8
சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத்தான் ஒன்பதாவது படி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில் கூட ஏற முடியாத குடும்பங்கள் இன்னும் அப்படியே தானிருக்க முடிகிறது. சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் பகை ஏற்பட்ட பின் ஓர் இரண்டு மாத காலம் காரியாலய வாழ்க்கையில் மிகவும் கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தன. சுதந்திரமான மனப்பாங்கும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவன் மற்றவர்களுக்கு அடங்கியோ கட்டுப்பட்டோ நடப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை இந்த அனுபவங்களால் சுகுணன் நன்றாக உணர முடிந்தது. சுகுணனை 'ரூஃப் கார்டன்' விருந்துக்கு அழைக்க வந்திருந்த தினத்துக்கு ஒரு வாரம் கழித்துத் துளசி தன் கணவனோடு திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருந்தது. சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் சிபாரிசினாலோ அல்லது தயவினாலோ துளசியின் கணவனுக்கு டில்லியில் ஒரு பெரிய இன்ஜினியரிங் கம்பெனியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் வருகிறாப் போல உத்தியோகம் ஒன்று கிடைத்திருந்தது. இந்த உத்தியோகம் கிடைப்பதற்காகத்தான் நீண்ட நாள் நண்பரான சந்திரசூடன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து தற்செயலாகச் சென்னை வந்திருந்த போது அவரைக் கூப்பிட்டுக் குலாவி விருந்து கொடுத்து அவருடைய வெளிநாட்டு அனுபவங்களைக் கட்டுரைத் தொடராக வெளியிடுவதாய் வாக்களித்து, எல்லாம் செய்திருந்தார் நாகசாமி. ஏழைகளும் மத்தியதரக் குடும்பத்தினரும் பிரதிபலன் பாராமல் அன்புக்காகவும், உபசாரத்துக்காகவும் மனிதர்களைப் போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள். பணக்காரர்களும், வியாபாரிகளுமோ, காரியமில்லாமல் எதையுமே செய்வதில்லை. காரியத்தைச் சாதித்துக் கொடுக்கிற சக்தியில்லாதவர்களுக்கும் எதையுமே அவர்கள் செய்வதில்லை. செய்வதை நேரடியாகச் செய்யாமல் நாசூக்காகச் செய்வதற்கும் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதைச் சுகுணன் மிக அருகிலிருந்து கண்டிருந்தான். எனவே நாகசாமி நினைத்த கணத்திலேயே தன் மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய உத்தியோகம் தேட முடிந்ததைப் பற்றிச் சுகுணன் சிறிதும் ஆச்சரியமடையவில்லை. அவரால் இது முடியாமல் போயிருந்தால்தான் அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்கும். சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத் தான் ஒன்பதாவதுபடி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில்கூட ஏற முடியாத குடும்பங்கள் அப்படியே தானிருக்க முடிகிறது. ஏற்கெனவே எட்டுப்படி ஏறிவிட்ட சௌகரியமுள்ள குடும்பங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் கழிசடைகளாகவே இருந்தாலும் - மெடிகல் காலேஜ் அட்மிஷன், என்ஜீனியரிங் காலேஜ் அட்மிஷன், பெரிய உத்தியோகம், வெளிநாட்டுப் பிரயாண வசதி, எல்லாமே எட்டாவது படியில் நிற்பவனுக்கு ஒன்பதாவது படிபோல் மிக அருகிலேயே இருக்கின்றன. ஆனால் முதல் படிக்கும் கீழே இருக்கும் சமையற்காரச் சர்மாவின் பிள்ளை சுந்து, தோட்டி முனுசாமியின் மகன் குப்பு, அப்பளமிடும் அம்மாளுவின் பெண் அலமு, போன்றவர்கள் இரண்டாவது படியில் கூடச் சரியாக ஏற முடிவதில்லை. இந்திய சமூக வாழ்வில் சோஷலிசம் என்கிற சமதர்ம மலர்ச்சி கூட எட்டுப்படி ஏறியவர்களுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய முதல் படியிலிருந்து ஏங்குகிறவர்களுக்கு மேலே ஏற வசதியின்றி இருப்பதை எண்ணிச் சுகுணன் அடிக்கடி மனத்தில் வெதும்பியிருக்கிறான். இந்தச் சமதர்ம மலர்ச்சி வியாபகமாகவும், நன்றாகவும் பூரணமாகவும் ஏற்படுவதற்கு என்ன வழி செய்ய முடியும் என்ன வழி செய்ய வேண்டும் என்பது அவன் சிந்தனையில் ஒரு தாகமாகவே இருக்கிற