26 எழிலிருப்புக்குப் புறப்படுவதற்கு முன் திருவின் வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் அவனுடைய மகன் எழில் ராஜாவைப் பார்த்து விட்டு வரப்போன சர்மா திரும்பி வந்து தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாயிருந்தது. “பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அவன் சார்ந்திருக்கும் பத்திரிகை நிர்வாகமே இப்போது அவனை இரகசியமாக எங்கோ வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டது” என்றார் சர்மா. மகனாகத் தன்னை வந்து பார்க்கப் போவதில்லை. தானாக அவனைப் போய்ப் பார்க்கவும் முடியாமல் தட்டிப் போய் விட்டது என்பதை எண்ணிய போது திருவுக்குத் தன் மேலேயே வெறுப்பாயிருந்தது. மகன் தன்னை வெறுப்பதற்குக் காரணமான தன் அ ர சி ய ல், கட்சி, அதிகாரம், பதவி, லஞ்ச ஊழல் எல்லாவற்றிலிருந்தும் இன்றுதான் விடுபட்டாயிற்று. ஆனாலும் மகனுக்கு இன்னும்கூடத் தன் மேல் ஆத்திரமாகத் தானிருக்கும் என்று தோன்றியது. மகனைச் சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு எழிலிருப்பிற்குப் புறப்பட்டிருந்தான் திரு. அவன் மருத்துவமனையிலிருந்து அதிகாலையில் விமான நிலையத்திற்குப் புறப் பட்ட போது, ‘அண்ணன் திரு வாழ்க! வாழ்க!’ என்ற குரல் முழக்கங்களுடனும், மாலைகளுடனும், மலர்ச் செண்டுகள், எலுமிச்ச பழங்களுடனும் வழியனுப்புவரும் யாரும் அப்போது தென்படவில்லை. பக்தியோடும், பயத்தோடும் சல்யூட் வைத்து அவன் ஏறி உட்காருவதற்காகக் கார்க் கதவை மரியாதையாகத் திறந்து விடும் இன்ஸ்பெக்டர்கள் கான்ஸ்டேபிள்கள் யாரையும் காணவில்லை. மருத்துவமனை ஊழியர்களும், தூக்கக் கிறக்கத்தோடு சோர்வாகத் தென்பட்ட இரண்டொரு நர்ஸுகளும், டாக்டரும், சைக்கி யாட்ரிஸ்ட்டும் தவிர வேறு யாரும் இல்லை. விமான நிலையம் வரை வந்து திருவை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு அதே ஏ. சி. செய்த காரில் சாலை வழியாக எழிலிருப்புக்குப் புறப்பட்டார்கள் சர்மாவும், கன்னையனும். பக்கத்து நகரிலுள்ள விமான நிலையத்தில் போய் இறங்கியதும் திருவை அங்கு வந்து அழைத்துச் சென்று எழிலிருப்பு டி.பி.யில் விடுவதற்கு வேறொரு சினிமா விநியோகஸ்தரின் காரை ஏற்பாடு செய்தாயிற்று. போய் இறங்குகிற இடத்திலும், தன்னை வரவேற்க எந்தக் கூட்டமும் வந்திராது மாலைகள் வாழ்த்தொலிகள் கிடையாது. ‘அண்ணே!’ என்று கைகட்டி, வாய் பொத்தி வரவேற்க ஆளில்லாத நிலை கவனிப்பின்மை எல்லாமே அவனைப் பொறுத்த வரை புதிய அநுபவம்தான். வருக, வருக என்று வரவேற்கும் ஆளுயரச் சுவரொட்டிகள் நீள மான மாலைகள், வரவேற்பு வளைவுகள் எல்லாம் இல்லாமல் சமீபத்து ஆண்டுகளில் அவன் எந்த ஊருக்கும் இப்படிச் சாதாரணமாகப் போக நேர்ந்ததே இல்லை. யாரையும் கவனிக்காமல், யாராலும் கவனிக்கப்படாமல் இன்று முதல் முறையாக இப்படி ஒரு பிராயணம் வாய்த்திருந்தது. மந்திரி பதவியை இழந்து தேர்தலில் தோற்றபின் சின்ன உடையார் திரும்பி எழிலிருப்புக்குச் சென்றபோதும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது.
