3
அபலைகள் மிகப்பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை... அவ்வாறிருக்கும் போது, அவர்கள் தங்கள் வார்த்தைகளைக் காப்பது எப்படி? செவியில் ஏற்ற செய்தியின் பரபரப்பு அடங்கச் சில வினாடிகளாயின. உடல் குப்பென்று வேர்த்து ஓய்ந்தது. அவளை அங்கு எதிர்கொள்வதா அல்லது அவள் வருவதற்குள்ளேயே அங்கிருந்து புறப்பட்டு விடுவதா என்ற கேள்வியும் - அந்தக் கேள்வியை ஒட்டிய உணர்ச்சிப் போராட்டமும் சுகுணனின் மனத்துள் மூண்டன. திடீரென்று எதையும் சிந்திக்க முடியாத ஒரு நிலை - மேஜை மேல் குவிந்திருந்த எந்த வேலைகளையும் - தொடர்பாகச் செய்ய முடியாத உணர்ச்சிகளுடனும் தாபங்களுடனும் அவள் அங்கு வந்து தன்னை எதிர்கொள்ளப் போகிறாள் என்ற எண்ணமும், அவளைத் துணிவுடனும் நிச்சலனமாகவும் தான் எதிர் கொள்வதா, வேண்டாமா, என்ற குழப்பமுமாக அந்த விநாடியில் அவன் இருந்தான். அவனைச் சுற்றி அவனுடைய உணர்விலோ, ஞாபகத்திலோ, உறைக்காமல், அந்த மிகப்பெரிய அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் ஒலிப்பதும், ஓய்வதும் மீண்டும் ஒலிப்பதுமாக டெலிபோன் மணிகள், கலீர் கலீரென்று ஊறிச் சிலிர்க்கும் ஊற்றுப் போல் கேட்டுக் கொண்டிருந்தன. வேகமாய் ஆட்கள் அங்கும் இங்குமாக மாறி மாறி நடக்கும் காலடி ஓசை ஒருபுறம், 'பைண்டிங்' ஆகி வெளியூருக்குப் பார்சல் போகவேண்டிய பத்திரிகைகள் அடுக்கப்படும் ஓசை ஒருபுறம். டயர்ச் சக்கரங்களோடு கூடிய நீள நீளமான கட்டை வண்டிகளில் ரோட் ரோலர்களைப் போல் 'உருளை உருளை'யாக வந்து இறங்கும் நியூஸ்பிரிண்ட் பேல்கள் வண்டிகளிலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கோடௌனுக்குள் உருட்டிச் செல்லப்படும் சத்தம் ஒருபுறம், டீயும், காப்பியுமாக வந்து காலியானதும் கலகலக்கும் 'காண்டீன்' டவரா டம்பளர்களின் ஒலி ஒருபுறம். ஆனால் இவை எல்லாம் சுகுணனின் செவிகளில் வழக்கம் என்ற போர்வையினால் மூடப்பட்ட பழைய பழகிய ஞாபகங்களாய் மறந்து போயிருந்தன. வளைகள் கலின் கலினெனப் பாட மெட்டிகள் கிணுங் கிணுங்கெனத் தாளமிட யாரோ ஒருத்தி அங்கே தன்னைத் தேடி வரப் போவதைப் பற்றியே குமைந்து கொண்டிருந்தது அவன் ஞாபகம். கடந்த சில நாட்களாக வராமலிருந்து விட்டு இன்று தான் முதன் முதலாக அலுவலகத்துக்கு வந்திருப்பதால் 'துளசி சந்திக்க வரப்போகிறாள்' - என்ற ஒரே காரணத்துக்காக - அலுவலகத்துக்குள் வந்து உட்கார்ந்த சூட்டோடு அங்கிருந்து உடனடியாக வெளியேறவும் முடியாது போலிருந்தது. ஒன்றையும் செய்ய முடியாத ஊமைக் குழப்பமாக அன்று அவன் மனநிலை இருந்தாலும் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருந்தன. அடுத்த வாரத்துப் பூம்பொழிலில் பிரசுரிப்பதற்காக வந்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து அச்சுக் கோப்பதற்குக் கொடுக்க வேண்டும். பூம்பொழிலில் அவன் தானே எழுதுகிற தொடர்கதைப் பகுதியில் அடுத்த வாரத்துக்கானவற்றை எழுதியாக வேண்டும். இவ்வளவு வேலையிருந்தும் ஒரு வேளையும் ஓடவில்லை. இடைவேளை வந்துவிட்டதற்கு அறிகுறியாகப் பக்கத்து அறையில் டிரான்ஸிஸ்டர் ரேடியோ ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 'காலை மலர்' ஆசிரியருக்கு இடைவேளையில் பொழுதுபோக்கு இந்த டிரான்சிஸ்டர் ரேடியோதான். தன்னுடைய மனத்தின் அந்தரங்கமான சோகத்திற்கு உணர்ச்சியால் மெல்லிய சோகக் கோடுகள் இழைப்பது போல 'மனவியாலகிஞ்சரா' - என்று 'நளின காந்தியை' யாரோ ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு உடனே எங்கோ எழுந்து வேகமாக ஓடவேண்டும் போல அவன் உணர்ச்சியை முடுக்கிற்று.
மேஜை மேலிருந்த கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், திருத்துவதற்காக வந்திருந்த அச்சுப்படிகள், எல்லாவற்றையும் அப்படி அப்படியே டிராயரில் அள்ளி திணித்து விட்டு உடனே எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது சுகுணனுக்கு.
