12 திருமலையைப் போலவே இயக்கத்தில் ஈடுபாடுள்ள தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், எல்லோருமே நாடகங்களில் நடிப்பது, திரைப்படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதுவது, வெடிப்புள்ள தமிழ் நடையில் இயக்கத்திற்கான ஏடுகள் நடுத்துவது என்றெல்லாம் பல வழிகளில் முனைப்பாக இறங்கினர். காங்கிரஸாரின் மெத்தனம், அலட்சியப் போக்கு, தாய்மொழி உணர்ச்சி இன உணர்ச்சி, பிரதேச உணர்ச்சி பற்றிக் கவலையே படாமல் அவற்றைப் புக்கணித்த நிலை எல்லாமாகச் சேர்ந்து, திருமலை வகையறாவுக்கு விறுவிறுவென்று முன்னேறும் வாய்ப்புக்களை அளித்தன. அவர்கள் மொழி உணர்வே அற்றிருந்தார்கள் என்றால், இவர்கள் மொழி உணர்வே சகலமும் என்றார்கள். எழிலிருப்பில் மாவட்ட மாநாடு முடிந்து உடையாரால் ஏ.சி. ரூமிலிருந்து வெளியேற்றப்பட்டு அவமானத்தோடும் ஆத்திரத்தோடும் சென்னை திரும்பிய திருமலை சில நாட்களில் ‘திராவிட முழக்கம்’ என்றோர் பத்திரிகைக்குத் தன்னை ஆசிரியனாகவும் வெளியிடுபவனாகவும் சீஃப் பிரசிடென்சி மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்து கொண்டான். அந்தக் காலகட்டத்தில் இப்படி வேறுபல ஏடுகளும் வெளிவரத் தொடங்கின. சினிமா வேலைகளோடு பத்திரிகை வேலைகளும் சேர்ந்து கொண்டன. இயக்கத்திற்கென்று இரண்டு மூன்று தினசரி ஏடுகளும். ஏற்பட்டிருந்தன. ஆங்கில மொழி ஏடுகளும், பிரபலமான பிரதேச மொழித் தினசரிகளும் உள்ளூர்ச் செய்திகளைப் புறக்கணித்த போது திராவிட இயக்கத் தினசரிகள் உள்ளுர் மொழி இனச்செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கவர்ச்சி பெற ஆரம்பித்தன. மற்றவர்களைவிட வீச்சு நிறைந்த போர்க் குணமுள்ள துள்ளு தமிழ் நடை வேறு இவர்களைத் தனித்தன்மையுள்ளவர்களாக மக்களிடையே எடுத்துக் காட்டியது. திராவிட முழக்கமும் அப்படி நடைக்குப் பேர் பெற்றிருந்தது. அதில் ‘அதிரடி’ என்ற பகுதியைத் ‘திரு’ என்ற பெயரில் அவன் எழுதி வந்தான். முதல் இதழின் முதல் ‘அதிரடி’யில் ‘எழிலிருப்பு மாஜி ராஜாவின் ஏர்க்கண்டிஷன் சோஷலிஸம்’ - என்ற தலைப்பில் கிருஷ்ணராஜனைப் பிடிபிடி என்று பிடித்திருந்தான், இயக்கத் தொடண்டர்கள் மத்தியில் அதிரடி பகுதி மிகவும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது. பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் இயக்கத்துக்கு எதிரான எல்லோரையும் தாக்கினான் அவன். ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மந்திரிகள் தான் அவனது முதல் இலக்காயிருந்தனர். அவர்களே விமர்சனத்துக் காளாயினர். 