14 கமலக்கண்ணனுடைய செல்வாக்கில் இருண்ட நிழல்படிந்து கொண்டிருந்த அந்த வேளையில் ஒருநாள் மாலை - கலைச்செழியனும், பிரகாசமும் மாயாவின் வீட்டில் சந்தித்தார்கள். "பாவம்! என் வார்த்தைக்காக அவரு இந்த பஸ்ரூட் விவகாரத்திலே தலையிடப் போய்ப் பேரைக் கெடுத்துக்கிட்டாரு" என்று மாயா அவர்களிடம் கமலக்கண்ணனைப் பற்றிப் பரிதாபப்பட்டாள். பிரகாசம் குறுக்கிட்டான்:- "அதெல்லாம் அவர் சரிக்கட்டிடுவாரு... சீஃப் மினிஸ்டருக்குச் சிலை வைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காரு... எல்லாம் அதிலே சரியாயிடும்..." "அதுதான் சீஃப் மினிஸ்டரே தனக்குச் சிலை வேண்டாம்னிட்டாராமே? சிலை வைக்கிற ஏற்பாட்டைக் கைவிட்டுட்டதாக உங்க 'தினக்குரல்'லியே அறிக்கை வந்திட்டுதே? அப்புறம் எப்படி அவரைச் சரிக்கட்டறது?" என்று உடனே பதிலுக்குக் கேட்டான் கலைச்செழியன். பிரகாசம் இதை ஒப்புக் கொள்ளவில்லை. "அதெல்லாம் சும்மா ஒரு ஐ வாஷ்... நீ பார்த்துக்கிட்டே இரு... நம்பளவரு சிலை வச்சி முடிக்கிறாரா இல்லையான்னு..." "இனிமே அது நடக்காது பிரகாசம்! கமலக்கண்ணன் வீட்டு வாசலிலேயே ஒருத்தன் உண்ணாவிரதம்னு போர்டு மாட்டிக்கிட்டுக் கூடாரமடிச்சிட்டான். விஷயம் பெரிசாயிடிச்சி. தினசரி - உண்ணாவிரதம் நாலாவது நாள், அஞ்சாவது நாள்னு போர்டு மாத்தி மாத்தி எழுதிக்கிட்டிருக்கானுக..." "சே! சே! கேக்கறப்ப எனக்கே மனசுக்குச் சங்கடமா இருக்கு. நான் இந்தச் சிபாரிசுக்கு அவரிட்டப் போயிருக்கப்படாது" - என்று வருத்தப்பட்டுக் கொண்டாள் மாயா. "காரியத்தை முடிச்சுக் கொடுத்தோம். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சிட்டுது. இதுலே வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு" என்றான் கலைச்செழியன். "என்ன இருந்தாலும் அவரு நம்மளவரு. நீ அந்த போட்டோவைக் கூட வித்திருக்கப்படாது கலை..." என்றாள் மாயா. "போற போக்கைப் பார்த்தால் 'தினக்குரலை'க்கூட ரொம்ப நாளு நடத்தமாட்டாரு போலிருக்கு... நாம் மறுபடி 'பிரகாஷ் பப்ளிஸிட்டியிலே' தீவிரமாக இறங்க வேண்டியதுதான்" - என்று குறைபட்டுக் கொண்ட பிரகாசத்தை நோக்கி, "ஏன் அப்பிடிச் சொல்றீங்க?... பத்திரிகையை நிறுத்தறாப்பலே இப்ப அவருக்கு என்ன அத்தினி மொடை வந்திரிச்சு..." என்று பதிலுக்குக் கேட்டாள் மாயா.
"மந்திரியா வரணுங்கறதுக்காகத்தான் அவரு பத்திரிகையே தொடங்கினாரு... மந்திரியா வந்தாச்சு... இப்பவோ இனிமே மந்திரியா நீடிக்க முடியும்னு தோணலை... அப்புறம் எதுக்குப் பத்திரிகை...? மாசா மாசம் இருபதினாயிரம் ரூபாயை முழுங்குதே...! தண்டச் செலவா?"
