இரண்டாம் பருவம் - ஞானப் பசி 12. காவிரியில் கலந்த கண்ணீர் மணிமார்பனைச் சாவகர்களின் வழித்துணையோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு நீலநாகமறவர் புறவீதி வழியே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. பகல் நேரத்தில் இது போன்ற பொது விதிகளில் பலரும் காண நடந்து சென்று பழக்கமில்லை அவருக்கு. அவருடைய வாழ்க்கை முறை தனிப்பட்டதாக இருந்ததனால் விலகியும், ஒதுங்கியும் வாழ வேண்டியிருந்தது. அவர் வீரர்களுக்குள் துறவியாகவும், துறவிகளுக்குள் வீரராகவும் விளங்கி வந்தார். எனவே ஒளி பரவி விடிவதற்குள் பொது வீதிகளைக்கடத்து சென்று ஆலமுற்றத்தை அடைந்துவிடவேண்டும் என்று வேகமாக நடந்துகொண்டிருந்தார் அவர். வானத்தில் விடிவெள்ளி மின்னிக் கொண்டிருந்தது. விடிகாலையின் அமைதியில் தூரத்தே கடற்கரையின் அலை ஒசை ஒடுங்கியும், ஒடுங்காமலும் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. தென்னை ஒலைகளும் வேறு மரங்களின் இலைகளும் வைகறைக் காற்றில் சலசலவெனஒலியெழுப்பி இலக்கணத்தில் அடங்காத தொரு அழகிய மொழியைப் பேசிக் கொண்டிருந்தன. கொண்டைச் சேவல்கள் வீடுகளின் மாடங்களில் ஏறி விடிவதற்குமுன்பே விடிவுக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வாயிற்புறங்களைத் தெளிப்பதற்காக வந்திருந்த பெண்களின் கைவளைகளும் காற்சிலம்புகளும், ‘இந்த வீதியின் இருளில் கண்ணுக்குப் புலப்படாமல் கந்தர்வப் பெண்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்களோ’ என்று நினைப்பதற்கேற்ற விதத்தில் கொஞ்சிக் கொஞ்சி ஒலித்தன. தம்முடைய வழக்கப்படி ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் ஆலமுற்றத்துக் கடலருகில் நடந்து கொண்டிருப்பார் நீலநாக மறவர். கடற்கரையில் அலையோசையும் கரையோரத்துத் தாழம்புதரில் மடல்கள் காற்றில் மோதி அடித்துக் கொள்வதும் தவிர வேறு ஒசைகளை அவர் கேட்டதில்லை. இன்றோ நடந்துசெல்லும் இடமும், சூழ்நிலையும் ஒலிகளும் வழக்கத்துக்கு மாறான புதுமைகளை அவர் உணரும்படி செய்தன. நீலநாகமறவர் புறவீதியிலிருந்த வீரசோழியவளநாடுடையார் விட்டு வாயிலுக்கு எதிரே நடந்து சென்றபோது, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த வளையொலியும், சிலம்பொலியும் சில கணங்கள் ஒலிக்காமல் நின்றன. “தாத்தா!” என்று மிக இனிய பெண்குரல் ஒன்று அந்த இடத்திலிருந்து கூவியழைத்தது. அவர் திரும்பி நின்று பார்த்தார். நாள் புலரும் நேரத்தின் வைகறை அழகுகளேஒன்றுசேர்ந்து ஒரு சின்னஞ்சிறு பெண்ணாகிக் குடம் நிறைய நீருடன் கை நிறைய ஏந்திக்கொண்டு நிற்பது போலத் தூக்கத்தில் சரிந்த குழல் துவள, குழலில் சரிந்த பூவுந் துவளப் பெண்ணொருத்தி நின்றாள். அரைகுறை இருளில் முகம் நன்றாகத் தெரியாமல், “யார் அம்மா நீ?” என்று நின்ற இடத்திலிருந்தே வினவினார் நீலநாகமறவர். “நான்தான் தாத்தா, வீரசோழிய வளநாடுடையாரின் மகள் முல்லை” என்று பதில் சொல்லிக்கொண்டு அவருக்கு அருகில் வந்தாள் அந்தப் பெண். குடத்துள் நீர்த்தரங்கம் குலுங்கி ஒலித்தது. “என்னவேண்டும் உனக்கு?” “என் தந்தை இன்று காலை உங்களைக் காண்பதற்காகப் படைக்கலச், சாலைக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.” “என்னகாரியமாகப் பார்க்க வேண்டுமோ?”
“உங்கள் படைக்கலச் சாலையில் இருக்கிறாரே அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளை, அவரைப் பற்றி உங்களிடம் ஏதோ பேசுவதற்காக, உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார்.”
