முதல் பருவம் - தோரணவாயில் 5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர்! எழிற்பூம்புகார் நகரத்தில் மீண்டும் காலம் அரும்பவிழ்த்துப் பூத்தது ஒரு நாள் மலர். திருவிழாக் கோலங்கொண்ட பேரூர்க்குச் செம்பொன் நிறை சுடர்க்குடம் எடுத்துச் சோதிக்கதிர் விரித்தாற் போல் கிழக்கு வானத்தில் பகல் செய்வோன் புறப்பட்டான். முதல்நாள் இரவில் சற்றே அடக்கமும் அமைதியும் பெற்று ஓய்ந்திருந்த இந்திர விழாவின் கலகலப்பும், ஆரவாரமும் அந்தப் பெருநகரின் ஒவ்வொரு பகுதியிலும் எழுந்தன. காலைப் போதுதானே இந்த ஆரவாரங்களை நகரின் எல்லா இடமும் அடைய முடியும்? மாலையானால்தான் எல்லா அழகுகளையும், எல்லாக் கலகலப்பையும் கடற்கரை கவர்ந்து கொண்டு விடுமே!. மாபெரும் இந்திரவிழாவின் இரண்டாவது நாட்காலை நேரம் இவ்வளவு அழகாக மலர்ந்துகொண்டிருந்த போதுதான் முல்லையின் பொலிவு மிக்க சிரிப்பும் இளங்குமரனின் பார்வையில் மலர்ந்தது. சிரிப்பினால் முகத்துக்கும், முகத்தினால் சிரிப்புக்கும் மாறி மாறி வனப்பு வளரும் முல்லையின் வளைக்கரங்கள்தாம் அன்று காலை இளங்குமரனை உறக்கத்திலிருந்து எழுப்பின. கண்ணிலும், நகையிலும், நகை பிறக்குமிடத்திலுமாகக் கவர்ச்சிகள் பிறந்து எதிர் நின்று காண்பவர் மனத்துள் நிறையும் முல்லையின் முகத்தில் விழித்துக் கொண்டேதான் அவன் எழுந்தான். பெண்கள் பார்த்தாலும், நகைத்தாலும், தொட்டாலும் சில பூக்கள் மலர்ந்துவிடும் என்று கவிகள் பாடியிருப்பது நினைவு வந்தது இளங்குமரனுக்கு. 'மலர்ச்சி நிறைந்த பொருள்களினால் மற்றவற்றிலும் மலர்ச்சி உண்டாகும் என்ற விளக்கம் எவ்வளவு பொருத்தமானது! பெண்களின் பார்வைக்கும் புன்னகைக்கும் பூக்கள் மலர்வது மெய்யுரையோ புனைந்துரையோ? ஆனால் ஆறறிவு பெற்ற மனிதமனங்களே மலர்ந்து விடுகின்றனவே! எத்தனையோ குழப்பங்களுக்கிடையே இந்தப் பேதைப் பெண் முல்லை தன் நோக்கினாலும் நகைப்பினாலுமே என் மனத்தை மலர வைக்கிறாளே! இந்த அற்புத வித்தை இவளுக்கு எப்படிப் பழக்கமாயிற்று?’ என்று தனக்குள் எண்ணி வியந்தவாறே காலைக் கடன்களைத் தொடங்கினான் இளங்குமரன். அருட்செல்வ முனிவர் கட்டிலில் அயர்ந்து படுத்திருந்தார். இளங்குமரனும், முல்லையும் அவரை எழுந்திருக்க விடவில்லை. எவ்வளவு தளர்ந்த நிலையிலும் தம்முடைய நாட்கடன்களையும், தவ வழிபாடுகளையும் நிறுத்தியறியாத அந்த முனிவர் பெருந்தகையாளர், "என்னை எப்படியாவது எனது தவச்சாலையிலே கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள்" என்று அன்றும் பிடிவாதமாக மன்றாடிப் பார்த்தார். இளங்குமரனும், முல்லையும்தான் அவரை வற்புறுத்தி ஓய்வு கொள்ளச் செய்திருந்தனர். உடல் தேறி நலம் பெறுகிறவரை முனிவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறலாகாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டதுபோல் சொல்லிவிட்டார் முல்லையின் தந்தையாகிய வீரசோழிய