிட்டு விடுவோ’ என்பதே கதக்கண்ணனின் பயத்துக்குக் காரணமாயிருந்தது.
ஆனால் கதக்கண்ணன் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. எப்படிப்பட்ட கவலைக்கிடமான நேரத்திலும் தன் மனத்தையும் கண்களையும் ஒருமை நிலையில் ஈடுபடுத்த முடியும் என்பதை இளங்குமரன் நிரூபித்துக் காட்டி விட்டான். ஒரே ஒரு விநாடி தான்! அந்த ஒரு விநாடியில் வில்லை வளைப்பதற்காகப் பயன்பட்ட நேரம் எவ்வளவு, நீர்ப்பரப்பில் தெரிந்த காய்களின் பிரதிபிம்பத்தைக் கவனித்துக் குறிபார்த்த நேரம் எவ்வளவு, அம்பை எய்த நேரம் எவ்வளவு என்று தனித்தனியே பிரித்துச் சொல்லவே முடியாது. அவனுடைய வில் வளைந்ததையும் மாங்காயின் கொத்து அறுந்து தனித் தனிக் காய்களாய் நீரிலும் தரையிலுமாக வீழ்ந்ததையும் தான் எல்லோரும் கண்டார்கள்.
“வில்லாதி வில்லன் என்பது உனக்குத்தான் பொருத்தமான பெயர் தம்பீ! உன்னுடைய அம்புகள் மட்டுமல்ல, நினைவுகளும், நோக்கமும், பேச்சும் எதுவுமே குறி தவறாது” என்று கூறியவாறு இளங்குமரனைச் சிறு குழந்தை போல் விலாவில் கை கொடுத்துத் தழுவி, அப்படியே மேலே தூக்கிவிட்டார் நீலநாக மறவர். கூடியிருந்த இளைஞர்களிடமிருந்து வியப்பு ஒலிகளும் ஆரவாரமும் எழுந்தன. இளங்குமரன் அவருடைய அன்புப் பிடியிலிருந்து விடுபட்டுக் கீழே இறங்கியவுடனே, “எல்லாம் நீங்கள் இட்ட பிச்சை ஆசிரியரே” என்று அவர் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றி வணங்கினான். அவர் கூறினார்: “பிச்சையாகவே இருந்தாலும் அதைப் பாத்திரமறிந்து இட்டதற்காக நான் பெருமைப்படலாம் அல்லவா? நல்ல கொழுநனை அடைந்து கற்பும் பொற்பும் பெறுகிற அழகிய பெண் போல், ஒவ்வொரு கலையும் தன்னை நன்றாக ஆளும் நல்ல நாயகனைப் பெற்றால்தான் சிறப்படைகிறது தம்பீ!” அவ்வளவு பெரிய வீராதி வீரர் தன்னை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு புகழும் போது தான் என்ன மறுமொழி பகர்வதென்று தோன்றாமல் சற்றே நாணினாற் போல் தலை குனிந்து நின்றான் இளங்குமரன். “வா போகலாம், உன்னிடம் தனிமையில் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி அவனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். குலத்துக்கொரு பிள்ளையாய் வந்த குமரனைத் தந்தை பாசத்தோடும் பரிவோடும் அழைத்துச் செல்வது போல இருந்தது அந்தக் காட்சி. ‘மகாமேருமலை போன்ற இந்த வீரவேந்தர் இப்படித் தோள் மேல் கையிட்டுத் தழுவி அழைத்துக் கொண்டு செல்லும் பாக்கியம் தங்களுக்கு ஒரு முறையாவது வாய்க்காதா?” என்று ஏங்கும் இளைஞர்கள் பலர் அப்போது அங்கே இருந்தனர். அப்படி ஏங்கிய பலரில் அரச குடும்பத்துப் பிள்ளைகளும், வேளிர்குலச் செல்வர்களும், பட்டினப் பாக்கத்துப் பெருவணிகர் வீட்டு இளைஞர்களும் இருந்தனர். “நண்பர்களே வாருங்கள்! ஆசிரியர்பிரானிடம் பேசிவிட்டு இளங்குமரன் திரும்பி வருகிறவரை நாம் இப்படி இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம்” என்று கதக்கண்ணன் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு