24 “நான் கூட்டங்களிலே பேசறது - கொள்றதெல்லாம் பாபுராஜுக்குப் பிடிக்கலே. நேத்து மூணு மணிக்கு உன்னைச் சந்திக்கிறதுக்காக நான் ‘டிரைவ் இன்’னுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தப்ப அவன் ‘லாட்ஜுக்கு’ ஃபோன் பண்ணி உடனே தன்னை வந்து பார்க்கணும்னான். நான் போகலே, அதுலே கோபம் போல்ருக்கு.” “சனி விட்டதுன்னு பேசாம இருங்க. வேற வேலை பார்த்துக்கலாம்” - என்றாள் மங்கா. சிவகாமிநாதனும் முத்துராமலிங்கத்துக்கு ஆறுதலாகவே இரண்டு வார்த்தைகள் சொன்னார்; “இந்த வேலை போச்சேன்னு கவலைப்பட வேண்டாம். பார்த்துக்கலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்யிறேன். இன்னிக்கு இந்த நாட்டிலே வேலை கிடைக்காதோ என்ற எதிர்கால பயத்திலும் கிடைத்த வேலை போய்விடுமோ என்ற தற்காப்பு அச்சத்திலுமே முக்கால்வாசி இளைஞர்கள் வீரியமிழந்து நடைப் பிணங்களாகி விடுகிறார்கள். இளைஞர்களால் நாடு அடைய வேண்டிய உத்வேகத்தை அடைய முடியாமலே போய்விடுகிறது.” “உங்களுடைய வழிகாட்டுதல் இருக்கிறவரை நானோ மங்காவோ உத்வேகத்தை இழந்து விடமாட்டோம் ஐயா!” “நாளைக்குக் கூட்ட ஏற்பாட்டைக் கவனிக்கணும். சுவரொட்டி யெல்லாம் இன்னிக்கே ஒட்டியாகணும். மந்திரியை எதிர்த்துக் கூட்டம் போடறோம். ஏரியாவும் ஒரு மாதிரி. மந்திரி மகளே பேசப் போறாங்கன்னு வேற விளம்பரம் பண்ணியிருக்கோம். கொஞ்சம் கலாட்டாக் கூட இருக்குமோன்னு சந்தேகப்படறேன்.” “ஏற்பாடெல்லாம் தயாராயிருக்கு. நானும் நண்பர்களும் இன்னிக்கிப் போஸ்டர் ஒட்டப் போறோம்” - என்றான் முத்துராமலிங்கம். சிவகாமிநாதன் மங்காவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறினார். “தன் மகனையே தன்னை எதிர்த்து மேடையேறிப் பேச வச்சிட்டோமேன்னு எங்க மேலே உங்கப்பாவுக்கு ஒரே எரிச்சலா இருக்கும்.” “அதைப் பத்தி நான் கவலைப்படலே...” “நீ படற கவலையையும் சேர்த்து உங்கப்பா படப் போறாரு. பதவிகளில் சுகம் காணும் தகுதியும் நேர்மையும் இல்லாத ஒவ்வொருத்தனும் அதுக்காகப் பயந்து பயந்து சாகிறதுதான் வழக்கம். பயப்படுகிறவன் எல்லாம் பிறரைப் பயமுறுத்தியே வாழ்ந்து கொண்டிருப்பான். தீரன் தானும் பயப்படுவதில்லை; பிறரையும் பயமுறுத்துவதில்லை. ஆனால், தீரர்கள் இன்றைய அரசியலிலும் பொது வாழ்விலும் குறைந்து போய்விட்டார்கள்.”
உள்ளே அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் யாரோ முத்துராமலிங்கத்தைத் தேடி வந்திருப்பதாகச் சிவகாமிநாதனின் மகள் வந்து தெரிவித்தாள்.
