9
"நம் மனத்தை நாம் எப்போது அதிகமாகப் பிறருக்கு ஒளித்து விட முயல்கிறோமோ அப்போதுதான் அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது" சுகுணன் அந்தக் காரியாலயத்திலிருந்து ஒரு திடமான முடிவுக்கு வந்தவனாக எழுந்திருந்து வெளியேறும் போது கை இடறி மேஜை மேலிருந்து டேபிள் மணி கீழே விழுந்து உடைந்தது. அதை மறுபடி எடுத்து வைக்கக் குனிந்தவன் - அது நன்றாகவே உடைந்து அந்த உடைதலின் காரணமாகச் செவி பொறுக்க முடியாத கட்டை ஓசையில் அது ஒலித்ததைக் கேட்டு - அந்த அபஸ்வரத்தைப் பொறுக்க முடியாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் புறப்பட்டிருந்தான் சுகுணன். வழக்கமாக இப்படிப்பட்ட நாட்களில் குழந்தையையும் கிள்ளி விட்டு விட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறவர் போல் - சர்மாவும் உடன் வந்து அநுதாபமாகப் பேசும் பாவனையில் அவன் வாயைக் கிளறுவது உண்டு. அவருடைய காலை மலர் - தினசரிக்கு வெளியூர் எடிஷன் 'பேஜ் க்ளோஸிங்' (தினசரிப் பத்திரிகையில் செய்திகளை ஒழுங்குப்படுத்திப் பிரசுரத்துக்குரியவற்றை முடிவாக நிர்ணயிக்கும் ஒரு நேரம்) ஐந்து மணிக்கு. சுகுணனோ மூன்று மூன்றரை மணிக்கே புறப்பட்டு விட்டான். நாயருடைய 'மெட்ரோபாலிடன் டைம்ஸ்' மூன்றரைக்கே தயாராகிவிடும். அது மாலைத் தினசரியாகையால் மூன்று மணிக்கே 'பேஜ் க்ளோஸிங்' எல்லாம் முடிந்து விடும். அதனால் அவன் புறப்படும் போது உடன் புறப்பட்ட நாயர் காரியாலயத்தில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அநுபவங்கள் பற்றி அரைகுறையாகக் காதில் விழுந்ததாகவும் அவற்றிற்காகத் தாம் வருந்துவதாகவும் சுருக்கமாகக் கூறினார். காரியாலய முகப்பிலிருந்து 'கார் பார்க்கிங்' வரைதான் அவனோடு கூட நடந்து வந்தார் நாயர். அப்புறம் அவனையும் காரிலேயே திருவல்லிக்கேணி வரை கொண்டு போய் 'டிராப்' செய்து விட்டுப் போவதாக அவர் கூறியதை அவன் ஏற்கவில்லை. அவருடைய உதவிக்கு நன்றி கூறிவிட்டு நடந்தான் அவன். அப்போது அவனுடைய மனத்தில் பல்லாயிரம் உனர்வுகள் குமுறிக் கொண்டிருந்தன. 'கிரியேடிவ் ரைட்டராக' - அதாவது படைப்பிலக்கிய ஆசிரியனாக இருக்கிற ஓர் 'ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்டின்' வாழ்வில் இப்படி எல்லாம் ஏற்படுவது இயல்பு தான் என்று தோன்றியது அவனுக்கு. நாகசாமி ஏதாவது கூட்டத்தில் உளறினால் கூட அதை முதல் பக்கத்தில் எட்டுக்காலத் தலைப்புப் போட்டு வெளியிடுவதன் மூலம் அவருடைய தயவைச் சம்பாதித்துவிடும் காலை மலர் சர்மாவைப் போலவோ, 'பிஸினஸ் லைக்' ஆகக் காலந்தள்ளும் 'டைம்ஸ்' நாயரைப் போலவோ தன்னால் காலந்தள்ள முடியாதது சரி என்றே அவன் சிந்தனை சென்றது. அவர்கள் பத்திரிகையில் வெளியிட வேண்டியவற்றை டெலிபிரிண்டரும் நிருபர்களும் தந்திகளும் மொழி பெயர்ப்புக்களுமே அவர்களுக்குத் தந்து விடுகின்றனர். நானோ எல்லாவற்றையுமே சிந்தித்துச் செய்ய வேண்டியிருக்கிறது. கருவிகளிலிருந்து முடிவை எதிர்பார்க்கிறவனுக்கும் மூளையிலிருந்து முடிவு செய்ய வேண்டியவனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை இப்போது அவன் தெளிவாக உணர்ந்தான். புறப்படும்போது கீழே விழுந்து உடைந்த மேஜை மணியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அந்த மணியின் நாதக்கட்டு அதை உடைத்ததும் எப்படிச் சீர்குலைந்து போய்விட்டதோ அப்படியே இந்தப் பத்திரிகைக் காரியாலய உறவும் இனிச் சீர்குலைந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. தன்மானத்தை மதிக்கத் தெரியாதவர்களை அவன் மதிக்க விரும்பவில்லை. 