ஐந்தாம் பருவம் - நிறை வாழ்வு 12. காவிய நாயகன் அந்த நேரம் தன் வாழ்க்கையில் தனக்கு நல்வினைப் பயன் விளைய வேண்டிய மங்கல வேளையாக இருந்ததனாலோ பூர்வ புண்ணிய வசத்தினாலோ சுரமஞ்சரியின் நாவில் புத்தியும் யுக்தியும் கலந்து திறமை வாய்ந்த சொற்களாகவும், கேள்விகளாகவும் இளங்குமரனை நோக்கிப் பிறந்தன. தன் காதலை இன்னும் அதிக உரிமையோடு நிலைநாட்ட வேண்டும் என்ற துணிவு அவனுடைய சோர்விலிருந்து அவளுக்குக் கிடைத்தது. ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும்’ - என்று சற்று முன் அவனே தன்னிடம் கூறிய சொற்களை நினைத்துக் கொண்டாள் அவள். அந்தச் சொற்களை நினைவு கூர்வதன் மூலம் அவனைத் தானும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடைத்தது. தன்னுடைய விதி நன்றாகத்தான் இருக்கிறது என்றாற் போல் அப்போது அவள் மனத்தில் ஒரு துணிவும் தோன்றியது. அந்தத் துணிவோடு அவள் அவனை நோக்கிப் பேசினாள். “நான் கேட்பது எதுவாயிருந்தாலும் அது உங்களிடம் உள்ளதானால் தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்!” “ஆம்! தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன். கேட்டுப் பெற்றுக்கொள்.” “உங்களையே எனக்குத் தந்துவிடுங்கள்! இந்த அழகிய உடம்பை நான் ஆள்வதற்கு அளியுங்கள். கண்டு நிறைவடைய முடியாத நயங்கள் பிறக்கும் இந்தக் கண்கள், மெளனமாய் எந்நேரமும் முறுவல் பூத்துக்கொண்டே யிருக்கும் இந்த இதழ்கள், அழகு செழித்து நிமிர்ந்த பரந்த இந்தச் சுந்தரமணித் தோள்கள்- இவையெல்லாம் எனக்கு உரிமையாக வேண்டும். கொடுப்பதற்கு அவசியம் நேரும்போது உயிர் உடம்பு மனம் முதலிவற்றையும் கூடக் கொடுத்து விடுவது தான் கொடையின் உயர்ந்த இலட்சணம் என்பார்கள். கொடுக்க முடிந்தவராக இருந்து கொண்டே கொடைக்கு மறுப்பது உங்களைப் போன்றவருக்கே அழகில்லை” என்று கூறியவாறே தாமரை மலர்களை இடுவதுபோல் தன் கைகளை அவனுடைய பாதங்களில் இட்டு மேலே நடந்து போவதற்கிருந்த அந்தத் தங்க நிறத் தாள்களைத் தடுத்து நிறுத்தும் தடையானாள் சுரமஞ்சரி. சில்லென்று பூவிழுந்தாற்போல, தன் பாதங்களைப் பற்றிக் குளிர்ந்த உணர்வைப் பாய்ச்சும் அந்தக் கைகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தோன்றாமல் திகைத்து நின்றான் இளங்குமரன். மிகுந்த பசியினாலும் மனத்தின் பரிபூரணமான பாவனைகளாலும் நடந்து போவதே காற்றில் மிதப்பது போல் கனமற்றிருந்த அந்த வேளையில் சுரமஞ்சரியின் வேண்டுகோளைத் தடுக்கவும் முடியாமல், அங்கீகரித்துக் கொள்ளவும் முடியாமல் தயங்கி நின்றான் அவன். எப்படியெப்படி எல்லாமோ வளர்த்த மனத்தையும், பிடிவாதங்களையும் இப்படி இந்தப் பெண்ணின் தந்திரமான வாதத்தில் தோற்று விட்டதை நினைத்த போது அவனுள் அழுகை பொங்கியது. இவ்வளவு காலம் தன் வைராக்கியத்துக்குத் துணை நின்ற விதி இன்று தன்னைக் கைவிடப் போவதை எண்ணி வேதனை கொண்டான் அவன். எந்தவிதத்தினாலும் தன்னை வெற்றி கொள்ளத் தகுதியில்லாத ஓர் எதிரிக்குத் தான் தோற்றுப் போய்விட்டதாக அவன் மனம் தவித்தது. தனக்குத்தானே நினைப்பும் துணையுமின்றித் தனியாய் அமைந்தது.