இதற்கிடையில் அலுவலகத்துக் காண்டீன் பையன் மேஜை மேல் தேநீரைக் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான். மறுபடி தானே அவளுக்குப் போன் செய்து 'இங்கே வராதே! நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்' என்று சொல்லிவிடக் கை துறு துறுத்தது. 'இங்கே வராதே' - என்று மட்டும் கூறினால், அப்படி மறுத்துக் கூறுவதையே ஒரு தீவிரக் கோபமாக எடுத்துக் கொண்டு அவள் கட்டாயம் வந்து விடுவாள் என்றெண்ணி அதற்கு ஒரு மாற்றாகத் தான் 'நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்' - என்று அவன் கூற விரும்பினானே தவிர உண்மையில் இன்னொருவனுடைமை ஆகிவிட்ட அவளைச் சந்திக்கவோ பேசவோ அவன் நிச்சயமாக விரும்பவில்லை. அதற்காக அவளே தேடி வரும் போது - அவளுடைய தந்தையின் சொந்தக் காரியாலயத்திலேயே 'உள்ளே நுழையாதே' என்றோ 'தயவு செய்து வெளியே போ' - என்றோ அவளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டு துரத்தவும் வெறுக்கவும் கூட அவனால் முடியாது. அவள் வருகிற போது காரியாலய அறையில் தான் மட்டும் தனியே இருப்பதை விட வேறு யாராவது தன்னுடன் கூட இருப்பது நிலைமையைச் சமாளிப்பதற்கும் வசதியாயிருக்கும் என்று தோன்றியது அவனுக்கு. சில தினங்களுக்கு முன்வரை தன் அன்புக்கும், அதிகாரத்திற்கும், எழுத்தாற்றலுக்கும் அடிமை போல் மயங்கி வசியமாயிருந்த ஓர் அழகியை இன்று இந்த விநாடியில் தன்னிலிருந்து அந்நியமாகவும் வேற்றுமையாகவும் பிரித்து நினைப்பதற்கு என்ன காரணமென்று நிதானமாகச் சிந்திக்கக் கூட இப்போது அவன் நெஞ்சில் அவகாசமில்லை. அடுத்த வார அட்டைப் படத்துக்கு எதை வரையலாம் என்று கலந்து பேசுவதற்காக சித்திரக்காரர் சிவன் வந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் அங்கு வந்து விட்டால் நல்லதென்று கருதியவனைப் போல் அவரை நிறைய நேரம் உட்கார்த்திப் பேச வைக்க முயன்றான் சுகுணன். அதுவும் முடியவில்லை. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேறு ஏதோ காரியமிருக்கிற தென்று போய்விட்டார் அவர். இராயபுரத்தில் எங்கோ ஒரு வாசக சாலை ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்க வர முடியுமா என்று அந்த வாசக சாலைக் காரியதரிசி ஃபோன் செய்தார். அவரோடு ஃபோன் பேசியும் முடித்தாயிற்று. மற்ற வேலைகளை எல்லாம் நாளைக்கு வந்து பார்த்துக் கொள்ளலாம். புறப்பட்டுப் போய்விட வேண்டியதுதான் என்று அவன் துணிந்து அங்கிருந்து புறப்படத் தயாராகி விட்ட சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. காரியாலய முகப்பிலிருந்த வரவேற்பு அறையிலிருந்து 'துளசீம்மா வந்திருக்காங்க... இதோ உங்க அறைக்கு வராங்க...' என்று டெலிபோன் ஆபரேட்டர் அறிவித்தாள். அவன் டெலிபோன் ரெஸீவரை வைத்து விட்டுத் தலைநிமிர்வதற்குள்ளாகவே அவனுடைய அறையை நடுவாக மறைத்துக் கொண்டிருந்த ஸ்பிர்ங் கதவுகளின் கீழே நலுங்கிட்ட சிவப்பு மறையாத தந்தப் பாதங்கள் இரண்டு தயங்குவது தெரிந்தது. புடவையின் சரிகைக் கரைக்குக் கீழே தந்த வார்ப்புகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களில் அவை இப்போது வேறு யாருக்கோ சொந்தமென்று சிவப்பு மையினால் அடிக் கோடிட்டுக் காட்டினாற் போல் நலுங்கு இட்டிருந்தார்கள். பளிங்கின் வெண்மை நிற மெருகினால் மின்னும் அந்தச் சிறிய பாதங்கள் வெண்ணிறம் முடிந்து நலுங்கு இட்ட செம்பஞ்சுக் குழம்பின் தழல் நிறம் அடியாகக் கோடு பற்றியிருந்த இடத்தில் மெட்டியோடு மனத்தைக் கொள்ளையிடும் ஓர் அழகு புலப்பட்டுத் தெரிந்தது. தன்னிலிருந்து அந்நியமாகி விட்ட அந்த அழகுக்கு மரியாதை செய்வது போல் அவன் பார்வை பிரிந்து விலகி நிமிர்ந்தது. நேரெதிரே ஸ்பிரிங் கதவின் மேல் வளைந்து நெளிந்து முடிச்சுப் போன்ற மோதிரம் அணிந்த மெல்லிய அழகிய நீண்ட பொன்நிற விரல்கள் பற்றி அதைத் திறந்தன. "உள்ளே வரலாமா?"