5 கமலக்கண்ணன் மந்திரி விருத்தகிரீசுவரனுக்கு ஃபோன் செய்து பேசிய இரண்டு நாட்களுக்குப் பின் அவரையே கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரணப் பணி ஆரம்ப விழாவில் நேரில் காண நேர்ந்தது. நேரில் சந்தித்த போது மந்திரியும் கூடக் கமலக்கண்ணனிடம் தேனாகக் குழைந்தார். "உங்களைப் போலிருக்கிற இண்டஸ்டிரிலியஸ்ட்களெல்லாம் பொதுக் காரியங்களிலே இப்படி நிறைய ஈடுபடணும்" - என்று கமலக்கண்ணனைத் தூக்கி வைத்துப் பேசினார். கமலக்கண்ணன் அன்று மிகமிக மாறிய கோலத்தில் கோவிலுக்கு வந்திருந்தார். அரை வேட்டியும் இடுப்பில் தூக்கிக் கட்டிய மேலாடையுமாகத் திறந்த மார்புடன் அவரைப் போன்றவர்கள் தென்படுவது அபூர்வம்தான். 'ஒரு நாளும் இப்படி வராதவர் இன்று கோவில் காரியத்துக்காக இப்படி வந்திருக்கிறாரே?' - என்று பாமரர்கள் அதையும் வியக்க வேண்டுமென்பதுதான் அவருடைய அந்தரங்க ஆசை. ஒரு தலைமுறைக்கு முன் நின்றால் ஒரே மனிதன் ஆஸ்திகனாகவும் நாஸ்திகனாகவும் கலந்து இருக்க முடியும் என்பது அசாத்தியம் மட்டுமல்ல, அசம்பாவிதமும் கூட. இந்தத் தலைமுறையிலோ அதுவும் கூட முடியும். கமலக்கண்ணன் பக்தியைப் பற்றி அதிகம் தெரியாதவர். ஒரே மனிதன் ரேஸ், சீட்டாட்டம், பரதநாட்டியம், சங்கீதம், மது, கடைசியாகக் கொஞ்சம் கடவுள் இவ்வளவின் மேலும் பக்தி செலுத்த முடிந்த தலைமுறை இது. ரேஸ் கிளப்பிற்கும் கோவிலுக்கும் ஒரே சமயத்தில் போயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ரேஸ் கிளப்பைத் தவிர்க்க முடியாத படி இருக்கக் கூடியது அவருடைய மனப்பான்மை. பணவசதி என்ற சுகத்தைப் புரிந்து கொண்டுவிட்டவர்களுக்கு அதைவிட பெரிய கடவுள் இருக்க முடியாது தான். வசதியுள்ளவனின் அல்ப பக்தி கூட இங்கு பெரிதாகக் கொண்டாடப்படும் - என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் அவர் இதையெல்லாம் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. அன்றைக்கு அந்தக் கோவில் திருப்பணித் தொடக்க விழாவில் எல்லாரும் வயதில் இளையவரான அவரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். எதைச் செய்ய வேண்டுமானாலும் அவரருகே பயபக்தியோடு வந்து வாய்பொத்தி வினாவி, அவரது நோக்கம் தெரிந்து கொண்டு அப்புறம் செய்தார்கள். கடவுளுக்கு முன்னால் அவரது சந்நிதியிலேயே மனிதன் பக்தி செய்யப்படுவது பரிதாபகரமானது தான் என்றாலும் அதுதான் அங்கே தாராளமாக நடந்தது. அர்ச்சகர்களிலிருந்து கோவில் நிர்வாக அதிகாரிகள் வரை சகலரும் மந்திரியையும் கமலக்கண்ணனையுமே சுற்றிச்சுற்றி வந்தார்கள். கடவுள் கழுத்திலிருந்த மாலைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றி மந்திரிக்கும், கமலக்கண்ணனுக்கும் போட்டுத் தலையில் பரிவட்டமும் கட்டி மரியாதை செய்தார்கள். கடவுளை மரியாதை செய்கிற பாவனையில் இடுப்பில் கட்டிய வேட்டியும், நெற்றியில் விபூதிப்பட்டையுமாக வருகிறவர்களுக்கு மிரண்டு 'கடவுளே' பதில் மரியாதை செய்வது வேடிக்கையாகத்தான் இருந்தது. மரியாதைகள் முடிந்தபின் கோவில் முன் மண்டபத்தில் திருப்பணிக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. மந்திரிதான் தலைமை