மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 21. மயானத்தில் நடந்தது ஆலமுற்றத்துக் கடற்கரையில் நடந்தவாறே மிக முக்கியமான செய்திகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள் வளநாடுடையாரும் நீலநாக மறவரும். வளநாடுடையார் ஆத்திரமாக மீசை துடிதுடிக்கப் பேசலானார். “ஒவ்வொரு கணமும் நீங்கள் அந்தப் பிள்ளைக்குக் காவலாயிருக்க வேண்டும் ஐயா! நாளங்காடியில் இன்று காலையில் நடந்த சூழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் இப்போதுகூட என் மனம் கொதிக்கிறது. நடந்தவற்றை ஒவ்வொன்றாக இணைத்துத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணமாக ஏதோ ஒரு வலிமையான சூழ்ச்சி பின்னாலிருந்து இயங்குவதாகத் தெரிகிறது.” “வலிமையாவது சூழ்ச்சியாவது? ‘நான்தான் உன்னுடைய எதிரி!’ என்று நேர் எதிரே முன்னால் வந்து நின்றுகொண்டு கையை ஓங்குவதற்குத் துணிவில்லாத வலிமையும் ஒரு வலிமையா? சூழ்ச்சியை நாடி அதற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டுதான் செயற்பட முடியுமென்று இருந்தால் அந்த வலிமைக்கு இதுவே பலவீனம் அல்லவா, வளநாடுடையாரே? தன் கைகளின்மேல் தனக்கே நம்பிக்கையில்லாமல் எவளோ ஒரு கபாலிகையின் கைகளில் அந்த வலிமை இருப்பதாக நம்பிக்கொண்டு அவளைத் தூண்டிவிடுகிற சுய பலமில்லாத எதிரியை என்ன செய்ய முடியும்?” என்று நீலநாகர் கேட்டதும் வளநாடுடையார் இந்தச் செய்தியில் தொடர்புபடுத்திக் கூறப்படும் கபாலிகை யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலினால் துண்டப் பெற்றவராக அவரை வினவினார்: “அது யார் ஐயா கபாலிகை?” “யாரா? அவள்தான் வளநாடுடையாரே, இந்தச் சூழ்ச்சி நாடகத்தின் புதிய கதாபாத்திரம்” என்று தொடங்கி முன் நாள் இரவில் இளங்குமரனை ஏமாற்றி அழைத்துக் கொண்டுபோய் அந்தக் கபாலிகை சுடு காட்டுக் கோட்டத்துக்குப் போகிற வழியிலே வைத்து அவனைக் கொலை செய்ய முயன்றதையும் பின் தொடர்ந்து சென்றதால் தக்க சமயத்தில் உதவி அவனைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்ததையும் வளநாடுடையாருக்கு விவரித்துச் சொன்னார் நீலநாகர். “எப்படியோ, இந்த வைகாசி விசாகம் வரை இளங்குமரனைக் காப்பாற்றுங்கள். வைகாசி விசாகத்துக்கு முன்னால் இளங்குமரனை அழைத்துக் கொண்டு நான் மணிபல்லவத்துக்கு யாத்திரை போகத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அப்பால் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு பிறந்துவிடும்.” “விடிவு எங்கிருந்து பிறக்கும்? இன்னதென்று புரியாமல் எங்கோ, எப்போதோ தொடங்கிய மூலமான துன்பம் புரிகிறவரை இதற்கு விடிவு இல்லை வளநாடுடையாரே!” “புண்ணிய பூமிகளை மிதித்து அந்த மண்ணின் மேல் நடப்பதனாலேயே தீயினில் தூசு, போலச் சில துன்பங்கள் விலகும் ஐயா! மணிபல்லவம் அப்படிப் பட்ட புண்ணிய பூமி” என்று இளங்குமரனை தான் மணிபல்லவத்துக்கு அழைத்துச் செல்லும் அந்தரங்க நோக்கத்தை இந்தப் பொதுவான தத்துவத்தில் மறைத்துக் கொண்டு பேசினார் வளநாடுடையார்.
