மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 16. அகங்கார தகனம் இளங்குமரனும் நீலநாகரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எதிரே குன்றுபோல் நின்று கொண்டிருந்தவருடைய கைகளில் இருந்து ஏடுகள் நழுவி மண்ணில் வீழ்ந்தன. பூகம்பம் நிகழ்கிற காலத்து மரம் போல் அவர் உடல் ஆடியது. நடுங்கும் கைகளால் தம் செவிகளில் இருந்த குண்டலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றினார். அவர் மார்பில் மின்னிய இரத்தின கண்டிகைகளையும் கழற்றினார். தோளில் பொன் மின்னலாய்ச் சரிந்து மடிந்து வழிந்து கொண்டிருந்த பட்டுப் பீதாம்பரத்தை எடுத்து மடித்து அதன்மேல் குண்டலங்களையும், இரத்தின கண்டிகைகளையும் வைத்துக் கொண்டு கீழே குனிந்து... அவர் செய்கையைப் புரிந்துகொள்ள முடியாமல் இளங்குமரன் பயந்து பின்னுக்கு நகர்ந்து கொண்டான். நீலநாகர் திகைத்து விலகினார். அறிவு மலையாகிய அந்தப் பன்மொழிப் புலவர் இளங்குமரனுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டார். “சுவாமி இதென்ன் காரியம்?” என்று பதறினான் இளங்குமரன். அந்தப் பெரும் புலவருடைய கண்களிலிருந்து நீரும், நாவிலிருந்து சொற்களும் நெகிழ்ந்தன: “என் பெயர் முகுந்த பட்டர். இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் காசியிலிருந்து புறப்பட்டு ஒவ்வோர் அரச சபையாகப் போய்த் தங்கி அந்தந்த நாட்டு அறிவாளிகளுடன் வாதம் புரிந்து வாகை சூடினேன். கடைசியாக இந்த ஆண்டு இந்திர விழாவின் போது இங்கு வந்தேன்...” என்று தம் கதையைத் தொடங்கினார் முகுந்த பட்டர். இப்படிக் கண்களில் நீர் மல்க ஒவ்வொரு சொல்லாக அவர் நாவிலிருந்து கழன்றபோது சொற்களோடு சொற்களாக இன்னும் ஏதோ ஓருணர்வும் அவர் மனத்திலிருந்து கழன்று கொண்டிருந்தது. அவர் பேசினார்: “கலிங்க தேசத்திலும், உச்சயினியிலும், அயோத்தியிலும், குயிலாலுவத்திலும், விதர்ப்ப நாட்டிலும், பாஞ்சால தேசத்திலும் வெற்றிக்கொடி நாட்டிப் பலப்பல ஞானிகளுக்கு நான் குருவானேன். அந்தந்த தேசத்து அரசர்கள் மனமுவந்து புகழுரைகளும், பொற்கடகங்களும், மகர குண்டலங்களும், இரத்தின கண்டிகைகளும், பட்டுப் பீதாம்பரங்களும் அளித்து இந்தச் சரீரம் நிறைய அகம்பாவங்களைப் பூட்டிவிட்டார்கள். எத்தனையோ விதத்தில் முயன்றும் என் அகங்காரத்தை என்னாலேயே அடக்க முடியவில்லை. உண்ணும் உணவுகளைக் குறைத்து உடற் கொழுப்பையும் குறைத்து உடலை வாட்டிப் பார்த்தேன். தெய்வ பக்தியை வளர்த்துக் கொண்டு இறுமாப்பை அடக்க முயன்றேன். என்னைப் பிடித்த அகங்காரமோ மருந்தினால் தீராத பெரு நோயாய் வதைத்தது. காய்ந்த தருப்பைப் புதரில் பற்றிய நெருப்பைப் போல்... மூங்கில் உரசி மூங்கிலே எரிவது போல் என்னுள்ளே உண்டான அகம்பாவத்தால் நானே எரிந்து எரிந்து சிவப்பாகிக் கொண்டிருக்கிறேன். ‘தயைகூர்ந்து என் அறிவுக் கொழுப்பை அடக்கி என்னுள் எரியும் அகம்பாவ நெருப்பை அவித்து யாராவது என் இதயத்தைக் குளிர வைக்க மாட்டார்களா? என்று இந்தப் பத்து ஆண்டுகளாக அதைச் செய்யவல்ல மேதைகளைத் தேடித் திரிந்தேன். கால் போன போக்கில் வந்த தேச தேசாந்தரங்களில் எல்லாம் திரிந்தேன். நேற்று அதிகாலையில் இந்த நகரத்தை அடைந்து காவிரியில் நீராடிவிட்டு நான் நிமிர்ந்த போது கரை மேலுள்ள மரத்திலிருந்து நல்ல சகுனம் போல் பூக்கள் என் தலையில் உதிர்ந்தன. என்னுடைய அகம்பாவத்தை அழித்து என்னைத் தடுத்தாட் கொள்ளப் போகிற ஞானம் இந்தக் காவிரியின் கரையில் எங்கோ இருக்கிறது என்று என் மனம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியால் துள்ளியது. என்னுள்ளே தகித்துக் கொண்டிருக்கும் நெருப்பு விரைவில் தணிய வேண்டுமே என்ற தவிப்பில் இன்று இங்கே உன்னோடு வாதத்தைத் தொடங்கிய சில நாழிகைகளில் பொருத்தம் இல்லாமல் கேள்விகளையெல்லாம் கூட நான் உன்னிடம் கேட்க முற்பட்டு விட்டேன். அப்படிக் கேட்டதற்கு அந்தரங்கமான காரணம் எப்படியாவது நான் உனக்குத் தோற்றுப் போக வேண்டுமே என்ற என் ஆசைதான். ஆனால் பொருத்தமில்லாமல் நான் கேட்க முற்பட்ட கேள்விகளுக்குக்கூட நீ அழகான மறுமொழி கூறினாய். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் காசியில் கங்கைக் கரையிலிருந்து புறப்பட்டபோது என்னுடைய இலட்சியம் எதுவாயிருந்ததோ அது இன்று காவிரிக்கரையில் வந்து நிறைவேறியது. தெய்வகுமாரா! அருள்கூர்ந்து உன் பாதகமலங்களை ஒருமுறை வணங்கி என்னுடைய இந்த ஐசுவரியங்களை அவற்றில் படைக்க எனக்கு அனுமதி கொடு...” முகுந்தபட்டர் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவராய் இப்படி அவனை வணங்குவதற்குக் கெஞ்சிக் கொண்டிருந்தபோது நீலநாகர் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார். ‘இந்த முகுந்தபட்டர் இப்போதுதானே இவ்வளவு விவரமும் சொல்கிறார்! இளங்குமரன் இவரை எதிரே பார்த்தவுடனேயே ‘இந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய். இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்னும் இவரை இந்த நோயோடு இப்படியே நலிய விட்டுவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று’ என்று தீர்க்க தரிசனம் போலச் சொல்லி விட்டானே! அவ்வாறு சொல்ல அவனால் எப்படி முடிந்தது’ என்று நினைந்து நினைந்து அந்த நினைப்புக்கு ஒரு முடிவும் தெரியாமல் பக்தி மலரும் கண்களால் இளங்குமரனைப் பார்க்கலானார் நீலநாகமறவர். ஆனால், அவனோ ஒன்றும் அறியாத குழந்தை போலக் காலடியில் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் முகுந்தபட்டரையும், பக்கத்தில் நின்றுகொண்டு கண்கள் மலர வியந்து தன்னையே நோக்கும் நீலநாகரையும் மாறிமாறிப் பார்த்தான். முகுந்தபட்டர் அவன் விழிகளை நிமிர்ந்து பார்த்து இறைஞ்சினார். “என்னை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்!” “சுவாமி! நீங்கள் நிறைகுடம்! உங்களை அங்கீகரித்துக்கொள்ள நான் யார்! நோயுற்றவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியாக நடந்தபோது தற்செயலாய் அவன் உடம்பில் உராய்ந்த செடி ஒன்று உயரிய மருந்துச் செடியாக இருந்து, அந்த நோயைச் சில நாட்களில் தணித்தாற்போல, இந்த நிகழ்ச்சியை நீங்கள் தற்செயலாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய நான் உங்கள் அகம்பாவத்தைத் தணித்ததாக எண்ணிக் கொள்ளக்கூடாது. இது தன் போக்கில் நேர்ந்ததே ஒழிய என்னால் உங்களுக்கு நேரப்பட்டது அன்று. காட்டில் நடந்துபோன மனிதனுடைய நோயைத் தீர்க்க வேண்டு மென்ற கருத்து அவன்மேல் உராய்ந்த பச்சிலைக்கு இல்லை. பச்சிலையை உராய்ந்தவனுடைய கருத்திலும் ‘அதனால் நோய் தீரும்’ என்ற ஞாபகமும் நோக்கமும் இல்லை. இன்ன இடத்தில் இன்ன சமயத்தில் இன்ன பொருளால் இன்னது நேரவேண்டுமென்ற தெய்வ சித்தம்தான். இதில் காரணம், காரியம், கருத்து, கருமம், எல்லாம். அதற்குமேலே நினைக்க ஒன்றும் இல்லை.”
“நீ இப்போது கூறியது தான் மெய்யான ஞானம்! ஆனால், நானோ நீ இப்போது சொல்வதற்கு நேர் மாறாக நினைத்து நினைத்து இந்தப் பத்து ஆண்டுகளாக அறிவு மதம் பிடித்து அலைந்து விட்டேன். நான் நினைத்துப் பெருமைப் படும்படியாக இந்த உலகத்தில் என்னுடைய அறிவைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற ஒரே எண்ணம் தான் என் மனத்தில் இன்றுவரை நிலைத்திருந்தது.”