ஆனால் அடுத்த கணமே, பரம்பரைப் மனிதன் என்ற முறையில் ஜமீன்தார் எழிலிருப்பிலிருந்து பட்டணத்துக்குப் புறப்பட்டாலும் பட்டணத்திலிருந்து எழிலிருப்பிற்குத் திரும்பினாலும் அவரை வரவேற்க வழியனுப்ப ஒரு கூட்டம் அவர் பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி நிரந்தரமாக இருக்கும் என்பது நினைவு வந்தது அவனுக்கு. பதவியிலில்லாத காலத்திலும் பொது மக்களிடமும் சமூகத்திலும் அவருக்கிருந்த மரியாதை ஒரு சிறிதும் குறையவில்லை. தான் மட்டுமே இன்று மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடப்பட்டாற் போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்தான் அவன்.
விமானத்தில் உடன் பயணம் செய்த சில பணக்காரர்களும், தொழிலதிபர்களும் கூடத் தன் அருகே வந்து அமர்ந்து பேசத் தயங்கினாற் போலத் தோன்றியது. இந்தப் பிரமைகளும், உணர்வுகளும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதைத் தன்னால் அப்போது தவிர்க்க முடியாமலிருப்பதையும் அவனே தெரிந்து கொண்டான். கவனிக்க ஆளில்லாமல் விமானத்திலிருந்து கீழிறங்கிச் சென்றால் திருவுக்கு மிகவும் வேண்டிய - கடந்த காலத்தில் அவனிடமிருந்து ஏராளமான உதவிகளைப் பெற்றிருந்த - அவனுக்குப் பல விதங்களிலும் கடன்பட்டிருந்த அந்த நண்பரே அவனை வரவேற்க நேரில் வந்திருக்கவில்லை. டிரைவரோடு காரை மட்டுமே அனுப்பியிருந்தார். தான் அப்போதே முக்கால் நடைப்பிணமாகி விட்டதுபோல் உடலும் மனமும் தளர்ந்து போயிருந்தான் திரு. விமான நிலையத்திலிருந்து நகருக்குள் போகாமல் அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தொலைவிலிருந்த எழிலிருப்பிற்கு அப்படியே காரில் புறப்பட்டான் அவன். தன் வாழ்க்கை எங்கே எப்படி ஆரம்பமாகி வளர்ந்து எங்கே எப்படி இறங்கு முகமாகத் தணிகிறது என்பதைத் தானே எண்ணியபோது அவனுக்கே வேடிக்கையாகத் தானிருந்தது. கோஷங்களும் மாலைகளும் வரவேற்புக்களும் ஆரவாரங்களும் இல்லாமல் முதலிலிருந்தே ஒரு சாதாரணப் பாமரனாக வாழ்ந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இதுநாள்வரை அவற்றின் சுகங்களை எல்லாம் தாராளமாக அநுபவித்து விட்டு இன்று திடீரென்று சுகமான சொப்பனம் கலைந்த மாதிரித் தனியே தவிப்பது தான் வேதனையாயிருந்தது. கீழே விழ முடிந்த அளவு அபாயகரமான உயரங்களில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தான் விழுவதைப் பற்றிய பயமும் விழுகின்ற அநுபவமும் உண்டு. விழுந்த அநுபவத்தை அவன் இப்போது அடைந்து கொண்டிருந்தான். சம தரையிலிருப்பவர்களுக்கு விழுவதைப் பற்றிய பயமும் இல்லை. விழுகின்ற அநுபவமும் இல்லை என்று தோன்றியது. காரில் எழிலிருப்புக்குச் சென்று கொண்டிருக்கும் போதே தனது