'பத்திரிகைத் தொழில் விளக்குச் சுடரைப் போன்றது. எட்ட இருந்து அதைப் பார்க்கிற வரை ஒளிமயமாகவும், கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றும். அருகே நெருங்கினால் சுடும். அந்தச் சுடரிலேயே கலந்து விட்டாலோ விட்டிலைப் போல கருகி விழ வேண்டியது தான்' என்று காலை மலர் சர்மா - அடிக்கடி ஓர் ஆஷாடபூதித் தத்துவத்தைச் சொல்லுவார். பத்திரிகைத் தொழிலுக்குப் புதிதாக எந்த இளைஞர்கள் வருவதும் சர்மாவுக்குப் பிடிக்காததாகையினால் அவர் எப்போதும் இப்படியே கூறுவது வழக்கம். "நீங்கள் இந்தத் தொழிலிலேயே பழந்தின்று கொட்டை போட்டு வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டே இப்படி மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வெட்கமாயில்லையா உக்ன்களுக்கு?" என்று சிரித்தபடியே அவர் மனத்தில் தைக்கும்படி அவரை அப்போதெல்லாம் எதிர்த்துக் கேட்டிருக்கிறான் சுகுணன். அதற்கு மறுமொழி கூறாமல் மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தபடி சர்மா விஷமச் சிரிப்புச் சிரிப்பார். 'என்னைப் போல் இப்படி இருந்தால் பத்திரிகைத் தொழிலில் வெற்றி பெறலாம் தான்' என்று அவர் குறிப்பாகப் பதில் கூறுவது போன்ற மௌனமாக அதைச் சுகுணன் புரிந்து கொள்வதுண்டு. 'எண்ணத்திற் பிறக்கும் எரியே சக்தி' என்று பாரதி கூறியிருப்பது போல், மனத்திற்குள் சூடு சுரணை உள்ளவர்கள் சர்மாவைப் போல் வாழ முடியாதென்பதையும் அவன் உணர்ந்தான். தன்மானத்தை இழந்து கொண்டு உடலும் மனமும் கருகி வாழ்வதை விடத் தன் மானத்தோடு மனம் கருக விடாமல் தப்புவது நல்லதென்று தோன்றியது அவனுக்கு. மனமும் மானமும் கருகித்தான் சர்மாவைப் போன்றவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ரங்கபாஷ்யம், சர்மா போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஈனச் செயல்களைச் செய்வதை அவன் அறிவான். நாகசாமி, ரங்கபாஷ்யம், காலை மலர் சர்மா ஆகியவர்கள் திடீர் திடீரென்று சந்திர கலசாபிஷேகம், ஸுப்ரபாத தரிசனம், புரட்டாசி சனிக்கிழமை என்று தங்களுக்கு வேண்டிய வேறு பத்திரிகை முதலாளிகள் சிலருடனும், விளம்பர ஏஜென்ஸி நிர்வாகிகளுடனும், நாலைந்து பெரிய பெரிய கார்களில் திருப்பதிக்குப் புறப்பட்டு போவார்கள். சென்னையிலுள்ள பணக்காரர்களுக்குத் திருப்பதி போவதென்பது 'வீக் எண்ட் ரெக்ரியேஷன்' மாதிரி என்று எண்ணியிருந்தான் சுகுணன் - நல்லெண்ணமும் கருணையுமில்லாமல் மனம் கருகிப் போனவர்கள் தெய்வ பக்தியுள்ளவர்களாக நடிக்க முயல்வது ஏன் என்பதை மட்டும் அவனால் விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. 'தீபாவளி மலர்' போட்டால் கூட முதல் பிரதியை வெங்கடாசலபதி பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டுமென்று எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்கள் - அந்த மலரை உழைத்துப் பாடுபட்டு மலரச் செய்த உதவியாசிரியனுக்கோ அச்சுத் தொழிலாளிக்கோ நாலணா அதிகம் தர மறுக்கும் அளவு கொடியவர்களாயிருக்கிறார்களே என்று சிந்தித்தால் இத்தனை பக்தியும் இத்தனை கொடுமையும் ஒரே மனத்தில் சேர்ந்து இருக்க முடியுமா என்பது தான் அவன் சந்தேகம். ஒன்று பக்தி பொய்யாயிருக்க வேண்டும் அல்லது மற்றொன்று பொய்யாயிருக்க வேண்டும். மற்றொன்று பொய்யில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பின்போ பக்திதான் பொய்யாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு சமயம் காரியாலயக் கார் டிரைவர் ஒருவன் மூலம் சுகுணனுக்கு இந்தத் திருப்பதி மர்மம் விளங்கியது. அந்தக் கார் டிரைவர் சுகுணனின் எழுத்துக்களினாலே கவரப்பட்டு அவனிடம் பேரன்பு வைத்திருந்தான்.