நிலையைப் பெற்றிருந்தது. தந்தையின் பணம் துளசியின் கணவனை 'என்ஜீனியரிங்' படிப்புப் படிக்க வைக்கிற அளவு வசதி செய்தது. பின்பு மாமனாராகிய துளசியினுடைய தந்தை தம் செல்வாக்கினால் இரண்டாயிர ரூபாய்க்கு மேல் மாத வருமானம் வருகிறாற்போல் உத்தியோகம் தேடிக் கொடுத்து விட்டார். இப்படி இரண்டு செல்வாக்குகளுக்கு நடுவே இருக்கிற பிள்ளைகள் தான் சராசரி இந்திய சமூக வாழ்வில் சௌகரியத்தை அடைய முடிகிறதென்று தோன்றியது. சுகுணனுக்கு இருந்த காரியாலய வேதனைகளிலும் கசப்பான அனுபவங்களிலும் துளசியின் கணவனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்டதென்ற இந்தச் செய்தி கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. துளசியே ஒருநாள் அதிகாலையில் இதச் சொல்லிவிட்டுப் போவதற்காக அவனைத் தேடி அறைக்கு வந்திருந்தாள். அப்போதிருந்த மனநிலையில் அவனால் அவளை மலர்ச்சியோடு வரவேற்று பேச முடியவில்லை. அவளாலும் அவன் முன் மலர்ச்சியோடு நின்று பேச முடியவில்லை. சொல்ல வந்ததைப் பேசுவதற்குச் சொற்களைத் தேடி நிற்பவள் போல் அவள் தயங்கினாள். தேடிய சொற்கள் வராமல் அழுகைதான் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. அவளுடைய அழுகை செவியில் ஒலிப்பதற்கு முன் கீழே தலையைக் குனிந்தவாறு மௌனமாயிருந்த சுகுணன், அந்த நிகழ்ச்சிக்கு மனம் இரங்கி மெல்லத் தலை நிமிர்ந்து,
"விடிந்ததும் விடியாததுமாக இங்கே வந்து இப்படி அழுவதற்கு என்ன வந்துவிட்டது இப்போது?" என்று மெல்ல வினவினான்.
"அவருக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகியிருக்கிறது." "அவருக்கு என்றால் எவருக்கு?" இந்த 'அவருக்கு' அவனுள் எரிச்சலூட்டியிருக்க வேண்டும் போல் ஒலித்தது அவன் கேள்வி. அந்தக் கேள்வியின் தொனி புரியாமல் அதற்கு எந்த விதத்தில் மறுமொழி கூறுவதென்று தயங்கினாள் துளசி. பின்பு 'அவருக்கு உத்தியோகமாகிவிட்ட'தென்று வாக்கியத்தின் மகிழ்ச்சியில் விருப்பாகவோ, வெறுப்பாகவோ தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவளைப் போல, "அதுதான்... அப்பாவின் மாப்பிள்ளைக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகிவிட்டது..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவள் அப்படிக் கூறிய உடனே சுகுணனும் தன் கடுமையை விடாமல், "அப்பாவின் மாப்பிள்ளைக்கு என்றால்? ஓ... புரிகிறது? அதாவது 'உன் கணவருக்கு' டெல்லியில் உத்தியோகமாகிவிட்டதென்று என்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாய் இல்லையா?" என்று குத்தலாக வினவினான். ஒன்றும் சொல்ல முடியாமல்... சொல்லத் தோன்றாமல் - 'இப்படி நீங்கள் மேலும் ஒரு வார்த்தை பேசினால் கூட இனி என்னால் தாங்க முடியாது. நான் அழுதுவிடுவேன்' என்பது போல் ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள் துளசி. அவனும் அமைதியாக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். இடையில் நிலவிய மௌனமே அப்போது இருவர் உணர்வுகளையும் பேசியது. "அவர் தான் முதலில் போகிறார். நான் இரண்டு வாரம் கழித்துப் போக வேண்டியிருக்கும். டெல்லியில் குடியிருக்க இடமெல்லாம் கிடைத்து அவரிடமிருந்து தந்தி வந்ததும் அப்பா என்னைக் கொண்டு போய் விட ஏற்பாடாகியிருக்கிறது..." "பரவாயில்லை இதற்காக எல்லாம் இனி நான் கவலைப் பட முடியாது துளசி. இது உன் வாழ்க்கையின் சொந்தக் காரியம்." "இன்னும் எனக்கு வாழ்க்கையே ஏற்படவில்லை. அதற்குக் காரியங்களும் சொந்தமாக இல்லை. நான் நினைத்த வாழ்வு என் மனத்திலே கருகிவிட்டது." "இருக்கலாம்! ஆனால் இனிமேல் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஊமை ஏமாற்றம் இது. இதை நீ மறந்துவிடப் பழகிக் கொள்வது நல்லது..." "ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லமாட்டார்களா? இப்படிக் கடுமைக்கும் உதாசீனத்துக்கும் நான் பாத்திரமில்லை. இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது...!" அவன் பதில் பேசாமல் இருந்தான். "தயவு