5
ஒருவர்க்கு மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் என்றும் அவியாமல் உள்ளேயே கனிகிறது. "இந்த நூற்றாண்டின் இந்தத் தலைமுறையில் காரண காரியங்களைச் சிந்திக்காமலே விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற கெட்ட வழக்கம் தமிழ் மக்களை எப்படியோ எப்போதோ நோய் போலப் பற்றிக் கொண்டுவிட்டது. அவசரமாக வெறி கொண்டது போல் மேல் விழுந்து வலிய விரும்புகிறார்கள். அதே அவசரத்தோடு வெறிகொண்டது போல் மேல் விழுந்து வலிய வெறுக்கிறார்கள். விருப்பு வெறுப்புக்களுக்கு அடிப்படை நியாயம் ஒன்றும் கிடையாது. வெள்ளப் பெருக்கில் தத்தளிப்பவர்கள் கைக்குக் கிடைப்பதை அவசரமாகப் பற்றிக் கொள்வது போல் நிர்ப்பந்தம் காரணமாக ஏதேனும் ஒன்றைக் கொள்கையாகப் பற்றிக் கொள்கிறார்களே தவிர நியாயமாகச் சிந்தித்துச் செயல் படுகிற கொள்கை நிதானத்தைக் காணோம்" - என்று மனக் கொதிப்புத் தணியாமல் மேலும் ஆவேசமாக வளர்ந்தது அவன் பேச்சு. அவனுடைய பேச்சிலிருந்து அழுத்தமும் ஆவேசமும் துணிவின் உறுதி தொனிக்கும் குரலும் கூட்டத்தின் சலசலப்பை அடங்கச் செய்தன. யாரோ ஒருவர் நடுவில் துண்டுச் சீட்டில் கேள்வி எழுதிக் கொடுத்தனுப்பினார். கேள்வி அந்தச் சந்தர்ப்பத்திற்கோ - அப்போது அவன் பேசிக் கொண்டிருந்த பேச்சிற்கோ பொருத்தமில்லாமலிருந்ததுடன் தனிப்பட்ட முறையில் அவனை வம்புக்கு இழுப்பதாகவும் அமைந்திருந்தது. நடிகரையும், அரசியல்வாதியையும் பற்றிச் சொற்பொழிவின் தொடக்கத்தில் அவன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பதாகத் தோன்றியது. அவர் அந்தக் குறிப்பிட்ட நடிகருக்காகவே உயிர் வாழும் விசிறி போலிருக்கிறது. 'பத்திரிகை முதலாளியின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றபடி மனிதர்களைப் புகழவும், வெறுக்கவும் பழகிக் கொண்டுவிட்ட ஒரு நிறுவனத்தில் வயிற்றுப் பிழைப்பை நடத்தும் நீங்கள் இலட்சியம் பேசுவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?' - என்ற கேள்விக்குக் கீழே 'கூட்டத்தில் ஒருவன்' - என்று எழுதிவிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டவர் தன்னைத் தப்பித்துக் கொள்ளவோ, மறைத்துக் கொள்ளவோ முயன்றிருந்தார். "இந்தக் கேள்வியைக் கேட்கும் தைரியசாலி நான் தான் என்று தன் பெயரைக் கூடத் தெரிவித்து விட விரும்பாது ஒரு கேள்வியைக் கேட்டிருப்பதால் இதற்குப் பதில் சொல்லிவிட வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்" - என இப்படித் தொடங்கி அவன் மறுமொழி கூறிய போது கூட்டத்தில் உற்சாகமான கைத்தட்டல் ஒலி எழுந்தது. உள்ளூறச் சுகுணன் சில சமயங்களில் இந்த விதமான பொதுக் கூட்டங்களையும், சொற்பொழிவுகளையும், தவிர்க்க விரும்பினான். பசியையும், சபலங்களையும் போல் மனிதன் நிரந்தரமாக விட முடியாத பலவீனங்களில் ஒன்றான புகழ் தான் இப்போது இந்தப் பொது மேடைகளில் எல்லாம் மலிவாகச் செலவழிக்கப்படுகிறது. தலைவர் பேச்சாளரைப் புகழ்வதும், பேச்சாளர் தலைவரைப் புகழ்வதுமாகப் பெரும்பாலான மேடைகள் ஒரு சம்பிரதாயச் சடங்காக அமைவதைக் கண்டு பலமுறை தனக்குள் மனம் வெதும்பியிருக்கிறான் சுகுணன்.
'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' - என்ற பழமொழியை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். பத்தோடு பதினொன்றாக அந்தப் பசியையும் பறந்து போகச் செய்துவிடுகிற புதுப் பசி ஒன்று இருக்கிறதே? புகழ்ப்பசி! வயிறு பசித்தவர்கள் பணப்பசி பிடித்து அலைகிறார்கள். பணப் பசி தீர்ந்தவர்கள் புகழ்ப்பசி பிடித்து அலைகிறார்கள். வயிற்றுப் பசி தீர்ந்து கையில் வசதிப்பசி பிடித்ததும் புகழ்ப்பசி கோரமாக வாயைத் திறக்கிறது. இந்தியாவின் நகரங்களில் சௌகரியமுள்ள மனிதர்களுக்கு இப்போது புகழ்ப்பசிதான் பிடித்து ஆட்டுகிறதென்று தோன்றியது. சிலரைப் புகழ்வதற்காகவே பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட்டம் கூடிச் செயலாற்ற வேண்டிய அவசியம் இருந்தது. அந்தச் சுதந்திர இலட்சியம் கைகூடிய பிறகோ, மனிதர்கள் தனித்தனியாகவும் அந்தரங்க சுத்தியோடும் இன்று நாட்டுக்குக் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. கூட்டங்கள் அந்தத் தனித் தனிக் கடமையுணர்ச்சியை மறக்கச் செய்து விடுவதாகத் தோன்றியது சுகுணனுக்கு. அன்று அந்தக் கூட்டம் முடிந்ததும் சுகுணனின் மனத்தில் இத்தகைய உணர்வுகளே மேலோங்கியிருந்தன. யாரோ ஒரு நடிகரிடம் நிறைய நன்கொடை வாங்கிக் கொண்டு அவரைப் புகழ வேண்டிய கட்டாயத்துக்காகவே அவர்கள் அந்த வாசக சாலை ஆண்டு விழாவை நடத்தியிருப்பதாக இப்போது உணர்ந்தான் அவன்.
கூட்டம் முடிந்ததும் துளசியும் அவள் கணவனும் மேடையருகே வந்தார்கள். மேடையருகில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததனால் துளசி சிறிது தொலைவில் ஒதுங்கியே நின்று கொள்ள வேண்டியதாயிற்று. அவள் தன் கணவனிடம் ஏதோ சொல்லி மேடைக்கு அனுப்பினாள். துளசியின் கணவன் மேடையேறி வந்து புன்முறுவலோடு தன்னைத்தானே மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சுகுணனைச் சந்தித்தான். சுகுணனும் அந்த இளம் நண்பரைப் புன்முறுவலோடு வரவேற்றான். "உங்களைத் திருவல்லிக்கேணியில் 'டிராப்' செய்துவிட்டுப் போகிறோம். இன்று உங்கள் பேச்சு மிக நன்றாயிருந்தது. இதை எப்படியும் தவறவிடாமல் கேட்டுவிட வேண்டுமென்று என் மனைவி ஆசைப்பட்டாள். அவள் ஆசை நிறைவேறியதுடன் இனிமேல் உங்கள் சொற்பொழிவுகளை ஒன்றுவிடாமல் கேட்க வேண்டுமென்று எனக்கும் இன்று ஒரு புதிய ஆசை உண்டாகியிருக்கிறது" - என்ற பொருளில் ஆங்கிலத்தில் கூறினான் துளசியின் கணவன். 