11 திருமலைக்கு ஆசிரியராக இருந்து கற்பித்த சர்மா அவனுக்கே உதவியாளர் ஆகிவிட்டார். எல்லாச் செலவும் போக ஊரிலுள்ள குடும்பத்துக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வரை அனுப்ப முடிகிறாற் போல ஒரு வேலையில் இருக்க நேர்ந்ததைத் தம் அதிர்ஷ்டமாக எண்ணினார் சர்மா. அவருடைய வயதுக்கும், அறிவுக்கும், அநுபவத்துக்கும் சினிமா உலக நடைமுறைகளின் விடலைத்தனமான ஆட்களும் பழக்க வழக்கங்களும் ஒத்து வரவில்லை என்றாலும் அவரை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த - அவருக்கு நன்றாகப் புரிந்த திருமலையோடு சேர்ந்து வேலை செய்வதில் சிரமம் எதுவும் நேரவில்லை. திருமலை தாறுமாறாகவும், எழுத்துப் பிழையோடும் எழுதிப் போடுகிற ஸ்கிரிப்டுகளைத் திருத்திச் சரியாக எழுதி வைப்பது ஒன்றுதான் அவரது வேலையாயிருந்தது. பள்ளி நாட்களில் பையன்களின் காம்போசிஷன் நோட்டைத் திருத்துகிற மாதிரி இப்போது திருமலையின் வசனங்களில் எழுத்துப் பிழைகளையும், ஒலிப்பிழைகளையும் திருத்திப் போடுகிற வேலையைச் செய்தார் அவர். பேர் என்னவோ ‘ஸ்கிரிப்ட் அஸிஸ்டெண்ட்’ என்று தான் கொடுத்திருந்தார்கள். வாழ்க்கைத் தேவைகளும், வறுமையும் அவரை அந்த வயதிலும் அப்படி உழைக்க வைத்திருந்தன. எழிலிருப்பிலிருந்து சென்னைக்குப் புறப்படும்போது ஏற்பட்ட கசப்பான அநுபவங்களைத் திருமலை மெல்ல மெல்ல மறந்து விட்டான். புதிய புகழும் வசதிகளும் பழைய துன்பங்களைச் சுலபமாக மறந்து போகச் செய்திருந்தன. எப்போதாவது சண்பகத்தின் நினைவு வந்து போகும். அவள் தான் அடிபட்டு விழுந்து படுத்த படுக்கையாகக் கிடந்த நாட்களில் நந்தவனத்தில் செய்த சிசுருஷைகள் நினைவு வரும். அந்தச் சண்பகமா இப்படிக் கடுமையான வார்த்தைகளை எல்லாம் பேசினாள் என்று கூடவே வியப்பும் ஏற்படும். ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பது போல் விளையாடி விட்டுத் தான் அவளைத் திரும்பிப் பாராமல் காடு மேய ஆரம் பித்ததாலேயே அவள் விரக்தியடைந்து மாற நேர்ந்தது என்பது அவனுக்கு உறைக்கவில்லை. சண்பகம் தன்னை மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசி விட்டுக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு தம்பியோடு ஒடி விட்டாள் என்பது மட்டுமே நினைவுக்கு வந்தது. ஊரிலிருந்து வந்து போன யார் மூலமோ, அவள் நந்தவனத்தில் பூத்தொடுத்துக் காலந்தள்ளுகிறாள், மகன் இராவணன் என்கிற ராஜாவை உள்ளுர்க் கான்வெண்ட் பள்ளி ஒன்றில் சேர்த்திருக்கிறாள் என்றெல்லாம் தகவல்கள் காதில் விழுந்தன. திருமலை கடந்த காலத்தையும், கவலைகளையும் மறக்க நிறையக் குடிக்க ஆரம்பித்தான். ஊரில் எப்போதாவது பீடி என்றிருந்த புகைப் பழக்கம் இப்போது ‘சிகரெட்’ ஆகி ‘செயின் ஸ்மோக்கிங்’ என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தது. எவ்வளவோ மனக்கசப்பு