2 “ஐயா அரைத்துப் போட்டிருக்கிற பச்சிலைகளும், கட்டியிருக்கிற பட்டை மருந்துகளும் உங்களைக் குணப் படுத்துமோ இல்லையோ இந்தப் பூவாசனையும், சந்தன மணமுமே சீக்கிரம் குணப்படுத்தி விடும்னு நினைக்கிறேன்.” கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அவனைப் பார்த்துச் சொன்னாள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த பண்டாரத்தின் மகள் சண்பகம். கட்டிலுக்கு இப்பால் நின்றபடி பண்டாரம் அப்போது சந்தனம் அறைத்துக் கொண்டிருந்தார். தன் வலது கையால் தலையைத் தாங்கி மூட்டுக் கொடுத்துக் கொண்டே அவள் பூத்தொடுக்கும் அழகை இரசித்தபடி கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த திருமலை அவள் கூறியதைக் கேட்டுப் பதில் எதுவும் கூறாமல் புன்னகை பூத்தான். அவள் என்ன சொல்லியிருந்தாளோ அதை ஒப்புக் கொண்டு அங்கீகரிப்பது போலிருந்தது அந்தப் புன்னகை. இயல்பாய் ஏற்கெனவே அழகாயிருந்த சண்பகம் தரையில் அமர்ந்து பூத்தொடுக்கும் போது மேலும் அழகாகக் காட்சியளித்தாள். நாட்கள் இலையுதிர் காலத்துச் சருகுகள் போல் உதிர்ந்து விட்டன. எந்தப் பிறவியில் செய்திருந்த புண்ணியமோ ஜமீன் ஆட்கள் அவனை அடித்து உதைத்துச் சுயநினைவற்ற நிலையில் தேரடி மைதானத்தில் கொண்டு வந்து போட்டு விட்டுப் போன போது பண்டாரமும் அவர் மகளும் அவனை முதலில் பார்த்து இருள் புலரு முன்பே நந்தவனத்து மண்டபத்துக்குக் கொண்டு வந்து சேர்ந்திருந்தார்கள். பெரிய காடு போல் பரந்திருந்த அந்த நந்தவனத்தின் நடுவே பூத்தொடுக்கவும் சந்தனம் அரைக்கவும் பயன்பட்ட அந்த மண்டபத்தில் அவன் தலைமறைவாக தங்கிக் குணம் பெற முடிந்தது. சண்பகம் சொல்லியிருந்தது போல் மனமும், உடலும் நலிந்து போயிருந்த அவனைப் பசுமை கமகமக்கும் சுத்தமான அந்தக் காற்றும், மலர்களும் சந்தனமும் இடைவிடாமல் மணக்கும் அந்த மண்டபமும் தான் குணப்படுத்தியிருந்தன. பூச்செடி கொடி மரங்களைத் தவிர நந்தவனம் நிறைய மூலிகைகள் மருந்துப் பச்சிலைகளை வளர்த்திருந்தார் பண்டாரம். பூத்தொடுப்பது தவிர நாட்டு வைத்தியம், மாந்த்ரீகம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து ஆகியவற்றிலும் முத்துப் பண்டாரத்துக்கு ஈடுபாடு உண்டு.
“நீ கொஞ்ச நாளைக்கு இந்த நந்தவனத்துக்குள்ளேயே தலைமறைவா இருந்துக்க! அதுதான் உனக்கு நல்லது தம்பி! உன் உயிருக்குக் கருக்கட்டிக்கிட்டு அலையப் போறாங்க” - பண்டாரம் அவனை எச்சரித்தார்.
“நான் உயிருக்குப் பயப்படலை! உலகத்திலே எவ்வளவு காலம் இருக்கணும்னு முடிஞ்சிக்கிட்டு வந்திருக்கமோ அவ்வளவு காலம் நம்மை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. என்னிக்குப் போகணும்னு இருக்கோ அதுக்கு மேலே கால் நாழி கூட இருந்துறவும் போவதில்லே.” “இந்த வேதாந்தப் பேச்செல்லாம் மூட்டை கட்டி வையி தம்பீ! இப்போ நீ ரொம்ப முன் யோஜனையோடவும் ஜாக்ரதையாவும் நடந்துக்க வேண்டிய