27 மறுபடி திருவுக்கு நினைவுக்கு வந்த போது டி.பி.யில் தன் அறையின் படுக்கையில் தான் கிடத்தப்பட்டிருப்பதையும், கன்னையனும் சர்மாவும் படுக்கை அருகே நிற்பதையும் உணர்ந்தான். உள்ளுர் டாக்டர் ஒருவரும் அவசரமாக அழைக்கப்பட்டு வந்திருந்தார். இரவு ஏழரைமணி சுமாருக்கு எழிலிருப்பை அடைந்திருந்த சர்மாவும், கன்னையனும் டி.பி.யின் ஏ.சி. அறையில் திருவைக் காணாமல் திகைத்து வாட்ச்மேனிடம் விசாரித்திருக்கிறார்கள். “எங்கேயோ போர்வையை எடுத்துப் போர்த்திக்கிட்டு வெளியே போனாருங்க” என்றான் அவன். தேரடிப் பகுதியின் மேல் அவனுக்கு இருந்த ‘ஸெண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ சர்மாவுக்கு நன்கு தெரியுமாதலால் உடனே காரைத் தேரடிக்கு விடச் சொன்னார் அவர். தேரடியை அடைந்ததுமே அந்த ஆள் நடமாட்ட மற்றுப் போயிருந்த பாழடைந்த பகுதியில் கார் ஹெட்லைட் வெளிச்சத்திலேயே அவன் விழுந்து கிடப்பதை அவர்கள் பார்த்து விட்டார்கள். முதலுதவி செய்து உடனே டி.பி.க்குக் கொண்டு வந்து சேர்த்து அப்புறம் டாக்டரையும் அழைத்து வந்து கவனித்திருந்தார்கள். அவன் குடித்திருந்தது வேறு அவர்கள் கவலையை அதிகமாக்கியது. “கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால் இந்த உடல் நிலையில் இவர் குடிப்பது கூடாது. கண்டபடி சுற்றவும் கூடாது. பரிபூரணமான ஒய்வுதான் தேவை!“ என்றார் டாக்டர். அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து “சாமீ! என்ன பண்ணுவீங்களே, எப்படிச் சொல்லிக் கூட்டிக்கிட்டு வருவீங்களோ, என் மகன் ராஜாவை உடனே நான் பார்க்கணும்” -என்று. சொல்லிவிட்டுச் சர்மாவிடம் சிறு குழந்தை போல் விசும்பி, விசும்பி அழ ஆரம்பித்தான் திரு. சர்மாவுக்கும், கன்னையனுக்கும் என்ன செய்வதென்று. புரியவில்லை. “அவருக்கு எந்தப் பெரிய ஏமாற்றத்தையும் அளிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” - என்று சென்னையிலிருந்து கிளம்பியபோது சைக்கியாட்ரிஸ்ட் சொல்லி அனுப்பியிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. “இப்பத் தூங்குங்கோ! காலம்பர ஏற்பாடு பண்றேன். பார்க்க முடியல்லேன்னாலும் டிரங்க்கால் போட்டு உங்க மகனோட ஃபோன்ல நீங்க பேசறதுக்காவது ஏற்பாடு பண்றேன்” - என்றார் சர்மா. “அவனுக்குத்தான் என் மேலே கோபமாச்சே! அவன் என்னோட ஃபோன்ல பேசச் சம்மதிப்பானா?” என்று திரு உடனே பதிலுக்கு அவரைக் கேட்டான். “சிரமம்தான்! இருந்தாலும் நான் உங்களுக்காக வாதாடி அவனோட பேசலாம், இங்கே டி.பி.யிலேயே ஃபோன் இருக்கு, அங்கே மெட்ராஸ்ல அவன் இல்லே. எங்கே இருக்கான்னு விசாரிச்சு ஏற்பாடு பண்றேன்” என்றார் சர்மா. மகனோடு பேசலாம் என்ற ஏற்பாடு திருவுக்கு ஆறுதலும் திருப்தியும் அளித்தன. அடுத்த நாள் காலையில் சர்மா சென்னையிலுள்ள சைக்கியாட்ரிஸ்ட்டுடன் பேசிக் கலந்தாலோசித்துத் திருவும், அவன் நீண்ட பல ஆண்டுகளாக நேரில் சந்திக்காத அவனுடைய மகனும் போனில் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
மகன் தன்னோடு ஃபோனில் பேச இசைந்ததே திருவுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
