10 அந்தப் பக்கமாய்ப் பரபரப்பாக ஓடி வந்த மயானத்து வாட்ச்மேனைத் தடுத்து நிறுத்தி, “என்ன ஏது?” என்று விசாரிக்க முயன்ற முத்துராமலிங்கத்தை, “இங்க நிக்காதே! போலீஸ் புடிச்சிக்கினு போயிரும்” என்று பதற்றத்தோடு தணிந்த குரலில் எச்சரித்துவிட்டு மேலே ஓடினான் அவன். வேறோருவரிடம் விசாரித்ததில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இரு வேறு சாராய கோஷ்டிகளுக்கு நடுவே மூண்ட கலவரத்தின் விளைவுதான் அது என்று தெரிவித்தார் அவர். அப்படிச் சண்டைகள் அங்கு அடிக்கடி நடப்பதுண்டு என்றும் கூறினார். அந்தக் கிருஷ்ணாம்பேட்டைப் பகுதிக்குள்ளே அப்போது நுழைகிற விதத்தில் சூழ்நிலை இல்லை. தபால் ஆபீஸுக்குப் போய்த் தந்தைக்கு விரிவாக ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. பக்கத்தில் தபால் ஆபீஸ் இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு சென்றான் அவன். பெரிய தெருவின் தெற்குக் கோடியில் இருந்த ஒரு தபால் ஆபீஸில் போய் இன்லண்டு கவர் ஒன்று வாங்கினான். சென்னை வந்ததிலிருந்து நடந்ததை எழுதி முடிவில் தான் ஊர்வலத்துக்கு வந்த லாரியில் ஊர் திரும்பப் போவதில்லை என்பதையும் குறிப்பிட்டு, ஒரு வேலை கிடைத்ததும் அடுத்த கடிதத்தைத் தானே எழுதுவதாகவும் அதை அவன் முடித்திருந்தான். தனக்குத் தன்னுடைய தந்தை ஏதாவது பதில் எழுத விரும்பினால் கூட அவருக்குத் தர அவனிடம் ஒரு விலாசமுமில்லை. அப்படி, வீடு, விலாசம் என்று எதுவும் இல்லாமலே ஆயிரக்கணக்கான மக்கள் நடைபாதைகளிலும், கட்டிடங்களின் முகப்புக்களிலும் பெரிய மாளிகைகளின் மாடிப்படி அடிப்புறத்திலுமாக ஆண்டுக் கணக்கில் வாழ்கிற நகரமாக அது இருந்தது. கடிதத்தை ஒட்டித் தபாலில் சேர்த்துவிட்டுப் பெரிய தெரு என்ற அந்த நெருக்கடியான குறுகலான தெருவில் அவன் வடக்கு நோக்கி நடந்த போது ஒரு லாட்ஜின் மாடிப் பகுதியிலிருந்து தன் பரிவாரம் புடை சூழக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த கலையரசி கண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. அவள் அவனைப் பிடித்துக் கொண்டாள். “என்னண்ணே! கூட்டத்திலே நடந்த கலாட்டாவிலே ஏதோ காயம்னாகளே?... எங்கே காயம்?... கூட்டம் முடிஞ்சதுமே நம்மூர் ஆளுக சொன்னாக... எனக்கு அப்படியே பதறிப் போச்சு. கையும் ஓடலே... காலும் ஓடலே... அப்படியே அந்தக் கடற்கரைக் கூட்டம் பூராச் சல்லடை போட்டுச் சலிச்சாப்ல அண்ணனைத் தேடிப் பார்த்தேன்... காங்கலை... ஒரே கவலையாப் போச்சு...” “ஒண்ணும் ஆயிடலை! நல்லாத்தான் இருக்கேன். கவலை வேண்டாம்...”
“மேலே அறைக்கு வாங்க. அண்ணன் கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்...”