மாமரத்தடியில் போய் அமர்ந்தான். மற்ற இளைஞர்களும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சென்றார்கள். அவ்வாறு பிரிந்து செல்லும் போது சற்றே திமிர் கொண்டவன் போல் தோன்றிய வேளிர்குலத்து இளைஞன் ஒருவன், “பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளைகளெல்லாம் வில்லாதி வில்லர்களாகி விடுகிறார்கள். ஒருவேளை வில்லாதி வில்லனாகப் பெருமை பெற வேண்டுமானால் பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளையாயிருக்க வேண்டும் என்பதுதான் தகுதியோ என்னவோ?” என்று சொல்லி ஏளனமாகச் சிரித்ததையும் அவனுடன் சென்ற மற்றவர்களும் இளங்குமரனைப் பற்றித் துச்சமாகச் சொல்லி நகை புரிந்ததையும் மரத்தடியில் உட்கார்ந்திருந்த கதக்கண்ணன் கேட்டுப் புரிந்து கொண்டு விட்டான். உடனே மனங்கொதித்துத் துள்ளி எழுந்தான் அவன். நேராக அந்த இளைஞர் குழுவுக்கு முன் போய் நின்று கொண்டு இளங்குமரனை இகழ்ந்து பேசிய வேளிர் குலத்து விடலையைத் தடுத்து நிறுத்தி ஒரு கேள்வி கேட்டான் கதக்கண்ணன். “வேளிர் குலத்து வீரரே! தயை கூர்ந்து சற்றுமுன் கூறிய சொற்களை இன்னும் ஒரு முறை என் காது கேட்கும்படி கூறுவீர்கள் அல்லவா?” கதக்கண்ணன் தன் முன்னால் பாய்ந்து வந்து தடுத்து நிறுத்திய விதத்தையும் கேள்வி கேட்ட வேகத்தையும் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டு விட்டான் வேளிர் குலத்து வீரன். “நானா? நான் சற்று முன்பு தவறாக ஒன்றும் சொல்லவில்லையே. இளங்குமரனாரின் வீரதீரப் பெருமைகளைத் தானே உடன் வருகிறவர்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தேன்!” என்று பேச்சை மாற்றி மழுப்பிவிட முயன்றான் அவன். ஆனால் கதக்கண்ணன் அவனை விடவில்லை. “அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. வஞ்சகமில்லாமல் பிறருடைய வீர தீரப் பெருமைகளை அவர்கள் இல்லாத இடத்திலும் சொல்லிப் புகழுகிற உங்களைப் போன்றவர்களுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.” “ஆகா! நீங்கள் கொடுக்க ஆசைப்படும் பரிசை அவசியம் வாங்கிக் கொள்கிறேன். எனக்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் நீங்கள்?” “என்ன பரிசு என்றா கேட்கிறீர்கள்? சற்று முன் அப்படிப் பேசிய உங்கள் நாவை ஒட்ட இழுத்து அறுக்கலாமென நினைக்கிறேன். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் பரிசு. புறம் பேசுகிற நாவை வளரவிடக் கூடாது. புறம் பேசுகிற நாவுடையவர்களைப் படைத்ததைக் காட்டிலும் கைதவறின காரியம் ஒன்றைப் படைப்புக் கடவுள் செய்திருக்கவே முடியாது. உலகத்திலுள்ள நஞ்செல்லாம் புறம் பேசுகிறவர்களின் நாவிலிருந்து பிறந்தது. வேறு எல்லாக் கெட்ட மனிதர்களும் சோற்றிலும் தண்ணீரிலும் நஞ்சு தூவுவார்கள். புறம் பேசுகிறவர்களோ காற்றிலும் நஞ்சைத் தூவுவார்கள். காண்பவர், கேட்பவர் நெஞ்சிலும் நஞ்சைக் கலந்து விடுவார்கள்.” இப்படிக் கொதிப்போடு பேசிய கதக்கண்ணனை உறுத்துப் பார்த்தான் அந்த வேளிர் குலத்து இளைஞன். “பார்வையால் மருட்டாதீர். உங்கள் முன்னோர்கள் எல்லாம் சோழப் பேரரசருக்கு