1 இரண்டு வீடுகளுக்கும் நடுவில் வெறுப்பும் பகையும் எப்போது, எதனால் முளைத்து வளர்ந்தன என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. என்றோ எப்படியோ தொடங்கிப் படிப்படியாய் வளர்ந்து முற்றிவிட்டது. இருவரில் ஒருவர் அங்கிருந்து போகவும் வழி இல்லை. இருவருக்குமே அவை சொந்த வீடுகள். கண்ணனுக்கு அந்த எக்ஸ்டென்ஷனில் அந்த வீடு ஒதுக்கப்பட்டபோது பக்கத்து வீடு யாருக்கு அலாட் ஆகியிருக்கிறது என்று அவன் கவனிக்கவோ அக்கறை எடுத்துக்கொண்டு விசாரிக்கவோ செய்யவில்லை. அடையாற்றில் போய்க் கலக்கும் ஒரு கால்வாய் பின்புறம் வீடுகளை ஒட்டியிருப்பதும் ஒரு தடையாக அன்று பட வில்லை. எங்காவது எப்படியாவது சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும்படி ஒரு கையகல இடம் கிடைத்தால் போதும் என்று தேடித் தேடித் தவித்த அவன் அது கிடைத்து விட்டது என்பதிலேயே திருப்தியடைந்து விட்டான். பக்கத்து வீடு ‘அலாட்’ ஆகி ஆட்கள் குடி வந்ததும் கூட அது அவன் கவனத்தைக் கவரவில்லை. தற்செயலாகத் தேடிவந்த நண்பன் ஒருவன் - அவன் திரை உலகில் தொடர்புள்ளவன் - தான் முதலில் பக்கத்து வீட்டைப் பற்றிக் கண்ணனின் காதில் மெல்லக் கிசுகிசுத்துவிட்டுப் போனான். “உன்னோட நெய்பர் யாரு தெரியுமா?” “தெரியாது. அந்த வீட்டிலே ஆண்கள் யாரையுமே காணலே. ஒரே அல்லி ராஜ்யமா இருக்குதூங்கிறது மட்டும் தெரியும்.” “அல்லி ராஜ்யம் மட்டுமில்லே. நான் சொல்லக் கூடாது. நீயே போகப் போக எல்லாம் தெரிஞ்சுக்குவே. ஒரு வயசான கிழவியும் நாலைந்து இளசுகளும்தான். சிவப்பு விளக்குப் பகுதியா இந்த இடத்தையே மாற்றிடப் போறாங்க. கிழவி பலே ஆள்.” “உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்?” “நல்லாவே தெரியும்” என்று குறுஞ்சிரிப்போடு கண்களைச் சிமிட்டினான் நண்பன். “மாலா - பாலா நாட்டியக் கலைஞர்கள்னு வாசல்லே போர்டு இருக்கா, இல்லியா?” “இருக்கு.” “நாட்டியம் மட்டுமில்லே. வேற இரண்டு குட்டிங்க ‘எக்ஸ்ட்ரா’, லயன்லியும் வந்து போவுது.” “எக்ஸ்ட்ரா லயன்னா?” “எங்க சினி பிஸினஸ்லே ஆரம்ப முயற்சிகளில் தட்டுத் தடுமாறி நுழையறவங்களுக்கு நாங்க வச்சிருக்கிற தோதான பெயர்.” சொல்லிவிட்டு மறுபடியும் நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் நண்பன்.
கண்ணனின் மனத்தில் பக்கத்து வீட்டைப் பற்றிய முதல் சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் படரத் தொடங்கியது அப்போதுதான். வீட்டில் ஆண்களே இல்லாததும் வெளியிலிருந்து நிறைய ஆண்கள் தேடிவந்து விட்டுப் போவதும் இந்தச் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தின.