தாங்கினார். இடுப்பில் தயாராகக் கிழித்துச் சொருகிக் கொண்டு வந்திருந்த ஒற்றை 'செக்' தாளை எடுத்து அதில் ஒரு பெரிய தொகையைப் பூர்த்திசெய்து 'கடம்பவனேசுவரர் கோவிலில் புனருத்தாரண நிதிக்காக நான் அளிக்கும் இரண்டாவது பகுதி நன்கொடை' - என்று மந்திரியிடம் நீட்டினார் கமலக்கண்ணன். "நம் தொழிலதிபர் கமலக்கண்ணன் இந்தத் திருப்பணி நிதிக்கு ஏற்கெனவே ஒரு கணிசமான தொகை அளித்திருப்பதை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள். இன்று மறுபடியும் அவர் ஒரு பெரிய தொகைக்குச் செக் அளித்திருக்கிறார்" - என்று மந்திரி கூட்டத்திலேயே அதை அறிவித்தவுடன் பலத்த கைதட்டல் எழுந்தது. உடனே அங்கே வந்திருந்த இன்னொரு தொழிலதிபர் கமலக்கண்ணனின் தொகையைவிட ஓர் ஆயிரம் ரூபாய் அதிகத் தொகை ஒன்றைத் தாம் அந்தத் திருப்பணி நிதிக்கு அளிப்பதாக அறிவித்தார். மந்திரி அந்தச் செய்தியையும் பலத்த கைத் தட்டலுக்கிடையில் வெளியிட்ட போது கமலக்கண்ணனின் முகத்திலே மலர்ச்சி குன்றியது போல் தெரிந்தது. அடுத்து வேறு இரண்டொருவரும் அதே கூட்டத்தில் திருப்பணிக்கான நன்கொடைத் தொகைகளை மந்திரி வாயால் வெளியிடுவதற்கென்றே சொல்லியது போல அறிவித்தார்கள். முடிவில் நன்றி கூறியவர் - "நம் அமைச்சரவர்கள் கைராசிக்காரர் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதற்கு இந்த விழாவை அவர் தொடங்கி வைத்ததிலிருந்து வந்து குவிந்த நன்கொடைகளே சாட்சி. நமது உபதலைவராகிய கமலக்கண்ணன் அவர்களின் குடும்பமோ பரம்பரையாகவே கைராசிக்காரக் குடும்பம். இந்த நிதிக்கு அவர் நன்கொடை கொடுத்திருப்பதே இது மேலும் மேலும் பெருகி வளரும் என்பதற்கு அடையாளம்" - என்று மீண்டும் தன் பெயரை நினைவூட்டியப் போதெல்லாம் பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். உள்ளமும் இனம்புரியாது குறுகுறுத்தது. கூட்ட முடிவில் மந்திரி வெளியில் வருகையில் மிகவும் நெருங்கி ஏதோ சொல்லிக் கொண்டுவருவது போல் கமலக்கண்ணனின் தோளில் கைபோட்டுத் தழுவிக் கொண்டாற் போல வந்தார். அந்த நிலையில் கோவிலிற் கூடியிருந்த எல்லார் கண்களும் கமலக்கண்ணனையே மதிப்புடன் நோக்கின. திருப்பணியின் செயற்குழுவில் இருந்த மற்ற பிரமுகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கமலக்கண்ணன் மேல் பொறாமையாகக் கூட இருந்தது. மந்திரி எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார். மற்றவர்கள் கமலக்கண்ணனை சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கமலக்கண்ணனும் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அன்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் முகாம் செய்திருந்த ஒரு சமய ஆதினகர்த்தரின் காரியஸ்தர் கமலக்கண்ணனுக்கு ஃபோன் செய்தார். கமலக்கண்ணனுக்கு முதலில் இது போன்றவர்களிடம் எப்படிப் பேசிச்சமாளிப்பது என்றே புரியவில்லை. "நீங்க கோயில் திருப்பணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் பத்திச் சாயங்காலப் பேப்பரிலே பார்த்தோம். ஆதீனமே உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறது. நீங்க