எல்லாப் பற்றுக்களையும் களைந்துவிட்டுத் தன் வழியில் விரைந்து நடக்கும்போது இன்று இந்த வேளை யில் தன்னுடைய பாதங்களைச் சுற்றி வளைக்கும் பூங்கரங்களின் பற்றில் இருந்து மீள முடியாத விதத்தில் தான் சிறைப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான் அவன். தோல்வியின் தளர்ச்சியால் கலங்கும் மனத்தோடு மேலே இளங்குமரன் நிமிர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தான். ‘நான் முற்றிலும் இருண்டு விடவில்லை’ என்பது போல நட்சத்திரங்கள் அங்குமிங்குமாக மின்னிக் கொண்டிருந்தன. அந்த வானத்தில் தோன்றும் மேகங்கள் மறுபயன் கருதாமல் உலகத்துக்கு மழையைக் கொடுத்துக் கொண்டிருப்பது அவனுக்கு நினைவு வந்தது. அதே வானில் பயன் கருதாமல் சூரிய சந்திரர்கள் மாறி மாறி ஒளியைப் கொடுப்பதும், வேற்றுமை ஏற்றத் தாழ்வுகளை பாராமல் காற்று வீசுவதும் ஆகிய உலகின் நிரந்தரமான தியாகங்களை நினைவு கூர்ந்தான் இளங்குமரன். ‘இவளுக்கு என் மன்த்தையும் உடலையும் நான் தோற்பதா?’ என்று உள்ளே கலங்கும் கருத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்குத் தோற்றுப் போகவும் துணிந்தான் அவன். உயர்ந்த கொடையாளியின் பரந்த மனப்பக்குவத்தோடு அவள் கேட்டதற்கு மறுப்பின்றித் தன்னைக் கொடுத்து விடவும் குழைந்தது அவன் கருத்து. தன் உடம்பையும், மனத்தையும் கூடக் கேட்கிறவளுக்கு மறுக்காமல் தியாகம் செய்துவிடத் துணிந்தான் அவன். ‘உடம்பும் மனமும் தூய்மையாய் நிறைந்த செல்வங்கள், அவற்றை யாருக்காகவும் இழக்கக் கூடாது’ என்று தன் வாழ்வில் கடைசியாகத் தான் சேர்க்க ஆசைப்பட்ட செல்வங்களையும்கூட அவளிடம் அவன் தோற்றுப் போய்க் கொடுத்துவிட இசைந்து விட்டான். இந்த முடிவுக்கு வந்த பின் நிர்மலமான உள்ளத்தோடும் எதை இழக்கிறானோ அதை இழக்கிற துன்பமும்கூடத் தெரியாத சிரித்த முகத்தோடும் கீழே குனிந்து சுரமஞ்சரியைப் பார்த்தான் இளங்குமரன். அவள் அவன் காலடியில் பூவாக விழுந்து கிடந்தாள். பூமாலையை எடுப்பது போல் முதன் முதலாக அவளைத் தன் கைகளால் தொட்டுத் தூக்கி நிறுத்தினான். அப்படி அவனுடைய கைகள் தன்னைத் தீண்டியபோது சுரமஞ்சரி இந்த உலகத்தில் தன்னைப் போல் பாக்கியசாலி வேறு யாருமே இல்லை என்று எண்ணிப் பெரு மிதப்பட்டாள். மேலேயிருந்து யாரோ பணிபுலராத பூக்களை மலை மலையாக அள்ளித் தன்மேல் சொரிவது போல் அவள் உடல் சிலிர்த்தது. அந்த விநாடிகள் முடிவு பெறாமல் நித்தியமாகி அப்படியே பல யுகங்களாகத் தொடர்ந்து வளரலாகாதா என்ற தாபத்தோடு, கண்களில் மகிழ்ச்சி மலர அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அவளிடம் பேசினான்.