எழுச்சியின் முடிவையும் வீழ்ச்சியின் தொடக்கத்தையும் பற்றிச் சிந்தித்தபடியே சென்றான் அவன். முன்பெல்லாம் அந்தச் சாலையில் வெய்யில் விழ இடைவெளியின்றிப் பசேலென்று அடர்ந்த மரங்கள் வரிசையாயிருக்கும். இப்போது சாலையை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டியிருந்தார்கள். இயற்கையைக் கறைப்படுத்துவது போல் வழியில் தென்பட்ட பெரிய பாறைகள் மலைப்பகுதிகளில் எல்லாம் அரசியல் கட்சிகளின் சின்னங்களைச் செதுக்கியிருந்தார்கள். அல்லது தீட்டியிருந்தார்கள். ஊரைச்சுற்றியிருந்த அழகிய மாந்தோம்புக்கள், நெல் வயல்கள் எல்லாம் அழிக்கப்பட்டுச் சிறிதும் பெரிதுமாக வீடுகள் கட்டப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை ஒவ்வொரு கட்சிக்கும் - கட்சியிலிருந்து பிரிந்த குட்டிக் கட்சிகளுக்குமாகப் பத்து பன்னிரண்டு கொடிக்கம்பங்கள் தென்பட்டன. சாராயக்கடைகளும், கள்ளுக்கடைகளும் முன்பு அவன், பார்த்திராத பல இடங்களில் தென்பட்டன. தாங்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்களுக்கு அந்த வசதியைத் தாராளமாக வழங்கி அவர்களைச் சிரிக்க வைத்து அதில் இறைவனைக் காண முயன்றது அவனுக்கு நினைவு வந்தது. லாட்ஜ்களே அதிகமில்லாத எழிலிருப்பில் மூலைக்கு மூலை விகாரமான பல லாட்ஜ் கட்டிடங்கள் தென்பட்டன. ஊர் செயற்கையாகவும், விகாரமாகவும் தாறுமாறாகவும் மாறியிருந்தது. கார் எழிலிருப்பு டி.பி.யில் நுழைந்து நின்றது. டி.பி. வாட்ச்மேன் ஓடி வந்தான். திரு முன் கூட்டியே தந்தி கொடுத்திருந்தும் இப்போது அவன் மந்திரியில்லை என்பதால் ‘யாரோ மினிஸ்டர் வரார்ன்னு கலெக்டர் ஆபீஸ்லேருந்து சொன்னாங்க... ரூம் எதுவும் காலியில்லீங்களே’ - என்று குரலை மழுப்பி இழுத்த வாட்ச்மேனிடம் பதில் பேசாமல் ஒரு முழு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. ஒரு நிமிஷத் தயக்கத்துக்குப் பின் வாட்மேன் அதை வாங்கிக் கொண்டு, “எதுக்கும் பார்க்கிறேனுங்க” - என்று தலையைச் சொறிந்தபடி உள்ளே போனான். வாழ்வின் சகல துறைகளிலும் சகல முனைகளிலும் லஞ்சம் சகமாகியிருந்தது. அரசு எவ்வழி அவ்வழி மக்கள் என்பதுபோல் மெடிகல் காலேஜ் சீட் முதல் பாலிடெக்னிக் அட்மிஷன் வரை லஞ்சத்துக்கு ரேட் ஏற்படுத்திய தங்கள் வழியைப் பின்பற்றியே ஒவ்வொரு மூலையிலும் இன்று லஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட புது நடைமுறை யாகியிருப்பதைத் திரு உணர்ந்தான். அப்போது அவனுடைய சாமான்களை எடுத்துவைத்து விட்டு, “உங்களை இறக்கி விட்ட கையோட காரைத் திருப்பிக் கொண்டாரச் சொல்லிட்டாருங்க” - என்று டிரைவர் தலையைச் சொறிந்தான். அவனிடமும் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துனுப்பிய பின் வாட்ச்மேன் வழி காட்ட ஏ.