வந்துப் பார்த்தாச் சாமியே ரொம்ப சந்தோசப்படுவாங்க" - என்றார் காரியஸ்தர். கமலக்கண்ணன் தயங்கினார். ஆதீனகர்த்தரே தன்னைப் பார்க்க விரும்புவது காரியஸ்தரின் பேச்சிலே தெரிந்திருந்தாலும் அதில் ஒரு வறட்டுக் கர்வமிருப்பதையும் அவர் உணர்ந்தார். ஆயினும் அவரால் அந்த அழைப்பை மறுக்க முடியவில்லை. "நீயும் சாயங்காலம் என் கூட நுங்கம்பாக்கம் வர வேண்டியிருக்கும்" - என்று மனைவியிடம் வேண்டினார் அவர். "நான் கிளப்பிற்குப் போகணுமே..." என்று முதலில் தயங்கினாற்போல இழுத்த அவள் அப்புறம் அவர் வற்புறுத்திய வேகத்தை மறுக்க முடியாமல் இணங்கினாள். பிரமாதமாக அலங்கரித்துக் கொண்ட பின் அவள் புறப்பட அதிக நேரமாயிற்று. அவர் பட்டு அதரவேஷ்டி, சில்க் ஜிப்பா-விபூதிப்பூச்சு, இடுப்பில் பட்டு அங்கவஸ்திரம் சகிதம் புறப்பட்டார். சாமியாரிடம் கொடுப்பதற்குத் தட்டு நிறைய ஆப்பிள், திராட்சை, மாதுளம் பழங்களை அழகாக அடுக்கிக் காரில் கொணர்ந்து வைத்திருந்தார் சமையற்காரர். இதுவரை அவரோ, அவருடைய நவநாகரிக் மனைவியோ இப்படி ஒரு மடாதிபதியைத் தேடிச் சென்றதே இல்லை. ஆயினும் இதன் மூலமும் ஒரு சமூக கௌரவத்தைத் தேடிக்கொள்ள முடியும் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்து கொண்டிருந்தார். இந்த ஆதீனகர்த்தருக்கு வேறு பல வியாபாரிகள், தொழிலதிபர்கள், வருமானவரி அதிகாரிகள் எல்லாரும் நெருங்கிய அன்பர்களாக இருப்பதை அவர் பலரிடமும் கேள்விப்பட்டிருந்தார்.
ஆதீனகர்த்தரை அறிமுகம் செய்து கொள்வதாலும் பழகிக் கொள்வதாலும் தனக்கு இலாபமுண்டு என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பக்தனாக இருப்பதைவிடப் பக்தனைப் போல் தன்னைக் காண்பித்துக் கொள்வது கூடப் பெரிய சமூக அந்தஸ்தைத் தரமுடியும் என்பதைப் பலருடைய வாழ்வில் அவர் காண முடிந்திருக்கிறது. அதனால் தான் மடத்துக் காரியதரிசி வலுவில் அழைத்தபோது அவரும் மறுக்காமல் புறப்பட்டு வந்திருந்தார்.
"மிஸஸ் சோமசுந்தரம் நேத்து லேடீஸ் கிளப்லே சொன்னாள், இந்தச் சாமிக்குச் 'சித்து விளையாட்டு' - எல்லாம் கூட அத்துபடியாம்" - என்று காரில் வரும்போது கூறினாள் அவர் மனைவி. "சித்து விளையாட்டுன்னா..." என்று அவள் கூறியதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் பதிலுக்கு அவளையே வினவினார் கமலக்கண்ணன். அவள் தனக்குத் தெரிந்த இரண்டொன்றை விவரித்துக் கூறத் தொடங்கினாள். அதற்குள் கார் சுவாமிகள் தங்கியிருந்த மடத்து வாசலுக்கு வந்து நின்று விட்டது. காரியஸ்தர் ருத்ராட்சதாரியாக ஓடோடி வந்து கார்க் கதவை திறந்துவிட்டு அவர்களை வரவேற்றார். "சாமி இப்பதான் என்னைக் கூப்பிட்டு நீங்க வந்தாச்சான்னு கேட்டாங்க" - என்றார் அவர். "அஞ்சு மணிக்கே புறப்படணும்னு நினைச்சோம். இவதான் வீட்டிலே விளக்கேத்தாமப் புறப்பட்மாட்டேன்ன்னிட்டா..." என்று மனைவியைச் சார்ந்து புளுகித் தள்ளினார் கமலக்கண்ணன். பின்னாலேயே டிரைவர் வர்ணபூர்வமாக அடுக்கப்பட்டிருந்த பழத்தட்டை எடுத்துக் கொண்டு வந்தான். காரிஸ்தர் யாரோ கண்பார்வை குன்றியவர்களுக்கு ஒவ்வொரு படியாகச் சுட்டிக் காட்டி அழைத்துப் போவதைப் போல