மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 22. நள்ளிரவில் ஒரு நாடகம் அந்தரத்தில் இருந்து தயங்கித் தயங்கிச் சிறிது சிறிதாக இருளில் உதிரும் நெருப்புத் துண்டங்களைப் போல் எதிரே தெரிந்து கொண்டிருந்த அந்தச் சிவப்பு இரத்தினங்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் சுரமஞ்சரியும் அவள் தோழியும். தந்தையின் கைப்பிடியிலுள்ள அந்த யாளி முகம் விநாடிக்கு விநாடி பெருகி விரிந்து அகலமும் நீளமுமாகிப் பூதாகாரமாக வளர்ந்து கவிந்துகொண்டு தன்னை அமுக்குவது போல் பயமாகியிருந்தது சுரமஞ்சரிக்கு. ‘தந்தை இரகசியமாக அங்கே வந்து இருளில் ஊன்றுகோலுடனே நின்றுகொண்டு தானும் வசந்த மாலையும் அதுவரை பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கேட்டவாறே இருக்கிறார்’ - என்று உணர முற்படும்போது அந்த உணர்ச்சியால் தன் உடல் முழுவதும் கருந்தேள் விழுந்து ஊர்கிறாற் போலச் சிலிர்த்து நடுங்கினாள் அவள். தன் வார்த்தையும் தான் அதை ஒலித்த குரலும் நடுங்கிட ‘வசந்தமாலை’ என்று மெல்ல அழைத்தாள் சுரமஞ்சரி. அந்த அழைப்புக்குப் பதில் குரல் கொடுக்காமலே ‘பேச வேண்டாம்’ என்று சொல்வது போல் தன் வலக்கரத்தால் தலைவியின் பவழ மெல்லிதழ்களை இலேசாகப் பொத்தினாள் வசந்தமாலை. தோழியும் அப்போது மிகவும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தன் இதழ்களை மூடிய அவள் விரல்கள் நடுங்கிய விதத்திலிருந்து சுரமஞ்சரி புரிந்து கொள்ள முடிந்தது. அண்மைக் காலத்து நிகழ்ச்சிகளால் தன் தந்தையை விடை காண முடியாத விடுகதையாக நினைத்துப் பயப்பட வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு விநாடியும் அவளுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. யாருக்கும் அடிமையாகக் கூடாதென்று செல்வம் சேர்க்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அந்தச் செல்வத்துக்கே முழு அடிமையாகப் போய்விடுவதுதான் முடிவாகும் என்பதற்கு தன் தந்தையையே நிதரிசனமான உதாரணமாகக் கண்டாள் சுரமஞ்சரி. செல்வத்துக்கு அடுத்தாற் போல அவர் நகைவேழம்பருக்கும் சிறிது அடிமைப்பட்டிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. செல்வத்துக்கு அடிமைப்படுவதைப் போலவே இரகசியங்களுக்கு அடிமைப்படுவது பயங்கரமானதுதான். இரகசியங்களுக்கு அடிமைப்படுகிறவன் அதை உடையவனுக்கும் அடிமைப்பட வேண்டியதிருக்கும். ஒரே சம்யத்தில் இந்த இரண்டு வகையிலும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்குத் தான் மகளாயிருப்பதை எண்ணியபோது அவளுக்குப் பயத்துடனே சிறிது பரிதவிப்பும் உண்டாயிற்று. செல்வத்தைக் குவிப்பதில் கவலையும் அக்கறையும் காட்டுவதற்கு அடுத்தபடியாக அதே அளவு கவலையும், அக்கறையும், நகைவேழம்பரோடு பழகுவதில் தன்னுடைய தந்தைக்கு