15 சொல்லியபடி நண்பன் மறுநாளே கண்ணனைத் தேடி வந்து பேட்டிக்காகத் தயாரித்த கையெழுத்துப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டான். புலவரும், உண்மை விளம்பியுமாகச் சேர்ந்து பிரமாதமாகப் பொடி வைத்துத் தயாரித்திருந்தார்கள் அதை. கண்ணனே தயாரித்திருந்தால் இவ்வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்க முடியாது. பட்டைச் சாராயச் செலவுக்கு முப்பது ரூபாய் செலவழித்தாலும் பரவாயில்லை விஷயம் கண்ணன் எதிர்பார்த்ததை விடப் பிரமாதமாக வந்திருந்தது. கண்ணன் அதை இரண்டாவது தடவையாக மறுபடியும் படித்துப் பார்த்தான். ‘அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பற்றிப் பேட்டி கொடுக்கிற அளவு நான் ஒன்றும் அத்தனை பெரிய மனிதன் இல்லை. சர்க்கார் உத்தியோகம் பார்க்கும் ஒரு கெளரவமான குடும்பத்தலைவன். அவ்வளவே. அதோடு தன்மானமுள்ள நல்ல தமிழன். நகர வாழ்க்கையில் அக்கம்பக்கத்திலே உள்ளவர்கள், ஒழுக்க சீலர்களா, கெளவரமானவர்களா என்றெல்லாம் சரி பார்த்து அப்புறம் குடியேறுவது சாத்தியமில்லை. யார் வேண்டுமானலும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாம். இருக்க முடிகிறது. நம் கெளரவத்தை மட்டுமே நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். எங்கே எந்த வீட்டில் விபசாரம் நடக்கும், யார் எங்கே கள்ளச் சாராயம் காய்ச்சுவார்கள், யார் எங்கே மஸாஜ் பார்லர் என்ற பெயரில் தசை வியாபாரம் செய்வார்கள் என்றெல்லாம் தெரியாமல் அவற்றிற்கு நடுவே அல்லது அவற்றிற்கு மிகமிக அருகிலேயே ஒரு கெளரவமான குடும்பஸ்தன் குடியேறிவிடும் அபாயம் நகர வாழ்வில் இருக்கிறது. எங்கள் அய்யப்பன் நகர் காலனியில் ஒரு அஸோஸியேஷன் இருக்கிறது. இதன் காரியதரிசியாகக் கொஞ்ச நாள் நான் இருந்தேன். அப்போது இந்தக் காலனிக்குப் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. வெறும் ஹவுஸிங் யூனிட் எக்ஸ்டென்ஷன் நெம்பர் 64 என்று மட்டும் தான் இருந்தது. இதற்குக் கற்பின் பெருமையும், நல்லொழுக்கத்தின் சிறப்பையும் வற்புறுத்துகிறாற் போலக் கண்ணகி நகர் என்று பெயர் வைக்கவேண்டும் என்பதாக என் நண்பரும் காலனிவாசியுமான புலவர் மகிழ்மாறன் அபிப்ராயப்பட்டார். உடனே நான் அதிர்ச்சியடையத் தக்க விதத்தில் என்னுடைய இரு பக்கத்து அண்டை வீட்டார்களாகிய இஞ்சிக்குடி பாகவதரும், செக்ஸ் அணுகுண்டு நந்தினியின் தாயாகிய அம்மிணி அம்மாவும் அதை ஆட்சேபித்தார்கள். என்னடா கற்பு, கண்ணகி, ஒழுக்கம் என்கிற மாதிரிப் பெயர்களைக் கேட்டாலே இந்த இருபக்கத்து வீட்டாருமே எரிச்சலடைகிறார்களே என்று நான்கூட ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தேன். என்னுடைய