“என்னை மன்னிச்சிடுப்பா! நான் இனிமே தப்பு எதுவும் பண்ண மாட்டேன். என்னை மாதிரி அரசியல்வாதிகளாலே அடுத்த தலைமுறையே கல்வி, உழைப்பு. ஒழுக்கம், நேர்மை, நியாயம் எல்லாத்திலேயும் நம்பிக்கையற்றுச் சீரழிஞ்சு போச்சுங்கிறதை இப்ப நானே உணருகிறேன்” என்று திரு பேச்சை ஆரம்பித்தான். மகன் பதிலுக்கு அதிக நேரம் பேசவில்லை. “நீங்க திருந்திட்டீங்கங்கிறதை அறிஞ்சு எனக்கும் சந்தோஷம்தான் அப்பா! இதே மாதிரித் தொடர்ந்து நீங்க நேர்மையா இருக்கணும்கிறதுதான் என் ஆசை” - என்று சொல்லி அவன் பேச்சை முடித்தான். அப்பா என்று அவன் வாய் மொழியாகவே தான் அழைக்கப்பட்ட போது திருவுக்கு மெய் சிலிர்த்துப் புல்லரித்தது. தன்னை முதல் தரமான சமூக விரோதி என்று கண்டித்து எழுதிய தன் மகனே இப்போது ‘அப்பா’ என்று பிரியமாக அழைத்து மன்னித்தாற் போன்ற தொனியில் பேசிய இந்த ஒரு விநாடிக்காகவே இத்தனைக் காலம் தான் உயிர் வாழ்ந்தது வீண் போகவில்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. திருவின் மனம் மிகவும் நிறைவாக இருந்தது அப்போது. அன்று நடுப்பகலில் திடீரென்று ‘பவர்கட்’ ஏற்பட்டு ஏ.சி. நின்றுபோய் அறை ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க நேர்ந்திருந்தது. திரு தூக்கம் பிடிக்காமல் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் தூங்கி விட்டதாக நினைத்துக்கொண்டு வெளியே டி.பி. வராந்தாவில் சர்மாவும், கன்னையனும் தங்களுக்குள் சகஜமாக இரைந்து உரையாடிக் கொண்டார்கள். கன்னையின் சர்மாவைக் கேட்டான்: “என்ன கடைசியிலே எப்படி சமாளிச்சிங்க...? சர்மாஜி!” “ஒரு வழியாச் சமாளிச்சாச்சுப்பா! சைக்கியாட்ரிஸ்ட்டோட மகனையே எழில்ராஜாவா நடிக்கச் சொல்லி ரிகர்சல் நடத்தி அப்புறம் ஃபோனிலே பேசவும் வச்சு இந்த மனுஷனைத் திருப்திப் படுத்தி நிம்மதியாத் தூங்க வைச்சாச்சு...” “எவ்வளவு நாளைக்குத்தான் எழில்ராஜா இல்லேங்கற கசப்பான உண்மையைச் சொல்லாமே மூடி மறைச்சு இப்படிப் பொய் சொல்லியே சமாளிக்க முடியும் சர்மாஜி?” “டாக்டர் உண்மையைச் சொல்லக் கூடாதுங்கிற வரை இப்படியே நாடகம் நடத்திச் சமாளிச்சுக்க வேண்டியதுதான்.” இந்த உரையாடல் அறைக்குள் இருந்த திருவுக்குத் தெளிவாகக் கேட்டது. அன்று பிற்பகல் சர்மாவும், கன்னையனும் மறுபடி திருவைப் பிரக்ஞை தவறிய நிலையில் கண்டு பதறிப் போனார்கள். உள்ளுர் டாக்டர் வந்து ஏதேதோ செய்தார். நடு நடுவே நினைவு வந்தபோதெல்லாம் “ஐயோ! என் மகனை யாரும் கொல்லலே... அவன் தப்பிவிட்டான்... நான் அவனோடுதான் ஃபோனில் பேசினேன்?” - என்று இரைந்து கத்திவிட்டு மறுபடி மறுபடி பிரக்ஞை தவறி மூர்ச்சையானான் திரு. அன்றிரவு நிலைமை மோசமாகியது. எழிலிருப்பு டாக்டர் திருவைச் சென்னைக்கே கொண்டு போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். பின் காரிலேயே திருவைச் ஸீட்டில் படுக்கவைத்து இரவோடிரவாகச் சென்னைக்குக் கொண்டு போனார்கள். சென்னையை அடையும்போது அதிகாலை நான்குமணி ஆகிவிட்டது. மாடவீதி மருத்துவமனையில் அவன் தங்கியிருந்த அதே பழைய ஏ.