2 காலனி நலம் நாடுவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் சந்தித்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆரம்பமுதல் அந்தச் சங்கத்தை அமைக்கப் பாடுபட்டவன் என்ற முறையில் கண்ணனையே அதன் செயலாளராயிருக்கும்படி மற்ற எல்லோரும் வற்புறுத்தினார்கள். அவனாலும் அதைத் தட்ட முடியவில்லை. ஓய்வு பெற்ற போஸ்ட்மாஸ்டர் ஒருவர், அந்தக் காலனி வாசியாயிருந்தார். அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். செயற்குழு உறுப்பினர்கள் என்று சங்க வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டிய சிலரையும் தேர்ந்தெடுத்து விட்டார்கள். புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டுக் காலனிக்குள் குடியேறுகிற ஒவ்வொருவரையும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் கூட, ‘அவர்களாகவே சேர முன் வந்தாலும் கூட நாம் சிலரை உறுப்பினராகச் சேர்க்கக் கூடாது. சிலரால் இந்தப் பேட்டையின் நற்பெயருக்கே களங்கம் உண்டாகிவிடும். அவர்களை நாம் நமது சங்கத்திலிருந்து ஒதுக்கியே வைத்தாக வேண்டும்’ என்று கண்ணன் வெளிப்படையாகப் பிரகடனம் எதுவும் செய்யவில்லை. தன்னை மீறி யாரும் உள்ளே விழைந்து விட முடியாது என்ற நம்பிக்கையில் பேசாமல் இருந்துவிட்டான். எப்படியானாலும் ஒருவருடைய உறுப்பினர் விண்ணப்பம் கமிட்டியின் பரிசீலனைக்கு வந்த பின்பே ஏற்கப்படும் என்ற பாதுகாப்பான விதியிருந்தது. கண்ணன் முற்றிலும் எதிர்பாராதவிதமாக அடுத்த கமிட்டிக் கூட்டத்திலேயே அவனுக்கு ஒரு சிறு அதிர்ச்சி காத்திருந்தது. கமிட்டியின் வழக்கமான அஜெண்டாவிலிருந்த மின்சார விளக்குகள், சாலை வசதி, குடிநீர்ப் பிரச்சினை எல்லாம் விவாதிக்கப்பட்டு முடிந்தபின் நிரந்தர இறுதி அயிட்டமான புதிய ‘உறுப்பினர் சேர்த்தல்’ என்பதை யார் புதிதாகச் சேர்ந்திருக்கப் போகிறார்கள் என்ற அசட்டையோடும், அசிரத்தையோடும் தலைவர் படித்தபோது ஒரு கமிட்டி உறுப்பினர், “பி. கே. அம்மிணி அம்மா, பதினொன்று மேற்கு கிராஸ் முதல் தெரு, ரூ. 10” என்று பேரையும் பத்துரூபாய் நோட்டையும் பூர்த்தி செய்த உறுப்பினர் விண்ணப்பத்தையும் செயலாளரான கண்ணனிடம் எடுத்து நீட்டினார். தனக்குப் பிடிக்காத தன் பக்கத்து வீட்டுப் பெண்மணி தன் கவனமின்றியே நலன் நாடுவோர் சங்கத்துக்குள் நுழைய முயல்வதைக் கண்ணன் உணர்ந்து கொண்டான். உடனே உஷார் ஆனான். “இந்த விண்ணப்பத்தை உடனே ஏற்கக்கூடாது. இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.” கண்ணனின் இந்த ஆட்சேபணை அம்மிணி அம்மாவைத் தேடிப் போய் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு வந்திருந்த அச்சுதன் என்ற கமிட்டி மெம்பருக்கு ஒரு தன்மானப் பிரச்னையாகி விட்டது. உடனே அவர் கிளம்பினார்:
“உழக்குலே கிழக்கு மேற்குப் பார்க்கிறது சரிப்படாது, இதிலே யோசிக்க என்ன இருக்கு?”