தேடி வந்திருப்பது யாராயிருக்கும் என்ற யோசனையுடனும் தயக்கத்துடனும் வெளியே வந்த முத்துராமலிங்கம் அங்கே சின்னி நிற்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். சின்னி பேசினான்: - “பார்த்திட்டுப் போகலாம்னுதான் வந்தேன்... அவசரமா ஒரு தகவல் சொல்லணும்.” “உள்ளே வாயேன்... உட்கார்ந்து பேசலாம்... என்ன அவசரம்?” “இங்கேயா? வேணாம்... இத்தினி பெரிய மனுஷங்க வீட்லே எல்லாம் நுழையறதுக்கு எனக்கு யோகியதை இல்லே...” சின்னி கிண்டலுக்காகவோ வம்புக்காகவோ இல்லாமல் உண்மையான பயபக்தியுடனே இப்படிச் சொன்னதை முத்துராமலிங்கம் உணர்ந்தான். நல்லவர்களை எல்லாரும் மதிக்கிறார்கள். ஆனால் வாழவைப்பதில்லை. நல்லவர்களிலிருந்து ஒதுங்கியும் ஒதுக்கியும் வாழ விரும்புகிறவர்களாகவே சராசரி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சின்னியின் செயல் காண்பித்தது. அப்போது சின்னியைச் சிவகாமிநாதனின் வீட்டுக்குள்ளே வரச் சொல்லி மேலும் வற்புறுத்த முடியாமல் அவனோடு நடந்து போய்த் தெருக்கோடியில் நின்று பேசுவதைத் தவிர முத்துராமலிங்கத்தால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. பாமர இந்திய மக்கள் ஒன்று நல்லவர்களைப் பக்தி செய்து வணங்குகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். நேசிக்கவும் காப்பாற்றவும் முன் வருவதில்லை. சிவகாமிநாதனைப் போன்றவர்கள் மேல் சின்னியை ஒத்த அடித்தளத்து மக்களுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கின்றனவே ஒழிய நேசம் ஏற்படுவதில்லை என்பதை முத்துராமலிங்கம் கவனித்தான். தெருக்கோடிக்குச் சென்றவுடனே சின்னி குரலைக் கடுமையாக்கி, “கடைசியிலே நான் பயந்தபடியே ஆயிடிச்சு! உன்னை பாபுராஜ் துரத்திப்பிட்டான். கூட்டம் பேசற ஆசையிலே வேலையைப் பறிகொடுத்துப்புட்டே! நீ செய்யிறது ஒண்ணுமே நல்லா இல்லே. தொடர்ந்து ஒண்ணொண்ணா வம்புலே மாட்டிக்கிட்டு வர்றே! நம்பளுக்கு வேண்டியே ஆளாச்சேன்னு உன் கையிலே சொல்லிட்டுப் போக வந்தேன். மந்திரி நாதனை எதிர்த்துக் கூட்டம் கீட்டம் போட்டுப் பேசாதே! கலாட்டாவுக்கு ஆள் ஸெட்-அப் பண்றாங்க. ஸோடா புட்டி வீச, கல்லெறிய எல்லாத்துக்கும் ஏற்பாடாகுது.” “இது உனக்கு எப்படித் தெரியும் சின்னி?” “நம்ப பேட்டை ஆளுங்கதான் பண்ணப் போறாங்க... காதிலே உளுந்திச்சு... அதான் வந்தேன்.” “உங்க பேட்டை ஆளுங்களுக்கு மானமாப் பிழைக்க வேற தொழில் இல்லியா?” “அவங்க எந்த ‘ஸைடும்’ இல்லே! யார் வந்து காசு குடுத்து யார் மேலே ஏவினாலும் போவாங்க... அவுங்களை ஏவி விடறவங்களுக்கே மானம் இல்லாமப் போறப்ப அவுங்களுக்கு மட்டும் எதுக்காக அதெல்லாம் இருக்கணும்?” சின்னியின் இந்தக் கேள்வியில் ஓரளவு நியாயம் இருப்பதாகவே பட்டது. சென்னை என்கிற கலாசார மயானத்தில் அடியாட்கள் கூட வாடகைக்குக் கிடைத்தார்கள். நல்ல வாடகை கொடுக்க முடிந்தவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். நல்ல வாடகை கொடுக்க முடியாதவர்கள் எல்லாம் அடிபடுகிறவர்களாக இருந்தார்கள். சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான். “நீ மெட்ராஸுக்குப் பொழைக்க வந்தவனாகத் தெரியிலே... இங்கே வந்து நீ வம்பைத்தான் விலைக்கு வாங்கிக்கிட்டிருக்கே.” “பொழைக்கிறது அவசியம்தான் சின்னீ; ஆனா மானமில்லாமப் பொழைக்கிறதை விட அதை எதிர்த்துப் போராடிச் செத்துப் போயிடறதுகூட