மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 13. உள்ளக்கனலும் நெல்லிக்கனியும் கெட்ட கனவு கண்டதுபோல் இவ்வளவும் நடந்து முடிந்ததும் சுரமஞ்சரி முதலியவர்கள் பல்லக்கை நோக்கிச் சென்ற பின்னர் கூட்டத்தில் இருந்தவர்கள் இளங்குமரனை மிக அருகில் நெருங்கி மொய்த்துக் கொண்டு விட்டார்கள். நெற்றிப் பொருத்தில் இரத்தம் கசிய நின்று கொண்டிருந்த அவன் நீலநாக மறவர் மேல் சாய்ந்தாற்போல் இருந்தான். அன்று காலை படைக்கலச் சாலையிலிருந்து நாளங்காடிக்குப் புறப் பட்டபோது தண்ணீரும் பருகாத வெறும் வயிற்றோடு புறப்பட்டிருந்தான் அவன். பசிச் சோர்வும் சேர்ந்து கொண்டது. நெற்றியில் இரத்தம் கசிவதைத் தமது மேலாடையால் துடைத்து விட்டார் நீலநாகமறவர். கூட்டமே இளங்குமரனுக்காக அலமந்தது, பரிந்தது, பதறியது. “பாவீ! இத்துணைப் பொறுமை ஆகுமாடா உனக்கு? இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவர்களைச் சுகமாகத் திரும்பிப் போக விட்டுவிட்டாயே? அப்படியே கழுத்தை முறித்துப் போட்டிருக்க வேண்டாமா?” என்று அவன் மேலுள்ள அன்பை அவனுக்கு வேண்டாதது செய்தவர்களிடம் வைரம் பாராட்டுவது மூலமாகக் காட்டிக் குமுறிக் கொண் டிருந்தார் நீலநாக மறவர். சில நாழிகைக்கு முன் இளங்குமரனோடு சமய வாதம் புரிந்து தோற்ற சாங்கியன் கூட இப்போது அநுதாபம் பொங்க அருகில் நின்றான். அவன் நீலநாகரைப் பார்த்துச் சொல்லலானான்: “ஐயா! ஒளிமயமான இந்த அழகிய இளைஞரோ ஓர் அதிசய புருடர். அதுதான் சான்றாண்மை. ‘எல்லா உயிரும் இரங்கத்தக்கவை. எந்த உயிரையும் கொல்லக் கூட்டாது’ என்பதுதான் தவம். ஆனால் பிறர் தீமையை வாய் திறந்து சொல்வதும் கூடக் கொலை போன்றதென்று தயங்கும் தயக்கமே சான்றாண்மை. தவத்தைக் காட்டிலும் உயர்ந்ததான அந்தச் சான்றாண்மையையே இவரிடம் பார்க்கிறேன். பிறருடைய உடம்பைப் புண்ணாக்குவது மட்டும் உயிர்க்கொலை என்று நினைப்பதற்கும் அப்பால் போய்ப் பிறருடைய மனத்தைப் புண்ணாக்குவதும் கொலை என்று கருதி வார்த்தைகளைச் சொல்லும்போதும் கடுமையைத் தவிர்த்து விரதம் காக்கிறவர்களான சான்றோர்களின் சாயலை இந்தச் சுந்தர இளைஞரிடம் காண்கிறேன்” என்று இளங் குமரனைப் புகழ்ந்து சாங்கியன் இந்த வார்த்தைகளைக் கூறியபோது ‘ஆகா! ஆகா!’ என்ற குரல்கள் சுற்றியிருந்தவர்களிடமிருந்து உருக்கமாக எழுந்து ஒலித்தன! கண்களில் விழிகள் சொருகுவதும், திறப்பதுமாக இளங்குமரன் நீலநாகமறவரின் மார்பில் முன்னிலும் தளர்ந்து சாய்ந்தான். உயரமும் பருமனும் இறுகி வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடலில் ஒளிமயமான இளங்குமரன் சரிந்த காட்சி மலை முகட்டில் மின்னல் சரிந்து நெளிவது போல் தோன்றியது. “ஐயோ பசி மயக்கம் போலிருக்கிறது” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பதறினார்கள். “விலகி நில்லுங்கள். காற்றுப் பட்டாலே தெளிவு வரும்” என்றார் நீலநாகர். கூட்டம் விலகியது. காற்று வந்தது. ஆனால் தெளிவு வரவில்லை. அப்போது தற்செயலாக பூத சதுக்கத்தில் படையலிடுவதற்குத் தன் மகள் முல்லையோடு