'மனிதனின் மனத்தை அவனறியாமலே திறப்பதற்குப் பிறர் பயன்படுத்துகிற சுலபமான கள்ளச் சாவி இந்த விதமான முகமன் வார்த்தைகள் தான்' - என்றெண்ணியவனாகத் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சுகுணன். முகத்தில் கலக்கமோ, துயரமோ தெரியாமல் பிளாஸ்டிக்கில் வார்த்தெடுத்தது போல் நகரங்களின் கல்லூரி முகப்புக்களிலும், தியேட்டர் வாயிலிலும் திரியும் செல்வக் குடும்பத்து இளைஞர்கள் பலரிடமிருக்கும் நாகரிகப் பேச்சும் சிரிப்பும் துளசியின் கணவனிடமும் இருந்தன. ஆணின் மனமில்லாததோடு பெண்ணின் முகமுள்ள பல இளைஞர்கள் அங்கங்கே நகரங்களில் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தென்படுவார்களே - அவர்களில் ஒருவனைப் போலத்தான் எதிரே நின்ற துளசியின் கணவனும் அப்போது தோன்றினான். தேசக் கவலையோ, வீட்டுக் கவலையோ இல்லாமல் உயர் தர உத்தியோகங்களையும், சொகுசான காதல் வாழ்வையும் கனவு காணக்கூடிய இந்த விதமான இளைஞர்கள் - அதாவது, செலூலாய்ட் பொம்மைகளைப் போல் சாதாரணமான காரணங்களுக்காகவே உடைந்துவிடக் கூடிய ஆண்மையற்ற இளைஞர்கள் பலர் இந்த நூற்றாண்டில் எங்கும் அதிகரித்திருப்பதைச் சுகுணன் பலமுறை பல இடங்களில் கண்டு மனம் நொந்திருக்கிறான். இன்றைய இந்தியாவின் வறுமைகளைப் பற்றியோ, நாளைய இந்தியா எதிர்கொள்ள வேண்டிய துயரங்களைப் பற்றியோ, நினைப்போ, கவனமோ, கவலையோ இல்லாமல் - தன்னையே மையமாக வைத்துத் திரைப்படக் கதையைப் போல் ஒரு சொப்பன வாழ்க்கையைக் கனவு காணும் இம்மாதிரி இளைஞர்கள் பெருகப் பெருக இந்தியா ஆண்மையில் வறுமையடைகிறது என்று தோன்றியது. இத்தகைய இளைஞர்களைப் பற்றி 'மீசை முளைத்த பெண் பிள்ளைகள்' - என்று சுகுணன் முன்பு துளசியிடமே சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேலி செய்திருக்கிறான். 'புலி நகம் பதித்த தங்கச் சங்கிலி அணிந்து கொள்ளுதல்', 'சுருள் சுருளாக முடி வளர்த்தல்', இவை தவிரப் பெரிய தேசிய இலட்சியங்கள் எதுவும் பதியாத விடலை மனத்தோடு கல்லூரிப் படிகளிலிருந்து கீழிறங்கும் இது போன்ற இளைஞர்களிலிருந்து மனவலிமை மிக்கவர்களான இராமகிருஷ்ணரோ, காந்தியோ, மனவலிமையோடு உடல் வலிமையும் மிக்கவர்களான சிவாஜியோ, நேதாஜியோ, மறுபடி இந்தியாவில் தோன்றி வர முடியுமா? - என்று விநோதமாகத் தனக்குத்தானே அடிக்கடி ஒரு கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்வது அவன் வழக்கம். 'இப்படி ஓர் அப்பாவி இளைஞன் தனக்குக் கணவனாக வரவேண்டுமென்று துளசி கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். என் எழுத்துக்களோடும் என்னோடும் எத்தனை அந்தரங்கமாகப் பழக முடியுமோ அத்தனை அந்தரங்கமாகப் பழகி இலக்கிய ருசிகளை உணர்ந்த மனப்பாங்குடனே வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் துளசி. பெண்ணே ஓர் அழகு. அவளிடம் ஞானமோ, கல்வியோ, சங்கீதமோ, நடனமோ, சேர்ந்திருந்தால் அது அவளுக்கு மற்றோர் அழகாகி விடுகிறது. அழகின் பல்வேறு ருசிகளையும் ருசிகளின் பல்வேறு அழகுகளையும் பழகிக் கொண்டு விட்ட துளசியைப் போன்ற இளம் பெண் ஒருத்தி - 'சொகுசாக வாழ்வது' - என்பதைத் தவிர வேறு ருசிகள் எதையும் எதிர்பாராத ஒருவனோடு வாழ்வில் எவ்வளவு தூரம் கை கோத்துக் கொண்டு நடந்து போக முடியும்? துளசியின் நிலை சிந்திப்பதற்கே வேதனை தருவதாக இருந்தது. இப்படி வாழ்வில் எதிர்பார்த்ததை அடையாமல் ஏமாறிய ஓர் அழகிய பேதைப் பெண்ணைக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுத நேர்ந்தால் அந்தக் கதாபாத்திரத்தினிடம் சுகுணனுக்கு எத்தனை பரிவு பெருகுமோ அத்தனை பரிவு இப்போது இப்படிச் சிந்திக்கும் வேளையில் மட்டும் துளசியினிடமும் ஏற்பட்டது. துளசியின் அந்தக் கதையில் பாதிக்கப்பட்ட மற்றொரு கதாபாத்திரம் தானே என்பதை மறந்துவிட்டு நினைத்தாலோ மனம் கருணை மயமாக மாறியது. தான் நிற்கும் எல்லையைத் தனியே தவிர்த்துக் கொண்டு மற்றவற்றை எல்லாம் விலகியிருந்து பார்த்தால் கற்பனையாளனின் மனம் தான் எவ்வளவு பெருந்தன்மையுடைய தாயிருக்கிறது? இந்த எல்லையில் நின்று பார்க்கிற போது மட்டும் அவனுக்குத் துளசியின் மேல் கோபமே வரவில்லை. காவியங்களின் மிக உயர்ந்த குணமான கருணை அவன் உள்ளத்தே பெருகி நிறைந்தது. அன்று அந்தக் கூட்ட முடிவில் அநாவசியமாகத் துளசியின் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை அவன். மறுக்காமல் அவர்கள் இருவருடனுமே காரில் போய்த் திருவல்லிக்கேணியில் இறங்கிக் கொண்டான். காரில் போகும் போது சுகுணன் அதிகம் பேசவில்லை. துளசி ஆர்வமடங்காமல் கேட்ட இரண்டொரு கேள்விக்கு மட்டும் சுருக்கமாகப் பதில் சொன்னான். துளசியின் கணவன் காரை ஓட்டிக் கொண்டு வந்ததனால் பின்புறக் கதவுகள் திறக்க முடியாத ஒரு பக்கக் கதவுள்ள அந்த 'ஓக்ஸ்வாகன்' காரில் சுகுணன் முன்புறம் ஏறிக் கொண்டான். துளசி பின்புறம் தனியே சிறை வைக்கப்பட்டது போல் ஏறிக் கொண்டிருந்ததனால் அவள் முகத்தைக் கூடச் சுகுணனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. திருவல்லிக்கேணி பெரிய தெருவில் - அறைக்கு நாலு விட்டு முன்பாகவே இருந்த மெஸ் வாசலிலேயே அவன் இறங்கிக் கொண்ட போது துளசி காரிலிருந்து கீழே இறங்கி அவனுக்கு விடை கொடுக்க வேண்டுமென்று ஒரு வேளை எண்ணியிருக்கலாம். ஆனால் ஒற்றைக் கதவுப் பிரச்னையால் அதுவும் முடியாமல் போயிற்று. மெஸ்ஸில் சாப்பாடு முடிகிற நேரம். அதற்கு முன்னறிவிப்பு சாம்பார் ரசம் போலவும் (தண்ணீர் பெருகி), ரசம் சாம்பார் போலவும் (அடிவண்டல் வரை வற்றி) ஆவது தான். ஏறக்குறைய அப்படி ஆகிற நேரம் வந்திருந்தது. காய்கறிகள் நிறையக் கடுகு மயமாகவும், பருப்பு மயமாகவும் வெளிவந்தன. தன்னை நினைத்துத் தவித்துக் கொண்டு போகும் ஒருத்தியின் ஞாபகம் உள்ளே சுடும் வேதனையில் உணவைச் சுவையில்லாமல் உண்டு முடித்து விட்டு அறைக்குப் போய்ச் சேர்ந்தான் சுகுணன். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவர்க்கு மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கனிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது. மனத்தை ஒரு முகப்படுத்துவதற்காக ஏதேனும் நல்ல புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம் என்று புத்தக அலமாரியருகே போனவன் நீண்ட நாட்களாக அங்கேயே கவனிக்கப்படாமல் கிடந்த ஒரு புகைப்பட ஆல்பத்தினால் கவனம் கவரப்பட்டு அதை முதலில் எடுத்தான். ஒரு காலத்தில் அவன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களை எல்லாம் துளசி அதில் பத்திரமாக ஒட்டி அலங்கரித்து அழகுபடுத்திக் கொண்டு வந்தாள். அவன் வெளிநாடு சென்று வந்த காலத்தில் எடுத்த புகைப்படங்களும் அதில் இருந்தன. ஒருமுறை விமான நிலையத்தில் கல்கத்தாவிலிருந்து பத்திரிகையாளர் பெடரேஷன் காரியமாக வந்திருந்த நண்பர் கோஷைத் திரும்ப வழியனுப்ப அவன் போயிருந்த போது துளசியும் கூட வந்திருந்தாள். அப்போது தற்செயலாக வேறுகாரியமாக அங்கு வந்திருந்த சுகுணனுக்கு மிகவும் வேண்டிய புகைப்படக்காரர் ஒருவர் அவனையும், துளசியையும் இருவரும் அருகருகே நெருங்கி நின்ற நேரத்தில் அவர்களே அறியாதபடி ஒரு படம் பிடித்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் புகைப்படக்காரரான நிருபர் மிக நன்றாக வந்திருந்த அந்தப் படத்தைக் கொண்டு வந்து காண்பித்த போது தான் சுகுணனுக்கே அது தெரியும். படத்துக்காக நிற்கிறோம் என்ற எச்சரிக்கையும் ஏற்பாடும் இல்லாமல் இருவருமே தற்செயலாக இயல்பாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டு நிற்கும் போது எடுக்கப்பட்ட படமாகையினால் அது மிகமிக அழகாயிருந்தது. படத்தில் துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூஞ்செடியைப் போல் பொலிவுறச் சிரித்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே இனிமையாயிருக்கிற இராகங்களில் எப்போதாவது சில சமயங்களில் புதிய கற்பனைகளும், சங்கதிகளும் பிடிபடுகிறாற் போல் அந்தப் படத்தில் அவள் இயல்புக்கும் அதிகமாகவே அழகாயிருப்பதாகச் சுகுணன் அவளிடம் அன்று கூறிய போது அவள் அதை மறுத்தாள். "என்னை விட நீங்கள் தான் அதிக அழகாயிருக்கிறீர்கள் இந்தப் படத்தில்" - என்று அவள் அப்போது அவனை மட்டுமே வியந்திருந்தாள். "ஒருவர் மேல் இன்னொருவர் சத்தியமான பிரியம் வைத்துவிட்டால் சொந்த ஆழகு சம்பந்தமான தற்பெருமை கூடப் போய் விடுகிறது பார்த்தாயா துளசி? இந்தப் படத்தில் நீதான் அழகாயிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் தான் அழகாயிருப்பதாக நீ சொல்கிறாய். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு புனிதமாக, எவ்வளவு நம்பிக்கையாக, எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்காக விட்டுக் கொடுக்கிறோம் பாரேன்" என்று தான் அன்றைக்கு மனம் நெகிழ்ந்து அவளிடம் சொல்லியது கூட இப்போது சுகுணனுக்கு நினைவு வந்தது. ஞாபகங்களையும், அவற்றைப் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் மறுபடி காண விரும்புகிற நைப்பாசையையும் தவிர்க்க முடியாமல் அந்த ஆல்பத்தை எடுத்துப் பிரித்து விமான நிலையத்தில் எடுக்கப் பெற்ற பழைய படம் இருந்த பக்கத்தை விரித்தான் சுகுணன். மேஜை விளக்கின் ஒளியில் அந்தப் படம் பளீரென்று பிரகாசமாகத் தெரிந்தது. முன்பு அந்தப் படத்தை ஆல்பத்தில் வைக்கும் போது கூட, 'அதை ஆல்பத்தில் வைக்கலாமா கூடாதா' என்பது பற்றி துளசிக்கும் அவனுக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் நடந்திருக்கிறது. அதை ஆல்பத்தில் வைக்கக் கூடாதென்று அவன் வாதாடினான். 'அப்படித்தான் வைப்பேன்' என்று அவள் பிடிவாதம் பிடித்து அதை வைத்திருந்தாள். அந்தப் படத்தின் பின்புறம் அப்போது அவள் ஏதோ எழுதியதாகக் கூட அவனுக்கு நினைவிருந்தது. நான்கு ஓரமும் படம் சொருகப் படுவதற்காக அமைந்திருந்த மடிப்புகளிலிருந்து பூக்கொய்வது போல் படத்தை மெல்ல விடுவித்துப் பின்புறம் பார்த்தான் அவன். "உவமையும் பொருளும் போல் ஒருமனம் இருவடிவம்" - என்று எழுதியிருந்தது. முத்து முத்தாகத் துளசியின் கையெழுத்து தான் அது. திடீரென்று ஒரு விநாடி உள்ளே எழுந்த சினத்தீயின் அனலில் - அந்தப் படத்தை அப்படியே கிழித்தெறிந்து விட வேண்டும் போல் கை துடிதுடித்தது. ஆனால் அடுத்த விநாடி அப்படிச் செய்யவும் மனம் வரவில்லை. ஒரு காலத்தின் ஞாபகத்தை இன்னொரு காலத்தில் கிழிப்பதால் தான் என்ன பயன்? படங்களைப் பத்திரப் படுத்துவதோ, சேர்த்து வைப்பதோ அவனுக்கு வழக்கமில்லை. துளசிதான் பூம்பொழில் ஃபோர்மெனிடம் சொல்லி அழகிய ஆல்பமொன்று பைண்டு செய்து வாங்கி எல்லாப் படங்களையும் சேகரித்து இப்படி ஒட்டி அவன் அறையில் கொண்டு வந்து வைத்திருந்தாள். ஒரு காலத்தில் இரண்டு பேரும் ஒரே ஞாபகமாயிருந்தார்கள். இப்போது