நேரம். உன் பட்டணத்து உடையாருங்க பெரிய போக்கிரிங்க. பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டாங்க.” “நானும் அதே பெரிய உடையாருக்குப் பிறந்த மகன் தான்.” “அந்த வீறாப்பெல்லாம் இப்போ வேணாம்! அதுக்கெல்லாம் இது சமயமில்லே தம்பீ!” இதமாகப் பேசி முத்துப் பண்டாரம் அவனை நிதானப்படுத்தினார். அவருடைய வயதும் பக்குவமும் நடைமுறை வாழ்க்கையின் ஞானங்களை அவருக்குப் போதிய அளவு அளித்திருந்தன. ‘அடித்துப் போட்டு விட்டார்கள், அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்ற உணர்வுக் கொந்தளிப்பில் அவன் இருந்தான். அவர்கள் நயவஞ்சமாக நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் எழுப்பித் தன்னை அடித்து உதைத்து அவமானப்படுத்தியது போல் யாருக்கும் தெரியாமல் நடுநிசிக்கு மேல் மதில் சுவர் ஏறிக் குதித்து உள் பட்டணத்தில் புகுந்து சின்னக் கிருஷ்ண ராஜ உடையார் என்ற கிருஷ்ணராஜைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து விட வேண்டும் போல் திருமலையின் கைகள் துறுதுறுத்தன. பண்டாரமும், சண்பகமும் பக்கத்திலேயே இருக்கவில்லையானால் அவன் எந்தப் பைத்தியக்காரத்தனமான முடிவுக்கும் சுலபமாக வந்திருப்பான். அவனுடைய உடம்பிலிருந்த காயங்கள், மனத்திலிருந்த பழிவாங்கும் வெறி, குரோதம் எல்லாவற்றையும் அவர்கள் தான் மெல்ல மெல்லக் குணப்படுத்தினார்கள். ஆற வைத்தார்கள். உலகில் மனிதர்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் எல்லாம் மிகப் பெரிய மருந்து அன்புதான். அன்பும் பிரியமும் உள்ளவர்களின் நெருக்கமும், அண்மையும் எத்தனை பெரிய நலிவையும், நசிவையும் கூடச் சரிக்கட்டி விட முடியும். கூர்ந்து கவனித்தால் மிகப்பல வேளைகளில் மனிதன் ஏங்குவதும், ஏங்க வைப்பதும் உண்மை அன்புக்காகத்தான் என்பது புரியும். இந்த விதமான அன்பு உள்பட்டணத்தில் யாரிடமிருந்தும் வாழ்வின் எந்த விநாடியிலும் அவனுக்கு இதுவரை கிடைத்ததில்லை. நந்தவனத்தில் அப்படி அன்பு சுலபமாகவும், இயல்பாகவும் கிடைத்தது. அவன் யார், தனக்கு என்ன உறவு ஆக வேண்டும், நாளைக்கு அவனால் தனக்கு என்ன ஆகப் போகிறது என்றெல்லாம் யோசித்துக் கணக்குப் பார்க்காமல் பண்டாரமும் அவர் மகளும் அவனைக் காப்பாற்றி ஆதரித்து உதவினார்கள். அவர் குடும்பம் முழுவதுமே அவனுக்காக உதவியது. உள்பட்டணத்துப் பெரிய புள்ளிகள் விரோதம் காரணமாக அடித்துக் கொண்டு வந்து போட்டு விட்டார்கள் என்று தெரிந்தாலே அந்த ஊரில் மற்றவர்கள் அடிபட்டவன் பக்கத்தில் வரக் கூடப் பயந்து ஒதுங்கிப் போய் விடுவார்கள். உடையார்களுக்கு வேண்டாதவனுக்குத் தாங்கள் உதவினால் தங்களுக்கு என்ன ஆபத்து வருமோ என்று மற்றவர்கள் நினைக்கிற அளவு கெடுபிடி உள்ள ஊர் அது. எல்லா விஷயமும் தெரிந்த பின்பும் பண்டாரம் அவனை நந்தவனத்திலிருந்து வெளியே போகச் சொல்லித் துரத்திவிடவில்லை. ஒதுக்கப்படுகிறவனை ஒடுக்கப்படுகிறவனை - வலுவான மனிதர்களினால் புறக்கணிக்கப்படுகிற எளியவனைக் காப்பாற்றி உதவ வேண்டுமென்ற அவரது மனிதாபிமானம் அவனை வியப்பில் ஆழ்த்தியது. நந்தவனத்து முத்துப் பண்டாரம் நாலைந்து மாதக் காலம் அவனை நந்தவனத்துக்குள்ளிருந்து வெளியே போவதற்கே அனுமதிக்கவில்லை. அவன் உயிர் வாழ வேண்டுமென்பதில் அவனை விட அதிக அக்கறை காட்டினார் அவர். பண்டாரத்தின் குடியிருப்பும், நந்தவனத்தின் மற்றொரு பகுதியில் உள்ளேயே இருந்தது. அவனையும் தன் குடும்பத்தில் ஒருவனைப் போல் சேர்த்துக் கொண்டு வேளாவேளைக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாற்றினார் பண்டாரம். காயங்கள் ஆறி உடம்பு தேறுகிற வரை பூக்கட்டும் மண்டபத்தில் அவன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலுக்கே சாப்பாடு தேடி வந்து விடும். சண்பகம் தான் கொண்டு வருவாள். உடம்பு தேறி எழுந்து நடமாடத் தொடங்கிய பின் அவன் பண்டாரத்தின் வீட்டுக்கே போய்ச் சாப்பிடத் தொடங்கினான். அங்கே அவர்களுடைய வேலைகளை மெல்ல மெல்ல அவனும் பங்கிட்டுக் கொண்டு செய்யத் தொடங்கிய போது, “தம்பீ! நீ இப்பிடி எல்லாம் சிரமப்படணும்கிறதில்லே...” என்று பண்டாரம் உபசாரமாக மறுத்ததை அவன் ஏற்கவில்லை. ஏக்கர்க் கணக்கில் மல்லிகையும், முல்லையும், ரோஜாவும், பூத்துக் குலுங்கும் அந்தப் பெரிய நந்தவனத்தில் அதிகாலையில் பூக்களைக் கொய்வது தொடங்கிப் பல வேலைகளைத் திருமலையும் தானாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். சண்பகத்திடம் பூத்தொடுக்கக் கற்றுக் கொண்டான். சந்தனம் அரைத்தான். அது நல்லதோர் உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அதிகப் பருமனில்லாமல் வெடவெட என்றிருந்த அவன் உடல்வாகு பாக்குமரம், தென்னை மரம் ஏற வசதியாயிருந்தது. பாக்குக்குலை, தேங்காய், இளநீர் பறிக்கிற வேலையையும் அவன் மேற்கொண்டான். மனிதர்களின் துவேஷம், வஞ்சகம், வெறுப்பு, சொத்து, ஆசை, குரோதம், கொலை வெறி இவற்றை எல்லாம் உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகளிடம் பார்த்துப் பார்த்துச் சலித்திருந்த அவனுக்குப் பூக்கள், செடி, கொடிகள், பசுமை இவற்றினிடையே ஊடாடுவது மிகவும் பிடித்திருந்தது. “உனக்குப் பிடித்தால் நீ இங்கேயே இருக்கலாம்! எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் நான் ஏதோ உன்னைக் காப்பாத்தினேன் என்பதற்காக இங்கேயே நந்தவனத்துக்குள் ஒரு வேலையாளாக வைத்துக் கொண்டதாக என்னைப் பத்தி நீ தப்பா நினைக்கப்படாது பாரு தம்பீ! அதனால தான் மனசு விட்டுப் பேசறேன். வெளியூருக்கு எங்காவது போய் நீ வேற தொழில் பண்றதுன்னாலும் போகலாம்... இங்கே தான் உன்னைத் தலையெடுக்க விட மாட்டாங்க... இந்த ஊர் அப்பீடி...” என்ற தயக்கத்தோடு அவனிடம் ஒரு நாள் கூறினார் பண்டாரம். திருமலை உடனே அவருடைய அபிப்ராயத்தை மறுத்து விட்டான். “நான் இப்பச் சொல்ற வார்த்தையை