... அவள் கேட்ட கேள்வியில் உள்ள துயரம் முட்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது. பதில் சொல்வதற்கும் விருப்பமில்லாமல் அலட்சியப்படுத்துவதற்கும் துணிவில்லாமல் சில விநாடிகள் மௌனம் சாதித்தான் சுகுணன். திருமணம் முடிந்த சுவடு நீங்காமல் - மணக்கோலத்தின் அழகும் பொலிவும் அவற்றை விடப் பெரிதாக முகத்திலும் கண்களிலும் வந்து தெரியும் சோகமுமாக - அவள் துவண்டு நிற்பதை கண்டு கோபமும் கருணையும், ஒளியும் நிழலும் போல மாறி மாறித் தோன்றும் மனநிலையில் இப்படி ஓர் அசந்தர்ப்பத்தை தங்களுக்குள் ஏற்படுத்திய விதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுகுணனுக்கு. இதற்கு முன்னால் பல முறை துளசி கலீர் கலீரெனச் சிரித்துக் கொண்டே புள்ளி மானாகத் துள்ளிக் குதித்து ஓடி வந்து உரிமையோடும், சுதந்திரத்தோடும் தன் அறைக்குள் நுழைந்திருப்பதையும், இன்று அவளே தன் எல்லையைத் தானே பிரித்து நிறுத்திக் கொண்டவளைப் போல் தயங்கி நிற்பதையும் அந்த ஒரு விநாடியில் இணைத்து நினைத்தான் சுகுணன். மறுபடி துயரம் கனத்துப் போய் அழுகை கன்றியிருந்த அவள் குரல் அவன் செவிகளில் ஒலித்தது. "உள்ளே வரலாமா?" "ஆகா! தாராளமாக வரலாம். உங்களுடைய அலுவலகம் இது. நீங்கள் இங்கே வரக்கூடாதென்று சொல்ல நான் யார்?"... மிகவும் சுபாவமாகச் சொல்வது போல் சொல்லப்பட்ட தன்னுடைய இந்த வார்த்தைகள் எத்தனை கடுமையாக, எத்தனை ஆழமாக அவளைப் போய்த் தாக்கும் என்பது தெரிந்து தான் அவன் இப்படிப் பேசியிருந்தான். அவள் மெல்ல நகர்ந்து - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பதில் சொல்வதற்குத் தைரியமில்லாதவள் போல் உள்ளே நுழைந்து ஒதுங்கி நின்றாள். அவளோடு அவள் உள்ளே நுழையும் போதே மங்கலமும் நிறைந்ததொரு நறுமணமும் உடனிகழ்ச்சியாக உள்ளே நுழைந்து நிறைந்தது. மனத்தை மிக மோகனமான நினைவுகளில் சாரச் செய்து சுழற்றிச் சுழற்றி மயக்கும் நறுமணம் அது. அந்த நறுமணமும், உள்ளே நுழைவதற்காக அவள் நாலைந்து முறை அடிபெயர்த்து வைத்த போது 'கிணிங்', 'கிணிங்', என்று தாளமிட்ட அவள் கால் மெட்டிகளின் ஓசையும் இன்னும் அவன் நாசியிலும் செவிகளிலும் நிறைந்து விட்ட ஞாபகமாக நின்றன. இருவருக்குமிடையே நிலவிய அந்த மௌனத்தை அவனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன் இப்படி" - என்று மிகவும் சுபாவமாகப் பேசுவது போல் சுபாவமில்லாத புதிய மரியாதைகளை அவளுக்கு வழங்கி அதன் மூலமாகவே ஓர் அந்நிய பாவத்தை அவள் அறியும்படி செய்தான் சுகுணன். பதில் ஒன்றும் சொல்லாமல் அவனெதிரே வந்து போகிற பார்வையாளர்கள் உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்காரவும் செய்யாமல் மேலே போக வழியில்லாத இடத்தில் புகுந்துவிட்ட பூந்தென்றல் போல் அலைந்து அசைந்து ஒதுங்கி நின்றாள் அவள். ஒரு காலத்தில் இந்த முகத்தைத் தூண்டுதலாகக் கொண்டு இந்தக் கருமை துறுதுறுக்கும் வண்டுக் கண்களில் பார்வை கலந்து - இவற்றை இரசித்த மோகத்தோடு தான் பாடிய
கோல முகமதியிற் சிறுநாணக் குங்குமப் பூச் சிவந்து நீல விழிமலரிற் சில கோடி நெஞ்சி னுரை யுவந்து கால மளந்திடும் சிறுபோதிற் காவிய மனைத்தும் நீயாகி -என்ற வரிகள் இப்போது நினைவு வந்தன அவனுக்கு. வரந்தர வேண்டிய நேரத்தில் ஏமாற்றி விட்ட தேவதையை உபாசித்துவிட்ட அப்பாவிப் பக்தனாகத் தான் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. எதிரே வந்து நிற்கும் அவள் மேல் ஆத்திரமேற்படவோ, இறையவோ அவனுக்கு வாய் வரவில்லை. காரணம் அவள் வந்து நிற்கிற அலுவலகம் அவளுடைய தந்தையினுடையதென்பதோ அவள் இன்னொருவருடைய மனைவியாகி விட்டாள் என்பதோ மட்டும் அன்று. உணர்ச்சியையும் மீறி அந்த விநாடி அவனுள் சுரந்த கருணை தான் காரணம். 