வளநாடுடையார். அநுபவமும் வயதும் நிறைந்த மூத்த அந்தப் பெருங்கிழவரின் குரலில் இன்னும் கம்பீரமும் மிடுக்கும் இருந்தன. சோழநாட்டின் பெரிய போர்களில் எல்லாம் கலந்து தீர அநுபவமும் வீரப்பதவிகளும் பெற்று நிறை வாழ்வு வாழ்ந்து ஓய்ந்த உடல் அல்லவா அது? இன்று ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் வெளுத்து நரைத்த வளமான மீசையும், குழிந்திருந்தாலும் ஒளி மின்னும் கண்களும், நெடிதுயர்ந்த தோற்றமும் அவருடைய பழைய வீரவாழ்வை நினைவிற் கொண்டு வருவதற்குத் தவறுவதில்லை. ஒருகாலத்தில் வீர சோழிய வளநாடுடையார் என்ற அந்தப் பெயர் ஆயிரம் வீரர்களுக்கு நடுவில் ஒலித்தாலே ஆயிரம் தலைகளும் பெருமிதத்தோடு வணங்கித் தாழ்ந்ததுண்டு. இன்று அவருடைய ஆசையெல்லாம் தாம் அடைந்த அத்தகைய பெருமைகளைத் தம் புதல்வன் கதக்கண்ணணும் அடைய வேண்டுமென்பதுதான்.
முல்லைக்கும் தன்னுடைய நண்பனுக்கும் தந்தை என்ற முறையினால் மட்டுமல்லாமல்
வேறு சில காரணங்களாலும் இளங்குமரன் வீரசோழிய வளநாடுடையர் மேல் பெருமதிப்பு வைத்திருந்தான். ஆனால் அவருக்கு மட்டும் அவனைப் ப்ற்றிய மனக்குறையொன்று உண்டு. வல்லமையும், தோற்றமும், கட்டழகும் வாய்ந்த இளங்குமரன் சோழப்பேரரசின் காவல் வீரர்களின் குழுவிலோ, படைமறவர் அணியிலோ சேர்ந்து முன்னுக்கு வரமுயலாமல் இப்படி ஊர் சுற்றியாக அலைந்து கொண்டிருக்கிறானே என்ற மனக்குறைதான் அது. அதை அவனிடமே இரண்டோரு முறை வாய் விட்டுச் சொல்லிக் கடிந்து கொண்டிருக்கிறார் அவர்.
"தம்பீ! உன்னுடைய வயதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூம்புகாரின் புறநகர்க் காவல் வீரர்களுக்குத் தலைவனாக இருந்தேன் நான். இந்த இரண்டு தோள்களின் வலிமையால் எத்தனை பெரிய காவல் பொறுப்புக்களைத் தாங்கி நல்ல பெயர் எடுத்திருக்கிறேன் தெரியுமா? நீ என்னடா வென்றால் அவிழ்த்து விடப்பட்ட இளங்காளைபோல் இந்த வயதில், மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு நாளங்காடிச் சதுக்கத்தில் வம்பும் வாயரட்டையுமாகத் திரிகிறாய்! முனிவர் உன்னைச் செல்லமாக வளர்த்து ஆளாக்கி விட்ட பாசத்தை மீற முடியாமல் கண்டிக்கத் தயங்குகிறார்." இவ்வாறு அவர் கூறுகிறபோதெல்லாம் சிரிப்போடு தலை குனிந்து கேட்டுக் கொண்டு மெல்ல அவருடைய முன்னிலையிலிருந்து நழுவிவிடுவது இளங்குமரனின் வழக்கம். ஆனால் இன்றென்னவோ வழக்கமாக அவனிடம் கேட்கும் அந்தக் கேள்வியைக்கூட அவர் கேட்கவில்லை. காரணம் முதல் நாளிரவு சம்பாபதி வனத்தில் முனிவருக்கும் தனக்கும் ஏற்பட்ட துன்பங்களை முற்றிலும் கூறாவிடினும் ஒரளவு சுருக்கமாகக் காலையில் அவருக்குச் சொல்லியிருந்தான் இளங்குமரன். "தம்பீ! நேற்றிரவு சம்பாபதி வனத்தில் கதக்கண்ணனும் அவன் தோழனும் காவலுக்காகச் சுற்றி வந்தபோது நீ சந்தித்ததாகக் கூறினாயே? விடிந்து இவ்வளவு நேரமாகியும் கதக்கண்ணன் வீடு வந்து சேரவில்லையே, அப்படி எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான் அவன்?" என்று வீரசோழிய வளநாடுடையார் கேட்டபோது அவருக்கு என்ன மறுமொழி கூறுவதெனச் சிந்தித்தாற் போல் சில வினாடிகள் தயங்கினான் இளங்குமரன். ஏனென்றால் கதக்கண்ணன் தன்பொருட்டு வஞ்சினம் கூறித் தன்னுடைய எதிரிகளைத் துரத்திக் கொண்டுதான் போயிருக்கிறான் என்ற செய்தியை அவன் கிழவரிடம் கூறவில்லை. தன்னையும் முனிவரையும் சம்பாபதி வனத்தில் யாரோ சிலர் வழிமறித்துத் தாக்கியதாகவும், கதக்கண்ணனும் மற்றொரு காவல் வீரனும் அந்த வழியாக வந்த போது தாக்கியவர்கள் ஓடிவிட்டதாகவும் ம்ட்டும் ஒரு விதமாக அவரிடம் சொல்லி வைத்திருந்தான் இள்ங்குமரன். "ஐயா! இந்திர விழாக் காலத்தில் நேரத்தோடு வெளியேறி நேரத்தோடு வீடு திரும்ப வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நீங்களும் முல்லையும் நேற்று மாலை விழாக்கோலத்தை யெல்லாம் பார்த்து வந்து விட்டீர்கள். கதக்கண்ணனுக்கும் விழாக் காண ஆவல் இருக்கும் அல்லவா? நேற்றிரவே நகருக்குள் போயிருப்பான். அங்கே படைமறவர் பாடி வீடுகள் ஏதாவதொன்றில் தங்கியிருந்து விடிந்ததும் ஊர் சுற்றிப் பார்த்து விட்டுத் தானாக வந்து சேர்வான்" என்று அவருக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். கிழவர் அவனுடைய அந்த மறுமொழியால் சமாதானம் அடைந்தவராகத் தெரியவில்லை. "அண்ணன் ஊருக்கெல்லாம் பயமில்லாமல் காவல் புரிகிறேன் என்ற வேலேந்திய கையோடு இரவிலும் குதிரையில் சுற்றுகிறான். அப்பாவுக்கோ அவன் தன்னையே காத்துக் கொள்வானோ மாட்டானோ என்று பயமாயிருக்கிறது!" என்று கூறிச் சிரித்தாள் முல்லை. "பயம் ஒன்றுமில்லையம்மா எனக்கு. நீ இன்று காலை நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் போய்ப் படையல் இட்டு வழிபாடு செய்யவேண்டு மென்றாயே! நான் இங்கே இந்த முனிவருக்குத் துணையாக இருந்து இவரை கவனித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். கதக்கண்ணன் வந்திருந்தால் நீ அவனை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட வசதியாயிருக்குமே என்றுதான் பார்த்தேன்." "அண்ணன் வராவிட்டால் என்ன, அப்பா? இதோ இவரை உடன் அழைத்துக்கொண்டு பூதசதுகத்துக்குப் புறப்படுகிறேனே. இவரைவிட நல்ல துணைவேறு யார் இருக்க முடியும்?" என்று இளங்குமரனைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் முல்லை. இளங்குமரன் தனக்குள் மெல்ல நகைத்துக் கொண்டான். "இவனையா சொல்கிறாய் அம்மா? இவன் உனக்குத் துணையாக வருகிறான் என்பதைவிட வீரசோழிய வளநாடுடையார் மகள் இவனுக்குத் துணையாகச் செல்கிறாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஊர்ச்சண்டையும் தெருவம்பும் இழுத்து, எவனோடாவது அடித்துக்கொண்டு நிற்பான். நீ இவனைச் சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போக நேரிடும்." "அப்படியே இருக்கட்டுமே அப்பா! இவருக்குத் துணையாக