அவர்களுக்குத் தம் கையால் கீழே ஒவ்வொரு படியாய்க் காட்டிப் பவ்யமாக உள்ளே அழைத்துக் கொண்டு போனார். மடங்களும் சமயநிலையங்களும் உலகம் முழுவதும் இப்படிப்பட்ட முறைகளில் மட்டுமே தங்களுடைய சாதுரியங்களை வைத்திருப்பதை விளக்குவது போல் நடந்து கொண்டார் அந்தக் காரியஸ்தர். சந்நிதானத்துக்கு முன்னே சென்றதும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி இருவரும் விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டார்கள். பின்பு சாமிகள் கையை ஆசி கூறுவது போல அசைத்ததும் சற்றே தள்ளி இருவரும் அமர்ந்து கொண்டார்கள். காரியஸ்தர் விலகி நின்று கைகட்டி வாய்பொத்தினாற்போன்று பணிவாக இருந்தார். சாமிகள் ஷேமலாப விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்மா, பசு, பதிபாசம் இவைகளையெல்லாம் பற்றிப் பரமார்த்தியமாக அவர் பேசுவார் என்று கமலக்கண்ணன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக லௌகீகமானவற்றையே அவர் நிறையப் பேசத் தொடங்கினார். சிலவற்றைக் கமலக்கண்ணனே விரும்பவுமில்லை. எதிர்ப்பார்க்கவுமில்லை. கமலக்கண்ணன் குடும்பத்தின் சொத்து, தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீடுகள் பற்றி எல்லாம் நேரிடையாகவே தூண்டித் தூண்டிப் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார் சாமிகள். அரசியல் பற்றியும், ஊர்வம்புகள் பற்றியும் கூடப் பேசினார். "மடத்துக்கு வருகிற பலருக்கு சம்பிரதாயங்களே தெரிவதில்லை. வந்ததும் ஹோட்டல் டேபிள் மாதிரி நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விடுகிறார்கள். கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக்கொள்ள வேண்டுமென்பதையே மறந்து விடுகிறார்கள். காலம் அப்படிக் கெட்டுப் போயிருக்குது" - என்று கால நிலைமை பற்றியும் சாமிகள் வருத்தப்பட்டுக் கொண்டார். "இந்தக் காலத்துப் பெண்கள் எல்லோரையும் போலில்லாமே அம்மா நல்ல குணவதியாகத் தெரியறாங்க" - என்று மிஸஸ் கமலக்கண்ணனுக்கு இருந்தாற்போலிருந்து ஒரு புகழுரையைக் கொடுத்து அந்த அம்மாள் முகத்தை மலர வைத்தார் சாமிகள். 'துறவிகளும், அரசியல்வாதிகளும் எப்போதுமே சொல்ல விரும்புவதை எப்போதாவது சொல்வது போல் அசாதாரணமாகச் சொல்லுவார்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அவருடைய பேச்சு. அங்கு இருவரும் வந்ததிலிருந்து மிஸஸ் கமலக்கண்ணன் பக்கமே அவர் பார்வை அதிகம் நிலைத்திருந்தாற் போலப் புரிந்தது. "சாமியை ஒருநாள் நம் பங்களாவுக்குப் பாத பூஜைக்கு வரச்சொல்லி இப்பவே அழைச்சிடுங்க"- என்று மிஸஸ் கமலக்கண்ணன் அவர் காதருகே முணுமுணுத்தாள். அவரால் அதை மீறவும் முடியவில்லை ஏற்கவும் முடியவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்தால் அவளே துணிந்து சாமிகளிடம் அந்த வேண்டுகோளைச் சொல்லி விடுவாள் போல் தோன்றவே கமலக்கண்ணன் வெளியிட்டார். "சாமி ஒருநாள் நம்ம வீட்டுக்கு வந்து பெருமைப்படுத்தணும்"-என்று தனக்குத் தெரிந்த அளவு சம்பிரதாயமாக அந்த வேண்டுகோளைக் கமலக்கண்ணன் வெளியிட்டார். "எங்கேயும் அதிகம் போறதில்லே... பார்க்கலாம்" - என்று தயங்கியபடி