"இப்பிடி எத்தினியோ தண்டச் செலவு செய்யிறாரே அவரு? எல்லாத்துக்கும் சேர்த்து எதிலியோ வரவு இருக்கக் கண்டுதானே செய்யிறாரு?" "தண்டச் செலவிலேயே பிரயோசனமுள்ள தண்டச் செலவு, பிரயோசனமில்லாத தண்டச் செலவுண்ணு இரண்டு விதம் இருக்கு. இது இனிமே அவருக்குப் பிரயோசனமில்லா தண்டச் செலவுதானே?" - என்றான் பிரகாசம். "எலக்சனுக்கு நின்னப்பவே முதல்லே அவங்க இவருக்கு 'பார்ட்டி டிக்கெட்' கொடுக்கலே. சுயேச்சையா நின்று நிறைய செலவழிச்சு ஜெயிச்சாரு. மந்திரி பதவிக்காகத்தான் அப்புறம் பார்ட்டியிலே ஜாயின் பண்ணினாரு. அப்பவே தேசியக் கட்சியிலே ஏகப்பட்ட கசமுசல் இருந்திச்சு. 'வெள்ளைக்காரனுக்கு அடிவருடின குடும்பத்தைச் சேர்ந்த ஆளு'-ன்னு எல்லாரும் ஒரு தினுசாத்தான் பேசினாங்க... அது கடைசியிலே இப்படி ஆயிரிச்சி..." என்று அலுத்துக் கொண்டான் கலைச்செழியன். அவர்களுடைய கவலை எல்லாம் கமலக்கண்ணன் தங்களுக்கு இனிமேல் பயன்படுவாரா - பயன்படமாட்டாரா என்பதைப் பற்றியதாகத்தான் இருந்ததே ஒழியக் கமலக்கண்ணனுக்கு வந்திருக்கும் துன்பங்களை எண்ணி வருந்துவதாக இல்லை. மாயாவுக்கு மட்டும்தான் மனத்தில் கொஞ்சம் ஈரம் இருந்தது. பெண்ணாகப் பிறந்துவிட்ட காரணத்தினால் அவள் அவர்களைப் போல் ஈரப் பசையில்லாமல் வறண்ட மனத்தினளாக இருக்க முடியவில்லை. பிரகாசமும், கலைச்செழியனும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் காரியவாதிகள். தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். காரியங்கள் நடக்காதென்று தெரிந்தால் - அவை வேறு எங்கு நடக்குமோ அங்கே தேடிக்கொண்டு போய் விடுவார்கள். இது மாயாவுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை ஈரப்பசையுள்ளவர்களாக மாற்றுவதென்பது மாயாவினால் மட்டுமல்ல; கடவுளால் கூட முடியாது - என்பது உறுதி. வாழ்க்கையின் இந்தத் துறைகளில் அவர்களின் நியதியே இதுதான். ஆனால் மாயாவின் நிலை அப்படியில்லை. அவள் கமலக்கண்ணனுக்காக உண்மையிலேயே வருத்தப்பட்டாள். கலைச்செழியனும், பிரகாசமும் வந்து சொல்லியதன் பேரில்தான் புலிப்பட்டி மணியத்தின் பஸ்ரூட் விஷயத்தில் அவள் தலையிட்டாள். அதனால் கலைச்செழியனுக்கும், பிரகாசத்துக்கும் பெரும்பயன் ஏற்பட்டிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆயினும் எந்த ஏணியில் மேலே ஏறி வந்தோமோ அந்த ஏணியையே வந்த வேகத்தில் உதைத்துத் தள்ளுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. முதன்மந்திரியை அவருடைய வீட்டில் போய்ச் சந்திப்பதற்கு முன்பே கமலக்கண்ணன் மனக்குழப்பமும் வேதனையும் அடைந்திருந்தார். எதைச் செய்வது எதைப் பேசுவது என்ற மனக்குழப்பங்களிலிருந்து விடுபட