11 பாகவதர், அம்மிணி அம்மாள் தவிர மூன்றாவது எதிரியாகப் பாவிக்கக் கண்ணனுக்கு இன்னொரு மனிதர் கிடைத்தார். அவர்தான் ஐயப்பன் நகர் இரண்டாம் குறுக்குத் தெரு பதினெட்டாம் நம்பர் வீட்டுக்குரிய நீலகண்டன். கண்ணன் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின் - அதே இடத்தில் காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் புதிய செயலாளராக இந்த நீலகண்டன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நீலகண்டன் பல்கலைக்கழக இந்தித் துறையில் பேராசிரியராக இருந்தார். பரம சாது. யாரோடும் வம்பு தும்புக்குப் போகாதவர். இவர் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அதைப் புலவர் மகிழ்மாறன் தம் பாஷையில் கீழ்க்கண்டவாறு கண்ணனிடம் வந்து தெரிவித்தார்: “காலனியிலே இந்தி ஆதிக்கம் பரவுது! இல்லாட்டி எத்தினியோ ஆளுங்கள்ளாம் இருக்கறப்போ மந்தி நிகர் இந்தியைக் கற்பிக்கும் அந்தத் தொந்திக்கார நீலகண்டனைப் போய்ச் செயலாளராகத் தேர்ந்தெடுப்பாங்களா?” “நீலகண்டனுக்கு ஏது ஐயா தொந்தி? ஊதினால் ஒடிந்து விழுகிற மாதிரி ஒல்லி ஆளாச்சே அவர்?” “அட நீங்க ஒண்ணு! தொந்தி இருந்தாத்தான் சொல்லணுமா? இந்தி, மந்தின்னு வர்றப்பத் தொந்தின்னும் வந்தாத்தானே பேச நல்லா இருக்கும்?” என்று கண்ணனுக்குப் புலவரிடமிருந்து பதில் வந்தது. நீலகண்டனுக்கும் கண்ணனுக்கும் பகைமை எதுவும் இல்லை என்றாலும், தான் நீக்கப்பட்ட ஒரு பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார் என்ற ஒரே காரணத்தாலேயே அவர் வெறுக்கப்பட வேண்டியவர் என்பது போல் தோன்றிவிட்டது. அந்தக் காலனி அஸோஸியேஷன் சம்பந்தமான பழைய ரசீதுப் புத்தகங்களின் அடிக்கட்டை வேண்டுமென்று நீலகண்டனே ஒரு நாள் கண்ணணைத் தேடிக் கொண்டு வந்தார். “எப்போதும் போல உங்க ஒத்துழைப்பெல்லாம் வேணும்! இப்ப நீங்க செகரெட்டிரியா இல்லைன்னாலும் நீங்க தான் இந்த அஸோஸியேஷனோட ஃபவுண்டர் செக்ரெட்டரி, மறந்துடாதீங்க... ஏதோ போறாத வேளை என்னென்னவோ நடந்து போச்சு. அதையெல்லாம் நீங்களும் மறந்துடுங்க. நாங்களும் மறந்துடறோம்” - என்று அவர் கூறிய பரிவான வார்த்தைகளுக்குப் பதில் இதமாக நாலு சொற்கள் கூறக் கூடக் கண்ணால் முடியவில்லை. “ரசீது அடிக்கட்டை கிடிக்கட்டைல்லாம் எதுவும் எங்கிட்டக் கெடையாது. உங்க அஸோஸியேஷனோட சங்காத்தமே நம்பளுக்கு வேண்டாம். ஆளை விடுங்க சாமீ!” முகத்திலடித்தாற் போல நீலகண்டனுக்குப் பதில் சொன்னான் கண்ணன். அதன்பின் நீலகண்டன் கண்ணனைத் தேடி வரவே இல்லை.