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாநில மகாநாட்டில் இயக்கப் போக்கில் சில மாறுதல்கள் தென்பட்டன், ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் எதிர்ப்பது தங்கள் நோக்கமில்லை என்றும், அந்த இனத்தின் தன்மைகளையே - தாங்கள் எதிர்ப்பதாகவும் தீர்மானம் நிறைவேறியது. இயக்கம் தேர்தல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. தன்னுடைய ஜன்ம வைரி என்ற முறையிலும், காங்கிரஸ் அமைச்சரவையில் ஒர் ஆள் என்ற முறையிலும் சின்னக் கிருஷ்ணராஜனைத் திருமலை விடாமல் தாக்கி எழுதியும் அவர் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் எல்லோருமே அப்படிப் பெருந்தன்மையாயிருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. எதிர் முனையிலும் காரசாரமான அரசியல் ஏடுகள் தோன்றியிருந்தன. அவனையும் அவன் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் சாடு சாடென்று பதிலுக்குச் சாடின. அகப்பட்டால் அவமானப் படுத்துவதற்குக் கூடக் காத்திருந்தன. ஆட்சியிலிருந்தவர்களின் ஒழுக்கம் சம்பந்தமான விமர்சனங்களை அவர்கள் செய்த போது தாங்கள் கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை. திருமலை ஒரு தடவை வகையாக மாட்டிக் கொண்டான். மதுவிலக்கு அமுலிலிருந்த காலம். ஒர் ஊரில் மாநாட்டிற்குப் பின் இயக்க நாடகம் நடத்தி விட்டு, அவன் டி.பி.யில் தங்கியிருந்தான். அலைச்சலும் உடல் அசதியும் இளைப்பும் மிகுதியாயிருந்தன. வேண்டிய ஆள் ஒருத்தன் வெளிநாட்டுப் பாட்டில் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தான். அந்த ஊர் எழிலிருப்பு வட்டாரத்தைச் சேர்ந்தது தான். இரவு ஒன்றரை மணிக்கு மேல் அவன் நல்ல குடி வெறியில் நாடகக் குழுவைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா நடிகை ஒருத்தியுடன் ஒரே அறையில் மகிழ்ச்சியாயிருந்த போது போலீஸ் ரெய்டு என்று வந்து அறைக்கதவைத் தட்டியது. அவனுக்கோ சுயநினைவே இல்லை. எப்.ஐ.ஆர். தயாரிக்க அவனையும், உடனிருந்த பெண்ணையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முன்வந்த கான்ஸ்டபிளைக் குடிவெறியில் ஓங்கி அறைந்துவிட்டான் திருமலை. அவன் அடிதடியில் இறங்கவே விஷயம் மிகவும் பெரிதாகி விட்டது. திருமலையின் உதவியாளரும் நாடகக்குழு நிர்வாகியுமாக இருந்த கன்னையா என்பவன் போலீஸாரைத் தண்டங் கட்டிச் சரிசெய்து அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயத்தில் திருமலை இப்படி நேரடி நடவடிக்கையில் இறங்கவே தர்ம சங்கடமாகி விட்டது. அந்தச் சமயத்தில் மந்திரி கிருஷ்ணராஜன் சுற்று வட்டாரத்து ஊர்களான தம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து விட்டு எழிலிருப்புக்கே திரும்பி வருகிற தம் அசல் திட்டத்தைச் சிறிது மாற்றிக் கொண்டு நடு வழியில் இந்த டி.பி.