"இது வேறே சங்கதிங்க! பக்திக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. 'பெங்களூர் போகிறோம்' - 'திருவனந்தபுரம் போகிறோம்'னு புறப்பட்டா - இவங்க 'அங்கே எதுக்காகப் போறாங்க'ன்னு கேட்கிறவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 'திருப்பதி போறோம்'னு சொன்னா அப்பிடிச் சந்தேகம் எதுவுமே வராதுங்க. அந்தப் புனிதப் பேருக்கு அப்பிடி ஒரு சக்தி ஏற்பட்டுப் போயிடிச்சு. அந்தப் பேரைப் போர்வையாய்ப் போர்த்திக்கிட்டுப் போயி - எங்க போனாலும் இவங்க வழக்கமாப் பண்ணக்கூடிய அட்டூழியங்களைப் பண்ணிட்டு வர்ரத்துக்கு வசதியாயிருக்குங்க. கம்பெனிகளின் விளம்பர நிர்வாகிகளை - அவர்கள் தங்கள் பத்திரிகைக்கே நிறைய விளம்பரங்களைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகத் 'தண்ணீர்' - தெளிச்சுப் போக போக்கியங்களில் குளிப்பாட்டிக் கொண்டேயிருப்பார் நாகசாமி. அந்த விளம்பர நிர்வாகிகளையும், தனக்குப் பயன்படக் கூடிய மத்தவங்களையும் திருப்பதி மாதிரிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு அழைத்துப் போய் அவங்களோடு இரண்டு மூன்று நாட்கள் குளிக்காமல், பல் தேய்க்காமல் உட்கார்ந்து சீட்டாடுவதும், குடிப்பதும் வேறு கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுமாக எல்லாம் நடக்குமுங்க. உங்களுக்குத்தான் தெரியுமே, நம்ப நாகசாமி ஐயாவுக்குப் 'பெங்களூர் ரெப்ரஸன்டிவ்'னு ஒருத்தன் இருக்கானே! நாங்க இங்கிருந்து கார்லே, திருப்பதிக்குப் புறப்படற இதே சமயத்திலே அந்தப் பெங்களூர் ஆளும் அங்கிருந்து ரெண்டு காரிலே திருப்பதிக்குப் புறப்படுவான். ஒரு கார்லே இவங்களுக்கு வேண்டிய 'பாட்டில்கள்'லாம் இருக்கும். இன்னொரு கார்லே. யாரு இருப்பாங்கன்னு நீங்களே தெரிஞ்சிக்கலாமுங்க. யாரோ 'ஒமர் கயாம்'னு ஒரு கவி பாடியிருக்கானுங்களாமுல்ல. 'மதுவும் மங்கையும்'னு அந்தக் கதை தான்! புனித க்ஷேத்திரத்தின் புனிதம் கூட இப்பிடி ஆளுங்க போறதுனாலே குட்டிச்சுவராப் போயிடுமுங்க. இவங்க போற இடம் திருப்பதியாயிருக்கிறதுனாலே இப்படியெல்லாங்கூட நடக்குமுன்னு யாருமே நினைக்க முடியாதுங்க. அட! இதுதான் போகட்டுங்கள். டெல்லிலேருக்காரே மெட்டல் அண்ட் அயர்ன் கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜர் குப்புசாமி - அந்தக் குப்புசாமியோட மைத்துனி பிரசவத்துக்காக இங்கே மெட்ராஸ் வரான்னா - உடனே ஏர்போர்ட்டுக்கோ - சென்ட்ரல் ஸ்டேஷனுக்கோ - நாகசாமி கார் அனுப்புறாரு. மத்தவங்களுக்கு வசதி பண்ணிக் கொடுத்து இங்கே வசதியை அடையுறாங்கங்கறதுதான் சரிங்க..." - என்று அந்தக் கார் டிரைவர் ஒரு முறை சுகுணனிடம் மனம் திறந்து பேசிய போது கூறியிருந்தான். நாகசாமி, சர்மா, ரங்கபாஷ்யம் ஆகியவர்களைப் பற்றி நினைத்த போது இந்த வேளையிலும் அந்த ஞாபகங்களெல்லாம் அவன் மனத்தில் எழுந்தன.
சுகுணனின் மனத்தோடு இரண்டறக் கலந்து உறைந்து போயிருந்த தன்மானத்துக்கும் சுய மரியாதைக்கும் காரணம் காலஞ்சென்ற அவன் தந்தை அவனை வளர்த்திருந்த சூழ்நிலை தான். அவனுக்கு ஆறு வயதும், சகோதரிக்கு இரண்டு வயதும் நடந்து கொண்டிருந்த போது அதிகம் நினைவு தெரியாத பருவத்திலேயே தாயை இழந்து பின் தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவனும் அவன் தங்கையும் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை கோவையில் கழித்தார்கள். அப்போது அவர்கள் தந்தை கோயம்புத்தூர் கிழக்குப் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். நாணயத்தையும், ஒழுக்கத்தையும், சுயமரியாதையையும் போற்றுவதில் நெருப்பாயிருந்தவர் அவன் தந்தை. சுகுணனின் தாய் இறந்த பிறகு அவர் இரண்டாவது மணத்தைப் பற்றி நினைக்கவும் இல்லை. தேச சுதந்திரப் போராட்டம் உச்ச நிலையிலிருந்த சமயத்தில் மகாத்மாவின் கொள்கைகள் மேல் ஏற்பட்ட அபிமானத்தாலும் - அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிந்து உத்தியோகம் பார்க்க விரும்பாததாலும் வேலையை உதறி தள்ளிவிட்ட பெருமையும் அவருக்கு இருந்தது. குழந்தைகளையும் அதே நாணயத்தோடும், சுயமரியாதையோடும், கட்டுப்பாட்டோடும் வளர்த்திருந்தார் அவர். கூலி போல் கிடைக்கும் சம்பளத்துக்காகச் சொந்த தேசத்தின் சொந்த சகோதரர்கள் போன்ற தேச பக்தர்களைத் தம் கைகளாலேயே அடித்து நொறுக்க நேர்வதை விரும்பாமல் தான் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறியிருந்தார் அவர். அந்த வேலையை உதறிய பின் சுகுணனையும் அவன் தங்கையையும் கல்லூரிக் கல்வி வரை படிக்கச் செய்து ஆளாக்குவதற்காகப் பூர்வீகச் சொத்து முழுவதையும் அவர் பணயம் வைக்க வேண்டியிருந்தது. அதுவும் போதாமல் - குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்குவதற்காகக் குமாஸ்தா வேலையிலிருந்து டைப்பிஸ்ட் வேலைவரை கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்தும் பொருள் ஈட்டியாக வேண்டிய சிரமமும் அவருடைய முதுமைக் காலம் வரை அவருக்கு இருந்தது. ஆனாலும் அந்தச் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகளை அதிகத் துன்பம் தெரியாமல் வளர்த்தார் அவர். கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளனாகத் தமிழுலகுக்கு அறிமுகமாகிவிட்ட சுகுணன் படிப்பு முடிந்ததும் சட்டக்கல்லூரியில் சேர வேண்டுமென்று தந்தை விரும்பினார். சுகுணனோ நாகசாமியை நம்பி அவருடைய ஆசை வார்த்தைகளுக்குப் பின்னாலிருந்த போலித் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பத்திரிகைத் தொழிலில் புகுந்தான். அவனுடைய சகோதரி ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்து தேறிக் கோவைக்கு அருகிலிருந்த சிற்றூர் ஒன்றிலுள்ள பெண்கள் பள்ளியில் ஆசிரியையானாள். மகனும், மகளும் உத்தியோகத்துக்குப் போய்ப் போட்டி போட்டுக் கொண்டு தந்தைக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அவரைக் கொண்டாடும் ஆசையோடிருக்கையில் அந்த இனிய அநுபவங்களை அடையக் கொடுத்து வைக்காமல் 'என் கடமை முடிந்தது. நான் போய் வருகிறேன்' என்பது போல் போய்விட்டார் அவர். வீட்டுக்கு மருமகனும் மருமகளும் வந்து பார்க்கவேண்டுமென்ற அவருடைய சொந்த ஆசை கூட நிறைவேறுவதற்குள் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு விட்டான். சுகுணனுக்குள் நிறைந்து கிடந்த தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் காரணம், அவன் தந்தை அவனை வளர்த்து ஆளாக்கிய முறைதான். இதைச் சுகுணனே தனக்குள் அந்தரங்கமாக நினைவு கூர்வதுண்டு. அவனுடைய தங்கையும், தைரியத்திலும் நம்பிக்கையிலும் தேறியிருந்தாள். அவளுக்கு மணமாகவில்லை. எந்தப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவள் ஆசிரியையாயிருந்தாளோ அதே பள்ளியைச் சேர்ந்த விடுதிக்கு வார்டனாகவும் இருந்து அங்கேயே வசித்து வந்தாள் அவள். ஓய்வு ஒழிவில்லாத பத்திரிகைக் காரியாலயப் பொறுப்புக்களால் சுகுணன் சகோதரியைச் சந்திக்க அவளுடைய கிராமத்துக்குப் போய்வர முடியாமலிருந்தது. அவன் அவளைப் பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகியிருக்கும். போன