17 அவன் வெட்டுக் காயத்தோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு மாலை வேளையில் உள்பட்டணம் மாஜி ஜமீன்தாரும் அப்போதைய காங்கிரஸ் அமைச்சருமான சின்ன உடையாரும், அவர் மனைவியும் அவனைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டுப் போக வந்திருந்தார்கள். “ஒரே ஊர்க்காரங்க, அதுனாலே பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக வந்திருக்காரு. பெரிய மனுஷன் என்ன இருந்தாலும் பெரிய மனுஷன்தான்” - என்று திருமலையைச் சேர்ந்தவர்களே அதை வியந்தரர்கள். திருமலைக்கோ இதில் வழக்கம் போல் தன் எதிரியைப் பழி வாங்கி முடித்து விட்டாற் போன்ற திருப்திதான் நிலவியது. எங்கோ உச்சாணிக் கொம்பில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டிருந்த கிருஷ்ணராஜ உடையார் தன்னைத் தேடி வந்தது தன் இயக்கத்து ஆட்களிடம் தன் மரியாதையை உயர்த்தியிருப்பதாக உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அவனுக்குள்ளே நிரம்பியிருக்கும் குரோதத்தையும், துவேஷத்தையும் அகற்றி விட வேண்டுமென்று முயன்றார் உடையார். அவனோ அவர் தன்னிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வது, தன்னைத் தேடி வருவது: இவற்றாலெல்லாம் தனக்கு மற்றவர்களிடம் அந்தஸ்து உயருவதை அங்கீகரித்துக் கொண்டு அவர் மேல் தழும்பேறியிருந்த குரோதத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியில் வெட்டுக் காயத்துடன் படுத்திருந்ததையும், புது மனைவியான அந்த இளம் நடிகை அருகே அமர்ந்து கண்ணிர் உகுப்பதையும் கச்சிதமாகப் பல கோணங்களில் தேர்ந்த சினிமாக் கேமரா நிபுணர்களை வைத்துப் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டான். எலலோரும் இதைப் போய்ப் புகைப்படம் எடுப்பானேன் என்று யோசித்தார்கள். அவனோ எதைச் செய்தாலும் ஒரு திட்டமிட்ட மனத்தோடு தீர்மானமாகச் செய்தான். இந்தி எதிர்ப்புப் போர் என்கிற பிரளயம் நடந்து முடிந்தபின் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருந்த மாதங்களில் திருமலைக்குத் தீவிரமான அரசியல் பணிகள் இருந்தன. அவன் நிறைய சுற்றுப்பயணங்கள் செய்யவேண்டிருந்தது. அப்படித் திருமலை சுற்றுப்பயணத்தில் இருந்த போது ஒரு சினிமா மஞ்சள் பத்திரிகையில் படித்த கிசுகிசு ஒன்று அவனை நிம்மதியிழக்கச் செய்தது. அவன் மனைவியும் பிரபல நடிகையுமான அந்த இளம் வயது அழகி வேறு ஒரு நடிகனுடன் நெருக்கமாகிக் கொண்டிருப்பதாக எழுதித் திரையில், அந்த நடிகனும் அவளும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சியை வேறு அந்த ஏடு பிரசுரித்திருந்தது. ஏற்கெனவே நிரந்தரமாக அவள் மேல் திருவுக்குச் சந்தேகம் உண்டு. முன்னதாகவே ஒரு முறை துரோகம் செய்ததவள். மறுபடியும் துரோகம் செய்ய மாட்டாள். என்பது என்ன உறுதி? பெண்தானே? அதுவும் சினிமா உலகைச் சேர்ந்தவள். தவிர்க்க முடியாத ஓர் இரகசியக் காரணத்துக்காகத் தன்னிடம் கட்டுப்பட்டுக் கிடக்கிறவள் உண்மையில் விசுவாசமாகத்தான் இருந்தாக வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏதோ அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் தாலி கட்டிய மனைவி பாழ் போகிற மாதிரி இந்த ‘ஸெலுலாய்ட்’ பத்தினியை