செய்து ஏதாவது ஆறுதலாகச் சொல்லி எனக்கு விடைகொடுங்கள்." மேஜை மேல் கிடந்த அரைக் காகிதம் ஒன்றை எடுத்து அதில் எதையோ எழுதி மௌனமாக அவளிடம் நீட்டினான் சுகுணன். அவள் அதை வாங்கிப் படித்தாள். "வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு" என்று அதில் எழுதியிருப்பதைப் படித்து விட்டு நீர் திரையிட்டு மல்கி மறைக்கும் விழிகளால் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள். "இதுதான் மீண்டும் உங்கள் பதிலா?" அவன் ஆமாம் என்பது போல் மௌனமாகத் தலையை அசைத்தான். அவள் நடைப்பிணமாக வெளியேறினாள். சில கணங்களில் வாயிலில் கார் புறப்படும் ஓசை கேட்டது. அவன் எழுந்து ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கண்ணாடியைக் கழற்றி விட்டு உள்ளே விழிக்கடையில் அரும்பியிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தோன்றி மாடி வராந்தா வரை வந்து அவன் தெருவருகே பார்த்த போது அவளுடைய கார் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைந்திருந்தது. பெருமூச்சு விட்டபடி அறைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தான் சுகுணன். இதற்குப் பின் சில மணி நேரங்கள் அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. துளசிக்கு அவளுடைய வாழ்வின் பொறுப்பையும் நிலையையும் உணர்த்தவே அவன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டான். அவளைப் போலவே அவனும் உருகி ஏங்கிப் பேசிக் கொண்டிருந்ததால் இருவருடைய பேச்சுக்கும் ஒரு முடிவே இராது. அப்படிப் பேசினால் அதன் பின் அவளாலும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெல்லியில் போய் நிம்மதியாக இருக்க முடியாது. உணர்ச்சி மயமாகவும், பிரித்தெடுக்க முடியாதபடியும் தன்மேல் பிரியம் வைத்துவிட்ட அவளுக்கு அவளுடைய புதிய நிலைமையை உணர்த்த வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. அவள் தன்னைச் சுற்றி சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அவள் மீதிருந்த அதிக அன்பின் காரணமாகவே அவனுக்கு வந்திருந்தது இப்போது. அந்தக் கடமையை அவன் செய்தான். அவள் அதைப் புரிந்து கொள்ள முடியாது - புரிந்து கொள்ளவும் வேண்டாமென்பது தான் அவன் கருத்து. முதலில் தனியே அவனைச் சந்திக்க வந்த இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடியும் தன் கணவனோடு ஒருமுறை விட்டுக் கொடுக்காமல் உடன் வந்தவள் போலத் தோன்றினாள் அவள். "முதலில் இப்போது நான் மட்டும் தான் புறப்பட்டுப் போவதாயிருந்தது. அப்புறம் மாமா யாரோ தெரிந்தவர் மூலம் குடியிருக்க இடத்துக்குக் கூட ஏற்பாடு செய்து விட்டார். அதனால் துளசியும் இப்போது என்னுடனேயே வருகிறாள்" என்றான் துளசியின் கணவன். துளசி ஒன்றும் பேசவில்லை. ஏதோ பொம்மை போல உடன் வந்திருந்தாள். "கங்ராஜுலேஷன்ஸ் விஷ்யூ ஆல்... சக்ஸஸ்" என்று துளசியின் கணவனிடம் ஒரு முறைக்காக மகிழ்ச்சி தெரிவித்தான் சுகுணன். துளசி ஒன்றுமே பேசாமலிருப்பதைக் கண்ட அவள் கணவன், "என்ன துளசி? நீ ஒன்றுமே பேச மாட்டேனென்கிறாயே?" என்று அவளைக் கேட்டே விட்டான். அந்த வித்தியாசம் அவன் மனத்திலே பெரிதாகி விடாமல் ஒப்புக்கு ஏதோ பேச முயன்றாள் துளசி. அந்தப் பேச்சில் மனம் இல்லை. உணர்வின் பிரதிபலிப்பும் இல்லை. விடைபெறும் போது கணவனின் சொற்களோடு சேர்த்தே அவள் சொற்களும் இணைந்து ஒலிக்கும்படி ஏதோ சொன்னாள். அவனும் வாசல் வரை சென்று கார்க் கதவருகே நின்று வழியனுப்பினான். மறுநாளோ அதற்கடுத்த நாளோ இரவு விமானத்தில் கணவனோடு டெல்லிக்குப் புறப்பட்டு விட்டாள் துளசி. நாட்கள் யாரோ மந்திரம் போட்டு ஓடச் சொன்னாற் போல ஓடிவிட்டன. பெண்ணையும் மாப்பிள்ளையையும் டெல்லியில் குடிவைப்பதற்காக உடன் சென்றிருந்த நாகசாமி சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் பிரயாணக் கட்டுரைத் தொடரை உடனே பிரசுரிக்க ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்தே சுகுணனுக்கு ஒரு 'எக்ஸ்பிரஸ் டெலிவரி' லெட்டரும் எழுதிவிட்டார். கடிதத்தை அப்படியே காலைமலர் சர்மாவுக்குக் கொடுத்தனுப்பி விட்டான் சுகுணன். கட்டுரைத்தொடரை அடுத்த வாரமே வெளியிடுவதாக அறிவிப்புப் போட வேண்டுமென்று சுகுணனை வற்புறுத்தினார். கட்டுரைத்தொடர் அடுத்த வாரமே வெளிவருமென்று அதிக ஆர்வத்தோடு சர்மா நாகசாமிக்குத் தந்தியும் கொடுத்து விட்டார். பூம்பொழில் இதழில் வெளியிடத் தகுதி உண்டா இல்லையா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை அந்தப் பிரயாணக் கட்டுரை விஷயத்தில் சுகுணன் மேற்கொள்ள விரும்பவில்லை. அது நாகசாமியின் காரிய ஆசை என்றோ, சர்மாவின் பேராசை என்றோ கருதி விட்டு விட்டான். ஏற்கெனவே சர்மா நாகசாமியிடம் 'சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸின் கட்டுரைகளை வெளியிடுவதில் சுகுணனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை' என்று சொல்லிக் கோள் மூட்டியிருப்பார் போலிருந்தது. அதற்குப் பிறகு நாகசாமி இரண்டொரு முறை சுகுணனிடம் அழுத்தமாகவும் வன்மையாகவும் பேசியதிலிருந்து இது தெரிந்தது. ரங்கபாஷ்யம், சர்மா இருவருமே தன்னைப் பற்றி நாகசாமியிடம் கோள்மூட்டி நெருப்பு வைத்து வருவதாக அவனால் அநுமானிக்க முடிந்திருந்தது. அந்தக் கட்டுரைத் தொடரைப் பற்றிய உண்மைக் கருத்தை இப்போதும் அவன் தெரிவித்தால், 'கட்டுரையை வெளியிடச் சுகுணனுக்குச் சம்மதமில்லை' என்றே மீண்டும் இரகசியமாக நாகசாமிக்கும் கடிதம் எழுதினாலும் எழுதி விடுவார் சர்மா. நாகசாமியைக் காக்கை பிடிப்பதில் சர்மாதான் அந்தக் காரியாலயத்தில் முதல் பரிசு வாங்கத் தகுதியானவர். நாகசாமி என்றைக்குப் பிறந்தார், அவருடைய பிறந்த நாள் எந்த மாதம் எந்தத் தேதியில் எந்த நட்சத்திரத்தில் வருகிறதென்று சுகுணனுக்கோ டைம்ஸ் நாயருக்கோ தெரியாது. ஆனால் சர்மாவுக்கு இம்மாதிரி விஷயங்களில் அதிகமான கவனம் உண்டு. நாகசாமியின் பிறந்த நாள் என்றைக்கோ அன்றைக்கு அதிகாலையிலேயே ரோஜாப்பூ மாலையும் கையுமாக சாந்தோமில் அவருடைய பங்களா வாசலில் போய் நிற்பார். இப்படிக் காரியங்களால் நாகசாமியைச் சரியாகக் குளிப்பாட்டி வைத்திருப்பவர் அவர். சுகுணனோ இது போன்ற செயல்களை அசிங்கமாகக் கருதுபவன். 'பாரதியார் பிறந்த தினத்தைப் போலவோ, விவேகானந்தர் காந்தியடிகள் பிறந்த தினங்களைப் போலவோ' நாகசாமியை போன்ற சோம்பேறிப் பணக்காரர்களின் பிறந்த தினத்தையும் கொண்டாடுவது அசிங்கம் என்பது அவன் கருத்து. பிறந்த தினத்தைக் கொண்டாடும் படியாக இந்தச் சுயநலவாதிகள் தேசத்துக்கு எதுவும் செய்வதில்லை என்று நினைப்பவன் அவன். இவர்கள் சுயநலத்துக்காகப் பணம் சேர்ப்பதும் செல்வாக்குச் சேர்ப்பதும் சந்ததிகளுக்குச் சொத்து மீதப் படுத்தி வைத்து விட்டுப் போவதும் தவிர இவர்கள் தேசத்துக்குச் செய்யும் தொண்டு ஒன்றுமில்லை என்றெண்ணி இவர்களை வெறுத்தான் அவன். பத்திரிகைத் தொழிலைப் பற்றி 'ஃபோர்த் எஸ்டேட்' என்றும் 'பேனா வீரனின் சத்திய யுத்தம்' என்னும் இலட்சியவாதிகளின் புத்தகங்களில் வாசித்தும், சொற்பொழிவுகளில் கேட்டும் இளமையிலேயே அதில் நாட்டம் கொண்டவன் அவன். அந்தத் தொழிலில் நுழைந்து பார்த்த பின்பு இப்போதோ தன்னம்பிக்கை இல்லாதவர்களும், இலக்கிய உணர்ச்சியே அற்றுப் போனவர்களும் அறிவின்மையினால் புத்தியிலே பேடிமைப் பட்டுப் போனவர்களுமாக சர்மாவைப் போல் பலர் அதில் நிறைந்திருப்பதைப் பார்த்து நொந்து போயிருந்தான் அவன். 