9 காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் உடனடியான அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பாகவதர், அம்மிணி அம்மாள் முதலிய இருபத்தைந்து அங்கத்தினர்கள் கையொப்பமிட்டுத் தலைவருக்கு அனுப்பிய பதிவுத் தபால் கடிதத்தில் ‘உடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவும்’ என்ற தலைவரின் குறிப்பும் சேர்க்கப்பட்டுக் கண்ணனுக்கு வந்தது. சில அவசரப் பிரசினைகளை விவாதிக்க உடனே கூட்டத்தைக் கூட்டும்படி இருபதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டுக் கோரினால் தலைவர் அனுமதியுடன் செயலாளர் பதினைந்து நாள் முன்னறிவிப்புடனே கூட்டத்தைக் கூட்டியாக வேண்டும் என்று சங்க விதிமுறை கூறியது. இப்போது பாகவதர் அந்தத் துருப்புச் சீட்டை வெட்டியிருந்தார். கண்ணன் பாடு தர்மசங்கடமாகப் போயிற்று. ‘மின்சார ஒவர் ஹெட் லயன்’ பற்றி அவன் பக்கத்து வீட்டாரோடு கூப்பாடு போட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது, புலவர் மகிழ்மாறன் காலனிவாசிகள் வீட்டுக் காம்பவுண்டுச் சுவர் எல்லாம் தமிழாக்குவதாகத் தாரில் பெரிய பெரிய எழுத்துக்களை எழுதியது ஆகியவை பற்றி விவாதிக்கவே இந்த அவசரக் கூட்டம் கோரப்படுகிறது என்று கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. காலனி நலன் நாடுவோர் சங்கச் செயலாளர் பதவியில் நீடிப்பதா, ராஜிநாமாச் செய்து விட்டு ஒதுங்கிக் கொள்வதா என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான் அவன். கரடு முரடான வேகத்தோடு சாதக பாதகங்களைப் பற்றிய முன் யோசனையே இன்றிப் புலவர் பண்ணியிருந்த சில வேலைகளைப் பார்க்கும்போது கண்ணனுக்கே அவர்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. முதல் குறுக்குத் தெருவில் இருந்த பல் டாக்டர் ‘கிங்சிங்சூ’வின் ‘டென்டிஸ்ட்’ ‘டெண்டல் கிளினிக்’ என்ற ஆங்கில போர்டுகளில் தார் பூசி அழிக்கப்பட்டு, ‘பல் செப்பனிடும் பட்டறை’, ‘பல் ஆய் மருத்துவர்’ - என அதன் பக்கத்திலேயே தாரில் தமிழாக்கம் போடப்பட்டிருந்தது. தேவநாகரி எழுத்துக்களில் ‘ஶ்ரீராம மந்த்ரம்’ எனப் பாகவதர் வீட்டு முகப்பில் சலவைக் கல்லில் பதிக்கப் பெற்றிருந்த வீட்டுப் பெயர் தார் பூசி அழிக்கப்பட்டுச் சுவரில் ‘இந்தி ஒழிக’ என்று அதனருகிலேயே பெரியதாக எழுதப்பட்டிருந்தது. ‘பிவேர் ஆஃப் டாக்ஸ்’ - என்று அம்மிணி அம்மாள் வீட்டு முகப்பில் தொங்கிய ஆங்கில போர்டு அழிக்கப்பட்டுக் கொஞ்சம் குறும்பாகத் தமிழில் மாற்றி ‘(இந்த வீட்டில் உள்ள) பெண் நாய்கள் ஜாக்கிரதை’ - என்று பூதாகரமான எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. பூஜைக்காக அங்கே போனபோது பாகவதர் படித்துச் சொல்லி அம்மிணி அம்மாள் குடும்புத்தாருக்கு அது தெரிய வந்த விவரத்தைக் கண்ணனே பார்த்துத் தெரிந்து கொண்டிருந்தான். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இருந்த அம்மிணி அம்மாளின் வீட்டுப் பெயரான ‘பொன் குன்னம்’ - என்பது முற்றாகத் தார் பூசி அழிக்கப்பட்டிருந்தது. தெருக் கோடியில் ‘வெட்கிரைண்டிங் மிஷன்’ - ‘ரோலர் ஃப்ளவர் மில்’ - என்ற போர்டுகள் அழிக்கப்பட்டு ஈர அரவைப் பொறி’ - ‘உருளை மாவுப் பொறி’ - எனத் தமிழில் தனக்குத் தோன்றியது போல் மொழி பெயர்த்து எழுதியிருந்தான் புலவரின் ஆள். அதைப் படித்துவிட்டு யாரோ விவரம் புரியாமல் அதன் உரிமையாளரிடம் வந்து, “நாட்டாரே! மாவு மில்லை எப்பப் பொரி கடலக் கடையா மாத்தீனிங்க?” என்று கேட்டதாகக் கண்ணன் காதில் கூட விழுந்திருந்தது. எல்லாவற்றையும் செய்த புலவர் தமக்கு நன்கொடை கொடுத்தவர்கள் வீட்டுச் சுவர்களில் மட்டும் கை வைக்கவே இல்லை. ‘ரெட் ரோஸ்’ என்று கண்ணன் வீட்டு முகப்பில் ஆங்கிலத்தில் பதித்திருந்த பெயர்ப்பலகை தாரில் நீராடாமல் அப்படியே விடப்பட்டிருந்தது எல்லார் கண்களையும் உறுத்தியது.
இதை எல்லாம் விடப் பயங்கரமான தமிழாக்கம் காலணி முகப்பில் இருந்த ‘விமன்ஸ் கன்ஸ்யூமர் கோவாப்ரேடிவ் சொஸைடி’ என்ற போர்டை அழித்துப் பக்கத்திலேயே ‘பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுக் கழகம்’ - என விலாப் புடைக்க நகைக்கும்படி எழுதியிருந்ததுதான். அதைப் படித்துச் சிரிக்காதவர்களே கிடையாது.
இப்படி எல்லாம் புலவர் தாறுமாறாகக் கேலிக் கூத்துப் பண்ணியிருந்தும் தனது கூட்டணியில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகக் கண்ணன் கூட்ட நோட்டிஸை எல்லாருக்கும் அனுப்புமுன் புலவரைக் கூப்பிட்டனுப்பினான். புலவர் தன்மானப் படையுடன் வந்தார். கண்ணன் நிலைமையை விளக்கி, “நான் அஸோஸியேஷன் செயலாளர் பதவியை விட்டு விலகிக்கலாம்னு பார்க்கிறேன்” என்றான். “கூடாதுங்க! நீங்களா விடவே கூடாது. பயந்தாங் கொள்ளிம்பாங்க. பேரவையைக் கூட்டுங்க பயப்படாதீங்க. அவங்க என்னதான் செய்யிறாங்கன்னு பார்த்துடுவோம். நானும் பேரவைக்கு நம்ம செயல் வீரர்களோட வரேன். எதிர்க்கிறவங்களை ஒரு கை பார்த்திடலாம்” என்றார் மகிழ்மாறன். அப்படிச் செய்யக் கண்ணனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் செயற்குழுவைக் கூட்டுவதற்கு முன்பே தான் ராஜினமாச் செய்வது கோழைத்தனமாகப் புரிந்து கொள்ளப்படும் என்பதால் தயங்கினான். பொறுமையாக இருக்க முடிவு செய்து கொண்டான். அவசரச் செயற்குழு கூடுவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அவன் மனைவி சுகன்யா அவனிடம் தற்செயலாக ஒரு நாள் விசாரித்தாள்: “இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு? இருக்கிற பணமுடையிலே என்னென்னமோ புதுப் புதுத் தெண்டச் செலவெல்லாம் இழுத்து விட்டுக்கறீங்களே? வக்கீலுக்குப் பணம் அழுது ஒண்ணுமில்லாததுக்கு நோட்டிஸ் அனுப்பி அக்கம் பக்கத்தாரை மிரட்டியிருக்கீங்க, காம்பவுண்டுச் சுவர் எடுக்கிறேன்னு