“உன்னுடைய வார்த்தைகளுக்கு நான் தோற்றுப் போய்விட்டேன். என்னுடைய தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேன்.” “இல்லை! இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள், நான்தான் தொடக்கத்திலிருந்து உங்களுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருகிறேன். என்னுடைய தோல்வி நேற்று வரை அங்கீகரிக்கப் படவில்லை. அது யாரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அவரால் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டது அவ்வளவுதான். இதை என் வெற்றி யாகக் கூறினீர்களானால் ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும்’ என்று நீங்களே சிறிது நேரத்துக்கு முன் சொன்னாற் போல என் விதி நன்றாக இருந்தது என்பதற்கு மேல் நான் பெருமைப்பட இதில் எனது முயற்சி வேறு ஒன்றுமில்லை.” “உன் விதி உனக்கு நன்றாயிருந்த வேளையில் என் விதி என்னைக் கைவிட்டு விட்டது. சுரமஞ்சரி! நீ இந்த வெற்றியை நன்றாகத் கொண்டாடலாம். ஏனென்றால் இந்த நகரத்தில் நாளங்காடி ஞான வீதியில் கூடிய பல நூறு தத்துவ ஞானிகளுக்கும், சமயவாதிகளுக்கும் கூட அவர்களுடைய அறிவின் பலத்தால் அடைய முடியாமற் போன வெற்றி இது. நீ உன்னுடைய உணர்ச்சிகளின் பலத்தாலேயே இந்த வெற்றியை என்னிடம் அடைந்து விட்டாய். ஆனால் இப்படி இப்போது உன்னுடைய வார்த்தைகளுக்குத் தோற்றவனின் மனத்தில் பெருகும் பரிதாபத்தை மட்டும் அளக்கவே முடியாது...” “இன்று எந்த வார்த்தைகளால் உங்களை நான் வென்றதாகச் சொல்கிறீர்களோ அவை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தாமே ? நம்முடைய முதல் சந்திப்பின்போது கடற்கரையில் நான் உங்களுக்கு மணி மாலை பரிசளிக்க முன்வந்த சமயத்தில், கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. கொள்ளமாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்ந்தது என்று அன்றைக்கு நீங்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளைத் தான் இன்றைக்கு நான் உங்களிடம் பேசினேன். அன்று நீங்கள் என்னை வென்று விடக் காரணமாயிருந்த அதே வார்த்தைகள் இன்று நான் உங்களை வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தனவோ என்னவோ? எப்படியிருந்தாலும் வெற்றி உங்களுடைய வார்த்தைகளுக்குத்தானே?” “வார்த்தைகள் பூக்களைப் போன்றவை. யார் நன்றாகத் தொடுத்தாலும் அவை அழகாயிருக்கும். வென்றவர்கள் பெருமைப்படவும் தோற்றவர்கள் துயரப் படவும் ஒரே விதமான வார்த்தைகளே காரணமாயிருக்குமானால் என்ன செய்யலாம்?” “வென்றவர் தோற்றவர் என்ற பிரிவே நமக்குள் இங்கு இல்லை அன்பரே! இந்தத் தோல்வியிலும் நீங்கள் தான் என்னை வென்றிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்வில் கடைசி விநாடி வரை உங்களுக்குத் தோற்றுக் கொண்டிருப்பதைவிட வேறெந்தப் பெருமையும் எனக்கு வேண்டாம். தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் அன்பினால் பிறருக்குத் தோற்றுப் போவதைத்தான் பாக்கியமாகக் கருதி வந்திருக்கிறார்கள். ஆண்களின் வாழ்வில் வேண்டுமானால் வெற்றியடையவதனால் பெருமை இருக்கலாம். பெண்ணின் வாழ்க்கையில் அன்புக்காகத் தோற்றுக் கொண்டேயிருப்பதை விடப் பெரிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை. வாழ்க்கை முழுவதும் துணையாக்கிக் கொண்டு நடப்பதற்காக வளைகள் குலுங்கும் கையால் நாங்கள் எந்த