ஆனால் காலனி நலன் நாடுவோர் சங்கம் பிரமாத வேகத்தில் செயலாற்றியது. அந்தக் காலனியில் வசிக்கும் ஐந்து முதல் பன்னிரண்டு வரையிலான வயதுள்ள குழந்தைகளுக்காக வெல்ஃபேர் அஸோஸியேஷனே காலனிக்குள் இடம் கேட்டு வாங்கி ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுகளைப் போட்டு ஒரு பள்ளிக்கூடம் தொடங்கியது. கோயில் திருப்பணி வேலைக்கு அம்மிணி அம்மாள் முதலியவர்களின் நன்கொடை தாராளமாகக் கிடைத்து அது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் முயற்சியின் பேரில் எல்லாத் தெருக்களுக்கும் புதிய தார்ச்சாலைகள், மெர்க்குரி விளக்குகள் எல்லாம் வந்தன. அஸோஸியேஷன் முக்கியஸ்தர்கள் மின்சார வாரியத்தை அணுகி வற்புறுத்தியதன் பேரில் காலனி முழுவதற்குமே அண்டர் கிரவுண்ட் கேபிள் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கண்ணன் வீட்டுத் தோட்டம் பிழைத்தது.
உண்மையில் பழைய அஸோஸியேஷன் இப்படியெல்லாம் வேகமாகவும் துடிதுடிப்பாகவும் செயற்படக் காரணமே கண்ணனைத் தலைவராகப் போட்டுப் புலவர் தொடங்கிய 'அய்யப்பன் நகர் அன்பர் கழகம்' என்ற லெட்டர் ஹெட் சங்கம்தான். எங்கே புதிய சங்கம் ஏதாவது வேகமாகச் செயல்பட்டுப் பழைய சங்கம் சோம்பேறி என்று நிரூபித்து விடப் போகிறதோ என்ற பயத்தில் கண்ணனை வெளியேற்றிய பழைய சங்கத்தினர் தீவிர வேகத்தோடு காலனி வளர்ச்சிக்குப் பாடுபட்டிருந்தனர். ஆனால் பழைய சங்கத்தை இப்படி ஒரு மிரட்டு மிரட்டி வேகமாக முடுக்கிவிட்ட புதிய சங்கமோ வெறும் லெட்டர் ஹெட்டுடன் நின்று போன மாதிரி அப்படியே தேங்கி விட்டது. திடீரென்று புலவர் ஒருநாள் படு உற்சாகத்தோடு கண்ணனைத் தேடி வந்தார். “ஒரு புது யோசனை! இதை மட்டும் கடைபிடிச்சோம்னா அத்தினி அங்கத்தினர்களும் அந்தச் சங்கத்தை விட்டுப்பிட்டு நம்ம கிட்டே வந்து சேர்ந்திடுவாங்க. இது நிச்சயம்.” “என்ன யோசனை அது?” “நம்ம அ. அ. க. சார்பிலே ஒரு ரெக்ரியேஷன் கிளப், அதாவது மனமகிழ் மன்றம் தொடங்கி, சீட்டு, கேரம் போர்டு, செஸ், டென்னிஸ், ஷட்டில்காக் மாதிரி விளையாட்டுங்களுக்கு ஏற்பாடு பண்ணிக் குடுத்தோம்னா அங்கத்தினர்கள் அலறிக்கிட்டு ஓடிவருவாங்க...” “அதென்ன அ. அ. க...?” “அதாங்க அய்யப்பன் நகர் அன்பர் கழகம்கிறத்துக்குச் சுருக்கம்.” “முழுப் பேரையுமே சொன்னாக் கூட யாருக்கும் தெரியாததைச் சுருக்கமாகச் சொல்லி என்ன ஆகப்போகுது? ஏதோ உமக்குக் கட்சிப் பெயருங்களைச் சொல்றமாதிரிச் சுருக்கிச் சொல்லிப் பார்க்கணும்னு ஆசை. சொல்லிக்குமே?” “என் யோசனை எப்பிடி?” “யோசனை எல்லாம் சரிதான்! சீட்டுக்கட்டு, கேரம் போர்டு, ஷட்டில்காக் எல்லாம் வாங்கப் பணத்துக்கு எங்கே போவீர்? சொல்லும்! அதுக்கெல்லாம் முதல்லே பணம் வேணுமே, பணம்?” “ஒரு நிதி வசூல் தொடங்க வேண்டியதுதாங்க.” “ஐயையோ! வேண்டவே வேண்டாம்! உங்களாலே முடியும்னா ‘இந்த மாதிரி எல்லாம் செய்யப் போறோம்! மெம்பராச் சேருங்க,’ன்னு முதல்லே நெறைய ஆட்களைச் சேருங்க