உறுதியா வச்சுகுங்க! என்னைப் பெத்த தாய் மேலே சத்தியம் பண்ணிச் சொல்றேன். நான் இந்த ஊரை விட்டுப் போகப் போறதில்லே. எந்தத் தேரடியிலே என்னை அடிச்சுப் போட்டாங்களோ, அங்கேயிருந்தே நான் யாருன்னு காமிக்கிறேனா இல்லியா பாருங்க...” “எனக்கென்னவோ பயமாயிருக்குது தம்பீ! இது படு போக்கிரிப்பய ஊரு...!” “இருக்கட்டுமே! ஊர் போக்கிரிப்பய ஊருன்னா நாம அதைவிடப் பெரிய போக்கிரியா ஆயிட்டாப் போவுது!...” “உள்பட்டணத்தை எதுத்துக்கிட்டா அது எப்படித் தம்பீ முடியும்?” “முடியுதா இல்லியா பாருங்களேன்? வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போயிட்டான்னா - உள்பட்டணத்து வாசிங்க கதி அதோ கதிதான். வெள்ளைக்காரன் போகத்தான் போறான்... உள்பட்டணம் உடைஞ்சி போய் உடையாருங்க வெளியே பிச்சைக்காரனுங்களா வந்து அலையத் தான் போறாங்க... பார்த்துக்கிட்டே இருங்க... இது நடக்கத்தான் போகுது...” “ஐயையோ! நாம எதுக்கு கெட்டது நினைக்கணும்? நல்லதாகவே நினைப்போமே... அவங்க பிச்சை எடுத்த நமக்கு என்ன ஆச்சு? கடவுள் புண்ணியத்துலே அவுங்க நல்லாவே இருக்கட்டும்ப்பா...” “வரவரக் கடவுள், சாமி, பூதம்லாம் கூடப் பணம் படைச்சவனுடைய கையாளுங்க மாதிரித்தான் தோணுது. ஏழைக்கு நல்லது செய்யக் காணோம். ஏழையைத்தான் மேலே மேலே சோதிக்குதுங்க...” “அப்படிச் சொல்லாதப்பா தம்பீ!” “எனக்கென்னமோ வரவர அப்படித்தான் தோணுது. இல்லேன்னா எனக்கு இந்தக் கெடுதல் பண்ணினவங்களை இதுக்குள்ளாரப் பாம்பு பிடுங்கியிருக்க வேணாமா?” “தெய்வம் நின்று தான் கொல்லும் தம்பீ! நம்மை மாதிரி அவசரப்படாது...” திருமலை பண்டாரத்திற்குப் பதில் எதுவும் கூறவில்லையானாலும் அவர் கூறியதை ஏற்காத பாவனையில் ஏளனமாகச் சிரித்தான். அவன் உணர்வுகளில் ஒருவிதமாக முரடு தட்டிப் போய் இறுக்கம் வந்திருந்தது. பேச்சில் அது புலப்பட்டது. அவமான உணர்வும், குரோதமும், துவேஷமும், அவனைக் கல்லாக்கியிருந்தன. மற்றவர்கள் ஏற்பதை எல்லாம் விரைந்து மறுக்க வேண்டும் என்பது போன்ற ஒரு வேகத்தை அவனுள் மூட்டி விட்டிருந்தன. உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகள் எதை எதை எல்லாம் உயர்த்தி வழிபட்டுத் தொழுகிறார்களோ அவற்றை எல்லாம் தான் எதிர்த்து அவமானப்படுத்த வேண்டும் போல ஒரு வெறி அவனுள் மூண்டிருந்தது. உள்பட்டணத்தாரின் மரியாதைக்குரியவர்கல் எல்லாம் தன்னால் அவமரியாதைப் படுத்துவதற்குரியவர்கள் என்று அவன் கருதினான். நியதி நிர்வாகம் எல்லாவற்றையும் ஏற்காமல் எதிர்க்க வேண்டும் என்பது போன்ற ஓர் கூர்மையான ‘ஆண்டி - எஸ்டாபிலிஷ்மெண்ட்’ உணர்வு அவனுள் முற்றியிருந்தது. தன் பிறவியிலேயே அவமானப் பட்டத்தைச் சேர்த்து ஒட்ட வைக்க விரும்பும் அந்த கிருஷ்ணராஜ உடையார், தங்கமும், வைரமுமாய் மின்னும் மகாராணியான அவன் தாய், அவர்கள் கும்பிடும் அநுமார், பெருமாள், அர்ச்சகர், புரோகிதர் அனைவருமே எதிரிகளாக