13 ஒரு நாள் காலையில் கண்ணன் அலுவலகம் போன பின் ஒரு மாபெரும் தலைவரின் மறைவை முன்னிட்டுப் பிற்பகல் திடீரென விடுமுறை விட்டுவிட்டார்கள். அவன் எதிர்பாராத விதமாக இரண்டரை மணிக்கே வீடு திரும்ப நேர்ந்து விட்டது. அவன் அவ்வளவு சீக்கிரம் வீடு திரும்புவான் என அவன் மனைவி சுகன்யாவே எதிர்பார்த்திருக்க முடியாது. காரணம் வழக்கமாக அலுவலக நாட்களில் அவன் சாதாரணமாக மாலை ஆறரை - ஏழு மணி சுமாருக்குத்தான் வீடு திரும்ப முடியும். திடீரெனக் காலமாகிவிட்ட மாபெரும் தலைவர் ஒருவரின் பிரிவால் அறிவிக்கப்பட்ட திடீர் விடுமுறை அன்று அவனைப் பிற்பகலிலேயே வீடு திரும்பும்படி செய்திருந்தது. ஆனால் அப்போது சுகன்யாவோ குழந்தை கலாவோ வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது. குழந்தை கலா படிக்கும் பள்ளிக்கூடம் ‘ஷிப்ட்’ முறையில் நடப்பது, காலை 8 மணி முதல் 12 மணி வரை ஒரு ஷிப்ட். பின்பு 2 முதல் 6 வரை ஒரு ஷிப்ட். அதில் கலா முதல் ஷிப்டில் படிப்பதால் அவளும் இதற்குள் வீடு திரும்பியிருக்க வேண்டும். இருந்தும் மனைவியும் குழந்தையும் எங்கே போயிருப்பார்கள் என்று அவனுக்குத் திகைப்பாயிருந்தது. ஏதாவது கடைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு வீட்டு வாசலில் தயங்கி நின்றான். தெருவில் பால் பூத்திலிருந்து வீடுகளுக்குப் பால் கவர்களை வாங்கிக்கொண்டு போய்க் கொடுக்கும் வேலைக்காரக் கிழவி ஒருத்தி தற்செயலாக எதிர்ப்பட்டாள். அம்மிணி அம்மாள் வீட்டில் போய்ப் பால் கவர்களைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அந்த வேலைக்காரக் கிழவி, “உங்க வீட்டு அம்மா உள்ளே குழந்தையோட உட்கார்ந்து வீடியோ பார்த்துக்கிட்டிருக்காங்க... நீங்க வந்திட்டீங்கன்னு சொல்லிக் கூப்பிடட்டுமா?” என்று கண்ணனருகே வந்து வினவினாள். கண்ணனுக்கு இதைக் கேட்டு ஓரளவு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. தன் மனைவி குழந்தையுடன் அம்மிணியம்மாள் வீட்டில் அமர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லை. சில சமயங்களில் தன் மனைவியும், குழந்தையும் பக்கத்து வீட்டாரோடு தன்னைப் போல் அல்லாமல் சுமுகமாகப் பழகக் கூடும் என்ற எண்ணம் அவனுள் ஏற்பட்டிருந்தாலும் தான் காலனி அஸோஸியஷனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் இந்த நிலைமை மாறியிருக்கும் என்று கண்ணன் நம்பினான். அவ்வளவேன்? அவனே தன் மனைவி சுகன்யாவிடம் பகிரங்கமாக எச்சரிக்கக்கூட எச்சரித்திருந்தான். “இதுவரை எப்படியோ - இனிமேல் இரண்டு பக்கத்து வீட்டாரோடும் பழகுவதில் அர்த்தமே இல்லை. இவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னை நான் வளர்த்து உருவாக்கிய அஸோஸியேஷனிலிருந்தே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வெளியேற்றி விட்டார்கள். இனி இவர்களோடு நீ சகஜ உறவு வைத்துக் கொள்வது என்பது என் ஜன்ம விரோதிகளுடன் வலுவில், நீ பழகுவது போல் தான். ஜாக்கிரதை.” “உங்களுக்காக நாங்க பேச்சு வார்த்தையை முறிச்சுக்கணுமா என்ன?” என்று கூடச் சுகன்யா அப்போது அவனைக் கேட்டிருந்தாள். அவள் அப்படிக் கேட்டது அவனுக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கி விட்டது.