யில் தங்குகிற எண்ணத்துடன் வந்திருந்தவர் இந்த விவரத்தை அறிய நேர்ந்தது, திருமலை அப்போதிருந்த நிலையில் சுய நினைவற்று இருந்தான். கான்ஸ்டேபிளை அறைந்து விட்டு மறுபடி படுக்கையில் படுத்து விட்டான் அவன். மந்திரி வந்திருப்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியாது. போலீஸார் மதுவிலக்கு மீறல் பற்றி குற்றிச்சாட்டுடன் ‘இம்மாரல் டிராஃபிக்’ குற்றச்சாட்டையும் சுமத்தித் திருமலையைக் கைது செய்ய ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தனர். போலீஸாரைத் தாக்கிய குற்றம் வேறு சேர்ந்து கொண்டிருந்தது. நினைத்தபடி அவர்கள் திருமலையைக் குற்றம் சாட்டிக் கையும் கனவுமாகக் கைது செய்திருந்தால் மறுநாள் காலை எல்லாப் பத்திரிகையிலும் அந்தச் செய்தி பெரிதுபடுத்தப்பட்டிருக்கும். குடித்து விட்டு ஒரு பெண்ணுடன் டி.பி.யில் விபச்சாரக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், போலீஸ் கான்ஸ்டபிளைத் தாக்கியதாகவும் செய்திகள் பிரசுரமாகியிருக்கும். தன் அரசியல் எதிரிதானே என்கிற நிலையில் மந்திரி கிருஷ்ணராஜன் அதைப் பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மந்திரி அப்படி மகிழவில்லை. மிகமிகப் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டதற்குத் திருமலையின் நாடகக் குழு நிர்வாகியே கண்கண்ட சாட்சியாக அருகிலிருந்தான். “இந்தாப்பா! இதை ஒண்னும் பெரிசு படுத்தாதிங்க. மனுஷன் குடிவெறியிலே ஏதோ தப்புப் பண்ணிட்டான். எஃப்.ஐ.ஆரைக் கிழிச்சுப் போடுங்க... ஒண்ணுமே நடக்கலேன்னு நினைச்சு விட்டுடுங்க... நான் சர்க்கிள்கிட்டப் பேசிக்கிறேன். வீணா ரசாபாசப்படுத்த வேணாம்” - என்று மந்திரி சொல்லியதையும் அதன்படி நடந்ததையும், தன் நினைவற்றிருந்த திருமயைத் தவிர மற்ற அனைவரும் அறிந்திருந்தனர். மந்திரி விரோதங்களை நினைவிற் கொண்டு அவனைப் பழி வாங்காமல் பெருந்தன்மையாக மானத்தைக் காப்பாற்றியிருந்தார். மத்திரியே தலையிட்டதால் போலீஸார் மேற்கொண்டு அவனையோ அவன் ஆட்களையோ தொந்தரவு செய்யவில்லை. விட்டு விட்டுப் போய் விட்டார்கள். மறுநாள் பொழுது விடிந்ததும் கன்னையா இந்த, விவரங்களை எல்லாம் திருமலையிடம் கூறி, “மந்திரி வந்து தான் ரொம்பவும் பெருந்தன்மையா உங்களைக் காப்பாத்தினாரு இல்லாட்டி ரசாபாசமாப் போயிருக்கும்” - என்றான். இதற்குத் திருமலை கூறிய பதில் கன்னையாவை மட்டுமில்லாமல் உடனிருந்த அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்தது. “நீ அடிக்கிற மாதிரி அடி! நான் வந்து காப்பாத்துற மாதிரி காப்பாத்திடறேன்னு மந்திரியே போலீஸாரைத் தூண்டிவிட்டு அனுப்பி வைத்து விட்டு பின்னாடியே வந்திருப்பாரு” - என்றான் திருமலை. தனது எதிரி பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்க முடியும் என்பதை அவன் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ சிறிதும் தயாராயில்லை. உலகில் எல்லாமே வஞ்சம், சூது, சூழ்ச்சி ஆகிய அடிப்படைகளில்தான் திட்டமிடப்பட்டிருக்க முடியும் என்று அவன் நம்பினான். தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் வைத்தே மற்றவர்களையும், மற்றவற்றையும் கணித்தான் அவன். தன் எதிரி நல்லவனாக இருக்கமுடியாது, கூடாது என்பது அவனது தீர்மானமான எண்ணமாயிருந்தது. “உள்பட்டணத்துக்குப் போயி