21 அவளுடைய மனமாற்றமும், உறுதியும் அவனுக்கு வியப்பை அளித்தன. நடைமுறையில் அது அவளை எந்த அளவு பாதிக்கும் என்று எண்ணிய போது, கவலையாகவும் இருந்தது. பெரிய பதவியிலுள்ள சொந்தத் தந்தையைப் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு அவள் என்னென்ன விலைகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியவில்லை. மந்திரி சிதம்பரநாதன் தன் மகள் தன்னை ஆதரிக்காமல் ஒதுங்கியிருப்பதைக் கூட மன்னிக்கலாம். ஆனால் தனது எதிரிகளோடு அவள் சேருவதைப் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ அவரால் முடியாது என்பதை அவன் முன்கூட்டியே அனுமானம் செய்து கொள்ள முடிந்தது. அவள் துணிந்து தன்னைச் சோதனைக்குள்ளாக்கிக் கொள்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிந்தது. ‘டிரைவ் இன்’னிலிருந்து முத்துராமலிங்கமும், மங்காவும் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய்த் தியாகி சிவகாமிநாதனைச் சந்தித்த போது பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கியிருந்தது. நன்றாக இருட்டத் தொடங்கியிருந்த அந்த நேரத்தில் தான் மங்காவின் மனத்தில் ஒளி பரவிக் கொண்டிருந்தது. தான் செல்வாக்குள்ள ஆளுங்கட்சி மந்திரி ஒருவரின் மகள் என்பதை மறந்து ஆகாசத்தில் மிதப்பது போன்ற உல்லாசத்தோடு முத்துராமலிங்கத்துடன் சென்றாள் அவள். பஸ்ஸிலும், நடந்தும் அவனோடு செல்ல அவள் தயங்கவில்லை. அவர்கள் போய்ச் சேர்ந்த போது வீட்டின் ஒரு பகுதியாயிருந்த அச்சகத்தில் - அச்சக உடையில் அச்சுக் கோக்கும் வேலை செய்து கொண்டிருந்தார் சிவகாமிநாதன். “இது என் சிநேகிதி... நேத்துக் கூட்டம் கேட்டப்பறம் நம்ம இயக்கத்திலே சேரணும்னு ஆசையோட புறப்பட்டு வந்திருக்காங்க...” “சிநேகிதியா? காதலியா?” அவர் இப்படிக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்து சிவந்தது. முத்துராமலிங்கம் அவரது குறும்புக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தான். அவரே மேலும் பேசினார்: “எல்லாக் காதலிகளும் முதலில் சிநேகிதிகளே! ஆனால் எல்லாச் சிநேகிதிகளும் காதலிகள் ஆகி விட முடியாது.” “சிநேகிதியா காதலியா என்பதை விட முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஓர் உறவு இருக்கிறது ஐயா!” “அது என்ன உறவு அப்படி?” “இவள் மந்திரி சிதம்பரநாதனின் மகள்.”
சிவகாமிநாதன் ஒரு வினாடி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. முத்துராமலிங்கமே குறுக்கிட்டுச் சொன்னான்.
“ஆனாலும் இவங்க அப்பாவோட போக்கு இவங்களுக்குப் பிடிக்கலே... பொது வாழ்க்கையிலே இருக்கிறவங்க சுத்தமா இருக்கணும்னு நெனைக்கிறாங்க...” சிவகாமிநாதன் மங்காவை நேருக்கு நேராகவே கேட்டார். “புரியுது! ஆனா இதுலே பல தர்மசங்கடங்களும் சோதனைகளும் வருமே! அதைத் தாங்கிக்கிற சக்தி உனக்கு இருக்காம்மா...” “இருக்கு... துணிஞ்சு தான் இந்த முடிவுக்கு நான் வந்திருக்கேன்.” “நீ புதுசா எதையும் பண்ணலேம்மா! இரணியனை எதிர்த்துப் பிரகலாதன் போர்க்கொடி உயர்த்தின மாதிரியும், இராவணனை எதிர்த்து விபீஷணனும், கும்பகர்ணனும் போர்க்கொடி உயர்த்தின மாதிரியும் தான் இதுவும்! விபீஷணனுக்குத் தன் சொந்த