காரியஸ்தர் முகத்தை ஏறிட்டுப்பார்த்தார் சாமிகள். காரியஸ்தர் முகம் மலர்ந்தது. "சாமி அப்படிச் சொல்லப்படாது... இவங்க விஷயத்திலே கொஞ்சம் கருணை காட்டணும்" - என்றார் காரியஸ்தர். தன்னை வலிய ஃபோன் செய்து அழைத்து விட்டுத் தான் ஒரு முறைக்காக அழைக்கும் அழைப்பை மட்டும் ஏற்க மறுப்பது போல் சாமிகளும், மடத்துக் காரியஸ்தரும் 'பிகு' செய்வதை உள்ளூர வெறுத்தாலும் அந்த வெறுப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல், "சாமி அவசியம் வரணும்! எங்க ஆர்வத்தை ஏமாத்திடப்படாது" - என்று மீண்டும் வற்புறுத்தினார் கமலக்கண்ணன். சுவாமிகள் தன் வீட்டிற்கு வந்தால் அதைஒட்டி ஒரு பத்துப் பெரிய மனிதர்களுக்குத் தன்னை ஒரு பக்திமானாகவும் நல்லவனாகவும் நிரூபித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கமலக்கண்ணன் மனத்தில் எண்ணங்கள் அந்தரங்கமாக ஓடின. சாமிகளிடம் கடைசியாகவும் தன் வேண்டுகோளை வற்புறுத்தி விட்டுத்தான் வீடு திரும்பினார் கமலக்கண்ணன். மறுநாள் காலை ஒரு முக்கியமான உத்தியோகப் பிரமுகர் கமலக்கண்ணனைத் தேடிவந்தார். தன்னுடைய மகள் பரதநாட்டியம் பயின்று வருவதாகவும், அதற்கு அரங்கேற்றத் தேதி பார்த்திருப்பதாகவும் கமலக்கண்ணனே தலைமை வகித்து நடத்தித் தரவேண்டும் என்றும் அவர் விரும்பினார். நகரில் இரண்டு மூன்று முக்கியமான சங்கீத நாடக சபாக்களுக்குக் கமலக்கண்ணனே கௌரவத் தலைவராக இருந்து வந்ததனால் அவரைத் தலைவராகப் போட்டு அரங்கேற்றுவதனால் பின்னால் பல பயன்களை எதிர்பார்த்தார் அந்த உத்தியோகப் பிரமுகர். "பரத நாட்டியத்தைப் பத்தி எனக்கென்னத்தைத் தெரியும்? வேறே யாராச்சும் பெரியவங்களாக் கலைஞானமும் கொஞ்சம் உள்ளவங்களாப் பார்த்துத் தலைமை வகிக்கப் போடுங்களேன்!..." என்று கொஞ்சம் கௌரவத் தயக்கம் தயங்கினார் கமலக்கண்ணன். "தலைமைங்கறதே உங்களைப் போலத் தகுதி உள்ளவர்கள் யாராவது நாலு பேருக்கு முன்னாலே குழந்தையை ஆசிர்வாதம் பண்றதுதானே?" என்றார் வந்த உத்தியோகப் பிரமுகர். கமலக்கண்ணன் இதற்கு மேலும் பிடிவாதமாக மறுக்கவில்லை. "உங்க இஷ்டம் அப்பிடியானா நான் மறுக்கறதுக்கில்லே!" என்று இணங்கினார். "அப்போ இன்விடேஷன், வால் போஸ்டர்லாம் கொடுத்துடறேன். பத்திரிகைக்களுக்கும் கொடுத்து 'எங்கேஜ் மெண்ட்ஸ்' காலத்தில் வரச்செய்து விடுகிறேன். ஏதோ இந்தக் கலையிலே உங்க ஆசீர்வாதத்தாலே தான் குழந்தை முன்னுக்கு வரணும்" - என்றார் வந்தவர். அவர் பேசியது வசீகரிக்கிற தினுசில இருந்தது. 'வால் போஸ்டர் கூட அடித்து உங்கள் பெயரை விளம்பரப் படுத்தத் துணிந்து விட்டேன். என்னைப் பதிலுக்குப் பெருமைப் படுத்துங்கள்' - என்று கெஞ்சுகின்ற தொனி தெரிந்தது. கமலக்கண்ணன் பதில் ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார். வந்தவர் திரும்பிச் சென்றபின் அவர் தனக்குத் தானே சிந்திக்கத் தொடங்கினார். 