ஆயிரக் கணக்கிலே வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கீங்க. யாரோ போர்டெல்லாம் தமிழ்லேதான் எழுதணும்னு தார் பூசி அழிக்கிறவங்களுக்கு முதல் ஆளா ரூபாய் ஆயிரத்துக்கு மேலே டொனேஷன் குடுத்திருக்கீங்களாம். எதுக்கு இப்பிடிப் பணத்தைப் பாழாக்கறீங்க?” “நான் புலவர் மகிழ்மாறனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேலே குடுத்தேன்னு உனக்கு யார் சொன்னது?” “அடுத்த தெருவிலே கலா படிக்கிற ஸ்கூல் ஹெட் மிஸ்ட்ரஸ் எதக்கோ ரெண்டு ரூபா டொனேஷன் கேட்டுக் கலாவை வீட்டுக்கு அனுப்பிச்சா. நான் அவ்வளவு இல்லேன்னு எங்கிட்ட இருந்ததைத் திரட்டி ஒரு ரூபா குடுத்தனுப்பிச்சேன். அவ உடனே, கலா கிட்ட, ‘ஏண்டி! உங்க அப்பா தமிழர் படை தார் பூசறத்துக்கு ஆயிரம் ரூபாய் டொனேஷன் தர்றர். இதுக்கு மட்டும் ஒரு ரூபாதானா?’ன்னு கேட்டாளாம்.” புலவர் மகிழ்மாறன் தன்னிடம் 10ஐ 101ஆகத் திருத்திக் கொள்வதாகச் சொல்லிவிட்டு 1001 ஆகவோ, 1011 ஆகவோ திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கண்ணனால் இதைச் சுலபமாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. அதே நோட்டுப் புத்தகத்தில் புலவர் அந்தத் தலைமை ஆசிரியையிடமும் வசூலுக்குப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த நாணயக் குறைவும் திரிசமனும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த நோட்டைப் பார்த்தவர்கள் எல்லாரும் தான் தமிழர் படையின் தார் பூசும் முயற்சிக்கு ஆயிரத்தொரு ரூபாய் கொடுத்ததாக நம்பியிருக்கக் கூடுமென்று எண்ணியபோது கதி கலங்கியது. மாதம் தொள்ளாயிரத்து அறுபது ரூபாய்க்கும் குறைவாகச் சம்பளம் வாங்கும் தன்னைப் போன்ற ஒரு என். ஜி. ஒ. ஆயிரத்தொரு ரூபாய் நன்கொடை கொடுப்பது என்பது மற்றவர்களுக்கு மலைக்க வைக்கும் செய்திதானே? தான் உண்மையில் கொடுத்தது வெறும் பத்து ரூபாய் தான் என்றும், மற்றவர்களை வலை போட்டு இழுத்து நன்கொடை வாங்கப் புலவர் தந்திரமாக அதை ஆயிரத்து ஒன்றாகவோ ஆயிரத்துப் பதினென்றாகவோ திருத்திக் கொண்டிருக்கக் கூடும் என்றும் தன் மனைவிக்கு விளக்கி அவளை நம்ப வைப்பதற்குள் கண்ணனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பேரவைக் கூட்டத்துக்கு அங்கத்தினர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டு அஜெண்டா தயாரிப்பதற்காகத் தலைவரைக் கலந்தாலோசிப்பதற்காக அவர் வீட்டுக்குப் போனான் கண்ணன். எப்போதும் இப்படிக் கூட்டத்திற்கு முன் தலைவர் வீட்டுக்குப் போவது வழக்கம்தான். காலனி நலன் நாடுவோர் சங்கத் தலைவர் அவனிடம் வழக்கம் போல் சுமூகமாகப் பேசிப் பழகவில்லை. கொஞ்சம் கோபத்தோடு இருப்பது போல் தோன்றியது. கத்திரித்தாற் போல வார்த்தைகள் வந்தன. தனக்கு முன்பே அவரை அதிருப்தியாளர்கள் சந்தித்துத் தன்னைப்பற்றி ஒரு வண்டி