மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 5. இருண்ட சமயம் ‘மறுபடியும் நாளைக்கு இந்த அறிவுப் போர்க்களத்தில் வந்து எதிரிகளைச் சந்திக்கலாம். இன்று இவ்வளவில் திரும்புவோம்’ என்ற தீர்மானத்தோடு யானையை ஆலமுற்றத்து வழியில் செலுத்துவதற்கு இருந்தான் இளங்குமரன். அப்போது அவனுடைய யானைக்கு முன்னால் கபாலிகப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். பொது இடங்களில் இப்படித் துணிந்து புறப்பட்டு வந்து பழகும் வழக்கம் இல்லாத கபாலிக சமயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை எதிரே கண்டதும் இளங்குமரன் சிறிது திகைப்படைந்தான். சம்பாபதி வனத்திலும் சக்கரவாளக் கோட்டத்தைச் சுற்றியிருந்த காடுகளிலும் விடலைப் பிள்ளையாய் நண்பர்களோடு சுற்றித் திரிந்த காலத்தில் அவன் கபாலிகர்களை நிறையப் பார்த்திருக்கிறான். அந்தச் சமயங்களில் எல்லாம் எலும்பு மதம் என்றும் மண்டையோட்டு மதம் என்றும் அவனும் நண்பர்களும் வேடிக்கையாகச் சொல்லி அந்தச் சமயத்தைப் பற்றி எள்ளி நகையாடுவதும் உண்டு. இப்போது அதே மண்டையோட்டு மதத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி எதிரே வந்து நிற்கிறாள். “உங்களுக்கு என்ன வேண்டும் அம்மணீ? இந்த நாளங்காடிச் சதுக்கத்திலும், இதன் அழகிய சுற்றுப் புறங்களிலும் நீங்கள் விரும்புகிற விதமான பொருள்களில் எதுவும் கிடைக்க வழியில்லையே? எலும்புகளும், சுடலைச் சாம்பலும் இல்லாத இடத்துக்குக்கூட நீங்கள் வருவதுண்டோ?” என்று அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். அவன் தங்கள் சமயத்துக் கொள்கைகளை இகழ்ந்தாற் போன்ற தொனியில் பேசியதால் சிறிதே சினம் கொண்டவளாகி அவனை உறுத்துப் பார்த்தாள் அவள். “நாங்கள் எங்கும் வருவோம். பயப்படுவதற்கு நாங்கள் கோழைகள் அல்ல. கொடிய வீரத்தையே சிவமாகக் காண்கிற எங்களால் எந்த இடத்திலும் நாங்கள் விரும்பியவாறு சென்று செயற்பட முடியும்.” “அம்மணீ! நீங்கள் எப்போதும் பயப்படுவதில்லை; ஆனால் உங்களைப் பார்க்கிறவர்கள் பயப்படாத நேரமும் இல்லை. ‘எந்த இடத்திலும் நாங்கள் விரும்பிய சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ள முடியு’மென்று கூறினீர்களே - அது மட்டும் மறுக்க முடியாத உண்மை என்று நானும் ஒப்புக் கொள்கிறேன், அம்மணீ! இவ்வளவு நேரம் வரை இந்திரவிழாக் கோலம் பூண்டு மங்கல வினை நிகழும் வீடுபோலத் தோன்றிக் கொண்டிருந்த இந்த இடத்தில் நீங்கள் ஒருவர் வந்து நின்றவுடனேயே மயானத்தின் சூழ்நிலை உண்டாகி விட்டது பாருங்களேன்! இதிலிருந்தே நீங்கள் சொல்லியது மெய்யென்று தெரிந்து கொள்ள முடிகிறதே” என்று நகை விளைக்கும் சொற்களாலேயே அவளை வாதில் நலியச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவளோ, அவனிடம் வேறு வேண்டுகோள் விடுத்தாள்:
“நானே உன்னை வாதுக்கு அழைக்க வரவில்லை, அழைத்துக் கொண்டு போவதற்குத்தான் வந்தேன்.”