யாருக்கும் தெரியாமக் காதும் காதும் வச்சாப்பிலே அவருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டுப் போயிடலாங்க” - என்று உதவியாளர் கன்னையா கூறிய யோசனையைத் திருமலை ஏற்கவில்லை. “நீ சும்மாயிரு! உனக்கு இந்த உள்பட்டணத்துக் காரனுவளைப் பத்தித் தெரியாது. கடைஞ்செடுத்த அயோக்கியனுவ. சோழியன் குடுமி சும்மா ஆடாது. ‘அதிரடி’யிலே விடாம இவனுகளைத் தாக்கி எழுதிறேனில்லே. பேரம் பேசி அதை நான் எழுத விடாமப் பண்றதுக்கு இப்போ இப்படி அடிப் போடறாங்க-”
“அப்பிடித் தோணலிங்க... நிஜமாகவே நல்லெண்ணத்தோடே தான் பண்ணின மாதிரித் தோணுதுங்க... சமய சஞ்சீவி மாதிரி மினிஸ்டர் மட்டும் அந்த நேரத்துக்கு வரல்லேன்னா... காலம்பரப் பேப்பருங்களிலே எல்லாம் தாறுமாறா நியூஸ் வந்திருக்கும்.”
“கன்னையா! நீ சும்மாயிரு. இது அரசியல். உனக்குப் புரியாது” என்று ஒரே வாக்கியத்தில் அவன் வாயை அடைத்துவிட்டான் திருமலை. ‘அரசியல் வாதியாயிருந்தால் ஒரு சரியான விஷயத்தைக் கூடத் தவறாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது’ என்று எரிச்சலோடு தனக்குள் முணுமுணுத்தபடி சும்மாயிருந்து விட்டான் கன்னையா. ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே’ என்ற பழைய பாட்டுத்தான் கன்னையாவுக்கு நினைவு வந்தது. “எங்களுக்குள்ளார இருக்கிற விரோதம் ரொம்ப டீப்! உனக்குப் புரியாது கன்னையா! நான் உள் பட்டணத்திலே அரண்மனைக்குள்ளே நுழைஞ்சாலே என்னைத் தீர்த்துக்கட்டிடுவாங்க” -என்று திருமலை மறுபடியும் வற்புறுத்தி சொன்னான். இறுதி வரை தனக்கும் ஜமீன் குடும்பத்துக்கும் கடினமான விரோதம் இருப்பதாகப் பாவிப்பதையே அவன் விரும்பினான். அந்தப் பாவனை அவனுக்கு வேண்டியிருந்தது. அந்தப் பாவனையிலிருந்து சிறிது நெகிழ்ந்தோ இளகியோ, தணிந்தோ, போவதுகூடப் பாவம் என்று அவன் எண்ணினான். விரோதத்தில்தான் அவன் வளர்ந்தான். விரோதத்தில் தான் அவனது அரசியல் சார்பு தீர்மானமாயிற்று. விரோதத்தில்தான் அவன் பேச்சு, எழுத்து, வளர்ச்சி, புகழ் எல்லாமே இருந்தன. அந்த விரோதத்தை இன்னும் விட்டு விட அவன் தயாராயில்லை. விரைவில் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் சின்ன உடையாரை எதிர்த்து அவன் சட்டசபைக்குப் போட்டியிட வேண்டுமென்று கட்சி முடிவு செய்தது. முதல் முதலாகச் சட்டமன்றத் தேர்தலுக்கு நின்ற கட்சியின் முக்கியப் புள்ளிகளில் அவனும் ஒருவனாயிருந்தான். பரம்பரையும் செல்வாக்கும் உள்ள ஒரு பெரும் புள்ளியை எதிர்த்து அவன் வெல்ல முடியுமா என்று பயமும் சந்தேகமும் பொதுமக்களில் பலருக்கு இருந்தன. தேர்தலில் நிற்கும்போதே சின்ன உடையார் மந்திரியாயிருந்தார். பதவியின் உயரம் வேறு அவருக்கு இசைவாயிருந்தது. திருமலை மட்டும் பயப்படாமல் துணிந்து நின்றான். சின்ன உடையாரைப் :பழி வாங்கும் வெறிநெருப்பு அவனுள் எப்போதும் போல் அணையாமல் கனன்று ஜ்வலித்துக் கொண்டிருந்தது. |