அவன் எதிர்பார்த்திருக்கக் கூடாது. இவளது இணையிலாக் கவர்ச்சியும், மாபெரும் சொத்தும் ரொக்கமும் இனி வேறு கைக்கு இவள் போய் விடக் கூடாது என்பதில் திருவை அதிக அக்கறை கொள்ளச் செய்திருந்தன. நெருப்பில்லாமல் புகையாதென்று தோன்றியது. உடனே இரண்டு நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டு முன்னறிவிப்பின்றி மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்னை சென்றான் திரு. பங்களாவுக்குள் அவன் நுழையும் போதே வாசலில் கூர்க்கா பயபக்தியோடு அருகே வந்து, “அம்மா ஹைதராபாத் போயிருக்காங்க... அங்கே ஒரு வாரம் தெலுங்குப்பட அவுட்டோர் கால்ஷீட்” என்றான். உள்ளே வேலைக்காரி, சமையல்காரன், மற்ற எடுபிடிகள் எல்லாம் இருந்தார்கள். சரி வந்ததுதான் வந்தோம், உடனே திரும்பினால் சரியாயிராது என்று ஒரு நாள் அங்கே தங்கினான். மனதுக்குள் ஒரே சந்தேகம் குடைந்தது. இரவு படுக்கையறையில் அவளுடைய தனி உபயோகத்திலிருந்த ஸ்டீல் பீரோ, வாட் ரோப், சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் போலீஸ் ரெய்டு போலச் சோதனை போட்டதில் தெலுங்கில் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்தன. அவனுக்குத் தெலுங்கு தெரியாது. உடனே தெரிந்து கொள்ள வேண்டும்போல் துடிப்பாகவும், தவிப்பாகவும் இருந்தது. அப்போது இரவு மணி பதினொன்றரை. வீட்டுக்குள் இருக்கிற வேலைக்காரி ஒருத்திக்கே தெலுங்கு நன்றாகத் தெரியும். அவளைப் படிக்கச் சொல்லிக் கடிதங்களின் சுருக்கத்தை அவுளுக்குத் தெரிந்த அறைகுறையான உடைசல் தமிழில் சொல்லச் செய்தால் கூடக் கடிதங்களின் சாராம்சம் புரிந்து விடும். ஆனால் அந்த வேலைக்காரி இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இப்படி அவளுக்கு வந்த கடிதங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்ட விவரத்தைத் தன் எஜமானியிடம் சொல்லாமல் இருக்கமாட்டாள். அதனால் இந்த வீட்டோடு தொடர்பில்லாத யாராவது ஒரு மூன்றாவது ஆளைக் கொண்டு கடிதங்களைத் துப்பறிய வேண்டுமென்று திட்ட மிட்டான். பரபரப்பை அடக்கிக் கொண்டு அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. எப்படியாவது உடனே இந்தக் கடிதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டாக வேண்டும் என்கிற ஆவலை அவனால் அடக்கவும் முடிய வில்லை, தடுக்கவும் முடியவில்லை. தியாகராய நகரில் ஒரு தெலுங்குப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் ஆசிரியரை அவனுக்கு நன்றாகத் தெரியூம், ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தைத் தமிழில் ‘டப்’ செய்து கொடுக்கிற பணியில் அவர் அவனுக்கு உதவியாயிருந்திருக்கிறார். இன்று இந்த நள்ளிரவில் போய் அவரை எப்ப்டி எழுப்புவது? ஆனால் அவனைப் பொறுத்தவரை இன்னும் பல சான்ஸ்களை அவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்ருக்கிற அவர் எப்போது எழுப்பினாலும் வருத்தப்பட. மாட்டர். அவன் கடிதங்தளை எடுத்துக் கொண்டு காரில் தியாகராயநதர் வைத்தியநாதய்யர் தெருவை நோக்கிப் புறப்பட்டுப் போனா அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் ஊரில் இல்லை. ஏதோ வேலையாக நெல்லூர் போயிருக்கிறார் என்று தூக்கக் கிறக்கத்தோடு கதிவைத் திறந்த