அப்பிடி நெறையப் பேர் சேர்ந்தாங்கன்னா அப்புறம் ‘ரெக்ரியேஷன் கிளப்’ செட் அப் பண்ணிடலாம்.” “அது அலை ஒய்ந்த பிறகு நீராடலாம்னு காத்துக்கிடக்கிற மாதிரி ஆயிடுங்க! முதல்லே எல்லாம் செய்துதான் அப்புறம் ஆள் சேர்க்க முடியும்.” “சரிதான்! ஆனால் தண்ணீரே இல்லாம நீராட முடியாதே? தண்ணீரைத் தேக்கிட்டுத்தானே அப்புறம் குளிக்கலாம்?” புலவர் நிதி வசூல் என்று ஆரம்பித்தாலே கண்ணனுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கியது. பத்து ரூபாயை ஆயிரத்தொரு ரூபாயாகத் திருத்திய பழங்கதை நினைவுக்கு வந்து வதைத்தது. ‘நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ என்பது போல் புலவர் அ. அ. க. வை வளர்த்தாலும் சரி, அழித்தாலும் சரி தன்னிடம் நிதி வசூல் என்று நோட்டுப் புத்தகத்துடன் வராமல் இருந்தாலே போதும் என்று கண்ணனுக்குத் தோன்றியது. கடித முகப்பில் தன் பெயரை அ. அ. க. வின் தலைவர் என்று அச்சிட்டிருந்தாலும் தன்னைக் கேட்காமலே அ. அ.க. சார்பில் புலவர் பல காரியங்களைச் செய்வது கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. லெட்டர் ஹெட்டை வைத்துக் கொண்டே புலவர் ஒரு சங்கத்தை அட்டகாசமாக நடத்தியது கண்ணனுக்கு வியப்பூட்டியது. தன் பெயர் அச்சிட்ட லெட்டர் ஹெட்டை வைத்துக் கொண்டே தனக்கு அவப் பெயர் உண்டாக்கும் சில காரியங்களைப் புலவர் செய்தபோது கண்ணனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிக் காரியங்களை மறுக்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் கண்ணன் திணறினான். இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரே ஒரு செய்தியை மட்டும் புலவர் தன்னிடம் கோள்மூட்டி வத்தி வைத்தபடியே நம்பினான் கண்ணன். காலனி நலன் நாடுவோர் சங்கம் தன் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவமானப்படுத்தியது முதலிய சகல காரியங்களுக்கும் பின்னணியிலிருந்து சதி செய்தவர்கள் பாகவதரும் அம்மிணியம்மாளும்தான் என்று புலவர் சொல்லி வந்ததை மட்டும் அவன் அப்படியே நூற்றுக்கு நூறு நம்பினான். கண்ணன் எங்கே தன்னைத் தனியே விட்டு விட்டுப் பாகவதர் அம்மிணியம்மாள் வசம் சேர்ந்து விடுவானோ என்ற பயத்தில் அதைத் தடுப்பதற்கான நிரந்தர முயற்சியாகப் புலவர் இந்தக் கோள்மூட்டுதலைச் செய்துவந்தார். அது பயனளித்தது. கண்ணனின் அண்டை வீட்டாருடன் அவனுக்குள்ள விரோதம் தணிந்துவிடாமல் அவ்வப்போது புலவர் புதுப் புது நெருப்பைப் பற்ற வைத்துச் சமாளித்தார். “குருவாயூர் அப்பன், ஐயப்பன் சந்நிதிகள் தமிழர் வழிபாட்டு மரபுக்கு முரணானவை. அவை அமைவதை அ. அ. க. மறியல் செய்து தடுக்கும்” என்று திடுதிப்பென்று காலனி