மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 25. வாழ்க்கைப் பயணம் அவனைச் சந்திப்பதற்காகப் படைக்கலச் சாலையில் வந்து காத்திருந்த வீரசோழிய வளநாடுடையார் ஏதோ நிறையப் பேசுவதற்குச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பவர் போலத் தோன்றினார். அவர் வந்திருக்கிற வேகத்தையும், அந்த வேகத்தோடு இணைந்து தெரிந்த உறுதியையும் கண்டு, எதைச் சொல்ல வந்திருக்கிறாரோ அதைத் தோற்கவிட மாட்டார் என்று உணர்ந்து புன்னகை பூத்தான் இளங்குமரன். வந்திருப்பவர் இளங்குமரனோடு தனியாகப் பேசு வதற்காக வந்திருக்கிறார் என்பதை அங்கு நிலவிய குறிப்புக்களால் புரிந்துகொண்ட விசாகை அவர்களைத் தனிமையில் விடுத்துச் சென்றாள். “இப்போது நீங்கள் நான் வெற்றி கொள்ள முடியாத ஏதோ ஒரு வாதத்தைக் கொண்டு இங்கு வந்திருப்பதாக என் உள்ளுணர்வு கூறுகிறது ஐயா!” என்று சொல்லிக் கொண்டே அவர் அருகில் போய் நின்றான் இளங்குமரன். அவர் சற்றே சிரித்தார். மிகுதியாகச் சிரித்துவிட்டால் தான் சொல்லுவதற்கு வந்திருக்கும் உறுதியான செய்தியை அந்தச் சிரிப்பே பலவீனப்படுத்தி விடுமோ என்று பயந்துகொண்டே அவர் சிரிப்பது போலிருந்தது. “தம்பீ! நான் இப்போது தொடங்க வந்திருக்கும் வாதத்துக்கு இரண்டு விதமான முடிவுகள் இல்லை. ஒரே முடிவுதான். இந்த வாதம் என் பக்கம் வெற்றியாக முடியுமா? உன்பக்கம் வெற்றியாக முடியுமா? என்ற ஐயத்துக்கு இடமே இல்லை. என் பக்கம்தான் வெற்றியாக முடிய வேண்டும் என்று நான் புறப்படும்போதே தீர்மானம் செய்துகொண்டு விட்டேன். அதை நீ மறுப்பதற்கில்லை.” “நல்லது, ஆனால் மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் என்றும் ஒரேவிதமாக - ஒரே பக்கமாக முடியத்தக்க ஒருமை முடிவே உள்ள செய்திகள் வாதத்துக்குப் பொருளாகா என்பதை மறுமொழியாகக் கூறி உங்களை எடுத்த எடுப்பிலேயே நான் மறுத்து விடலாம் ஐயா! ‘நித்தியை காந்தபட்சம்’ எனப்படும் ஒருமை முடிவே உள்ள செய்திகளை இரு கூறாக்கி வாதிட முடியாது. ‘தண்ணீர் குளிர்ந்திருக்கும்’ என்றும் ‘தீ சுடும்’ என்றும் வருகிற வாக்கியங்களை அவற்றிற்கு மாறாகத் தண்ணீர் சுடும், தீ குளிர்ந்திருக்கும் என வேறு முடிவும் காட்டிப் பிரதிவாதம் செய்தற்கில்லையே? நீங்கள் என்னிடம் கூற வந்திருக்கும் செய்தியும் அப்படி மறுப்பதற்கில்லாத ஒருமை முடிவே உள்ளதாயின் உடனே ஒப்புக்கொள்ளுவதைத் தவிர நான் வேறு மாற்றம் சொல்ல வழி ஏது?” என்றான் இளங்குமரன். “ஆகா! நீ படித்திருக்கிற தருக்கத்தை இன்றைக்கு மட்டும் பாராட்டுகிறேன் தம்பீ! நான் கூறுவதை மறுக்காமல் நீ உடனே ஒப்புக் கொள்ளுவதற்கும் உன் படிப்பு இடந்தருகிறது என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படிப்பைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் வாதம் செய்வதற்கும் மாற்றம் சொல்லி மறுப்பதற்கும் இது பொருள் ஆகாது. இப்போது இங்கே நான் பேச வந்திருக்கும் செய்திக்குப் பொருள் வேறு எதுவும் அல்ல, உன்னுடைய வாழ்க்கைதான். அதற்கு ஒரே ஒரு முடிவுதான் உண்டு...”