தனித்தனி ஞாபகங்களாகி விட்டாலும் பழைய ஒருமையை மறக்கவும் முடியவில்லை; தவிர்க்கவும் முடியவில்லை. எவ்வளவு வேகமாக அந்த ஞாபகங்களை வரவழைத்துக் கொள்ள முயன்றானோ அவ்வளவு வேகமாக உடனே அவற்றை மறந்து வேறெதையாவது நினைக்க வேண்டும் போல ஆற்றாமையும் வந்தது. ஆல்பத்தைத் தூக்கி வைத்துவிட்டு ஏதோ புத்தகத்துடன் மறுபடி நாற்காலியில் வந்தமர்ந்தான். புத்தகத்தில் மனம் செல்லவில்லை. எத்தனையோ பல நாட்களில் எத்தனையோ பல சமயங்களில் எழுதுவதற்காக அவன் விரும்பிய தனிமை இன்று இந்த விநாடியில் வேதனை தருவதாயிருந்தது. சொந்த நினைவுகளோடு தனியே இருக்கும் அந்த நிலையே விரோதியோடு தனியே விடப்பட்டது போன்ற உணர்வைக் கொடுத்தது அவனுக்கு. எங்காவது வெளியே ஓடிப்போய் 'இது பெரிய உலகம் - இங்கு பயமில்லை' - என்பது போல் மனிதர்களோடு ஒட்டிக் கொள்ள வேண்டும் போலத் தாபமாயிருந்தது. அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கடற்கரைக்குப் புறப்பட்டான் சுகுணன். மாநிலக் கல்லூரியருகே பைகிராப்ட்ஸ் ரோடும் கடற்கரைச் சாலையும் கலக்குமிடத்தில் தமிழ்த் தாத்தாவின் சிலை கடலை நோக்கியபடி இருட்டில் எதையோ மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. மங்கிய நீல வண்ணத்தில் மேகம் நனைவது போல் இதமான ஒளியுடன் கடற்கரை விளக்குகள் தென்பட்டன. மணலில் இறங்கி உட்புறமாகத் தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் காற்றாட நடக்கலானான் சுகுணன். கடற்காற்று உடலில்பட்டுத் தடவியதும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. வியாபாரமெல்லாம் முடிந்து இரவில் குடும்ப சகிதம் காரில் வந்து காற்று வாங்கும் சௌகார்பேட்டை தங்கசாலைத் தெரு சேட்கள், சௌகர்கள், கடற்கரையில் காருடனும், கைகளில் பாடும் டிரான்சிஸ்டர் ரேடியோக்களுடனும் தென்பட்டனர். ஒரு மூலையில் ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் தழுவினாற் போல பாண்ட் ஸ்லாக் அணிந்த இளைஞர் ஒருவர் நடனமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவன் போய்க் கொண்டிருந்த சாலையில் அவனுக்கு நேரெதிர் திசையில் அவனைக் கடந்து விரைந்த பெரிய கார் ஒன்றிலிருந்து ஒரு கணம் காற்றோடு வந்து பாய்ந்த உயர்தர செண்ட் வாசனை, மல்லிகைப்பூ மணம், கடற்கரை மேகக் குவியலில் அடங்கித் தெரியும் சிறிய நிலவு, தொலைவில் டிரான்சிஸ்டரிலிருந்து கேட்கும் லதா மங்கேஷ்கரின் நளினமான குரல் எல்லாமாகச் சேர்ந்து ஏதோ பெரிதாகக் கற்பனை செய்ய வேண்டும் போல அவன் மனத்தைக் கிளரச் செய்தன. புகுவதற்கு உடல் கிடைக்காத ஆவியைப் போல் அந்தக் கற்பனை பேயாய் அலைந்ததே ஒழிய இன்னதென்று ஒரு வடிவில் வந்து உருவாகவில்லை. நடந்து கொண்டேயிருந்தவன் - தற்செயலாக எதிரே வந்த மற்றொரு காரின் மேல் பார்வை சென்றதுமே திடுமெனத் தலைகுனிந்து விலகினான். துளசியும், அவள் கணவனும் அதில் வந்து கொண்டிருந்தார்கள். துளசி காரை டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அவள் கணவன் அருகே அமர்ந்திருந்தான். அவள் கூந்தலில் ஒரு கூடை பூச்சரிந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சத்தில் எதிரே நடுச்சாலையில் தனியே நடந்துவரும் அவனை அவள் பார்த்து விட்டிருக்க வேண்டும். கார் அவனருகே வந்து நின்றுவிடும்போல் அத்தனை மெதுவாக வேகம் குறைந்தது. சட்டென்று சாலையிலிருந்து விலகி மணலில் இறங்கி விரைவாக இருளில் நடப்பதன் மூலம் அதைத் தவிர்த்தான் சுகுணன். அந்த நிலையில் அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் மணலில் சோர்ந்தன. எனினும் அவசரமாக விரைந்து அப்போது அவளையோ அவள் கணவனையோ சந்தித்து விடாமல் தப்பிக்க வேண்டுமென்ற ஆவலும் பரபரப்புமே கால்களை உந்தின. அவன் செய்தது போலவே அவர்களும் வீட்டிற்குப் போய் உணவை முடித்துக் கொண்டு வேறு பொழுது போகாமல் கடற்கரைக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக வேகம் குறைந்து மெதுவான கார் ஒரு விநாடி அங்கு நின்றபின் மறுபடி வடக்கு நோக்கி விரைந்து விட்டது. அந்த இரவில் அந்த நிலையில் துளசியையும், அவள் கணவனையும் சந்தித்து அவர்கள் தனிமையைப் பாழடிக்கவோ, தன் மனத்தை வேதனைப் படுத்திக் கொள்ளவோ அவனுக்கு விருப்பமில்லை. மாலையில் ராயபுரம் வாசகசாலைக் கூட்டத்திற்கு அவள் தன் கணவனோடு வந்து உட்கார்ந்திருந்ததே அவனுக்குச் சரியாகப் படவில்லை. துளசியின் பேதமை அவனுக்குப் பிடித்ததென்றாலும் இனியும் அவள் பேதையாக இருப்பதனால் அவளை மணந்து கொண்ட அந்த இன்னொருவர் பாதிக்கப்படலாம் என்னும் உணர்வே அவனை இப்படி எண்ண வைத்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் துளசி சும்மா இருந்தாலும் அவள் அம்மாவோ, அப்பாவோ கூட, "ஏனம்மா துளசீ! மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு கடற்கரைப் பக்கமோ ஏதாவது சினிமாவுக்கோ போய்விட்டு வாயேன்! எதுக்கு இப்படி இந்த நாற்காலியே சதமென்று புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாய்?" - என்று தலையில் பூ வைத்து அலங்கரித்துவிட்டுத் தூண்டியிருக்கலாம். வாழ்க்கை அப்படித் தூண்டப்படுவதுதான். புதிதாக மணமானவர்கள் மேல் எல்லோரும் காண்பிக்கிற பொதுக்கருணை அல்லது பெருந்தன்மை இதுதான் என்பதை அவனால் உணர முடிந்தது. காரை ஓட்டிக் கொண்டு வந்த துளசி தன்னைப் பார்த்து விட்டாளென்றுதான் அவனுக்குத் தோன்றியது. அப்போது அங்கே தன்னைப் பார்த்ததே அவளைக் கலங்கி நிலைகுலையச் செய்திருக்குமென்று எண்ணினான் அவன். கணவன் ஒன்று கேட்க அவள் ஒன்று பதில் சொல்ல நினைவு ஒருபுறம் உடல் ஒருபுறமாக அடுத்த சில மணி நேரங்கள் அவள் தத்தளிப்பதாக அவனால் கற்பனை செய்யவும் முடிந்தது. அவளுக்கு அந்த நிலைமையை உண்டாக்கியதற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன். 