“அதுக்கில்லே! குடும்பத் தலைவரோ ஆண் பிள்ளைகளோ இல்லாத வீடுகளை மெம்பாரக்கறதுலே சில சிக்கல்கள் வரும்னு நினைக்கிறேன்.” “இப்பிடி ஆண் உறுப்பினர், பெண் உறுப்பினர்னு பேதப்படுத்தறது நல்லா இல்லே.” காலனியின் ஒரே தமிழ்ப்புலவரான மகிழ்மாறன் உடனே குறுக்கிட்டு, “தயவுசெய்து ஆண் பெண், என்று மட்டும் கூறுங்கள்! ஆண் உறுப்பினர் பெண் உறுப்பினர்ங்கிறது கேட்க நல்லா இல்லே” என்றவுடன் ஒரே சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்தன. சிறிதுநேரம் விவாதம் வேறு திசையில் போய்விட்டுத் தட்டுத் தடுமாறி மறுபடி பழைய இடத்துக்கே திரும்பி வந்தது. “மிஸ்டர் கண்ணன் தன் பக்கத்து வீட்டுக்காரர் உறுப்பினராவதை ஏன் தடுக்கிறார் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை?” இது சங்கத்தின் தலைவர். “நம்ம சங்கத்துக்குக் ‘காலனி நலம் நாடுவோர் சங்கம்’னு பேர் வச்சிருக்கோம். அதனாலே நலம் நாடாதவர்களையோ, நலத்துக்குக் கேடு உண்டாக்குபவர்களையோ இதில் சேர்க்காமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து” - இது கண்ணன். “இந்த வம்புக்குப் பதிலாகக் ‘காலனி நிலம் நாடுவோர் சங்கம்’னு பேரையே மாத்திட்டா என்ன?” - இது புலவர். மறுபடி சிரிப்பலைகள். கூட்டத்தில் தம்மால் மட்டுமே ஹ்யூமர் ஜெனரேட் ஆகிறது என்பதில் புலவருக்குப் பிடிபடாத மகிழ்ச்சி. தலைவர் மீண்டும் விவாதம் நினைவுக்கு வந்தவராக, “மேற்கு கிராஸ் முதல் தெரு பதினொன்றாம் நம்பர் வீட்டுப் பெண் உறுப்பினராகிய அம்மிணி அம்மா...” “சார்! தயவு செய்து ‘பெண்மணியாகிய’ என்று மட்டும் சொல்லுங்க... உறுப்பினர் வேண்டாம்...” “அம்மிணி அம்மா நம் காலனி நலனுக்கு எந்த வகையில் கேடு விளைவிப்பவராக இருக்கிறார் என்பதைக் கண்ணன் இப்போது சொல்லியாக வேண்டும்.” “மன்னிக்கணும்! இந்த மாதிரி ரசாபாசமான விஷயங்களைக் கூட்டத்திலே வச்சுச் சொல்றது சிரமம்.” கண்ணன் இப்படிக் கூறியதைக் கேட்டவுடன் எல்லாருடைய ஆவலும் தூண்டப்பட்டு மனத்தின் விளிம்பு வரை ததும்பி வந்து நின்றது. “அப்படியானால் கண்ணன் அந்த விவரத்தைத் தலைவரிடம் மட்டும் தனியாகக் கூறி விளக்க முடியுமா?” “கூடாது! முடியாது! இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். காலனி நலனுக்குக் கேடு உண்டாக்கும் ஒரு விஷயம் எல்லாச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் தெரிய வேண்டுமே ஒழியத் தனியே தலைவருக்கு மட்டும் தெரிவிக்கப் பட வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.” “ஆமாம், அது நியாயமில்லைதான். அம்மிணி அம்மா விஷயம் எல்லாருக்கும் தெரிந்தாக வேண்டும்.” தலைவரின் தனியுரிமைக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பவே அவர் அதை எல்லாருடனும் சேர்ந்தே தெரிந்து கொள்வதென்ற முடிவுக்கு வந்தார். கண்ணன் அம்மிணி அம்மாவைப் பற்றிய தன் ஆட்சேபத்தைக் கமிட்டியில் எல்லாருமே கேட்கும்படி சொல்லியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டான். எப்படித் தொடங்கி எவ்வாறு சொல்லி முடிப்பது என்று கோவையாகத் திட்டமிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் எப்படியோ மென்று விழுங்கிப் பூசி