சி. செய்த அறைக்குச் சென்றான் திரு. சென்னை யிலிருந்தே சர்மாவையும், கன்னையனையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டிருந்த தன்னுடைய கார் மாலைக்குள் அங்கு வந்துவிடும் என்று நம்பினான் அவன். மிகவும் களைப்பாயிருந்தது. விமானத்துக்காக மிகவும் அதிகாலையில் கண்விழித்து எழுந்த சோர்வு சேர்ந்து கொண்டது. எச்சரிப்பதற்கு யாரும் உடனில்லாததால் குடிக்கவேண்டும் என்று தோன்றியது. வாட்ச்மேனிடம் ஒரு நூறு ரூபாயை கொடுத்து ‘ரம்’ வாங்கி வரச் சொன்னான். திருவைப் பல வருடங்களாகத் தெரிந்த அந்த வாட்ச்மேன், “ரம் மட்டும் போதுங்களா? இல்லாட்டி வேறு ஏதாச்சும் இட்டாரணும்னாலும் சொல்லுங்க, செய்யிறேன்” என்று குறுமபுத்தனமாகக் கண்களைச் சிமிட்டியபடி கேட்டான். வேண்டாம் என்பதற்கு அடையாளமாகத் திரு கையை அசைத்தான். சண்பகத்துக்கும் பொன்னுசாமி அண்ணனுக்கும் மைத்துனனுக்கும் சொந்த மகன் ராஜாவுக்கும் தான் இழைத்த துரோகங்களை எண்ணி கழிவிரக்கப்படும் நிலையிலிருந்த அவன் வாட்ச்மேனின் விஷமத்தனமான வினாவுக்குச் சற்றே எரிச்சலோடுதான் பதில்சொல்லியிருந்தான். உடல் நலம் குன்றி ஓய்வு எடுக்க வருகிற அவனை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் சென்று எழிலிருப்பில் விடுவதற்குக் காருடன் நண்பர்கள் வருவார்கள் என்று கன்னையனும் சர்மாவும் எதிர்பார்த்திருப்பார்கள். இப்படித் தனியாகக் கவனிப்பாரற்று வந்து அவன் இங்கே அவஸ்தைப் படப்போவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. பகல் முழுவதும் குடியில் கழித்தான் அவன். மறுபடியும் வாட்ச்மேன், “இட்டா ரட்டுங்களா? நல்ல சரக்கு...” என்ற போது, “வெளியே போ! என்னைத் தொந்தரவு பண்ணாதே” - என்று அவனிடம் எரிந்து விழுந்தான் திரு. வாட்ச்மேனுக்கு அவனது சீற்றமான பதில் ஆச்சரியத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் திருவின் நினைவில் அப்போதுதான் சிரம தசையிலிருந்த ஆரம்ப நாட்களும், சண்பகத்தின் காதலும் இருந்தன. வேதனையையும் களைப்பையும் மறக்கவே அவன் குடிக்க விரும்பினான். மாலையில் இருட்டுகிற வரை ஏழெட்டு மணி நேரத் தனிமையைக் கடந்தாக வேண்டும். சர்மாவும், கன்னையனும் வந்து சேர இன்னும் ஏழெட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஆகும். அதுவரை தனிமை நரகத்தை எப்படியாவது கழித்தாக வேண்டும். ஆனால் வாட்ச்மேன் விசாரித்த அளவு மோசமாகக் கீழிறங்க அவன் தயாராயில்லை. ‘சொன்னதை மட்டும் செய்’ என்று வாட்ச்மேனுக்குக் கடுமையாக மறுமொழி கூறியிருந் தான் அவன். சண்பகத்துக்கும், பொன்னுசாமி அண்ணனுக்கும், மைத்துனனுக்கும் சொந்த மகனுக்கும் தான் இழைத்த துரோகங்களை எண்ணிக் கழிவிரக்கப்படும் நிலையிலிருந்த அவன் பகல் முழுவதும் குடியில் கழித்தான். பொழுது சாயத் தொடங்கிய பின்னும் கூடக் கன்னையனும் சர்மாவும் அங்கு வந்து சேரவில்லை. இவன் உடல் நிலை கெட்டு ஒய்வு எடுக்க வந்திருக்கிறான் என்ற விவரம் டி.