வீர உதவிகள் புரிந்து பெருமைப் பட்டிருக்கிறார்கள். அத்தகைய வேளிர் குடியில் புறம் பேசுவதை வீரமாக எண்ணும் கோழைகள் பிறந்திருக்கிறார்கள் என்பதை நினைப்பதற்கு வெட்கமாயிருக்கிறது எனக்கு” என்று கூறிவிட்டு மாமரத்தடிக்குத் திரும்பிச் சென்று நண்பர்களோடு அமர்ந்து கொண்டான் கதக்கண்ணன். தாங்கள் இளங்குமரனைத் துச்சமாகப் பேசி இகழ்ந்த செய்தி நீலநாக மறவர் காதுவரையில் எட்டி விடக்கூடாதே என்று பயந்து கொண்டே அந்த இளைஞர்களும் கூசியபடி மேலே நடந்து சென்றார்கள். தனியாக நீலநாக மறவரோடு சென்றிருந்த இளங்குமரன் சில நாழிகைக்குப் பின் மரத்தடிக்குத் திரும்பி வந்தான். கூட்டாக உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கிடையே அமராமல் கதக் கண்ணனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்ற இளங்குமரன், “பட்டினப் பாக்கத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது நேற்று இரவில் நடந்த நிகழ்ச்சி பற்றி ஏதோ பேச்சுத் தொடங்கினாயே, அது என்ன? அதை இப்போது சொல்...” என்று அவனை வினவினான். “ஓ! அதுவா? சம்பாவதி வனத்து இருளில் உன்னைத் தாக்கி விட்டு ஓடிய மனிதர்களை ஆன மட்டும் தேடிப் பார்த்தோம். அவர்கள் அகப்படவில்லை. விடிகிற மட்டும் தேடிவிட்டு நானும் எனது தோழனும் இந்தப் பக்கமாக வந்த போது பிற்பகலுக்குள் உன்னை இங்கே அழைத்து வருமாறு நீலநாக மறவர் அனுப்பிய ஆட்களைச் சந்தித்தோம். உடனே எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு உன்னைத் தேடிப் புறப்பட்டோம்” என்று கதக்கண்ணனிடமிருந்து இளங்குமரன் எதிர்பார்த்ததை விட மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது. “ஏதோ வேண்டுகோள் விடுக்கப் போவதாக நீயும் நண்பர்களும் கூறினீர்களே! அது என்ன வேண்டுகோள்?” என்று தன் நண்பன் கதக்கண்ணனைப் பார்த்து மறுபடியும் கேட்டான் இளங்குமரன். அதைக் கேட்டுக் கதக்கண்ணன் நகைத்தான். “வேண்டுமென்றே எங்களை ஆழம் பார்க்கிறாயா, இளங்குமரா! அந்த வேண்டுகோளைத்தான் இவ்வளவு நேரம் ஆசிரியர்பிரான் உன்னிடம் விவரித்துக் கூறியிருப்பாரே? ‘இன்னும் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலையிலேயே இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம். என் கண்காணிப்பில் நீ இருப்பது நல்லது’ என்று ஆசிரியர்பிரான் உன்னிடம் சொன்னாரா இல்லையா?” இதுகேட்டு இளங்குமரன் வியந்தான். ஏனென்றால் இதே வேண்டுகோளைத் தான் மறுக்க முடியாத கட்டளையாக ஆசிரியர் அவனுக்கு இட்டிருந்தார். ‘இது எப்படிக் கதக்கண்ணனுக்குத் தெரிந்தது? இவர்களெல்லோரும் சேர்ந்து தூண்டி ஆசிரியர் மூலம் செய்த ஏற்பாடா இது? அல்லது அருட்செல்வ முனிவர் ஆசிரியரைச் சந்தித்துத் தனியே செய்த ஏற்பாடா? இதன் பொருள் என்ன? இவர்கள் எல்லாரும் என்னைக் கோழையாக்க முயல்கிறார்களா?’ என்று நினைத்த போது ‘சற்று முன் ஆசிரியரிடம், இந்த வேண்டுகோளுக்கு ஏன் ஒப்புக்கொண்டோம்’ என்று தனக்குத்தானே வருந்தி மனங்குமுறினான் இளங்குமரன். |