வருடம் தன்னிடம் படிக்கிற பெண் குழந்தைகளை 'எக்ஸ்கர்ஷன்' அழைத்துக் கொண்டு அவள் சென்னைக்கு வந்திருந்தாள். அப்போது அவளாக வந்து சுகுணனைச் சந்தித்திருந்தாள். அதன் பின் அவள் வேலை பார்த்து வந்த கிராமத்துக்கு ஒருமுறை போய் வர வேண்டும் என்றும் அவன் பலமுறை திட்டமிட்டும் அப்படிப் போய்வர முடியாமல் தட்டிக் கொண்டே இருந்தது. தங்கையைப் பார்த்துவர ஆவலிருந்தும் அவகாசமில்லாதிருந்தது. இப்போது பூம்பொழில் காரியாலய வேலையை விட்டு விடலாமென்ற தீர்மானத்துக்கு வந்ததும் - விட்டு விடுதலையாகிச் சிட்டுக் குருவியைப் போல் - வெளியேறலாமென்ற அந்த மனநிலையில் - உடனே தங்கையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. இன்றிரவு அல்லது நாளைக் காலையில் ஓய்வாக உட்கார்ந்து நாகசாமிக்கு ஒரு கடிதம் எழுதி அதோடு தன் இராஜினாமாவையும் அனுப்பி விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். காரியாலயத்திலிருந்து வெளியேறி மெயின் ரோடுக்கு வந்து 'பஸ்' பிடித்துத் திருவல்லிக்கேணியில் அறைக்கு வந்து சேருகிற வரை - இப்படிப் பல நினைவுகள் ஓடின. அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்த போது அந்தப் பாலக்காட்டுப் பெண் கமலம் அங்கே அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். "ஊரிலிருந்து கொஞ்சம் பணம் மணியார்டர் வந்தது. உங்களுக்கு நான் தரவேண்டிய இருநூறு ரூபாயில் நூறு இப்போது கொடுத்து விடுகிறேன் அண்ணா" - என்று சிரித்துக் கொண்டே ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்தாள் கமலம். அப்போதிருந்த மனநிலையில் அந்தப் பெண் 'அண்ணா' என்று கனிவாக அழைத்த பாசமும் உறவும் அவனுக்கு மிகவும் இதமாயிருந்தது. அநுபவங்களால் ஏற்படும் கசப்புகள் உறவுகளால் ஏற்படும் உரிமைகளால் மாறுவதும் வாழ்விலுள்ள ஒரு நன்மையாகத் தோன்றியது. சில நாட்களுக்கு முன் காரியாலயத்துக்கு தேடி வந்து அவள் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு போனதைத் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவே அவன் மறந்திருந்தான். இவ்வளவு விரைவில் அந்த மாணவி தன்னிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வருவாள் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய மனத்தின் உள் வேதனைகளை மறைத்துக் கொண்டு அவளிடம் பேசலானான் அவன். ஆயினும் எப்படியோ அந்தப் பெண் அவனுடைய முகத்திலிருந்தே அதைக் கண்டுபிடித்து விட்டாள் போலிருக்கிறது. "ஏன் அண்ணா? என்னவோ போலிருக்கிறீர்கள். உடம்புக்குச் சௌகரியமில்லையா?" என்றே அவனைக் கேட்டு விட்டாள் அவள். 'நம் மனத்தை எப்போது நாம் அதிகமாக ஒளிக்க முயலுகிறோமோ அப்போது தான் அது மற்றவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது' என்று தோன்றியது சுகுணனுக்கு. "அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலை அதிகம். அலைச்சலும் கொஞ்சம் அதிகம்" என்று சுகுணன் அவளுக்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டான். கண்ணப்பா லாட்ஜ் பையனிடம் சொல்லி காபி வரவழைத்துக் கமலத்துக்குக் கொடுத்தான் அவன். "இங்கே மட்டும் ஸ்டவ்வும் பாத்திரமும் மற்ற வசதிகளும் இருந்ததோ நானே ஒரு நொடியில் உங்களுக்கு அருமையான காபி தயார் செய்து கொடுத்து விடுவேன் அண்ணா" என்றாள் கமலம். சமூகத்தின் எந்த மூலையிலிருந்தாவது உண்மையை எதிர்த்து உக்கிரமாகத் திறக்கும் நெற்றிக் கண்ணின் வெப்ப மிகுதியை இப்படி ஒரு சிறிய கருணையும் பாசமும் கூடக் குளிர்க்க முடியுமென்று அவன் எதிர்பார்த்திருந்தது