மேல்னு நினைக்கிறவன் நான்.” முத்துராமலிங்கம் மிகக் கடுமையான குரலில் இதைச் சொல்லவும் சின்னி எதிர்த்துப் பதில் கூற முடியாமல் நின்று விட்டான். சிறிது நேரம் வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருந்த பின், “என்னமோ, பழகின தோசத்துக்குச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். அப்புறம் பார்ப்போம்” - என்று கூறிவிட்டுப் போய்ச் சேர்ந்தான் சின்னி. சின்னி புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அரசாங்க முத்திரையிட்ட கொடி பறக்கிற பெரிய கார் ஒன்று சிவகாமிநாதனின் வீட்டு வாசலில் வந்து நின்றது. அமைச்சர் எஸ்.கே.சி.நாதனே வந்து விட்டாரோ என்றெண்ணி அவர்கள் பார்த்த போது அமைச்சரின் பி.ஏ.யும், ஆளுங்கட்சியின் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர் ஒருவரும் காரிலிருந்து கீழே இறங்கினார்கள். வந்தவர்கள் சிவகாமிநாதனைச் சந்திக்க வேண்டும் என்றார்கள். அவர் அச்சகப் பகுதியில் இருந்தார். அவர்களை அச்சகத்துக்குள் அழைத்துச் சென்றான் முத்துராமலிங்கம். கம்போஸிங் செய்ய ஏற்ற உடையில் இருந்த சிவகாமிநாதன் அவர்களை மிகவும் மரியாதையாக வரவேற்றார். அச்சுப் பிழை திருத்தப் பழகியவாறு அங்கே அமர்ந்திருந்த மங்கா இவர்களைப் பார்த்ததும் வெறுப்போடு உள்ளே எழுந்து செல்ல முயன்றாள். “நீ எதுக்கும்மா எந்திரிச்சுப் போறே! நீயும் இரு” என்று அவளைக் கையமர்த்தி அமரச் செய்தார் சிவகாமிநாதன். வந்த பிரமுகர் சற்றே கோபமாகத் தொடங்கினார்: “அரசியல்லே நாம ஒருத்தருக்கொருத்தர் எதிரெதிர்த் தரப்பிலே இருக்கோம். ஆனா அதுக்காக ஒருத்தரோட குடும்பத்திலே இன்னொருத்தர் தலையிட்டு லாபம் தேடறதுங்கறது அவ்வளவு நல்லாப் படலே... மினிஸ்டர் இதை ரொம்பக் கடுமையா நினைக்கிறாரு. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.” “நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க... எனக்கு யார் குடும்பத்திலேயும் தலையிடணும்னு அவசியமில்லே. அதே சமயத்திலே பொதுவாழ்வில் லஞ்ச ஊழலை ஒழிக்க நான் தொடங்கியிருக்கிற இயக்கத்திலே யாராவது அந்தரங்க சுத்தியோட வந்து சேர்ந்தா அவங்களை நான் சேர்த்துக்க மாட்டேன்னும் சொல்ல முடியாது.” “உங்க மக எங்க கட்சியிலே வந்து சேர்ந்து எங்க கூடத் தங்கிட்டா நீங்க அதைச் சும்மா விட்டுவிடுவீங்களா?” “என் மகள் அப்படிச் செய்ய மாட்டாள். எது நல்லது எது கெட்டதுன்னு அவளுக்கு நல்லாத் தெரியும். அதையும் மீறி அவ அப்படி எனக்குப் பிடிக்காத தரப்பிலே சேர்ந்தா அதிலே நான் தலையிட மாட்டேன்.” “இதெல்லாம் உங்களுக்கே நல்லா இல்லீங்க! பேசாம மினிஸ்டரோட டாட்டரைக் கூப்பிட்டு ரெண்டு வார்த்தை புத்தி சொல்லி வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வையுங்க.” “அதெல்லாம் நான் ஏற்கெனவே சொல்லியாச்சு! அவ கேக்கலை. இப்பவும் நான் சொல்லத் தயார்! உங்க வீட்டுப் பெண்ணை நீங்க