'ஏதோ ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசி அந்தக் கூட்டமும் அதன் புகைப்படமும் அதற்கு நன்கொடை கொடுத்த செய்தியும் பத்திரிக்கையில் வரப்போக எல்லாருமே என்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள். பேசவும், தலைமை வகிக்கவும், பரிசு வழங்கவும் அழைக்கிறார்கள். இந்த உலகில் பாமரர்கள் பலர் பெரும் புகழை அடைய முடியாத நிலையில் இருக்கிறார்கள். தாங்கள் புகழை அடைய முடியாத பலர் யாரையாவது தேடி அப்படித்தேடி கிடைக்கிற அந்த ஓர் ஆளுக்கு எல்லாப் புகழையும் அடைவித்துப் பார்த்து மகிழ்கிறார்கள். மக்கள் அப்படித் தேடிப்பிடித்துப் புகழை அடைவிக்கின்ற ஆளுக்குத்தான் தலைவர் அல்லது பிரமுகர் என்று பெயரும் ஏற்பட்டு விடுகிறது. நானும் இனி பிரமுகர் ஆகிறேன் என்பதற்குத் தான் இவை எல்லாம் அடையாளங்கள்!' கூட்டத் தலைமை, பொது நிறுவனங்களுக்குத் தாராளமான நன்கொடை, திருப்பணி நிதியில் உபதலைவர் பதவி, சுவாமிகளின் அழைப்பு, பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கு ஆசி எல்லாமே இதோ இதோ என்று வலிய வாய்க்கும் சந்தர்ப்பங்களாகத் தோன்றின அவருக்கு. தலைமை வகிக்க அழைத்து விட்டுப் போக வந்த பிரமுகர் சென்ற சில விநாடிகளுக்கு எல்லாம் சோதிடர் ஒருவர் தேடி வந்தார். வெளியே வராண்டாவில் அவரை உட்கார்த்தி வைத்துவிட்டு அவர் கொடுத்திருந்த விஸிட்டிங் 'கார்டை' உள்ளே கமலக்கண்ணனிடம் கொண்டு வந்து கொடுத்தான் வேலைக்காரன். 'கே. கே. சர்மா, அஸ்ட்ராலஜர்' என்று போட்டு அவருடைய முகவரியும் டெலிபோன் நம்பரும், தந்தி முகவரியும் எல்லாம் அந்தச் சிறு அட்டையில் நெருக்கமாக அச்சிடப்பட்டிருந்தன. கமலக்கண்ணன் வெளிப்பேச்சில் சோதிடத்தை எதிர்த்துப் பேசுகிறவராக இருந்தாலும் இப்போது என்னவோ தன் எதிர்காலத்தைச் சற்றே தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல் ஆசைப்பட்டார். எனவே அவரை உடனே உள்ளே அனுப்பும்படி வேலைக்காரனிடம் கூறினார் கமலக்கண்ணன். தொழில்திறன் வாய்ந்த அந்தச் சோதிடர் உள்ளே வந்து கமலக்கண்ணனை எதிரே சந்தித்ததும், 'உங்களுக்குச் சகல சம்பத்துக்களும் பெருகி ஐசுவரியம் விருத்தியாகும்' - என்று பொருளுள்ள சம்ஸ்கிருத சுலோகம் ஒன்றைக் கணீரென்ற குரலில் பாடிவிட்டு - "இதை வாங்கிக்கோ குருவாயூரப்பன் பிரசாதம். சகலமங்களமும் உண்டாகும்" - என்று சந்தனவில்லையையும் பச்சைக் கற்பூரத் தூளையும் சிறிய இலைத்துணுக்கில் வைத்து நீட்டினார். கமலக்கண்ணன் கும்பிட்டுவிட்டு அதை வாங்கிக் கண்களில் ஒத்திக்கொண்டார். தாமே ஓடிப்போய்த் தமது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து சர்மாவிடம் கொடுத்தார். சர்மா ஜாதகத்தைக் கால் மணி நேரம் மேலும் கீழும் பார்த்து விட்டு, "இது ராஜ யோக ஜாதகம்! ஜாதகனுக்குச் சந்திரதிசை குருபுத்தியின் போது மந்திரியாக வரவேண்டிய பாக்கியமிருக்காக்கும்" - என்று ஸ்பஷ்டமாகக் கூறியபோது கமலக்கண்ணனுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. அவர் எதை நினைத்து அல்லும் பகலும் உருகுகிறாரோ அதையே அல்லவா சோதிடரும் கூறிவிட்டார்! "நீங்க தொட்டது பொன்னாகும். எடுத்த காரியம் உடனே வெற்றியடையும். கீர்த்தி அதிவேகமாகப் பெருகிப்பரவும். தேசமெல்லாம் உங்களைக் கொண்டாடப் போகிறது பாருங்கள்" - என்று பூமாரியாகச் சோதிடர் சொரிந்த சொற்கள் எல்லாம் அவரை அப்படியே வான மண்டலத்துக்குத் தூக்கிக் கொண்டு