ஆண்மகனின் கையைப் பற்றுகிறோமோ அந்த விநாடியிலிருந்து எங்கள் மனம் அவனுக்கு மட்டும் தோற்றுப் போவதில் சுகம் காணத் தொடங்கி விடுகிறது. மலையிலிருந்து கீழே இறங்கும் அருவி அப்படித் தாழ்ந்து கீழே வீழ்வதனாலேதான் உல்லாசமடைகிறது. செடிகளில் அழகும் மணமும் நிறைந்த பூக்கள் சூடிக் கொள்வோர் காலடியில் உதிர்வதற்காகவே பூக்கின்றன. உதிர்ந்த பூ திரும்பவும் கிளைக்குப் போக ஆசைப்பட முடியுமோ? வீழ்ந்த அருவி மறுபடி தான் பிறந்து வந்த இடமான நீல மலைச் சிகரத்துக்கு ஏறிப் போக ஆசைப்பட முடியுமோ? பெண் தன்னை இழந்து விடுவதில்தான் சுகம் பெறுகிறாள்” என்று கூறியவாறே தன் வளைக் கரத்தால் அவன் கரத்தைப் பற்றினாள் சுரமஞ்சரி. அவன் அவள் கையைத் தடுக்கவில்லை. “நீ பெற வேண்டிய சுகங்களுக்காக உன் தெய்வத்தை மனமார வணங்கி வேண்டிக்கொள் சுரமஞ்சரி!” “நேற்று வரை பல வேறு தெய்வங்களை நான் வணங்கியிருக்கிறேன். இன்று நான் வணங்குவதற்கு வேறு தெய்வங்கள் இல்லை. நீங்கள் ஒருவரே என் தெய்வமாகி விட்டீர்கள்.” “உன்னுடைய தெய்வத்தை நீ எந்த வழியில் நடத்திக் கொண்டு போக வேண்டுமோ அந்த வழியில் நடத்திக் கொண்டு போ!” “கட்டளையே தவறானதாயிருக்கிறதே? தெய்வ மல்லவா தன்னைச் சேர்ந்தவர்களை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்? இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு நினைவு வருகிறது. ஓவியர் மணிமார்பனோடு நீங்கள் இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாள் ‘பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்’ என்று தணியாத தன்மான உணர்ச்சியுடனே என்னிடம் பேசினர்கள். அதே மனிதர்தானா இன்று இப்படி என் முன் ‘எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் என்னை நடத்திக் கொண்டு போ’ என்று கூறுகிறீர்கள். இந்த மாறுதலை என்னால் நம்பவே முடியவில்லையே?” “ஓர் எல்லையின் கடைசிப் புள்ளியில் போய் நிற்பவர்கள் அங்கிருந்து திரும்பி நடந்தால் அதற்கு நேரேயுள்ள எதிர் எல்லைக்குத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடைசியாக ஏறிப்போய் நிற்கிற எல்லை எதுவோ அதற்கு அப்பால் போவதற்கும் நோக்கமாகக் கூறிக்கொள்வதற்கும் ஒன்றுமே இருப்பதில்லை. என்னுடைய எல்லையிலிருந்து நான் திரும்பி நடக்க வேண்டுமென்று தானே நீ இந்தக் கையால் என்னைப் பற்றி இழுக்கிறாய்?” “அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சுர மஞ்சரி கண் கலங்கினாள். சில விநாடிகள் ஏதோ வேதனைக்குரிய சிந்தனைகளினால் மனம் வருந்துகிற சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. பின்பு தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக அவன் கையைப் பற்றியிருந்த தன் வளைக்கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்டு “இப்படி உள்ளர்த்தம் நிறைந்த வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் விரும்புகிறார் போல என்னை அழைத்துச் செல்லுங்கள். தோற்றவர் களை அழைத்துச் செல்லும் முறையை