பக்கத்து வீட்டார்களைப் பற்றி நான் புரிந்து கொண்டு அதிர்ச்சியும், திகைப்பும் அடைய இந்தச் சந்தர்ப்பம் எனக்கு உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னெரு சமயம் இரவு பன்னிரண்டு மணி இருக்கும். யாரோ என் வீட்டு வாசற்கதவைத் தட்டினார்கள். போய்த் திறந்தால் குடிவெறியோடு தள்ளாடும் ஓர் ஆள் வாயில் புகையும் சிகரெட்டுடன் ‘அந்த டான்ஸ் காரிங்க வீடு இது தானேப்பா?’ன்னு கேட்டுக்கிட்டே உள்ளே நுழையப் பார்த்தான். நான், ‘பக்கத்து விடுதான்! அங்கே போய்க் கதவைத் தட்டு. திறப்பாங்க’ன்னு அனுப்பி வச்சேன். இது மாதிரி வெளியிலே சொல்லவே கூச்சப்பட வேண்டிய பல தர்மசங்கடங்கள் பக்கத்து வீடுகளாலே ஏற்படறதாலேதான் அவங்களை நம்மாலே மறக்க முடியறதில்லே. செக்ஸ் ஸ்டார் ரிகார்ட் டான்ஸ்காரிங்கன்னெல்லாம் பேர் வாங்கிடற நடிகைங்க நம்ம வீட்டுப் பக்கத்திலே குடியிருக்கிறதிலே இன்னொரு ஆபத்து என்னான்னா, ‘நீ செக்ஸ் ஸ்டார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலேதானே குடியிருக்கே?’ன்னு நாக்கைப் பிடுங்கிட்டுச் சாகிற மாதிரி மத்தவங்க நம்மை விசாரிப்பாங்க.
இன்னொரு சமயம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு பட்டுப் புடவைக் கடைக்காரர் என்னைத் தேடி வந்தார். ‘சார் இது தானே பாகவதர் வீடு? நிறையப் பட்டுப்புடைவை சரிகை வேஷ்டி எல்லாம் விலைக்கு இருக்குன்னு பாகவதர் வரச் சொன்னருங்க’ என்றார். கதாகாலட்சேபத்திலே இராமாயண பட்டாபிஷேகம் போன்ற சமயங்களில் கிடைக்கிற பட்டுப் புடைவை, பட்டு வேஷ்டிகளைச் சேர்த்து வைத்து விலைக்கு விற்கிற பாகவதர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலே நாம் இருக்கோம்னு அப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது.
நம்ம அக்கம்பக்கத்து வீடுகளிலே இருக்கிறவங்களை விடத் தள்ளி இருக்கிற நல்லவங்க யாரையாவது அண்டை வீட்டாராகப் பெற்றிருக்கக் கூடாதான்னு நான் அடிக்கடி ஏக்கம் அடைவதுண்டு.’ என்று முடிந்திருந்தது கண்ணனின் பேட்டிக் கட்டுரை. வக்கீலிடம் காட்டி இந்தப் பேட்டியைப் படித்துவிட்டுப் பாகவதரோ அம்மிணி அம்மாளோ எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க வழியில்லை என்பதை உறுதி செய்து கொண்டு விட்டதாக உண்மை விளம்பியும், புலவரும் உறுதி கூறி விட்டுப் போயிருந்தார்கள். பரவாயில்லை! அவர்கள் வாங்கிச் சாப்பிட்ட பட்டை நன்றாகத்தான் வேலை செய்திருக்கிறது. ரொம்பத் தந்திரமாக அக்கம் பக்கத்து வீட்டார் மட்டமான ஆட்கள் என்பதைப் பேட்டியில் சுட்டிக் காட்டி எழுதிவிட்டார்கள். என்ன இருந்தாலும் உண்மை விளம்பி பெரிய கில்லாடிதான் என்று நினைத்து