முடியாமல் தவித்தார். தம் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் கட்சி ஊழியரைக் கண்டிக்கவோ அகற்றவோ செய்யாமல், போலீஸ் பாதுகாப்பும் வசதிகளும் செய்து கொடுத்திருப்பதை வேறு அவர் கண்டிருந்தார். தேர்தலில் வென்றதும் தம்மை மந்திரியாக்குவதற்காக உதவி செய்து தம் செலவில் கார் வாங்கிக் கொண்ட பிரமுகரொருவரின் உதவியை நாடி அவரையும் அழைத்துக் கொண்டு முதன் மந்திரியைக் காணச் செல்வதென்று முடிவு செய்தார் அவர். ஃபோன் செய்து அந்தப் பிரமுகரோடு பேசுவதற்கு முயன்றார். ஃபோனில் இவர் எதிர்பார்த்தது போல் அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை. "ஏதோ கேள்விப்பட்டேனுங்க... சரியா விவரம் ஒண்ணும் எனக்குத் தெரியாது... நீங்க இப்படிப் போயிருக்க வேண்டாம்னு தோணிச்சு. வெறும் வாயையே மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சா விடுவாங்களா; எல்லாம் காலக் கோளாறுங்க" - என்று பட்டும் படாமலும் கமலக்கண்ணனுக்கு ஆறுதல் கூறினாரே ஒழிய - எந்த வழியையுமே அவர் சொல்லவில்லை. "சீஃப் மினிஸ்டரு எம்மேல ரொம்பக் கோபமாயிருக்காருன்னு தெரியுது. நீங்க வந்து சொன்னிங்கன்னாத் தேவலை" - என்று கமலக்கண்ணன் தம் கருத்தை அவரிடம் வெளிப்படையாகவே வெளியிட்டார். "சிலை வைக்கிறேன்னு கிளம்பி ஏற்கெனவே இருந்த கோபத்தை நீங்களே ரெண்டு மடங்காக்கிட்டீங்க. இப்ப நான் கூட வந்தேனோ என்மேலேயும் எரிஞ்சுதான் விழுவாரு. நீங்க இப்பிடியெல்லாம் பண்ணியிருக்க வாணாம்..." "நீங்க சொன்னதையெல்லாம் நான் உடனே செஞ்சிருக்கேன். இப்ப நான் ஒரு கஷ்டத்திலே இருக்கறப்ப நீங்கதான் தயங்காம உதவ முன் வரணும். அந்த நம்பிக்கையோட தான் உங்களுக்கு இப்ப ஃபோன் பண்றேன்." "அது சரிதான்! இல்லேங்கலியே... ஆனா... உதவமுடியாத எல்லைக்குப் போனப்பறம் வந்து சொல்றீங்களே? இனிமே என்ன செய்யறது? சீஃப் மினிஸ்டரு ரொம்ப பிடிவாதக்காரரு. அவரு வளைஞ்சு கொடுப்பாருன்னு எதிர்பார்க்கறதுலே பிரயோசனமில்லே..." "பார்ட்டி ஆபீஸ்லே முக்காவாசிப்பேர் உங்களுக்கு 'டெட் எகெயின்ஸ்ட்டா'வில்லே இருக்காங்க... உங்க நிலைமை நல்லாப் புரியுது... ஆனாலும் என்ன செய்யறதுன்னுதான் தெரியலை..." "யாருக்கும் எதுவும் செய்யணும்னாலும்... செய்திடலாம், இந்த அஞ்சு வருஷத்தை நிம்மதியாகக் கழிச்சிட்டா அப்புறம் கவலையில்லே..." "பார்க்கலாம்! நானே உங்களுக்கு மறுபடியும் ஃபோன் பண்றேன்" - என்று கூறி ஃபோனை வைத்துவிட்டார் பிரமுகர். 