நான் போகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்" என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் முல்லை. "முல்லை! என்னைக் குறைகூறுவதென்றால் உன் தந்தைக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடுகிற கொண்டாட்டம் வந்துவிடும். அவருடைய ஏளனத்தை எல்லாம் வாழ்த்துக்காளாக எடுத்துக் கொண்டு விடுவேன் நான்." இளங்குமரன் புன்னகை புரிந்தவாறே இவ்வாறு கூறிவிட்டு, வீரசோழிய வளநாடுடையாரையும் அவருடைய செல்ல மகளையும் மாறி மாறிப் பார்த்தான். "அருட்செல்வ முனிவரே! உங்களுடைய வளர்ப்புப் பிள்ளையாண்டானுக்கு அறிவும் பொறுப்பும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ வாய்ப்பேச்சு நன்றாக வளஎர்ந்திருக்கிறது" என்று அது வரை தாம் எதுவும் பேசாமல் அவர்களுடைய வம்பு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த முனிவரை நோக்கிக் கூறினார் வீரசோழிய வளநாடுடையார். இதைக் கேட்டு முனிவர் பதிலேதும் கூற வில்லை. அவருடைய சாந்தம் தவழும் முகத்தில் சிரிப்பு மலர்ந்து அடங்கியது. அந்தச் சிரிப்பின் குறிப்பிலிருந்து கிழவர் கூறியதை அவர் அப்படியே மறுத்ததாகவும் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளை உய்த்துணர இடமளித்தது அந்தச் சிரிப்பு. இளங்குமரனுக்கு, 'குழந்தாய் நீ கவலைப்படாமல் முல்லையோடு நாளங்காடிக்குப் புறப்பட்டுப் போய்விட்டு வா. நேற்றிரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றிலுள்ள இரகசியத்தையோ, அல்லது வேறு இரகசியங்களையோ இந்தக் கிழவரிடம் வரம்பு மீறிச் சொல்லிவிடமாட்டேன்’ என்று அபயமளித்தது அந்தச் சிரிப்பு. முல்லைக்கோ 'பெண்ணே உன் இதயத்தில் இளங்குமரனைப் பற்றி வளரும் இனிய நினைவுகள் புரியாமல் உன் தந்தை அவனை இப்படி உன் முன்பே ஏளனம் செய்கிறாரே’ என்ற குறிப்பைக் கூறியது அந்தச் சிரிப்பு. 'உங்கள் முதுமைக்கும், அனுபவங்களுக்கும் பொருத்தமான வற்றைத் தான் இளங்குமரனுக்கு நீங்கள் சொல்லுகிறீர்கள்’ என்று கிழவரை ஆதரிப்பதுபோல் அந்தச் சிரிப்பு அவருக்குத் தோன்றியிருக்கும். எந்த மனவுணர்வோடு பிறருடைய சிரிப்பையும் பார்வையையும் அளவிட நேருகிறதோ, அந்த உணர்வுதானே அங்கும் தோன்றும்? முல்லை தன்னை அலங்கரித்துக்கொண்டு புறப்படுவதற்குச் சித்தமானாள். கண்களிலும், முகத்திலும், உடலிலும் பிறக்கும் போதே உடன்பிறந்து அலங்கரிக்கும் அழகுகளைச் செயற்கையாகவும் அலங்கரித்த பின், வழிபாட்டுக்கும் படையலுக்கும் வேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் முல்லை. படையலுக்காக நெய்யில் செய்து அவள் எடுத்துக் கொண்டிருந்த பணியாரங்களின் நறுமணத்தை இளங்குமரன் நுகர்ந்தான். முனிவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்ட பின் கிழவரைப் பார்த்தும், "ஐயா! நானும் முல்லையும் நண்பகலுக்குள் பூதசதுக்கத்திலிருந்து திரும்பி