'திலகரும், பாரதியாரும், சத்திய வேட்கையோடு பத்திரிகை நடத்திய தேசமா இது?' என்று அவனுக்கே சந்தேகமாயிருந்தது. எனினும் இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அவனுடைய நக்கீர தைரியம் பெருகியதே ஒழியச் சிறிதும் குறையவில்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு முக்கியமான தேவை நிறையச் சம்பளமோ, போக வரக் காரோ, டெலிபோன் பங்களா வசதிகளோ அல்ல; தன்னம்பிக்கைக்கு அழிவு வரும் போது இவற்றையெல்லாமே துச்சமாக மதித்துக் கொண்டு நிலைமையைத் 'தூ' என்று தள்ளி விட்டுக் கொள்கையோடும் சத்தியத்தோடும் நிமிர்ந்து விலகி நிற்கிற தைரியம் தான் வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்ந்திருந்தான் அவன். சந்தையில் மீன் கடை வைத்திருப்பவர்களுள் இருப்பதைப் போன்ற கீழ்த்தரமான பெருந்தன்மை கூட இங்கே இல்லையே என்று உள்ளூர வருந்தினான் அவன். துளசியும் டெல்லிக்குப் போய்விட்ட பிறகு அவன் தன் பாசத்தையோ அன்பையோ, கருணையையோ செலுத்துவதற்குத் தகுதியான மனிதர்கள் யாருமில்லை. துளசியிடம் குத்தலாகவோ ஆத்திரமாகவோ பேசினால் கூட அந்தப் பேச்சின் மறுபுறமாக அவன் மனத்தில் கருணையும் பிரியமும் நிரம்பியிருக்கும். இப்போதோ காரியாலய அநுபவங்களும், ரங்கபாஷ்யம் மறைமுகமாக அவனுக்குச் செய்த கெடுதல்களும் அவனை மிகவும் கடுமையாகவும் காலூன்றி நின்ற தீமையை எதிர்த்துப் போரிடும் சக்தியைப் பெற்ற கொள்கை மறவனாகவும் ஆக்கியிருந்தன. யார் எத்தனை உயரத்திலிருந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று அழுத்திச் சொல்லும் - அடித்துச் சொல்லும் நெஞ்சுரத்தையும், சொல்லுரத்தையும், கொள்கை மறங்களாக போற்றினான் அவன். இந்த மாறுதல்களாலும், இதே சமயத்தில் அவன் பூம்பொழிலில் எழுதியிருந்த ஒரு காரசாரமான தலையங்கத்தினாலும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டைச் சென்னையில் நடத்தி உழைக்கும் பத்திரிகையாளர் தலைவர்களாகிய கோஷ் முதலியவர்களை வரவழைத்துப் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளுக்கு எதிராகச் சில தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் - நாகசாமி அவனைத் தம் எதிரியாகக் கருதத் தொடங்குகிற சூழ்நிலை படிப்படியாக மிகச் சில வாரங்களிலேயே உருவாகிவிட்டது. அந்தச் சமயத்தில் முன்பு தேசிய இயக்க காலத்தில் பல முறை சிறை சென்றவரும் பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அதைத் தெருத் தெருவாகப் பாடிச் சென்றவருமாகிய மகாதேவன் என்ற அசல் தியாகி ஒருவர் தம்முடைய சிறிய முதலீட்டை வைத்து 'நேஷனல் டைம்ஸ்' - என்ற ஆங்கிலத் தேசிய வார இதழ் ஒன்றை சென்னையிலிருந்து தொடங்கியிருந்தார். பின்பு நாளடைவில் அது தினசரியாகியது. அந்தரங்க சுத்தியோடும் உண்மைத் தேசிய உணர்வுடனும் அவர் தொடங்கியிருந்த அந்தப் பத்திரிகைக்கு 'நியூஸ் பிரிண்ட்' காகிதம் போதுமான அளவு கிடைக்கவில்லை. காகிதத்தை வாங்கிப் பத்திரிகை அடிக்க அவரிடம் வசதியில்லை. இந்த நிலைமையை ஒரு நாள் சுகுணனிடம் சொல்லி வருந்தினார் தியாகி மகாதேவன். சுகுணனுக்கு இது வியப்பை அளித்தது. சினிமா நட்சத்திரங்களின் படங்களை அச்சிட்டுப் படிக்க ஒன்றுமில்லாமல் பார்க்க மட்டுமே பத்திரிகை நடத்துபவர்களுக்குக் கூட டன் டன்னாக நியூஸ் பிரிண்ட் வழங்கும் அரசாங்கம் தேசிய இலட்சியத்தை முன் வைத்துப் பத்திரிகை நடத்தும் ஒரு நல்லவருக்குச் சாதாரண வசதியைக் கூடத் தராததைக் கண்டு வருந்திய அவன் 'விற்கிற பிரதிகளுக்கு மேல் பல மடங்கு அதிகமாகப் பொய்க் கணக்குக் காட்டி நியூஸ் பிரிண்ட் காகிதத்தை மலிவில் ஏராளமாக வாங்கிப் பெரும்பகுதியான மீதத்தை மிக அதிகமான கள்ள விலைக்கு விற்கிற பலரை வாழவிட்டு இம்மாதிரி நல்லவர்களுக்கு அரசாங்கம் உதவாததைக் கண்டித்துப் பொதுவாக ஒரு தலையங்கம் பூம்பொழிலில் எழுதியதோடு அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் யூனியன் வெளியீடான 'தி வாய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்'டிலும், இது பற்றி ஒரு கண்டனக் கடிதம் வெளியிட ஏற்பாடு செய்திருந்தான். இதன் பலனாகக் குறைபாடு உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுத் தியாகி மகாதேவனுக்கு நியூஸ் பிரிண்ட் கிடைக்க வழி பிறந்தது. தாமே இரகசியமாகச் செய்து கொண்டிருக்கிற ஒரு காரியத்தைக் கண்டித்துத் தம் பத்திரிகையிலேயே தலையங்கம் வந்ததை நாகசாமி அவ்வளவாக இரசிக்கவில்லை. மேலும் நாகசாமியை ஒத்த பெரும் பத்திரிகை முதலாளிகளான பண முதலைகள் சிலரும் இந்தத் தலையங்கத்தைக் கண்டித்துக் கூறி நாகசாமியை நெருக்கினார்கள். நாகசாமி ஆத்திரமடைந்தார். உடனே 'மாருதி பப்ளிகேஷன்ஸ்' குரூப் வெளியீடான எந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் நிர்வாகத்தைக் கலந்து கொள்ளாமல் எதையும் எழுதலாகாதென்ற சுற்றறிக்கை நாகசாமியின் கையெழுத்திட்டு எல்லாருக்கும் வந்தது. கெடுபிடிகள் அதிகமாயின. 