கிடையாது. கமலம் அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் ஒரு வாரங் கழித்து மறுபடி வந்து பார்ப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். "இங்கே அறையிலேயே வந்து பாருங்கள்! பூம்பொழில் காரியாலயத்தில் வேண்டாம்" - என்று பொதுவாக அவளிடம் கூறி அனுப்பினான் அவன். கமலம் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்ற போது மாலை ஐந்தரை மணிக்கு மேலாகியிருந்தது. திருவல்லிக்கேணி பெரிய தெரு என்ற குறுகலான தெருவிலே ஜனவெள்ளம் அலை அலையாகப் பெருகத் தொடங்கிவிட்டது. தெரு முனைகளில் பிளாட்பாரத்தில் மல்லிகையும் சாதிப்பூவுமாகப் பூக்கூடைகளும் கடைகளும் பழைய புத்தகம் பத்திரிகைப் பரபரப்புகளும் முளைத்துவிட்டன. மாலை வேளை என்கிற நகர உற்சவம் ஆரம்பமாகி விட்டது. மனத்தில் சுமையும், சிந்தனைகளும், கனத்துவிட்ட அந்த விநாடியில் இத்தனை லட்சம் மக்கள் நிரம்பிய இந்தச் சென்னையில் - இந்த மனச் சுமையையும் கனத்தையும் - கேட்டுத் தோள் மாற்றிக் கொள்ள முடிந்த ஓர் உண்மை நண்பனை உடனே பார்க்க வேண்டும் போல் தவிப்பாயிருந்தது சுகுணனுக்கு. பாலைவனத்தில் தண்ணீர்த் தாகம் எடுப்பது போல் இப்படிச் சமயத்தில் நல்ல மனிதனைத் தேடிச் சந்திக்க வேண்டுமென்ற தாகமும் ஏற்பட்டு விடுகிறது. மனத்தோடு கலக்க முடிந்தவராக - அந்த மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள முடிந்தவராக யாரையேனும் உடனே அந்தக் கணமே பறந்து போய்ப் பார்த்து விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு. துளசியின் நினைவு ஒரு கணம் எழுந்து உள்ளேயே கோபமாக மாறி அடங்கி விட்டது. ஒரு காலத்தில் அவள் தான் அவனுடைய மனத்தின் சுமைகளைத் தோள் மாற்றிக் கொண்டாள். அந்த உண்மையில் இனிமையும் அநுராகமும் கூட இருந்தன. இப்போது அவை இல்லை. அந்த இடத்தில் விரக்தியும் கோபமும் மீதமிருந்தன. இப்போது துளசியைப் போல் மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள அவனுக்கு யாருமில்லை. ஆனால் ஓர் உண்மை நண்பனை எண்ணித் தேடியது அவன் மனம். ஏதோ நினைத்துக் கொண்டே வந்த போது கொள்கைகளிலும், சிந்தனைகளிலும், தன்னோடு கருத்தொற்றுமையும் நட்பும் உள்ளவரான 'நேஷனல் டைம்ஸ்' மகாதேவனை எண்ணினான் சுகுணன். அவருடைய 'நேஷனல் டைம்ஸ்' காலை பதிப்பாக வெளியாகும் ஆங்கிலத் தினசரியாகையினால் இரவு பத்து மணி வரை காரியாலயத்தில் இருப்பார் அவர். நேஷனல் டைம்ஸ் காரியாலயம் தம்பு செட்டித் தெருவில் ஒரு பழைய கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்தது. அதே கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் அச்சகமும் இருந்தது. 'கண்ணப்பா லாட்ஜ்' பையனைக் கூப்பிட்டு ஃபோனிலிருந்த பூட்டைத் திறக்கச் சொல்லி ஃபோன் பேசும் கட்டணமாக அவனிடம் சில்லறையையும் எண்ணிக் கொடுத்த பின் நேஷனல் டைம்ஸுக்கு ஃபோன் செய்தான் சுகுணன். மகாதேவன் காரியாலயத்தில் இருந்தார். உடனே அவனையும் வரச்சொல்லி அன்போடு அழைத்தார். குளித்து உடைமாற்றிக் கொண்டு புறப்படும் போதே இரவுச் சாப்பாட்டுக்கு மெஸ்ஸுக்கு வருவதாக உத்தேசமில்லை அவனுக்கு. தம்புச் செட்டித் தெருவிலேயே மகாதேவனையும் அழைத்துக் கொண்டு போய் எங்காவது சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தான். மகாதேவனிடம் மனம் விட்டுப் பேசினால் நினைவுச் சுமை தோள் மாறும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. மகாதேவன் வெறும் பத்திரிகையாளர் மட்டுமில்லை. சுதந்திரமான பத்திரிகையாளனின் இலட்சியத்துக்கு அவரே ஒரு பதினைந்து வருட கால இயக்கமாகத் திகழந்து வந்தார். அவருடைய