“புருஷனுக்கு அவமானத்தை உண்டாக்கிவிடறவங்கள்ளாம் யாரோ அவங்களோடு பழகறதுதான் உனக்கு மகிழ்ச்சின்னா நீ பேச்சு வார்த்தையை முறிச்சுக்காமப் பழகலாம்” என்று அப்போது மனைவியிடம் கடுமையாகப் பதில் கூறியிருந்தான் கண்ணன். இவ்வளவு கடுமையாகத் தான் எச்சரித்திருந்ததால் அவள் இனிமேல் அக்கம்பக்கத்தாரோடு கவனமாகப் பழகுவாள் என அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் எப்போதும் போல்தான் இருக்கிறாள் என்பது இன்று அவனுக்கே நிதர்சனமாகப் புரிந்து விட்டது. அவனுள் ஆத்திரம் மூண்டது.
“உங்க வீட்டுக்காரர் வாசலில் வந்து காத்திருக்கிறாரம்மா” என்று அந்த வேலைக்காரி போய்ச் சொல்லியிருந்ததாலோ என்னவோ சிறிது நேரத்தில் சுகன்யா குழந்தை கலாவுடன் பக்கத்து வீட்டிலிருந்து வெளியேறி வந்தாள். “ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? நீங்க இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல்லே?” “எத்தனை நாளா இந்தக் குலாவல்?” “உள்ளே வந்து பேசுங்க... தெருவிலே ஏன் சத்தம் போடணும்?” “நடுத் தெருவிலே கூடச் சத்தம் போடுவேன். அவங்க வீட்டிலே வந்துகூடக் கூப்பாடு போடுவேன்! எனக்கென்ன பயமா?” தன் கணவன் எதற்காக இப்படி வெறி கொண்டவன் போல் கத்துகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. முன்பெல்லாம் காம்பவுண்டுச் சுவர்கள் இல்லாததால் காதும் காதும் வைத்தாற் போல் பின்பக்கமாகப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். காம்பவுண்டுச் சுவர் எடுத்துத் தடுத்த பிறகு அது முடியாமல் போய்விட்டது. ‘பகலில் வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்தபின் பொழுது போக வேண்டும் என்று இந்தப் பக்கம் பாகவதர் வீட்டிலோ அந்தப் பக்கம் அம்மிணி அம்மாள் வீட்டிலோ பேசப் போனால் கூடாதென்று அதற்குத் தடை உத்தரவு, தடுப்புக் காவல் சட்டம் எல்லாம் போட்டால் என்ன செய்வது? இருபத்து நாலு மணி நேரமும் சிறை வைத்தாற் போலக் குழந்தையும் தானுமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கவா முடியும்? அப்படி என்ன அக்கம்பக்கத்து வீட்டார் இவர் தின்கிற சோற்றிலா மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்? ஏதோ விரோதம், அஸோஸியேஷன் சண்டை இதெல்லாம் இவர் மட்டில் சரி. எனக்கென்ன வந்தது? நான் சகஜமாகப் பழகிக் கொண்டிருக்கிறவள். ஏன் முகத்தை முறித்துக் கொள்ள வேண்டும்?’ என்று எண்ணினாள் சுகன்யா. பகைமையும் வெறுப்பும் மனிதனை எவ்வளவு கொடிய மிருகமாக மாற்றிவிட முடியும் என்பதற்கு உதாரணமாக அன்று நடந்து கொண்டான் கண்ணன். வேண்டுமென்றே அன்று மனைவியைச் சண்டைக்கு இழுத்தான் அவன். “இப்படிச் செய்யறதும் புருஷனுக்குத் தெரியாமச் சோரம் போறதும் ஒண்ணுதான்! சோரம் போறதுக்குத் தவணை முறையிலே விலை பேசற வீட்டிலே இருக்கிற ஆளுங்களோட பழகின வேற என்ன புத்தி வரும்?” “நாக்கை அளந்து பேசுங்க. வாயிலே வந்ததைப் பேசாதீங்க.” “மான ரோஷம் இல்லாத ஜன்மங்களுக்கு என்ன பேசினாலும் உறைக்கப் போறதில்லே. எத்தனை தரம் கண்டிச்சாலும் புத்தி வரப் போறதில்லே. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்னு பழமொழியே இருக்கு! தெரியுமா?” “இதா பாருங்க... என்னைத் திட்டறத்துக்கும் வையிறத்துக்கும் வேணா உங்களுக்கு உரிமை இருக்கு. அநாவசியமா அடுத்தவங்களைத் திட்டறதோ தாறுமாறாப் பேசறதோ கொஞ்சங்கூட நல்லா இல்லே.” “ஆமாம்! பெரிய படிதாண்டாப் பத்தினிங்க பாரு... நான் பேசறதைக் கேட்டு அப்பிடியே நாந்துக்கிட்டுச் செத்துறப் போறாங்க...” “அவங்கவங்க மனசறிய ஒழுங்கா இருந்தாப் போறும். இன்னொருத்தர் மெச்சறதுக்காக வேஷம் போடணுமா என்ன?” “யாரை வேஷம் போடருங்கன்னு சொல்றே?” “...” “என்னைத்தானே சொன்னே?” “பொதுவாச் சொன்னேன்! உங்களுக்கும் பொருந்தும்னா எடுத்துக்குங்களேன்.” கண்ணன் இரையெடுக்கப் பசித்திருந்த புலி போல் அவள் மீது பாய்ந்தான். சரமாரியாக அடிகள் விழுந்தன. தடுப்பதற்காகக் குறுக்கிட்ட குழந்தை கலாவுக்கும் அடிகள் விழுந்தன. ஒரே கூப்பாடு. குழந்தை அலறியது. “அடிக்கிறதை நிறுத்துங்க மிஸ்டர் கண்ணன்! இது உங்களுக்கே நல்லா இருக்கா? படிச்சு நாகரிகமானவங்க இப்படியா நடந்துக்கறது?” திரும்பினால் வாயிற்படியில் அம்மிணி அம்மாளும் அவள் மகள் நந்தினியும் நின்று கொண்டிருந்தார்கள். கண்ணனுக்கு எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தது போல் ஆயிற்று. “நீங்க போகலாம். உங்களை யாரும் இங்கே அட்வைஸ் பண்ணக் கூப்பிடலே... இது காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷன் இல்லே... என் வீடு.” “உங்க வீடாயிருக்கலாம்! ஆனால் அதுக்காக நீங்கள் ஆட்களை அடிச்சுக் கொல்றதைப் பார்த்துக்கிட்டு அக்கம் பக்கத்தாரும் சும்மா இருக்க முடியாது.” “சும்மா இருக்காமே டொனேஷனை அள்ளிக் கொடுத்து விலைக்கு வாங்கிடறதுக்கு இது காலனி அஸோஸியேஷன் இல்லே மேடம்! என் வீட்டிலே நான் நெனைச்சதைப் பண்ணுவேன்.” “நிங்களொட பார்யை ஒரு தப்பும் பண்ணலை, நான் தான் வீடியோப் பார்க்க அவளைக் கூப்பிட்டேன். அவளையோ குழந்தையையோ தயவு செய்து அடிக்காதீங்க...” “இது கெளரவமான குடும்பம். தப்புப் பண்றவங்களைத் தண்டிச்சுத் திருத்தறதுதான் இந்த மாதிரி மானமுள்ள குடும்பங்களில் வழக்கம். உங்க வீடு மாதிரி மான ரோஷம் எல்லாம் வித்து முதல் பண்றவங்க எப்பிடி வேணுமானா இருக்கலாம். நாங்க அப்படி இருக்க முடியாதே?” இதைக் கேட்டு அம்மிணியம்மாள் கோபப்படவில்லை யானாலும், கூட இருந்த அவளது மகள் நந்தினி கடுங் கோபத்தோடு, “மிஸ்டர் கொஞ்சம் நாக்கை அடக்கிப் பேசுங்க! சுகன்யா அக்காவுக்காக உங்களுக்கும் மரியாதை குடுத்துத் தொலைக்க வேண்டியிருக்கு இல்லாட்டி நடக்கறதே வேறே” என்று பதில் கொடுத்தாள். கண்ணன் சீறினான். அம்மிணி அம்மாள் தன் மகளின் வாயைப் பொத்தித் தடுக்க முயன்றாள். “ஐ ஸே கெட் அவுட், போங்க வெளியிலே... உங்களை இங்க யாரும் கூப்பிடலே” என்று அவர்கள் முகத்திலடித்த மாதிரி வாயிற் கதவை அறைந்து சாத்தினான் கண்ணன். தன் மேல் பாய்ந்த கோபம் வீடு தேடித் தன்னைக் காப்பாற்றும் நல்லெண்ணத்தோடு