'ரூட்' கிடைக்காமல் - ஏமாறிய விண்ணப்பதாரர்கள் கடுங்கோபத்துடன் கமலக்கண்ணனைப் பதவியிலிருந்து இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். காந்திராமன் போன்ற அசல் காந்தியவாதிகள் கமலக்கண்ணனைத் தீர்த்துக்கட்டி வெளியில் அனுப்பவேண்டிய முயற்சிகளைச் செய்து வந்தனர். முதலமைச்சரோ கமலக்கண்ணன் மேல் இன்னும் கோபம் தணியாதவராகவே இருந்தார். உண்ணாவிரதம் இருந்த ஆளைச்சுற்றிக் கமலக்கண்ணனின் வீட்டின் முன்புறம் தினசரி ஒரு பெரிய கூட்டம் கூடுவதும், கோஷங்கள் இடுவதும் வேறு வழக்கமாகியிருந்தது. உண்ணாவிரதக்காரருக்காகப் போடப்பட்டிருந்த கீற்றுக் கூடாரத்தில் தேசியக் கட்சியின் கொடிதான் பறந்தது. அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்கும் அமைச்சனாகிய தன் வீட்டின் முன்பே அதே கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு உண்ணாவிரதமிருப்பதும் அதைக் கண்டிக்க ஒருவரும் முன்வராததும் என்னவோ போலிருந்தது கமலக்கண்ணனுக்கு. டிரான்ஸ்போர்ட் மந்திரியிலிருந்து - முதன் மந்திரி வரை அனைவரும் தன்னைக் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் வெளியேற்றி விடவே விரும்புகிறார்களோ என்றும் சந்தேகம் தோன்றியது அவருக்கு. இந்த விஷயத்தில் டிரான்ஸ்போர்ட் மந்திரி தன்னைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டுமென்பதும் தெளிவாக அவருக்குப் புலனாகியது. டெல்லி மந்திரி ரமேஷ்சிங் விஜயத்தின் போது கூடத் தன்னையே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுப் போயிருந்த முதலமைச்சர் இப்போது ஏன் இப்படி மாறினார் என்பதை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வந்தது வரட்டும் என்று துணிந்து தானாகவே முதலமைச்சரைப் பார்க்க அவர் வீட்டிற்குத் தனியே சென்றார் கமலக்கண்ணன். அவர் செல்லும் போது அதிகாலை ஏழுமணி. முதலமைச்சர் வீட்டில் கூட்டம் எதுவும் இல்லை. உடனே அவரைப் பார்க்க முடிந்தது. பேச்சை அவரிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் கமலக்கண்ணனுக்குத் தெரியவில்லை. அவராக எதுவும் பேச ஆரம்பிக்கவும் இல்லை. விநாடிகள் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தன. "என்ன காரியமா வந்தீங்களோ?" சிறிது நேரத்திற்குப் பின் முதலமைச்சரே கேட்டார். "இல்லே... வந்து... எட்டு... நாளா வீட்டு முன்னாடி யாரோ உண்ணாவிரதம் இருக்காங்க... ஒரே கூச்சல்... 'ஒழிக ஒழிக'ன்னு கத்தறாங்க... ராஜிநாமா செய்யணும்னும் கூப்பாடு போடறாங்க..." "என்ன செய்யலாம்? ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாதவை." "நம்ம கட்சிக் கொடியையே பறக்கவிட்டுக்கிட்டு நம்ம ஆளுங்களே செய்யறாங்க. வேறொருத்தர் செய்தாப் பரவாயில்லே... நம்மளவங்களே செய்யிறப்பதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு...?" "டோண்ட் மிஸ்டேக் மீ... ஐ காண்ட் ஹெல்ப் யூ இன் திஸ் மேட்டர்..." "நான் என்ன செய்யணும்கிறதையாவது சொல்லுங்க? பார்ட்டிக்காக நான் எவ்வளவோ செஞ்சிருக்கேன்..." "இருக்கலாம்... அதுக்கு என்ன இப்ப? திஸ் இஸ் செப்பரேட் இஷ்யூ..." "என் எதிர்காலம்..." "பார்ட்டி வில் டிஸைட்..." "நோ... டோண்ட் டாக் லைக் தட்... யூ மஸ்ட் ஹெல்ப் மீ..." "ஐ காண்ட்..." "டூ யூ ப்ரஃபெர் மை ரெஸிக்னேஷன்..." "அஃப் கோர்ஸ் பார்ட்டி வில் டிஸைட் இட்..." "....." -கமலக்கண்ணன் எழுந்து கைகூப்பி விடைபெற்றார். இனி அதிகம் பேச எதுவுமில்லை. தளர்ந்த நடையோடு முதலமைச்சர் வீட்டு போர்டிகோவில் நின்ற தம் காரில் வந்து ஏறிக்கொண்டார் அவர். அவர் வீடு திரும்பியபோது வராண்டாவில் புலவர் வெண்ணெய்க்கண்ணனாரும் - வேறோர் ஆளும் வந்து காத்திருந்தனர். "இவருதான் சிலைச்சிற்பி சிங்காரம். நம்ம முதலமைச்சர் சிலைக்காக இவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன். கர்மவீரர் காமராசர் சிலை, சீர்திருத்தச் செம்மல் செங்கமலனார் சிலை, ஆன்மீக வள்ளல் அருளாநந்தர் சிலை எல்லாம் இவரு செய்ததுதாங்க..." "நீர் பேப்பரே பார்க்கிறதில்லையா புலவரே..." "ஏன்? என்ன செய்தி?" "சிலை ஏற்பாடு கைவிடப்பட்டதுன்னு நான் அறிக்கைவிட்டு ஏழெட்டு நாளாவுதே?" "ஏன்... ஏன்?..." "போய்ப் பேப்பரைப் படியும்! சும்மா வந்து உசிரை எடுக்காதீரும். எனக்கு வேற வேலை இருக்கு" - என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை அவரிடம் வெளிக்காட்டினார் கமலக்கண்ணன். புலவரும் 'சிலை சிங்காரமும்' மூச்சுவிடாமல் திரும்பி நடையைக் கட்டினார்கள். உள்ளே அறையில் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டு கண்ணாடி அலமாரியைத் திறந்து பிராந்தியை எடுத்தார் கமலக்கண்ணன். கதவைத் திறந்து கொண்டு மனைவி உள்ளே வந்தாள். "ஏன் இதுக்காகக் கிடந்து மாயறீங்க...! வீட்டு வாசல்லே தலை காட்ட முடியலே... உண்ணாவிரதமும் 'ஒழிக'வும் ஓய்ந்தபாடு கிடையாது. சனியன் பிடிச்ச பதவியை விட்டுத் தலை முழுகுங்க... ஏதோ வந்தது... இப்போ போகுது... நமக்கெதுக்கு இந்த எழவெல்லாம்...? இருக்கிற பிஸினஸைச் சரியாகக் கவனிச்சாலே போதும்" - என்று ஆறுதலாகக் கூறினாள் அந்த அம்மாள். மேல் வாயில் வழிந்த பிராந்தியைத் துடைத்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தார் கமலக்கண்ணன். அந்த அம்மாள் இந்த வேளையில் அவரிடம் பேசிப்பயனில்லை என்பது போல் கதவைச் சாத்திக்கொண்டு போனாள். வெளியே ஹாலில் டெலிபோன் மணி அடித்தது. அந்த அம்மாள் டெலிபோனை எடுத்தாள். "ஐயா இருக்காருங்களா?... நான் தான் 