“இப்போதுதான் நினைவு வருகிறது வளநாடுடையாரே. நான் இன்றிரவு தனியாகப் புறப்பட்டுப் போய் சுடுகாட்டுக் கோட்டத்தில் அறியவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். நீங்கள் வந்து பேசிக்கொண்டிருந்ததில் அது மறந்துவிட்டது. வாருங்கள், உங்களைப் படைக்கலச்சாலையில் கொண்டுபோய் விட்டு விட்டுச் சிறிது நேரம் கழித்து நான் சக்கரவாளக் கோட்டத்துக்குப் புறப்பட வேண்டும்.”
“செய்யுங்கள்! கபாலிகர்கள் முரட்டுக் குணம் கொண்டவர்கள். நயமாகவும் பயமாகவும் வார்த்தைகளைக் கூறி உண்மையை அறிய முயலுங்கள்.” “வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறவர்கள் சான்றோர்கள் மட்டும்தான். கயவர்களையும் வெறும் முரடர்களையும் வார்த்தைகளால் கட்டுப்படுத்த முடியாது. கரும்பை அறைத்துப் பிழிவதுபோல் அறைந்து பிழிந்தால் தான் கயவர்களிடமிருந்து பயன் கொள்ள முடியும் வளநாடுடையாரே! சுடுகாட்டுக் கோட்டத்துக் கபாலிகையிடம் போய் நயமான வார்த்தைகளைப் பேசி இரகசியத்தை வரவழைக்க முடியாது. கயமை நிறைந்த மனிதர்களிடம் வாயால் பேசிப் பயனில்லை. கைகளால் பேசவேண்டும். அதைத்தான் இன்று செய்யப் போகிறேன். நான்” என்று ஆவேசத்தோடு பேசினார் நீலநாக மறவர். பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் ஆலமுற்றத்துக் கடற்கரையிலிருந்து படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது இருட்டியிருந்தது. முல்லையைத் தம்மோடு அழைத்துக்கொண்டு இல்லத்துக்குத் திரும்பினார் வளநாடுடையார். மணிமார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலையின் ஒரு பகுதியில் தங்கி ஓய்வு பெறச் சென்றார்கள். நீண்ட காலத்துக்குப் பின்பு முதல் தடவையாகச் சந்தித்த காரணத்தினால் கதக்கண்ணன் முதலிய நண்பர்கள் மட்டும் நெடுநேரமாகியும் பிரிந்து செல்வதற்கு மனமின்றி இளங்குமரனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். உரையாடலில் இளங்குமரனை நோக்கி அவர்கள் கூறிய வார்த்தைகள் அதிகமாகவும் அவர்களை நோக்கி இளங்குமரன் கூற நேர்ந்த வார்த்தைகள் குறைவாகவும் இருந்தன. நிலா உச்சி வானத்துக்கு வந்திருந்தது. இளங்குமரனோடு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த குரல் ஒலிகளையும் மிக அருகில் இருந்த காரணத்தால் கடலின் அலை ஒசையையும் தவிரப் படைக்கலச் சாலையும் சுற்றியிருந்த தோட்டமும் அமைதியடைந்தாயிற்று. குறிப்பிட்ட இந்த அமைதியையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது போல் நீலநாகர் தமது இருக்கையிலிருந்து புறப்படுவதற்கு எழுந்தார். தலைப்பாகையைக் கழற்றி வைத்தார். மூலையில் குவித்திருந்த