“ஆகா! நன்றாகப் பேசலாம். நான் இப்போது ஆலமுற்றத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிறிது நேரங் கழித்து உன் தந்தையைப் புறப்பட்டு வரச் சொல்லேன்” என்றார் நீலநாகமறவர். அவரிடமிருந்து இளங்குமரன் அப்போது எங்கிருக்கிறான் என்ற செய்தியை வரவழைத்து விடலாமென்றுதான் முல்லை அவரோடு பேச்சுக்கொடுத்தாள். ஆனால் அவருடைய மறுமொழிகள் அவளுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தன. அவரோ ஒளி பரவுவதற்குள் திரும்பிப் போய்விடவேண்டுமென்ற அவசரத்தில் இருந்தார். கேள்வியைச் சிறிது நெருக்கமாகத் தொடுத்தால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைத்தாலும் கிடைக்கலாமென்று எண்ணியவளாய், “உங்களை அமரச் செய்து இந்த வீதி வழியாக ‘அவர்’ தேரைச் செலுத்திக்கொண்டு போனபோதுகூட நான் பார்த்தேன் தாத்தா” என்று சிறு குழந்தை பேசுவதுபோல பன்னிப் பன்னிப் பேசினாள் முல்லை. அப்படியும் அவரிடமிருந்து அவள் எதிர்பார்த்த செய்தி வரவில்லை. அதற்குள், வாயிலில் பெண் யாருடனோ பேசுகிற குரல் கேட்டு வளநாடுடையாரே வெளியே வந்துவிட்டார். “விடிந்ததும் விடியாததுமாக யாரோடம்மா பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டவாறே வெளியே வந்த தந்தையை எதிர்கொண்டு ஓடிச் சென்று, “இதோ ஆலமுற்றத்து தாத்தா வந்திருக்கிறார் அப்பா” என்று உற்சாகமாகக் கூவினாள் முல்லை. ‘ஆலமுற்றத்துத் தாத்தா’ என்று தங்கை கூறிய குரல் கேட்டுக் கதக்கண்ணனும் உள்ளேயிருந்து விரைந்து வந்தான். வராதவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஆர்வம் அவனுக்கு. அதன்பின் நீலநாகமறவரால் இத்தனை பேரையும் மீறிக் கொண்டு உடனே அங்கிருந்து போக முடியவில்லை. “இளங்குமரனை நீங்கள் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பதாகக் கதக்கண்ணன் படைக்கலச் சாலையிலிருந்து தெரிந்து கொண்டு வந்து சொன்னான். இன்று நீங்கள் வரும் போது உங்களோடு அவனையும் திரும்ப அழைத்து வந்து விட்டீர்களல்லவா? நேற்றிலிருந்து இந்தப் பெண் முல்லைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தப் பிள்ளையோடு வம்புப் பேச்சுப் பேசி அவனைச் சண்டைக்கு இழுப்பது இவளுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது சில நாட்களாக அவன் இந்தப் பக்கமே வரவில்லை. அதனால் முல்லைக்கு அவனிடம் பெரிய கோபமே மூண்டிருக்கிறது” என்று வளநாடுடையார் தம் ஆவல் மேலீட்டால் பேசிக்கொண்டேயிருந்தார். நீலநாகமறவர் அமைதியாகவும், அழுத்தமாகவும் இருந்தார். அவரிட மிருந்து வார்த்தை பெயரவில்லை. அவர் என்ன பதில் கூறப் போகிறாரென்று அறிவதற்காகவே முல்லையும் அங்கிருந்து போகாமல் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். வளநாடுடையார் விடாமல் மேலும் பேச்சை வளர்த்தார். “திருநாங்கூருக்குப் போயிருக்கிறீர்கள் என்று கேள்விபட்டவுடன் உங்கள் ஆசிரியர்பிரானாகிய பூம்பொழில் நம்பியடிகளின் நினைவுதான் எனக்கு உண்டாயிற்று. நீங்களும், இளங்குமரனும் அடிகளைக் கண்டு வணங்கி விட்டுத்திரும்பியிருப்பீர்கள்.” “அடிகளைக் காண்பதற்குத்தான் போயிருந்தோம். ஆனால் திரும்பியது நான் மட்டும்தான், வளநாடுடையாரே!” “ஏன்? இளங்குமரன் வரவில்லையா?” “இல்லை! அவன் இன்னும் சிறிது காலத்திற்கு எங்கும் வரமாட்டான். நாங்கூர் அடிகள் தமது ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக அவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.” என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அப்படியே திகைத்துப்போய் இருந்தார் வளநாடுடையார். பிள்ளைப் பருவத்திலிருந்து வேலும், வாளும் சுமந்து வீரனாகத் தன்னோடு தோழமை கொண்டு திரிந்த இளங்குமரன் வேறு வழிக்குத் திரும்பி விட்டான் என்பதைக் கேட்டதும் கதக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. “எந்தத்துறையிலும் எல்லை மீறிய ஆழத்துக்கு உணர்வு பூண்டிருப்பவர்கள் விரைவில் இப்படி மாறிவிடுவார்கள்போலும்” என்று எண்ணினான் அவன். முரட்டுப்பிள்ளையாய் அடக்க முடியாத காட்டாறு போலக் காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளில் தன்னையொத்த