புகார்களைச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது கண்ணனுக்கு. “பாகவதர், அம்மிணி அம்மா போன்றவர்களால் காலனி வளர்ச்சிக்குப் பலவகையிலும் உதவி செய்ய முடியறப்போ அவங்களை நீங்க அநாவசியமா விரோதிச்சுக்சுக்கிறீங்க! அந்தப் புலவருக்கு வெளிப்படையா ஆயிரக்கணக்கில் டொனேஷன் குடுத்து எல்லார் வீட்டுச் சுவரிலேயும் தாரைப் பூசி அசிங்கம் பண்ண வச்சிருக்கீங்க! ஓவர் ஹெட் லயன் பிரச்னையிலே காலனி அஸோஸியேஷனே ரெப்ரெஸண்ட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட முறையிலே பாகவதருக்கும் அம்மிணி அம்மாளுக்கும் நீங்க நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டியதில்லை. ஆட்களை அடுத்தடுத்து விரோதிச்சுக்கறது ரொம்பச் சுலபம். ஆனா நட்பையும் நல்லெண்ணத்தையும் திரும்பச் சம்பாதிக்கிறது அத்தனை சுலபமில்லே” என்றார் சங்கத் தலைவர். கண்ணன் அதற்குமேல் அவரிடம் மன்றாடிக்கொண்டு நிற்கவில்லை. உடனே வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டான். மகிழ்மாறனின் தமிழர் படைக்கு ஒரு பத்து ரூபாய் நன்கொடை கொடுத்துப் பட்டியலில் முதல் பேராகத் தன் பெயரை எழுதித் தொலைத்தது இவ்வளவு பெரிய வம்பில் வந்து முடியும் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த மனிதன் பத்தை நூற்று ஒன்றாகத் திருத்திக் கொள்வதாகச் சொல்லிவிட்டு ஆயிரத்து ஒன்றாகத் திருத்திக் கொள்ளப் போகத்தானே பணம் கொடுத்துக் காலனிவாசிகளுக்கு எதிராகப் புலவர் வகையறாவைத் தூண்டிவிட்ட மாதிரி ஆகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகள் சிரமப்பட்டுச் சேகரித்த நல்லெண்ணத்தையும், நன்னம்பிக்கைகளையும் அரை நொடியில் தவிடு பொடியாக்கிவிடுகிற ‘மகத்தான திறமை’ சிலருக்கு இருந்து தொலைக்கும். புலவர் மகிழ்மாறனுக்கு அப்படி ஒரு திறமை உண்டு. இரண்டே நாட்களில் கண்ணனை அந்தக் காலனிவாசிகள் அத்தனை பேருக்கும் விரோதியாக்கிவிட்டார். அதற்காகக் கண்ணனுக்குப் பத்து ரூபாய் வீண் செலவும் ஆகி ஆயிரம் ரூபாய்ப் பழியும் வந்து சுமந்திருந்தது. தாம் ஒத்துழைத்து ஆதரிப்பதன் மூலமே அப்படி ஆதரிக்கப்படுகிற வரை ஒன்றுமில்லாமல் பண்ணி விடுகிற சாமர்த்தியம் புலவருக்கு இருந்தது. கண்ணன் விஷயத்திலும் அதையே செய்து முடித்திருந்தார் அவர். பேரவையில் ஏதோ விரும்பத்தகாத திருப்பங்கள் ஏற்படப் போவதுபோல் கண்ணனுக்கே தோன்றியது. அவன் அஜெண்டா தயாரிக்கப் போனபோது தலைவர் பிடி கொடுக்காமல் நழுவுகிறார். ஏதோ செலவுக்காகச் செக்கில் கையெழுத்துக்குப் போன போது பொருளாளர், “இப்போ ஒண்ணும் அவசரமில்லே! கொஞ்சம் பொறுத்துச் செய்யலாம்” - என்று செக்கில் கையெழுத்துப் போடாமல் தட்டிக் கழித்து விட்டார். பொருளாளர் செய்தது எதற்கோ முன்னடையாளம் காட்டியது. சூழ்நிலை சரியாயில்லை! மர்மமாகத் தனக்கு எதிராய் எங்கோ ஏதோ சதி நடப்பது போல் கண்ணனுக்குத் தோன்றியது. |