அவர் மனைவி சொன்னாள். அவளையே கடிதங்களைப் படிக்குமாறு கெஞ்சினான், அகாலத்தில் காரில் வந்து இறங்கி அவுட் ஹவுசுக்குள் நுழைந்து பேசும் ஒரு சினிமா ஆளே நாலு தரம் அப்படி ஒரு வீட்டுக்குத் தேடிவந்து விட்டால் எத்தகைய அபவாதமும் சுலபமாக எழுந்து விடும் என்று பயந்தாள் அந்தப் பெண். மாட்டேனென்று மறுத்து சொல்லி அவனைத் திருப்பியனுப்பினால் கணவன் வந்து அதற்காகக் கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் பயமாக இருந்தது. வாயிற்புறத்து விளக்கைப் போட்டு அந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றபடியே அவன் கொடுத்த கடிதங்களைப் படித்து விவரம் சொன்னாள் ஆசிரியரின் மனைவி. “இதை வச்சுக்குங்கம்மா; நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்னு அவரு வந்ததும் சொல்லுங்க” - என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. முதலில் அந்தப் பெண் அதை வாங்கத் தயங்கினாள். அவன் மீண்டும் வற்புறுத்தவே அக்கம் பக்கம் பார்த்து விட்டு மிரட்சியோடு அதை வாங்கிக் கொண்டான். திருமலை குழம்பிய மனத்தோடு திரும்பினான். கடிதங்களிலிருந்து கிடைத்த சில வாக்கியங்கள் அவனை எச்சரித்தன. ‘நீ எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப் பயந்து உன் வாழ்க்கையையும், அளவற்ற வருமானத்தையும் ஓர் அரவ வாடுவுக்காக வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறாய்? ஒரு நல்ல கிரிமினல் வக்கீலை எனக்குத் தெரியும். கோர்ட், கேஸ் என்று வந்தால் கூட உன் முன்னிலையில் அவன் தான் கொலையைச் செய்தான் என்று நிரூபித்து விட முடியும்’ - என்பதாக ஒரு கடிதத்திலும், வக்கீலைச் சந்தித்துக் கேஸ் விஷயமாகப் பேசியதாக மற்றொரு கடிதத்திலும், விரைவில் அதே வக்கீலுடன் சென்னை புறப்பட்டு வரப் போவதாக இன்னொரு கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது மூன்று கடிதங்களிலுமே எழுதியவர் விலாசம் ஒன்றாகவே இருந்தது. குப்பையசெட்டி, யார்ன் மெர்ச்சன்ட், சாயிநகர் எக்ஸ்டென்ஷன், ஹைதராபாத். இப்போது அவள் ஹைதராபாத்தான் போயிருக்கிறாள் என்பதும் நினைவுக்கு வந்தது. தங்கமுட்டையிடும் விலைமதிப்பற்ற பறவை தன் கைவசமிருந்து பறந்து போய் விடுமோ என்று அவனுள் கவலை பிறந்து அரிக்க ஆரம்பித்தது. அவள் முன்னிலையிலேயே தான் கொலை செய்தது போன்ற பரம இரகசியங்களை எல்லாம் பிறன் ஒருவனிடம் அவள் கலந்து பேசியிருக்கிறாள் என்பதே பொறுத்துக் கொள்ள முடியாத குற்றமாயிருந்தது. இதையெல்லாம் வெளிப்படையாகவே எடுத்துப் பேசி அவள் திரும்பியதும் சண்டை போடலாமா அல்லது கமுக்கமாக வைத்திருந்து மற்ற ஏற்பாடுகளையும் பாதுகாப்புக்களையும் பக்காவாகச் செய்து கொள்ளலாமா என்று சிந்தித்தான். கமுக்கமாக இருப்பதே நல்லதென்று தோன்றியது. பங்களாவில் இப்போதிருக்கும் சகல வேலையாட்களையும் கணக்குத் தீர்த்து அனுப்பி விட்டு உடனே அந்த இடங் களில் தன் ஆட்களை நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தான் அவன். இது அவளை மற்ற வெளித் தொடர்புகளிலிருந்து பாதுகாக்கவும், ஒற்றறியவும் பயன்படும் என்பது அவன் நம்பிக்கையாயிருந்தது. கொலை நடந்த அன்று கேட்டில் காவலாளியாயிருந்த கூர்க்கா அவனாகவே வேலையை