மனத்துக்குள் பாராட்டிக் கொண்டான் கண்ணன். காலனிக்குப் பெயர் சூட்டும்போது அஸோஸியேஷனில் ஏற்பட்ட தகராறை வைத்துப் பாகவதருக்கும் அம்மினி அம்மாவுக்கும் கற்பில் நம்பிக்கை இல்லை என்பதை நாசூக்காகக் கொண்டு வந்த யோசனை புலவர் மகிழ்மாறனுடையதாக இருக்க வேண்டும் என்று கண்ணனே ஊகித்துக் கொண்டான். அவர்கள் ‘கண்ணகி நகர்’ என்பதற்குப் பதில் ‘சாஸ்தா நகர் எக்ஸ்டென்ஷன்’ எனப் பெயர் வைக்க விரும்பினார்கள் என்பதைச் சொல்லியிருந்தால் அவர்களைப் பற்றி நல்லபிப்ராயம் வந்துவிடும் என்று நயமாக அப்பகுதி உண்மைக்கு இருட்டடிப்புச் செய்து கண்ணகி நகர் என்ற பெயரை அவர்கள் இருவரும் சேர்ந்து எதிர்த்தார்கள்’ என்பதை மட்டும் கூறிய புலவரின் சாமர்த்தியம் கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது. பாகவதரும், அம்மிணி அம்மாளும் கொடுத்த யோசனையை ஏற்று அதில் சிறிது மாறுதலுடன் தான் ‘ஐயப்பன் நகர்’ என்ற பெயரே வைக்கப்பட்டது என்ற உண்மையைக் கூடப் புலவர் தந்திரமாக மறைத்திருந்தார். தன்னை அவமானப்படுத்திய இவர்கள் பெயர் பத்திரிகைளில் நாறட்டும் என்ற ஆத்திரத்தோடு கண்ணன் காத்திருந்தான். சொல்லிவிட்டுப் போனபடி பத்திரிகை நிருபர் கண்ணனை மறுபடி தேடி வந்தார். வந்த நிருபருக்குத் தமிழும் மலையாளமும் நன்றாகத் தெரிந்திருந்தது. கண்ணன் தமிழில் படிக்கப் படிக்க அவர் அதை மலையாளத்தில் உடனே மொழி பெயர்த்து எழுதிக் கொண்டு விட்டார். “இதுவரை வந்த இந்த சீரிஸ்லியே இதுதான் டாப்பா இருக்கப் போகுதுங்க. எல்லாருமே இதுவரை எங்க ‘நெய்பர்’ இந்திரன் சந்திரன்னுட்டாங்க. அதனாலே ரொட்டீன் ஆகப் போயிடிச்சுங்க. இப்ப முதமுதலா நீங்க ஒருத்தர்தான் உங்க நெய்பர்ஸைப் பற்றி வாழைப்பழத்திலே ஊசி இறக்கிற மாதிரி நைஸாச் சாடியிருக்கீங்க. அதுனாலே நெறைய ரீடர்ஸ் இதைப் பத்திப் பேசப்போறாங்க. பெரிய காண்ட்ரவர்ஸி வரப்போகுது. தமிழ்ப் பேப்பருங்ககூட இதை மொழி பெயர்த்துப் போட்டாலும் போடுவாங்க” என்று அவனைப் பாராட்டிவிட்டுப் போனார் நிருபர். ‘காண்ட்ரவர்ஸி’ என்றதும் கொஞ்சம் தயக்கமும் பயமும் ஏற்பட்டாலும் அந்தப் பேட்டி பாகவதரையும் அம்மிணி அம்மாவையும் வாசகர்கள் மத்தியில் சின்னாபின்னப் படுத்தி நாற அடிக்கப் போகிறது என்கிற ஒரு குரூர எதிர்பார்த்தலில் அவன் மனம் மகிழ்ந்தது. இந்தக் குரூர சந்தோஷத்தில் திளைத்திருந்த அவன் அவர்கள் பேட்டியில் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை நிருபரிடம் விசாரிக்கவும் இல்லை, ஆவலோ பரபரப்போ காட்டவும் இல்லே. நிருபர் அசகாய சூரனாகை இருந்ததனால் கண்ணனைப் புகழ்ந்து தள்ளிய வேகத்தில் வேறெதையும் பற்றித் தன்னிடம் அவன் விசாரிக்கிற