படைக்கலங்களின் குவியலில் இருந்து நீண்ட ஈட்டி ஒன்றை எடுத் துக் கொண்டு இரவில் தாம் அங்கிருந்து வெளியேறிச் செல்லுவது பிறரறியத் தெரியாமலிருப்பதற்காகத் தம்முடைய பாதக் குறடுகளையும் கழற்றிவிட்டு நடந்தார். இயல்பாகவே அவருடைய கால்களுக்கு வேகம் அதிகம். எஃகினால் செய்தவை போன்று நீண்டு வைரம் பாய்ந்த இறுகிய அந்தக் கால்களில் பாதக் குறடுகள் என்ற சிறிய சுமையும் இல்லாமற் போகவே இப்போது இன்னும் வேகமாக நடக்க முடிந்தது. முடியை மறைத்திருந்த தலைப்பாகையைக் கழற்றியிருந்ததால் உற்றுப் பார்த்தாலன்றி முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியாத தோற்றத்தோடு இப்போது விளங்கினார் அவர். நிலா ஒளியின் கீழே இருட்டு மலை ஒன்று தன் வலிமை சிதறாமல் விரைந்து பாய்வதுபோல சக்கரவாளக் கோட்டத்துப் பாதையில் அவர் சென்று கொண்டிருந்தார். அவருடைய வலது கரத்தில் அந்த ஈட்டியை அவர் பற்றியிருந்த அலட்சிய பாவத்திலேயே ‘இது எனக்கு ஓர் ஆயுதமல்ல; இதைப் பற்றியிருக்கும் வலிமை வாய்ந்த என் கைதான் எனக்கு இதைவிடப் பெரிய ஆயுதம்’ என்பது போன்ற திடமான எண்ணத்தின் உறுதி தெரிந்தது. ‘ஒரு கபாலிகை மட்டுமென்ன? இந்தச் சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்திலுள்ள கபாலிகர் குலத்தையே வேரோடு அழிக்க என்னுடைய ஒரு கை போதும் எனக்கு!’ - இப்படிப் பெருமிதமான நினைவுகள் அவருடைய மனத்திலும், கால்கள் கரடு முரடான மயானத்து மண்ணின் மேலும் புகுந்து நடந்து கொண்டி ருந்தன. உயிருடனிருப்பவர்களை மயானத்துக்குக் கொண்டு வரும் கூற்றுவனே தன் தொழில் சுதந்திரமாக நிகழ்கிற பூமியில் தற்பெருமையோடும் மதத்தோடும் புகுந்து நடக்கிறாற்போல் வீராப்போடு நடந்து போய்க் கொண்டிருந்தார் நீலநாகர். தன் எல்லையில் புகுந்து நடக்கிறபோது பொதுவாக மனிதர்களுக்குத் துணிவு மிகும் என்பார்கள். நீல நாகருக்கோ தம் எல்லை அல்லாத இடத்தில் புகும்போது துணிவு பெருகிய மன நிலையே இருக்கும். அடர்ந்து பின்னி முட்கொடி படர்ந்த வன்னி மரங்கள் தென்பட்டன. கபாலிகர்கள் வெறிக்குரல்கள் நெருங்கிக் கேட்டன. முடை நாற்றம் நாசியைத் துளைத்தது. ஆள் நடந்து வருகிற அரவத்தால் கலைந்த இரவுப் பறவைகளின் குரல் மேலே மரக் கிளை களிலிருந்து ஒலித்தது. கிழிந்த துணியால் போர்த்தியிருந்த ஊன் தொகுதியைப் போல வன்னி மரங்களின் அடர்த்திக்கிடையே அங்கங்கே நெருப்பு எரிவது துண்டு துண்டாகத் தெரிந்தது. அந்த இடம் நெருங்கியதும் அன்று இளங்குமரனை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொல்ல முயன்ற கபாலிகையின் தோற்றத்தையும் முகத்தையும் நினைவுக்குக் கொண்டு வர முயன்றார் அவர். கரிய பாறை களுக்கிடையே வாய்ந்த குகையின் சிறிய வாயிலைப் போன்ற வன்னி மன்றத்துப் புதரின் வழியில் தம்முடைய உடம்பைக் குறுக்கிக் கொண்டு குனிந்து