மெழுகினான் கண்ணன். ஒருவிதமாக அதை சொல்லி முடித்தாயிற்று. “அந்தப் பொம்பளை ஒரு மாதிரின்னு கேள்விப்பட்டேன். அவங்க காலனியோட நல்ல பேரையே கெடுத்துப்பிடு வாங்க போலிருக்கு.” “இந்தக் காலனியிலே வீடு அலாட் ஆகி இதிலே குடியிருக்கிற யாரும் நம்ம அஸோஸியேஷன்ல மெம்பராகலாம். அவங்க யாரு, என்ன செய்யறாங்க, ஆணா, பொண்ணாங்கிறதெல்லாம் நமக்கு அநாவசியம்” - என்று அம்மிணி அம்மாவை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு வந்திருந்த அச்சுதன் மீண்டும் எழுந்து தம் கருத்தை உறுதியாக வற்புறுத்தினார். “எனக்கும் அச்சுதன் சொல்றதுதான் நியாயம்னு படறது” - என்று தலைவர் கூட அந்தப் பக்கமாகச் சாய்ந்தார். கண்ணனுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அம்மிணி அம்மாவைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்த எல்லாவற்றையுமே பச்சை பச்சையாகக் கூட்டத்தில் போட்டு உடைத்து விடலாமா என்று நாக்குத் துறுதுறுத்தது. அதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தன்னைக் குடைந்தால் என்ன செய்வது என்ற ஒரே ஒரு தயக்கம் மட்டுமே சிறிது தடுத்தது. அச்சுதன் மறுபடி ஆரம்பித்தார்: “ஒருத்தரை நமக்குப் பிடிக்கலேன்னா அது தனிப்பட்ட விஷயம். அதனாலே இந்த அஸோஸியேஷனுக்கும் அவங்களைப் பிடிக்கலேன்னு ஆயிடாது. அஸோஸியேஷன் விஷயத்திலே நம்ம சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு வரக்கூடாது.” தன் பக்கத்து வீட்டுப் பெண்மணியான அம்மிணி அம்மா மீது கண்ணனுக்கு ஏதோ தனிப்பட்ட விரோதம். அதனால் தான் அவன் அந்த அம்மாள் காலனி நலம் நாடுவோர் சங்கத்தில் சேரவிடாமல் தடுக்கப் பார்க்கிறான் என்பதுபோல் ஒரு தவறான கருத்து அந்தச் செயற்குழுவில் எல்லாருக்கும் ஏற்பட்டுவிட்டது. அப்படி ஒரு கருத்து ஏற்படாமல் தடுக்கவோ தவிர்க்கவோ கண்ணனாலும் முடியவில்லை. “எனக்குத் தனிப்பட்ட முறையிலே அவங்களோட ஒரு விரோதமும் இல்லை. அஸோஸியேஷன் பேர் கெட்டுடப்படாதுன்னுதான் தயங்கினேன். நீங்கள்ளாம் சேர்ந்து அவங்களை மெம்பராக்கணும்னு ஆசைப்பட்டிங்கன்னாச் சேர்த்துக்க வேண்டியது தானே?” என்று முடிவில் ஒருவிதமாய்ப் பட்டும் படாமலும் சொன்னான் அவன். “ஆல் ரைட்! நீங்க ஏன் சேர்க்கக் கூடாதுங்கறத்துக்கு இன்னும் வலுவான காரணமா எதையுமே சொல்ல மாட்டீங்ககறீங்களே? ஏதோ அப்பிடிக் கேள்விப்பட்டேன். இப்பிடிக் கேள்விப் பட்டேன்னு சொல்றது சரியான காரணமில்லை. ஒவ்வொருத்தரைப் பத்தியும் ஒண்ணொன்ணு கேள்விப் படறது உலகத்திலே சகஜம். அதை வச்சு எதையும் முடிவெடுக்க முடியாது மிஸ்டர் கண்ணன்!” “சரி! நான் ஒண்னும் தடுக்கலே... அவங்க ‘மெம்பர்ஷிப்’பை அப்ரூவ் பண்ணிக்கலாம்” - என்று அவனே கடைசியில் வழிக்கு வரும்படி ஆகிவிட்டது. உள்ளூரக் கடுப்போடும் ஆத்திரத்தோடும்தான் கண்ணன் இதைச் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் தான் சொன்னதை நிரூபித்துக் காட்டி அம்மிணி அம்மாவைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டதற்காக முழுச் செயற்குழுவுமே வெட்கித் தலை குனிய நேரிடும்படி செய்ய ஒரு சந்தர்ப்பம் பின்னால் எப்போதாவது வாய்க்கத்தான் வாய்க்கும் என்று அவன் உறுதியாக நம்பினான். |