விடுவோம். அதற்குள் கதக்கண்ணன் வந்தால் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள். நான் அவனிடம் சில முக்கியமான செய்திகள் பேசவேண்டும்" என்று கூறினான் இளங்குமரன். "ஆகா! வேண்டிய மட்டும் பேசலாம். தம்பீ! கவனமாக அழைத்துக் கொண்டு போய்வா. முல்லையை பூதசதுக்கத்தில் விட்டுவிட்டு நீ உன் போக்கில் மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு சுற்றக் கிளம்பிவிடாதே. அவளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தபின் நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம்" எனக் கிழவர் எச்சரிக்கை செய்த போது முல்லையும் இளங்குமரனும் சிரித்துக்கொண்டே வெளியேறினார்கள். முதல் நாளிரவிலிருந்து தன்னுடைய மனத்தில் மிகுந்து வரும் துன்பங்களையும் தவிப்பையும் அந்தச் சமயத்தில் ஒரு வழியாக மறந்துவிட முயன்ற இளங்குமரன் முல்லையொடு உற்சாகமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே சென்றான். "முல்லை! உன் தந்தையார் என்னைப் பற்றிப் பேசுகிற பேச்செல்லாம் ஒரு விதத்தில் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஊராருக்கெல்லாம் இந்திர விழாவின் தொடக்க நாளில் உற்சாகம் தேடிக்கொண்டு வருகிறதென்றால் என்னைத் தேடிக்கொண்டு அடிபிடி போர் இப்படி ஏதாவது வம்புகள்தாம் வந்து சேருகின்றன. நேற்று மாலை கடற்கரையில் ஒரு யவன மல்லனோடு வலுச் சண்டைக்குப் போய் வெற்றி பெற்றேன். நேற்று இரவு சம்பாபதி வனத்தில் என்னிடம் யாரோ வலுச்சண்டைக்கு வந்தார்கள். வாங்கிக் கட்டிக் கொண்டேன். இந்திர விழாவின் இருபத்தெட்டு நாட்களும் என் பங்குக்கு நேரடியாகவோ, நண்பர்கள் மூலமாகவோ, இப்படி வம்புகள்தாம் எவையேனும் தேடிவரும் போலும்." "ஒருவேளை நீங்களாகவே வம்புகளைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ, என்னவோ?" "பார்த்தாயா? நீயே என்னிடம் வம்புக்கு வருகிறாயே முல்லை; வீரசோழிய வளநாடுடையார் தான் குறும்பாகவும் குத்தலாகவும் பேசுகிறாரென்று பார்த்தால் அவருடைய பெண் அவரையும் மீறிக்கொண்டு குறும்புப் பேச்சில் வளர்கிறாளே? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பெண்ணே, என் தலையெழுத்தே அப்படி. சில பேர்கள் நல்வாய்ப்புகளையே தேடிக்கொண்டு போகிறார்கள். இன்னும் சில பேர்களை நல்வாய்ப்புகளே எங்கே எங்கேயென்று தேடிக்கொண்டு வருகின்றன். என்னைப் பொறுத்தமட்டில் நானாகத் தேடிகொண்டு போனாலும் வம்புதான் வருகிறது. தானாக என்னைத் தேடிக்கொண்டு வந்தாலும் வம்புதான் வருகிறது." "வம்பில் யோகக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்! இல்லையா?" "அதில் சந்தேகமென்ன பெண்ணே! இன்றைக்கு வாய்த்த முதல் வம்பு நீதான்" "இரண்டாவது வம்பு?" "இனிமேல்தான் எங்கிருந்தாவது புறப்பட்டு வரும்" இதைக் கேட்ட முல்லை கலீரெனச் சிரித்தாள். இப்படி விளையாட்டாகப் பேசிக்கொண்டே நாளங்காடியை நோக்கி