வென்றவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்” என்றாள். “அப்படியானால் என்னோடு என் வழியில் புறப்படு.” “இதோ புறப்படுகிறேன்” என்று சொல்லியபடியே பெருமாளிகையின் வாயிற்படியருகே போய்த் தன் உடலின் பல பகுதிகளைப் பிணைத்துக் கொண்டிருந்த பொன் சுமைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அந்தப் படியில் குவித்தாள் சுரமஞ்சரி. இறுதியாகக் கால்களின் மாணிக்கச் சிலம்புகளையும் கழற்றி வைத்துவிட்டு அவற்றைப் பற்றிய மனத்தின் ஆசைகளும் அறவே கழன்று போய் அவள் எழுந்து புறப்படுவதற்காக நிமிர்ந்தபோது அவளுடைய முன் நெற்றியில் மேலேயிருந்த கண்ணிர் வெதுவெதுப்பாகச் சிந்திச் சிதறியது. திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி. அவள் அந்த அணிகலன்களையெல்லாம் கழற்றி வைத்த படிக்கு ஒருபடி மேலே அவளுடைய தந்தை கண்கலங்கி நீர் பெருக வந்து நின்றுகொண்டிருந்தார். “இப்படித் தோற்றுப் போகத் துணிகிற மனம் உன் தந்தைக்கு இல்லையே, சுரமஞ்சரி! உன் தந்தைக்கு இந்தக் குணம் இருந்திருந்தால் தன் வாழ்வில் அவர் தொடக் கத்திலிருந்தே செம்மையாக வாழ்ந்திருக்கலாம் அம்மா...” என்று நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் அவர் அவளை நோக்கிக் கூறியபோது, அவருக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு. தான் அப்போது நின்று கொண்டிருந்த படிக்கு அடுத்த மேற் படியில் ஏறித் தன் தந்தைக்கு ஏதாவது ஆறுதலாய்ச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் என்ன சொல்வதென்று புலப்படவில்லை. அந்தப் பாசத்தையும் மனத்திலிருந்து கழற்றினாள் அவள். “இன்று அமைதியான இந்த இரவு வேளையில் என் தாயும், சகோதரி வானவல்லியும், தோழி வசந்தமாலையும் நன்றாக உறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது! ‘சுரமஞ்சரி எந்த வழியில் யாருடன் நடந்து போவதற்காக இத்தனை காலம் தவம் செய்து கொண்டிருந்தாளோ அந்த வழியில் அந்தத் துணையோடு இந்த இருளில் புறப்பட்டுப் போய் விட்டாள்’ என்று எல்லாரிடமும் நாளைக்கு விடிந்ததும் சொல்லி விடுங்கள் அப்பா. மனம் இருந்தால் இப்போது எங்களுக்கு ஆசியும் கூறி அனுப்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கித் திரும்பிச் சென்று தன்னை வென்றவனுக்கு அருகில் நின்றபடி தன் தந்தையை நோக்கி வணங்கினாள் சுரமஞ்சரி. “ஆசி கூற மனம் இருக்கிறதம்மா! ஆனால் தகுதி இல்லையே?” என்று இளங்குமரனின் பக்கமாகத் திரும்பிக் கைகளைக் கூப்பினார் அவர். அந்த நிலையில் அவரைக் கண்டு இளங்குமரனுக்கும் அநுதாபம் பெருகியது. பெருமாளிகைத் தோட்டத்திலிருந்து முன் இரவிலேயே மலர்ந்து விட்ட பூக்களின் மணம் பரவத் தொடங்கியிருந்தது. சுரமஞ்சரியைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு அங்கி ருந்து வெளியேறுவதற்காக மெல்ல நடந்தான் இளங்குமரன். இருவரும் மாளிகையின் கடைசி வாயிலையும் கடந்து இருள் உறங்கும் பட்டினப்பாக்கத்துத் தெருவில் இறங்கிச் சென்றபோது, “சுரமஞ்சரி! இன்று மாலை இந்த