இருந்தும், படிக்கிற மகனுக்கு உதவியாக இருக்கட்டும் என்று சண்பகத்தின் தம்பி பெயருக்கு ஆரயிம் ரூபாய்க்கு டிராஃப்ட் ஒன்று எடுத்து அனுப்பியிருந்தான் அவன். “நமது மனத்தாங்கள் நம்மோடு போகட்டும். குழந்தை சிரமப்பட வேண்டாம். அவனை நல்ல கான்வெண்டாகப் பார்த்துச் சேர்த்திருப்பது பற்றி மகிழ்ச்சி. உங்கள் சிரமங்களோடு அவனது படிப்புச் செலவுகளையும் தாங்குவது முடியாத காரியம் என்று எனக்குப் புரிகிறது. என் மேல் கோபப்படாமல் அவ்வப்போது நான் இப்படி அனுப்புகிற பணத்தை ஏற்றுக் குழந்தையின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்” என்று அந்த டிராப்ஃடோடு சண்பகத்தின் தம்பிக்கு ஒரு கடிதமும் வைத்திருந்தான் அவன்.
டிராப்ஃட் சுவரில் அறைந்த பந்தாகத் திரும்பி வந்து சேர்ந்தது. அதோடு சண்பகத்தின் தம்பி கடுமையான மொழி நடையில் ஒரு கடிதமும் எழுதியிருந்தான்.
‘நான் ஒருவன் இருக்கிற வரையில் என் அக்காளும், மருமகனும் நாதியற்றுப் போய் விட மாட்டார்கள். உங்கள் பணத் திமிரும், கொழுப்பும் தான் உங்களை இப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது. இதை ஏற்றுக் கொள்கிற அளவு நாங்கள் மானங்கெட்டுப் போய்விடவில்லை. கோயில் வாசலில் பூத்தொடுத்து விற்றாவது தன் மகனைக் காப்பாற்ற முடியும் என்று என் அக்காளுக்கு நம்பிக்கையிருக்கிறது’ - என்பதாகக் குமுறலோடு எழுதப்பட்டிருந்தது, சண்பகத்தின் தம்பி கடிதம். திருமலைக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. அதன்பின் ஊருக்குப் பணம் அனுப்பும் எண்ணம் அவனுக்கு வரவே இல்லை. தாயிடமிருந்து மகனைப் பிரித்து மகன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று வழக்குப் போடலாம் என்பதாகத் திருமலைக்கு யாரோ யோசனை சொல்லித் தூண்டி விட்டார்கள். அந்த யோசனையை அவன் ஏற்கவில்லை. தன்னோடு இருந்தால் பையனைக் கவனிக்கத் தனக்கு நேரமிருக்காது என்கிற பயமும், தான் வசிக்கிற ஆசை நாயகி வீட்டில் சண்பகத்துக்குப் பிறந்த பிள்ளை என்பதாலேயே அவன் அநுபவிக்க நேரும் கொடுமைகளைப் பற்றிய எண்ணமுமே திருமலையைத் தடுத்தன. தானிருக்கும் திரை உலகின் நிலைமைகள் ஒரு வளரும் சிறுவனைஎன்னென்ன செய்யுமோ என்ற தயக்கமும் உள்ளுற இருந்தது. ஏற்கெனவே பொன்னுச்சாமி அண்ணன் காலமான பின் வாழ்வின் எல்லா ஒழுக்க நெறிகளையும் கடைப் பிடிக்க இயலாமல் தாறுமாறாகச் சீரழிந்திருந்தான். திருமலை. சென்னை வாசமும் திரையுலகப் புகழும், பண வசதிகளும், மேலும் அவனைச் சீரழித்திருந்தனவே ஒழியப் பண்படுத்தவில்லை. வீடு, கார், வசதிகள், எதுவுமே அவனை மாற்றிவிடவில்லை. மேலும் மோசமாகவே ஆக்கியிருந்தன. எழிலிருப்பையும் அதனோடு தொடர்புடைய தன் நாட்களையும், சம்பவங்களையும் மெல்ல மறக்க முயன்றான் அவன். ஆனால், அந்தச் சமயத்தில் தவிர்க்க முடியாதபடி தன் இயக்க மாவட்ட மகாநாடு ஒன்றிற்காக