'எவ்வளவு சுலபமாக எவ்வளவு புனிதமாக எவ்வளவு நம்பிக்கையாக எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்கிறோம்; பாரேன்?' - என்ற தன் வாக்கியத்தை நினைவு கூர்ந்தான் அவன். இன்னும் அதிக பட்சமாக இன்னும் பெருந்தன்மையாக இந்த வேதனையை மறந்து அமைதியடைகிற அளவு விட்டுக் கொடுக்கும் பக்குவம் தனக்கு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. 'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' - என்று பாரதி பாடியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறதென்று இந்த விநாடியில் வியந்தான் அவன். மோகத்தை பொறுத்த வரையில் அது ஒரு சுகமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை மனிதனிடமிருந்து அழியவும் நேரலாம். ஆனால் அதுவே மனிதனை அழிக்க விட்டு விடக் கூடாதுதான். எலியட்ஸ் ரோடு காந்தி சிலைப்பகுதி கடறகரை வரை நடந்து வந்தாகி விட்டது. மறுபடி வந்த வழியே திரும்பினால் துளசியைச் சந்திக்க நேருமோ என்ற பயத்தில் காந்தி சிலையருகே மேலே ஏறிக் கடற்கரைச் சாலையில் திரும்பி நடந்தான் சுகுணன். கடற்கரையை விட்டு நீங்கி விரைவில் அறைக்குத் திரும்பினால் போதும் போல் மனத்தில் விரைவு மூண்டிருந்தது. 'யாரைத் தவிர்க்க விரும்புகிறோமோ, அவர்களையே மறுபடி மறுபடி சந்திக்க நேர்கிற அளவுக்கு இந்த உலகம் எத்தனை சிறியதாயிருக்கிறது' - என்று உலகை எண்ணி வியந்தபடி அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்தான். சுகுணனுக்குத் தன் மனத்தின் வேதனையை எதிலாவது கொட்ட வேண்டும் போலிருந்தது. எதை எழுதினாலும் அதில் மனவேதனைதான் சுருதி சேரும் போல் ஒரு தவிப்பு உந்தியது. அமைதியான இரவில் 'கடற்கரைத் தாழம்பூ' - என்ற பெயரில் ஒரு கவிதை எழுதினான் அவன்.
பூத்துப் பொலிந்திருந்தாய் - நறும்பூவே பொன்னின் மெருகேறிப் பொலி மின்னின் ஒளியேறிக் கீற்று வெடித்திருந்தாய் - மணமென்னும் காற்றுத் தேரேறிக் கன்னிமை கனிந்திருந்தாய் நேற்று மலர்ந்தது நீயறிவாய் - உப்பு நெடுங்கடல் தானறியும் உவர்க்கரை மணலறியும் வேற்று மனிதர்கள் யாரறிவார் - ஒரு வேதனை பேசிடும் உள்ளம் மணமானால் சாற்றப் பிறரில்லை - போய்ச் சாரக் கரமில்லை சரியத் தோளில்லை ஏற்றுச் சூடக் குழலில்லை - சொல் எடுத்து மொழியக் கவியில்லை இணைத்து மொழியப் பதமில்லை போற்ற முடியாக் காதல்போல் - உயிர் போம்வரை வேம் நெஞ்சம் வேம்வரை போம் நினைவு நாற்றில் மடியும் பயிர்போல - வெறும் நாற்றக் கடலுள் சிறுமடலாய் நானும் நீயும் உதிர்ந்திடுவோம்! நினைப்பின் தற்செயலான வார்ப்பில் கவிதை எப்படி வந்ததோ அப்படியே அதை எழுதிவிட்டு அவன் உறங்கச் சென்ற போது மணி பதினொன்றரைக்கு மேல் ஆகியிருந்தது. சில இடங்களில் பதங்களை மாற்றிச் சொல் மெருகும் பொருள் மெருகும் கொடுத்து ஓசை நயத்தைச் செப்பனிட வேண்டும்போல் தோன்றினாலும் அப்போது அதைச் செய்ய இயலாமல் சோர்வு வந்து தடுத்தது. காலையில் அதைச் செய்து கொள்ளலாம் என்று எண்ணிச் சுகுணன் கவிதையை அப்படியே விட்டிருந்தான். தூங்கத் தொடங்கியபோது மணி என்ன இருக்கும் என்று நினைவிராத ஏதோ ஒரு நூலிழை விநாடியில் தூக்கம் அவனைப் பற்றி ஆண்டிருந்தது. ஆனால் ஒரு விநாடிதான் தூங்கி முடிந்தது போலிருந்தது. அதற்குள் வேகமாகப் பொழுது விடிந்துவிட்டது. அந்தக் கண நேரத்தைப் போன்ற ஆழ்ந்த தூக்கத்திலும் அவன் ஒரு கனவு கண்டிருந்தான். 'கடற்கரைத் தாழம்பூ' என்ற கவிதை பூம்பொழிலில் வெளிவந்து அதைத் துளசியும் படித்துவிட்டு அவனிடம் வந்து கோபத்தோடு ஏதோ ஒரு கேள்வி கேட்பது போன்ற சொப்பனம் அது.
'சாற்றப் பிறரில்லை - போய்ச் சாரக் கரமில்லை சரியத் தோளில்லை' என்ற வரிகளை என்ன அர்த்தத்தில் அவன் எழுதியிருக்க முடியும்? என்று அவனிடமிருந்தே அறிந்து கொள்ள முயலுகிறாள் துளசி. அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள் உறக்கம் கலைந்து விழித்து விடுகிறது. அன்று காலையில் எழுந்திருந்த போதே அவனுக்கு மிகவும் தளர்ச்சியாக இருந்தது. அவன் நீராடித் தலை துவட்டிக் கொண்டு திரும்பிய சமயத்தில் எதிர்பாராமல் பத்திரிகை அதிபர் நாகசாமியிடமிருந்து அவனுக்கு ஃபோன் வந்தது. அவனுடைய அறை எண்ணுக்கு அவர் ஃபோன் செய்வது எப்போதாவது அபூர்வமாக இருக்கும். அவசர ஆத்திரத்திற்குக் கூப்பிடுவதற்காக அவன் தன் லாட்ஜ் டெலிபோன் எண்ணையும் அறை எண்ணையும் அலுவலகத்தில் கொடுத்திருந்தான். நாகசாமியும் அதை அலுவலகத்திலிருந்து தான் விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்க முடியும். யாரோ ஒரு முக்கியமான உத்தியோகப் பிரமுகர் டில்லியிலிருந்து தன் வீட்டிற்கு வந்திருப்பதாகவும், அவரை அவனும் சந்தித்து அறிமுகம் செய்து கொள்வது நல்லதென்றும் கூறினார் அவர். சரியாகக் காலை பத்துமணிக்குச் சாந்தோமிலிருக்கும் தமது பங்களாவுக்கு அவனை வந்துவிடச் சொல்லி உத்தரவு போட்டார் அவர். அங்கே போனால் அவரைச் சந்தித்துவிட்டு அப்புறம் அப்படியே காரியாலத்துக்குப் போகத்தான் நேரம் சரியாயிருக்கும். காலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு ஒன்பதரை மணிக்கு ஒரு டாக்ஸி