வந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வீரசோழிய வளநாடுடையார் யாரிடமோ அரைகுறையாக இந்தச் செய்தியைக் கேள்வியுற்றுப் பதறிப் போய் ஓடிவந்தார். அவரோடு அவர் மகள் முல்லையும் வந்தாள். கேள்விப்பட்ட செய்தி அரைகுறையானது என்றாலும் மனத்தில் சந்தேகங்களுடனும், துடிப்புடனும் பறந்து பதறித் தவித்துக் கொண்டே வந்திருந்தார்கள் முல்லையும் வளநாடுடையாரும். இதற்குள் கூட்டத்தில் யாரோ ஒருவர் பக்கத்தில் இருந்த ஒரு முதிய முனிவரிடமிருந்து தண்ணீர்க் கமண்டலத்தை வாங்கி வந்து இளங்குமரன் முகத்தில் தெளித்தார். பொற் பேழையில் வெண்முத்துக்களாக நீர்த்துளிகள் அந்த நெற்றியில் உருண்டன. அதில் சில துளிகள் காயம்பட்ட இடத்து இரத்தத்தைக் கலந்துகொண்டு மாணிக்கங்களாகவும் உருண்டன. எதிரே நெஞ்சம் பதற நினைவுகள் பதற நின்ற முல்லையின் வலது கை அந்தக் காயத்தை நோக்கி உயர்ந்து தீண்டுவதற்கும் நெருங்கி விட்ட விநாடியில் அவனுக்குத் தெளிவு வந்து கண்களை மலர்த்தி முன்னால் பார்த்ததனால் அவளுடைய கை பின்வாங்கி விட்டது. தேவருலகத்துக் கற்பகப் பூவைத் திருட்டுத் தனமாகப் பறிக்க உயர்ந்த மனிதக் கையை அந்தப் பூவே கற்பக மரத்துக்குச் சொந்தக்காரனின் கண்கள் போலத் தோன்றிப் பயமுறுத்திப் பின்வாங்கச் செய்யும் பிரமையைப் போல் இளங்குமரனின் நெற்றியைத் தீண்டும் ஆசையும், தீண்டலாமா என்ற பயமுமாகப் பின்னால் நகர்ந்தாள் முல்லை. “என்ன ஐயா இது? நான் கேள்விப்பட்டது மெய் தானா? தருமத்திற்கும் நியாயத்திற்கும் பெயர் பெற்ற சோழர் கோநகரத்தில் கூட இப்படி அநியாயங்கள் நடக்குமா? இந்தக் கொடுமை செய்தவர்களைப் புடைத்து உண்ணாமல் பூதசதுக்கத்துப் பூதங்கள் ஏன் இன்னும் தங்கள் கைகளில் பாசக் கயிற்றை வைத்துக் கொண்டு வீணுக்கு உட்கார்ந்திருக்கின்றன? கொடுமைகள் அதிகமாகிவிடும் போது தெய்வங்கள் கூடச் சோம்பி இருந்து விடுகின்றனவோ?” என்று கொதித்தார் வளநாடுடையார். “மனிதர்களே சோம்பிப் போயிருந்துவிட்டு அதற்குச் சான்றாண்மை என்று பெயர் சூட்டிப் பெருமையும் கொண்டாடுகிறபோது தெய்வம், என்ன செய்யும் ஐயா?” என்று அதே கொதிப்போடு பதில் சொன்னார் நீலநாகர். ஆத்திரத்தில் அவர் சான்றாண்மையையே சோம்பலாகச் சொல்வதைக் கேட்டுப் பக்கத்தில் நின்ற சாங்கியன் மெல்லச் சிரித்துக் கொண்டான். முல்லையின் கைகளில் இருந்த தட்டில் கனிகளைப் பார்த்துவிட்டு, “இதிலிருந்து ஏதாவது பழங்களைக் கொடுத்து அவரை உண்ணச் சொல்லுங்களேன் அம்மணீ! பசி மயக்கமாவது தணியும்” என்றான் சாங்கியன். அப்படியே தட்டோடு கனிகளை இளங்குமரனுக்கு முன்னால் நீட்டி, “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் முல்லை. அப்போதும் இளங்குமரனின் முகத்தை நேரே ஏறிட்டுப் பார்க்கும் தெம்பு அவளிடம் இல்லை. ‘என்னைப் பார்’ என்று துாண்டும் ஆசையும் ‘பார்க்காதே’ என்ற பயமுறுத்தலும் சேர்ந்தே அவன் கண்களில் இருப்பதுபோல உணர்ந்தாள் அவள். அந்தக் கண்களின் அழகு அவளை அவன் முகம் பார்ப்பதற்குத் தூண்டியது. தூய்மை பார்க்க விடாமல் அவளைப் பயமுறுத்திப் பின்னால் நகரச் செய்தது.