இருக்கிறதென்பது அவளுக்குப் புரிந்தது. யாருடைய வாழ்வை வளர்த்து அதில் தானும் இரண்டறக் கலந்துவிட வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டி ருக்கிறாளோ அவருடைய வாழ்வையே அழித்துவிடத் தந்தை முயல்வதும் இலை மறை காய்போல் அவளுக்குப் புரிந்தது, அந்த விநாடி வரையில் தனக்குப் புரிந்திருக்கிற பயங்கரங்களை விட இனிமேல் புரிய வேண்டிய பயங்கரங்கள்தாம் அதிகமாக இருக்கும் போலச் சுரமஞ்சரியின் மனக்குரல் அவளுக்குச் சொல்லியது. இந்தக் கொடுமைகளை யெல்லாம் நினைத்த போது தான் அங்கிருந்து ஓடிப்போய்க் கடலில் விழுந்தாவது உயிரைப் போக்கிக் கொண்டு விட வேண்டும் போலத் தவிப்பு அடைந்தாள் அவள். அந்தத் தவிப்பின் விளைவு தோழி வசந்தமாலையிடம் ஒரு கேள்வியாகவும் பிறந்தது.
இப்போது தன் தந்தையே மறைவாக அங்கு வந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அந்தத் தவிப்பு மேலும் முறுகி வளர்ந்தது.
சுரமஞ்சரியின் கண்கள் அந்தச் சிவப்புப் புள்ளிகளையே பார்த்துக் கொண்டிருந்தன. அவை இருளில் அசையாமல் ஓரிடத்திலேயே இருப்பதைக் கண்டு அந்த இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு அப்போது அங்கே நிற்பவர் முன்னுக்கும் நகராமல், பின்னுக்கும் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அநுமானம் செய்துகொண்டாள் சுரமஞ்சரி. அவள் மனத்தில் அப்போது பலவிதமான சந்தேகங்கள் உண்டாயின. அந்தச் சந்தேகங்களில் இரண்டொன்றையாவது வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்கலாம் என்றால் தோழி, அந்த நிலையில் தன்னோடு பேசுவதற்கே பயப்படுவது போலிருந்தது. அரை நாழிகை போனதுக்குப் பின் தோழியே வலுவில் வந்து சுரமஞ்சரியின் காதருகே தன்னுடைய சந்தேகம் ஒன்றைக் கூறினாள்: “அம்மா இதோ தெரிகிறதே சிவப்பு இரத்தினங்களோடு கூடிய ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு உங்கள் தந்தையார் இங்கு மறைந்து நிற்பதாக இதுவரை நீங்களும் நானும் நினைத்துக் கொண்டிருந்தது சாத்தியமில்லை. ஒரு காலைச் சாய்த்துக் கொண்டே அவரால் இவ்வளவு நேரம் அசையாமல் நிற்க முடியாது. கால் மாற்றி ஊன்றியிருந்தாரானால் அந்தச் சிறு ஒலியையும் ஊன்றுகோல் அசைவதையும் இதற்குள் நாம் கேட்டும் கண்டும் இருக்கலாம். ஊன்றுகோல் அசையாமல் தெரிவதனால் நிற்பது வேறு ஆளாக இருக்க வேண்டும்.” தோழி சொல்வது நியாயம்தான் என்று சுரமஞ்சரிக்கும் தோன்றியது. அவள் தந்தையால் இவ்வளவு நேரமாகக் கால் மாற்றி ஊன்றிக் கொள்ளாமலோ, அசையாமலோ நிற்க முடியாது. அந்தப் பயங்கரமான விநாடிகளில் தன்னைவிட வசந்தமாலை சுய உணர்வோடு சிந்தித்திருக்கிறாள் என்பதை அவள் கூறிய நுணுக்கமான செய்தியிலிருந்து புரிந்துகொண்டாள் சுரமஞ்சரி. அங்கே தன் எதிரே இருளில் நின்று கொண்டிருப்பவர் தன்னுடைய