பிடித்து அவன் புறப்பட்டான். டாக்ஸி நாகசாமியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்த போது முன்புறம் மரத்தடிப் புல் வெளியில் துளசியும், அவள் கணவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. திருமண விருந்தின்போது அச்சக ஊழியர்கள் அவளுக்கு அன்பளிப்பாக வழங்கிய சுகுணனின் நாவல்கள் சில அவளருகே கிடந்தன. அவள் அந்தப் புத்தகங்களைக் காண்பித்துத் தன் கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். இதற்குள் டாக்ஸி அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து பங்களாவின் போர்டிகோவுக்குள் போய் நின்றுவிட்டது. அந்த இடத்தில் மறுபடி காரியாலயம் திரும்புவதற்குச் சுலபமாக வாடகை வாகனங்கள் எவையும் அருகில் கிடைக்க வழியில்லை என்பதால் வந்த டாக்ஸியையே சொல்லி நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே போனான் சுகுணன். நாகசாமியும், அவருடைய நண்பரும் முன் ஹாலிலே அமர்ந்திருந்தனர். நாகசாமி சுகுணனை உற்சாகமாக வரவேற்று அந்த நண்பருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர்தான் மிஸ்டர் சந்திரசூடன், ஐ.சி.எஸ். டெல்லியிலே டெபுடி செக்ரெட்டரியாக இருக்கிறார். எனக்கு மிகவும் வேண்டியவர். சமீபத்தில் அரசாங்கக் காரியமாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு வந்திருக்கிறார். 'லிட்டரேசரிலே' கூட ரொம்ப ஈடுபாடு உண்டு" என்று நாகசாமி சொல்லிக் கொண்டே வந்தபோது பைப்பில் புகைத்துக் கொண்டிருந்த அந்த ஐ.சி.எஸ். அதிகாரி பைப்பை வாயிலிருந்து எடுத்து விட்டு, "தமிழில் நான் அதிகம் படிச்சதில்லை. மன்னிக்கணும். 'லிட்டரேசர்னு' நாகசாமி சொன்னதை இங்கிலீஷ் என்று மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்" - என்று குறுக்கிட்டார். "அப்படியா! மிக்க மகிழ்ச்சி" என்று ஒப்புக்குப் பதில் சொல்லி வைத்தான் சுகுணன். அவனுக்காக நாகசாமி வரவழைத்த காபியைக் குடித்துவிட்டு அவன் தலைநிமிர்ந்ததும் ஐ.சி.எஸ். அதிகாரி அவனிடம் ஒரு கேள்வி கேட்டார். "தமிழில் ஸ்டாண்டர்டா இதுவரை ஒண்ணுமே வரலே போலிருக்கே? நீங்க என்ன நினைக்கிறீங்க... மிஸ்டர் சுகுணன்...?" சுகுணனுக்கு கடுமையான கோபம் வந்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு, "ஸ்டாண்டர்டுன்னா நீங்க எதை அளவுகோலாக வைத்துச் சொல்கிறீர்கள்? அல்லது அநுமானிக்கிறீர்கள்?" என்று கேட்டான். "இல்லை! எனக்குத் தெரிந்த மட்டில்தான் சொல்கிறேன்." "உங்களுக்குத்தான் தமிழில் அதிகம் பரிச்சயம் இல்லையென்று நீங்களே முதலில் சொல்லிவிட்டீர்களே?" என்று அந்தக் கேள்வியின் கடுமை எதிராளிக்குத் தெரிந்து விடாதபடி சிரித்துக் கொண்டே அவரைக் கேட்டான் சுகுணன். அந்த விவாதத்தைத் தவிர்க்க விரும்பிய நாகசாமி நடுவில் குறுக்கிட்டு, "அதிருக்கட்டும்! இப்போது நம் சந்திரசூடன் ஒரு காரியம் செய்திருக்கிறார். அவர் சுற்றிப் பார்த்த நாடுகளைப் பற்றி ஆங்கிலத்தில் மிக அற்புதமாக ஒரு பிரயாணக் கட்டுரைத் தொடர் எழுதியிருக்கிறார். அதை நாம் ஏதாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை" என்றார் நாகசாமி. இதைச் சொல்லிய அளவில் சந்திரசூடன் ஐ.சி.எஸ். முகம் மலர்ந்தார். சுகுணன் பரிதாபமாக நாகசாமி மேலும் என்ன சொல்லப் போகிறாரோ என்பதற்காக அவர் முகத்தைப் பார்த்தான். "ரியலி... இட் இஸ் வொண்டர்புல்... மிஸ்டர் சுகுணன்" என்று அந்தப் பிரயாணக் கட்டுரைத் தொடரைப் பற்றி மீண்டும் குறிப்பிட்டார் நாகசாமி. சுகுணன் ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் இருந்தான். தமிழ்நாட்டில் மொழியுணர்வும், தரமான இலக்கிய உணர்வும் பெருகாததற்குச் சமூகத்தில் அதிக வசதியுள்ள சென்ற தலைமுறை உயர் வர்க்கத்தாரும், மிகக் குறைந்த வசதியுள்ள அடிமட்டத்தாருமே காரணமாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உயர் வர்க்கத்தார் தமிழை இலட்சியம் செய்வதில்லை. அடி மட்டத்தாருக்கு வயிற்றைக் கழுவுவதைத் தவிர வேறெதையும் இலட்சியம் செய்ய நேரமில்லை. ஏதோ சில நடுத்தர வர்க்கத்தார் தான் மொழியுணர்வையும் தங்களுடைய பல சிரமங்களிடையே கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது. 'சந்திரசூடன் ஐ.சி.எஸ். தாய்மொழிப் பற்றில்லாமல் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துத் தமிழில் அதையே தன் பெயரில் வரச் செய்ய முடிகிறது. மொழியையும் இலக்கியத்தையும் பற்றிக் கவலையே இல்லாமல் நாகசாமி பல பத்திரிகைகளை நடத்த முடிகிறது. அடித்துத் தள்ளுகிற பத்திரிகைக் காகிதங்களை விற்க எங்கெங்கோ ஏஜண்டுகள் இருப்பது போல் புத்தியின் ஏஜண்டுகளாக இவர்களிடம் என்னைப் போல் சிலர் ஆசிரியர் குழுவில் சிக்கிக் கொள்கிறோம். அவ்வளவுதான்!' - என்று வேதனையோடு சிந்தித்தான் சுகுணன். துளசியையும், ஃபோர்மென் நாயுடுவையும் போல் புதிய தலைமுறையின் வளர்ச்சியைப் புரிந்து கொண்டு சிலர் இரண்டு வர்க்கத்திலிருந்துமே இந்தப் பக்கம் கவரப்படலாம். ஆனால் பலர் இன்னும் கவரப்படவில்லை என்பது மனத்தை வருத்தத்தான் செய்தது. சொந்த தேசத்தின் இலக்கியப் பாரம்பரியம், சொந்த மொழியின் அழகுகள், சொந்த நாட்டின் பெருமிதங்கள், இவற்றை எல்லாம் அலட்சியப்படுத்துகிறவர்களைச் சந்திக்க நேரும் போது அவன் மனம் இன்று போல் இப்படித்தான் பலமுறை குமுறிக் குமுறி அடங்கியிருக்கிறது. இப்போது நாகசாமி எதற்குக் கூப்பிட்டனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பாக அவனுக்குப் புரிந்து விட்டது. சந்திரசூடனும் அவருடைய ஐ.