'தினக்குரல்' மானேஜர் பிரகாசம் பேசறேன்..." "லயன்ல இருங்க. உள்ளே படுத்திருக்காரு. அந்த ரூம் எக்ஸ்டென்ஷனுக்குப் போடறேன்" என்று பதில் சொல்லிவிட்டு - எக்ஸ்டென்ஷன் மணியை அழுத்தினாள் மிஸஸ் கமலக்கண்ணன். "யெஸ்..." "நான் தான் பிரகாசம் பேசறேன் சார்... நாளைக்கு ஸாலரி டேட்... சம்பளம் போடணும்..." "எங்கே...? உன்னை இரண்டு மூணு நாளா இந்தப் பக்கமே காணோம்?" "அதான் இன்னிக்கி வரலாம்னு ஃபோன் பண்ணினேன் சார்..." "பணம் தேவையாக்கும்... அதான் வரவேண்டிய அவசியம் வந்திருக்கு... இல்லியா?..." "அதுக்கில்லை சார்! நியூஸ் பிரிண்ட் கிளியரன்ஸ்... புது ரோடரி மிஷின்... பிரஸ் ஒர்க்கர்ஸ் ஸாலரி, எல்லாம்... பாக்கி இருக்கு..." "இன்னிக்கு என்ன தேதி...?" "முப்பதுங்க..." "ஒண்ணாந்தேதி சம்பளம் கொடுக்கறப்ப - த்ரீமந்த்ஸ் நோட்டீஸுக்குப் பதிலா எல்லாருக்கும் மூணுமாசச் சம்பளமாகக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வை. பத்திரிகை ரெண்டாந் தேதியோட நிக்கட்டும். பேப்பரை விக்கிறதை விட அச்சடிக்காத வெள்ளைப் பேப்பர் விற்கிறதுக்கு ஒரு கடை திறந்தா லாபமாவது வரும்..." "சார்... சார்...! அவசரப்படாதீங்க.. இத்தனை கோபம் எதுக்கு? எதுக்கும் பொறுத்துச் செய்யலாம். பாலிடிக்ஸ்லே எல்லாம் உண்டு சார்... வெற்றி... தோல்வி எல்லாம் சகஜம். பத்திரிகை ஒண்ணு கையிலே இருந்தாத் தோல்வியைக் கூட வெற்றியா மாத்திக்க முடியும் சார்... அவசரப்பட்டுடாதீங்க..." "உங்ககிட்ட யோசனை கேக்கலை. சொன்னதைச் செய்யி. ஹூ ஆர் யூ டு அட்வைஸ் மீ?" "சார்... நான் சொல்ல வந்தது என்னன்னா..." "எதுவும் சொல்ல வேண்டாம். கம் அண்ட் மீட் மீ த்ரீ ஓ க்ளாக் டு-டே. ஐ வில் கிவ் யூ எ செக்... எல்லாம் செட்டில் பண்ணிட்டு நாளைக்கிப் பேப்பர்லே 'பத்திரிகை இரண்டாம் தேதிக்கு மேலே வராதுன்'னும் போட்டுடு. ஏஜண்ட்ஸுக்கு எல்லாம் 'டிபாசிட்டை' திருப்பி அனுப்பிடு! ஐ வில் ஸ்டாப் தி ஹோல் டிராமா-" "... ஓகே... சார்" - பிரகாசம் இனிமேல் அவருடன் பேசுவதில் பயனில்லை என்பதை... போனில் ஒலித்த அவரது குரலிலிருந்தே தெரிந்து கொண்டான். இது அவன் எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு விரைவாக அவன் எதிர்பார்க்கவில்லை. கமலக்கண்ணன் தமது பதவியைப் பற்றி ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டுமென்பதை அவனால் இப்போது அநுமானம் செய்ய முடிந்தது. உடனே இதைப்பற்றிக் கலைச்செழியனுக்கும் மாயாவுக்கும் ஃபோன் செய்தான் பிரகாசம். மாலையில் அவன் கமலக்கண்ணனைக் காணப் போகுமுன் கலைச்செழியனைச் சந்தித்தாக வேண்டிய முக்கியமான காரியம் இருந்தது அவனுக்கு. |