அவன் கண்ணுக்குத் தோன்றினார்கள். கோவில், குளம், தர்மம், நியாயம், மரியாதைகள், பழக்க வழக்கங்கள், பண்டிகை, திருவிழாக்கள் எல்லாமே தன் போன்ற அநாதைகளை எப்போதுமாக ஒடுக்கி வைக்க ஏற்பட்ட நிரந்தரச் சதி திட்டங்களாக அந்த விநாடியில் அவனுக்குத் தோன்றின. அந்த ஆண்டின் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று நந்தவனத்துக்குள்ளிருந்த ‘பூங்காவன விநாயகர்’ கோவிலில் பண்டாரம் பொங்கல் படையல் எல்லாம் செய்த போது - சண்பகம், பண்டாரத்தின் மனைவி, மகன் எல்லோருமே விழுந்து கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக் கொண்டார்கள். திருமலை மட்டும் கும்பிட்டு விழவுமில்லை, திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளவுமில்லை. “தப்பா நெனைச்சுக்காதீங்க... இதெல்லாம் எனக்குப் பிடிக்கலே... இந்த வழக்கத்தை நான் விட்டாச்சு... இந்த ஜமீன் உப்பைத் தின்னு தின்னு இங்கே கிடக்கிற சாமி, பூதங்களும், நல்லது கெட்டது தெரியாமல் புத்தி கெட்டுத் தடுமாறிப் போச்சு.” பண்டாரம் அவனை வற்புறுத்தவில்லை. சண்பகம், அவனை விநோதமாகப் பார்த்தாள். பண்டாரத்தின் மனைவி அவனை அருவருப்பாக நோக்கினாள். பண்டாரத்தின் மகன் அவனைக் கேட்டான்: “என்ன? நீங்களும் நம்மூர் மருந்துக்கடை அண்ணனோடச் சேர்ந்தாச்சா?” “இதுவரை இல்லை! ஆனால் அந்த அண்ணனைச் சீக்கிரமே பார்ப்பேன் என்று தோன்றுகிறது” என்றான் திருமலை. வெளிப்பட்டணத்தில் ‘இங்கர்சால் மருந்தகம்’ என்ற பெயரில் மருந்துக்கடை வைத்திருந்த பொன்னுச்சாமி என்பவர் ‘கடவுள், மதம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை, அறிவும், சிந்தனையுமே மனிதனின் உயர் ஆற்றல்கள்’ என்று பேசி வந்தார். ஊரில் மருந்துக்கடை அண்ணன் என்று அவருக்குப் பேர் ஏற்பட்டு வழங்கி வந்தது. அவரைக் குறிப்பிட்டுத்தான் பண்டாரத்தின் மகன் திருமலையை விசாரித்திருந்தான். பிள்ளையார் சதுர்த்தி கழிந்த இரண்டு மூன்று தினங்களில் திருமலை கூறிய இன்னொரு செய்தி பண்டாரத்தையும் அவர் குடும்பத்தாரையும், ஆச்சர்யத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. “தேரடியிலே இளநீர்க் கடை போடப் போறேன். இளநீர் மட்டுமில்லே... தேங்காய், பழம், பூ, கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலைப் பாக்கு எல்லாம் தான் விற்கிறதாய் உத்தேசம்...” “சாமி பூதம் இல்லேங்கறே... அநுமார் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் போற சனங்க உன்னை நம்பிக் கடைக்குப் பண்டம் வாங்க வரணுமே தம்பீ? அது எப்படி...?” “எனக்குச் சாமி பூதத்துலே நம்பிக்கை இல்லே! ஏமாத்தாமே, கொள்ளை விலை வைக்காமே நியாயமா நான் தேங்காய் பழம் வித்தா வாங்கறவங்க வாங்கட்டும்... பிடிக்காதவங்க போகட்டும்...” “உள் பட்டணத்து ஆளுங்க கெடுதல் பண்ண மாட்டாங்களா தம்பி!” “யாருடைய கெடுதலுக்கும் நான் பயப்படலே! என்னை எவனும் அசைக்க முடியாது.” |