7 பண்பாடும், மனப் பக்குவமும் இல்லாதவனுக்கு வரும் பதவிகளும் புகழ், பொருளாதார வளர்ச்சிகளும் அவனைத் தாறுமாறகச் சீரழிக்கும். குரங்கு கைப் பூமாலையில் உள்ள பூக்கள் போல இங்கிதம், மென்மை, சகிப்புத்தன்மை என்ற அம்சங்கள் எல்லாம் அவனிடம் உருக்குலையும். பொன்னுச்சாமி அண்ணன் மறைந்த பின்னர் திருமலையும், அப்படி ஆகியிருந்தான். அவனிடமிருந்த இயக்கத் தலைமை, மேடை ஆணவம், ஆள்கட்டு, எல்லாமே அவனை ஒரு காட்டாறு போல் தறிகெட்டு ஒடச் செய்திருந்தன. ஆறோ குளமோ கரைகளுக்கு நடுவே அடங்கியிருக்கிற வரைதான் அழகு. கரைகளை மீறிவிட்டால் சுற்றுப்புறம்தான் அழியும். கரைகளை மீறிய வெள்ளமாக வளர்ந்து கொண்டிருந்தான் திருமலை. அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சின்னக் கிருஷ்ணராஜ உடையாரை - உள் பட்டணத்து அந்தஸ்துக்களை விலாசமற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்று முயன்றான் அவன். அது ஒரு வெறியாகவே அவனுள் வளர்ந்திருந்தது. ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டமோ, சின்னக் கிருஷ்ணராஜ உடையார் காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு மந்திரியாகியிருந்தார். “பாவம், நம்மூர் ராஜா மந்திரியாகப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்று இதை மேடைகளில் கிண்டல் செய்தான் திருமலை. ராஜா, மந்திரி என்ற வார்த்தைகள் கிண்டலுக்குத் தோதாக இருந்தன. தேரடி குளக்கரைகளில் இருந்த திருமலையின் பெட்டிக்கடைகளை ‘என்க்ரோச் மெண்ட்’ என்றும் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு என்றும் அங்கிருந்து அகற்றும் முயற்சியில் உள் பட்டணத்துப் பெரும் புள்ளிகள் இறங்கினார்கள். பஞ்சாயத்து போர்டில் ஆட்களைப் பிடித்து அந்த இடங்களில் உள்ள கடைகள் பொதுமக்களுக்கு மிகவும் உபயோகமானவை என்று தீர்மானம் போட வைத்துக் குறைந்த பட்ச வாடகையும் நிர்ணயிக்க வைத்துத் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான் திருமலை. ஊரார் அவனை மதித்துப் பயப்படவில்லை. ஆனால் பயப்பட்டு மதித்தார்கள். பயப்படாதவர்களை மிரட்டிக் கூட்டம் போட்டு வாயில் வந்தபடி திட்டும் வசதி அவனுக்கு இருந்தது. பெரிய கனவுகளுடனும் காதலுடனும் அவனையே அடைவதென்று உருகித் தவித்து அவனை மணந்து கொண்ட சண்பகத்துக்குக் கூட இப்போது சலிப்பாக இருந்தது. அவளோடு ஒர் அரைமணி நேரம் உடன் உட்கார்ந்து இதமாக நாலு வார்த்தை பேசக்கூட அவனுக்கு இப்போது நேரமில்லை. மாதத்தில் இருபது நாட்கள் வெளியூர்களில் அலைச்சல். மீதிப் பத்து நாட்களில், உள்ளூரிலேயே கூட்டம். குடும்பத்தையோ சண்பகத். தையோ கவனிக்க அவனுக்கு நேரமே இல்லை. கிருஷ்ணராஜன் மந்திரியாகி விட்டதால் திருமலை தன்னுடைய மேடைப் பேச்சுக்களில் விடாமல் அவனைத் தாக்கி வந்தான். மந்திரியாக இருந்த சின்ன உடையார் இந்தத் தாக்குதலைக் கண்டுகொள்ளாமலும் பொருட் படுத்தாமலும் விட்டு விட்டதால் இவனது எரிச்சல் இன்னும் அதிகமாகியது.