“நான் லாரியிலே வரப் போறதில்லே... எனக்காகக் காத்துக்கிட்டு இருக்க வேணாம்...” “ஏண்ணே...? வந்ததைப் போலவே எல்லாருமாச் சேர்ந்து திரும்பிப் போகலாமே...?” “நான் வந்த காரியமே இன்னும் ஆகலியே...?” “அண்ணனுக்காக வேணும்னா இன்னிக்கிப் புறப்படறதை மாத்தி நாளைக்குப் புறப்படறோம்.” “வேணாம்! ஏற்பாடு பண்ணினபடி நீங்கள்ளாம் புறப்படுங்க. இந்த ஊர்லே என் வேலை இன்னிக்கோ, நாளைக்கோ முடிஞ்சிரும்னு தோணலை...” கூட இருந்த கூட்டத்தை ஒதுங்கி நிற்கச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு முத்துராமலிங்கத்தை மட்டும் மாடிக்கு அழைத்துக் கொண்டு போனாள் அவள். மாடிக்குப் போகும் போதே படியில் எதிர்ப்பட்ட லாட்ஜ் ஊழியனிடம், “என் ரூமுக்கு ரெண்டு காபி நல்லதாக் குடுத்து அனுப்புப்பா” என்றாள் கண்மணி. அந்த லாட்ஜிலேயே கண்மணியின் அறை தான் வி.ஐ.பி. ரூமாக இருக்கும் போல் தோன்றும் அளவுக்குச் சிறப்பாக இருந்தது. அறைக்குள்ளேயே டெலிஃபோன் வசதியும் இருந்தது. “அண்ணே! உங்களுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்? கடற்கரையிலே நான் மேடையிலே பேச ஆரம்பிச்சப்ப நீங்க கூட்டத்துக்கு நடுவே நின்னுக்கிட்டு, ‘பேசிப் பேசியே ஊரை ஏமாத்தறா’ன்னீங்களாமே...?” “யார் சொன்னாங்க...?” “ஏன்? நம்மூர் ஆளுங்களே சொன்னாங்க. முதல்லே நான் நம்பலே. அப்புறம் எல்லாருமே நீங்கதான் அப்பிடிக் கலாட்டாப் பண்ணினீங்கன்னு உறுதியா சொல்றாங்க...?” “உண்மைதான்! ஆனால் நான் அதை உங்க பேச்சுக்கு எதிரா மட்டும் சொல்லலே... பொதுவா நேத்து மேடையிலே பேசின அத்தனை பேரோட பேச்சுக்கும் எதிராகத்தான் சொன்னேன்.” “உங்களுக்கு ஏன் இத்தினி பிடிவாதம்?” “கருத்து வேறுபாடு என்பது பிடிவாதமல்ல.” “சில கருத்து வேறுபாடுகள் உங்களுக்கோ உங்களைப் போலொத்தவங்களோட சொந்த வாழ்க்கைக்கோ உதவறதில்லே.” “உடனடியான பிரயோசனங்களுக்காகவோ உதவிகளுக்காகவோ, நீண்ட காலமாகக் காப்பாற்றி வந்த கொள்கைகளை அடகு வைக்கிறவன் விவேகி இல்லை... ஒரு விவேகியின் பிடிவாதத்தை பாமரர்கள் ‘முரண்டு’ என்று குறை கூறலாம். ஆனால் மற்றொரு விவேகியின் பார்வையில் அது ஞான வைராக்கியமாக விளங்கும்...” “முரண்டுக்கும், பிடிவாதத்துக்கும் தான் சாமியாருங்களோட பாஷையிலே ‘ஞான வைராக்கியம்’னு பேர் சொல்லிக்குவாங்க...!” “அது உங்க அபிப்பிராயம்! நான் ஒத்துக்கலை.” “இப்பிடி அபிப்பிராய பேதப்பட்டுக்கிட்டே நீங்க உங்க வாழ்க்கை பூரா வீணடிச்சுக்கப் போறீங்க. உங்களை மாதிரிப் படிப்பு, பேச்சுத் திறமை, பெர்ஸனாலடியெல்லாம் உள்ள ஒருத்தர் எங்க கட்சிப் பக்கம் வந்தா ரெண்டே மாசத்திலே மந்திரியா ஆக்கிப்பிடுவோம்...” “எங்கே அப்பிடிப் பண்ணிடுவீங்களோன்னு பயந்து தான் உங்க பக்கத்திலேயே நான் வர்ரதில்லே...” “ஏனாம்? இதிலே பயப்படறதுக்கு என்னா இருக்காம்...?” “அயோக்கியர்களுக்கு நடுவில் கிடைக்கிற தங்கச் சிம்மாசனத்தை விட, யோக்கியர்களுக்கு நடுவே அவர்களோடு கிடைக்கிற புழுதி படிந்த தரையையே சிலாக்கியமானதென்று விரும்புவேன் நான். ஆகவே தான் எங்கே உங்க ஆளுங்களுக்கு நடுவே வந்து தங்கச் சிம்மாசனத்தை அடைஞ்சிட நேருமோன்னு நடுநடுங்கிப் பயந்துக்கிட்டே வாழ வேண்டியிருக்கு...” சொல்லிவிட்டு அவளை நோக்கிச் சிரித்தான் அவன். “பணம், பதவி, செல்வாக்கு எல்லாம் கிடைக்கிறதோட எங்க இயக்கத்துக்குள்ளே