வந்தவர்கள் மேல் திரும்பியது கண்டு சுகன்யா வருத்தப்பட்டாள். தனிப்பட்ட முறையில் ஏங்கல் தாங்கலில் தனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கக் கூடிய அம்மிணி அம்மாளையும் நந்தினியையும் வெளியே போகச் சொல்லிக் கணவன் கதவை அடைத்தது கண்டு அவள் பொறுமை இழந்தாள். “என்னத் திட்டுங்க, அடியுங்க, உதைங்க... ஏத்துக்கிறேன். வீடு தேடிப் படியேறி வந்த அவங்களை ஏன் கன்னா பின்னான்னு பேசினீங்க? இது உங்களுக்கே நல்லா இருக்கா?” “அவங்க என்னடி அவங்க? இந்த மாதிரிப் பொழைப்பு நடத்தற ஜன்மங்களுக்கு மரியாதை ஒரு கேடா?” “எந்த மாதிரிப் பொழைப்பு நடத்தறாங்க? உங்களுக்கு அவங்களைப் பத்தி என்ன தெரியும்? எவனோ பொறாமைக்காரன் சொன்னதை நம்பி நாக்கிலே நரம்பில்லாமப் பேசாதீங்க... அவங்க அளவு தாராள மனசு யாருக்கும் கெடையாது...” “ஆங்... தாராளம்... பெரிய தாராளம் தாண்டீ. ஏன்னா எந்த ஆம்பிளை வந்தாலும் பணத்தை வாங்கிக் கிட்டு ரொம்பத் தாராளமா...” வாயிற் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள். கண்ணன் திறந்தால் நாகசாமி பாகவதர் நின்றுகொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் அவன் வாங்க என்று சொல்லாமலிருந்தும் கூட அவராகவே உள்ளே வந்தார். அவராகவே ஆரம்பித்தார்: “கண்ணன்! இதென்ன இப்பிடித் தெருவிலே போறவங்க வர்றவங்கள்ளாம் உங்க வீட்டு வாசல்லே கூட்டமா நின்னு வேடிக்கை பார்க்கிற மாதிரிப் பண்ணிட்டீங்க? இதெல்லாம் என்ன?” “உங்களை யாரு தூது அனுப்பிச்சாங்க? அந்த மலையாளத்துப் பொம்பிளைதான் அனுப்பிச்சாளா? நீங்க யாரு என் வீட்டு விஷயத்துலே வந்து தலையிடறதுக்கு?” “நியாயமான கேள்விதான் கண்ணன்! ஆனா நீங்க என்னை விரோதியா நெனைக்கிற அளவு நான் உங்களை இன்னும் என் விரோதியா நெனைக்கலே. அதுனாலே உங்களைச் சமாதானப்படுத்த வந்திருக்கேன்னுதான் வச்சுக்குங்களேன்.” “இங்கே உங்க சமாதானத்தை யாரும் தேடலே. நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போகலாம்.” “நீங்க இப்படிப் பேசறதுனாலே மனசு வருத்தப்பட்டு உடனே வெளியேறிப் போயிடறவன் நான் இல்லே. இதோ பாருங்க மிஸ்டர் கண்ணன்! ஒருத்தர் நல்லது சொல்றதுக்காகத் தேடி வர்றப்போ மத்தவங்க வெத்தலை பாக்கு வச்சு அழைச்சுத்தான் வரணும்னு அவசியமில்லே. நீங்க அழைக்காமலே நான் தேடிவந்து உங்களுக்கு நாலு நல்லதைச் சொல்லலாம். நீங்க விரும்பாட்டாலும் கூடச் சொல்லலாம். இதிலே நான் மான அவமானம் பார்க்கிறவன் இல்லே.” “அடுத்தவங்களுக்கு நல்லது சொல்றதுக்கோ செய்யறதுக்கோ முதலில் உங்களுக்கு ஒரு யோக்கியதை வேணும் பாகவதர்வாள்!” “மிஸ்டர் கண்ணன்! நீங்க இதைவிடக் கடுமையா என்னை விமர்சிச்சாலும் நான் திரும்பிப் போயிட மாட்டேன். கவலைப்படாதீங்கோ. யோக்யதை, ஒழுக்கம், நன்னடத்தை இதெல்லாம் இன்னொருத்தர் மெச்சறததுக்காகவோ இன்னொருத்தர் திருப்திக்காகவோ கடைப்பிடிக்கிற விஷயங்கள் இல்லே. நம்ம திருப்திக்காக நாமே மனப்பூர்வமாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.” “அதான் தெரியுதே! நீங்க எல்லாத்தையும் உங்க திருப்திப்படி