10 மேடை நாடகங்களுக்கும் இயக்கம் தொடர்புடைய இருபொருள்படும் வசனங்களுக்கும், பாடல்களுக்கும், திருமலை பெற்ற பாராட்டும், கை தட்டுக்களும், ஒரு சினிமா கம்பெனி அதிபரைப் பெரிதும் கவர்ந்தன. அவர் தாம் தயாரிக்க இருந்த ஒரு படத்திற்குச் சென்னையில் வந்து தங்கி வசனம் எழுதிக் கொடுக்கும்படி திருமலையை கேட்டார். ஒருபுறம் அவனுக்கு மலைப்பாயிருந்தாலும் மறுபுறம் அதில் ஈடுபட வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. பெருவாரியான மக்களைக் கவர்ந்து தன்பக்கம் இழுக்க அது ஒரு சாதனம் என்று அவனுக்குப் புரிந்திருந்தது. இயக்கமே அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் பதவியிலிருக்கும் அமைச்சராக எழிலிருப்புக்கு விஜயம் செய்த சின்னக் கிருஷ்ணராஜனுக்கு எதிராக அவனும் இயக்கத் தோழர்களும் கறுப்புக் கொடி காட்டினார்கள். காங்கிரஸ் அமைச்சராகப் பதவியிலிருந்த சின்ன உடையார் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதைக் காட்டவும் மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாகிய உடையார் எழிலிருப்புத் தேரோட்டத்தில் முதல் வடம் பிடிக்க வருவதைக் கண்டித்தும் கறுப்புக்கொடி பிடிக்கப்பட்டது. கறுப்புக் கொடி காட்டுவதற்கான இரண்டாவது காரணம் ஊரில் யாருக்கும் பிடிக்கவில்லை. சின்ன உடையாருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தேருக்கு முதல் வடம் பிடிப்பது என்பது வழக்கமாகியிருந்தது. ஒரு வம்புக்காக அதை எதிர்ப்பது என்பது யாருக்கும் திருப்தி தரவில்லை. திருமலைக்கு இரகசியமாகத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த வேணுகோபால் சர்மா கூட அதை அவனிடமே கண்டித்தார். மதச்சார்பற்ற என்பதற்கு அர்த்தம் எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கிறது என்பது தானே ஒழிய, இந்து மதத்தை மட்டும் ஒழிக்கிறதுங்கறதில்லே. ஒரு கிறிஸ்தவ அமைச்சரே இஸ்லாமிய அமைச்சரோ இப்படித் தங்கள் மத சம்பந்தமான விழாவுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்குக் கறுப்புக் கொடி பிடிக்கிற துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல் நடந்து கொள்கிறீர்களே!” “சாமி இதெல்லாம் அரசியல்! உங்களுக்குப் புரியாது. நீங்க கண்டுக்காம ஒதுங்கிக்குங்க! எங்களுக்கு உடையாரை எதிர்க்கணும், அதுக்கு என்ன வேணாச் செய்வோம்” என்று அவருக்குப் பதில் சொல்லிச் சமாளித்தான் திருமலை. சர்மா எத்தனையோ தடவை திருப்பித் திருப்பிக் கண்டித்தும் அவன் அவரைச் சாமி என்று தான் விளித்தான். அவன் சினிமாக் கம்பெனிக்கு வசனம் எழுதுவதற்காகச் சென்னைக்குப் புறப்பட வேண்டிய சமயத்தில் இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டம் வந்ததால் பயணம் தடைப்பட்டது. திருவிழாவில் தேரோட்டத்துக்கு இடையூறாகக் கலவரம் மூளுமோ என்று பயந்தனர் போலீஸார், கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு அநுமதி தரப்படவில்லை. தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. துணிந்து தடையை மீறிக் கறுப்புக்கொடி காட்டியதால் கைதாகி ஒரு வாரம் கழித்துத்தான் வெளியிலே வர முடிந்தது. உடையார் எதை செய்தாலும் எதிர்க்கவேண்டுமென்ற திருமலையின் போக்கு ஊராருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தக் கறுப்புக்கொடிப் போராட்டம் ஆதரவற்றுப் பிசுபிசுத்துப் போயிற்று. விடுதலையானதும் அவன் சென்னைக்குப் புறப்பட வேண்டியிருந்ததனால் போராட்டத்தின் தோல்வியை அவன் பொருட்படுத்தவில்லை ஆனால் கறுப்புக்கொடிப் போராட்டத்தைத் தவிர வேறொரு தோல்வியும் அவனுக்கு ஏற்பட்டது. தனக்கு முதல் முதலில் ஒர் இரவுப் பறவையாகப் பழக்கமாகிப் பின்பு தன் நாடகங்களில் நடிக்கும் நடிகையாகிவிட்ட பெண்ணைத் தவிர எழிலிருப்பிலேயே அவனோடு இன்னொரு வீட்டில் ஏறக்குறைய மனைவியாக வாழ்ந்த மற்றொரு பெண்ணைத்தான் அவன் தன்னோடு சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போவதாக முடிவு செய்திருந்தான். சண்பகத்தைப் போன்ற அதிகப் படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை அவன் சென்னைக்கு அழைத்துப் போவதில்லை என்றே முடிவு செய்துவிட்டான். நீண்ட காலமாகச் சண்பகத்தைப் பார்க்காமலே இருந்துவிட்ட அவன் ஊருக்குப் போவதற்கு முன் சொல்லிக் கொண்டு போகலாம் என்று அவளிடம் போனான். இவன் போவதற்கு முன்பே ‘சக்களத்தியைத் தான் சென்னைக்கு அழைத்துப் போகிறான்’ என்கிற தகவல் சண்பகத்துக்கு எப்படியோ எட்டியிருந்தது. இதற்கு நடுவில் ஒருநாள் வெட்கத்தை விட்டு நந்தவனத்துக்குத் தேடிப் போய்த் தன் சகோதரனைச் சந்தித்துத் தன்னுடைய சிரமங்களை எல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தாள் அவள். அவனும் அவள்மேல் அநுதாபத்தோடு எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டிருந்தான். “கஷ்டகாலத்தில் நம்ம உடன்பிறப்புத்தான் நமக்கு உதவுவாங்க. எதுக்கும் உன் கூடப் பிறந்தவனைப் பார்த்து எல்லாம் சொல்லி வையி” - என்று இந்த விஷயத்தில் பக்கத்து வீட்டு ஆச்சிதான் சண்பகத்துக்கு யோசனை சொல்லியிருந்தாள். இப்போது, புருஷன் தன்னிடம் சொல்லிக் கொண்டு போக வரப் போவதை அறிந்ததும் சண்பகம் அவசர அவசரமாக ஆச்சிமூலமே சகோதரனுக்குத் தகவல் அனுப்பினாள். அவனும் உடனே வந்தான், தொடர்ந்த நரக வாழ்க்கையாகப் பட்டியில் அடைப்பட்ட மாடு போல் வாழ்வதைவிட இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சண்பமுகம் இப்போது துணிந்திருந்தாள்.
“முதல்லியே நீ இங்கே இருக்கவேணாம் ஆச்சி வீட்டிலே இரு. கொஞ்ச நேரம் நான் பேசிச் சமாளிக்கிறேன். அப்புறம் திடீர்ன்னு தற்செயலா வர்ற மாதிரி நீயும் ஆச்சியும் உள்ளே வாங்க” என்று சொல்லிச் சகோதரனை ஆச்சி வீட்டில் வந்து மறைந்திருக்கச் செய்தாள் சண்பகம்.
எதிர்பார்த்தபடி திருமலை வந்தான். அவசர அவசரமாக இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்பும் வேகத்தில், “இந்தா சண்பகம் இப்போ உட்கார நேரமில்லே. எனக்கு அவசரம், மெட்ராஸ் புறப்பட்டுப் போறேன். சினிமாவுக்கு வசனம் எழுதற சான்ஸ் வந்திருக்கு. மாசா மாசம் பணம் வந்து சேரும், வீட்டையும், பயலையும் கவனிச்சிக்கோ...?” - என்று ஆரம்பித்தான். “நீங்க மட்டும்தான் தனியாப் போறியளா?” “ஆமாம்... அதுக்கென்ன...?” “பொய் சொல்லாதீங்க... அந்த வடக்குத் தெருக்காரி உங்களோட வர்றதாக் கேள்விப் பட்டேனே? உள்ளதைச் சொல்லுங்க?” “அப்படித்தான் வச்சுக்கயேன், அவளை எங்கூட இட்டுக்கிட்டு போறதுக்கு உன் பெர்மிஷன் எனக்கு தேவையில்லை.” “உங்களுக்கு எதுக்குத்தான் என் பர்மிஷன் தேவை? நீங்கதான் எல்லாப் பாவத்துக்கும் துணிஞ்ச