அவன் எழிலிருப்பிற்கே செல்ல நேர்ந்து விட்டது. அவன் இல்லாமல் அந்த மகாநாட்டை நடத்துவதற்கு இயக்க முன்னணித் தலைவர்களே சம்மதிக்கவில்லை. சமூக சீர்திருத்தம், தமிழர் நலம் பேணல் ஆகியவற்றோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கும் தங்கள் இயக்கம் அவற்றோடு அமையாமல் மற்ற அரசியல் கட்சிகளைப் போலத் தேர்தலில் கலந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இயக்க ஊழியர்கள் மத்தியில் வலுத்துக் கொண்ருந்தது. அந்த எழிலிருப்பு மகாநாட்டில் கூட அது பற்றிப் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தீர்மானம் அனுப்பியிருந்தார். ஐயாவின் தலைமையிலிருந்து பிரிந்து வந்த பின்பு படிப்படியாக இயக்க ஊழியர்கள் மத்தியில் தேர்தல் சபலம் தலையெடுத்திருந்தது. பதவிகள் இல்லாமல், கட்சிப் பணியின் பிரதிபலனை அநுபவிக்க வாய்ப்பின்றி வெறும் கலாசார இயக்கமாகவே தொடர்ந்து பத்தியச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்க ஊழியர்கள் யாரும் தயாராயில்லை. ஆட்சியைப் பிடிக்கவேண்டுமானாலும், சட்டசபையில் எதிர்க் கட்சியாகப் போய் அமர வேண்டுமானாலும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாக வேண்டியது அவசியம் என்ற உணர்வு அடிமட்டத்து ஊழியர்களிடம் கூட ஏற்பட்டுவிட்டது, எழிலிருப்பு மகாநாட்டுக்கு அவன் போனான். நகரின் டி.பி.யிலிருந்த ஒரே ஓர் ஏ.சி. சூட்டில் தங்கினான் திருமலை. மினிஸ்டர் வந்தால் எந்த நிமிஷமும் காலி செய்து கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு தான் அந்த அறையை அவனுக்குத் தத்தான் டிராவலர்ஸ் பங்களாவின் கேர் டேக்கர். எழிலிருப்பு ஊர் இப்போது மாறியிருந்தது. நிறைய இடங்களில் அவனுடைய இயக்கக் கொடிகள் தென்பட்டன. ஏற்கெனவே இருந்த நிரந்தர - டூரிங் சினிமாக் கொட்டகைகளைத் தவிர மேலும் இரண்டு மூன்று புதிய சினிமாத் தியேட்டர்கள் உண்டாகியிருந்தன. நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அந்த இடங்களில் கட்டிடங்கள், அல்லது குடிசைகள் தோன்றியிருந்தன. ஒலி பெருக்கிக் கடைகள் நாலைந்து வந்திருந்தன. காரிலிருந்து கீழிறங்கி மகாநாட்டு மேடைக்குப் போகிற வழியில் தேரடியில் சண்பகம் பூ விற்றுக் கொண்டிருப்பதைத் திருமலை தன் கண்களாலேயே பார்த்தான். முன்னும் பின்னுமாக மரியாதை பந்தாவுடன் அவனை மேடைக்கு அழைத்துச் சென்ற ஆட்கள் முன்னிலையிலேயே அவனைக் கண்டவுடன் மூகத்தைத் திருப்பிக் கொண்டு காரித் துப்பினாள் அவள். அதை அவர்கள் கவனித்தார்களோ இல்லையோ அவன் கவனித்தான். தன் மேல் அவளுக்கு ஏற்பட்ட ஆத்திரம் இன்னும் தணிய வில்லை என்று தெரிந்தது. எப்படியாவது யாருக்கும் தெரியாமல் நந்தவனத்துக்கோ, பள்ளிக்கூடத்துக்கோ தேடிச் சென்று தன் பையனைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. தானிருக்கும் உயரம், தனது