சி.எஸ். பட்டமும் சேர்ந்து படைத்த ஆங்கிலப் பிரயாணக் கட்டுரைத் தொடரைத் தான் கொண்டு போய்த் தமிழாக்கி அழகுபடுத்தி அவர் பெயரில் பூம்பொழிலில் வரச் செய்ய வேண்டும் போலிருக்கிறது. இந்த நூற்றாண்டில் இந்த இடம் மாறிய ஆசைகள் மனிதர்களுக்கு மிகமிகச் சாதாரணமாக வருகின்றன. 'டாக்டருக்குச் சினிமாவில் நடிக்க ஆசை. நடிகருக்கு அரசியல் தலைவராக நைப்பாசை. ஓட்டல்காரருக்குச் சங்கீதம் பாட விருப்பம்' என்று கையிலிருக்கிற கடமையையும் சரியாகச் செய்யாமல், ஆசைப்படுகிற காரியத்துக்கும் போதிய தகுதியில்லாமல் பலர் வாழ்க்கையைக் குழப்பிக் கொள்வதை அவன் கூர்ந்து கவனித்திருக்கிறான். சந்திரசூடனுக்காக அநுதாபப்பட்டுக் கொண்டே நாகசாமி எடுத்துக் கொடுத்த அந்த டைப் செய்த ஆங்கிலக் கத்தையை வாங்கிக் கொண்டான் அவன். மற்றொரு பெரிய அட்டைப் பெட்டியில் ஒரு வண்டி வெளிநாட்டுப் புகைப் படங்களையும் அள்ளிப் போட்டு எடுத்துக் கொடுத்திருந்தார் சந்திரசூடன். "ஒரு பத்து வாரம் வருமில்லையா?" என்றார் நாகசாமி. "வரலாம். பார்க்கிறேன் சார்..." "எப்படியும் பார்த்துப் போட்டுடணும்... நல்லாத் தானிருக்கும்..." என்று மறுபடியும் அழுத்தினார் நாகசாமி. "ஐ திங்..." என்று சந்திரசூடன் வேறு சுகுணனிடம் ஏதோ பேசத் தொடங்கினார். "ஐ வில் கோ த்ரூ தி ஸ்கிரிப்ட், இன்பார்ம் யூ சார்..." என்று அவன் அவர் பேச்சைக் கத்தரித்த விதம் அவருக்கே சங்கடத்தை உண்டு பண்ணினாலும் அவனை நோக்கி வாடிய முகத்தோடு புன்முறுவல் பூக்க முயன்றார் சந்திரசூடன். சுகுணன் அப்படிப் பேச்சை வெட்டியது நாகசாமிக்குக் கூடப் பிடிக்கவில்லை. அவர் முகமும் சற்றே வாடியது. இதற்குள் துளசியும் அவள் கணவனும் கூடத் தோட்டத்திலிருந்து உள்ளே வந்து விட்டார்கள். அவள் கையிலிருந்த சுகுணனின் நாவல் புத்தகங்களைத் தற்செயலாகக் கவனித்த சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவற்றை அவளிடமிருந்து கேட்டு வாங்கி அலட்சியமாகப் பக்கங்களைப் புரட்டினார். "இந்த இரண்டையும் பதினேழாவது முறையாக இப்ப படிக்கிறேன் மாமா..." என்று துளசி அந்த ஐ.சி.எஸ்.காரரிடம் ஆர்வமடங்காமல் சொல்லியபோது, "சச் எ... கிரெஸி ரைட்டிங்..." என்று ஏதோ சில ஆங்கில வார்த்தைகளை மென்று முழுங்கினார் அவர். சுகுணன் அங்கு வந்திருப்பதைத் தான் அறிந்த இந்தக் கணமே மறுபடி தான் அந்த வரவைக் கொண்டாட விரும்பியவளைப் போல, "சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேனே? ஜூஸ், காபி, டீ, ஏதாவது...?" என்று அவனருகே வந்து முகம் மலர்ந்தாள் துளசி. "ஆயிற்று..." என்று சுருக்கமாகவும் அடக்கமாகவும் பதில் வந்தது சுகுணனிடமிருந்து. அவன் விடை பெற்றுக் கொண்ட போது துளசி மட்டும் வாயில்வரை வந்து வழியனுப்பினாள். டாக்ஸி நகருவதற்கு முன் ஒரு விநாடி கார் கதவருகே நெருங்கிய துளசி, "இப்படி அகாலத்தில் எதற்காக கடற்கரை மணலில் கால் வலிக்கச் சுற்றுகிறீர்கள்? தூக்கம் கெட்டால் உடம்பு என்னத்திற்காகும்?" - என்று மெல்லிய குரலில் விசாரித்த போது, "நான் எங்கே கடற்கரைக்கு வந்தேன்? நேற்று அறையை விட்டு நான் எங்குமே போகவில்லையே?" என்று திட்டமிட்டுப் பொய் சொன்னான் அவன். துளசியின் முகம் பின்னால் மறைந்தது. டாக்ஸி விரைந்து விட்டது. க்டற்கரையில் முதல் நாளிரவு தான் பார்த்தது அவன் தானா இல்லையா என்று தெரிந்து கொள்ளத் துளசி இந்தக் கேள்வியை மிகவும் சாதுரியமாகக் கேட்டிருந்தாள். அவள் அதைத் தெரிந்து கொண்டால் வீணாக மனத்தை அலட்டிக் கொள்வாளே என்பதற்காக அவன் பொய் தான் சொன்னான். 'நாம் பார்த்தது சுகுணனில்லை - பாவம்! வேறு யாரோ போலிருக்கிறது' - என்று நினைத்தாவது அவள் நிம்மதி பெறட்டுமே என எண்ணியே அவன் அதை மறைத்தான். 'தான் கணவனோடு காரில் உல்லாசமாகக் கடற்காற்று வாங்க வந்ததாக' - அவன் எண்ணி மறுகுவானோ என நடுங்கும் அவள் உள்ளத்துக்கு அந்த நடுக்கத்தையே மேலும் வளர்க்கும் பதிலைத் தான் தெரிவிக்கலாகாது என்ற காதல் பெருந்தன்மையை அந்தக் கணத்தில் சுகுணன் காப்பாற்றினான். காதல் என்பது பின்வேறு எங்கு தான் இருக்கிறது? 'அவன் அகாலத்தில் கடற்கரை மணலில் அநாதை போல் கால்தேயச் சுற்றித் திரிகிறானே?' என அவள் இன்னும் உருகுகிறாள். 'அது அவளுக்குத் தெரியாமலிருந்தால் அவள் மனம் புண்படாதே' என்று அவன் அவளுக்கு இரங்கிப் பொய் சொல்லுகிறான். அசல் காதலில் தான் எப்படி எப்படித் தியாகம் செய்கிறார்கள் மனிதர்கள்? எவ்வளவு சத்தியமாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறார்கள்? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரணமாக ஒப்படைத்து விட்ட ஒருத்தியின் உடம்பை அப்புறம் வேறு யார் மணந்து கொண்டால் தான் என்ன? உண்மையில் அந்த நம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவா அவள் மனத்தை ஆள்கிறான்? உடம்பு மிக மிகச் சிறிய உண்மையாகி விடுகிற அளவு காதலில் மனம் தொடர்பான இரகசியத் தியாகங்கள், ஆதரவு அபிமான அந்தரங்கங்கள் மலைமலையாக எவ்வளவோ இருக்கின்றனவே! காரியாலயத்திற்குப் போகிற வழியெல்லாம் டாக்ஸியில் இந்த நளின நினைவுகளே அவன் மனத்தில் ஓடின. துளசியின் மென்மை அவனை உள்ளூர அவளுக்காக இரங்கச் செய்தது. பேதைகளை மன்னிக்கத் தயாராயிருப்பவன் தான் ஆண் மக்களிலேயே தீரனாக இருக்க முடியுமென்று இப்போது அவன் நம்பினான். துளசியைக் கடந்த சில நாட்களில் சில