சி. அறையில் மீண்டும் திரு அநுமதிக்கப்பட்டுப் படுத்துக் கிடந்தான், நினைவு வரும்போது, “ஐயோ, என் மகனை யாரும் கொல்லவில்லை. அவன் தப்பி விட்டான்” - என்று ஹிஸ்டீரியா வந்தவன் மாதிரி அலறுவதும் மறுபடி நினைவு தவறுவதுமாகவே நாட்கள் ஒடின. அவ்வப்போது சிறிது நோம் பிரக்ஞை வருவதும் போவதுமாக அவன் ஒரு முழுநேர மனநோயாளியானான். கோமாவில் கழித்த நேரம் அதிகமாகவும் பிரக்ஞையில் கழியும் நேரம் குறைவாகவும் இருந்தன. அவன் சாக விரும்பினான். ஆனால் சாவும் வரவில்லை. வாழ்வும் நன்றாக இல்லை. நடைப் பிணமாக - அவ்வளவு கூட இல்லை - நடப்பது நின்று போய்ப் பல நாளாயிற்று. வாழ்ந்தான் அவன். நினைவு பிசகாமல் வரும் சில போதுகளிலும் எழிலிருப்பு டி.பி.யில் சர்மாவும் கன்னையனும் தங்களுக்குள் பேசிய உரையாடலை ஒட்டுக் கேட்ட ஞாபகம் வந்து உடம்பு பதறி நடுங்கும். தன் மகனைத் தானே கொன்றிருக்கிறோம் என்ற பயங்கர உண்மை நினைவு வந்து சித்திரவதை செய்யும். துப்புத் துலங்காததாலோ என்னவோ, போலீஸ் அவனைத் தேடி வந்து கைது செய்யவும் இல்லை. தான் படுத்த படுக்கையாகப் பைத்தியம் பிடித்துச் சித்தஸ்வாதீனமிழந்து அநுபவிக்கும் இந்தக் கொடுமை தனக்கு இயற்கையாகவே விரும்பி அளித்த தண்டனையோ என்று கூட அவனுக்கே பிரக்ஞையான வேளைகளில் தோன்றும். அவன் மனமே அவனைக் கைதியாக்கி வதைத்தது. நாளடைவில் டாக்டர், நர்ஸ், எல்லோரும் அவன் ஒரு தேறாத கேஸ் என்று கைவிட்டு விட்டாற் போன்ற நிலைக்கு அவனை ஒதுக்கினார்கள். அவன் சேர்த்து வைத்திருந்த சொத்தும், ரொக்கமும் வசதிகளுமே அவனை விரட்டி விடாமல் மருத்துவ மனையில் வைத்துத் தொடர்ந்து உபசரிக்க உதவின. பார்க்க வந்து கவனிக்க என்று அவனுக்கு உறவினர் யாருமில்லை. கன்னையன் கூட வேறு இடத்தில் வேலைக்குப் போய் விட்டான். சர்மா மட்டும் அவனைப் பிடிக்கா விட்டாலும் விசுவாசம் காரணமாகத் தொடர்ந்து வந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். எப்போதாவது நினைவு வரும்போது, ‘தான் இப்படி எல்லாம் சீரழியாமல் நேராக வாழ்ந்திருக்கலாமோ’ எனறு லேசாக ஒர் எண்ணம் திருவின் மன ஆழத்தில் மெல்லத் தலைக் காட்டும். எந்த மூலக்கனலிலிருந்து அவன் பல வெளிச்சங்களை அடைந்திருந்தானோ அந்த மூலக்கனல் இன்று அதன் ஊற்றுக் கண்ணிலேயே அவிந்து போயிருந்தது. மறுபடி அதை ஏற்றிச் சுடரச் செய்வதற்குரிய வயதும், வாழ்வும் சக்தியும் இனி அவனுக்கு இருக்குமென்று தோன்றவில்லை. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று காலம் ஓடியது. சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் திரு படுக்கையில் கிடந்தான். அவன் ஒருவன் உயிரோடிருப்பது உலகத்துக்கும் - ஏன் - சமயாசமயங்களில் அவனுக்குமே கூட மறந்து போயிற்று. வீழ்த்தப்பட்டதன் காரணமாகவே எழுந்திருக்க வேண்டும் என்றும் ஒடுக்கப்பட்டதன் காரணமாகவே உயரவேண்டும் என்றும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பின்னிரவின் கருக்கிருட்டில் எழிலிருப்பின் தேரடி மண்ணில் தோன்றிய அந்த வாழ்க்கை