தந்தை இல்லை என்ற அநுமானம் பெரும்பாலும் உறுதியானவுடன் அவர்களுக்குச் சற்றே தைரியம் வந்தது. உமிழ் நீரைக் கூட்டி விழுங்கி நாவை ஈரமாக்கிக் கொண்டு “யார் அங்கே நிற்பது?” என்று இரைந்து கேட்டாள். அவள் கேட்ட சொற்கள் அந்த மாடத்தின் சுவர்களிலே எதிரொலித்து விட்டு அவளிடமே திரும்பி வந்தன. சிவப்பு இரத்தினங்கள் மின்னிய திசையிலிருந்து அந்த இரத்தினங்களின் செவ் வொளி மட்டும்தான் பளிரென்று பாய்ச்சியது போலப் பாய்ந்து வந்ததே தவிர, அவள் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை. எதிரொலிதான் இன்னும் சுழன்று சுழன்று மங்கிக் கொண்டிருந்தது. “யார் அது” என்று இரண்டாவது கேள்வியாக வசந்தமாலை சினத்தோடு கேட்டாள். அதற்கும் எதிரொலிதான் விளைவாயிற்றே அன்றி மறுமொழி வரவில்லை. எலும்புக் குருத்துக்களில் சுடச்சுட ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல இருவருடைய கால்களும் உதறலெடுத்து நடங்கின. இந்திரவிழாவின் கலகலப்பில் திட்டமிட்டு இப்படி ஒரு பயங்கர நாடகம் நடத்த வேண்டும் என யார் முன் வந்திருக்க முடியும் என்று மனத்தைக் குழப்பிக் கொண்டார்கள் அவர்கள். நாடகம் என்று நினைத்தவுடனே நகைவேழம்பருடைய ஞாபகம் வந்தது சுரமஞ் சரிக்கு. அவர்தானே இந்த மாளிகைக்கு வந்து தந்தையாருடன் பழகுவதற்கு முன் மேடைகளிலும், வந்து பழகிய பின் வாழ்க்கையிலும் அற்புதமாக நடித்துக் கொண்டு வருகிறவர். ஒருவேளை அவரே தன் தந்தையாருடைய ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வந்து இந்த இருளில் நின்றபடி தங்களைப் பயமுறுத்துகிறாரோ என்றும் சுரமஞ்சரிக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. ஆனாலும் இப்படி நள்ளிரவில் பெண்கள் வாழும் பகுதியில் வந்து நிற்கிற அளவு நகைவேழம்பரும் துணிய மாட்டார் என்ற எண்ணம் பலமாக எழுந்து முன்னைய சந்தேகத்தை அடித்துவிட்டது. ‘ஒருவேளை வானவல்லி தந்தையாருடைய ஊன்று கோலை எடுத்துக் கொண்டு வந்து விளையாட்டுக்காகத் தங்களைப் பயமுறுத்துகிறாளோ’ என்று இறுதியாக நினைத்தாள் சுரமஞ்சரி. கையிலுள்ள வளையல்கள் ஒலிக்காமல் இவ்வளவு நேரம் ஊன்றுகோலைப் பற்றிக் கொண்டிருக்க அவளாலும் முடியாதென்று தோன்றவே இயல்புக்கு மிகுதியான தைரியத்தை வற்புறுத்தி ஏற்படுத்திக் கொண்டவளாக அந்த இரத்தினங்களின் ஒளியைக் குறி வைத்து நடந்தாள். பயத்தினாலும், செயற்கையான தைரியத்தினாலும் இந்த ஊன்று கோலை வைத்திருக்கும் கைகள் அதை இறுக்கிப் பற்றிக் கொண்டிருப்பதாகப் பாவித்துக் கொண்டு அதை இழுத்து வேகமாகப் பறித்தாள். ஒருவிதமான பிடிப்பும் இல்லாமல் செலவழித்த பலத்தைவிடக் குறைவான வலிமையில் இலகுவாகவே அந்த ஊன்றுகோல் அவள் கைக்கு வந்துவிடவே கீழே இடறி விழுந்துவிட இருந்தாள் அவள். நல்லவேளையாகப் பின்னால் வந்து நின்று