அண்ணனை எதிர்த்துவிட்டு வெளியேறி நியாயத்தின் பக்கம் சேர முடிந்தது. கும்பகர்ணனுக்கோ அண்ணனின் கொள்கையை எதிர்த்துவிட்டு அவனுக்கு நன்றிக்கடன் கழித்துவிட முடிந்தது.” “நேத்து உங்க ரெண்டு பேர் பேச்சையும் கேட்டப்பறம் என் மனசு அறவே மாறிப்போச்சு. வந்தது வரட்டும்னு என் கையிலிருந்த தங்க வளையலைக் கூடக் கழட்டி வழக்கு நிதிக்குக் கொடுத்திருக்கேன்...” “எல்லாம் சரி! நான் இப்பிடிக் கேட்கிறேனேன்னு கோவிச்சுக்காதேம்மா. துணிச்சல்லே ரெண்டு வகை இருக்கு... அசல் துணிச்சல்... அசட்டுத் துணிச்சல்னு...” “என்னோடது அசட்டுத் துணிச்சல் இல்லே...” “எந்த நிலைமையிலும் தாக்குப் பிடிக்குமா?” “இந்த மனமாற்றம் என் வாழ்க்கைத் திட்டத்தையே மாத்திடிச்சு. நான் மேற்படிப்புக்கு இங்கிலாந்து போறதுக்கு ஏற்பாடு நடக்குது. அதுக்கே நான் போகப் போறதில்லே...” “ஏன்... அப்படி?...” “நான் இங்கே இருந்து போராடப்போறேன்...” “போராடறதுக்குத் தைரியம் மட்டுமில்லே, ரொம்பப் பொறுமை வேணும். இங்கே எந்தப் போராடப் பொறுமையும், கொள்கைப் பிடிப்பும் இல்லாத காரணத்தாலே தான் பல அரசியல்வாதிங்க வெற்றி தங்களைத் தேடி வர்றதுக்குள்ளே பொறுமை இழந்து வெற்றி எங்கே இருக்கோ அங்கே அதைத் தேடிக் கட்சி மாறிப் போயிடறாங்க... உங்க அப்பா மாதிரி...” “பொறுமையையும் இலட்சியப் பிடிப்பையும் நீங்க தான் எனக்குக் கத்துக் குடுக்கணும்...?” “நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் உயர்தரமான நல்ல தலைவர்கள் இல்லாத தேசத்தில், இல்லாத சமயங்களில் இப்படித்தான் இருக்கும். நான் இளைஞனாயிருந்த போது அன்று என் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்களை நம்பச் செய்து பின்பற்ற வைப்பதற்குத் திலகர், காந்தி, பாரதியார், வ.உ.சி. சிவா, நேரு என்று பலபேர் இருந்தார்கள் அம்மா...” “இப்போது எங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா...” “நான் வெறும் தொண்டன். இன்றைய அரசியலுக்குத் தேவையான பணவசதி, டமாரம் அடித்தல், இரண்டும் இல்லாதவன். மனோ தைரியத்தை மட்டுமே செல்வமாக வைத்திருப்பவன்.” அவருடைய பணிவும், எளிமையும் நிறைந்த பேச்சுக்கள் அவளை ஈடுபாடு கொள்ளச் செய்தன. ஒரு பிரமுகருக்குச் சுற்றிக் காண்பிப்பது போல் அவளுக்கு அவர் தமது சிறிய அச்சுக்கூடத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவரது வீட்டுடன் இணைந்திருந்த அந்த அச்சுக்கூடத்தில் அவருடன் அவருடைய மகள் மகன் எல்லாருமே அச்சக யூனிஃபாரம் அணிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். மாலை வேளைகளில் நகரின் பொது மேடைகளில் பல்லாயிரம் மக்களைக் கவரும் அந்தச் சிங்கக் குரலுக்குரிய தலைவர், தம்முடைய குடிசைத் தொழில் போன்ற அச்சுக் கூடத்தில் ஓர் எளிய தொழிலாளியாகக் காட்சியளிப்பது அவள் மனத்தைத் தொட்டது. டிரடிலில் ரத்தச் சிவப்பான நிறத்து மையில் அந்த வாரத்துத் ‘தியாகியின் குரல்’ இதழுக்கான டைட்டிலை அச்சிட்டுக் கொண்டிருந்தார் அவர். ‘ஊழல் மந்திரியும் உபயோகமில்லாத அரசியலும்’ என்று அவளுடைய தந்தையைப் பற்றிய காரசாரமான தலையங்கம் அச்சாகிச் சூடாக அங்கே இருந்தது. அப்போது அங்கே தற்செயலாக வந்த ஒரு