தான் செய்துக்கிறீங்க” என்று கூறிவிட்டு விஷமத்தனமாகச் சிரித்தான் கண்ணன். பாகவதர் அதைக் கேட்டு எதுவுமே பாதிக்கப்படவில்லை. “மிஸ்டர் கண்ணன்! உண்மையில் நமக்கிடையே எந்த விரோதமும் இல்லை. நீங்களாகக் கற்பித்துக் கொண்ட கற்பனை விரோதங்களாலே வீணுக்குச் சிரமப்படுகிறீர்கள்! ஒரு மனிதனைப் போதுமான அளவு அழுகச் செய்வதற்கு அவன் மனத்தில் தேங்கும் கற்பனை விரோதங்களும், குரோதங்களுமே போதுமானவை. இதற்கு உங்கள் மனைவியும், குழந்தையும் என்ன செய்வார்கள்? பாவம்! அவர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? எங்கள் மேலுள்ள விரோத மனப்பான்மையால் சுகன்யாவையும், குழந்தை கலாவையும் சிரமப்படுத்தாதீர்கள். அதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் இப்போது வந்தேன்.” “இந்த பிலாஸபியை எல்லாம் ஏதாச்சும் கதையிலே சொல்லுங்க. ஜனங்க கைதட்டுவாங்க.” “கதையிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கைக்குப் பயன்படாத எதையும் கதையில் நான் சொல்லுவதில்லை. என்னைப் பொறுத்தவரை நல்லதை எங்கேயும், எதிலும், யாரிடமும், எப்போதும் சொல்றதுலே தப்பில்லேன்னு நினைக்கிறவன் நான்.” “அப்படிநெனச்சுத்தான் காலனி அஸோஸியேஷன்லேருந்து என்ன வெளியேத்தச் சதி பண்ணினீங்கல்லே?” “வீண் கற்பனை! அஸோஸியேஷன் மெம்பர்ஸ் உங்க மேலே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாங்க. நீங்க வெளியேறினிங்க. அப்பக்கூட உங்களை வெளியேத்தக் கூடாதுன்னு நானும் அந்தம்மாளும் முடிஞ்சவரை வாதாடிப் பார்த்தோம். யாரும் கேட்கலே, யானை தன் தலையிலேயே மண்ணே வாரிப் போட்டுக்கிட்ட மாதிரி நீங்களே உங்க எதிர் காலத்தைக் கெடுத்துக்கிட்டீங்க மிஸ்டர் கண்ணன். எங்களாலே எதுவும் நடக்கலே!” “இதெல்லாம் சும்மாக் கதை விடறீங்க, உங்களைப் பத்தி நான் ரொம்ப நல்லாவே தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.” “நிச்சயமா இல்லே மிஸ்டர் கண்ணன்! ‘தூஷணம் ஞான ஹீனம்’பாங்க. துவேஷம் அறிவைக் கெடுத்துடறது. நல்லது கெட்டது பகுத்தறிய முடியாத துவேஷத்தாலே யாரையும், எதையும் ஒருத்தராலே சரியா அறிய முடியாது. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க மனசிலே தேங்கிப் போயிருக்கிற துவேஷம் சிறிது வடிஞ்சு விலகிப் போறப்போ நீங்க சரியா என்னைப் புரிஞ்சுப்பீங்க. அப்போ நான் யார் எப்படிப்பட்டவன்னு சரியா உங்களாலே கவனிச்சுப் பார்க்க முடியும். அதுவரை நான் உங்களைப் பார்க்கலே. பேசலே. வரேன்.” பாகவதர் அவன் வெளியே போகச் சொல்லிக் கூப்பாடு போடுமுன் தானகவே வெளியேறிச் சென்று விட்டார். அன்று மாலையில் மகிழ்மாறன் கண்ணனைத் தேடி வந்து மறுபடி பாகவதரையும், அம்மிணியம்மாளையும் பற்றி ஒரு வண்டி புகார்களை அளந்து விட்டுப் போனார். லேசாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்த கண்ணனுடைய மனம் எனும் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. அங்கு ஏற்கெனவே தேங்கி நாற ஆரம்பித்திருந்த துவேஷம் என்ற பழைய வெள்ளம் வடியாததோடு புதிதாகவும் வெறுப்பு ஊறித் தேங்க ஆரம்பித்திருந்தது. |