கொண்டிருந்த வசந்தமாலை சுரமஞ்சரியை அப்படி விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டாள். எதிராளி தனக்கு மறுதலையாக இறுக்கிப் பிடித்திருப்பதாக நினைத்து வலிய இழுத்தபோது எந்த எதிராளியும் இன்றிப் பூக்கொய்வதுபோல எளிதாக ஊன்றுகோல் கைக்கு வந்துவிட்டதனால் அதற்காக அவள் செலவழித்த அதிக வலிமை அவளையே பின்னால் தள்ளிவிட இருந்தது. “இந்த ஊன்றுகோலை யாருமே பிடித்துக் கொண்டு இருக்கவில்லையடி!” - என்று சுரமஞ்சரி வியந்து கூறிய அதே சமயத்தில் பெருமாளிகையின் முன்புறம் வாயில் அருகே யாரோ யாரையோ பளிரென்று அறைகிற ஓசை கேட்டது. மாடத்தின் முன்பகுதியிலிருந்து பார்த்தால் கீழே யாரை யார் அறைந்தார் என்று தெரியுமாதலால் சுரமஞ்சரி, தன் கையிலிருந்த ஊன்றுகோலுடனும் தோழியுடனும் மேல் மாடத்திலிருந்தே அதைக் காண்பதற்காக முன்பக்கம் விரைந்தாள். விரைந்து போய்ப் பார்த்தவள் பெரிதும் வியப்பு அடைந்தாள். நள்ளிரவுக்கு மேலாகியும் அந்த அமைதியான நேரத்தில் பெருமாளிகையின் முன்புறத்தில் தன் தந்தையும் நகைவேழம்பரும் தனியாக நின்றுகொண்டு இருப்பதை அப்போது அவள் பார்த்தாள். இருவரில் யார்மேல் யாருக்குக் கோபம் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் யாரை அறைந்தார்கள் என்று அநுமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் நின்ற நிலை, நிற்கும் நேரம் ஆகியவை உறவுக்குரியதாகவும் படவில்லை. நாடகத்தில் நடிப்பவர்கள் ஒப்பனையைக் கலைத்ததும் நடித்தபோது இருந்த உறவுகள் மாறிவிடுகிறாற்போல் ஒரு விநாடிக்குப் பின் யாரால் யார் அப்படிப் பேயறை அறையப்பட்டார்கள் என்பதை இப்போது இருவர் முகங்களிலுமுள்ள உணர்வுகளைக் கொண்டு உய்த்துணர்வதற்கு இயலாமல் தவித்தாள் சுரமஞ்சரி. வெறுப்பும் ஏளனமுமாக, அவள் தன் தோழியிடம் கூறலானாள்: “தோழி! இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் எத்தனையோ நாடக அரங்குகள் இருக்கின்றனவே! அவற்றில் எதிலாவது இத்தனை அற்புதமாக நடிக்கிற திறமையை நீ பார்த்திருக்க முடியுமா? ஒரு விநாடி கோபம், மற்றொரு விநாடி நட்பு, ஒரு விநாடி குரோதம், மற்றொரு விநாடி உறவு என்று விநாடி நேரத்துக்குள் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ளத் தொழிலில் பழக்கப்பட்ட வேழம்பர் மரபைச் சேர்ந்த நடிகர்களால்கூட முடியாதே! இங்கேயோ என் தந்தையும் நகைவேழம்பரும் ஒரே ஒரு விநாடிக்குள்ளே நூறாயிரம் உணர்ச்சிகளில் மாறி மாறித் தோய்கிறார்கள். மாறி மாறி நடிக்கிறார்கள், வாழ்கிறார்கள். செல்வத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்களுக்கும், இரகசியங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையே ஒரு நாடகம்தான் போல் இருக்கிறதடீ!” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி. |