மாளிகைக்குள் நுழையும்போது நான் துறவியாக நுழைந்தேன். இப்போது ஒரு பெண்ணின் கையையும் நினைவையும் சுமந்து கொண்டு மிகப் பெரிய வாழ்க்கைச் சுமையோடு திரும்புகிறேன்” என்று அவளுடைய காதருகே சிரித்துக் கொண்டே சொன்னான் இளங்குமரன். அவன் அந்த வார்த்தைகளைச் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தாலும், அவளுக்கு அவற்றைக் கேட்டு வேதனையாகத்தான் இருந்தது. அவன் தன்னுடைய தோல்வியையே திரும்பத் திரும்ப எண்ணி உருகுவது அவளுக்குப் புரிந்தது. “தோற்றுப் போனதற்காக வருந்திக்கொண்டே பேசுவது போல் அடிக்கடி பேசுகிறீர்கள் நீங்கள். இந்த விதமான பேச்சு என்னைப் புண்படுத்துகிறது” என்று தன் மனக் குறையைச் சொன்னாள் அவள். அந்தச் சொற்கள் இனியும் அப்படிப் பேசவிடாமல் அவன் நாவைக் கட்டுப்படுத்தி அடக்கி விட்டன, மெளன மாக மேலே நடந்தான் அவன். விடுபட்ட பறவைகள் போல அமைதியான அந்த இரவு நேரத்தில் பூம்புகாரின் வீதிகளில் சுற்றினார்கள் அவர்கள். நீண்ட நேரத்துக்குப் பின் நடந்து நடந்து களைத்த நிலையில் பெளத்த மடத்துக்கு முன்னாலிருந்த ஒரு மகிழ மரத்தடியில் சுரமஞ்சரியோடு அமர்ந்தான் இளங்குமரன். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுரமஞ்சரி அங்கே பசிக் களைப்பைக் கண்டாள். “உங்களுடைய முகத்தில் பசிச் சோர்வு தெரிகிறது! நீங்கள் பல வேளைகளாக உண்ணவில்லை போலிருக்கிறது?” “பல வேளைகளாக அல்ல; பல நாட்களாகவே உண்ணவில்லை. இப்போது தான் என் பசி எனக்குத் தெரிகிறது. நீயும் என்னைப்போலவே பசிச் சோர்வோடு தான் தெரிகிறாய்!” “நம்முடைய இல்லறம் இருவர் வயிற்றிலும் இப்படிப் பசியோடு தொடங்குகிறது. ஆனால் என்னை விட அதிகம் பசித்துப் போயிருக்கிறீர்கள். நீங்கள்” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. அடுத்த கணம் அவளுடைய சிரிப்பை அவன் சொற்கள் அடக்கின. அவளை அந்தச் சொற்களால் பரிசோதனை செய்தான் அவன். “எந்தவிதமான செல்வங்களும் இல்லாத ஓர் ஏழையைக் காதலிப்பதால் எவ்வளவு வேதனைகள் பார்த்தாயா? என் பசிக்கும் சோறில்லை. உன் பசிக்கும் சோறில்லை. இருவர் பசிக்கும் இருவர் துயரத்துக்கும் இந்த மரத்தடி மண்தான் புகலிடம் போலிருக்கிறது!” “ஏன் இல்லை? கணவனுடைய வயிறு நிரம்புவதை விடப் பெரிய திருப்தி மனைவிக்குக் கிடையாது. இன்று நீங்கள் எனக்குக் கிடைத்த புண்ணிய தினம். இதை நான் கொண்டாட வேண்டும். உங்களுக்கு என் கையால் நான் சோறு படைக்க வேண்டும்! பிச்சை எடுத்து வந்தாவது அதைச் செய்வேன்” என்று கூறிக்கொண்டே அவள் ஆவேசத்தோடு அங்கிருந்து எழுந்து சென்றாள். சுரமஞ்சரி பெளத்த மடத்துக்கு அருகே யாத்திரிகர்களுக்குச் சோறிடுவதற்காக இருந்த அறக்கோட்டம் ஒன்றில் போய் ஒரு பெரிய வாழை இலை நிறையச் சோறு வாங்கி வந்து இளங்குமரனுக்கு முன்னால் வைத்தாள். தன் கையால் ஒவ்வொரு பிடியாக எடுத்து அந்தச் சோற்றை அவன் கையில் இட்டபோது அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இலையிலிருந்த மீதத்தைத் திரட்டிக் கடைசிப் பிடியை அவள் அவன் கையில் வைத்தபோது