பிரமுகருக்குச் சிவகாமிநாதன் அவளை அறிமுகப்படுத்தி வைத்த போது, அவர் தமது அறிமுக வார்த்தைகளை முடிப்பதற்குள்ளேயே... “இவங்க எப்படி இங்கே...? அமைச்சர் நாதனோட மகளாச்சே...?” என்று நம்பமுடியாமல் இழுத்தார் வந்தவர். “ஏன்? இவங்களை இங்கே பார்க்கிறதை உங்களாலே நம்ப முடியலையா? வேடிக்கைதான்! நீங்க இவங்களை இங்கே பார்க்கறதையே நம்ப மாட்டேங்கறீங்க! இவங்க என்னடான்னா என்னையும் என்னோட ஊழல் ஒழிப்பு இயக்கத்தையும் நம்பி இங்கே தேடி வந்திருக்காங்க. ஆச்சரியமா இல்லையா இது?” என்று சிரித்தபடியே அவளைச் சுட்டிக்காட்டி வந்திருந்த அந்தப் புது மனிதரிடம் வினவினார் சிவகாமி நாதன். மங்காவோ ஆர்வம் தணியாத மனநிலையோடு தந்தையின் ஊழல்களைத் தாக்கி எழுதப்பட்ட ‘தியாகியின் குரல்’ அச்சுப்படிகளைப் படிக்கத் தொடங்கினாள். சிவகாமிநாதன் செல்லமாக அவளைக் கடிந்து கொண்டார். “இதெல்லாம் எதுக்கம்மா இப்ப? அப்புறம் படிக்கலாமே?” “நீ தியாகியின் குரலுக்கு ஒரு சந்தாக் கட்டிடணும்! நான் எப்பவோ கட்டியாச்சு” என்றான் முத்துராமலிங்கம். உடனே அவள் தன் கையிலிருந்த டம்பப் பையைத் திறந்து ஒரு புது நூறு ரூபாய் நோட்டை எடுத்து முத்துராமலிங்கத்திடம் நீட்டினாள். “ஒரு வருஷத்துச் சந்தா இருபத்திநாலு ரூபாய்தான்.” “அப்படீன்னா நாலு வருசத்துக்கு எடுத்துக்குங்க.” “ஒரு வருஷம் படிச்சுப் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சா அப்புறம் தொடரலாமே?” என்று குறுக்கிட்டார் தியாகி சிவகாமிநாதன். “பரவாயில்லே! நாலு வருசமே எடுத்துக்குங்க.” “சரி! தொண்ணூத்தாறு ரூபாய்க்கு ஒரு ரசீது போட்டு மீதி ரூபாய் நாலைத் திருப்பிக் குடு.” சிவகாமிநாதனின் மகன் வந்து ரூபாயை வாங்கிக் கொண்டு ரசீது போடப் போனான். “இங்கே நாங்களே எல்லா வேலையும் செய்யிறோம். தேதிக்குப் பத்திரிகையைக் கொண்டு வந்துடறதுதான் எங்க முக்கிய நோக்கம்கிறதாலே சில சமயங்களிலே பொது கூட்டங்கள் முடிஞ்சப்புறம் ராத்திரிப் பதினோரு மணிக்குக் கூட இங்கே வந்து நான் பிரஸ் வேலையைக் கவனிக்க வேண்டியிருக்கும்...” “இனிமே எங்களையெல்லாம் அந்நியமா நெனைக்காமே உங்க வேலையைப் பகிர்ந்து குடுக்கணும் நீங்க.” “என்னிடம் பகிர்ந்து கொடுப்பதற்கு வசதிகள் இல்லேன்னாலும் சிரமங்கள் நெறைய இருக்கும்மா.” “அதை மகிழ்ச்சியோடு பங்கிட்டுக் கொள்ள நானும் இவரும் எப்போதும் தயாராயிருக்கோம்” என்று அருகே நின்று முத்துராமலிங்கத்தையும் சேர்த்து உளப்படுத்திக் கொண்டு சொன்னாள் அவள். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் ஒரு போலீஸ் ‘ஜீப்’ சர்ரென்று வந்து நின்றது. ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் ஜீப்பிலிருந்து இறங்கி அச்சகப் பகுதிக்குள் அட்டகாசமாக வந்தார்கள். சிவகாமிநாதன் அவர்களை எதிர்கொண்டு முன்சென்று வினவினார். “உங்களுக்கு என்ன வேணும்?” “நீங்க தானே சிம்மக்குரல் சிவகாமிநாதன்?” “ஆமாம், அதுக்கென்ன?” “இந்தப் பிரஸ்ஸிலே திருட்டுச் சாமான்கள் ஒளிச்சு வைக்கப்பட்டிருக்குன்னு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. நாங்க இப்போ ‘ரெய்டு’ பண்ணப் போறோம்.” நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|