போய்விட்டன. இந்தப் பூமியில் எல்லாரையும் போலத் தானும் ஒரு மனிதன் என்று எண்ணுவதை விட தெய்வாம்சம் பொருந்தியதோர் அவதாரம் என்றே எண்ணிக்கொள்ளலாம் போலப் பெருமிதம் வந்துவிட்டது அவருக்கு. "ஃபாரின் டூர்ஸ் எதாச்சும் இருக்கான்னு பாருங்களேன்" - என்று ஒரு மந்திரம் கேட்பது போன்ற தாகத்துடன் சோதிடம் கேட்பதில் வெறிகொண்டு வினவினார் கமலக்கண்ணன். "பேஷா இருக்கு! ஒண்ணா ரெண்டா? ஏகப்பட்ட ஃபாரின் டூர்ஸ் இருக்கே. பூமியில் உள்ள சகலதேசங்களையும் பல தடவை சுத்திவரப் போறேள். பாருங்கோ" - என்றார் சோதிடர் சர்மா. சுதந்திரமடைவதற்கு முன் இந்தியாவையே சரியாகப் பாராத இந்தியன் ஒவ்வொருவனும் சுதந்திரம் அடைந்த பின்போ தன் தாய் நாட்டை முழுமையாகப் பார்க்காவிட்டாலும் அந்நிய நாடுகளைப் பார்ப்பதில் தவிப்புக் கொண்டிருக்கிற நிலைக்கு ஓர் உதாரணமாகவே கமலக்கண்ணனும் இருந்தார். சோதிடர் எதையும் விடவில்லை. எல்லாவற்றிற்கும் பொறுமையாக மறுமொழி கூறினார். "ஜீவிய காலத்திலேயே நீங்க மகாயோகவானாக இருக்கறத்துக்கான எல்லா அம்சமும் இருக்கு" என்று கூறிக்கொண்டே வந்தவர், குரலை மெதுவாக்கி, கொஞ்சம் விஷமமும் கலந்த குரலில், "இன்னும் கொஞ்ச நாளிலே திரிவசியமும் உங்களுக்குக் கைகூடும். மகா ஸௌந்தரியவதியான சில ஸ்திரிகள் உங்க மேலே பிரியப்படுவா..." என்று கூறியபடியே புன்முறுவர் பூத்தார். கமலக்கண்ணனுக்கே இதைக் கேட்க மகிழ்ச்சிக் குறுகுறுப்பு இருந்தாலும், "இரைந்து சொல்லாதிங்க... என் சம்சாரம் உண்ணாவிரதம் இருக்கக் கிளம்பிடப் போறா" - என்று ஒப்புக்கு ஏதோ நகைச்சுவை போல் மறுமொழி கூறினார். பணக்காரனுக்குச் சோதிடம் கூற வருகிறவன் அவனுடைய ஜாதகம் கூறுவதைவிட மனம் கூறுவதற்கேற்பவே அதிகமாகப் பலன்கள் கூற வேண்டியிருப்பதைப் புரிந்து கொண்டவர் போல் பேசினார் அந்த சோதிடர். அவர் பல ஜமீன்தார்களுக்கும், மிராசுதார்களுக்கும் பலமுறை சோதிடம் கூறிய அனுபவத்தில், 'எவ்வளவு பணம் சேரும், எவ்வளவு பெண்கள் சேர்வார்கள்' என்பதையே அவர்கள் அறிய விரும்பித் தவிப்பார்கள் - என்பதை நன்றாகப் புரிந்து கொண்டவராக இருந்தார் அவர். "அது சரி! ஏதோ மந்திரியா வருவேன்னீங்களே! என்ன மாதிரி? எப்போ? எவ்வளவு காலம்? எல்லாம் விவரமாகச் சொல்லுங்களேன்..." என்று அவரை அனுப்பவே மனமில்லாமல் தூண்டித் தூண்டிக் கேட்டார் கமலக்கண்ணன். "சீக்கிரமே வருவீங்க; சந்திரதசை குருபுத்தி முடியறதுக்குள்ளே நடக்கத்தான் போகுது! நான் சொல்லலே. ஜாதகமே தெளிவாகச் சொல்றது. பார்த்துண்டே இருங்கோ..." என்றார் ஜோதிடர். கமலக்கண்ணனுக்கு உச்சி குளிர்ந்தது. முழுமையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைச் சன்மானமாக எடுத்து வைத்து வெற்றிலைப் பாக்குப் பழங்களோடு சோதிடருக்கு கொடுத்தனுப்பினார் அவர். "என்னாங்க உங்களுக்கு ஜோஸ்யத்திலே நம்பிக்கையில்லை என்று அடிக்கடி சொல்வீங்களே இன்னிக்கு என்னவோ ஒரேயடியாக் குலாவினீங்களே? என்ன விஷயம்?" என்று குத்தலாகக் கேட்டாள் மனைவி. "வீடு தேடி வந்த பெரியவரைத் திருப்பியனுப்பிடப்படாதேன்னு ஏதோ கேட்டுக் கொண்டேன். பணமும் கொடுத்தனுப்பினேன்" என்று மனைவியிடம் மெல்லச் சமாளித்தார் கமலக்கண்ணன். மனைவியின் முகத்தில் அவர் கூறியதை நம்பாதது போன்ற கேலிப் புன்முறுவல் மலர்ந்தது. "ஏதோ இப்பவாவது ஜோஸ்யம், சாமி, கோவில் பணி எல்லாத்திலியும் நம்பிக்கை வருதே..." என்று வியந்த படி பேசினாள் அந்த அம்மாள். கமலக்கண்ணன் அதை மறுத்தோ ஒப்புக்கொண்டோ மறுமொழி ஒன்றும் கூறவில்லை. மௌனம் சாதித்து விட்டார். 