மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 14. கற்பூர நறுமணம் ‘இப்போது ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு நான் உடல் வலிமையை நம்பிக்கொண் டிருந்த காலத்தில் எதிரிகளாக வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள் - என்று சொல்லிவிட்டு வளநாடுடையார், நீலநாகர் ஆகியோரோடு இளங்குமரன் புறப்பட முற்பட்ட சமயத்தில் சிறிதும் எதிர்பாராத சந்திப்பொன்று அங்கே நிகழ்ந்தது. “எதிரே வருகிறவர்கள் எல்லாம் எதிரிகளானால் இதோ உங்களுக்கு ஒரு புது எதிரி” என்று கூறிக் கொண்டே விசாகை அவனுக்கு முன்னால் தோன்றினாள். இளங்குமரன் முகம் மலர்ந்து வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘என்ன அற்புதம்! சில விநாடி களுக்கு முன்னால்தானே இவளை நினைத்தேன்? மனக் கண்களுக்குத் தோன்றியவள் உடனே புறக்கண்களுக்கும் தோன்றுகிறாளே! திருநங்கூரிலிருந்து இவள் எப்போது இங்கே வந்தாள்?’ என்று எண்ணிக் கொண்டே எதிரே நடந்து வரும் விசாகைக்குத் தன் பார்வையே வணக்கத்தை சுமந்து செல்லும் விதத்தில் நோக்கினான் இளங்குமரன். இவ்வளவு பரிசுத்தத்தைத் தாங்கிக்கொள்ள இந்த உலகத்தில் இடமில்லை, இடமில்லை என்பது போல்இந்த மண்ணுக்குத் தகுதியில்லை, தகுதியில்லை என்பது போல் ஒதுங்கி நடந்து கால்களை அதிர ஊன்றாமல் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தாள் விசாகை. பூமாலை சரிந்து நழுவுகிறாற் போல் மண்ணிற் பதியாது மிதக்கும் நடை அது. தெளிந்த நீரில் பால் கலப்பது போல் அவள் வந்ததுமே அந்த இடத்தில் பிரகாசம் பரவியது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்க மாட்டேன்’ - என்பது போலவும், பிரவாகத்தில் மிதக்கும் பூவைப் போலவும், விசாகை வருகிற தூய்மையிலேயே மனம் தோய நின்றான் இளங்குமரன். ‘இரும்பில் தோன்றும் துரு இரும்பையே அழித்து விடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்துவிடும்’- என்று விசாகை என்றோ தனக்குக் கூறிய சொற்களை இப்போது நினைத்துக் கொண்டான் அவன். அப்படிச் சஞ்சலம் எனக்கு ஏற்படும் போதெல்லாம் இவள் எதிரே தோன்றுகிறாளே என எண்ணியவனாக, “திருநாங்கூரிலிருந்து எப்பொழுது புறப்பட்டீர்கள், அம்மையாரே? சிறிது நேரத்திற்கு முன்னால்தான் உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்களே வந்து விட்டீர்கள்” என்று கேட்டான் இளங்குமரன். “இங்கு நான் வந்த நேரம் நல்ல நேரமில்லை போலும்! நீங்கள் காயமுற்ற நெற்றியும் கலங்கிய கண்களுமாக எங்கோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே?” என்றாள் விசாகை. “காயம் பட்டதும், கலங்கியதும் உண்மை. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்ததும் என்னுடைய கலக்கங்கள் அழிந்து பழைய தெளிவை நான் உணர்கிறேன்” என்றான் இளங்குமரன். அங்கே அட்சய பாத்திரத்தோடு வந்த விசாகையைக் கண்டதும் வளநாடுடையாரும், முல்லையும் என்ன நினைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. படைக்கலச்சாலைக்கு வந்து அப்புறம் சந்திப்பதாகக் கூறி நீலநாக மறவரிடமும், இளங்குமரனிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். விசாகை, தான் அன்று அதிகாலையில்தான் திருநாங்கூரிலிருந்து புறப்பட்டதாகவும், இந்திரவிழா முடிகிறவரை காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள். ஒதுங்கி நின்றிருந்த நீலநாகர் அன்போடு அருகில் வந்து, “சுகமாய் இருக்கிறாயா, அம்மா?” என்று விசாகையை விசாரித்தார்.
