மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 23. நல்லவர் பெற்ற நாணம் பின்னால் துரத்திக்கொண்டு வருகிறவருடைய வலிமையை எண்ணித் தன் உயிருக்குப் பயந்து ஓடுகிற ஓட்டத்துக்கு இணை சொல்ல வேண்டுமானால் இந்த உலகத்தில் இப்படி இணை சொல்வதற்கு எதுவும் உப மானமாகக் கிடைப்பது மிகவும் அருமைதான். உயிரைப் பணயமாக வைத்து விளையாடுகிற எந்த விளையாட்டிலும் அதை விட அதிக மதிப்புள்ளதாகப் பணயம் வைப்பதற்கு வேறு உயர்ந்த பொருள் எதுவும் இருக்க முடியாதென்பது தேற்றமான உண்மை. முரட்டுக் காபாலிகையான பைரவியின் உயிர் அப்பொழுது அவளுடைய குதிகால்களில் மட்டும்தான் இருந்தது. கால்கள் ஓடுவதற்குப் பயன்படுகிறபோது அந்த ஓட்டத்திற்குத் தூண்டுதலாக இருக்கிற உயிர்த் துடிப்பு மெய்யானால் அப்போது பைரவியின் உயிர் உடம்பிலிருந்து கீழே நழுவி விழுவதுபோல் சிறிது சிறிதாக இறங்கிக் குதிகால்களுக்குத் தாழ்ந்து, அங்கு மட்டுமே பயன்பட்டு, அவளை வாயு வேகத்தில் ஓட வைத்துக் கொண்டு இருந்தது. இப்படி உவமை சொல்வதுகூடப் பொருந்துமோ பொருந்தாதோ அவள் ஓடிய வேகத்திற்கு அதுவே இணை. அப்போது அவளைத் துரத்திக் கொண்டிருந்த நீலநாக மறவருக்கோ உயிர்க் குணமே வீரம்தான். அந்த உயிர்க் குணத்தின் முழுத் தன்மையும் ஓட்டம் என்ற ஒரே இயக்கமாகப் பொங்கினாற் போலப் பாய்ந்து பாய்ந்து துரத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த அரக்கியிடமிருந்து தான் தெரிந்து கொள்வதற்கு விரும்பும் இரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் ஓடி ஓடிக் களைத்து அவளே மாண்டு போய் விடுவாளோ என்று சந்தேகப்படத் தொடங்கி விட்டார் நீலநாகமறவர். அவர் சில இரகசியங்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் அவளைத் துரத்தினார். அவளோ தன் உயிரைத் தேடியே தன்னை அவர் துரத்துவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஓடினாள். ஓடி ஓடி இறுதியில், பயந்து ஓடுகிறவளும் பயமுறுத்தி ஓட்டுகிறவரும் சக்கரவாளத்து வனம் முழுவதையும் கடந்து அதற்கப்பால் எதைக் கடந்து போகிறோம் என்ற உணர்வோ நினைப்போ இல்லாத சில இடங்களையும் கடந்து, கடைசியில் கடலோரமாக வந்து சேர்ந்திருந்தார்கள். துரத்தியவர், துரத்தப்பட்டவள் இருவருக்குமே மணற்பரப்புக்கு வந்ததும் ஓட்டத்தில் வேகம் குன்றியது. சுங்கப் பொருள் தண்டும் காவலர்களை ஏமாற்றி விட்டுக் கள்ளத்தனமாகப் பூம்புகாருக்குள் நுழைய முயலும் பிறநாட்டுப் பாய்மரக் கப்பல்களையும், வங்கம் எனப்படும் சிறு கப்பல்களையும் கண்காணித்துச் சிறைப்பிடிப்பதற்காக ஆள் நடமாட்டமற்ற அந்தக் கடற்பகுதி ஓரமாகக் காவலும், உயரமான கலங்கரை விளக்கும் அமைந்திருந்தது. கலங்கரை விளக்கின் உச்சி யிலிருந்த மாடத்தில் வேலேந்திய கையினனாக நின்று கெண்டிருந்த காவலன் கடற்பரப்பைக் கூர்ந்து நோக்கியவாறிருந்தான். தவம் செய்கிறவனுடைய நோக்கத்தைப் போல அவனுடைய முயற்சி ஒரே திசையில் சென்று கொண்டிருந்தது. தீ பெரிதாய் எரிவதற்காகக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நெருப்பு மூட்டப் பெற்றிருக்கும் காய்ந்த கட்டைகள் படர்ந்து கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தன.
தனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த பைரவி கலங்கரை விளக்கத்துப் படிகளில் தாவி ஏறுவதைப் பார்த்துத் திகைத்து நின்றார் நீலநாக மறவர். அப்படியே அவள் கழுத்தைக் குறிவைத்து ஈட்டியை வீசி அவளால் தீபத்தின் படிகளில் ஏறுவதற்கு முடியாமல் செய்து விடலாமா என்று தோன்றியது அவருக்கு. நினைப்பதற்கும், செயல்படுவதற்கும், நடுவே கணநேரமும் மந்தப்படுவதலை அறியாத அவர் கைகள் ஈட்டியையும் ஓங்கிவிட்டன. ஓங்கிய கைகள் செயல்படுவதற்கு முன்பாகவே, பின் விளைவைத் தீர்மானம் செய்த புத்தியின் நிதானம் அப்போது அவருக்குப் பயன்பட்டது. ஈட்டி பாய்ந்தவுடன் பைரவி அலறுவாள். அந்த அலறலைக் கேட்டுக் கலங்கரை விளக்கத்தின் உச்சி மாடத்தில் நிற்கிற காவலனின் கவனம் நிச்சயமாகத் தன் பக்கம் திரும்பும். அப்படி அவன் திரும்பினால் தான் குற்றவாளியாக மாறி அந்தக் காவலனுக்கு முன்னால் நிற்க நேரும். அந்தக் காவலன் தன்னுடைய படைக்கலச் சாலையில் பயிற்சி பெற்று வெளியேறிய வீரவேளிர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமற்ற திடநம்பிக்கையும் அவருக்கு இருந்தது. தம்மால் கற்பிக்கப்பட்ட மாணவனுக்கு முன் தாமே குற்றவாளியாகி நிற்கும் நிலையைப் போல் இழிவானது வேறு எதுவும் இருக்க முடியாது. பேராண்மையாளராகிய நீலநாக மறவர் அப்போது தாம் இருந்த நிலையை இந்தக் கோணத்தில் திருப்பி எண்ணிப் பார்த்த கணத்திலேயே வெட்கமடைந்தார். வல்லவராகிய அந்த நல்லவருக்கும் சிறிது நாணம் விளைந்தது. இலக்குத் தவறாமல் ஈட்டியை எறிந்து படியேறி ஓடும் பைரவியை அவர் வீழ்த்தியபின் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நிற்கும் காவலன் ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாலும், அவர் இன்னாரெனக் கண்டு தெரிந்து கொண்டதும் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவரிடம் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு பயபக்தியோடு கைகட்டி வாய் பொத்தித் தலை தாழ்ந்து நிற்பானானாலும், அதைச் செய்யவும் அவனுக்கு ஓர் சந்தர்ப்பம் அளிப்பானேன் என்று தயங்கி நாணினார் அவர். ஒடி வந்த வேகத்துக்குப் பொருத்தமில்லாமல் அந்த வேகம் நடுவிலேயே தயங்கி முறிந்து நின்ற நீலநாகர் பைரவியைத் துரத்திக் கொண்டு கலங்கரை விளக்கத்துப் படிகளில் ஏறாமல் வந்த வழியே மெல்லத் திரும்பி நடந்தார். ஈட்டியை எறியாமல் அவளைப் பின் தொடர்ந்து படியேறிப் பிடித்துவிடலாம் என்றாலோ அவள் அவருக்கு அகப்படாமல் கலங்கரை விளக்கத்துப் படிகளிலிருந்தே கடலில் குதித்துவிடவும் கூடும். அவள் கடலில் குதித்தாலும் அந்த ஒசையால் காவலனுடைய கவனம் கவரப்பட்டு அவன் கீழே நிற்கிற அவரைப் பார்க்கும்படிதான் நேரும். தன்னுடைய படைக்கலச் சாலையில் தான் ஒழுக்கமும் வீரமும் கற்பித்து உருவாக்கிய இளைஞன் ஒருவனே தன்னை எதிரே நிறுத்திக்கொண்டு, ‘நம் மதிப்பிற்குரிய ஆசிரியர் பிரான் இந்த அகாலத்தில் இப்படி யாரோ ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு இங்கே வந்தது ஏன்?’ என்று தன்னைப்பற்றி அவன் நினைப்பதும் மானக் குறைவு என்று அந்த ஞான வீரருக்கு அப்போது தோன்றியது. அப்படி அந்த மாணவன் தன்னைப்பற்றி நினைக்க நேர்ந்து விட்டாலோ, அல்லது தன் முகத்தை அருகில் வந்து காணுமுன் வாய் திறந்து சொல்லவே நேர்ந்து விட்டாலோ, அதற்குப்பின் தான் உயிர் வாழ்வது மானமில்லை என்று எண்ணினார் அவர். ‘தன்நிலையில் தாழாமை தாழும்படி நேர்ந்துவிட்டால் அப்புறம் உயிர் வாழாமை’ - என்று தான் நீலநாகர் தன் மனத்தில் மானத்தைப் பற்றி உறுதியானதொரு இலக்கணம் வகுத்துக் கொண்டிருந்தார். மானம் அழிந்து சிதறும் படியான சூழ்நிலையை அப்போது அங்கே விளையாட்டுக்காகவும் கூட உருவாக்கிப் பார்க்க விரும்பவில்லை அவர். இடமோ காவலும், கண்காணிப்பும் ஏற்படுத்திக் கொண்டு சுங்கம் தண்டுகிறவர்கள் பாதுகாக்கும் இடம். நேரமோ நடு இரவு. தன்னால் துரத்தப்படுகிறவளோ பெண். காவலுக்கு நிற்கிறவனோ தன் மாணவன். இவை எல்லாவற்றையும் தீரச் சிந்தித்துப் பார்த்த பின் பைரவியைத் துன்புறுத்தி இரகசியங்களைத் தெரிந்துகொள்ள முயல்வதைவிட அப்போது, தன் மானத்தைக் காத்துக்கொண்டு திரும்புவது புத்திசாலித் தனமான காரியமாகத் தோன்றியது அவருக்கு. மறைவிற் போய் நின்று, பைரவி கலங்கரை விளக்கப் படிகளில் உச்சிவரை ஏறுவதைப் பார்த்துக்கொண்டே அமைதியாகப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிவிட்டார் அவர். திட்டமும் ஒழுங்கும் நிறைந்த கட்டுப்பாடான வாழ்க்கைக்கு இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் குறுக்கீடு நிலையான கெடுதல் என்பதை நீலநாக மறவர் நன்றாக உணர்ந்தார். நல்ல பசி நேரத்தில் கிடைக்கிற சத்துள்ள உணவைப்போல் இந்த உணர்வு ஏற்ற சமயத்திலே தம்முடைய மனத்துக்குக் கிடைத்ததற்காகத் தெய்வத்துக்கு அவர் நன்றியும் கூறினார்.
|