பி. வாட்ச்மேனுக்குத் தெரியாததால் கேட்டதை எல்லாம் தாராளமாக வாங்கிக் கொடுத்திருந்தான் அவன். வெளியில் இருட்டியதும் ஒரு சால்வையை எடுத்துத் தலையிலும், உடம்பிலும் போர்த்திக் கொண்டு பழைய இடங்களையும் பழகிய இடங்களையும் பார்க்கும் ஆசையுடன் வெளியே புறப்பட்டான் திரு. அவனுக்குப் பெரிய ஏமாற்றமாயிருந்தது. வேக வைப்பதற்கு உரித்த கோழி மாதிரி ஊர் பொலிவும், உயிரோட்டமும் அற்றுப் போயிருந்தது. மலைகளில் மரங்களை விறகுக் கடைக்காரர்களும், கரிக்கடைக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு அழித்து விட்டதால் இரண்டு ஆண்டுகளாகளாகத் தொடர்ந்து மழை இல்லை என்றார்கள். தேரடிக்குப் போனதும் அவன் அதிர்ச்சியே அடைந்தான். தேர் இருந்த இடத்தில் சிதைந்து கருகிய மரக்குவியல்தான் இருந்தது. விசாரித்ததில் போன வருடம் யாரோ ஒரு வெறியன் தீ வைத்ததால் தேரே அழிந்து விட்டது என்றார்கள். தேரடி அநுமார் கோயில் இருண்டு கிடந்தது. உள்ளே பெருஞ்சுடராக அநாதி காலமாய் இடைவிடாது அணையாமல் எரியும் அகண்ட விளக்கின் ஜோதி தென்பட வில்லை. முகப்பில் ஒரு சிறு காடா விளக்கின் ஒளியில் ஐந்தாறு விடலைகள் காசு வைத்து மூணு சீட்டு விளை யாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதே தேரடியில் எந்த இடத்தில் அடிபட்டு விழுந்து இரத்தம் சொட்டச் சொட்ட இங்கிருந்து தீமையை எதிர்த்து இனி நமது போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினானோ அந்த இடத்தில் போய் நின்றான். நினைத்தான். இந்த ஊரின் வாழ்க்கைக்கே மூலாதாரமானதொரு ஜோதி என்று மக்கள் நம்பிய பாறை அநுமார் கோயில் விளக்கைப் பார்த்தபடி தான் முன்பு அவன் அப்படிச் சபதம் செய்திருந்தான். அந்த ஜோதியே இப்போது இல்லை. நந்தவனத்துக்குள் போனான். அங்கு நந்தவனமே இல்லை. நொடித்துப் போன ஜமீன் குடும்பம் அந்த இடத்தை ஹவுஸிங்போர்டுக்கு விற்று ஹவுஸிங் போர்டு அந்த இடத்தை புல்டோஸர் வைத்துச் சமதரையாக்கிக் கோழிக் கூண்டுகள் மாதிரிச் சிறு சிறு வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது. பெருமாள் கோவிலுக்கும் தேரடிக்கும் நடுவிலிருந்த தாமரைக் குளம் வற்றிப் போயிருந்தது. கோயில் கோபுரம் இருண்டு வவ்வால்கள் கிறிச்சிட மரம் செடி கொடி முளைத்து பழுது பார்க்காவிடில் விழும் நிலைக்குச் சிதலமாயிருந்தது. குளத்து மேட்டில் ஒரு சாராயக்கடை வந்திருந்தது. எழிலிருப்பில் எழில் கழன்று போய் மூதேவி வந்து குடிபுகுந்தாற் போலிருந்தது. ஒரு தலைமுறையின் நல்லுணர்ச்சிகள், அழகுகள் நம்பிக்கைகள், பண்புகள், கலாச்சாரங்கள் எல்லாம் அங்கே செத்துப் போயிருப்பது புரிந்தது. இந்தக் கலாச்சாரப் படுகொலைக்குத் தானும் ஒருகாரணம். தன் போன்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த அழிவுக்கு வித்திட்ட வர்களில் ஒருவன் என்பதை அவன் உள் வேதனையோடு உணர முடிந்தது. அந்த மயக்கமான போதைத் தடுமாற்ற நிலையிலும் அவனுக்கு அப்போது ஒரு கவிதை இட்டுக் கட்டத் தோன்றியது. வாழ்வின் ஆரம்பத்தில் அவனுள் குடிகொண்டிருந்து பின்பு வெளியேறி