மனுஷனாச்சே...?” “ஆங்... போடீ உங்கிட்டப் பெரிசா அட்வைஸ் கேக்க நான் இங்கே வரலே, பாவ புண்ணியத்துக்கு நீதான் ஹோல்சேல் ஏஜென்ஸி எடுத்திருக்கியோ...?” இந்தச் சமயத்திலே சண்பகத்தின் சகோதரனும் ஆச்சியும் உள்ளே நுழைந்தனர். “வாப்பா மச்சான்! நீ எப்ப வந்தே?” - என்று அவனை எகத்தாளமாக வரவேற்றான் திருமலை. “நீங்க மெட்ராஸ் போறதா இருந்தா அக்காவையும் ராஜாவையும் தான் உங்க கூடக் கூட்டிக்கிட்டுப் போகணும். அதுதான் முறை.” “முறை என்னடா பெரிய முறை? நான் எதைச் செய்யறேனோ அதுதாண்ட முறை.” “இப்படி முரட்டடியாப் பேசினா எப்பிடித் தம்பி? சண்பகத்துக்கும் உங்களை விட்டா வேற யார் இருக்காங்க நீங்கதானே எல்லாம்?” - என்று ஆச்சியும் இதமாக எடுத்துச் சொன்னாள். அவனே என்ன பேசுகிறோம் என்ற சுய நினைவே இன்றி, “ஏன்? வேற யார் இருக்காங்கன்னு குறைப்பட்டுக்க வேண்டாமே, யாரையாவது நல்ல ஆளாப் பார்த்துத் தேடிக்கிறதுதானே?” - என்று சொல்லியதும், “டேய் நாக்கை அளந்து பேசு” - என்று சண்பகத்தின் தம்பி கையை ஓங்கிக்கொண்டு திருமலை மேல் பாய ஆச்சி அவனைத் தடுத்தாள். அவன் கூறிய வார்த்தைகள் சண்பகத்தின் ரோஷத்தைக் கிளறிவிட... அவள் எரிமலையாகச் சீறி வெடித்தாள். “உன் புத்திதானே உனக்குத் தோணும். நாய் எச்சிக் கலையிலே வாய் வைக்கிற மாதிரி நீ ஊர் ஊராப் பொம்பிளைப் பித்துப்பிடித்து அலையிறியே, அது மாதிரி என்னையும் நினைச்சியா? நான் நல்ல வமிசத்திலே நல்ல அப்பனுக்குப் பொறந்தவடா” - என்று சண்பகம் கூறியதும் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது போல அவள் மேல் விருட்டென்று பாய்ந்தான் திருமலை. அவனு டைய மிகவும் பலவீனமான பகுதியை அவள் சொற்கள் சீண்டிவிட்டன. ஆச்சியும். சண்பகத்தின் தம்பியும் அக்கம் பக்கத்தாரும் ஓடி வந்து விலக்கியிராவிட்டால் திருமலை சண்பகத்தைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான் அப்போது. “அறுத்தெரியறதுக்கு நீ எங்கழுத்திலே தாலி கூடக் கட்டலே... இன்னியிலேருந்து உனக்கும் எனக்கும் இனிமேப் பேச்சு வார்த்தையே கிடையாது. உன் முஞ்சியிலேயே இனிமே முழிக்க மாட்டேன்” என்று குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறித் தம்பியோடு மறுபடி நந்தவனத்துக்கே போய்விட்டாள் சண்பகம். எந்த ஒரு பலவீனமான பகுதியைச் சீண்டியதற்காக அவன் உள் பட்டணத்தின் மீது ஜன்ம விரோதியாக மாறினானோ அதே பகுதியை இப்போது கீறி ரணப் படுத்தி விட்டாள் சண்பகம். எல்லாவற்றையும் மறக்க மறைக்க அவன் வடக்குத் தெரு ஆசைநாயகியோடு பட்டினம் புறப்பட்டான். சினிமா உலகம் அவனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அவனது வாழ்க்கையில் மற்றோர் அத்தியாயம் புதிதாக ஆரம்பமாகியது. முதல் படம் அமோகமான வெற்றியை அடைந்தது. நூறு நாளையும் கடந்து பல ஊர்களில் படம் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆக ஒடவே ஒரே சமயத்தில் பல படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுத வேண்டிய சான்ஸ்கள் அவனைத் தேடி வந்தன. ஓர் உதவியாளர் நம்பிக்கையானவராக வேண்டி யிருந்தது. எழிலிருப்புப் புலவர் வேணுகோபால் சர்மா வுக்குத் தந்தி கொடுத்தான். சர்மா உடனே அடுத்த ரயிலிலேயே சென்னைக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார். |