முழுவதும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. சுவரொட்டியில் மீசையோடு பிரமாதமாகத் தென்பட்ட புலவரின் புகைப்படமும் இருந்தது. இது விஷயமாகப் புலவர் கண்ணனிடம் எதுவும் பிரஸ்தாபிக்கக்கூட இல்லை. அவரே முடிவு செய்து அவரே போஸ்டரும் அடித்து ஒட்டி விட்டார். அ. அ. க. வில் தன் பெயர் சம்பந்தப் பட்டிருப்பதால் கண்ணன் புலவரைக் கூப்பிட்டுக் கண்டித்தான். புலவர் அவனுடைய கண்டிப்பைக் கேட்டுச் சிறிதும் அயரவில்லை. “நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. போராட்டத்திலே நீங்க குதிக்கணும்கிறதும் இல்லே. நானும் நம்ம படை வீரர்களுமே பார்த்துக்கிறோம். சும்மா இப்பிடி அவங்களுக்கு ஏதாவது தலைவலி குடுத்துக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி நாம இருக்கோம்கிறதையே மறந்துடுவாங்க.” “அது சரி தலைவர்னு எம் பேரை லெட்டர்ஹெட்ல போட்டுருக்கீங்களே; அதையாவது தயவு செய்து எடுத்துடுங்க.” “சே! சே! நான் அத்தனை தூரம் நன்றி மறக்கிற ஆள் இல்லீங்க. நாளைக்கே ‘அ. அ. க. வின் தன்னேரிலாத் தலைவர் கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறியல் திட்டம் கைவிடப்பட்டது’ன்னு இன்னொரு போஸ்டர் போட்டு உங்களை எல்லாரும் கொண்டாடற மாதிரிப் பண்ணிடுவேன். பயப்படாதீங்க.” கண்ணன் திகைத்தான். மகத்தான அரசியல் கட்சி ஒன்றை நடத்தும் அத்தனை பெரிய சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு புலவர் ஒரு சின்னக் காலனி அமைப்பில் சிக்கித் திணறுவதாகக் கற்பனை செய்து கொண்டான் அவன். இவ்வளவு பெரிய திறமைசாலியைச் செயலாளராகக் கொண்ட ஒரு சங்கத்தின் தலைவராக இருக்கும் திறமை தனக்குத்தான் இல்லையோ என்று ஏக்கமாயிருந்தது அவனுக்கு. இந்த நாட்டில் தலைவனாக விரும்புகிற ஒவ்வொருவனுக்கும் இவரை மாதிரி ஒரு செயலாளர் கிடைத்தால்தான் அதிர்ஷ்டம் என்று தோன்றியது கண்ணனுக்கு. அந்த வகையில் அ. அ. க. தலைவராகிய தான் அதிர்ஷ்டசாலியா இல்லையா என்பதுதான் இன்னும் அவனுக்குப் புரியவில்லை. சந்தேகமாகவே இருந்தது. அய்யப்பன் நகர் காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷனிலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு வருஷத்திற்கு மேலாகியும் அதற்குப் போட்டியாகப் புலவர் மகிழ்மாறன் தொடங்கிய் அ. அ. க. வில் இரண்டே இரண்டு உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்க முடியவில்லை. அந்த இரண்டு பேர் கூட வேறு யாருமில்லை. புலவரும் கண்ணனும்தான். பழைய சங்கத்திலோ ஜெட் வேக வளர்ச்சி. பள்ளிக் கூடம், கோயில், பார்க், புதிய சாலைகள், தெருக்களுக்கு மெர்குரி விளக்குகள், காலனி முழுவதும் அண்டர் கிரவுண்ட் கேபிள் என்று பலவற்றைச் சாதித்து முடித்திருந்தார்கள். உண்மை விளம்பி