நண்பனோ மேலும் கிண்டலாக மனத்தில் தைக்கிற மாதிரிச் சொன்னான்: “நாளைக்கு உன் வீட்டை அடையாளம் சொல்றவங்களே, அந்த ‘ரெகார்ட் டான்ஸ்’ பொண்ணுங்க வீட்டுக்குப் பக்கத்து வீடுன்னோ, ‘ஒருமாதிரி நாலைஞ்சு பொண்ணுங்க இருக்குதே அதுக்குப் பக்கத்து வீடுன்னோ’தான் சொல்லப் போறாங்க.” “முன்னாடி நீயே நாட்டியம்னு சொன்னியே, இப்போ திடீர்னு ‘ரெக்கார்ட் டான்ஸ்’னு சொல்றே?” “நாட்டியம்னு சும்மா ஒரு கெளரவத்துக்காக அவங்க போர்டு மாட்டியிருக்காங்க. ஆனா சாஸ்திரிய நாட்டியம்னா வீசை என்ன விலைன்னு கேட்பாங்க. பாலசரஸ்வதியா பாழ் போகுது? சினிமாவிலே வர்ற சீப் சாங்ஸுக்கு ‘எலந்தப் பயம் - எலந்தப் பயம்’னு வருமே அதுமாதிரிப் பாட்டை ரெக்கார்டுலே சுத்த விட்டுக் கையைக் காலை ஆட்டிக் கவர்ச்சியா ஆடினாக் கூட்டம் விசிலடிச்சிக்கிட்டு வாயைப் பொளந்து பார்க்கும். ரூவா நோட்டு, காசு எல்லாம் கூட வீசி எறிவாங்களே.” “அதுலே சம்பாதிச்சே வீடு வாங்கிட்டாங்களா?” “அதுன்னா அதுமட்டுமா? இன்னும் பலதும் பண்றாங்க. பணம் குமியுது.” “வீட்டு வசதி போர்டு யாருக்கு வேணும்னாலும் வீடு அலாட் பண்ணலாம். அதை நாம எப்படி யப்பா தடுக்க முடியும்? கெளரவமான குடும்பங்களுக்கு நடுவிலே இப்படிக் கண்ட கண்ட ஆட்களும் கூட வந்து குடியேறிடு வாங்க. நடுவிலே நாம தான் கிடந்து அவஸ்தைப்படணும்.” “வேளை கெட்ட வேளையிலே தடுமாறிப் போய்க் குடிச்சிட்டுக் கிடிச்சிட்டு வந்து கதவைத் தட்டினா, வீடு தெரியாம உன் வீட்டுக் கதவைக் கூட வந்து தட்டுவாங்க. ஜாக்கிரதை.” பக்கத்து வீட்டு ஆட்கள் பற்றி இப்படியொரு விவரம் தெரிய வந்ததும் கண்ணன் அதிர்ந்து போனான். அவர்களை இனி அங்கிருந்து கிளப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்றாலும் அப்படிக் கிளப்ப முயன்று பார்க்க வேண்டுமென்ற வெறுப்பும் விரோதமும் அவனுள் மூண்டன. நெருங்கிப் பழகி அறிந்து கொள்ள நேரும் முன்பே பல காலம் கலந்து பழகி அதன் கசப்பான விளைவுகளால் மூண்டது போன்றதொரு குரோதம் எப்படியோ மூண்டு விட்டது அல்லது மூட்டப்பட்டு விட்டது. முதலிலேயே விழுந்துவிட்ட இந்த அபிப்பிராயம் பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவுடனோ அவள் வளர்த்த ஐந்து பெண்ணழகிகளோடோ அவன் பேசவும், பழகவும் செய்யாமலே தடுத்து அவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு வெறுக்கும்படி செய்துவிட்டது. கண்ணன் இந்த விவரத்தை முதலில் வேறு யாருக்கும் சொல்ல வேண்டாமென்றுதான் நினைத்தான். நாமாகப் போய் மற்றவர்களிடம், ‘எங்க பக்கத்து வீடு இப்படி...’ என்று டமாரம் அடிக்கக் கூடாது என்பதுதான் முதலில் அவன் எண்ணமாயிருந்தது. அந்த எக்ஸ்டென்ஷனில் முதலில் குடிவந்த பத்துப் பதினைந்து வீடுகளில் இருந்தவர்களை ஒன்று சேர்த்துக் ‘காலனி வெல்ஃபேர் அசோசியேஷன்’ என்று ஒரு சங்கம், ஆரம்பிக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. இன்னும் பல வீடுகள் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்படவில்லை. கட்டி முடித்த வீடுகள் சிலவற்றில் அதன் உரிமையாளர்கள் குடியேறவில்லை. அதில் கண்ணனின் மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரும் ஒருவர். வலது பக்கத்து வீடுதான் அம்மிணி அம்மாளினுடையது என்றால் இடது பக்கத்து வீடு இன்னும் ஆள் குடியேறாமல் காலியாயிருந்தது. அதிலாவது நல்ல மனிதர் ஒருவர் வந்து குடியேற வேண்டுமே என்ற கவலை அவனுக்கு இருந்தது. தேடிப்பிடித்து விசாரித்ததில் அது ஒரு கதாகாலட்சேபக்காரருக்கு ‘அலாட்’ ஆகியிருந்தது. ‘ஹித பாஷாப்ரவீண இஞ்சிக்குடி நாகசாமி பாகவதர்’ - என்ற பேரும் பிரபலமாகக் கேள்விப்பட்ட பெயராயிருந்தது. அவர் இன்னும் காலனிக்குள் குடியேறவில்லை என்றாலும் ராமநாதன் தெருவில் அவர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டைத் தேடிப் போய்ப் பேசி அவரையும் காலனி நலம் நாடுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கிய கண்ணன், பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவை மட்டும் கடைசி வரையில் கண்டு கொள்ளவே இல்லை. அந்தப் பேட்டைவாசி என்ற முறையில் சங்கத்தில் உறுப்பினராக அந்த அம்மாளுக்கு எல்லா உரிமையும் இருந்தாலும் கண்ணனால் அம்மிணி அம்மாவைச் சேர்க்க முடியவில்லை. சேர்க்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை. கண்ணன் வெறுப்பும் சந்தேகமுமாக ஒரு போலிஸ்காரனின் சி.