நாம் யாரை முழு ஆக்ரோஷத்தோடு குத்தித் தாக்குகிறோமோ அவருக்கு அது வலிக்கவில்லை என்று தெரியும்போது நமக்கு மேலும் கோபம்தான் வருகிறது. நமது தாக்குதல் நம் எதிரிக்கு வலிக்க வேண்டும் உறைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அது வலிக்கவும், உறைக்கவும், பாதிக்கவும் செய்யாதபோது நமக்கே எரிச்சல் வருகிறது. படிப்பும், பரம்பரையும் தோல்விகளாலும், இல்லாமையாலும் அதிகம் பாதிக்கப்படாத ஒரு சீரான வாழ்க்கை உயரமும் கிருஷ்ணராஜனைப் பக்குவப்படுத்தியிருந்தன.
குமுறி எழுந்து ஆத்திரப்பட்டுப் புயலாக எதிர்த்து வருகிறவனைப் பதிலுக்கு எதிர்க்காமல் முகமலர்ச்சியோடு சிரித்து வரவேற்கிறவன் அந்தச் சிரிப்பாலும் முகமலர்ச்சியாலுமே எதிரியைப் பாதி வென்றுவிட முடியும். கிருஷ்ணராஜனும் அவனைப்போல் திருமலையின் எதிர்ப்புக்கு ஆளான பிற தேசிய இயக்கத் தலைவர்களும் நீண்ட காலத்துக்கு இந்தப் பாதி வெற்றியிலேயே திருப்திப் பட்டுக் கொண்டிருந்தனர். பாதி வெற்றி என்பது எப்போதுமே அபாயகரமானது. எதிரியை மேலும் மேலும் எரிச்சலூட்டித் தயார் செய்யக் கூடியது. மதில் மேல் பூனை போன்றது என்பதை எல்லாம் பற்றி அன்று அவர்கள் கவலைப்படவில்லை. ஆளும் உரிமையும் பெற்ற சுதந்திரத்தை மேற்பார்வையிட்டுக் காக்கும் வசதியும் தங்களுக்கே நிரந்தரம் என்று சுகமாகவும், சொகுசாகவும் நம்பிக் கொண்டிருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் தனக்கும் தன் இயக்கத்துக்கும் எல்லாரும் பயப்படுகிறார்கள் என்பதே திருமலைக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால் தங்களைத் தீவிரமாக யாருமே பொருட்படுத்தவில்லை என்று ஆத்திரமூட்டியது. தங்களைக் கவனித்துப் பொருட்படுத்தி மலைத்து நிற்கும்படி ஆட்சிக்கும், சமூகத்துக்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுக்கவேண்டும் என்று அவன் எண்ணினான். மற்றவர்கள் நம்பிய எல்லாவற்றையும் அவனும் அவன் இயக்கத்தாரும் நம்பாமல் எதிர்த்தார்கள். மற்றவர்கள் கள்ளுக்கடை மறியல் என்றால் அவன் தன் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு ‘கள் உண்ண விரும்புவோர் கழகம்’ என்றான். அவர்கள் இராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற கதைகளைக் கற்பித்து ஒழுக்கத்தை வளர்க்கிறோமென்றால் அவன் அவையனைத்தையும் தெருவில் குவித்து வைத்து மண்ணெண்ணெயை ஊற்றித் தீயிடத் தயாராக இருந்தான். பொன்னுச்சாமி அண்ணனின் மரணத்துக்குப் பின்பு அவனது தீவிரம் இன்னும் அதிகமாயிற்று. பொன்னுச்சாமி அண்ணன் கடவுள், மதம் இவற்றையெல்லாம் நம்ப வில்லை என்றாலும், சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, சமூகத்தை மதிப்பது, இவற்றை எல்லாம் நம்பினார். அவன் இவை எதையுமே நம்பத் தயாராயில்லை. ஓர் அநாதையாகத் தேரடியில் வாழ்க்கையைத் தொடங்கிய அவன் ஒர் ஆறாகப் பெருகியபோது பாதுகாப்பான இரண்டு கரைகள் அன்று அந்த ஆற்றுக்கு இருந்தன. பொன்னுச்சாமி அண்ணன் ஒரு கரையாகவும், சண்பகம் மற்றொரு கரையாகவும் இருந்து காத்து வந்தார்கள். முதல்கரை