நுழைந்தார் நீலநாகர். தாங்கள் உபாசனை செய்து கொண்டிருக்கிற பயங்கரத் தெய்வமே திடீரென்று தங்களுக்கு எதிரே தோன்றினாற் போலிருந்தது, அங்கே மூலைக்கொருவராகத் திரிந்து கொண்டிருந்த கபாலிகர்களுக்கு வந்து நிற்கும் மனிதரின் ஆகிருதியையும் வலிமையையும் தோற்றத் திலேயே கண்டு உணர்ந்தவர்களாகப் பயந்தபடியே ஒவ்வொருவராக மெல்ல அருகில் வந்தார்கள். சிலர் அருகில் வராமல் விலகியே நின்றார்கள். அவர்களில் ஒருவனிடம் தாம் தேடி வந்தவளைப் பற்றிய அடையாளங்களைச் சொல்லிக் கேட்டார் நீலநாகர். அவரால் கேட்கப்பட்ட கபாலிகன் அவருக்கு உடனே மறுமொழி கூறாமல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு கபாலிகனுடைய முகத்தைப் பார்த்தான். அவன் வேறொருவனுடைய முகத்தைப் பார்த்தான். நீலநாகர் பொறுமையிழந்தார். சீற்றம் அடைந்தார். “அவள் எங்கேயிருக்கிறாள் என்று சொல். சொல்லப் பயமாயிருந்தால் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டு, இரண்டும் முடியாவிட்டால் உன் கழுத்தைக் காட்டு. அதை அப்படியே பனங்காய் பறிப்பது போலத் திருகிக் கீழே வைக்கிறேன்” என்று நீலநாகர் சீறிய குரல் வன்னி மன்றத்தையே அதிரச் செய்தது. முன்பு இயற்கையிலேயே பயமாயிருந்த அந்த இரண்டு கபாலிகர்களின் முகங்களும் இப்போது இன்னும் பயமாக மாறின. நீலநாகருடைய வலதுகை ஈட்டியைப் பிடித்திருந்த பிடி இறுகுவதைப் பார்த்த போது அவர்கள் பயம் அதிகமாகிப் பின்னுக்கு நகர்ந்தனர். ஓடவும் சித்தமாயினர். இதற்குள் பக்கத்தில் செடிகொடிகள் பின்னிப் புதரைப் போலிருந்ததொரு குடிசைக்குள்ளிருந்து பைரவியே தலையை நீட்டி எட்டிப் பார்ப்பதை நீலநாகர் கண்டுவிட்டார். அவளும் அவரைப் பார்த்து விட்டாள். முதற் பார்வையில் அவரை அவளுக்கு அடையாளம் புரியவில்லையாயினும், தன்னைக் கண்டவுடன் அடித்துக் கொல்ல வரும் வேங்கைப் புலி போல் அவர் ஈட்டியை ஓங்கிக்கொண்டு பாய்ந்து வருவதைக் கண்டு ஆள் யாரென்று இனம் புரிந்து கொண்டுவிட்டாள். தூக்கம் கலைந்து விழித்த அவள் கண்கள் இரத்தப் பழங்களாகச் சிவந்திருந்தன. நீலநாகரிடமிருந்து தப்புவதற்காக அந்த இடத்தின் பின்புறத்து வழியாக வன்னிப்புதரை நோக்கி விழுந்தடித்துக் கொண்டு ஓடத் தலைப்பட்டாள் பைரவி. இதே மனிதர் முன் தினத்தில் தன் கழுத்தைப் பற்றி விழி பிதுங்கிட நெரித்த வலி இன்னும் நினைவிலிருந்தது அவளுக்கு. அவள் ஓடிய போது புதரில் பசியெடுத்துக் காத்திருந்த நரி ஒன்று படுவேகமாகப் பாய்ந்து அவள் முழங்காலின் ஆடு சதையைக் கவ்வியது. வலி பொறுக்க முடியாத பைரவி குரூரமாக அலறினாள். நரியிடமிருந்து காலை விடுவித்துக் கொண்டு குருதி சிந்தியவாறே அவள் மேலும் ஓடினாள். நீலநாகரும் விடவில்லை. அவள் ஓடாமல் நின்றிருந்தால் எவ்வளவு கொதிப்படைந்திருப்பாரோ அதைப்போல் நான்கு மடங்கு கொதிப்போடு இப்போது அவளைத் துரத்திக்கொண்டு பாய்ந்தார். |