'வீக் எண்ட் எடிடோரியல் கான்ஃபரன்ஸ்' என்ற பேரில் வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் ஆசிரியர் குழுவின் கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதில் யாரையும் பேசவிடாமல் வாயடைத்து நாகசாமி கெடுபிடிகள் செய்தார். பத்திரிகைகளில் தலையங்கங்கள் எல்லாம் அவர் குரலாகவே வெளிவந்தன. எதைக் கேட்டாலும், "நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்கிறீர்கள்" என்று பதில் கூறப்பட்டது. சுகுணன் தானாக மனம் வெறுத்து அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் போலக் காரியங்கள் எல்லாம் நடந்தன. 'இல் ட்ரீட்மெண்ட்' என்னும் அவமரியாதைப் படுத்தல் மெல்ல மெல்ல வேண்டுமென்றேயும், தற்செயலாய் நடப்பது போலவும் செய்யப்பட்டது. ஒருநாள் காரியாலய உபயோகத்துக்காக இரண்டு ரைட்டிங் பேடும் - ஒரு கலர்ப் பென்சிலும் வேண்டுமென்று வழக்கம் போல ஒரு துண்டுத் தாளில் குறித்துக் கொடுத்து 'விளம்பர நிர்வாகி ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்' ஆகிய ரங்கபாஷ்யத்துக்கு அனுப்பினான் சுகுணன். ரங்கபாஷ்யம் அந்தத் துண்டுத் தாளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எடுத்துச் சென்ற சுகுணனின் ஊழியனிடம், "என்னப்பா இது? தினம் தினம் கலர்ப்பென்சிலும், நோட்புக்கும் கேட்கிறாங்க! இதென்ன ஆபீஸா, தர்ம சத்திரமா?... கலர்ப் பென்ஸிலையும் நோட்புக்கையும் வெளியிலே எங்கேயாவது கொண்டு போய் வியாபாரம் பண்றாங்களா என்ன? பெரிய நியூஸன்ஸா இல்ல போச்சு. சரி! சரி அப்புறம் இருந்தாப் பார்த்து அனுப்பறேன்னு போய்ச் சொல்லு..." என்று நாகரிகமில்லாமல் பேசினாராம். அன்றைக்குச் சாயங்காலமே ஏதோ காரியமாக அப்போது தயாராகிக் கொண்டிருந்த அடுத்த வாரத்துப் பூம்பொழிலின் 'மேக்அப் செய்த பாரம்' - ஒன்றை வாங்கி வருமாறு தன் ஆள் ஒருவனைச் சுகுணனிடம் அவன் அறைக்கு அனுப்பியிருந்தார் ரங்கபாஷ்யம். "ஃபாரம் கேட்கிறதுக்கு - இவர் யாருடா? கண்ட கண்ட மடையன்லாம் எடிடோரியலில் தலையிடற மட்டமான ஆபீஸாப் போச்சு இது! ஃபாரத்தை அவங்களே பார்த்துக்குவாங்களாம்னு போய்ச் சொல்லு..." - என்று மிக மிகக் கடுமையாக அந்த ஆளிடம் பதில் சொல்லி அனுப்பிவிட்டான் சுகுணன். வழக்கமாக இப்படிச் சந்தர்ப்பங்களில் தேடி வந்து, 'லெட் அஸ் ஃபர்கெட்" - (நாம் இதை மறந்துவிடுவோம்) சொல்லும் ரங்கபாஷ்யம் அன்று வரவே இல்லை. கலர் பென்ஸிலும், ரைட்டிங் பேடும் மட்டும் மறுநாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்த போது அவன் மேஜைமேல் தயாராகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகையில் அன்று அச்சாக வேண்டிய பகுதிக்குரிய விஷயங்களில் சினிமா விமர்சனமும் இருந்தது. சினிமா விமர்சனத்தை வழக்கமாக எழுதுகிறவர் இரண்டு வார லீவில் போயிருந்ததனால் சுகுணனே அந்த வார விமர்சனத்துக்குரிய படத்தைப் பார்ப்பதற்காகப் பகல் காட்சிக்குப் போய் வந்தான். பகல் காட்சி முடிந்து தியேட்டருக்கு அருகிலிருந்த சிற்றுண்டி விடுதியில் காப்பியையும் முடித்துக் கொண்டு அவன் காரியாலயத்துக்குத் திரும்பவும் வந்த போது மாலை 6 மணி ஆகியிருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வெளி வந்த ஆங்கிலப் படம் ஒன்றிலிருந்த உத்திகளையும், அதே சமயத்தில் சென்னையில் மாம்பலத்தில் ஒரு தியேட்டரில் பகல் காட்சியாக வந்த வங்காளிப் படம் ஒன்றின் கதையையும் திருடி