“தவறு ஐயா! ஒரே முடிவுதான் உண்டு என்பது என்னுடைய வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்மை என்பதில்லை. பொதுவாக எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஒரே முடிவுதான் உண்டு.”
“நீ குதர்க்கம் பேசுகிறாய் தம்பீ?” “தர்க்கமல்லாததுதான் குதர்க்கம். இன்னொரு விதமாகக் கூறினால் தர்க்கம் ஆகாததும் குதர்க்கம். தர்க்கத்துக்குப் பொருளாகாத ஒரே முடிவுடைய செய்தியைத் தொடங்கியவன் நான் இல்லையே ஐயா?” என்று சிரித்தபடி நிதானமாக அவருக்குப் பதில் சொன்னான் இளங்குமரன். இதைக்கேட்டு, அதுவரை விளையாட்டாகப் பேசிக்கொண்டே வந்த வளநாடுடையார் சீற்றமடைந்தார். பேச்சில் சிறிது சினமும் கலந்தது. “நான் தர்க்கம் பேச வரவில்லை. உன் வாழ்க்கையைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்.” “அப்படியானால் என் வாழ்க்கையே தர்க்கத்துக்குரிய பொருளாக இருந்ததாக முதலில் நீங்கள் எண்ணியிருக்க வேண்டும்.” “அப்படி நான் எண்ணியிருந்தாலும் அது பிழையில்லை தம்பி! ஆனால் மறுபடியும் ஒன்று சொல்கிறேன். இங்கே இந்தத் தர்க்கத்துக்கும் ஒரு முடிவுண்டு. நீ திருநாங்கூரில் போய்க் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் இதேபோல் ஒரு வைசாக பெளர்ணமிக்கு முன் உன்னைத் தேடிக்கொண்டு வந்ததும், அதன்பின்பு சென்ற திங்களில் நீண்டகாலத்துக்குப் பின் நீ இந்த நகரத்தில் காலடி வைத்து நுழைந்த முதல் நாளில் இதே படைக்கலச் சாலையின் வாயிலில் என் மகளும் நானும் உன்னைச் சந்தித்ததும் உனது வாழ்க்கைத் தர்க்கத்துக்கு முடிவு காணும் நோக்கத்தோடுதான்.” “உங்கள் நோக்கத்தைப் போற்றுகிறேன் ஐயா! ஆனால் அதற்காக இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” “செய்ய முடியாதது எதையும் நாங்கள் சொல்லவில்லை தம்பீ! நீலநாகரும் நானும் சொல்வதை நீ செய்ய வேண்டும். அது அவசியமானது, பயனுள்ளது...” “வாழ்க்கையில் பயனுள்ளவை, பயனில்லாதவை என்று எவற்றை எப்படிப் பிரிப்பது என்றே சில சமயங்களில் விளங்குவதில்லை ஐயா! பயனில்லாதவற்றைச் செய்த பின்பும்கூட அவை பயனில்லாதவை என்று புரிந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக நேர்ந்த பயன் அவற்றுக்கு இருப்பதாகப் படுகிறது. நீங்களும் நீலநாகரும் மூத்தவர்கள். என்னை நீங்கள் இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்தவன் முடிவு எதுவாயிருந்தாலும் அதிலிருந்தும் ஏதாவதொரு அநுபவத்தின் ஞானம் எனக்குக் கிடைக்கத்தான் போகிறது. அதையும்தான் நான் இழப்பானேன்.” “இப்போது உனக்குக் கிடைக்கப் போகிற அநுபவம் இணையற்றது. உன்னைப் பற்றியது. அதை அறிவதற்கு இங்கிருந்து தெற்கே முப்பது யோசனை தூரம் கடற் பயணம் செய்ய வேண்டும். நெருங்கி வந்து கொண்டிருக்கிற வைகாசி பெளர்ணமி தினத்தன்று