தானாக உடைந்து விட்டது. இரண்டாவது கரை மெல்ல மெல்ல ஆற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் வலுவிழந்து கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனைக் கண்டிக்க யாருமே இல்லாததால் அவன் அதிகத் தவறுகளைச் செய்யத் தொடங்கினான். தவறு செய்கிறோம் என்ற உணர்வே இன்றிச் சகஜமாக அவற்றைச் செய்தான் அவன். பொன்னுச்சாமி அண்ணன் காலமான பின் ஒரு சமயம் வெளியூர்க் கூட்டம் ஒன்றுக்காக அவன் போயிருந்த போது இந்தச் சம்பவம் நேர்ந்தது. இதனால் காட்டாறு மேலும் பொங்கிப் பெருக்கெடுத்தது. வழக்கமாகப் பத்துப் பதினொரு மணிக்குக் கூட்டம் முடிந்ததும் தங்கியிருக்கிற அறைக்குப் பாட்டில்களும் சிக்கன் ரோஸ்ட், மீன் வறுவல் என்று அவனுக்குப் பிடித்த அயிட்டங்களும் வரும். எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுக்க ஒரு மணி கூட ஆகும். அன்றைக்கும் அப்படியேநடந்தது. ஆனால் ஒரு மாறுதல், ஒரு மணிக்கு மேல், “அண்னே! கொஞ்சம் வாங்க. வெளியே ஒரு ரவுண்டு போய் வரலாம்” என்று வாசலில் காரைக்கொண்டு வந்து நிறுத்தினான் அந்த ஊரில் அவனுடைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவன். “எங்கப்பா போகணும்? இந்நேரத்துக்கு ஏன் தொந்தரவு செய்யிறே?” “தொந்தரவு ஒண்ணும் இல்லே! எல்லாம் சுகம்தான் வாங்க சொல்றேன்! வந்தாத்தானே தெரிஞ்சுக்குவிங்க” என்று குறும்புச் சிரிப்புடன் மீண்டும் வற்புறுத்தினான் கூப்பிட்டவன். திருமலைக்குப் புரிந்தது. ஆனால் புரியாதது போல் நடித்தான். “ரொம்ப ஹை-கிளாஸ். புதுச் சரக்கு! இப்பத்தான் வந்திருக்குது. முத்தின மாடில்லே இளசு. அண்ணனுக்காக.” “ஹைகிளாஸ்னா...?” அவன் விவரம் சொன்னான். “ஆங்!... அதான் விசாரிச்சேன். பண வசதியும், சமூகத்திலே மேல் மட்டத்திலே இருக்கிறோம்கிற திமிரும் - சேர்ந்து இதுவரை அவனுகதான் மத்த சாதியில, பூந்து வெள்ளாடினாங்க. இப்ப மேல் மட்டத்துப் பொண்ணுங்களே இப்பிடி நம்பு லையன்லே வருதுங்கிறே, முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்கிறது சரிதான்.” எல்லாப் பொண்ணுங்களிலேயும் சிலது தட்டுக் கெட்டுப் போறப்ப இவங்களிலேயும் சிலது இப்பிடிக் கெட்டாத்தான் என்னான்னேன்?” “கெடட்டும்... நாமே கெடுப்போம். அப்பவாவது இந்த உள் பட்டணத்துக் கயவனுங்களுக்குப் புத்தி வரட்டும்.” இருளில் நெடுந்துாரம் பயணம் செய்து ஊரிலிருந்து ஒதுக்கப்புறமாக ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த வீட்டின் முகப்பில் போய்க் கார் நின்றது. முகப்பிலேயே செண்ட், ஊதுபத்தி வாசனைகள் மூக்கைத் துளைததன. அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவன், “அண்ணே! இறங்குங்குக... நீங்க திரும்ப வர்ற வரைக்கும் நானும் காரும் இங்கேயே காத்துக்கிட்டிருப்போம்” என்றான். வீட்டு வாசற்படியின் அலங்காரத் திரைச் சீலையை விலக்கி மைதீட்டிய சிவந்த விழிகளும், பொய் நாட்டமுள்ள மயக்குச் சிரிப்புமாக, கட்டான உடல் அழகுடன் கூடிய இளம்பெண் ஒருத்தி எட்டிப் பார்த்து, “வாங்க” என்றாள். உடனே