அவற்றைத் தமிழில் எந்த அளவுக்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கெடுத்து இந்தப் படத்தை எடுத்துத் தமது சொந்தக் கற்பனை என்றும் டமாரமடித்துக் கொண்டிருந்தார் இதன் தயாரிப்பாளர். "தமிழில் இவ்வளவுதான் கெடுக்க முடியும் போலும்" - என்ற தலைப்புப் போட்டு அதற்கு ஒரு விமர்சனம் எழுதி ஃபோர்மெனிடம் கொடுத்துக் கம்போஸ் செய்ய சொல்லிவிட்டு மாலையில் அறைக்குப் புறப்பட்டு விட்டான் அவன். விமர்சனம் அவனுடைய கடுமையான தாக்குதல்களோடு அடுத்த வாரத்துப் பூம்பொழிலிலும் வெளிவந்து விட்டது. பத்திரிகை வெளியான தினத்தன்று காலை பதினொரு மணிக்கு அவன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் "சார் நீங்க வந்ததும் உடனே வீட்டுக்கு ஃபோன் பண்ணச் சொல்லி ஐயா சொல்லியிருக்கிறார்..." என்றாள் டெலிபோன் ஆப்ரேடர். அறைக்குள் போய் நாகசாமிக்கு டெலிபோன் செய்தான் சுகுணன். நாகசாமி பேசினார். குரல் மிகவும் கடுமையாயிருந்தது. "இந்த வாரம் சினிமா ரெவ்யூ எழுதியிருக்கிறது யாரு?..." "ஏன்? நான் தான் எழுதினேன் சார்..." "ஐ ஆம் வெரி ஸாரி மிஸ்டர் சுகுணன்! எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்கவே விட மாட்டேன். ஸி... வி ஆர்... ரன்னிங் எ பிஸினஸ். பிஸினஸ் பீப்பிளைப் பகைச்சுக்கறாப்பல எழுதிடறது சுலபம். ஆனால் பத்திரிகைக்கு அது எவ்வளவு கெடுதலை உண்டாக்கும்னு உங்களுக்குத் தெரியுமோ?" "எனக்கு நியாயம் என்று பட்டதைத்தான் எழுதினேன்." "இது நியாயமே இல்லை! இலட்ச இலட்சமாகச் செலவழிச்சுப் படம் எடுத்தவனுக்குப் பெரிய இன்ஜஸ்டிஸ்! வருஷத்துக்கு எழுபத்தையாயிர ரூபாய் அட்வர்டிஸ்மென்ட் இந்தப் 'பார்ட்டி'யிடமிருந்து மட்டும் நமக்கு வருகிறது என்பது உமக்குத் தெரியுமோ! இல்லையோ? வர வர உங்க போக்கு ஒண்ணும் சரியாப்படலை எனக்கு. சர்மாவும் ரங்கபாஷ்யமும் உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா. அதெல்லாம் நிஜம்னுதான் நான் இப்ப நினைக்க வேண்டியிருக்கு. வேறென்ன செய்யறது?" என்று கொதிப்போடு வினாவிவிட்டு அவன் பதிலையே எதிர் பாராதவராக டெலிபோனை 'டக்' என்று முகத்தில் அறைந்தாற் போல் வைத்து விட்டார் நாகசாமி. சுகுணன் எத்தனையோ விதமாகச் சிந்தித்துப் பார்த்தும் அந்தப் படம் குறையற்ற நல்ல படம் என்று விமர்சனம் எழுத வழியே இருப்பதாகத் தோன்றவில்லை. மனச்சாட்சியோடு தான் தன் கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவன் உணர்ந்தான். அதனால் நாகசாமியின் கோபத்துக்கு அவன் பயப்படவில்லை. அவருக்குக் கோபமூட்டித் தூண்டி விடுகிறவர்களைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஆனால் அன்றிலிருந்து காரியாலயத்தில் அவனுக்கு மறைமுக அவமரியாதைகள் அதிகமாயின. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்து அறைக்கு நுழைந்த போது டெலிபோன் இலாகா ஊழியர்கள் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்த போது, "இந்த லயனை எடுத்துடச் சொல்லி ஆர்டருங்க. இந்த ரூமுக்கு டெலிபோன் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க. ரங்கபாஷ்யம் சாருக்கு இன்னொரு டெலிபோன் இருக்கட்டும்னு இதை அவர் டேபிளுக்கு 'ஷிப்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க" என்று பதில் கிடைத்தது. கேட்க என்னவோ போலிருந்தாலும் சுகுணன் இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் எல்லாம் ஒரு பத்திரிகையாளனின் உள்ளே ஜ்வலித்துக் கொண்டிருக்கிற நெஞ்சக்கனல் அணைந்து விடுமென்று நாகசாமி நினைப்பது தான் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது அவனுக்கு. சௌகரியங்களை இழக்க வைத்து அவமானப்படுத்துவதன் மூலம் அதைச் செய்கிறவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே ஒழிய அந்தச் சௌகரியங்களை இழக்கும் தீரனை அவர்களால் தாழ்த்திவிட முடியாதென்று நம்பினான அவன். அவனுடைய அறையில் டெலிபோனை அகற்றிக் கொண்டிருத