'கோழைகள் ஒவ்வொருவரும் தான் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சோதிடம் மூலம் பார்க்கிறார்கள்' - என்ற வெளிநாட்டுப் பழமொழி ஒன்றை அடிக்கடி தன் மனைவி உட்படப் பலரிடம் கூறியிருக்கிறார் கமலக்கண்ணன். இப்போதோ ஆசை மிகுதியில் அவரே ஒரு கோழையாகி மீண்டிருந்தார். அன்றிரவு கிளப்பில் சீட்டாடும் போது ஒரு சக தொழிலதிபர் கமலக்கண்ணனைக் கேலி செய்தார்: "இனிமே இவரைக் கிளப் பக்கம் கூடப் பார்க்க முடியாதப்பா ஏராளமான பொதுக் காரியங்களிலே இறங்கிப் பிரமுகராகி விட்டார்." "அட நீங்க ஒண்ணு! நீங்களும் சரி, நானும் சரி பொது வாழ்க்கையிலிருந்து விலகி எந்த வியாபாரத்தையும் தொழிலையும் இன்னிக்கி நடத்திவிட முடியாது. அதனாலே நாலு எடத்துக்குப் போகணும், வரணும், பொது வாழ்க்கையிலேயும் தாராளமாகக் கலந்துக்கணும், எதையும் ஒதுக்கிடப்படாது, எதிலிருந்தும் ஒதுங்கிவிடவும் கூடாது" என்றார் அவர். "அது சரி! ஆனா நீங்க சொல்றதைவிட நல்ல காரியம் - பப்ளிக் ரிலேஷனுக்காக நீங்களே ஒரு டெய்லி நீயூஸ் பேப்பர் நடத்தறது தான். உங்களுக்கு அதை ஸஜ்ஜஸ்ட் பண்ணணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை மிஸ்டர் கமலக்கண்ணன்! நம்ம நியூஸ் எல்லாம் போட்டுக்கலாம்கிறதைத் தவிர - நம்ம சொந்தக் கம்பெனிகளோட விளம்பரங்களைக் கூட அதிலே போட்டுக்க முடியும். ஒரு நல்ல டெய்லி நியூஸ்பேப்பராலே லட்சக்கணக்கில் மக்கள் ஆதரவைத் திரட்டறது சுலபம். நீங்க மனசு வச்சா இது முடியும்" என்றார் அவர் நண்பர்களில் ஒருவரான மற்றொரு பணக்காரத் தொழிலதிபர். கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்த்ததில், "ஜாயிண்ட் வென்ச்சராகூடத் தொடங்கலாம்" - என்று தாமும் துணை செய்வதாக வாக்களித்தார் அந்த நண்பர். கமலக்கண்ணனுக்குச் சபலம் தட்டியது. உடனே கிளப்பிலேயே நண்பர்களாக உட்கார்ந்து ஒரு திட்டம் போடத் தொடங்கினார்கள். பேப்பர் கோட்டா எவ்வளவு தேவை? எஸ்டாபிளிஷ்மெண்ட் செலவு என்ன ஆகும்? விளம்பர வருமானம் எவ்வளவு இருக்கும்? ஆரம்பகாலத்தில் எவ்வளவு நஷ்டம் வரும்; போகப் போக எப்படி இலாபகரமாக மாறும்? என்பதையெல்லாம் திட்டமிட்டு விவாதித்தார்கள். அந்தப் பேச்சும், யோசனையும் கமலக்கண்ணன் மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. சோதிடர் சொல்லிவிட்டுப் போயிருந்த ராஜயோக காலம் நெருங்கி வருவதற்கு அறிகுறியாகவே இத்தகைய திட்டங்கள் தமக்குத் தென்படுவதாக அவர் எண்ணத் தொடங்கிவிட்டார். அந்தப் பிரமையே - அந்த மயக்கமே - அந்தப் போதையே ஓர் இலட்சியமாகிக் கனலத் தொடங்கிவிட்டது அவருள். ஒரு தினசரிப் பத்திரிக்கை தனக்கே சொந்தமாக அவசியமென்று தீவிரமாக நினைக்கலானார் அவர். நினைவே ஒரு தவிப்பாகவும் ஆகிவிட்டது சிறிது நேரத்தில். |