விரைந்தார்கள் அவர்கள். பூம்புகாரின் செல்வவளம் மிக்க பட்டினப் பாக்கத்துக்கும் பலவகை மக்கள் வாழும் மருவூர் பாக்கத்துக்கும் இடையிலுள்ள பெருநிலப் பகுதியாகிய நாளங்காடியில் மக்கள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். அங்கே கோயில் கொண்டிருந்த சதுக்கப்பூதம், அங்காடிப்பூதம் என்னும் இரண்டு வானளாவிய தெய்வச் சிலைகள் வெகுதொலைவிலிருந்து பார்ப்போர்க்கும் பயங்கரமாகக் காட்சியளித்தன. பூதங்களுக்கு முன்னாலிருந்த பெரிய பெரிய பலிப் பீடிகைகளில் பூக்களும் பணியாரங்களும் குவித்து வழிபடுவோர் நெருக்கமாகக் குழுமியிருந்தனர். மடித்த வாயும் தொங்கும் நாவும் கடைவாய்ப் பற்களுமாக ஒருகையில் வச்சிராயுதமும், மற்றொரு கையில் பாசக் கயிறும் ஏந்திய மிகப் பெரும் பூதச் சிலைகள் செவ்வரளி மாலை அணிந்து எடுப்பாகத் தோன்றின. 'பசியும் பிணியும் நீங்கி நாட்டில் வளமும் வாழ்வும் பெருக வேண்டு'மென்று பூதங்களின் முன் வணங்கி வாழ்த்துரைப்போர் குரல் நாளங்காடியைச் சூழ்ந்திருந்த அடர்ந்த மரச்சோலையெங்கும் எதிரொலித்து கொண்டிருந்தது. துணங்கைக் கூத்து ஆடுகிறவர்களின் கொட்டோசை ஒருபுறம் முழங்கியது. நாளங்காடிப் பூத சத்துக்கத்துக்கு முன்னால் நான்கு பெரிய வீதிகள் ஒன்றுகூடும் சந்தியில் வந்ததும், "முல்லை, நீ உள்ளே போய் வழிபாட்டைத் தொடங்கிப் படையலிடு. நான் இந்தப் பக்கத்தில் என் நண்பர்கள் யாராவது சுற்றிக்கொண்டுருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உள்ளே வருகிறேன்" என்று இளங்குமரன் அவளை உள்ளே அனுப்பிவிட்டுத் தான் மட்டும் அங்கேயே நின்று கொண்டான். "விரைவில் வந்துவிடுங்கள். ஏதாவது வம்பு தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறது." சிரித்துக்கொண்டே அவன் பக்கம் திரும்பிப் பார்த்துச் சொல்லிவிட்டு பலிப்பீடிகையை நோக்கி நடந்தாள் முல்லை. "படையல் முடிந்ததும் நீ தரப்போகிற நெய்யில் *பொரித்த எள்ளுருண்டையை (* இந்த எள்ளுருண்டைக்கு அக்காலத்தில் 'நோலை' என்று பெயர்) நினைத்தால் வராமலிருக்க முடியுமா, முல்லை?" என்று நடந்துபோகத் தொடங்கி விட்ட இளங்குமரன் அவள் செவிகளுக்கு எட்டும்படி இரைந்து சொன்னான். பின்பு தனக்குப் பழக்கமானவர்கள், நண்பர்கள் எவரேனும் அந்தப் பெருங்கூட்டத்தில் தென்படுகிறார்களா என்று தேடிச் சுழன்றன அவன் கண்கள். ஆனால் அவன் தேடாமலே அவனுக்குப் பழக்கமில்லாத புது மனிதன் ஒருவன் தயங்கித் தயங்கி நடந்து வந்து அருகில் நின்றான், "ஐயா!" என்று இளங்குமரனை மெல்ல அழைத்தான். "ஏன் உனக்கு என்ன வேண்டும்!" என்று அவன் புறமாகத் திரும்பிக் கேட்டான் இளங்குமரன். "உங்களைப் போல் ஓவியம் ஒன்று எழுதிக்கொள்ள வேண்டும். தயவு கூர்ந்து அப்படி அந்த மரத்தடிக்கு வருகிறீகளா?" என்று அந்தப் புது மனிதனிடமிருந்து பதில் வந்தபோது இளங்குமரனுக்கு வியப்பாயிருந்தது. 'இது என்ன புதுப் புதிர்?' என்று திகைத்தான் அவன். |