'இலக்கியத்தில் மிக உயர்ந்த குணம் கருணை தான். நதிகளைப் போல் பெருகும் கோபம், தாபம், வீரம், தீரம், ஆசை, பாசம் எல்லாம் போய்ச் சங்கமமாகிற பரந்த இலக்கியக் குணம் கருணையாகிய கடல்தான் என்பதை உலக மகா கவிகள் எல்லோரும் நிரூபித்திருக்கிறார்கள்' - என்று பல இலக்கியக் கூட்டங்களில் தானே பேசியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. மேலே அலைபாய்ந்து பொங்கினாலும் அடியூற்றைப் போல் சுரக்குமிடம் தெரியாமல் பெருகும் இந்தக் கருணையைத் தன்னால் தவிர்க்க முடியவில்லை என்பதை அப்போது அவனே உணர்ந்தான். நலுங்குச் சாயம் புலராத அந்த மோதிரக் கையிலிருந்து கண்ணீரால் கசங்கிய ஒரு 'கிரீட்டிங் கவர்' வந்து அவன் மேஜை மேல் உதிர்ந்தது. "இதை விட அதிகமாக என்னைச் சித்திரவதை செய்வதற்கு வேறு வார்த்தைகள் ஏதும் உங்களுக்குக் கிடைக்கவில்லை போலிருக்கிறது...?" "வெறும் வார்த்தைகளில் என்ன இருக்கிறது? இந்த உலகில் யார் அவற்றைக் காப்பாற்றி மதித்து மரியாதை செய்கிறார்கள்? கேவலம் - மறப்பதற்குச் சுலபமுள்ள பலவீனமான சத்தியங்கள் அவை. வார்த்தைகளை நாம் மதிப்பதைச் செயலினால் மட்டுமே நிரூபிக்க முடிகிற உலகம் இது? செயலினால் நிரூபிக்க முடியாதவர்கள் வெறும் வார்த்தைகளைப் பற்றிப் பேசி என்ன ஆகப் போகிறது...?" "அபலைகள் மிகப் பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை. வார்த்தைகளைக் காப்பது எப்படி? எல்லாம் தெரிந்த நீங்களே என் வேதனைப் புரியாமல் இப்படி வார்த்தைகளால் என்னை வதைக்கலாமா?" "உங்களை வதைப்பதற்குக் கடைசியாக என்னிடம் மீதமிருக்கிற ஒரே ஒரு கௌரவமான ஆயுதம் வார்த்தை தான்." "'துளசி' என்று வாய் நிறையக் கூப்பிட மாட்டீர்களா? ஏன் இந்த 'உங்களை', 'நீங்கள்' எல்லாம் போடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இப்படி?" "உன் மனத்தைக் கேள்! என்ன பாவம் செய்தாய் என்பதை அது சொல்லும் உனக்கு." - சுகுணன் எவ்வளவோ கடுமையாக இருக்க முயன்றும் அவன் மனத்தினுள் அடியூற்றாகச் சுரந்த கருணை அவனை வென்று விட்டது இம்முறை. 'உங்கள் மனத்தைக் கேளுங்கள்' - என்று தான் கடுமையாகச் சொல்ல நினைத்தான் அவன். ஆனால், 'உன் மனத்தைக் கேள்' - என்று தான் சொல்ல வந்தது. அந்த ஒரு வினாடி வெற்றி அவள் மனத்தில் பூச்சொரிந்திருக்க வேண்டும். அதற்கு அடையாளமாக அத்தனை வேதனையிலும் அவள் முகம் ஒரு விநாடி மலர்ந்தது. மேலே அவளிடம் ஒன்றும் பேச விரும்பாதவளைப் போல் மேஜை மேல் அவள் வைத்திருந்த அந்த கிரீட்டிங் கவரை எடுத்துப் பிரித்து, "வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய -" என்ற தன்னுடைய அந்த வாசகத்தை யாரோ ஓர் அந்நியன் புதிதாகப் படித்துப் பார்ப்பது போல் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அதை அப்படியே ஏழெட்டுத் துண்டுகளாக உறையுடன் கிழித்துத் தனக்குக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான் சுகுணன். அதற்காகவே காத்திருப்பவள் போல் அவள் சீறத் தொடங்கினாள்:- "எழுதிய வார்த்தைகளைக் கிழித்தெறிந்து விடுவது சுலபம். ஆனால் இப்போது நீங்கள் கிழிப்பதற்கு முன்பே அது உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருத்தியின் மென்மையான மனத்தைக் குத்திக் கிழித்திருக்கிறதென்பதை நீங்கள் உணரப் போவதில்லை." "ஓர் இலக்கிய ஆசிரியன் என்ற முறையில் நான் நினைப்பதையும், படைப்பதையும் வெளியிடத் துணை நிற்கும் என் மொழியைத் தவிர எனக்கு வேண்டியவர்கள் யாருமில்லை. நான் இந்த வாக்கியங்களை எழுதும் போது என் மனம் எவ்வளவு புண்பட்டு எழுதினேன் என்பது தான் எனக்கு இப்போது நினைவிருக்கிறதே ஒழிய, இது யாரைப் போய்ச் சேருமோ அவர்கள் உணர்வுகளின் விளைவுகளைப் பற்றி நினைக்கவோ, அநுமானிக்கவோ எனக்கு அவகாசமில்லை! அவசியமும் கூட இல்லை..." "அவ்வளவு வித்தியாசமாக உங்களால் இருக்க முடியுமானால் நீங்கள் ஆபட்ஸ்பரிக்கே வந்திருக்கலாமே?" "எதற்கு? உன் மணக்கோலத்தைப் பார்க்கத்தானே? அது எனக்கு அத்தனை அவசியமான காரியமில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள் எந்தக் கோலத்தைப் புனைந்து கொண்டாலும் அதனால் அழகாயிருக்க முடியாதென்று எனக்குத் தெரியும்... துளசி!" "... இது அபாண்டம்! எந்த நம்பிக்கைக்கும் நான் துரோகம் செய்யவில்லை. ஏதோ ஓர் அசந்தர்ப்பத்தினால் என்னுடைய நம்பிக்கையே எனக்குத் துரோகம் செய்து விட்டது. இப்போது இவ்வளவு பேருக்கு நடுவில் இந்த இடத்தில் என்னைப் பொறுக்க முடியாமல் கதறி அழவைக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆசையாயிருக்கிறது போலத் தோன்றுகிறது. அதனால்தான் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்..." "தவறு, எனக்கு எந்த ஆசையும் கிடையாது. உன்னை மகிழ்விக்கவோ, உனக்கு ஆறுதலுரைக்கவோ எப்படி எனக்கு ஆசை கிடையாதோ, அப்படியே உன்னை அழவைக்கவும் எனக்கு ஆசை கிடையாது. அப்படி ஆசைப் பட எனக்கு உரிமையும் கிடையாது. நமக்குள் இப்படியெல்லாம் பேசிக் கொள்ள இடமிருக்க வேண்டாம் என்பதற்காகத் தான் நீ ஃபோன் செய்த போதே உன்னை இங்கே வரக்கூடாதென்று கண்டிப்பாகச் சொன்னேன்..." "என்னுடைய கடிதத்தைப் பார்த்த பின்பும் உங்களுக்கு மனம் இளகவில்லை?" "உன் கடிதம் என் அறையில் போடப்பட்ட தினத்தில் நான் வெளியூருக்குப் போய்விட்ட காரணத்தினால் அன்று அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. இன்று காலையில் திரும்பி வந்த பின்புதான் நான் அதைப் பார்த்தேன். நீ பல கதைகளும், நாவல்களும் படித்திருக்கிறாய்? அந்த இலக்கிய அப்பியாசம் உனக்கு மனம் உருகும்படியாக ஒரு நல்ல கடிதத்தை எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறது." "தயை செய்து இப்படிக் குத்தலாகப் பேசாதீர்கள்! நான் விரும்பிப் படித்த நாவல்களும் கதைகளும் உங்களுடையவை தான்." "அதற்காக நான் ஏதாவது நன்றி செலுத்த வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாயா துளசி?" "இவ்வளவு கடுமையாகக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? - 'கோ'வென்று கதறி அழுதுவிடலாம். அதைக்கூட இங்கே செய்துவிட முடியாது. இது 'உங்கள்' காரியாலயம். இரசாபாசமாகிவிடும். என்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் உங்களையும் உங்கள் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை..." "காதலின் கௌரவத்தையே காப்பாற்றத் தவறியவர்களால் கடமையின் கௌரவத்தை அத்தனை சுலபமாக காப்பாற்றி விட முடியுமா என்ன?" ஸ்பிரிங் கதவு கிரீச்சிட்டது. யாரோ உள்ளே வருவதாகத் தோன்றவே குரலைத் தணித்துப் பேச்சை நிறுத்தினான் சுகுணன். துளசியும் கண்களைத் துடைத்துக் கொண்டு பதற்றத்தோடு திரும்பினாள். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். அவர் கையில் மெஷினில் ஏற்றுவதற்குத் தயாராக 'மேக்கப்' செய்யப்பட்ட ஃபாரத்தின் அச்சுத் தாள்கள் இருந்தன. திடீரென்று துளசியை அங்கே கண்ட ஆச்சரியம் அடங்க இரண்டு விநாடிகளுக்கு மேல் ஆயிற்று நாயுடுவுக்கு. "வாம்மா குழந்தை! ஏன் கலியாணத்துக்கு வரல்லேன்னு சாரைக் கேட்டியாம்மா? அதை விட இவருக்கு வேறே அப்பிடி இன்னா தலை போற காரியமிங்கறேன்?" "நீங்கதான் கேட்கணும் நாயுடு..." என்று துளசி செயற்கையாகச் சிரிக்க முயன்றாள். சுகுணன் இவர்கள் இருவரையுமே பொருட்படுத்தாதது போல் நாயுடு கொண்டு வந்திருந்த அச்சுத்தாள்களில் மூழ்கத் தொடங்கினான். "அடடே! இதென்னமா நின்னுகிட்டே இருக்கிறே - உட்காரு சொல்றேன்..." - துளசி அதுவரை நின்றதை வியந்தபடி ஒரு நாற்காலியை அவளருகே ஒதுக்கினார் நாயுடு. "பரவாயில்லை நாயுடு! நான் உட்காரப் போவதில்லை. உங்க சார் நான் இங்கே உட்காருகிற மாதிரி இடங்கொடுத்துப் பேசவில்லை..." "இவர் கிடக்கிறாரு. காலைலேருந்து ஒரு மாதிரி தான் இருக்காரு..." இப்போதும் சுகுணன் தலைநிமிரவே இல்லை. "உன் கலியாண போட்டோ வந்திருக்குது குழந்தை! சார் கிட்டக் கொடுத்து 'சைஸ்' கூடப் போட்டு வாங்கியாச்சு. இந்த வாரமே பூம்பொழில்லே போடப் போறோம். அதைக் கொண்டாரட்டுமா? பார்க்கிறியா?" துளசி ஒரு விநாடி தயங்கினாள். அவள் முகத்தில் மலர்ச்சி மறைந்தது. பின்பு நிதானமாக நாயுடுவிடம் கூறினாள்: - "ம்... கொண்டாங்க..." நாயுடு ஓடினார். - ஐந்தே நிமிடங்களில் நாயுடு