பத்திரிகைக்குச் சந்தா கட்டிய விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிலாளர்களும் ஒரு மூட்டை சோளமாகவும், ஒரு பேல் கைத்தறித் துணிகளாகவும், சில மணங்கு பருத்திகளாகவும், வெல்லமாகவும் கூடக் கட்டியிருந்தார்கள். ஆங்கிலத் தினசரியானாலும் அவருடைய சுயமரியாதையையும், தன்மானத்தையும் கௌரவிப்பதற்காக அந்தப் பத்திரிகையைச் சிலர் பிடிவாதமாக வாங்கினார்கள். தாய்மொழி மட்டுமே அறிந்தவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் அந்தத் தினசரியை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லி மொழி பெயர்த்துக் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான தினப்பத்திரிகைகளில் அப்போது உதவியாசிரியர்களாயிருந்த பலர் ஒரு காலத்தில் மகாதேவனிடம் உதவியாசிரியர்களாயிருந்து தொழில் பழகியவர்கள். அவர்களெல்லாம் உத்தியோகத்துக்கு விட்டுக் கொடுத்து பணவசதியினால் பெரியவர்களாகியும் அவர் மட்டும் வசதிகளை விட்டுக் கொடுத்துத் தன்னம்பிக்கையைப் போற்றுவதற்காக 'நேஷனல் டைம்ஸ்' - என்ற இலட்சிய இயக்கத்தில் தானே முழுமையாக இறங்கியிருந்தார். சுகுணன் அவருடைய காரியாலயத்துக்குப் போய்ச் சேர்ந்த போது டெலிபிரிண்டரில் வந்திருந்த தந்தி ஒன்றைத் தயாரித்துத் தலைப்புக் கொடுத்து உள்ளூர்ப் பதிப்புக்காகச் செய்தியாக்கிக் கொண்டிருந்தார் அவர். அந்தக் காரியத்தில் சிறிது நேரம் அவருக்கு உதவி செய்தான் சுகுணன். பின்பு பொதுவாக இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சினிடையே, "பூம்பொழிலை விட்டு நான் விலகிவிடப் போகிறேன் சார்" என்று சுகுணன் அவரிடம் கூற நேர்ந்தது. அவர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு வினவினார். "ஏன்? என்ன காரணம்?" "காரணம் ஒன்றில்லை. எத்தனையோ இருக்கிறது. எதைக் கேட்டாலும், 'நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்ய வேண்டும்' - என்று புத்தியைச் சம்பளத்துக்கு அடகு பிடிப்பது போன்ற தொனியில் பேசுகிறார் நாகசாமி. 'ரீடிங் மேட்டருக்கு' (படிக்கிற விஷயங்கள்) நடுவில் விளம்பரங்கள் போட வேண்டும் என்பதற்குப் பதில் - 'விளம்பரங்களுக்கு நல்ல இடம் போக மீதி உள்ள பக்கங்களில் எதையாவது போட்டுக் கொண்டு தொலையுங்கள்' - என்பது போல் பேசுகிறார்கள். அதைப் பற்றி விவாதித்தால் 'கதை கட்டுரை முதலிய 'ரீடிங் மேட்டர்களுக்கு' நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள்' - என்று குதர்க்கம் செய்கிறார்கள்." "தெருச்சுவராயிருந்தால் முழுக்க முழுக்க விளம்பரமே ஒட்டி விடலாம். பத்திரிகையாச்சே? நடுநடுவே படிக்கவும் ஏதாவது இருந்தாலல்லவா தெருச்சுவருக்குப் பத்திரிகைக்கும் கவுரமான கண்ணியமான வித்தியாசம் ஒன்று இருக்க முடியும்?" "நீங்கள் சொல்வது தான் சரி என்று எனக்குப் படுகிறது சார்! ஆனால் அவர்கள் அப்படி ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லையே? சுவரில் ஒட்டுகிற விளம்பரங்களை அப்படி ஒட்டாமல் 'பின்' அடித்துப் புத்தகமாகப் பைண்டு செய்தால் போதுமென்று நினைக்கிறார்களே?" "அப்படியானால் சிரமம் தான்! குடிசைத் தொழில் போல் குத்து விளக்குப் போல் - பத்திரிகையாளர்களாகிய உங்கள் மனத்திலும் என் மனத்திலும் சுடர் விடுகிறதே ஒரு - மூல அக்கினி - அந்த அக்கினிதான் - இந்தத் தொழிலின் பத்தினித் தன்மையை வியாபாரிகளிடமிருந்து என்றும் தனியே பிரித்துக் காக்க முடியும் சுகுணன்!" மகாதேவனிடம் காரியாலய நிகழ்ச்சிகளை எல்லாம் மனம் திறந்து கூறினான் சுகுணன். எல்லாவற்றையும் ஆதரவாகவும் அநுதாபத்தோடும் பொறுமையாகக் கேட்டார் அவர். "இந்த