நண்பன் பாகவதரையும் அம்மிணி அம்மாளையும் பற்றி மேலும் பல தடவை தாறுமாறாக எழுதியும் அது அவர்களையோ மற்றவர்களேயோ ஒருசிறிதும் பாதிக்கவில்லை. கோயில் திருப்பணிக்கு முதலில் கொடுத்த இருபத்தையாயிரம் நிதியைத் தவிரத் தன் பெண்கள் மாலா, பாலா நாட்டிய நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்து அதன் மூலம் மேலும் ஓர் ஐம்பதினாயிரம் ரூபாய் திரட்டிக் காலனி அஸோஸியேஷனுக்குக் கொடுத்திருந்தாள் அம்மிணி அம்மாள். காலனி நலன்நாடுவோர் சங்கத்தில் பாகவதருக்கும் அம்மிணி அம்மாளுக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. சங்கத்தின் புதுச் செயலாளர் நீலகண்டனின் பெயருக்கும் மதிப்பிருந்தது. “பழைய கண்ணன் மாதிரி இந்த ஆள் சவடால் பேர்வழி இல்லே! ஆனா அடக்கமா இருந்துக்கிட்டே பெரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிச்சிருக்கான் இந்த மனுஷன்” என்று காலனி முழுவதும் நீலகண்டனைக் கொண்டாடியது. கண்ணனை எல்லாரும் மறந்தே போன மாதிரி இருந்தது. ஆனாலும் கண்ணனின் அடிமனத்தில் தன் இரு பக்கத்து வீட்டுக்காரர்கள் மேலும் ஏற்பட்டிருந்த ஆக்ரோஷம் மட்டும் தணியவே இல்லை. அவ்வப்போது முடிந்த தொல்லைகளை அவர்களுக்குக் கண்ணன் செய்யத் தவறுவதே இல்லை. சனிக்கிழமை, சனிக்கிழமை இரவு ஏழு மணி முதல் பதினோரு மணி வரை காலனியிலுள்ள ஆஸ்திக அன்பர்கள் சிலர் கூடிப் பாகவதர் வீட்டில் பஜனைப் பாடல்களைப் பாடி வந்தனர். இந்தச் சனிக்கிழமைப் பஜனை தன் தூக்கத்தைப் பாதிப்பதாகவும், சத்தம் பொறுக்க முடியாமல் காலனிவாசிகள் அவதிப்படுவதாகவும் பஜனை சத்தம் சில வயதான நெஞ்சுவலிககாரர்களின் உயிரைக் கூடப் பாதிக்கும் என்றும் கண்ணன் அ. அ. க மூலம் போலீஸ் கமிஷனருக்குப் புகார் எழுதிப் போட்டான். பாகவதருக்கு இடையூறு செய்தோம் என்ற திருப்தியில்தான் இக்கடிதத்தை அவன் எழுதினான். போலீஸ் இலாகாவிலிருந்து ஒரு ஞாயிறு காலை கண்ணனின் அந்தப் புகார்க் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓர் இன்ஸ்பெக்டர் கண்ணனைத் தேடி வந்தார். அவர் பாகவதரை எச்சரிப்பதற்குப் பதில் கண்ணனுக்குத்தான் அறிவுரை கூறிவிட்டுச் சென்றார். “இப்படி எல்லாம் புகார் செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா சார்? ஏதோ படித்த பெரியவர் மத்தவங்க ஒத்துழைப்போட பஜனை பாடினால் அதைப் போய்ப் போலீஸுக்கு எழுதறீங்களே சார்? இப்படி விஷயத்திலே நீங்களே பரஸ்பரம் அனுசரிச்சுப் போறதுதான் நல்லது. கண்ட கண்ட பொதுக் கூட்டத்து மைக் கூப்பாடும், சினிமாப் பாட்டும் காதைத் துளைக்காம இந்த மட்டிலாவது பக்திப் பாடலைக் கேட்கக் குடுத்து வச்சிருக்கேன்னு சந்தோஷப்படுங்க.” கண்ணனால் அவரை மறுத்து எதுவும் பேச முடியாது போயிற்று. |