ஓடிப்போன கவிதை உணர்வு சில கணங்கள் இன்று இப்போது மீண்டும் அவனுள் வந்து புகுந்து அவனை ஆட்டிப்படைத்தது. அவன் தன்னைப் பற்றியே அக்கவிதையில் நினைத்தான். “தேரடி முனையில் தெருவிளக் கடியில் ஊரவர் ஒதுக்க உற்றவர் வெறுக்க பேரெதும் இன்றிப் புகழெதும் இன்றிப் பேதையாய்க் கிடந்து புழுதியில் புரண்டேன் ஊரவர் கூடி உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப் புகழினைப் பெருக்கி என்னுள் எதைக் கொன்றார்? எள்ளில் எதை அழித்தார்?” எதை அவித்தார் என்பது இன்னும் பொருந்துமோ என அவனுக்கே இரண்டாவது எண்ணமாகத் தோன்றியது இப்போது. தீமைகளை எதிர்த்துப் போராட நினைத்து இன்று சகல தீமைகளின் உருவமாகவும் தானே ஆகிச் சீரழிந்திருப்பதை நினைத்தபோது திருவின் மனக்குமுறல் அதிகமாகியது. நிலையிலிருந்து, புறப்பட்ட தேர் முறை கெட்டுத்தாறுமாறாக ஓடிப் பல வருடங்கள் கழித்து நிலைக்கு வருவதைப் போல் தானும் இப்போது தொடங்கிய இடத்துக்குத் திரும்பி வந்திருப்பதாக அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவனும் சண்பகமும் காதலித்த அன்றையத் தேரடி நந்தவனம் கிளிகொஞ்சும் பசுஞ் சோலையாயிருந்தது. அன்றைய தாமரைக்குளம், அன்றையக் கோயில், அன்றைய தேரடி எதுவுமே இன்று எழிலிருப்பில் இல்லை. ஊரைச் சுற்றி ஏழெட்டு புதுத் தியேட்டர்கள் வந்திருந்தன. கூட்டமும் கலகலப்பும் அப்பகுதிக்கு இடம் மாறி விட்டதாக மக்கள் கூறினார்கள். ‘ஊரவர் கூடி உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப் புகழினைப் பெருக்கி என்னுள் எதைக் கொன்றார்? என்னில் எதை அழித்தார்? - அவித்தார்?’ என்று மறுபடியும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் இந்த மண்ணில் இருந்து கீழே விழுந்து மறுபடி எழுந்த போது வாழ்வைப் பற்றிய துடிப்பும், துணிவும், தாகமும், தவிப்பும், நேர்மையும் தன்னுள் இருந்ததுபோல் இப்போது மீண்டும் உண்டானால் என்றெண்ணியபடி சுற்றும் முற்றும் மருள மருளப் பார்த்தான் திரு. எங்கும் ஒரே இருட்டாயிருந்தது. தேரடியில் மட்டுமில்லை. உள் தன் மனத்திலும்தான். திருமலை ராசப்பெருமாள் கோவில் கோபுரம், ஊரின் மூலாதாரமான முதல் சுடர் என்று பரம்பரையாக ஊரில் நம்பப்பட்ட அநுமார் கோயில் விளக்கு எதிலுமே ஒளி இல்லை. அந்த இடமே ஒரு பாழடைந்த குப்பை மேடுபோல் இடி பாடு ஆகியிருந்தது. நனைந்து ஈரமான கட்டையில் தீப் பற்றாததுபோல் நலிந்த தன் மனத்தில் பழைய ஒளிக் கீற்றை ஏற்ற முடியாமல் திணறினான் அவன். மனமும் சூடேற முடியாமல் கறைப்பட்டு நனைந்திருந்தது. அதை. மீண்டும் பற்ற வைப்பதற்கான எந்த மூலக்கனலும் அங்கு இல்லை. எங்கும் இல்லை. பல வருடங்களுக்கு முன் எந்த இடத்தில் அநாதையாய் விழுந்து கிடந்தானோ அதே இடத்தில் இன்று மீண்டும் பிரக்ஞை பிசகி நிலைகுலைந்து கீழே விழுந்தான் அவன். சுற்றிலும் நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது. |