இளைஞர்களுடன் சுற்றித் திரிந்த பழைய இளங்குமரனை நினைத்தான். கடைசியில் நீராட்டு விழாவுக்குப் போன தினத்தன்று உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் மனமுருகி நின்ற இளங்குமரனை நினைத்தான். ‘என்னைப் போல் அகன்று போகும் உணர்ச்சி கொண்டவர் எப்படியாவது வாழ்ந்து கொண்டே இருப்போம். ஆனால் இளங்குமரனைப்போல் ஆழ்ந்து போகும் உணர்ச்சி கொண்டவர்கள் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தால் தாங்கள் வாழும் உயரத்தை மேலே மேலே ஓங்கச் செய்யாமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிகிறது’ என நினைத்தான் கதக்கண்ணன். ‘இளங்குமரன் சுரமஞ்சரியின் மாளிகைக்குப் போயிருப்பானோ?” என்று நினைத்து நிம்மதியிழந்திருந்த முல்லை இப்போது இதைக் கேட்டு அதிர்ச்சியே அடைந்தாள். “அவன் திருநாங்கூருக்குப் போனது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி, தரவில்லையென்று தோன்றுகிறது” என்று அவர்களிருந்த மௌன நிலையைக் கண்டு கூறினார் நீலநாகர். “இங்கே அடிக்கடி வந்து போய்ப் பழகிக்கொண்டிருந்த பிள்ளையைத் திடீரென்று இனிமேல் இந்தப் பக்கம் காண முடியாதென அறியும் போது, மனத்திற்குத் துன்பமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.” சற்றே உடைந்துதளர்ந்த குரலில் இவ்வாறு கூறினார் வளநாடுடையார். “எனக்கு நேரமாகிறது. நான் புறப்படுகிறேன். முடிந்தால் மாலையில் ஆலமுற்றத்துப் பக்கம் வாருங்கள், பேசலாம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் நீலநாகர். வளநாடுடையாரும், நீலநாகமறவரும் வேண்டிய உறவும் நெருக்கமும் உள்ளவர்களானாலும் மனத்தினாலும் நோக்கங்களாலும் அடிப்படை வேறுபாடுடையவர்கள். வளநாடுடையார் வீரருக்குள் வீரராக மட்டும் வளர்ந்து பெருமை பெற்றவர். நீலநாகரோ வீரருக்குள் மாவீரராகவும் துறவியாகவும் உயர்ந்தவர். நாங்கூர் அடிகளை அடைந்தது இளங்குமரனின் நல்ல காலம் என்று அவர் நினைத்ததைப் போல் வளநாடுடையாராலோ, கதக்கண்ணனாலோ, முல்லையாலோ நினைக்க முடியாததற்கு இவர்கள் இயல்பான மானிட நிலைகளைக் கடந்து சிந்திக்க முடியாதவர்களாக இருந்தது தான் காரணம். ‘இந்த மனிதர் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இளங்குமரனைத் திருநாங்கூர் பூம்பொழிலிற் கொண்டு போய்ச் சேர்த்து விட்டாரே? சோழ நாட்டிலேயே வலிமைமிக்க வீரன் என்று பேர் வாங்கும்படி அவனை ஆக்கி விட வேண்டுமென்று நான் கனவு கண்டதெல்லாம் இனி வீணாக வேண்டியதுதானா? வருகிற புத்த பெளர்ணமியன்று அவனை மணிபல்லவத்துக்கு அழைத்து வருவதாக அருட்செல்வரிடம் தா" நான் வாக்களித்திருப்பது என்ன ஆவது? என் பெண்ணை அவனுக்கு மணம் செய்து கொடுக்க எண்ணியிருக்கும் எண்ணம் என்ன ஆவது?’ என்று மனதுக்குள் நினைத்துக் குழப்பமடைந்து கொண்டிருந்தார் வளநாடுடையார். முல்லையை அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் காணாததால் கதக்கண்ணன் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்குச் சென்று தேடலானான். புற வீதியின் பின்னால் மரங்களடர்ந்த வனத்தின் நடுவே காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்று உண்டு. முல்லையைக் கதக்கண்ணன் தேடிச் சென்றபோது நன்றாக விடிந்துவிட்டது. அவள் காவிரி வாய்க்காலின் கரைமேல் குடத்தோடு அமர்ந்து தனிமையில் மெல்ல அழுது கொண்டிருந்ததைக் கண்டான் அவன். தங்கையின் நிலை அவனுக்குப் புரிந்தது. “எதற்காக அழுகிறாய், முல்லை?” “அழுகிறேனா? இல்லையே!” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனிடம் தன்னுணர்வை மறைக்க முயன்றாள் அவள். “இல்லையாவது! என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீ அழுவதன் காரணம் எனக்குத் தெரியும்!” என்று சொல்லியபடி ஆதரவாகத் தங்கையின் அருகில் அமர்ந்தான் அவன். முல்லை தலைகுனிந்தாள். அவளுடைய கண்ணீரின் கடைசி இரண்டு துளிகள் காவிரிக் காலில் விழுந்து கலந்தன. “கலக்கமடையாதே, முல்லை! உன்னை நானே திருநாங்கூருக்கு அழைத்துப் போகிறேன். நாம் இருவரும் இளங்குமரனைச் சந்திக்கலாம்” என்று தமயனின் குரல் அவள் காதருகே ஆறுதலாக ஒலித்தது. |