யாரையோ பழி வாங்கிக் கொலை செய்யப் போவது போன்ற ஒரு வகை வெறியுடன் தான் அந்த வீட்டுக்குள் நுழைந்தான் திருமலை. ஆம்! . அதுகூட ஒரு வகைக் கொலை வெறிதான். மூன்று காரியத்துக்கும் ஒரே வகையான வெறியுணர்வு தேவைப்படுவதாலோ என்னவோ கொலை, களவு, காமம் மூன்றையும் ஒரு வரிசையில் சேர்த்து வைத்து எண்ணியிருந்தார்கள். உள் பட்டினத்து ராஜ வம்சத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி எப்படியோ நெறி தவறி நொடித்து இந்த வழியில் வந்து இப்படிப் பள்ளத்தில் வழுக்கி விழுந்திருந்தாள். அவளை அவள் எங்கிருந்து வந்தவள் என்று தெரிந்ததாலேயே அதிகமான மிருக வெறியோடு அணுகினான் அவன். தன் தாயைப் பழிவாங்கிய வம்சத்துப் பெண் ஒருத் தியை அதே விதமாகப் பழி வாங்கிவிட்டோம் என்பது போன்ற மிருகச் சந்தோஷத்தோடு தான் அன்றிரவு அங்கிருந்து திரும்பினான் திருமலை. முன்பு பொன்னுச்சாமி அண்ணனுக்குத் துரோகம் செய்தது போலவே தன் வாழ்வுக்கு மற்றொரு கரையாயிருந்த சண்பகத்துக்கும் இப்போது துரோகம் செய்ய ஆரம்பித்திருந்தான் அவன். முதலில் அவன் மேல் குருட்டு விசுவாசத்தோடிருந்த ஒரு விசிறி தொடங்கி வைத்த இந்தக் கெட்ட பழக்கம் நாளடைவில் கூட்டம் முடிந்தவுடன் மது, மாமிசம், உணவு ஆகிய மற்றவற்றைப் போல ஒர் அவசியமும் வழக்கமும் ஆகிவிட்டது. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறவர்கள் இதற்கும் சேர்த்தே ஏற்பாடு செய்தாக வேண்டும் என்பது போலவே இது மாமூல் ஆகிவிட்டது. ஏற்பாடு செய்தார்கள். வெகுசிலர் மட்டுமே தயங்கி முணு முணுத்தார்கள். தகவல் எப்படியோ ஐயா காதுவரை எட்டி அவனைக் கூப்பிட்டுக் கண்டித்தார் அவர். “கடவுள நம்பாதேன்னு துணிஞ்சு சொல்ற அளவு மானமுள்ள ஒரு சுயமரியாதைக்காரன் முதல்லே ஜனங்க தன்னை நம்பும்படியா நடந்துக்கணும். ஊர் ஊராகக் கூத்தியா, வீட்டைத் தேடிக்கிட்டுப் போயிட்டிருந்தியானா உன்னை எவன் நம்புவான்? பண வரவு செலவுலே கை சுத்தம், சிக்கனம், ஒழுக்கம் இதெல்லாம் பிடிக்காட்டி நீ இந்த இயக்கத்திலிருந்து ஒதுங்கிக்கிறது நல்லது. கண்ட கண்ட கெட்ட பழக்கங்களோடு இதிலே நீ இருந்து ஒரு வெங்காயமும் பிரயோஜனமில்லே...” அவனுக்கு ஐயா தன்னை நாலு பேரறிய இப்படிப் பகிரங்கமாகக் கண்டித்ததிலே மிகவும் வருத்தந்தான். திருவண்ணாமலையிலே ஆச்சாரியாரைக் கலந்து பேசி ஐயா மணியம்மையை மணந்து கொள்ள முடிவு செய்த போது அதைக் கண்டித்து வெளியேறியவர்களை ‘கண்ணிர்த். துளி’ என ஐயாவே கிண்டல் செய்தார். ஐயாவிடமிருந்து விலகி வெளியேறக் காலம் பார்த்துக்கொண்டிருந்த அவன் அப்போது வெளியேறிய கும்பலோடு தானும் வெளியேறினான். கண்ணிர்த் துளிகளில் ஒருவனாக மாறினான். “ஈரோட்டைவிடக் காஞ்சிபுரத்தில் தெருக்கள் பெரியவை. அகலமானவை - கைவீசிச் சுதந்திரமாக நடக்க ஏற்றவை” என்று தான் விலகிய புதிதில் பேசிய முதல் கூட்டத்திலேயே ஈரோட்டுப் பாதையிலிருந்து தான் காஞ்சிப் பாதைக்கு மாறி வந்த மாற்றத்தைத் தனக்கே உரிய சாதுரியத்தோடு குறிப்பிட்டிருந்தான் அவன். |