அதே வேளையில் பக்கத்து அறையில் சர்மா டிரான்ஸிஸ்டரை வைத்து உற்சாகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்தவர்கள் டெலிபோனை நீக்கி எடுத்துக் கொண்டு வருகிறவரை அவன் வெளியே நிற்க வேண்டியதாயிற்று. அவர்கள் போனதும அவன் அறைக்குள் போய் அமர்ந்தான். கம்போஸுக்குக் கொடுக்க வேண்டியவற்றை எடுத்துச் சரிபார்த்துத் திருத்திய பின் - அதை எடுத்துக் கொண்டு போவதற்காகப் ஃபோர்மனை அழைக்கலாமென்ற நினைவில் ஏதோ ஞாபகமறதியாக ஃபோன் இருந்த இடத்தை நாடிய கை ஏமாற்றத்தோடு மீண்டது. பைனைக் கூப்பிட்டுக் கொடுக்கலாமென்று - நீண்ட நாள் உபயோகிக்காமல் உள்ளே டிராயரில் கிடந்த மேஜை மணியை எடுத்து மேஜை மேல் டெலிபோனிருந்த இடத்தில் வைத்துத் தட்டினான். மணி ஓசைக்குப் பதில் இல்லை. எழுந்திருந்து வெளியே வந்து பையனைத் தேடியும் அவன் அகப்படவில்லை. சுகுணன் இவ்வாறு பையனைத் தேடிக் கொண்டு நின்ற போது சர்மா அடுத்த அறையிலிருந்து வெளிவந்து, "என்ன தேடறேள்? பையனை இங்கிருந்து சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டுக்கு மாத்திட்டதாகக் கேள்விப்பட்டேனே?" என்று குரலைத் தயங்கினாற் போல இழுத்துப் பேசினார். "நானாவது இந்த டிபார்ட்மெண்ட்லேதான் இருக்கேனா? இல்லையா? என்னையும் எங்கேயாவது எனக்குத் தெரியாமலேயே மாற்றியிருக்கப் போகிறார்கள்?" என்று சிரித்தபடியே சர்மாவிடம் கேட்டு விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டியவற்றை தானே கையிலெடுத்துக் கொண்டு ஃபோர்மெனைத் தேடி அச்சகத்தை நோக்கி நடந்தான் அவன். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு அவனைப் பார்த்ததும் ஏதோ தயக்கத்தோடு சிரிப்பது போலச் சிரித்தார். அவன் கையெழுத்துப் பிரதிகளை அவரிடம் நீட்டிய போது, "ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க சார்! உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என்று சைகை காண்பித்து யாரும் இல்லாத ஒரு மூலைக்குச் சுகுணனை அழைத்தார் நாயுடு. சுகுணன் நாயுடுவைப் பின் தொடர்ந்தான். "சார் என்னைத் தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க எந்த 'மேனுஸ்கிரிப்ட்' கொடுத்தாலும் நான் கம்போஸுக்கு வாங்கப் படாதாம். கொடுக்கிற மேனுஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்துச் சர்மா சாரும் ரங்கபாஷ்யம் சாரும் 'அப்ரூவ்' பண்ணிக் கையெழுத்துப் போட்டிருந்தால் தான் நான் அதைக் கம்போஸுக்கு எடுத்துக்கணுமாம். இதை ஐயாவே ஃபோன்லே எங்கிட்டச் சொன்னாரு" என்று நாயுடு கூறிய போது சுகுணனின் மனம் கொதித்தது. சமூகத்தின் முதல் 'நெற்றிக் கண்' தனக்கு மிக அருகிலிருந்தே தன்னை வெதுப்பத் திறந்திருப்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அதில் வெதும்பி விழுந்துவிட அவன் ஒருகாலும் தாயாராயில்லை. 'நெற்றிக் கண்ணை நெருப்பாகத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று உரத்துக் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து நடக்கத் தயாராயிருந்தான் அவன். "என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க சார்! என் மேலே ஒண்ணும் தப்பில்லை. நான் குழந்தை குட்டிக்காரன்" என்று குழைந்தார் நாயுடு. ரங்கபாஷ்யத்தையும், சர்மாவையும் போல் எல்லாக் கெடுதல்களையும் மறைவாக உடனிருந்தே செய்து கொண்டு நேரிலும் சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர்களை விடக் காதில் கேட்டதை அப்படியே சொல்லி மன்னிப்புக் கேட்கும் ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு நாகரிகமான மனிதராகத் தோன்றினார் சுகுணனுக்கு. அச்சகத்திலிருந்து நேரே அலுவலகத்திலிருந்த தன் அறைக்குத் திரும்பிய சுகுணன் அங்கு ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியையும் பகலிலேயே எரிகிற விளக்கையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்த நடையோடு வெளியே புறப்பட்டான். |