எங்கோ பார்த்தாற்போல் அவனையே பார்க்க முயன்றவளாய்க் கனிகளை அவனுக்குமுன் நீட்டினாள் முல்லை. எல்லாக் கனிகளையும் பார்த்துவிட்டுத் தட்டின் ஒரு மூலையிலிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொண்டு போதுமே என்ற பாவனையில் கையசைத்தான் இளங்குமரன்.
“இன்னும் எடுத்துக்கொள். காலையிலிருந்து தண்ணீர் கூடப் பருகவில்லையே நீ” என்றார் நீலநாகர். முல்லை மறுபடியும் தட்டை அவன் அருகில் நீட்டினாள். அவன் சிரித்தபடியே மறுத்துவிட்டான். “மனம் நிறைந்திருக்கிற சமயங்களில் வயிறு நிறையாதது ஒரு குறையாகத் தெரிவதில்லை ஐயா! இந்த நகரத்தில் உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்தின் கரைகளிலும் பசித்து கிடப்பவர்களைப் பற்றி நினைத்து நினைத்து என் பசியை நான் மறந்துபோன நாட்கள் பல. உலகத்தில் மற்றவர்களுடைய பசிகளையெல்லாம் உணர முடியுமானால் ஒவ்வொரு நியாயமான மனிதனுக்கும் தன் பசி மறந்துதான் போய்விடும் அப்படி மறந்து போவதற்கு விசாகையின் மனம் வேண்டுமே” என்று இளங்குமரன் சொல்லிக் கொண்டே வந்த போது சொல்லுவதைச் சில கணங்களுக்கு நிறுத்திக் கொண்டு விசாகையின் முகத்தை மன நினைவுக்குக் கொண்டுவர முயன்றான். அவனுடைய மனக்கண்ணில் உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு அட்சய பாத்திரமும் கையுமாக விசாகை தோன்றினாள். நாவில் நெல்லிக்கனியின் சுவையும், நெஞ்சில் விசாகையைப் பற்றிய நிர்மலமான நினைவுகளும் புரள நின்றான் இளங்குமரன். “போகலாம் வா! நீ திருநாங்கூரிலேயே மேலும் சிறிது காலம் இருந்தால் கூட நல்லதுதான். இங்கே உன்னை அழித்து விட முயல்கிறவர்கள் இன்னும் ஊக்கத்தோடு முனைந்து திரிகிறார்கள். ஓவியன் மணிமார்பன் முன்பு என்னிடம் கூறியது பொய்யல்ல” என்று அவ்வளவு நேரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எதையோ வெளியிடுகிறவர் போலப் பேசினார் நீலநாக மறவர். “ஐயா! ஒரு காலத்தில் என்னுடைய உடல் வலிமைக்கு எதிரிகளாக வருகிறவர்களையே நான் தேடினேன். அப்போது அவர்கள் மிகக் குறைவாகத்தான் எனக்குக் கிடைத்தார்கள். இப்போதோ நான் ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு என்னிடம் வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள்” என்று இளங்குமரன், நீலநாகர் வளநாடுடையார் இருவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு ஊன்றியிருந்த ஞானக் கொடியைக் கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான். |