நாம் மணிபல்லவத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.” “என்னைப் பற்றி அறிய நான் எனக்குள்ளேயே அல்லவா பயணம் செய்ய வேண்டும்? என்னைப் புரிந்து கொள்ள நானே முயல வேண்டுமானால் என் மனத்தின் நினைவுகளில் நான் பயணம் செய்வது மட்டும் போதாதோ?” என்று கேட்டான் இளங்குமரன். “போதாது! நாளைக்கு நீ என்னோடு மணிபல்லவத்துக்குப் புறப்படுகிறாய். இதை நீலநாக மறவரிடமும் சொல்லிவிட்டேன். அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தியானம் செய்வதற்கும், ஞானம் பெறுவதற்கும் நீ உன் மனத்துக்குள் நினைவுகளிலேயே பயணம் செய்யலாம். வாழ்க்கையை அறிந்துகொள்ள அப்படி நினைவுகளில் மட்டும் பயணம் செய்து பயனில்லை தம்பி?” “பயனின்மையிலும், இன்னதிலே இன்ன காரணத்தாலே பயனில்லை என்று பயனில்லான்மயைப் புரிந்து கொள்ளுவதாகிய ஒரு பயன் உண்டு என்று அப்போதே சொன்னேனே?” என்று சொல்லி மறுபடியும் புன்முறுவல் புரிந்தான் இளங்குமரன். அப்போது நீலநாகர் உட்புறமிருந்து அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தார். அவரும் இந்தத் திட்டத்துக்கு உடன்பாடென்பது இளங்குமரனுக்கு அந்தச் சமயத்தில் புரிந்தது. “இந்தப் பெரியவர் சொல்வதைக் கேட்டு இதன்படி வைசாக பெளர்ணமிக்குப் போய் வா தம்பி! இந்தப் பயணத்தில் உனக்கு நிறையப் பயனிருக்கிறது” என்று வளநாடுடையாரைக் காண்பித்து இளங்குமரனிடம் சொன்னார் நீலநாகர். தன் சம்மதத்துக்கு அறிகுறியாக இருவரையும் வணங்கிவிட்டு அப்பால் சென்றான் இளங்குமரன். நீலநாகர் மகிழ்ச்சியோடு சென்றார். பயண ஏற்பாடுகளைக் கவனிக்க வளநாடுடையாரும் சென்றார். பூம்புகாரில் மறுநாள் பொழுது புலர்ந்தபோது பூம்புகார் துறைமுகத்திலிருந்து அவர்களுடைய பயணமும் தொடங்கியது. மணிபல்லவத் தீவைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலால் ஓவியன் மணிமார்பனும் அவர் மனைவியும்கூட அவர்களோடு அதே கப்பலில் புறப்பட இருந்தார்கள். பெளத்த மடத்தைச் சேர்ந்த இந்திர விகாரத்துத் துறவிகளுக்கென்றே புத்த பூர்ணிமைக்கு மணிபல்லவ யாத்திரை செய்வதற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்த வேறொரு கப்பலில் விசாகையும் அன்றைக்கே புறப்பட்டிருந்தாள். நீலநாகர், முல்லை, கதக்கண்ணன் ஆகியோர் கப்பல் துறைக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். வளநாடுடையாரும் இளங்குமரனும் புறப்படுகிற நேரம் நெருங்க நெருங்க இறுகிய மனம் படைத்தவரான நீலநாகரும் அந்தப் பிரிவில் தம் உள்ளம் குழைந்து நெகிழ்வதை உணர்ந்தார். இதே இளங்குமரனைப் பல ஆண்டுகள் திருநாங்கூரில் விட்டிருந்தபோது இந்த வேதனை அவருக்கு இல்லை. இப்போது இருந்தாற் போலிருந்து அவருடைய மனத்தில் ஏதோ ஓர் உணர்வு தவித்து உருகியது. இளங்குமரன் கப்பலில் ஏறுமுன் அருகிற் சென்று அவரை வணங்கினான். “போய் வா! ஆலமுற்றத்தில் உடம்பின் வலிமையைக் கற்றுத் தெரிந்துகொண்டாய். மணிபல்லவத்தில் போய் உன்னைத் தெரிந்துகொண்டு