தேசத்தில் உள்ள பொதுவான கஷ்டம் இது! ஒவ்வொரு நல்ல தொழிலும் அது வளர்ந்து பலன் தருகிற நிலையில் பணம் பண்ணும் ஆசை மட்டுமே உள்ள சில வெறும் வியாபாரிகளிடம் போய்ச் சிக்கிவிடுகிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டார் தியாகி மகாதேவன். "பத்திரிகைக்கு முதல் போடுகிறவர்கள் நாளடைவில் வெறும் 'புரோக்கர்கள்' போல் மாறி விடுகிறார்கள். பம்பாயிலிருக்கிற ஒரு கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜரின் மனைவிக்குக் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பிடிக்கிறதென்று தெரிந்தால் இங்கிருந்து விமானத்தில் பட்டுப்புடவையை வாங்கிக் கொடுத்து அனுப்பி அவரைச் சரிக் கட்டுவதிலுள்ள சிரத்தை - பத்திரிகையின் மற்ற விஷயங்களில் இவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பத்திரிகைகளை படிக்கிறவர்களும் விளம்பரதாரர்களும் பத்திரிகைகளை நாடும் போது அவற்றில் வெளி வருகிற விஷயங்களின் தரத்தை நிறுத்துப் பார்த்து நாடினால் தான் இனியாவது நல்ல சூழ்நிலை உருவாகும்." "இதற்கு அவ்வளவு விரைவாக விடிவுகாலம் பிறந்து விடாது சுகுணன்! நீண்ட நாளாகும். இப்போது உங்கள் வரை நீங்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து இனிமேல் 'மாருதி பப்ளிகேஷன்ஸ் குருப் கன்ஸர்னில்' நீங்கள் இருக்க முடியாதென்று தான் எனக்கும் தோன்றுகிறது. எத்தனையோ வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும் ஒரு நல்ல பத்திரிகையாளனிடம் மீதமிருக்க வேண்டியது அவனுடைய 'சொந்த அகங்காரம் தான்' என்று இந்தத் துறையில் அநுபவம் மிக்க ஒரு பெரியவர் சொல்வதுண்டு. இந்த 'அகங்காரத்தை'ப் பத்திரிகைக்காரன் எந்த நிலையிலும் எந்த விலையிலும் விற்று விடக்கூடாது... ஆனால் ஒரு விஷயம்! இதில் நீங்கள் எப்படி முடிவு செய்யப் போகிறீர்களென்றுதான் எனக்குப் புரியவில்லை. இப்போது நீங்கள் பூம்பொழிலில் எழுதி வருகிற 'தொடர்கதை'யை என்ன செய்யப் போகிறீர்கள்? அதத அரைகுறையாக நிறுத்திவிடக் கூடாது. ஆர்வத்தோடு படிக்கிற நல்ல வாசகர்களை அதிருப்திப்படுத்துவது நன்றாயிராது." "அதைப்பற்றிக் கவலையில்லை சார்! இயற்கையாகவே அது வருகிற வாரம் முடிந்து விடுகிறது. நான் அங்கிருந்து விலகி விட நினைக்கும் முன்பே திட்டமிட்டிருந்த முடிவு அது. தொடங்கி ஒரு வருஷம் ஆகிறது. தானாகவே கதை முடிகிற நேரம் தான்..." "அப்படியானால் உங்கள் முடிவு சரிதான்; மேலே என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் 'நேஷனல் டைம்ஸி'ன் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஆனால் இங்கே என்னிடம் ஒரு கஷ்டம் உண்டு. என்னிடமிருக்கும் குறைந்த சௌகரியங்களையும் நிறைந்த கஷ்டங்களையும் சேர்ந்தே நீங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். இல்லையானால் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லி பி.டி.ஐ., நேபன் எங்காவது இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் பல பெரிய பெரிய பத்திரிகை முதலாளிகளிடம் இருந்து அவர்கள் நம்மை ஆட்டிப் படைக்கிற வேதனை பொறுக்க முடியாமல் தான் நானே சுதந்திரப் பறவையானேன். அதனால் என் நண்பர்களுக்கு இப்படி நிலையில் 'உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' - என்பது போல் ஒரு போதும் நான் அறிவுரை கூறுவதே இல்லை. பத்திரிகையாளனின் ஒரே ஆயுதம் நியாயமான தைரியம். நிர்வாகத்துக்குப் பயந்து கொண்டே அந்த ஆயுதத்தை அவன் பிரயோகிக்க முடியாதென்பதுதான் என் கருத்து..." |