“எங்கே அழைத்துக் கொண்டு போக வந்தீர்கள்? ‘அழைத்துக் கொண்டு’ என்று நீங்கள் சொற்களை உச்சரித்த போது ‘அழைத்துக் கொன்று’ என்பதுபோல் அல்லவா என் செவிகளில் ஒலித்தது. கபாலிகர்கள் அசைவர்களாயிற்றே? அதனால்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது, அம்மணீ.” “இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் ஒன்றுமில்லை. இந்த நகரத்திலேயே மிகவும் குறைவானவர்கள் நாங்கள்? சக்கரவாளக் கோட்டத்தில் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள வன்னி மரங்களின் நிழலிலேயே எங்கள் உலகம் அடங்கிப் போய்விடுகிறது. அதற்கு இப்பால் அகநகரிலும் புறநகரிலுமகாகப் பரவிக் கிடக்கும் இந்தப் பட்டினத்தின் விதவிதமான வாழ்க்கை வளங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது.” “அகநகரிலும் புறநகரிலும் வாழ்ந்தவர்கள் தலையெல்லாம் உங்கள் கையிலிருக்கும்போது நீங்கள் கவலைப்படுவானேன்?” “எதைச் சொல்கிறாய் நீ?” “இறந்தபின் இந்தப் பட்டினத்தின் மக்கள் அத்தனை பேருடைய கபாலங்களையும் நீங்கள்தானே ஆளுகிறீர்கள்?” “இகழ்ச்சியை வளர்க்காதே, தம்பீ! வன்னி மன்றத்தில் எங்கள் குரு காத்துக் கொண்டிருப்பார். நீ உடனே என்னுடன் அங்கு வந்து அவரோடு வாதம் புரிய வேண்டும்.” “இந்த நள்ளிரவில்தான் வாதம் புரிய வேண்டுமா? நாளைக்குப் பகலில் வரலாமென்று பார்க்கிறேன். எல்லா வாதங்களும் நடைபெறும் இந்த இடத்துக்கே உங்கள் குரு வந்தாலும் நல்லதுதான். அவர் என்னைச் சந்திப்பதோடு மற்றவர்களையும் சந்தித்து வாதிடலாம்.” “அது சாத்தியமில்லை, அப்பனே! எங்கள் குரு வயது மூத்தவர்; எங்கும் வர இயலாதவர். நள்ளிரவுக்குப் பின்புதானே எங்களுடைய உலகமே உதயமாகிறது. பகலில் வாதம் புரிய வந்து என்ன பயன்?” “உண்மைதான், அம்மணி! உங்கள் சமயமே இருண்ட சமயத்தில்தான் தன் செயல் முறைகளைத் தொடங்குகிறது.” “அதனால்தான் இந்த இருண்ட சமயத்தில் உன்னை வந்து அழைக்கிறேன். யார் வந்து வாதுக்கு அழைத்தாலும் மறுக்காமல் வருவதுதான் மெய்யாகவே ஞானபலம் பெற்றவனுக்கு இலட்சணம். ஞானிக்கு இருள் என்ன? ஒளி என்ன? உன்னுடைய மனத்தில் தைரியமிருந்தால் என்னோடு வா. இல்லையானால் முடியாதென்று சொல்!” இதைக் கேட்டு இளங்குமரன் யானை மேலிருந்து கீழே இறங்கினான். “அழைத்துச் செல்லுங்கள் வருகிறேன்” என்றான் அவன். அந்த முரட்டுக் காபாலிக நங்கை பிசாசு போல் முன் நடந்தாள். பூதகிக்கு அருகில் கண்ணபிரான் சென்றது போல் கொடியேந்திய கையினனாக இளங்குமரன் அவள் நடந்த வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவள் தன்னை அழைத்துச் சென்ற சக்கரவாளக் கோட்டத்து வழிகள் ஒரு காலத்தில் தான் பழகிய வழிகள் என்பதை நினைத்துக் கொண்டே சென்றான் அவன். இருந்தாற்போல் இருந்து எதையோ நிறுத்திக் கொண்டு கேட்பவள் போல் அவள் நடப்பதை நிறுத்தி விட்டு அவனை நோக்கித் திரும்பி, “நீ கபாலிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறாய் அப்பனே?” என்று கேட்டாள். இளங்குமரன் பதில் சொல்லாமல் நின்றான். “அதற்குள் நீ ஊமையாகி விட்டாயா? எனக்குப் பதில் சொல்! உன்னைத்தான் கேட்கிறேன் நான். கபாலிகர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” “இப்போது உங்களுடைய குருவோடு வாதம் புரிவதற்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா? நீங்களே என்னோடு வாதம் புரிய விரும்புகிறீர்களா?” “நானும் சிறிது வாதம் புரிவதற்கு ஆசைப்படுகிறேன் என்றுதான் வைத்துக் கொள்ளேன். கபாலிகர்களைப் பற்றி உன் கருத்து என்ன?” “அதுதான் சொன்னேனே! ‘இருண்ட சமயத்தில் தான் எங்கள் உலகம் உதயமாகிறது’ என்று நீங்கள் கூறிய சொற்களே உங்களுக்கு உரிய இலட்சணம். எல்லாருடைய நினைவுகளும் - எல்லாச் சமயத்தாருடைய நினைவுகளும் மயானத்தில் போய் அழி கின்றன. ஆனால் கபாலிகர்களாகிய உங்களுடைய நினைவுகளோ மயானத்திலிருந்துதான் பிறக்கின்றன. வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழப் பார்க்கிற இலட்சியம் உங்களுடைய சமயத்துக்கு வாய்த்திருக்கிறது.” “எங்கே, இன்னொரு தரம் அதையே சொல்.” “வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழ முயல்வது உங்கள் இலட்சியம்.” “அந்த இலட்சியத்தை இப்போது நான் நிறைவேற்றலாம் என்று பார்க்கிறேன் அப்பனே!” இப்படிக் கூறியவாறே வெறிநகையில் பயங்கர ஒலி அந்தச் சக்கரவாளத்துக் காடு எங்கும் எதிரொலிக்கப் பேய்த் தோற்றமாகிய விசுவரூபமெடுத்தாற் போல அந்தக் கபாலிகை வாளை ஓங்கிக்கொண்டு சூறாவளியாக மாறி அவன் மேல் பாய்ந்தாள். “வாதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா? இப்படி வதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா?” என்று சற்றே விலகி நின்றுகொண்டு நிதானமாகக் கேட்டான் இளங்குமரன். “கபாலிகர்களாகிய எங்களுக்கு வாதம், வதம் இரண்டுமே ஒன்றுதான்” என்று முன்னிலும் கடுமையான வெறியோடு அந்தப் பூதகி அவன்மேற் பாய்ந்த போது பின்னாலிருந்து கற்குன்றுகள் விழுந்ததுபோல இரண்டு கைகள் அவளுடைய பிடரியில் விழுந்து அவள் கழுத்தை அழுத்தி நெரிக்கத் தொடங்கின. அந்தப் பிடியைத் தாங்க முடியாமல் அவளுக்கு விழியும் நாக்கும் பிதுங்கின. சுடுகாட்டு நரி ஊளையிடுவதைப் போல் கோரமான வேதனைக் குரல் அவள் தொண்டையிலிருந்து புறப்பட்டது. |