ஞாபகமே அவனுக்கு எழாதபடி செய்துவிட்டுப் போயிருந்தான். அதேசமயம் தன்னைப் பற்றிப் பாகவதரோ, அம்மினி அம்மாளோ குறை சொல்ல எதுவும் இல்லை என்பதையும் அவன் தனக்குத் தானே நினைவு கூர்ந்தான். ‘இனவெறியர், கடவுள் நம்பிக்கை இல்லாத ஆள், முகடு, பழகத் தெரியாது, காலனி அஸோஸியேஷன் செயலாளராக எதுவுமே செயல்படமல் சோம்பேறியாகக் காலம் கழித்துவிட்டார். ஆயிரம் ரூபாய் பணம் செலவழித்துக் காலனியில் எல்லார் வீட்டிலும் தாறுமாறாகத் தாரில் எழுதத் தூண்டினார்’ என்று இப்படி ஏதாவது குறைகளை அவர்கள் தன்னைப்பற்றி அடுக்க முடியுமே ஒழிய, ‘கேரக்டர் அஸாஸிநேஷன்’ போல எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கண்ணனுக்கு உறுதியாக இருந்தது. தான் அவர்களைப் பற்றிக் கொடுத்திருக்கும் பேட்டியிலோ சட்டப்படி தன் மேல் நடவடிக்கை எடுக்கமுடியாத ஆனால் ‘கேரக்டர் அஸாஸிநேஷன்’ போலவே தெளிவாகத் தெரியக் கூடிய விஷயங்கள் அடங்கியிருப்பதை அவன்புரிந்து கொண்டுதான் இருந்தான். அதை அவ்வளவு சாதுரியமாகத் தயாரித்த தன் விஷமக்கார நண்பர்களுக்கும் அவர்களுக்கு ஊக்கமளித்திருந்த நாட்டுச் சரக்குக்கும் கூட நன்றி செலுத்தினான் கண்ணன். ‘உண்மை விளம்பி’ என்கிற பத்திரிகையே கூட இந்த நாட்டுச் சரக்கின் அபார உற்சாகத்தில்தான் வெளிவந்து கொண்டிருக்கிறது என்கிற பரம இரகசியம் கண்ணனுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்திருந்திருந்தது. கூடவே இன்னொரு தயக்கமும் இருந்தது. ‘இப்படிப் பட்ட செய்திகள் நாட்டில் இப்போதெல்லாம் எந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கி யாரையும் பாதிப்பதில்லை, மாறாகச் சர்ச்சைக்கு ஆளாகிறவர்களின் பப்ளிஸிடி தான் அதிகமாகும்’ என்று எப்போதோ பாகவதர் தன்னிடம் கூறியிருந்ததை இன்று மீண்டும் நினைத்தான் கண்ணன். ஒருவகையில் பார்த்தால் இன்றைய மனிதர்களையும், சமூகத்தையும் பற்றிய பாகவதரின் கணிப்புத் துல்லியமானதும் சரியானதும் ஆகும் என்றே அவனுக்குத் தோன்றியது. ஒழுக்கமாயிருக்கிறோம் என்ற சுயதிருப்தி தனிமனிதனுக்கு ஆத்ம சந்தோஷத்தைத் தரலாமே ஒழிய சமூகம் அவனை ஒரு வாட்ச்மேனைப் போலவோ போலீஸ்காரனைப் போலவோ கவனித்துக் கொண்டிருப்பதை விட்டு அதிக காலமாயிற்று. தனக்கு உதவுகிறவர்கள், தன்னை ஆதரிப்பவர்கள், தனக்குப் பயன்படுகிறவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களை ஏற்றுக் கொண்டு விடுகிற ஃபிளெக்சிபிலிட்டி சமூகத்துக்கு வந்து ரொம்ப நாளாகியிருக்கவேண்டும். அது அம்மிணி அம்மாளின் ஆரம்ப கால வாழ்வையோ இன்றைய தனி வாழ்வையோ கவனிக்கத் தயாராயில்லை. பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை மட்டுமே கவனித்துப் பாஸ் மார்க் போட்டு விடுகிறது. அதே மாதிரித்தான் பாகவதர் விஷயத்திலும் நடக்கிறது. ‘அவருக்குக் கிடைக்கிற பட்டுப் புடைவை, சரிகை வேஷ்டிகளைத் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதியை விற்கிறார், இதிலென்ன தவறு?’ என்று கூட விவாதம் புரிய முடியும். ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ அம்மிணி அம்மாள் வயதிலும் கட்டு விடாத ஒர் அழகிய முதியவள் அப்படி அழகிய முதியவர் ஒருவரிடம் சபலத்தோடு பழகுவது பெரிய சமூகக் குற்றமாகக் கருதப்படப் போவதில்லை. மனம் பெரிதாகப் பெரிதாகச் சிறிய குற்றங்களைப் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிசாக்குகிற மனப்பான்மை தானே கரைந்து போய்விடுவது சகஜம் என்கிறார்கள். அப்படியானால் தனக்கு இன்னும் மனம் விசாலமடைய வில்லையா என்ற கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் கண்ணன். இன்னொன்றையும் அவனே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. இன்றுள்ள நிலையில் அம்மிணி அம்மாளோ அவள் பெண்களோ நினைத்தால் உண்மை விளம்பியை அல்லது மகிழ்மாறனப் போன்றவர்களை ஒரு விலை பேசி வாங்கிக் கொண்டுவிடமுடியும். கொஞ்சம் சுமாரான விலையே கிடைத்தால் கூட இந்த நண்பர்கள் எல்லாம் விற்றுப் போய்விடச் சம்மதிப்பார்கள் என்பது கண்ணனுக்கே தெரிந்த விஷயம் தான். ஏற்கெனவே உண்மை விளம்பி அம்மிணி அம்மாளின் பெண்களிடம் தேடிப் போய்ப் பணம் கேட்டிருக்கிறான். புலவர் விஷயம் சொல்லவே வேண்டாம். அவர் நன்கொடை என்று கொண்டுபோய் நீட்டுகிற ஏதாவது ஒரு நோட்டில் பத்து ரூபாய் நன்கொடை எழுதி அம்மிணி அம்மாள் கையெழுத்துப் போட்டு விட்டால் அதையே ஆயிரம் ரூபாயாகத் திருத்திக் கொண்டு மற்றவர்களிடம் கறக்கப் போய்விடுவார். இருந்தும் இவர்களே நம்பித் தான் ஒரு போரில் இறங்கியிருப்பது அவனுக்கே நினைக்க நினைக்க வேடிக்கையாகத்தான் இருந்தது. ஒழுக்கமுள்ளவர்கள் அடுத்தவர்கள் ஒழுக்கம் பற்றிக் கவனிப்பதே இல்லை. அடுத்தவர்களின் ஒழுக்கத்தை அணு அனுவாகக் கவனித்து அதை விமரிசிப்பதையே பிழைப்பாகக் கொண்டிருப்பவர்கள் அதிலேயே தங்கள் சொந்த ஒழுக்கத்தைக் கோட்டைவிட்டு விடுகிறார்களோ என்று கூட யோசித்தான் கண்ணன். மகிழ்மாறனுக்கும், உண்மை விளம்பிக்கும் பட்டை அடித்தால் தான் மோசமாக எழுத ‘மூட்’ வருகிறது. சுயநினைவை மறக்காமல் மோசமாக எழுத வரமாட்டேனென்கிறது. அம்மிணி அம்மாள் - பாகவதர் ஆகியவர்களுடைய ஒழுக்கத்தைப் பற்றி விமரிசிக்க இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுகூட யோசித்தான் கண்ணன். மனம் போன போக்கில் அவனுடைய கட்டுக்கே அடங்காமல் அவனுடைய சிந்தனை எங்கெங்கோ போயிற்று. |