விட்டுவிட்டு நேபாளத்துக்குப் போய் விடப் போவதாகத் தெரிவித்தான். கூடவே கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் திருமலை. மற்ற வேலைக்காரர்களுக்கும் கணக்குத் தீர்த்து ஒவ்வொரு நிமிஷமும் உள்ளே என்ன நடக்கிறது. யார் வருகிறார்கள், போகிறார்களென்று தனக்குச் சொல்லக் கூடிய நம்பிக்கையான புதிய ஆட்களை நியமித்தும் முடித்தாயிற்று. இனி அவனறியாமல் எந்தத் தகவலும் வெளியே போக முடியாது. உள்ளே வர முடியாது என்று ஆகியிருந்தது. சுற்றுப்பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு இரண்டு நாளில் திரும்பலாம் என்று வந்தவன் பத்துநாள் வரை திரும்ப முடியாமல் ஆகிவிட்டது. ஒரு வாரம் கழித்து அவள் ஹைதராபாத்திலிருந்து திரும்பி சென்னை வந்தபோது பங்களாவில் இருந்த வாயிற்காவலன் முதல் சமையற்காரி வரை புதிதாயிருந்தார்கள். ‘இவள்தான் எஜமானி’ - என்று அவளையே அவர்களுக்கு அவன் அறிமுகம் செய்து வைக்கவேண்டிய நிலையிலிருந்தாள் அவள். ஏற்கென்வே ஒரு விசுவாசமான தெலுங்கு வேலைக்காரி ஹைதராபாத் வந்து நடந்தவற்றை எல்லாம் சொல்லி விட்டுத்தான் போயிருந்தாள். தன் வீட்டிலேயே சகல வசதிகளுடனும் தான் சின்றவைக்கப்பட்டிருப்பது அவளுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தன் தனியறையில் சூட்கேஸில் தான் வைத்திருந்த சில கடிதங்களைக் காணவில்லை என்பதை வைத்து அவளால் நடந்திருப்பவற்றை அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. அவள் அவனிடம் அதிகம் பேசவேயில்லை. “மறுபடி டூர் போகிறேன். வர ஒரு வாரம் ஆகும்” - என்று திருமலை சொல்லிக் கொண்டு புறப்பட்டபோது, “ஒரு நிமிஷம் நில்லுங்க... உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்...” என்றாள் அவள். “என்ன? கேளேன்?” - என்று ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டு அவளெதிரே நின்றான் திரு. அவளுக்கோ உள்ளுற ஒரே எரிச்சல், “இது வீடா? இல்லே ஜெயிலான்னு புரியலே...?” “நாம எப்படி எடுத்துக்கிறோமோ அப்பிடித் தான்.”
சிரித்துக்கொண்டே தான் பதில் சொல்லி விட்டுப் போனான் அவன். பொதுத் தேர்தலுக்கு நாள் நெருங்கியது அவன் எழிலிருப்பில் வழக்கமாக நிற்கிற தொகுதியிலேயே நிற்கவேண்டுமென்று ஏற்பாடாயிற்று. ‘மொழிப் போரில் விழுப்புண்பட்ட வீரர் - அழிப்போரை எதிர்த்தழிக்கும் ஆற்றல் மறவர்’ - என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெட்டுக் காயத்தோடு அவன் மருத்துவமனையில் படுத்திருந்த காட்சியைக் காட்டும் சுவரொட்டிகள் விளம்பரத்துக்காகத் தயாராயின. இந்த முறை சின்ன உடையாரை எப்படியும் டிபாஸிட் இழக்கச் செய்துவிட வேண்டும் என்று முனைப்பாக வேலைகளைச் செய்தான் அவன். மாணவர்கள் எல்லா இடங்களிலும் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தையும் விழுந்து கும்பிட்டு வணங்கி ஆளும் கட்சிக்கு ஒட்டளிக்கக் கூடாதென்று வேண்டினார்கள். விலைவாசிகள் ஏறியிருந்தன. அரிசி, கோதுமை கடைகளில் கிடைக்கவில்லை. திருமலை வகையறா இயக்கத்தினர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவதாக வாக்களித்தார்கள். பிரசங்கம் மக்களை வசியப்படுத்திக் கவரக்கூடிய வகையில் இருந்தன; மக்களே மெல்ல மெல்ல மயங்கினார்கள்.
|