அந்தஸ்து, தனியே நினைத்த நேரத்துக்கு எங்கேயும் தன்னிச்சையாகக் கிளம்பி விட முடியாத நிலை எல்லாமாகச் சேர்ந்து அவனைத் தடுத்து விட்டன. சினிமாப் பிரகாசத்தால் ஊரில் அவனது கவர்ச்சி அதிகமாயிருந்தது. எல்லோரும் அவனை முன்னிலும் மிகுதியாகப் புகழ்ந்தார்கள். முகஸ்துதி செய்தார்கள். ‘நமது இயக்கச் செம்மல், தந்தையின் தனயன், அண்ணனின் அருமைத் தம்பி திரு அவர்கள் மேடையிலிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் திரு அண்ணனின் பேச்சைக் கேட்க ஆவலோடு காத்திருப்பதை நான் அறிவேன்’ - என்றெல்லாம் பாராட்டுரைகள் மேடையில் அவன் காதில் விழுந்தன. அவன் கடைசியாகப் பேசுவதற்கு முன்பு பேசிய ஒவ்வொரு வரும் தங்கள் பேச்சில் கணிசமான பகுதி அவனைப் புகழ்ந்தனர். அண்ணன் தன் சக்தி வாய்ந்த வசனங்கள் மூலம் இன்னும் இரண்டு படம் எடுத்தால் ஆட்சியையே மாற்றிக் காட்டுவோம் - என்று கூட ஒருவர் பேசினார். திருமலைக்கு உச்சி குளிர்ந்தது. அண்ணன் பிறந்த மண்ணில் நடக்கும் இந்த மாநாடு வரலாறு படைக்கப் போகிறது என்று தொடங்கிக் கட்சி தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் ஒருவர். இதே தீர்மானம் இயக்கத்தின் மாநில மாநாட்டிலும் கொண்டு வரப்படும் என்றும் அவரே கூறினார். அன்றைய மாநாட்டின் நிறைவாகத் திரு. பேசிய பேச்சை இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்து கேட்டு வாக்கியத்துக்கு வாக்கியம் கரகோஷம் செய்தனர். திருமலைக்கு ஆளுயர மாலைகளும், கைத்தறி ஆடைகளும் மலையாகக் குவிந்தன. மாநாட்டில் அவன் தன்னுடைய பேச்சை முடித்தபோது இரவு பதினொன்றே கால் மணி. நெருக்கியடித்துக் கொண்டு பேச்சைக் கேட்டார்கள். ஒர் ஆள் கூட இறுதிவரை எழுந்திருக்கவில்லை. மாநாடும் பாராட்டும் கைதட்டலும், தந்த உற்சாகமான கர்வங்கள் சண்பகம் முகத்தைத் திருப்பிக் கொண்டு காரித்துப்பியதைக் கூட மறக்கச் செய்து விட்டன. அதே கர்வத்தில் மிதந்தபடி கூட்டத்தை விலக்கி மெதுவாகக் காரைச் செலுத்திக் கொண்டு டி பி. வாசலில் வந்து இறங்கினால் அங்கே அவனது பெட்டி, படுக்கை முதலிய சாமான்கள் வராந்தாவில் எடுத்து அடுக்கப்பட்டிருந்தன. வாட்ச்மேன், ஒடோடி வந்து, “சார்! திடீர்னு நம்மூர் மினிஸ்டரே வந்துட்டாரு. வேற வழி இல்லே. உங்க சாமான்கள்ளாம் இதோ இருக்கு... நீங்க வேற இடம் பார்த்துக்க வேண்டியதுதான்...” என்றான். வந்து தங்கியிருக்கும் மந்திரி உள்பட்டணம் சின்னக் கிருஷ்ண ராஜ உடையார்தான் என்பதும் தெரிந்து விட்டது. நடுத்தெருவில் யாரோ பகிரங்கமாகத் தன்னை மூக்கை அறுத்து விட்டதுபோல ஆக்ரோஷமாயிருந்தது .திருமலைக்கு. “என்னடா பெரிய மினிஸ்டர்? நானும் ஒரு நாள் மினிஸ்டிராகி இதே மாதிரி இவன் பொட்டி படுக்கையை வராண்டாவிலே தூக்கி எறியாட்டி நான் ஆம்பளை இல்லே” - என்று வாட்ச்மேனிடம் சவால் விட்டான் அவன். |