படத்தோடு வந்தார். துளசி அதைக் கையில் வாங்கி வைத்துக் கொண்டாள். "நான் அப்பாவிடம் சொல்லி வேறே படம் வாங்கித் தரேன் நாயுடு! இது அவ்வளவு நல்லாவாயிருக்கு?" - என்று அவள் வார்த்தைகளை இழுத்த போது, "அதுக்கென்னமா உன் இஷ்டப்படி செய்யி" என்றார் அவர். பத்துப் பதினைந்து நிமிடங்களில் அவர் சுகுணனுடைய அறைக்கு வந்த காரியம் முடிந்து விட்டது. அச்சுத் தாள்களோடு அவர் திரும்பி விட்டார். திரும்பிப் போனவர் மீண்டும் உடனே திரும்பி வந்து கதவைத் திறந்து, "படம் நல்லதா உனக்குப் பிடிச்சதாப் பார்த்துச் சீக்கிரம் அனுப்பிடு குழந்தை! இந்த வாரமே வந்தாகணும்?" என்று மறுபடியும் துளசியிடம் ஞாபகப்படுத்தி விட்டுப் போனார். அவர் போன மறுகணமே சுகுணன் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கண்களுக்கு முன்பாகவே அந்தப் புகைப்படத்தை வெறுப்போடும் ஆத்திரத்தோடும் சுக்கல் சுக்கலாகக் கிழித்து அவன் காலடியிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள் துளசி. "இது தவறு துளசி! இங்கு வருகின்ற எதையும் பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ கிழித்தெறியவோ ஆசிரியருக்குத் தான் உரிமை உண்டு..." "நிராகரிப்பதற்குக் கூட ஓர் உரிமை வேண்டும் போலிருக்கிறது." "....." சுகுணனால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. "இப்போது உங்களுக்குத் திருப்திதானே?" "என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்ட உணர்வுகளாக இனிமேலும் நான் விடவேண்டிய அவசியமில்லை துளசி! நீ செய்வதெல்லாம் உனக்கே நன்றாயிருக்கிறதா? பழையபடி குழந்தைத் தனமாகத் தனியே புறப்பட்டு நீ இப்படி இங்கே என்னைப் பார்க்க வரலாமா? வந்தது தான் வந்தாய்! எவ்வளவு நேரம் இப்படி இங்கே தனியாக விவாதித்துக் கொண்டு நிற்பது? இதோ பார்! இது நான் காலையில் உன் வீட்டுக்கு வந்து உன் தந்தையைக் கண்டு கலியாணம் விசாரித்த பின் வாங்கிக் கொண்டு வந்த தாம்பூலப்பை. அங்கு வந்திருந்த போது காலையில் நான் ஏன் உன்னைப் பார்க்கவில்லை? இனிமேல் நாம் பழகுவதற்கு எல்லைகள் உண்டு. அது எனக்குப் புரிந்து விட்டது. உனக்கும் புரிய வேண்டும். இனி நீ தொடங்கியிருக்கும் வாழ்வு தான் உனக்கு ஞாபகமிருக்க வேண்டுமே ஒழிய இப்படி அடிக்கடி என் முன் வந்து நான் இழந்த வாழ்வை எனக்கு ஞாபகப்படுத்துவது உனக்கே நியாயமாகப் படுகிறதா துளசி?" - இதைச் சொல்லும் போது சுகுணனுக்குக் குரல் உடைந்து தொண்டை கரகரத்தது. பேச்சை நிறுத்தி ஒரு கணம் நேற்று வரை செல்லக் குழந்தையாகத் துள்ளிக் குதித்து விட்டு இன்று வெளியே வாய் விட்டுக் குறை சொல்லவோ தூற்றவோ முடியாத ஓர் உணர்ச்சி நஷ்டத்தினால் திகைத்துப் போய் நிற்கும் அந்தக் காதல் அநாதையைப் பரிவோடு பார்த்தான் சுகுணன். அந்த ஒரு கணத்தில் அவள் அநாதையாவதற்குக் காரணமாக அவளிலிருந்து பிரிக்கப்பட்ட மற்றோர் அநாதை தான் என்பது அவனுக்கு நினைவில்லை. இந்த விதமான கதாபாத்திரங்களிடம் இயற்கையாகவே மேலெழும் எல்லையற்ற பெரும் பரிவுடனே ஒரு கதாசிரியன் என்ற முறையில் அவளைப் பார்த்தபோது அவன் மனம் நெகிழ்ந்து இளகியிருந்தது. அத்தனை தவிப்பிலும் சோகத்திலும் கூட மணக் கோலத்தின் பொலிவு நீங்காததொரு சாயல் அவளிடம் இருந்தது. இன்னும் அவள் உட்காரவில்லை. ஒதுங்கினாற் போல நின்று கொண்டுதான் இருந்தாள். சுகுணனுக்கு மனத்தினுள் ஒரு தயக்கம் உண்டாயிற்று. 'துளசி வந்ததிலிருந்து இங்கேயே நின்று என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். ஏதோ திருமணமான பின்பு அலுவலகத்தில் எல்லாரையும் பார்த்துப் பேசிவிட்டுப் போக வந்தது போல் தமிழ் நாளிதழ் காலை மலர் ஆசிரியரிடம் பத்து நிமிடம், மாதம் இதழ் மல்லிகை ஆசிரியரிடம் பத்து நிமிடம், ஆங்கில தினசரி 'மெட்ரோ பாலிடன் டைம்ஸ்' ஆசிரியரிடம் பத்து நிமிடம் என்று எல்லோரிடமும் பேசிவிட்டு இந்த வரவைப் பொதுவாகவும் சாதாரணமாகவும் செய்துவிட்டுப் போகலாம் இவள். இங்கேயே நின்று என்னிடம் மட்டுமே கண்களைக் கசக்கிக் கொண்டு உருகினால் நாளைக்கு இவர்கள் கூடிக்கூடி வம்பு பேச இதுவும் ஒரு நிகழ்ச்சியாகி விடுமென்பது ஏன் தான் இவளுக்குப் புரியவில்லையோ?" என்றெண்ணி வருந்தினான் சுகுணன். 