வைராக்கியங்கள் இன்று அவனுள் முற்றிலும் அவிந்து வற்றி அடங்கிப் போயிருந்தது. ‘ஊரவர் கூடி உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப் புகழினை பெருக்கி அவனுள் அன்று கிளர்ந்து மூண்ட, அந்த மூலக்கனலை அவித்திருந்தார்கள். புகழும பதவிகளும். அளவற்ற பணமும், அவனைப் பண்பற்றவனாக்கி முடித்திருந்தன. தன்னையும் தன்னை ஒத்த அரசியல்வாதிகளையும் பற்றி நினைத்தபோது தாங்கள் தண்டனைக்குரியவர்கள் என்று அவனுக்கே இப்போது தோன்றியது. ஊருணி, நீரில் நஞ்சு கலப்பதைப் போலவும், ஊர் நடுவில் நச்சுச் செடி பயிரிடுவதைப் போலவும் தாங்கள் சமூக வாழ்வை சீரழித்திருப்பதாகத் தோன்றியது. நோக்கமும், திட்டமும், கொள்கைகளும் இல்லாமல் பெரிய உயரங்களில் தடலடியாக ஏறி அந்த உயரங்களைத் தாங்கள் அசிங்கப்படுத்தித் தாழச்செய்திருக்கிறோம் என்று மனம் கூசியது. எதை எதை எல்லாமோ சீர்த்திருத்தப் போவதாகக் கிளம்பி எல்லாவற்றையும் சீரழித்திருப்பது புரிந்தது. இப்படி நினைத்து நினைவின் சோர்வினாலேயே அயர்ந்து தளர்ந்து கண்களை மூடினான். ***** மறுபடி அவன் கண்விழித்தபோது அறை குளிர்ந்திருந்தது. எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. எதிரே சுவர்க்கடிகாரம் மாலை ஆறு மணியைக் காட்டியது. அறைக்குள் மங்கலான விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நர்ஸும் அறையைத் தூசி துடைத்து சுத்தம் செய்யும் வேலைக்காரியும் தங்களுக்குள் சிரித்துப்பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். “தேர் நிலைக்கு வந்தாச்சா அம்மாளு?” “வந்தாச்சு சிஸ்டர்! வெய்யில் அதிகமா இருந்திச்சுன்னு பகல்லே யாரும் வடம் பிடிக்கலே. வடக்கு மாட வீதி முக்குலே கொண்டாந்து ரெண்டு மணிக்கு அப்படியே விட்டுட்டாங்க... மறுபடி நாலு மணிக்குத்தான் வடம். பிடிச்சாங்க, இப்பத்தான் தேர் நிலைக்கு வந்திச்சி...” நினைவு மங்கிக் கொண்டிருந்த திருவுக்குள் ஆழத்தில் இருப்பவன் கேட்க முடிந்ததைப் போல் இந்த உரையாடல் மங்கலாகக் காதில் விழுந்தது. ஆம்; தேர் நிலைக்கு வந்து விட்டது. மாட வீதியில் காலையில் புறப்பட்ட தேர் மட்டுமில்லை, அவனுடைய மனத்துக்குள்ளிருந்து புறப்பட்ட நினைவுத் தேரும் ஓர் ஓட்டம் ஓடித் தவித்து எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பி இப்போது நிலைக்கு வந். திருந்தது. அவன் தளர்ந்து போயிருந்தான். “அம்மாளு நீ இங்கேயே இரு! மறுபடியும் இந்த ஆளுக்கு நினைவு தப்பிப் போச்சு... அவசரமா டாக்டரைக் கூட்டிக்கிட்டு வரணும்... நான் போகிறேன்” - என்று நர்ஸ் அப்போது பதறிய பதற்றம் அதள பாதாளத்தில் இருப்பவனுக்குக் கேட்பது போல் மங்கலாகத் திருவுக்கும் கேட்டது. நினைவு இருக்கிற நேரங்களைவிட, நினைவு தப்புகிற நேரங்களே சமாதி நிலையின் சுகத்தைத் தனக்கு அளிப்பது போல் அவன் சமீபத்தில் பல முறை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்த சுகமான மகிழ்ச்சியில்தான் அவன் மூழ்கியிருக்கக் கூடும் அந்த ஒரு மகிழ்ச்சியாவது இனி அவனுக்குக் கிடைக்கட்டுமே, பாவம்! (முற்றும்) |