“எல்லாரும் சுகமாயிருக்கிறவரை என்னுடைய சுகத்துக்கு ஒரு குறையும் இல்லை ஐயா?” என்று அவரை நோக்கிக் கைகூப்பினாள் அவள்.
“நீயும் எங்களோடு வந்து ஆலமுற்றத்திலேயே தங்கிக் கொள்ளலாமே அம்மா! திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து யார் வந்தாலும் இங்கே ஆலமுற்றத்து விருந்தாளிகளாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார் நீலநாகர். விசாகை புன்னகை பூத்தாள். “இல்லை ஐயா! இந்த நகரத்தில் எங்கள் சமயத்தாருக்கு உரிய இந்திர விகாரம் என்னும் பெளத்தப் பள்ளியில் நான் போய்த் தங்கிக் கொள்வேன். நாளைக்குக் காலையில் மீண்டும் உங்கள் இருவரையும் நாளங்காடியில் இதே இடத்தில் சமயவாதிகளின் கூட்டத்துக்கு நடுவே சந்திப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று வணங்கினாள் விசாகை. அன்று காலையில் நாளங்காடியில் இளங்குமரனுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றி விசாகையிடம் சொல்லலாமென நினைத்திருந்த நீலநாகர் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அவரும் இளங்குமரனும் அவளுக்கு விடை கொடுத்தனுப்பினார்கள். காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக அந்தத் துன்பச் செய்திகளை அவள் அறிய வேண்டாமென்றே நீலநாகர் அவளிடம் இவற்றைக் கூறாமல் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். விசாகை விரைவாக விடைபெற்றுக் கொண்டதற்குக் காரணமும் இப்படிப்பட்டதுதான். இளங்குமரனும் நீலநாகரும் ஏதோ கவலை நிறைந்த சூழ்நிலையில் இருப்பதாக அவள் அநுமானம் செய்து கொள்ள முடிந்ததனால் அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் புறப்படுவதுதான் நல்லதென்று புறப்பட்டிருந்தாள் அவள். “புறப்படு தம்பீ! இந்தக் கோலத்தோடு இன்னும் இங்கே நிற்க வேண்டாம். இப்படிக் கலகலப்பான பொது இடங்களுக்கு அதிகமாக வந்து பழகுவதை விரும்பாத என்னை நீதான் உன் பாதுகாப்புக்காக இங்கே அடிக்கடி வரச் செய்கிறாய். நேற்று உன் பொருட்டு இங்கே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். இன்றைக்கு வரவேண்டா மென்று நினைத்திருந்தேன் உன்னைத் தனியே இங்கு அனுப்பிய பின் எனக்கு மனம் கேட்கவில்லை. பிள்ளைப் பூச்சி குடைவதுபோல் மனத்தில் ஏதோ வேதனை குடைந்தது. சிறிது நேரத்தில் நானும் புறப்பட்டு வந்துவிட்டேன். தெய்வ சித்தம் எவ்வளவு பெரிய உயிர் உதவிக்காக என்னை இங்கே புறப்படுவதற்குத் தூண்டியிருக்கிறது, பார்த்தாயா? நான் வந்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும், என்று நினைவை நிகழாததோடு இணைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது தம்பீ!” “வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா. நம் கைகளில் என்ன ஐயா இருக்கிறது? விதிக்கு ஊழ் என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கன். ஊழ் என்றால் வரிசை, முறை என்று பொருள். செய்த வினைகளை நிறுத்தி நிறுத்து நிறுவைக்கு நோந்தபடி பயன்கள் வரிசையாக