'பெண் இயற்கையாகவே பேதை. மனம் பலவீனமாயிருக்கிற வேளைகளில் அவள் இன்னும் அதிகத் தடுமாற்றமுள்ள பெரும் பேதையாகி விடுகிறாள்' என்பதைத் தவிர அப்போது வேறெந்த முடிவுக்கும் அவளைப் பற்றி அவனால் வர முடியவில்லை. ஏற்கெனவே அவன் துளசியின் திருமணத்தன்று வெளியூர் போய் விட்டதை வைத்துக் கொண்டு அதற்குத் தனியாக ஏதோ ஓர் அர்த்தம் கற்பிக்க முயலுகிறவர்களைப் போல் 'நோடபிள் ஆப்ஸென்ஸ்' - என்று அவனிடமே அளக்கிறவர்களால் அவன் ஊர் திரும்பிய முதல் நாள் காலையிலேயே துளசி அலுவலகத்துக்கு அவனைத் தேடி வந்து கண் கலங்கி நின்றாள் என்பதை வலுவான செய்தி ஆதாரமாக வைத்துக் கொண்டு என்னென்ன வெல்லாமோ பேசமுடியுமே! இதை நினைத்து அவன் தயங்கினான் என்றாலும் ஏதோ வேண்டாத பொருளைப் பிடித்து வெளியே தள்ளுவதைப் போல் துளசியை வலுவில் வெளியே அனுப்பவும் கடிந்து பேசவும் கூட அவனுக்குத் துணிவில்லை. இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்கும் இதே வேளையில் துளசியின் மனத்தினுள்ளும் இதே விதமான நினைவுகள் நிலவியிருந்தன போலும். அது அவள் பேசிய வார்த்தைகளிலிருந்து தெரிந்தது. தன்னுடைய அந்த வேண்டுகோளை மிக மிக விநயமாக அவனிடம் வெளியிட்டாள் அவள். "தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எனக்கு அனுமதி தாருங்கள். நான் இன்று இங்கே வந்தது எல்லாருக்கும் தெரியும். காலை மலர் சர்மாவையும், டைம்ஸ் நாயரையும், ரங்கபாஷ்யம் சாரையும் இரண்டிரண்டு நிமிஷம் பார்த்ததாகப் பேர் பண்ணி விட்டு வந்து விடுகிறேன். வீண் வம்புக்கு இடம் வைப்பானேன்?" என்று துளசி கூறிய போது அவளும் தானும் நினைவில் கூட ஒன்றாயிருப்பதை எண்ணி உள்ளூற மகிழ்ந்தான் அவன். 'நட்பிலும், காதலிலும் இரண்டு பேர் ஒன்றாக நினைக்கிறோம்' - என்ற உணர்வே பெருமிதம் தருகிறதென்று தோன்றியது அவனுக்கு. ஆயினும் அவளுக்கு அவன் கூறிய பதில் தன் கோபத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தது. "நான் யார் உனக்கு அனுமதி கொடுப்பதற்கு? இரண்டு நிமிஷம் தான் பேசிவிட்டு வரவேண்டுமென்று கண்டிப்பு ஒன்றுமில்லையே. நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். யாரோடு வேண்டுமானாலும் பேசலாம்." "நான் யாரென்று சுலபமாகக் கேட்டுவிட முடியும் உங்களால். நான் பெண். அத்தனை சுலபமாக எல்லாவற்றையும் மறந்து நான் என்னைப் பிரித்துக் கொண்டு விட முடியாது. ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதாக எண்ணும் உணர்ச்சியை இன்னும் விட்டுவிட முடியாத காரணத்தால்தான் உங்களிடம் அனுமதி கேட்கிறேன். எனக்கு அவர்களையெல்லாம் பார்த்து ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இங்கே இன்று நான் வந்தது உங்களைப் பார்க்க மட்டும்தான். இதை என் இதயம் அறியும். நீங்களும் அறிவீர்கள். ஆனால் மற்றவர்கள் இதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள் என்பதால் என்னுடைய இந்த வரவை ஒரு பொதுக் காரியமாக்குவது போல் கடனே என்று அவர்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்து விட்டு மறுபடியும் இங்கு உங்களிடம் வருவேன்." "என்னிடம் எதற்கு? இன்னும் இங்கு என்ன மீதமிருக்கிறது?" - சுகுணனின் இந்தக் கேள்வி துளசியைக் கண் கலங்க வைத்தது. 