ஐ.டிக் கண்களோடு அந்த வீட்டைக் கவனித்து வந்தான். கண்ணனின் வீடு - வீட்டு வசதி வாரியம் அவனிடம் எப்படி ஒப்படைத்ததோ - அப்படியே இருக்க அம்மிணி அம்மாவின் வீடு மட்டும் ஒரு மினி பங்களாவைப் போல் புதிதாக மாறி வளர்ந்து மின்னியது. பூந்தொட்டிகள், சிறு தோட்டம், நடுவாகப் பசும்புல்வெளி. கேரளாவில் அவளுடைய பூர்வீக ஊரின் பெயரையே வீட்டின் பெயராக்கிப் ‘பொன்குன்னம்’ என்று ஒரு பக்கத்துத் தூணில் ஆங்கிலத்திலும் மறுபக்கத்துத் தூணில் மலையாளத்திலுமாகச் சலவைக் கல்லில் செதுக்கிப் பதித்திருந்தாள். வீடு பளிச்சென்று ஸ்நோசெம் பூசிக் கொண்டு கம்பீரமாக நின்றது. தோட்டத்தின் எந்த மூலையிலும் அழுக்கோ குப்பையோ இல்லை. அதிகாலையில் பளிச்சென்று நீராடி ஈரக் கூந்தல் முதுகில் புரள நெற்றியில் சந்தனக் கீற்றுடன் திண்ணை முகப்பில் குத்து விளக்கு ஏற்றிவைத்து ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் சொல்லும் அம்மிணி அம்மாவைப் பார்த்தால் ‘இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?’ என்று தான் கேள்விப்பட்டதை நினைத்துக் கொள்வான் கண்ணன். அந்த வீட்டின் மினுமினுப்பு, அழகு, சுத்தம் இவை எல்லாம் வேறு அவனுடைய எரிச்சலை அதிகமாகிவிட்டன. ‘ஒழுங்கா முறையா உழைச்சுச் சம்பாதிச்ச பணமாயிருந்தா இப்பிடி ஸ்நோஸெம்மும் டிஸ்டெம்பரும் அடிச்சு மினுக்க முடியாது. தாறுமாறாகச் சம்பாதிச்ச காசு எப்படி எப்படியோ செலவழியிது’ - என்று தனக்குத்தானே பொருமினான் அவன். விட்டுவசதி வாரியம் அவர்களுக்குரிய நிலப்பரப்பையும் அந்த நிலப்பரப்பில் கட்டிய வீட்டையும் ஒதுக்கீடு செய்யும் போது வீடுகளுக்கிடையே முள்வேலியோ காம்பவுண்டுச் சுவரோ எடுத்துக் கொடுக்கவில்லை. எல்லைக் கல் மட்டும் நட்டு அப்படி அப்படியே விட்டிருந்தார்கள். உரியவர்கள் அவரவர்களுடைய வசதிக்கேற்ப காம்பவுண்டுச் சுவரோ முள் வேலியோ எடுத்துக் கொள்ளத் தடையில்லை. கண்ணனுடைய இரு பக்கத்து வீடுகளுக்கும் காம்பவுண்டுச் சுவர் கிடையாது. வலது பக்கம் முழங்கால் உயரம் வளரும்படி சவுக்கு வளர்த்துக் கத்திரித்து விட்டிருந்தார்கள். இடதுபுறம் எதுவுமே இல்லை. ஒருநாள் மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது தன் மனைவி சுகன்யா சவுக்கு வேலி ஒரமாக நின்று பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ணனே பார்த்துவிட்டான், அவனுள் எரிச்சல் மூண்டது. அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி உடுப்பு மாற்றி முகம் கழுவிக் கொண்டு வருகிற வரை கூட அவன் மனைவி அம்மிணி அம்மாவிடம் பேசுவதை முறித்துக் கொண்டு உள்ளே திரும்பி வந்தபாடில்லை. மேலும் எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு. “சுகன்யா! சுகன்யா!” - வீடே பிளக்கிற மாதிரிக் குரலில் கூப்பாடு போட்டு அவளை அழைத்தான் அவன். காப்பியும் கையுமாக, “எதுக்கு இப்படிக் கூப்பாடு?” - என்ற கேள்வியோடு வந்த சுகன்யாவைக் கோபமாக முறைத்தான் அவன். “எத்தனை நாளாக இப்படிப் பக்கத்து வீட்டோடு இழைந்தாகிறது?” “ஏன்? அதுக்கென்ன?” “அத்தனை நல்ல சகவாசமில்லை. இன்னிக்கோட விட்டுத் தொலை! அவ்வளவுதான் சொல்லுவேன்.” “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லே! அந்தம்மா ரொம்ப நல்ல மாதிரியாக்கும்.” “சீ! வாயை மூடு! உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரிப் பேசாதே... வேண்டாம்னா வேண்டாம்.” “உடனே முடியாது! படிப்படியாக் குறைச்சுக்கிறேன்.” |