அந்தச் சோற்றை அப்படியே கைமறித்து அவள் வாய்க்கு இடுவதற்குக் கொண்டு போனான் இளங்குமரன், சுரமஞ்சரி அவன் கையால் அதை உண்பதற்கு நாணித் தலையைக் குனிந்து கொண்டாள். தன்னிடம் அன்பு செய்வதை விடப் பெருமைப்படத் தக்க செல்வங்கள், உறவுகள், பாசங்கள், வேறெவையுமே இல்லை என்பதை நிரூபித்து விட்ட அந்தப் பேரழகுப் பேதையை மலர்ந்த விழிகளால் நோக்கி அவளை ஏற்றுக் கொண்ட நாயகன் என்ற உரிமையோடு இளங்குமரன் முதல் முறையாகப் பார்த்தான். அந்தப் பார்வையே அப்போது அவளை மணப்பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது. “சுரமஞ்சரி! என்னுடைய சோதனைகளில் எல்லாம் நீ வெற்றி பெற்றுவிட்டாய். எல்லாப் பற்றுக்களையும் இழந்துவிட்டு ஏதாவது ஒரு பற்றில் மட்டும் இலயிப்பவனைத் துறவி என்கிறார்கள். நீயும் அப்படி உன் செல்வங்களையும் உறவுகளையும் இழந்து விட்டு என்னில் கலந்து என்னோடு மட்டும் இலயித்து விட்டாய். உன்னுடைய இந்தத் தவத்தை நான் ஏற்றுக்கொண்டு அருள் செய்துதான் ஆக வேண்டும்” என்று இந்த வார்த்தைகளைச் சொல்லியபோது அவனுடைய மனம் நிறையப் பரிவு பெருகியிருந்தது. அந்தப் பரிவைச் சுரமஞ்சரிக்கும் அளிக்க அவன் மனம் இணங்கிற்று. அந்த எல்லையற்ற பரிவு வெள்ளத்தில் அவள் மூழ்கவும் இடம் கொடுத்தான் அவன். இரண்டாம் முறையாக அவன் கையிலிருந்த சோற்றை அவள் உண்ணும்போது சிறு குழந்தைபோல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள். “இந்த ஒருகை சோற்றில் என்னுடைய நெடுங் காலத்துப் பசி தணிந்துவிட்டது அன்பரே! என்னிடமிருந்து என் கையால் எதையுமே ஏற்றுக் கொள்ள மறுத்த நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டீர்கள். கொடுக்க வேண்டும் என்ற மெய்யான பரிவோடு எனக்கும் உங்கள் கையால் உண்ணக் கொடுத்தீர்கள். இந்த விநாடியோடு செத்துப் போய்விட்டாலும் இனி எனக்குக் கவலையில்லை. இந்த ஒரே ஒரு விநாடியில் ஆயிரம் ஊழிகள் உங்களோடு வாழ்ந்து அநுபவங்களைப் பெற்றுவிட்டாற் போன்ற திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சி மிகுதியினால் சுரமஞ்சரியின் சொற்கள் முற்றாத மழலைச் சொற்களாய்க் குழைந்து ஒலித்தன. “பேதைப் பெண்ணே! இப்போதுதான் நீ வாழத் தொடங்கியிருக்கிறாய். அதற்குள் ஏன் சாவதற்கு ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இளங்குமரன் தன்மேல் சாய்ந்திருந்த அவளுடைய குழற் கற்றையைப் பரிவோடு கோதினான். மேலே மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று கூவியது. காற்றில் ஆடியசைந்த மகிழ மரத்தின் கிளைகள் அவர்கள் மேல் பூக்களைச் சிந்தின. “இந்தக் குயில் ஏன் இப்படிக் கூவுகிறது சுரமஞ்சரி?” “விடிவதற்காக...” “யாருக்கு விடிவதற்காக?” “ஒரு பேதைப் பெண்ணுடைய வாழ்க்கையில் விடிந்து ஒளி கிடைப்பதற்காகத்தான்!” இந்தக் குறும்பு நிறைந்த பதில் வார்த்தைகளைக் கூறிவிட்டுத் தன் சிரிப்பைத் தானே அடக்கிக்கொள்ள முடியாமல் சுரமஞ்சரி சிரித்தபோது அவனுடைய சிரிப்பும் பிறந்து அதில் கலந்து எதிரொலித்து இணைந்தது. |