'திடீரென்று என்மேல் உங்களுக்கு இத்தனை உதாசீனம் பிறப்பானேன்? கொஞ்சம் ஆதரவைப் பிச்சையிட மாட்டீர்களா?' - என்று கேட்பவள் போல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள். "நீங்கள் கண்டிப்பாக இங்கு இருக்க வேண்டும். கால் மணி நேரத்தில் மறுபடியும் நான் உங்கள் அறைக்கு வருவேன். உங்களிடம் எனக்கு இன்னும் கொஞ்சம் பேச வேண்டும்." "பேசி என்ன ஆகப்போகிறது துளசி? இப்படி குழந்தை போல் கண்கலங்காமல் இருக்க உனக்குத்தான் இனிமேல் நிறைய மனோ திடம் வேண்டும்." "உங்களைப் போல் திடீரென்று பழகியவர்களை வெறுக்கவும் உதாசீனம் செய்யவும் துணிகிற அளவு அத்தனை மனோதிடம் எனக்கு இல்லைதான்..." "ஏன் இல்லை? படிப்படியாக எல்லாம் வரும்! உண்மையில் பார்க்கப் போனால் இந்த ஏமாற்றமோ, சோகமோ என் முன் பிழியப் பிழிய அழுவதை விட வேறு எந்த விதத்தில் உன்னைப் பாதித்திருக்கிறது துளசீ? பார்க்கப் போனால் கோடைக்கானலுக்கு 'ஹனிமூன்' போக ஏற்பாடு செய்வதைக் கூடப் பாதிக்காத சோகம் இது." இப்படி சொல்லிக் குத்திக் காட்டியவுடன் தான் செய்தது தவறு என்பது போல் உதட்டைக் கடித்துக் கொண்டான் சுகுணன். அவள் முகம் அதைக் கேட்டு வாடியது. அந்த முகம் வாடிய விதத்தைப் பார்த்ததும், தான் ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டதைச் சுகுணன் உணர்ந்தான். அவளோ மிக நிதானமாக அந்த வருத்தத்தை அங்கீகரித்துக் கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல் சுகுணனுடைய மேஜையில் இருந்த டெலிபோனை எடுத்தாள். அந்த மேஜையிலிருந்த இரண்டு டெலிபோன்களில் ஒன்று காரியாலய 'எக்ஸ்சேஞ்சு'டன் இணைந்தது. மற்றொன்று நேரே அங்கிருந்தே 'டயல்' செய்ய முடிந்த தனி டெலிபோன். அந்தத் தனி டெலிபோனைக் கையிலெடுத்துத் தன் வீட்டு எண்ணுக்கு டயல் செய்தாள் துளசி. இப்படிச் செய்யும் போது செயற்கையாக வரவழைத்துக் கொள்ளப்பட்ட ஒருவகை மலர்ச்சியும் சிரிப்பும் அவள் முகத்தில் தென்பட்டன. சுகுணன் அவளுடைய உரையாடலைக் கவனித்துக் கேட்பதிலிருந்து அந்த நிலையில் அந்த இடத்தில் தன்னை விலக்கிக் கொள்ள முடியவில்லை. "அம்மாவா? நான் தான் துளசி பேசுகிறேன். அப்பா இருந்தால் கொஞ்சம் கூப்பிடேன்..." "....." அப்பா வந்து போனை எடுத்திருக்க வேண்டுமென்று அநுமானித்தான் சுகுணன். "நான் தான் துளசி. இங்கே நம்ம பூம்பொழில் ஆபீசிலிருந்து பேசறேன் அப்பா. காலையிலே கோடைக்கானலுக்கு டிக்கட் வாங்கச் சொல்லியிருந்தீர்களே; அதை உடனே கான்ஸல் பண்ணிடனும்..." "....." "இல்லே! கண்டிப்பா முடியாது. 'அவரி'டமும் நீங்களே எப்படியாவது எடுத்துச் சொல்லிவிட வேண்டும். திடீரென்று உங்களையெல்லாம் விட்டுவிட்டுத் தனியாகப் போகப் பிடிக்கலை. எனக்கு என்னவோ போலிருக்கு! மாப்பிள்ளையிடமும் பக்குவமாக அவர் கோபித்துக் கொள்ளாமல் நீங்க தான் இதைச் சொல்லணும்." "....." "ப்ளீஸ். தயவு செய்து நான் சொல்றபடியே கேளுங்க அப்பா..." இந்தக் கடைசி வார்த்தையைப் பேசுகிறவரை அவள் முகத்தில் இருந்த சிரிப்பும் மலர்ச்சியும் மறைந்து மறுபடி அவள் முகம் இருண்டது. துளசி ஃபோனை வைத்துவிட்டு அவன் பக்கமாகத் திரும்பி "இப்போது உங்களுக்குத் திருப்தி தானே?" என்று கேட்டாள். "என்னுடைய திருப்தியைப் பற்றி என்ன? என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்டவைகளாக இனிமேலும் நான் விட்டுவிட முடியாது என்றுதான் முன்பே சொன்னேனே?" "சொல்லுங்கள்! நன்றாகச் சொல்லுங்கள். அதனால் எனக்கென்ன? உங்களுடைய திருப்தி அதிருப்திகளை நான் இன்னும் மதிக்கிறேன். அவற்றுக்காகப் பயப்படுகிறேன். அவற்றால் என் மனம் பாதிக்கப்படுகிறது. உருகிச் சாகிறவள் நான் தானே? உங்களுக்கென்ன வந்தது? அடுத்தவர்கள் மனவேதனையைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் உதாசீனம் செய்வதும், வெறுப்பதும் தான் மிக உயர்ந்த இலக்கிய குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ என்னவோ?..." என்று வார்த்தைகளால் அவனைச் சாடிவிட்டு... இரண்டு கணம் மௌனமாக நின்று - பின்பு மீண்டும், "இதோ வந்து விடுகிறேன்"... என்று கூறி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு, 'காலை மலர்' சர்மாவைக் காணச் சென்றாள் துளசி. தான் மறுமொழி கூற முடியாதபடி அவள் சாடிய வார்த்தைகள் இன்னும் சுகுணனின் செவிகளில் நெஞ்சில் ஆழ்ந்து உறைப்பனவாய் ஒலித்தபடி இருந்தன. |