வருவதற்கு எவ்வளவு பொருத்தமாகப் பெயர் அமைந்திருக்கிறது, பார்த்தீர்களா?” என்றான் இளங்குமரன். முன்பு அவனைத் தழுவினாற்போல் அவனருகில் நடக்கிற இந்தச் சமயத்திலும் அவன் உடம்பிலிருந்து கற்பூரத்தின் நறுமணம் கமழ்வதுபோல் நீலநாகர் உணர்ந்தார். இப்படிப் பேசியவாறே இவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, செவிகளில் மகர குண்டலங்கள் அசைய மார்பில் புலமையைப் பாராட்டி மன்னர்கள் அளித்த இரத்தின கண்டிகைகள் ஒளிரத் தங்கநிறப் பட்டு ஒரு தோளைத் தழுவினாற் போலச் சரிந்த இலங்கப் பிராகிருத மொழியிலும் பாலி, வடமொழிகளிலும், வல்லவரான பண்டிதர் ஒருவர் எதிரே வந்து இளங்குமரனின் கையிலிருந்து ஞானக் கொடியைப் பார்த்து விட்டுப் பசி கொண்டிருந்த சிங்கம் கண்முன் இரை கண்டாற் போன்ற ஆவலோடு நின்றார். அவர் வலக் கையில் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. கம்பீரமான தோற்றமும் தோலாலும் சதையாலும் மட்டுமின்றி அறிவாலும் மிகுந்து தோன்றிய ஒளியும் அழகும் கொண்டு அந்தப் பெரும் புலவர் வந்து நின்றதும் இளங்குமரன் அவரை வணங்கினான். அவ்வாறு வணங்கும்போது ‘இவருடைய அறிவுக்கு என் வணக்கமும் அகம்பாவத்துக்கு என் அநுதாபமும் உரியனவாகுக’ என்று மனத்தில் இரண்டையும் நினைத்துக் கொண்டே அவன் வணங்கினான். அந்த வணக்கத்துக்குப் பதில் வணக்கமும் செலுத்தாமல் ‘என்னடா சிறுபிள்ளையே’ என்கிற விதத்தில் சிரித்தது ஞான சிம்மம். “நெற்றியில் இரத்தக் காயமும் மனத்தில் கலக்கமுமாகப் பசித்துத் தளர்ந்து இருக்கிறாயே! இப்போது எதற்கு வம்பு? இவரிடம் நாளைக்குச் சந்தித்து வாதிடலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்படு. இன்று காலைப் போதுக்கு இத்தனை வம்புகள் போதும்” என்று இளங்குமரனின் காதருகில் மெல்லச் சொன்னார் நீலநாகமறவர். “ஐயா! நீங்கள் கூறுவது நல்லதானாலும் இப்போது இந்தப் புலவரை நான் அலட்சியம் செய்வதற்கில்லை. நோயாளிக்கு மருந்தளித்து அந்த நோயைப் போக்க வேண்டிய மருத்துவன் நோய் கண்ட போதெல்லாம் நோய் கண்ட இடமெல்லாம் தயங்காமல் உதவுவதில் தான் தொழிலால் கிடைக்கிற மெய்யான மன நிறைவு அவனுக்கு உண்டு. அறிவும் மருந்தைப் போன்றதுதான். இப்போது இந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய், இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்பும் இவரை இந்த நோயோடு இப்படியே நலியவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று. ஞானத்தை அடக்கி வைத்துக் கொள்ளாமல் மலர்ந்த பூவைப்போல் எல்லார்க்கும் நுகரப் பயன்பட்டுக் கற்பூரம் போல மணந்துகொண்டே பிரகாசிக்க வேண்டும்” என்று மெல்லிய குரலில் நீலநாகருக்குச் சொல்லிவிட்டு எதிரே நின்றவரை அதுதாபத்தோடு பார்த்துக் கொண்டே “புலவர் பெருந்தகையே! உங்கள் போரைத் தொடங்கலாம்“ என்றான் இளங்குமரன். முன்பு அவன் சரீரத்திலிருந்து உணர்ந்த கற்பூர நறுமணத்தை இப்போது அவன் சொற்களிலிருந்தும் உணர்வது போன்ற பிரமையை நீலநாகர் அடைந்தார். |