வந்து சேர்ந்திட்டா என்னை மாதிரி அழகான பொம்பளைங்களும் தாராளமாவே கெடைப்பாங்க” என்று விஷமத்தனமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிய கண்மணி திடீரென்று ஒரு வெறியோடு கைகளை நீட்டிக் கொண்டு அவனைத் தழுவிக் கொள்வதற்குப் பாய்ந்தாள். முத்துராமலிங்கம் நிதானத்தோடு பதறாமல் அவளைத் தடுத்து நிறுத்தினான். சொன்னான்: “எனக்குப் பயம் வந்தது தப்பில்லேன்னு இப்பப் புரியுது.” “பயப்படறத்துக்கு நான் என்ன பேயா, பிசாசா, பூதமா?” “பேய், பிசாசு, பூதங்களுக்காகக் கூட நான் இவ்வளவு தூரம் பயப்படுவதில்லை.” கண்மணி அடிபட்ட புலியாகச் சீறினாள். அவள் மனத்தின் மிக மிருதுவான உணர்வுப் பகுதியை அவமானப்படுத்திப் புறக்கணித்து விட்டதன் மூலம் அவளுடைய ஆக்ரோஷத்தைச் சீண்டி விட்டிருந்தான் முத்துராமலிங்கம். “நீங்க மனுஷனே இல்லே.” “உங்க பார்வையிலே நான் அப்படிப் படறதைப் பற்றி ரொம்ப சந்தோஷம். நான் மிருகமில்லாத காரணத்தால் - நீங்கள் விரும்பிய போது விரும்பியபடி, உடனே மிருகமாக மாறாத காரணத்தால் இந்த நற்சான்றிதழை எனக்கு நீங்கள் தருகிறீர்கள்.” காபி கிளாஸ்களோடு பையன் அறைக் கதவைத் தட்டினான். கண்மணி தாழிடாமல் ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்தாள். பையன் ஆவி பறக்கும் காபி கிளாஸ்களை மேஜை மேல் வைத்து விட்டு நகர்ந்தான். “காபி குடியுங்க...” அவள் காபி கிளாஸை எடுத்து அவனிடம் நீட்டினாள். சிரித்தபடியே அவன் அவளைக் கேட்டான். “மிருகம் காபி குடிக்குமா?” “சே! சும்மா குத்திக் காட்டிப் பேசாதீங்க... நடந்ததை மறந்துடலாம்.” “மறக்கறதுங்கிறது காபி குடிக்கிறதைப் போல அத்தினி சுலபமில்லே...” “அண்ணன் கோபமாப் பேசறப்பக் கூட அழகாயிருக்கீங்க...” “சினிமாவிலேயும், அரசியலிலேயுமாப் பங்கு போட்டுக்கிட்டு இந்த ‘அண்ணன்’கிற வார்த்தையை இந்த ஊர்லே ஏறக்குறைய மானபங்கப் படுத்திட்டீங்க. அண்ணன்னு கூப்பிடற பொம்பளைங்க தங்கை மாதிரி நடந்துக்கணும். அக்கான்னு கூப்பிடற ஆம்பிளை தம்பி மாதிரி நடந்துக்கணும். இங்கே ரெண்டுமே இல்லே.” கண்மணி பதில் பேசாமல் தலை குனிந்தாள். அவளோடு கட்சி, அரசியல் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி என்று பழகுகிற வேறு பல ஆண்கள் எவரும் அவளை இப்படித் தலைகுனிய வைத்ததில்லை. மாறாகச் சில வேளைகளில் அவள் அவர்களைத் தலைகுனிய வைத்திருக்கிறாள். முத்துராமலிங்கம் காபியைப் பருகினான். காபி பருகுவதற்காகக் கையை மேலே உயர்த்திய போது அவனது கையிலிருந்த பிளேடு கீறின காயத்தை அவள் பார்த்தாள். “அதென்ன காயம்...?” “இதுவா? இதுதான் பேசிப் பேசியே ஊரை ஏமாத்தறாங்கன்னு நான் கூட்டத்திலே சொன்னதுக்கு உங்க கட்சிக் கண்மணிகள் அளித்த பரிசு.” “அடப் பாவிங்களா...” “நீங்களே உங்க கட்சிக்காரங்களை இப்படி அவங்க பேரைச் சொல்லிக் கூப்பிடலாமா?” கண்மணி சிரித்தாள். முத்துராமலிங்கம், “மறுபடி பார்க்கலாம்... வரேன்” என்று அப்போது விரைந்து அவளிடம் விடை பெற்றான். அவன் கீழே படியிறங்கித் தெருவுக்கு வந்து வடக்கு நோக்கிச் சிறிது தொலைவு நடந்ததும், அன்று வெங்கடேஸ்வரா ஹாஸ்டலுக்குத் தேடிச் சென்று காண முடியாத அந்த நண்பன் எதிர்ப்பட்டான். முத்துராமலிங்கத்தை எதிரே கண்டதுமே அந்த நண்பனின் முகம் மலர்ந்தது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|