சொற்களில் சில வாக்கியங்களில் சில சந்தர்ப்பங்களில் தான் புண்படுத்தினாற் போல் நடந்து கொண்டதற்காகக் கூட அவன் மனம் இப்போது தனக்கு உள்ளேயே வருந்தி அழுதது. நரம்புகளில் முறுக்குத் தளர்ந்ததும் வாத்தியங்களின் இசையில் இனிமை குறைவது போல் உடம்பைக் கட்டியாளும் காதலில் நாதக் கட்டு குலைந்து அபசுவரம் விழுகிற நேரமும் வரலாம். மனத்தைக் கட்டியாளும் காதல் என்றும் சுருதி பேதமில்லாதது என்பதற்கு உவமையே தேட வேண்டியதில்லை என அவன் எண்ணினான். அவன் காரியாலயத்திற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சர்மா அவனுடைய அறைக்குத் தேடி வந்திருந்தார். "சுகுணன்! உங்ககிட்ட நாகசாமி சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸோட 'டிராவல் எஸ்ஸேஸ்' ஏதோ கொடுத்திருக்காராமே!" "ஆமாம்! அதற்கென்ன வந்தது இப்போது?" "ஒண்ணும் வரலே! இப்பத்தான் அந்த விவரத்தை எனக்கும் ஃபோன் பண்ணிச் சொன்னார்..." "என்ன செய்யச் சொன்னார் உங்களை?" சர்மா இதற்குச் சரியாகப் பதில் சொல்லாமல் மழுப்பினார். நாகசாமியிடம் ஒரு கெட்ட குணம். ஒரே காரியத்தை ஒரே சமயத்தில் பத்துப் பேரிடம் சொல்லி வைப்பார். அதனால் பத்துப் பேருக்கும் அந்தக் காரியத்தின் மேல் சிரத்தை வராது. அவரைப் போல் மனிதர்கள் மேல் அவநம்பிக்கைப்படும் பிறவி உலகில் வேறொன்று இருக்கவே முடியாது. தன்னைக் கூப்பிட்டு அதைக் கொடுத்துவிட்டு அதற்கு மேலும் அவநம்பிக்கையோடு நாகசாமி அதே விஷயத்தைச் சர்மாவுக்கும் ஃபோன் செய்திருப்பதை அவன் விரும்பவில்லை. சர்மாவோ மேலும் மேலும் அவனை துளைத்தார். "கட்டுரை எப்படி இருக்கு? ஏதாவது தேறுமா?" "பக்கத்து சண்முகபவனில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாத டேபிள் கிளீனர் பையன்கள் சில சமயம் நீரும் நானும் காபி குடிக்கிற போது பத்திரிகையில் போடச் சொல்லித் தமிழில் கவிதை எழுதிக் கொடுப்பார்கள் இல்லையா? அப்படித்தான் இருக்கும் இந்த ஐ.சி.எஸ். காரரின் எழுத்தும்" - என்று சர்மாவுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்ததோடு, அந்தக் கத்தையை அவரிடமே தூக்கிக் கொடுத்து விட்டான் சுகுணன். சர்மா கொண்டாட்டத்தோடு அதை வாங்கிக் கொண்டு போனார். இந்த விதமான பெரிய மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்காகச் சர்மா எதையும் செய்வார். அவருடைய என்சைக்ளோபீடியாவில் ஜெர்னலிசம் (பத்திரிகைத் தொழில்) என்பதற்கே பெரிய மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி என்பதாகத்தான் அர்த்தம். எனவே அதைத் தமிழ்ப் படுத்தும் பொறுப்பை அவரிடமே விட்டு விட்டான் சுகுணன். கொஞ்ச நேரத்தில் ஃபோர்மென் நாயுடு வந்தார். தனது 'கடற்கரைத் தாழம்பூ' கவிதையைச் செப்பனிட்டு அவரிடம் அச்சுக்குக் கொடுத்தான் அவன். நாயுடு நகர்ந்ததும் டெலிபோன் மணி அடித்தது. நூறு துப்பறியும் நாவல்களுக்கு மேல் எழுதிய 'தலை சீவி' என்னும் புனைப்பெயருக்குரிய எழுத்தாளரின் குரல் டெலிபோனில் சுகுணனிடம் இரைந்தது. "என்ன சார் இது! அநியாயமா இருக்குது. நம்ப நாவல் 'ஏரிக்கரைப் படுகொலை'யை ரிவ்யூவுக்கு அனுப்பினா அதுக்கு நீங்க இப்படித்தான் மட்டமா மதிப்புரை எழுதறதா?" "எப்படி எழுதியிருக்கிறது? எங்கே படியுங்களேன்; கேட்கலாம்..." வேண்டுமென்றே அவர் வாயாலேயே அதை ஒருமுறை படிக்கச் செய்ய வேண்டுமென்று குறும்புத் தனமாகச் சுகுணன் விரும்பினான். அவர் அதைப் ஃபோனில் படித்தார். "மன்னிக்கவும்! இந்நாவலை ஏற்கனவே ஆங்கிலத்தில் ஆர்தர் கானன்டாயில் என்பார் எழுதியிருக்கிறார். ஆர்தர் கானன்டாயில் எப்போது தமிழ்நாட்டில் திரு அவதாரம் செய்து 'தலைசீவி' என்று புனைப்பெயரும் சூடிக் கொண்டார் என்பது நமது காரியாலயத்தாருக்கு இன்னும் விளங்கவில்லை..." "இப்பிடியா எழுதுவாங்க...?" "வேறு எப்படி எழுத வேண்டும் சொல்லுங்களேன்?" -எதிர்ப்புறம் கோபத்தோடு டெலிபோனை வைத்து விட்டார் தலைசீவி. சுகுணனும் சிரித்துக் கொண்டே டெலிபோனை வைத்துவிட்டுக் காரியாலயத்திற்கு வந்திருந்த தபால்களைக் கவனிக்கத் தொடங்கினான். கதவு திறக்கப்பெற்று எதிரே நிழல் தட்டியது. அவன் தலை நிமிர்வதற்குள் அந்த மென்மையான குரல் அவன் செவிகளில் ஒலித்தது. "மன்னிக்கவும்; உள்ளே வரலாமா?" - என்று கேட்டபடி கைகளில் புத்தக அடுக்குடன் தயங்கி நின்றாள் ஒரு பெண். பார்த்தால் ஏதோ கல்லூரியில் படிக்கிற பெண் மாதிரித் தோன்றினாள் அவள். "வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?" "நான் நேற்றுதான் உங்களுடைய 'பாலைவனத்துப் பூக்கள்' என்ற நாவலைப் படித்து முடித்தேன். உடனே உங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. வந்தேன்." "உட்காருங்கள்..." - அவள் உட்கார்ந்தாள். அவளது குரலில் மலையாள மழலை தொனித்தது. "உங்களுக்கு ஊர்?" "பாலக்காடு! இங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன். உங்கள் நாவல் நேற்றிரவு முழுவதும் என்னை அழ வைத்து விட்டது. அதைப் படித்த பிறகு என் மனத்தில் புண்ணாக உறைந்து போயிருக்கும் சில நிகழ்ச்சிகளை உங்களிடம் சொல்லி ஆறுதல் பெறலாமென்று தோன்றியது..." "இன்றைக்கு நீங்கள் கல்லூரிக்குப் போகவில்லையா?" "காலையில் லீவு சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். மத்தியானம் போகவேண்டும்..." - அவள் குரலில் ஏதோ ஒருவிதமான சோகம் இடறுவதைச் சுகுணனால் உணர முடிந்தது. அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான் அவன். |