வா!” என்று அன்பு நெகிழ்ந்த குரலில் அவனிடம் கூறி வாழ்த்தினார் நீலநாகர். இளங்குமரன் கப்பலில் ஏறுமுன் கடைசி விநாடி வரை அவனுடைய கண்களிலிருந்து எதையோ தன்னுடைய கண்களால் முல்லை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் எதிர்பார்த்தது அவளுக்குக் கிடைக்கவில்லை. கதக்கண்ணன் முதலியவர்களிடமெல்லாம் அருகில் சென்று விடை பெற்றுக் கொண்ட இளங்குமரன் முல்லைக்கு அருகில் வராமலே போய்க் கப்ப லில் ஏறிக்கொண்டு விட்டான். ஆனால் அதே நேரத்தில் அவள் சிறிதும் எதிர்பாராத விடைபெறுதல் ஒன்று அவளுக்குக் கிடைத்தது. ஓவியன் மணிமார்பனுடைய மனைவி முல்லையின் அருகில் வந்து அவளிடம் விடை பெற்றாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முல்லைக்கு. வெளிப்பட்ட அந்த ஆத்திரத்தைக் காண்பித்து கொள்ளாமல் மணிமார்பனின் மனைவிக்கு வேண்டா வெறுப்பாய் விடை கொடுத்தாள் முல்லை. காலையிளங் கதிரவனின் பட்டொளி பட்டுப் பாய் மரம் மின்னிடக் கப்பல் நகர்ந்தது. இளங்காற்றும் இளவெயிலும் சேர்ந்து நடுக்கடலில் பிரயாணம் செய்வதற்கு உற்சாகமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன. தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு பெரிய திருப்பமும் பூம்புகாரில் ஏதாவது ஒர் இந்திர விழா முடிந்த பின்போ அல்லது தொடங்கிய போதோ ஏற்பட்டிருப்பதை இப்போது நினைவு கூர்ந்தான் இளங்குமரன். அவனுக்கு நினைவு தெரிந்த பருவத்துக்குப் பின்பு வந்த முதல் இந்திர விழாவின் போதுதான் அருட்செல்வ முனிவர் அவனை நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் சேர்த்தார். அதற்குப் பின்பு சில ஆண்டுகள் கழித்து அவன் படைக்கலப் பயிற்சியெல்லாம் முடித்துவிட்டு முரட்டு இளைஞனாகத் திரிந்து கொண்டிருந்த போதுதான் சித்திரா பெளர்ணமி இரவில் சம்பாதி வனத்தில் அவனை யாரோ கொலை செய்ய முயன்றார்கள். திருநாங்கூருக்குச் சென்றபின் அங்கு ஞானப்பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சில இந்திர விழாக்களைத் தன் அறிவு வேட்கையில் அவனே மறந்திருந்தான். அதன் பின்பு மீண்டும் அவன் பூம்புகாருக்குள் நுழைந்தபோது வந்த இந்த ஆண்டின் இந்திர விழாவோ அந்த மாபெரும் நகரத்துக்கு அவனை அறிவுச் செல்வனாக அறிமுகம் செய்து வைத்தது. அவனுடைய ஞானக்கொடி வெற்றிக் கொடியாக உயரவும் வாய்ப்பளித்தது. இந்திர விழா முடிந்ததும் இப்போது மற்றொரு திருப்பமாக மணிபல்லவ யாத்திரையும் வாய்த்தது. இனி வரப்போகும் அடுத்த இந்திர விழாவைக் கற்பனை செய்துகொண்டே கதிரொளியில் மின்னிச் சரியும் அலைகளைப் பார்த்தான் இளங்குமரன். ஓவியனும் வளநாடுடையாரும் கப்பலில் அவன் அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்கள். இளங்குமரன் தன்னுடைய நினைவுகள் கலைந்து அவர்கள் பக்கம் திரும்பினான். “புறப்படும்போது நீ முல்லையிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை போல் இருக்கிறதே தம்பி!” என்று அந்த விநாடிவரை அவனிடம் கேட்பதற்குத் தவித்துக் கொண்டே கேட்கவும் கூசி அடக்கிக் கொண்டிருந்த ஒரு கேள்வியைத் துணிந்து கேட்டார் வளநாடுடையார். “ஐயா! நீங்கள் கூறுவது வியப்புக்குரிய செய்தியாய் இருக்கிறது. நான் பேசாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. என்னுடைய மெளனத்தை முல்லையோ நீங்களோ உங்கள்மேல் எனக்கிருக்கும் வெறுப்பை நான் காட்டுவதாக எடுத்துக்கொண்டு வேதனைப்படக் கூடாது. நான் முல்லையிடம் பேசியிருந்தால் அந்தப் பேச்சுக்கு எப்படித் தனியான அர்த்தம் இருக்க முடியாதோ அப்படியே பேசாமலிருந்ததற்கும் தனியான அர்த்தம் எதுவுமில்லை.” “நீ இப்படிச் சொல்லிப் பதில் பேச முடியாமல் என் வாயை அடக்கிவிடலாம். ஆனால் என்னுடைய பெண் நீ சொல்கிறாற்போல் நினைத்துக்கொண்டு போகவில்லை. நாம் புறப்படுகிற போது முல்லையின் முகம் எப்படி இருந்ததென்று. நான் பார்த்தேன். நீ பார்க்கவில்லை. ஒரு வேளை நீயும் பார்த்தி ருந்தால் அவள் மனநிலை உனக்குத் தெரிந்திருக்கும்.” அதைக் கேட்டுத் தன்னையறியாமல் தான் யாரையோ புண்படுத்தியிருப்பதுபோல உணர்ந்து வருந்தினான் இளங்குமரன். இந்தப் புதிய வருத்தத்தோடு அவன் மறுபடி கரையைப் பார்க்க முயன்றபோது கரை வெகு தொலைவில் மங்கியிருந்தது. அதோடு சேர்ந்து யாருடைய முகமோ அப்படியே மங்கித் தோன்றுவது போலவும் இருந்தது. நெருங்கிப் பழகிய பிறருடைய துக்கங்களைக் கரையிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் இறங்கி முன்னேறுவதுதான் வாழ்க்கைப் பயணமோ? என்று எண்ணியபோது அந்த எண்ணத்தின் வடிவிலே இளங்குமரனின் மனச்சான்றே அவனைக் குத்திக் காட்டியது. பூம்புகாரின் கரைக்கும் தனக்கும் நடுவிலுள்ள தொலைவிலே தான் செய்த பயணத்தின் எல்லையெல்லாம் தன்னால் தனக்காகக் கரையில் விடப்பட்ட துக்கங்களின் பரந்த அளவாகத் தோன்றி யது அவனுக்கு. “கடவுளே! நான் எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் மெளனமாக இருந்து யாருடைய மனத்தையோ துன்புறுத்தியிருக்கிறேன்! இப்படி என்னை அறியாமல் யாரையும் துன்புறுத்தும் சந்தர்ப்பங்கள் கூட நான் பயணம் செய்யும் வாழ்க்கை வழியில் இனிமேல் நேராமலிருக்கட்டும்...” என்று இரு கண்களையும் மூடிச் சில விநாடிகள் இறைவனை எண்ணினான் இளங்குமரன். பயணம் தொடர்ந்தது. இப்போது கரை முற்றிலும் மங்கித் தொலைவில் நீண்ட பச்சைக் கோடாகச் சிறுத்துப்பின் தங்கிவிட்டது. இளங்குமரன் என்னும் அழகிய அறிவு வாழ்க்கை தன்னுடைய வாழ்வு நாடகத்தின் மூன்றாவது பருவத்திலிருந்து அடுத்த மாறுதலுக்குப் புறப்பட்டது. கடலில் அலைகள் தாளமிட்டன. கரையில் முல்லை தன்னோடு உடனிருப்பவர்களுக்குத் தெரியாமல் தன் கண்ணிரை மறைத்து விடுவதற்கு அரிய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவனுடைய வாழ்க்கைப் பயணத்திற்குத் தன்னுடைய கண்ணிரால் விடை கொடுத்தாள் அவள். (மூன்றாம் பருவம் முற்றும்) |