கூப்பிட்டுக்கிட்டுப் போக நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனா அதே சமயம் உங்களை வெறுக்கிற ஒரு பெண்ணை நீங்க பலவந்தமா இழுத்துக்கிட்டுப் போகவும் நான் ஒத்துழைக்க மாட்டேன்.” - என்று கூறிவிட்டு உள்ளே ப்ரூஃப் எடுத்து வரப் போயிருந்த மங்காவைக் கூப்பிட்டு, “இந்தாம்மா! உங்கப்பா கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்னு இவங்க இங்கே தேடி வந்திருக்காங்க. உன்னை நான் இங்கே தடுத்து நிறுத்தி வச்சுக்கிட்டு ஏதோ ‘பிளாக் மெயில்’ பண்ணி உங்கப்பாவை மிரட்டற மாதிரி இவங்க எங்கிட்டப் பேசறாங்க. எனக்கு அது பிடிக்கல்லே. உனக்குச் சம்மதமானா இவுங்க கூட நீ தாராளமாத் திரும்பி வீட்டுக்குப் புறப்பட்டுப் போகலாம். சம்மதமில்லேனாலும் நான் உன்னை வற்புறுத்தித் துரத்த மாட்டேன்” என்றார் சிவகாமிநாதன். மங்கா பதில் கூறினாள்; “நீங்க என்னை இங்கே வரச் சொல்லிக் கூப்பிடலே ஐயா! நான் தான் உங்க கிட்ட வந்து அடைக்கலம் புகுந்திருக்கேன்... அடைக்கலமா வந்தவங்களை நீங்க துரத்தவோ வெளியேற்றவோ மாட்டீங்கங்கிற நம்பிக்கை எனக்கு உண்டு ஐயா.” “கேட்டுக்குங்க! இதுதான் உங்களுக்கு அவ பதில். இதில் நான் செய்ய என்ன இருக்கிறது?” “அப்பாவுக்கும் பெண்ணுக்கும் ஆகவிடாமல் நீங்க தான் அவ மனசைக் கெடுத்து வச்சிருக்கீங்க.” “என்னிக்கும் யார் மனசையும் கெடுக்கிற தொழிலை நான் செஞ்சதில்லை - செய்யவும் மாட்டேன்.” “நாங்க பயமுறுத்தறதா நெனைக்காதீங்க. பின்னாலே இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்கும்.” சிவகாமிநாதன் இதற்குப் பதில் கூறவில்லை. அவர்கள் விருட்டென்று வெளியேறினார்கள். அன்று இரவு முத்துராமலிங்கமும் பிறரும் சுவரொட்டிகள் ஒட்டும் போதே, சில எதிர்ப்புக்களும், சில்லறைத் தகராறுகளும் உண்டாயின. அவர்கள் மறுநாள் மாலை பொதுக் கூட்டத்திலும் தகராறுகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் கூட்டம் அவர்களுக்கு ஆதரவான வகையில் பெரிய அளவு கூடியிருந்தது. கடல் போல் பெரிய அந்தக் கூட்டத்தில் யாராவது கலகத்துக்கு வந்தால், மக்களே அவர்களைச் சூறையாடி விடுவார்கள் போல் தோன்றியது. கூட்டத் தொடக்கத்தில் சில இளைஞர்கள் பேசினார்கள். அப்போது கூட அமைதியான முறையில் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மங்கா பேசுவதாக அறிவித்து அவளைக் கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிவகாமிநாதன். அவள் ஆவேசமாகப் பேச ஆரம்பித்த சில கணங்களில், “டாய்! துரோகியோட மகளெப் பேசவிடாதே” என்று கத்தியபடி சோடாப் புட்டியோடு ஆவேசமாகப் பாய்ந்தான் ஒரு முரட்டு ஆள். அதே போன்ற குரலோடு வேறு சிலரும் கிளம்பினார்கள். கூட்டத்துக்கும் சிவகாமிநாதனுக்கும் அப்படிக் கிளம்பியவர்கள் தங்களுக்கு ஆதரவாளர்களா, எதிரிகளா என்று புரிந்து கொள்ள முடியாமல் குழப்பம் ஏற்பட்டது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|