“செருக்கு எப்படி ஏற்படுகிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா! அதிக அறியாமையிலும் செருக்குப் பிறக்கிறது! அதிக அறிவிலும் செருக்குப் பிறக்கிறது! புயல் காற்றில் சிறிய அகல்விளக்கை அணைந்துவிடாமல் காக்க முயல்வதுபோல் இந்த உலகத்தில் மனிதன் தன் இதயத்தைச் செருக்கு இல்லாமல் காப்பது எவ்வளவு அருமையான காரியமாயிருக்கிறது. பார்த்தீர்களா? அறிவு வரம் பெற்று மற்றவர்களை அழிக்க முயன்றால் தானே அழிந்துபோக வேண்டியதாகத்தான் நேரும் என்று ஒவ்வொரு அறிவாளியும் ஒவ்வொரு கணமும் தனக்குள் நினைத்துத் தன்னைத்தானே அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பஸ்மாசுரனுடைய கதையாகத்தான் முடியும். நம்முடைய தத்துவ குணம் தான் நம் மனத்துக்கு அங்குசம். மனத்தில் மதம் பிடிக்கும்போது அடக்கப் பயன்படும் ஆயுதமும் அதுதான்.” “அந்த ஞானம் இன்றுதான் எனக்குக் கிடைத்தது. அது கிடைக்கக் காரணமாக இருந்த நீ இவற்றையெல்லாம் என் காணிக்கைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.” இப்படிக் கூறிக்கொண்டே அவர் தன் பாதங்களில் இடுவதற்கு முற்பட்ட அணிகலன்களைப் பார்த்து இளங்குமரன் சிரித்தான். “எந்தெந்த அணிகலன்கள் உங்களுடைய உடம்பில் கர்வத்தீயை எரிய விட்டனவோ, அவற்றையே இப்போது என் பாதங்களில் இடுகிறீர்களே?” “உன் சக்தி பெரிது. அதை இவற்றினாலும் எரிக்க முடியாது. நீ தெளிந்தவன். வீங்கவும், ஏங்கவும் விடாமல் மனத்தைக் காக்கத் தெரிந்தவன்.” “இருக்கலாம்! ஆனால் இவை எனக்குத் தேவையில்லை. யாராவது ஏழைகளைத் தேடி இவற்றைக் தானமாக அளியுங்கள். எனக்கு வேண்டாம்.” “அப்படிச் சொல்லக்கூடாது. குரு தட்சிணையாகவாவது...” “யார் யாருக்கு குரு? தாங்கள் எங்கே? நான் எங்கே? இந்த உலகத்தில் இல்லாப் பிழையும் பொல்லாப் பிழையும், எல்லாப் பிழையும் செய்து, நோயும் வறுமையும் கொண்டு ஏழையாக இருக்கிறவர்கள்தாம் என்னுடைய குருவும் வணங்குகிற குருக்கள். அவர்களுடைய பசியிலிருந்துதான் என்னுடைய சிந்தனைகள் பிறந்து வளர்ந்தன. அவர்களுடைய துக்கங்களிலிருந்துதான் என்னுடைய ஞானம் பிறந்தது. இன்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே நகரத்தில் இந்திர விகாரம் என்ற பெளத்த மடத்தின் வாயிலில் வயது முதிர்ந்த துறவி ஒருவரிடம் பேசியபோதுதான் என் மனமே அகங்கார இருள் நீங்கி ஒளி பெற்றது. அருள்கூர்ந்து உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் நோயும் பசியுமாகக் கிடப்பவர்களைத் தேடிப் போய் இந்த அணிகலன்களை அளித்து மகிழுங்கள். என் வழியை எனக்கு விடுங்கள். என்னுடைய இவ் வழியில் பொன் கிடந்தாலும், மண் கிடந்தாலும், ஓடு கிடந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான்? இது மண், இது பொன் என்று பிரித்து வேறுபாடு உணர்கிற காலத்தை நான் இழந்துவிட்டேன். தயை கூர்ந்து என் வழியை எனக்கு விடுங்கள்.” முகுந்தபட்டர் தலை நிமிர்ந்து நன்றாக இளங்குமரனின் முகத்தைப் பார்த்தார். தம் கண்களின் அந்தப் பார்வையாலேயே ஐம்புலனும், எட்டு அங்கமும் தோய அவனை வணங்குகிறாற் போன்ற பாவனையின் சாயலைச் சுமந்தவராக வணங்கினார் அவர். இளங்குமரன், மதம் அடங்கப்பெற்ற அந்த அறிவுமேதையைப் பதிலுக்கு வணங்கிவிட்டு விடை பெற்றான். நீலநாகர் வியப்பும் திகைப்பும், மெல்ல மெல்ல நீங்கியவராக அவனைப் பின்தொடர்ந்தார். |